Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

அத்தியாயம்-22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   ஒரு லட்சமா? என்று வாயை பிளந்தபடி விமலா நிற்க, அன்னை முன் நன்றி கடன் அதுயிது என்று பாரதி வார்த்தை விட்டால் சரிவராதென மௌனமானான்.

ஆனால் பணத்தை பெற்றதில் கோபம் வந்துவிட்டது. “இங்க பாரு உன்னிடம் காசு வாங்கணும்னு நான் எந்த உதவியும் செய்யலை. உதவி செய்ததுக்கு காசு கொடுத்தும் அவமானப்படுத்துவதா போயிடும். இதை நான்… கடனா வாங்கறேன்னு வச்சிக்கோ. நான் இப்ப இல்லைன்னாலும் என்னைக்காவது தந்திடுவேன்” என்றான் ஒருமையில்.

பாரதியோ “ஒரு நிமிஷம்… நீ என்னிடம் பணத்தை வாங்க உதவி செய்யலைன்னு எனக்கு தெரியும்.  அதோட எதிர்பாராத நேரத்துல நீங்க செய்ததுக்கு உதவிக்கும் நான் இந்த பணத்தை தரலை. என் பிரெண்ட் கஷ்டப்படும் போது என்னிடம் இருக்கற காசை எடுத்து நீட்டறேன்.
  நீங்க திருப்பி தரணும்னு ஆசைப்பட்டா, திருப்பி தாங்க. நான் அப்ப வாங்கிப்பேன்.
  ஏன்னா என் பிரெண்ட் இந்த கடனை அடைக்க கண்டிப்பா உழைப்பார். ஒரு நிலைக்கு வருவார்னு நினைக்கறேன்.” என்றாள்.

   இருவரது பேச்சில் விமலாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை‌. ஆனால் அடுத்த நொடி வீதியில் இருக்க போவதில்லை. ஏதேனும் ஒரு வழியை கடவுள் தந்துவிட்டானென்ற மிதப்பு இருந்தது.

  கலா அக்கா வீட்டில் பொருட்களை ஏற்றி கொண்டு போய் விட சொன்னான்.

  இருவரது வீட்டையும் காலி செய்தப்பின், “அப்பா அம்மா வீட்டுக்கு போறேன். நீங்க மூன்று பேரும் ஒரு வாரம் என் வீட்ல இருக்கலாம்.” என்று கூற, “இல்லை… அதெல்லாம் சரிவராது‌. என்று மறுத்தான்.

  பாரதி முகம் வாடிவிட்டது. எப்படியாவது தங்கள் வீட்டில் அழைத்து சென்று நளபாகம் செய்து நன்றியை காட்ட நினைத்தாள். சரவணன் எதற்கும் மசிவதாகயில்லையே.

கலா வீட்டில் வந்ததும் விமலா அனிதா இறங்கியதும், பாரதியும் வந்தாள்.

கலாவோடு பேசிவிட்டு “நான் என்னோட வீட்டுக்கு போகப் போறேன் அக்கா. நடந்தது… இப்ப கொஞ்சம் மறந்து தேறியிருக்கேன்” என்றாள்.

கலாவோ விசுக்கென பாரதி கையை பிடித்து, “விமலாக்கா, அனிதாவை உட்கார வை இத்தான்ட பேசிட்டு வர்றேன்” என்று வாசலுக்கு இழுத்துக் கொண்டு வந்தார்.

  ஆட்டோக்காரன் புகைப்பிடிக்க சென்றியிருக்க, சரவணன் ஆட்டோவிலிருந்த பொருளை கலாக்கா வீட்டோரம் ஒரேயிடத்தில் அடுக்கினான்.

   “இங்கப் பாரும்மா… உனக்கு நடந்ததை அடுத்தவங்களிடம் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை. நீ மறந்து வாழு அது போதும். யாரிடமாவது பேசறப்ப நடந்ததை மறக்கறேன். இப்ப மறந்துட்டேன். இதெல்லாம் கூட சொல்ல தேவயில்லை. ஏன்னா நீ ஏதாவது சொல்ல, மத்தவங்க அப்படியென்ன நடந்ததுனு உன் ஆத்தா அப்பாண்ட தான் துருவி கேட்பாங்க. உன் அப்பா அம்மா வூட்டுக்கு போற. அவ்ளோ தான்‌. சரவணனிடம் அடிக்கடி கேட்பேன். ‘எங்கக்கா… அது வூட்டுக்கு போலாம் இங்க கிடந்து அலையுது’னு சொல்லுச்சு. இப்ப அந்த ஆனந்தராஜால பிரச்சனைனா கூட பரவால்ல. இப்பவாது உங்கூட்டுக்கு போகணும்னு நினைச்ச பாரு. அது போதும்.” என்றார்.

“இல்லக்கா… சரவணன் என்னால” என்று ஆரம்பிக்க, “ம்கூம்.. அவன் என்ன பங்களாவுலயா கிடந்தான். அச்சோ வூடீ வாசல்னு இருந்தவனை துரத்திட்டோம்னு பதறறதுக்கு. யார்கண்டா… இந்தா.. அவன் தங்கச்சி வளர வளர ஒரு நல்ல இடத்திலயும், அவளை வாழ வைக்க வேற வூடு பார்க்கணும் தானே. அது ஏன் இந்த விஷயத்துனால பிள்ளையார் சுழி போட்டதா நினைச்சிக்கோ.” என்றதும், பாரதி உதடு புன்னகை பூசியது.
இந்த அக்காவுக்குள் எத்தனை விஷயம் உண்டு. அதை விடுத்து இப்படி பேசுவதில் பாரதிக்குமே சந்தோஷம் உண்டானது. இவ்வளவு நேரம் என்ன தான் தன்னால் சரவணனுக்கு இந்த நிலை இல்லை என்று கூறிக் கொண்டாலும் மனம் ஏற்கவில்லை. கலாக்கா ஏற்க வைத்துவிட்டாரே.

பாரதியோ, “அக்கா… நான் யூஸ் பண்ணின திங்க்ஸ் இப்ப அப்பா வீட்டுக்கு எடுத்துட்டு போகலை. அங்க இதெல்லாம் இருக்கு. அதனால நீங்க யூஸ் பண்ணுவதா இருந்தா இங்க இருக்கட்டும்” என்றாள்.

  ”அட குட்டி மிக்ஸி, குட்டி பேனு, கெட்டிலு, இன்டக்ஸ் ஸ்டவ்வு எல்லாம் யூஸ் பண்ணுவேன் பாரதி அதெல்லாம் இருக்கட்டும்.” என்று பாரதி உபயோகித்ததை இருக்கட்டும் என்றார்.

சரவணனும் ”அக்கா… எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன். ஒரு வாரத்துல வீடு பார்த்து எடுத்துக்கறேன்.‌ அக்கா.. அம்மி தங்கச்சி இங்க இருக்கட்டும். நான் இவங்களை அவங்க வீட்ல விட்டுட்டு, அப்படியே பிரெண்ட் வீட்ல தங்கிக்கறேன்.” என்று கூற, கலாவுமே “நீ கூட தங்கலாமேடா.” என்றார். “இருக்கட்டும்க்கா. வூட்ல எடஞ்சலா இருக்கும்.” என்று மறுத்தான்.

கலா மெத்து வீட்டு ஆள் அழைத்தால் அவளாக தேடி செல்வார். அதனால் இந்த சிறு வீட்டில் பீரோ கட்டில் சேர் கிச்சன் பாத்ரூம் இதெல்லாம் தவிர்த்து மூவருக்கு படுக்க வசதியாக இருக்கும். நாலாவதாக படுக்க கஷ்டம் தான். எதற்கு இந்த சிரமம் என்று முடிவெடுத்தான்.

   விமலாவிடமும் அனிதாவிடமும் சொல்லிவிட்டு பாரதி கிளம்பினாள். அவள் வீட்டை தேடி.

  சரவணனோடு தன் வீட்டு பகுதிக்கு ஆட்டோவில் பயணம் தொடர்ந்தது.

“என்னாச்சு? என்னைக்கும் இல்லாம இன்னிக்கு கோபமா இருக்கிங்க” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்லைங்க” என்றான் சரவணன். சற்று நேரத்திற்கு முன் ஒருமையில் பேசியதை திருத்திக்கொண்டான்.

ஒருவிதத்தில் கடன் என்று கூறினாலுமே, இந்த ஓரு லட்ச பணம் பாரதியின் உயிரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தற்காக என்று உருத்தியது. ஆட்டோக்காரன் இருக்கும் நேரம் ஏதாவது விரிவாக பேச மனமின்றி தவிர்த்தனர்.

   சரவணன் கோபத்தை பாரதியும் அறிவாள். ஆட்டோ ஒரு அடுக்கு மாடி பகுதிக்கு சென்றது.
  வாசலிலேயே செக்கியூரிட்டி வழிமறித்து வெளி ஆட்டோ உள்ளே செல்ல அனுமதியில்லை என்று நிறுத்திட, பாரதியும் சரவணனும் நடந்தனர்.

சரவணனுக்குள் ஏதோவொரு கோபம் உள்ளமெல்லாம் காந்த, பாரதியோ சரவணனை அடிக்கடி கண்டு, “சரவணா… உங்க தங்கைக்கு பேனா வாங்கி தந்தது போல இந்த கடனை அடைக்காம சுத்தக் கூடாது. உங்க தங்கை இப்ப பிளஸ் டூ. காலேஜ் முடிக்கறதுக்குள் இந்த காசை திருப்பி தரணும். என்ன சரியா?” என்று அவனை பேச வைக்க முயன்றாள்.

  “என் தங்கைக்கு அவ கேட்ட பேனாவை இந்த ஓரு லட்சத்துல கூட வாங்கி தரலாம். ஆனா இந்த ஒரு லட்சம் என்‌ சம்பாத்தியம் இல்லை. என் காசு இல்லை. இது பிரெண்ட்லி உதவி. கரெக்டா?” என்றதும் பாரதியால் மறுக்கவா முடியும்.

  “பிரெண்ட்லி உதவி தான்” என்றாள் ஆமோதிப்பாய்.

  “தேங்க்ஸ்… என் தங்கை காலேஜ் படிச்சி முடிக்கறதுக்குள் இந்த கடனை அடைக்க மாட்டேன். முடிஞ்சா.. அவ பிளஸ் டூ படிப்பு முடியறதுக்குள் உங்க கடனை அடைப்பேன். அவளுக்கும் பார்க்கர் பேனா என் உழைப்புல வாங்கி தருவேன்.” என்று சரவணன் மொழிந்தான்.

  “ஆல்-தி-பெஸ்ட்” என்று பாரதி கைகுலுக்க, சரவணனும் கை நீட்டினான்.

  இதை பால்கனியில் சௌந்திரராஜன் கண்டுவிட்டார். மகள் வருவதை பார்த்து, மணிமேகலையை அழைத்து, சுட்டிக்காட்டி ‘வாசல் கதவை திற’ என்று அவசரப்படுத்தினார்.

சரவணன் பாரதி கதவை தட்டும் நேரம் வாசல் கதவை திறந்துவிட்டு மணிமேகலை மகளை கட்டி ஆரத்தழுவினார்.

சௌந்திரராஜன் மகளை கண்டு கண்ணீரை துடைத்தார்.

  எத்தனை நாட்கள் ஆனது. மகள் தங்கள் வீட்டில் காலடி எடுத்து வைத்து. தினம் தினம் நெருப்பில் வெந்துக் கொண்டிருக்கும் உணர்வு அல்லவா.

  “அம்மா… அப்பா.. இவர் சரவணன்.” என்று அறிமுகப்படுத்தினாள்.

“சரவணா… என்னோட அம்மா அப்பா.” என்று கூற இரீ கையை இணைத்து வணக்கம் வைத்தான்.

“உ..உள்ள வாங்க” என்று அழைத்து சென்றார்கள்.

”காபி டீ?” என்று சரவணனை பார்த்து கேட்க, அவன் பதில் சொல்ல தயங்க, “அம்மா டீ போடுங்க சரவணன் டீ-க்கு அடிமை” என்றாள்.

  சரவணன் பாரதியை கண்டு தடுமாறிக் கொண்டிருந்தான்.
  
   சோபாவில் அமர கூற, உட்காரவும் தயங்கினான்.
“உட்காருங்க தம்பி” என்று இருக்கையை காட்டினார் சௌந்திரராஜன்.

  சரவணனுக்கோ அந்த சோபாவில் அமர்ந்தவன் மிருதுவான, அதனை வருடினான்.

“தம்பியும் உன் கூட வேலை செய்பவராம்மா?” என்று கேட்க, சரவணனோ பாரதியை பார்வையிட்டான்.

  பாரதியோ “இ..இல்லைப்பா.. ச..சரவணன் என் கூட வேலை செய்யலல.
அவர்.. அவர் கவர்மெண்ட்ல க்ளீனிங் டிப்பாட்மெண்ட்ல வேலை பார்க்கறார்.” என்றவள் சரவணனை கண்டு நிம்மதியானாள்.

சரவணனோ உதடு வளைத்து ஏளனமாய் தன்னிலையை எண்ணினான்.
ஆனால் அதை பாரதியிடம் காட்டும் விதமாக நடந்திடவில்லை‌.

  மணிமேகலை டீ போட்டு வருவதற்குள், அவர் மனதிலோ யாரிவன், மகள் எதற்கு அழைத்து வந்திருப்பாள்? பிரஷாந்த் தாங்கள் ஏற்பாடு செய்த பையன். அவன் சென்றுவிட்டான்.
  ரஞ்சித் இவளை கெடுத்தவன் அவனையும் உதாசினப்படுத்தி அனுப்பினாள். அந்த கேடுகெட்டவனை அவள் எண்ணுவதும் அபத்தம்.

  இவன் யார் புதியவன். ஒரே அலுவலகமும் இல்லை. பேசுவதும் பார்வையிடுவதும் தயங்கிதயங்கி வேறு நிற்கின்றனர். ஒரு வேளை பாரதி தங்களுக்கு தெரியாமல் காதலித்து இருப்பாளா?
  இந்த பையன் நன்றாக தான் இருக்கின்றான். ஆனால் ஏதோ குறைவது போல தோன்றியது. அதோடு தலைமுடியும் ஆளும் சாதாரணமானவனாக காட்டுகின்றது. ஒருவேளை இதற்காக தான் தயக்கமா? இதெல்லாம் டீ கொதிக்க மனதில் வந்து சென்றது. இதே எண்ணம் சௌந்திரராஜனுக்கும் இல்லாமல் போகாது. அவருமே சரவணனை ஊடுவினார். அவர் மீண்டும் மனநல மருத்துவரிடம் மகளிடம் பேசி வந்ததை தெரிவித்திருந்தார். அந்த டாக்டரம்மாவோ ‘உங்களோட உங்க மக வந்து தங்கினா, தங்க தட்டுல தாங்கி நல்லபடியா பார்த்துக்கோங்க. அவமனசை காயப்படுத்தாதிங்க. இனி கல்யாணம் என்ற பேச்சு கொஞ்ச காலம் தள்ளி வையுங்கள். அது உங்கள் மகளுக்கு இதமானதாக இருக்கும்’ என்று அறிவுறுத்தியிருக்க சரவணனை வைத்து யாரென்று கேட்கவும் முடியாது கேள்வியை விழுங்கினார்.

  சரவணன் வீட்டை ஆராய்ந்தான், இத்தனை வசதி இருந்தும் தங்கள் இருக்கும் ஏரியாவில்  இந்த பெண் எப்படி தங்கினாள். மனதில் அத்தனை வலி இருந்திருக்கும். இடமும் சுற்றுப்புறமும் கூட கருத்தில் பதியாத அளவிற்கு அங்கே வாழ்ந்திருக்கின்றாள்.

  ஒருவிதத்தில் ஆனந்தராஜால் மீண்டும் அவளது பெற்றவரிடம் வந்தது நல்லது தான் போல. இது தான் எது நடந்தாலும் நல்லதோ என்று கூட தோன்றியது. ஆனால் பாரதிக்கு நடந்தது?
அடுத்த நிமிடம் பாரதியை காண அவளோ டீயை எடுத்து அவனிடம் தந்தாள்.

பீங்கான் கப்பில் டீயின் நறுமணம் அவனை வசியம் செய்தது. இது அவன் ரோட்டு கடையில் ருசித்தது போல இல்லை. பணக்காரர்களுக்கென்று தனியாக ஏற்றுமதி செய்தவை என்று நுகரும் பொழுதே அறிந்துவிட்டான்.

  வேகமாய் குடித்துவிட்டு, “சரிங்க பாரதி நான் அப்ப கிளம்பறேன்.” என்று எழுந்தான்.

  பாரதியும் “அப்பா… பேசி வழியனுப்பிட்டு வர்றேன்.” என்று பின் தொடர்ந்தாள்.

சரவணனோ கேட் வரை வந்தவன் அமைதியில் வர, “சரவணா… எதுனாலும் சொல்லுங்க. உங்களுக்காக ஒரு பிரெண்டா முதல் ஆளா இருப்பேன்” என்றாள்.

லேசான புன்னகையுடன், “சரிங்க… வர்றேன்” என்று திரும்பியவன் மீண்டும் அவளை பார்த்து, “இந்த பணம் கடனா தான் வாங்கியிருக்கேன். தந்துடுவேன் பாரதி. திருப்பி தர்றப்ப மறுக்காம வாங்கிக்கணும்.’ என்று கோரிக்கை வைத்தான்.

“சரி.” என்றவள் அவன் மறையும் வரை நின்று அனுப்பிவிட்டு படியேற, சரவணனோ தன் கால் சட்டையில் இருந்த லட்ச ரூபாயை தொட்டு பார்த்தான். பாரதி தந்த ஒரு லட்சம் இரண்டு கட்டாக ஒரு பையில் சுருட்டி தந்திருந்தாள்.
  கொஞ்சம் உப்பசமாக இருந்தாலும் மழை பெய்கின்ற நேரம் என்பதால் பலரின் பார்வைக்கு குடையை சொருகி நிற்பது போல தெரிந்தது.

  சாலையோரம் நடைப்பாதையில் மெதுவாக நடந்து சென்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

யார் யார் படிக்கறிங்கனு தெரியலை. Rc Group la 18+ கதைகளுக்கு எல்லாம் முட்டு கொடுத்துதூக்கி விடற கும்பல் அதிகமா இருக்கு. ஆனா வித்தியாசமா ஏதாவது எழுதினா யாரும் கமெண்ட்ஸும் போட யோசிப்பதை பார்த்தா கஷ்டமாயிருக்கு. கஷ்டம் எதுக்குன்னா… வாசகர் ரசனை ஏன் இப்படி இருக்குன்னு. கதையில் ஓவர் ரொமன்ஸ் டோஸ் இருப்பது தான் கதையா நினைக்கறாங்க. ஏன்… 🤷🏻‍♀️

அந்த மாதிரி கதை மட்டும் வாசிக்கறவங்க என் மைண்ட்ல காஜி ரைட்டர். காஜி ரீடர் மட்டுமே. கதை லிங்க் கேட்டா கூட தரமாட்டேன்.😏 இதுல இந்த ரீடர் என் சைட்ல விளம்பரமா வருது எப்படி படிக்கனு கேட்டு புலம்புச்சு. ஆனா ஆன்டிஹீரோ 18+கதை இருக்கற சைட்ல அவ்ளோ விளம்பரம் வந்தா கூட போய் படிச்சு ரிவ்யூ வேற. ஏம்மா… உங்க பார்ஷியாலிட்டி அனகோண்டாவுக்கு சாக்கு வேறயா. இது ஒரு பர்டிகுலர் ரீடருக்கான பொங்கல்.

12 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22”

  1. Kalidevi

    saravanan manasula aasaiya valathutan oru pakkam ava amma veetuku vanthu irunthalum avala vitu piriya mudilanu yosikurathu nalla theriuthu aana bharathi una friend ah than ninaikura

  2. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 22)

    இப்பத்தான் பாரதி தேறி தன்னோட சொந்த வீட்டுக்கே வந்திருக்காள், அதுக்குள்ள எந்த கேள்வியும் பதிலும் வேணாமே, முதல்ல அவளுக்கான ஸ்பேசை கொடுங்க., அதுவே அவளோட ரணத்தை ஆற்றி அவளை அடுத்த லெவலுக்கு சிந்திக்க வைக்கும். பொறுமையே பெருமை தரும், பொறுமை இல்லைன்னா எருமை ஓட்ட கூட சரிப்பட்டு வரமாட்டாங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!