அத்தியாயம் – 8
ஆயிரம் கண்கள் போட்டி விறுவிறுப்பாகச் செல்ல ஆரம்பித்தது. தமிழ் நிலவன் தலைவர் பொறுப்பு ஏற்றதும், மீண்டும் பெண்களே சமையல், ஆண்கள் வீடு சுத்தம் என்ற பொறுப்பேக் கொடுத்தார்.
இதில் தியா, சித்ரா இருவருக்கும் சற்று எரிச்சலே. ராஜி, வைஷி இருவரும் எதுவும் சொல்லவில்லை.
சென்ற வாரம் முழுதும் உடல் பலத்தை ஒட்டியே டாஸ்க்கள் கொடுக்கப்பட்டது. இந்த வாரம் அறிவு சார்ந்த போட்டிகளை நிகழ்ச்சிக் குழு அறிவித்தது.
இந்த போட்டி அந்த வாரத்தில் மூன்று நாட்கள் நடைபெறும். அங்கே அங்கே விடுகதைகள் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும். அதைத் தேடி எடுத்து அதற்கான பதிலை யார் முதலில் சொல்கிறார்களோ அவர்களுக்கு பாயிண்ட்ஸ் ஏறும். இது குழு போட்டி அல்ல. தனி நபர் போட்டி. ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் புதிர்கள் இருந்தது. ஆனால் அதைக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கென ஒரு ஒலி இசைக்கப்பட்டது. அந்த சத்தம் கேட்டதும் அந்த வீட்டில் எங்கு வேண்டுமானாலும் ஒளித்து வைத்திருக்கும் அந்த புதிரை கண்டுபிடித்து விடையை காமெரா முன் சொல்ல வேண்டும். இது தான் விளையாட்டின் விதிமுறை.
இந்த விளையாட்டின் ஆரம்பம் எல்லாருக்கும் நன்றாகவேச் சென்றது. முதல் நாளில் பத்து முறை புதிர் தேட அவகாசம் கொடுக்கப்பட்டது. மூன்று நாளில் எல்லாரும் மூன்று முறை முயற்சி செய்யலாம். முதல் நாள் நிறைவில் சரண், தியா, தருண், விமல் நால்வரும் தலா இரண்டு புதிர்கள் கண்டுபிடித்து இருந்தனர். முருகன், வைஷி இருவரும் ஒரு புதிருக்கு விடை சொன்னார்கள்.
அன்று இரவு வேலைகள் முடித்துப் படுக்கும் போது தியா, தருண், விமல் மூவரும் விளையாட்டைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
சரண், முருகன், ராஜி இவர்கள் மூவரும் மறுநாள் எப்படித் தேட வேண்டும் என்றும், தியா மற்றும் அவளின் நண்பர்கள் இதற்கு மேல் வெல்லக் கூடாது என்றும் சரண் மற்றவர்களுக்குப் பாடம் எடுத்தான். வைஷியும் அவர்களோடு தான் இருந்தாள். அவளுக்கு இது பிடிக்கவில்லை. அவரவர் திறமை தானே வெற்றியைத் தரும் என நினைத்தாள். ஆனால் சரண் அந்த சேனலைச் சேர்ந்தவன் என்பதால் வைஷி நேரடியாகப் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அதனால் வைஷி அமைதியாக இருந்தாள்.
மறுநாள் விளையாட்டில் அன்றைக்கும் சரண், விமல், தியா மூவரும் தலா இரண்டு புதிர்களை விடுவித்து இருந்தனர். தருண், வைஷியோடு ராஜி, சித்ராவும் சேர்ந்து ஆளுக்கு ஒரு புதிர்விடை கண்டார்கள்.
அன்றும் சரண் தன் நட்புகளைச் சேர்த்துக் கொண்டு, மறுநாள் வேறு மாதிரி விளையாட வேண்டும் என்று முடிவு செய்தான். அதன் படி புதிர் தேடுபவர்களைப் பின் தொடரவேண்டும் என்றும், புதிர் யார் கைகளில் கிடைத்தாலும் அதைப் பறித்து விட வேண்டும். யார் கையில் புதிர் இருக்கிறதோ அவர் தான் காமெரா முன் செல்ல வேண்டும். இப்போது பாயிண்ட்ஸ் ஏற விடாமல் தடுக்கும் ஆட்டத்தை ஆட வேண்டும் என்று பேசினான்.
இது விதிமுறை மீறல் ஆகாதா என்ற வைஷியின் கேள்விக்கு, அதைப் பற்றி விதிகளில் எதுவும் சொல்லாததால் சரிதான் என்றான் சரண். அதே போல நம் நால்வரில் யார் எடுத்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை எனவும் கூற, வைஷிக்கு இதில் ஒப்புதல் இல்லை.
இதை அறியாமல் மற்ற போட்டியாளர்கள் மூன்றாவது நாளும் எப்போதும் போலவே விளையாடினர். அன்றைய தினம் முதல்முறை புதிர் தேடுவதற்கான ஒலி கேட்கவும், வேகமாகத் தேட ஆரம்பித்தனர். விமல் ஒரு புதிர் இருக்கும் இடத்தை நெருங்கும் நேரம் சட்டென்று ராஜி ஏதோ விமலிடம் பேச்சுக் கொடுத்தாள். அந்த நேரத்தில் சரண் புதிரை கையில் எடுத்து விட்டான். ஆனால் புதிருக்கு விடை தெரியவில்லை என காமெரா முன் சொல்லிவிட்டு வந்தான். இதனால் யாருக்கும் பாயிண்ட்ஸ் இல்லை.
இதைப் போல அடுத்த முறை தருண் புதிரை நெருங்கும்போது முருகன் பேச்சுக் கொடுக்க ராஜி அதைக் கையில் எடுத்தாள். மூன்றாவது முறை தியாவிற்கும் இதே நடந்தது.
மூன்றாவது முறையும் நடக்கவே தியாவும் அவளது நண்பர்களும் இது ஏமாற்றும் வேலை என உணர்ந்துக் கொண்டனர். அதற்கு பின் புதிர் தேடும் சமயங்களில் யாரிடமும் நின்று பேசாமல் முன்னேறினார்கள்.
ஆனால் அன்று வைஷி, சித்ரா, மாணிக்கம் இவர்கள் தலா ஒரு புதிர் கண்டுபிடித்திருந்தனர். இனி மிச்சம் நான்கு மட்டுமே. அதில் இரண்டு விமல் கண்டுபிடிக்க, ஒன்று தருண், ஒன்று சரண் எனக் கண்டுபிடித்தனர்.
அன்றைய நாள் முடிவில் பாயிண்ட்ஸ் சரண், தருண், விமல் மூவரும் சமமாக இருந்தனர்.
ஆனால் சரண் குழுவினர் ஏமாற்றியதை வைஷி தியாவிடம் அவர்கள் அறியாதவாறு கூறிவிட்டாள்.
அதைக் கொண்டு தியா சரணிடம் சண்டையிட, தருணும் கேள்வி கேட்டான். சரண் விதிமுறைகளில் கூறிய எதுவும் தான் மீறவில்லை எனவும், இதுதான் ஸ்ட்ராடஜி எனவும் கூற எல்லாருக்கும் கோபம் வந்தது.
இதைப் பற்றி கன்ஃபஷன் அறைக்குச் சென்று அவரவர் கருத்தைக் கூறி வர, விமலின் முறை வந்தது.
விமலிடம் நிகழ்ச்சிக் குரல் “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டது.
விமல் “இதில் நான் புரிந்துக் கொண்டது, அறிவை யாராலும் திருட முடியாது என்பதே.” என்றான்.
“புரியவில்லை விமல்” என குரல் கூறியது.
“மற்றவர்களால் அந்த புதிர் கேள்வியைத் தான் திருட முடிந்தது. பதிலை அல்ல. நியாயமாக யார் எடுக்க வேண்டுமோ அவர்களுக்கு அதன் பதில் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அதைக் கூற முடியவில்லை எனில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் திருடி எடுத்தாதற்கான பலன் அதைச் செய்தவர்களுக்கும் கிடைக்கவில்லை. ஏனெனில் அதற்கான விடை அவர்களுக்குத் தெரியவில்லை. இதுதானே கர்மா” எனக் கூற, நிகழ்ச்சிக் குரல் விமலை நீங்கள் போகலாம் என்று கூறியது.
அந்த அறைக்குள் நடந்த உரையாடல்கள் எதுவும் யாருக்கும் வெளியில் சொல்லப் படவில்லை. போட்டியாளர்களும் சொல்லக் கூடாது என அறிவுறுத்தப் பட்டது.
ஆனால் அந்த வாரத்தில் அடுத்த இரண்டு நாட்களில் இதை எல்லாம் தனித் தனியாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர் போட்டியாளர்கள். தியா, தருண் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை. விமல் மட்டும் அதைப் பற்றி எதுவும் பேசவேண்டாம் என அவனின் நட்புகளுக்கு அறிவுறுத்த, அதற்கு மேலே அவர்கள் பேசவில்லை.
இந்தக் காட்சிகள் அனைத்தும் நேயர்களுக்கு ஒளிப்பரப்பப் பட, அன்றிலிருந்து நேயர்களின் விருப்பத் தேர்வாக ஆரம்பித்தான் விமல்.
——
இந்த வாரத்தில் நிகழ்ந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மங்கைக்கு விமலனின் மெச்சூரிட்டியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடிந்தது. எப்போதும் மங்கையிடம் அப்படித் தான் என்றாலும், மற்றவர்களிடத்திலும் அதையே மெயின்டய்ன் செய்வது மங்கைக்கு ஆச்சரியமே.
விளையாட்டில் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்த பின்னும் அதை அமைதியாகக் கடப்பதற்கும் தனித் தன்மை வேண்டும். இதைத் தான் வெளிக் கொண்டு வருகிறானோ தன் அத்தை மகன் என மங்கை சிந்தித்தாள்.
அங்கே விமலின் வீட்டிலோ அக்ரஹாரமே கூடி, ருக்மணியிடம் இப்படி எல்லாம் ஏமாத்தறா பாரு. நாங்க எல்லாம் நம்ம நாராயணனுக்குத் தான் சப்போர்ட் பண்ணி வோட் போட போறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
ருக்மணி, வாசுதேவன் இருவருக்கும் இப்போது இன்னும் பயம் வந்துவிட்டது. இன்றைக்கு விமலின் மேல் தப்பில்லை என்பதால் ஆதரிப்பவர்கள், வரும் நாட்களில் தவறு செய்தால் அப்போது எப்படித் தூற்றுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பெருமாளே, எங்க பிள்ளைக்கு எந்த கெட்ட பெயரும் வரமால் பார்த்துக்கோ என்று கை கூப்பி வேண்டிக் கொண்டனர்.
மங்கையின் பள்ளியிலும் மெதுவாக விமலன் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றது பற்றித் தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் யாருக்கும் விமலன் அவளின் உறவினர் என்று தெரியாது.
மங்கையின் ஊரிலிருந்து அதே பள்ளிக்கு வேலைக்கு வரும் மற்றொரு ஆசிரியருக்கு விமலன், மங்கை உறவு தெரியும்.
முதல் வார இறுதியில் நடந்த பேச்சுக்களைக் கொண்டு, சமூக வலைத்தளம் மற்றும் பத்திரிகைகளில் விமல், வைஷி பற்றிய பேச்சுக்கள் பெரிதாகப் பேசப் பட ஆரம்பித்தது. சிலர் அவர்களை ஜோடி சேர்க்கும் முயற்சி என, சிலர் டிஆர்பி ஏற்ற சேனல் செய்யும் வேலை எனக் கூற என்று இவர்கள் பேச்சேப் பெரிதாக இருந்தது. அவர்களின் வாய்க்கு அவல் போல் விமல் வைஷியிடம் பேசுவது இன்னும் வதந்தி தீயாகப் பரவியது.
இதைப் பற்றிய பேச்சுக்கள் பள்ளி ஆசிரியர்களுக்குள்ளும் நடக்க, அப்போது மங்கையோடு வரும் அவளின் ஊர் ஆசிரியர் உண்மையைச் சொல்லி விட்டார்.
அதிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் கூட, மிஸ் மிஸ் அந்த விமலன் சர் உங்கள் உறவா என்று விசாரிக்க, மங்கைக்குப் பெரும் சங்கடமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் கூட பார்ப்பது மிகுந்த வேதனையும் கொடுத்தது.
மனிதர்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிக்காட்டி வரும் இந்த நிகழ்ச்சி குழந்தைகளின் மனதில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் வந்தது.
எதையும் கண்டுகொள்ளாமல் செல்லப் பழகினாள் மங்கை. யார் அந்த நிகழ்ச்சி மற்றும் விமலைப் பற்றிக் கேட்டாலும் சிரித்து விட்டுச் சென்று விடுவாள்.
—-
அந்த புதிர் போட்டிகள் முடிந்த அடுத்த நாள் முதல் வார இறுதி வரை நேயர்களுக்கான வோடிங்க் மற்றும் போட்டியாளர்களிடமும் நாமினேஷன் தொடங்கியது.
இந்த வார இறுதியில் யார் குறைந்த வாக்குகள் பெறுகிறார்களோ அவர்கள் ஆயிரம் கண்கள் இல்லத்தை விட்டு வெளியேற வேண்டும்.
மாணிக்கத்தை அந்த இல்லத்தை விட்டு வெளியேற்ற விரும்பினான் சரண். அதற்கு போட்டியாளர்களை சரண் மூளைச் சலவை செய்ய, தியா, விமல், தருண் மட்டும் உடன்படவில்லை.
சரண் தனக்கான ஆதரவை ஏற்றி விட ஏற்கனவே தன் நண்பர்கள் மூலம் ஒரு ஐடி குழுவினரிடம் பேசியிருந்தான். சேனல் சப்போர்ட் வேறு இருக்கவே தானாகவே சரண் தன்னிடத்தை எளிதாக தக்க வைத்துக் கொள்ள முடியும்.
மற்றவர்களுக்கு அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் சப்போர்ட் மூலம் தர வரிசையில் இருந்தனர். சரணுக்கு ஆதரவு கொடுக்கும் போட்டியாளர்களுக்கு அவனின் ஐடி குழுவும் தாராளமாக ஆதரவு கொடுத்தனர்.
இவை எல்லாம் வெளியே நடக்கும் விஷயங்கள். அந்த இல்லத்தினுள் பெரும்பாலும் சரணின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. இது தியா, தருண் இருவருக்கும் பிடிக்கவில்லை.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரிடமும் யாரை வெளியேற்ற வேண்டும் எனக் கேட்டது நிகழ்ச்சியின் குரல். சரண் மற்றும் அவனால் மூளை சலவைச் செய்யப்பட்டவர்கள் மாணிக்கம் பெயரைக் கூறினர். தியா, தருண் இருவரும் சரண் பெயரைக் குறிப்பிட்டனர். சித்ரா தானே வெளியேற விரும்புவதாகக் கூறினார். மாணிக்கம் தமிழ் நிலவன் பெயரைக் குறிப்பிட்டார். விமல் மட்டும் சித்ரா பெயரைக் குறிப்பிட்டான்.
ஒவ்வொருவரிடமும் காரணங்கள் கேட்கப்பட, மாணிக்கம் விளையாட்டில் ஈடுபடவில்லை எனக் கூறினார்கள். சரணின் ஆதிக்கம் பற்றி குறிப்பிட்டார்கள். தமிழ் நிலவன் எல்லாரையும் இங்கே ஒன்று அங்கே ஒன்று பேசுவதாகக் குறிப்பிடப்பட்டது. விமல் சித்ரா மேடம் உடல்நிலை மற்றும் அவர் தன் வீட்டினரைத் தேடுகிறார் என்றான்.
நாமினேஷன் ஒரு பக்கம் நடைபெற, அடுத்த இரு வாரங்களுக்கு ஆண்கள் சமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டனர் பெண்கள்.
அன்று வரை சித்ரா, வைஷி, தியா மூவரும் சமையல் செய்து வந்தனர். ராஜி அவர்களுக்கு உதவியாக வேலைகள் செய்து கொடுத்தாள்.
எல்லாரும் சிம்பிளாகவே சமைத்தனர். பெரும்பாலும் காய்கறிகள் வைத்தும், ரொம்பவும் கண்டிப்பாக அசைவம் வேண்டும் என்றவர்களுக்கு மட்டும் தனியாகவும் செய்து இருந்தனர்.
அன்றைக்கு ராஜியின் முறை. அவள் ஒன் பாட் குக்கிங் என, எல்லாரும் சரி என்றனர். விமலனும் எதுவும் சொல்லவில்லை. ராஜி சமைத்து முடித்து இருக்க அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.
-தொடரும்-
Vimal sonnathu correct. Arivai thiruda mudiyathu.
Charan ,Tamil nilavan I vida adhigama politics panran.
Chithra ,eliminate aavangala illai maanickam a?
Super super😍😍
INTERESTING