Skip to content
Home » MM 21 (PRE-FINAL)

MM 21 (PRE-FINAL)

என்னை மாதிரி உணர்ச்சிவசத்துல தப்பான முடிவெடுக்குறவங்க நிறைய பேர் இருப்பிங்க… கோபமோ சந்தோசமோ துக்கமோ அதை உடனடியா கொட்டித் தீர்க்க தெரிஞ்ச நமக்கு அதால வர்ற பின்விளைவுகளைப் பத்தி யோசிக்கத் தெரியாது… அப்புறம் மாட்டிக்கிட்டு முழிப்போம்… இட்ஸ் ஆல் இன் தி கேம்னு நம்ம அதை ஓவர்கம் பண்ணவும் செய்வோம்… இது எல்லாமே நம்ம செஞ்ச செயல் நம்மளை மட்டும் பிரச்சனைல மாட்டிவிடுற வரைக்கும் தான்… எப்ப நம்ம செஞ்ச காரியம் இன்னொருத்தரையும் பாதிக்க ஆரம்பிக்குதோ அப்ப நம்ம செல்ஃப் அனாலிசிஸ்ல இறங்கிடணும்… நம்மளோட ப்ராப்ளமேடிக் பிஹேவியரை மாத்திக்க நம்மளால ஆன முயற்சிய செய்யணும்.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

முகிலனும் மேகவர்ஷிணியும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். மோகனரங்கத்தின் வீடு விற்கப்படாமல் இருந்தது ஒருவகையில் நல்லதாகவிட்டது.

இருவரும் சில அடிப்படையான பொருட்களை மட்டும் அங்கே எடுத்துச் சென்றிருந்தார்கள். முகிலனின் காரிலேயே தேவையான பொருட்களைத் தங்களது உடமைகளோடு எடுத்துச் சென்றதால் சுலபமாகிப்போனது.

வந்ததும் முதல் வேலையாக கல்லூரிக்குச் சென்று தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வாங்கி வந்தாள் மேகவர்ஷிணி.

முகிலன் தனது வ்ளாகிங் உபகரணங்களைக் கொண்டு வரவில்லை. மடிக்கணினியை மட்டும் எடுத்து வந்திருந்தான்.

அவள் தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபட அவனோ முன்னரே ஏற்பாடு செய்தபடி பிரபல யூடியூபர்களுடன் ‘கொலாப் வீடியோ’ படப்பிடிப்பில் பிசியானான்.

இருப்பினும் உதகமண்டலத்தைப் போலவே இருவரும் சேர்ந்து காலைப்பொழுதில் ஒன்றாகச் சமைப்பது, மாலையில் ஒன்றாகச் சேர்ந்து அருகிலுள்ள பூங்காவுக்குச் செல்வது, சுற்றுண்டிகளை ருசிப்பதென சென்னை நாட்களை ரசனையோடு கழித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருவருக்கொருவர் என்ன பிடிக்குமெனச் சொல்லாமலேயெ ஒருவர் மற்றொருவரின் செயல்பாடுகளைக் கவனிப்பதன் மூலம் கண்டுகொண்டார்கள்.

யாருமற்ற வீட்டில் இரவின் இருளில் தன்னை நெருங்கி தனக்குள் புதைந்து உறங்கும் கணவனுக்கு இருளைக் கண்டும், குறுகிய இடங்களில் தனிமையாக இருப்பதை நினைத்தும் பயம் என்பதை மேகவர்ஷிணி புரிந்துகொண்டாள். ஆம்! முகிலனுக்கு குறுகலான சிறிய இடங்களில் இருளும் தனிமையும் இருந்தால் இனம் புரியாத பயம் வந்துவிடும்! க்ளாஸ்ட்ரோஃபோபியா!

பெரிய நோய் எல்லாம் இல்லை! மனரீதியான பயம் மட்டுமே! நம் ஒவ்வொருவருக்குள்ளும் இத்தகைய பயங்கள் உண்டு. முகிலனுக்குக் கொஞ்சம் அதீதம்! அவ்வளவே!

அதே வீட்டில் அவளது அன்னை மற்றும் தமக்கையுடன் கழித்த தருணங்களை எண்ணி அவ்வபோது கண்ணீர் விடும் மேகவர்ஷிணியை முகிலனும் கவனிக்காமல் இல்லை.

நான் மிகவும் தைரியசாலி, குறும்புக்காரி என காட்டிக்கொள்ளும் அவளுக்கு யார் முன்னும் அழப் பிடிக்காது. இதுவரை அவன் முன்னிலையில் கூட ஒரே ஒரு முறை அழுதிருக்கிறாள். அந்த அழுகை ஆதங்கம் நிறைந்தது. அவளது மனம் உணர்ந்த ஏமாற்றத்தின் அடையாளம் அந்த அழுகையும் ஆற்றாமையும்!

மற்றபடி தனது அழுகையை வைத்து யாரும் தன்மீது இரக்கப்படுவதை மேகவர்ஷிணி எப்போதுமே விரும்பியதில்லை. அது கணவனாகவே இருந்தாலும் சரி!

அதை முகிலன் நன்றாகவே புரிந்து வைத்திருந்தான். எனவே உறங்குவதாகக் காட்டிக்கொண்டு அவள் விசும்பும் தருணங்களில் அவளோடு ஒன்றிக்கொள்வான். இருளும் தனிமையும் சிறிய அறையும் கொடுக்கும் பயத்தை அவளது அரவணைப்பில் கரைத்து அவளையும் ஆசுவாசப்படுத்தி உறங்கிவிடுவான்.

மேகாவின் கண்ணீர் அவனது ஸ்பரிசத்தில் நின்றுவிடும். இழந்தவர்களை எண்ணி வருந்தும் இதயத்தின் வேதனையும் குறைந்து கணவனின் பயத்தைப் போக்க அவனைக் குழந்தை போல அரவணைத்து உறங்கிவிடுவாள் அவள்.

மறுநாள் விழிக்கையில் இரவில் நான் அழவில்லையே என்ற ரீதியில் அவளும், எனக்கு ஒன்றும் பயமில்லை என்ற ரீதியில் முகிலனும் நடந்துகொள்வார்கள். இணையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் எண்ணமற்றவர்கள்!

இதற்கிடையே மேகவர்ஷிணியின் தேர்வும் நடந்து கொண்டேயிருந்தது. அதை தேர்ச்சி பெறுமளவுக்கு எழுதுவதே அவளுக்குச் சாதனையாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்து அவள் வரும்வரை காரில் கல்லூரியருகே காத்திருப்பான் முகிலன்.

இரண்டு நாட்கள் பார்த்தவள் மூன்றாம் நாள் அவனை வரவேண்டாமென சொல்லிவிட்டாள்.

“ஏன்டி நான் வந்தா உனக்கென்ன?” என்றவனை முறைத்தபடி காரில் அமர்ந்தவள்

“ஆல்ரெடி உன் வ்ளாக் வேலைய செய்ய விடாம பண்ணிட்டேன் நான்… இதுல சென்னைக்கு நீ வந்த வேலையையும் செய்ய விடாம நான் இடைஞ்சலா இருக்க விரும்பல… என் எக்சாமுக்காக தான் நீ ஃப்ரெண்ட்வுட் சேனலோட இண்டர்வியூவை போஸ்ட்போன் பண்ணுறனு ரம்ஸ் பேபி சொன்னா… காலேஜ்ல இருந்து வீட்டுக்கு வர எனக்குத் தெரியாதா? நீ எனக்காக வெயிட் பண்ணியே தீரணும்னு அவசியமில்ல” என்றாள்.

முகிலன் காரைக் கிளப்பியபடியே “உன் க்ளாஸ்மேட்ஸ் எல்லாரும் என்னை சைட் அடிக்குறாங்கனு உனக்குப் பொறாமை வந்துடுச்சுல்ல?” என்று கிண்டல் செய்ய அவனது புஜம் அவளது நகங்களுக்கு இலக்கானது.

ஆனால் மேகவர்ஷிணி விளையாட்டுக்குச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்டு முகிலன் அடுத்த இரண்டாவது நாள் ஃப்ரண்ட்வுட் யூடியூப் சேனலின் நேர்க்காணலில் ரம்யாவுடன் இணைந்திருந்தான்.

முதலில் வழக்கமான கேள்விகள்! பின்னர் சமீபத்தில் வைரலான வதந்திகளைப் பற்றிய கேள்விகள்! முக்கியமாக அவனது திருமணமுறிவு பற்றிய வதந்தியைக் குறித்த கேள்விகள்!

“எங்க மேரேஜுக்கு அடிப்படையே உங்க ஸ்டூடியோல தானே ஆரம்பிச்சுது… இதே இடத்துல தான் என் ஒய்ப் என்னை லவ் பண்ணுறதா சொன்னாங்க… அவங்க முதலும் கடைசியுமா குடுத்த பப்ளிக் ஸ்டேட்மெண்ட் அது தான்… கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க என் கிட்ட வச்ச முதல் ரெக்வஸ்ட் எப்பவுமே எங்க லைஃப் சோசியல் மீடியால பேசுபொருள் ஆகக்கூடாது… அவங்க சோசியல் மீடியால லோ புரொபைல் மெயிண்டெய்ன் பண்ணனும்னு ஆசைப்பட்டாங்க… எங்க லைஃபோட அழகான மொமண்ட்சை வ்ளாக் எடுக்கவோ கண்டெண்ட் ஆக்கவோ அவங்க அனுமதி குடுக்கல… என்னோட சேனல்ல அவங்களை பத்தியோ என் பெர்ஷ்னல் லைஃப் பத்தியோ நான் வ்ளாக் போடாதத்துக்குக் காரணம் அவங்களோட இந்தக் கண்டிசந்தான்… பட் அதையே வேற மாதிரி சோசியல் மீடியால திரிச்சு பேச ஆரம்பிச்சிட்டாங்க… அதனால என் ஒய்ப் அனுமதி இல்லாம எங்க ஹனிமூன் வ்ளாகை நான் சேனல்ல அப்லோட் பண்ணுனேன்… அதுக்காக அவங்க கிட்ட செமத்தியா வாங்கி கட்டிக்கிட்டேன்… இப்ப வரைக்கும் அவங்களுக்கு என் மேல வருத்தம் இருக்கு… நான் எனக்காக மட்டும் அந்த வீடியோவ அப்லோட் பண்ணல… என் ஒய்பை ‘கோல்ட் டிக்கர்’னு மென்சன் பண்ணி நிறைய ட்ரோல் வீடியோஸ் போட்டாங்க… என்ன அர்த்தத்துல அப்பிடில்லாம் போடுறாங்கனு தெரியல… அந்த மாதிரி வீடியோஸ் பாத்து உணர்ச்சிவசப்படக்கூடாதுனு என் ஒய்ப் கண்டிசன் வேற போட்டாங்க… இப்பிடி ஒரு ஒய்பை எந்த மடையன் டிவோர்ஸ் பண்ணுவான், சொல்லுங்க… ஷீ இஸ் மை லிட்டில் மன்ச்கின்… அவங்க கூட நான் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு… சோ எங்களோட டிவோர்சுக்காக ஆசையா காத்திருக்குற ஒவ்வொருத்தருக்கும் நான் குடுக்க போற பரிசு என் ஒய்ப் கூட சிறப்பா வாழ்ந்து காட்டுறது மட்டும் தான்னு நினைக்குறேன் ரம்யா”

முகிலனின் பேச்சில் ரம்யாவின் முகம் பூரித்துப்போனது. தோழி ஒன்றும் தவறான நபரை அவசரமாக மணமுடித்துவிடவில்லை.

முகிலனின் நடவடிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக முதிர்ச்சியற்றுத் தோன்றினாலும் அவளுக்காக அவன் மனதில் அழகான இடமொன்று இருக்கிறது! அதை அவனது வார்த்தைகள் மட்டுமன்றி அவனது விழிகளும் பிரதிபலிப்பதைக் கண்டவள் மனம் நிறைய அவனை வாழ்த்தினாள்.

அடுத்து முகிலனின் விசிறிகளுடன் கலந்துரையாடல், செல்பி என நேரம் பறந்தது. நேர்க்காணல் முடிந்து முகிலன் கிளம்பியபோது ரம்யா அவனையும் மேகவர்ஷிணியையும் தங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைத்தாள்.

“போன தடவை வீடு காலி பண்ணுறோம்னு சொல்லி சமாளிச்சிட்டிங்க… இந்தத் தடவை நீங்களும் மேகாவும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்… என் மம்மியோட ஆர்டர் இது” என்று மிரட்டலாகச் சொல்லி அனுப்பிவைத்தாள் அவனை.

நேர்க்காணலில் அவன் பேசியவற்றை பற்றி மேகாவிடம் அவள் சொல்லவில்லை. தோழியே பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும் முகிலனின் முதிர்ச்சியான பதில்களை என்று எண்ணிக்கொண்டாள்.

அவள் எண்ணியது போலவே இரவுணவின் போது முகிலனின் நேர்க்காணலை யூடியூபில் பார்த்த மேகவர்ஷிணியின் கண்கள் கலங்கிப்போயின.

ஷீ இஸ் மை லிட்டில் மன்ச்கின்… அவங்க கூட நான் போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு…” என்றவனே அவள் மனமெங்கும் நிறைந்து போனான்.

தனது நேசம் அவனுக்குள் மாயாஜாலத்தை உண்டாக்குமென அவள் நம்பியது வீண் போகவில்லை. அதோடு முக்கியமாக அவன் ஒன்றும் மற்ற யூடியூப் கபிள் வ்ளாகர்களைப் போல அவனது மனைவியையோ அவளுடன் செலவளித்த அற்புத தருணங்களையோ கண்டெண்ட் ஆக்கி காசு பார்க்க நினைக்கவில்லை. தங்களது சொந்தவாழ்க்கையைப் பற்றி கிளம்பிய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே தேனிலவின் போது எடுக்கப்பட்ட வ்ளாகை தனது அனுமதியின்றி பதிவேற்றியிருக்கிறான்.

கலங்கிய கண்களை அவனிடம் காட்டிக்கொண்டால் கிண்டல் செய்வான். அதை மறைத்தபடி “இதுதான் காரணம்னு முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன கேடு?” என்று போலியான கோபம் காட்டியவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் முகிலன்.

மேகவர்ஷிணி ஆரோக்கியமான அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டாள்.

“என்னடி லுக்கு?”

“என் கூட ரொம்ப தூரம் போகணும்னா என்ன அர்த்தம்டா?”

“உன் கூட ஒரு லாங் ட்ராவல் போகணும்னு ஆசைப்பட்டேன்… அதை சொன்னேன்… அவங்க அதுக்கு ரொமாண்டிக்கான மியூசிக் போட்டு ‘வாட் அ லவ்’னு உருகியிருக்காங்க பாரு… ஃபன்னி கய்ஸ்”

சமாளிக்க நினைத்தவனின் தாடையைப் பற்றி திருப்பியவள் அவனது கண்களையே குறுகுறுவெனப் பார்க்கவும் கண்களுக்குக் குறுக்கே கையை வைத்து மறைத்தான்.

“எல்லாம் புரிஞ்சிடுசுல்ல… அப்புறம் என்னடி கேள்வி? எனக்கு உன் கூட அழகான வாழ்க்கை வாழணும்னு ஆசை… குறைஞ்சது நாலு புள்ளைங்க வேணும் எனக்கு”

“நாலா?” அவன் கைகளை விலக்கி புஜத்திலேயே நறுக்கென கிள்ளினாள் மேகவர்ஷிணி.

வலித்த புஜத்தைத் தடவிக்கொண்டவன் “இப்பவே வேணும்னு நான் கேக்கல மேகா… யூ ஆர் நாட் ரெடி டூ டு தட்… ஐ நோ… பட் இதுல்லாம் என் வருங்காலத்திட்டங்கள்” என்றான் அமர்த்தலாக.

“சொல்லிட்டுத் திட்டம் போடுடா… சம்பந்தப்பட்ட என்னோட ஒபீனியன் முக்கியம்… ஞாபகம் வச்சுக்க”

“நீ வேண்டாம்னு சொல்லமாட்ட… எனக்குத் தெரியும்… யூ ஆர் மை ஸ்வீட் மன்ச்கின்”

மோவாயைக் கிள்ளி முத்தமிட்டவனைக் காதலாய்ப் பார்த்தாள் மேகவர்ஷிணி.

இப்படியே அழகான தருணங்களை வாரியிறைத்த சென்னை நாட்கள் தேர்வு முடிவோடு சேர்த்து முடிவுக்கு வர முகிலனும் மேகவர்ஷிணியும் ரம்யாவின் வீட்டில் விருந்துக்குச் சென்றார்கள்.

‘லெமன் க்ராஸ் கம்யூனிட்டி’யின் ஏழாவது பிரிவில் பதிமூன்றாவது மாடியில் ரம்யாவின் ஃப்ளாட் இருந்தது.

அத்துணை உயரத்தில் இருக்கும் பால்கனியில் நிற்கவே பயந்து ஹாலோடு முடங்கிக்கொண்டாள் மேகவர்ஷிணி. முகிலனும் ரம்யாவும் கட்டாயப்படுத்தி அவளை பால்கனிக்கு இழுத்துவந்து கீழே தெரிந்த காட்சிகளைக் காட்டி கலவரப்படுத்தினார்கள்.

பிய்த்துக்கொண்டு அடித்த காற்றில் ஆடைகள் வேறு பறக்க இருவரையும் கழுவி ஊற்றிவிட்டு மீண்டும் ஹாலுக்கு ஓடிவந்துவிட்டாள்.

ரம்யாவின் பெற்றோர் அவளையும் முகிலனையும் சிறப்பாகக் கவனித்து புத்தாடைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

“ஊட்டிக்கு வாங்க அங்கிள்… ரம்ஸ் குட்டி, நீயும் ஆன்ட்டியும் சாக்குபோக்கு சொல்லாம அங்கிளைக் கூட்டிட்டு வாங்க” என்று சொல்லி விடைபெற்றான் முகிலன் மேகாவுடன்.

இருவரும் மின்தூக்கியில் ஏறியதும் சிறிது நேரத்தில் என்னவாயிற்றோ, மின்தூக்கி தரைத்தளத்துக்குப் போகாமல் இடையிலேயே நின்றுவிட்டது. போதாக்குறைக்கு மின்சாரமும் திக்கித் திக்கி நின்றுபோனது.

இருள், குறுகிய இடம் என்றதும் முகிலனின் மனதுக்குள் கிலி பரவியது! உடல் நடுங்கியது. உமிழ்நீர் சுரப்பிகள் வேலைநிறுத்தம் செய்துவிட்டனவா? அவனது தொண்டை வறண்டு போனது! ஆனால் வியர்வை சுரப்பிகள் மட்டும் ஓவர் டைம் வேலை பார்க்க ஆரம்பித்தன! ஆரம்பமானது க்ளாஸ்ட்ரோஃபோபியா!

மேகவர்ஷிணியின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

“பயமா இருக்குடி மேகா” என்றான் திணறியவனாக.

“ஒன்னுமில்ல முகில்… நான் இருக்கேன்ல… என் மேல சாய்ஞ்சுக்க… இப்ப பவர் வந்து லிப்ட் கீழ போயிடும்”

அவனது கையைப் பிணைத்தவள் முகிலனின் உடல் நடுங்கியதைக் கண்டுகொண்டாள்.

நடுங்கியவன் அவளை அணைத்துக்கொண்டு கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டான்.

அவனுக்குள் இருந்தது எல்லாம் பயம் பயம் பயம் மட்டுமே!

மேகவர்ஷிணியின் கரங்கள் அவனது முதுகை வருடிக்கொடுத்தன. சேயை வருடிக்கொடுத்த தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்தவனின் நடுக்கம் குறைந்தது. ஆனாலும் புசுபுசுவென்ற வேகமான பெருமூச்சுடன் அவளது கழுத்தில் அவன் முகம் புதைந்த அழுத்தம் மட்டும் குறையவில்லை.

மேகவர்ஷிணி ஒரு கையால் அவனது முதுகை வருடிக்கொடுத்தபடி இன்னொரு கையால் ரம்யாவின் எண்ணுக்கு மொபைலில் அழைத்தாள். இப்படியே நின்றால் தீர்வேது? அவளிடம் சொன்னால் ஏதாவது உதவி கிட்டலாம்!

ரம்யா அழைப்பை ஏற்றதும் திடீரென மின்தூக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையைச் சொல்லி உதவும்படி கேட்டாள்.

ரம்யா பரபரப்புடன் தங்களது தளத்திலிருந்த ;ல்ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் அலுவலகத்துக்கு ஓடினாள்.

மின்சாரம் மீண்டும் வரும்வரை முகிலனின் நடுக்கமும் வியர்வையும் குறையவில்லை.

“பயப்படாத முகில்” என்ற மேகாவின் குரல் மட்டுமே அவனுக்கு அப்போது தைரியம் கொடுத்தது.

விளக்கு எரிந்து மின்தூக்கி உறுமலுடன் இயங்க ஆரம்பிக்கவும் முகிலனின் நடுக்கம் குறைந்தது.

“கண்ணைத் திறந்து பாரு முகில்… லிஃப்ட் ரன் ஆகுது”

மேகவர்ஷிணியின் குரல் கொடுத்த தைரியத்தில் கண்களைத் திறந்தான்.

வியர்வையில் குளித்திருந்தவனது முகத்தைச் சுடிதாரின் துப்பட்டாவால் துடைத்தவள் தன்னைக் காக்க வந்த தேவதையாகத் தெரிந்தாள் அக்கணம்!

முகிலன் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான். இன்னும் மூச்சு சீராகவில்லை. ஆனால் அவன் மனம் அந்நொடியில் அவள் தனக்குத் தைரியம் கொடுத்ததையே யோசித்தது.

தரைதளத்தில் அவர்களுக்காக காத்திருந்தாள் ரம்யா.

“லிப்ட் ஒர்க் ஆனதும் ஓடி வந்தேன்டி… மேல ஆபிஸ்ல சொன்னேன்… லிப்டுல எதோ பிரச்சனை… டெம்பரரியா ஏதோ பண்ணுனாங்கடி”

*நோ ப்ராப்ளம் ரம்ஸ்.. நாங்க கிளம்புறோம்”

முகிலனைக் காருக்கு அழைத்து வந்து அமர வைத்தவள் “நீ ட்ரைவ் பண்ண வேண்டாம் முகில்” என்று சொல்லிவிட்டு தானே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினாள்.

திறந்திருந்த கார் ஜன்னல் வழியே வந்த காற்று முகிலனின் பதற்றத்தை மட்டுப்படுத்தியது. அவன் மெதுவாக இயல்புக்குத் திரும்பியிருந்தான்.

கர்மச்சிரத்தையாகக் காரை ஓட்டியவளைக் கனிவாகப் பார்த்து காற்றால் கலைந்த அவளது சிகையைக் காதருகே ஒதுக்கிவிட்டான்.

“ஒரு ஆம்பளையால யாரோட அருகாமைல அவனோட ஆண் திமிரை ஒதுக்கிவச்சுட்டு இயல்பான பயம், அழுகை, சந்தோசத்தைக் காட்ட முடியுதோ அந்தப் பொண்ணு தான் அவனுக்கான சிறந்த துணை”

யாரோ எங்கோ சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. எனக்கானவள் இவளே! காதலால் கனிந்த பார்வையோடு மானசீகமாகச் சொல்லிக்கொண்டான் முகிலன்.

19 thoughts on “MM 21 (PRE-FINAL)”

  1. Kalidevi

    Kandipa entha oru aambalaiim avlo sikram aluga matanga oru ponnu munnadi apadi aluthaantha ponnu avan life la mukiyam athu tha megha wow wow interesting so cute

  2. M. Sarathi

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 21)

    உண்மை தான்..! எந்த ஒரு ஆணால தன்னோட பயம், அழுகை, இயலாமை, சந்தோஷம் இவை அத்தனை உணர்வுகளையும் எந்தவிதமான தயக்கமும் இல்லாம எந்தப் பொண்ணுக் கிட்ட காட்ட முடியுதோ…
    அவளே அவனோட வாழ்க்கைத் துணை, மிகச் சிறந்த இணையும் கூட.

    அது தவிர, முகிலனோட லிட்டில் மன்ச்கின் கூட போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்குது தானே…!

    சில அப்பாக்கள் காட்டுகிற கண்டிப்புகள்,கறாருகள் கூட
    பிள்ளைகளின் நலனுக்காகத்
    தான் என்பதை முகிலன் இப்ப
    ஆத்மார்த்தமா உணர்ந்து இருப்பான்.

    மேகா… லிட்டில் மன்ச்கின் மட்டுமல்ல, அவனுடைய வாழ்வை வளமாக்க வந்த தேவதைப் பெண் என்பதையும்
    உணர்ந்திருப்பான். அதேப்போல் மேகாவின் உயிர் காத்தவன் மட்டுமல்ல, உயிரில் நிறைந்தவனும் முகிலன் மட்டுமே.

    (முகிலன்)மேகங்கள் இல்லாமல் (மேகவர்ஷிணி) மழை பொழிவதில்லை.

    ஐ திங்க்… இந்த டைட்டிலோட அர்த்தம் கூகுள்ள சர்ச் பண்ணி பார்த்தேன். அதோட பொருள் இப்படித்தான் காட்டுது.

    மோனம் என்றால் ஞான வரம்பு,
    மனம் அலையாமல் அடங்கி இருப்பது, சிந்தனை அற்று இருப்பதே மோனம்.

    முகிலனோட மோனம் மேக வர்ஷிணியோ..? அது தான்
    “மேகத்தின் மோனம்”மா…?
    கரெக்ட்டா..?
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  3. முகிலின் இந்த பயம் கூட மேகாவின் அன்பாலும் அனுசரணையாலும் காலப் போக்கில் மறைந்து விடும். லவ்லி கப்பிள்ஸ்❤❤❤❤

  4. Priyarajan

    That’s 💯 true aambala pasanga aluga matanga payapada mAtanganu illai….. Kandipa avangalukku aanavanga kita intha kunam velipadum…. Athukulla mudiya pogutha.. Very sad

  5. அருமை. .. எந்த ஓரு ஆண் தன்னோட பலத்தை விட பலவினத்தை மனைவியிடம் தான் காட்ட வேண்டும்

  6. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  7. Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr 👌👌👌👌👌👌👌

  8. Super sis nice epi 👌👍😍 Correct pa oru aan thanoda kaneeraium sogathaium thannavalidam dhan kaata mudium mugil thanoda love a purinjikitan semma happy ☺️

  9. இத்தனை நாள் அவனுக்குள்ள எழுத மாற்றங்கள் எல்லாம் எதனால் என்று அவன் யோசிச்சிட்டு இருந்தா. ன் ஆனால் ஒரு லிஃப்ட் அதெல்லாம் இந்த மேகாங்கற பெண் மீது உண்டான காதலால் தான் என்று புரிய வைத்துவிட்டது.

  10. Lovely story ma … social media வேடத்தில் pros and cons vachu ஒரு story etha 2k lifestyle and thoughts and avanga way of seeing life and that way of facing struggles semma narration …loved it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *