Skip to content
Home » ஒரு பக்க கதை-ஸ்… ஸ்… அரவம்

ஒரு பக்க கதை-ஸ்… ஸ்… அரவம்

ஸ்… ஸ்… அரவம்

இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரிசளித்து சூரியன் தன் கதிரொளியை மழங்கிடும் மாலை நேரமது.

     “ஏன்டி… கோழியை அடைச்சி வச்சியா… மாட்டுக்கு தண்ணீ காட்டினியா மாடு கத்திட்டே இருக்கு… இந்த பூவை பறிச்சி சாமிக்கு போட்டியா இல்லையா? ” என்று வெத்தலையை இடித்துக் கொண்டு கிழவி கருப்பாயி விடாது கேள்வி கேட்டு முடித்தார்.

      “வச்சாச்சி போய் திண்ணையை இடிக்காம உள்ள போய் உட்காரு ஆத்தா.

எப்ப பாரு… வெத்தலையை இடிச்சிட்டு அதை செய்தியா இதை செய்தியானு தொன தொனனு.” சலித்தவாறு தோட்டத்தில் வைத்திருந்த நீரில் முகம் அலம்பி தன் வாழைத்தண்டு காலில் நனைத்து விளக்கேற்ற சென்றாள் நீலா.

     திண்ணையில் அமர்ந்து கண்கள் சுருக்கி நீண்ட நேரம் கம்பு தோசையை உண்டு விட்டு நீரை பருகி முடித்தாள்.

     “நீலா…. இந்த தட்டை கொண்டு போடி” என்று கத்தவும் நீலா இடையில் கையை வைத்து நின்றாள்.

     “கிழவி… நீ நீலா…லா இழுக்கறதுலயே என் பெயர் பெரிசானு எனக்கே சந்தேகம் வருது இத்துனுன்டு  பெயர் நீலா கூப்பிட என்னவாம். இழுக்கற… ” என்று தட்டை எடுத்து கொண்டை தோட்டம் பக்கம் சென்றாள்.

    நெடுநேரம் வரவேயில்லை. அரவம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

     “அங்க என்ன குசுகுசுனு…” என்று கேட்ட அடுத்த நொடி

     “பாம்பு சத்தம் கிளவி.” என்று தட்டை கழுவி ஈரத்தோடு வந்து நின்றாள்.

   சற்று நேரம் கழியவும் ”ஏலேய் அங்க கோழி அதிகமா கத்துது. பாம்பு வந்திகிடக்கிறப்பள தெரியுது விரசா வந்து என்னானு பாரு” என்றதும் நீலாவின் தந்தை மற்றும் சிலர் கம்பு டார்ச் லைட் எடுத்து கொண்டு தேடுதலில் புறப்பட்டனர்.

    இங்கு நீலாவோ கையை பிசைந்தபடி, கிழவி ஊரையே கூட்டிடுச்சு. அவன் மாட்டப்போறான்.” என்று பயந்து வெளிறினாள்.

    ஆனால் இவள் பயந்ததற்கு பதிலாக எல்லோரும் சேர்ந்து விஷம் கொண்ட நாகத்தை அடித்து கம்பில் சுற்றியபடி வந்துக் கொண்டிருந்தனர்.

  பாம்பை கம்பில் சுற்றி வந்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.

     நீலாவை கடக்கும் பொழுது கண் சிமிட்டி செல்லவும், அவளால் வெட்கம் கொள்ள இயலவில்லை. பாம்பை கண்டு பயந்திருந்தாள்.

    அனைவரும் அதனை ஊருக்கு அந்தப்பக்கம் தள்ளி வைத்து கொளுத்தி கொண்டிருந்தனர்.

    “இங்க பாரு டி. சும்மா கிணற்று பக்கம் தோட்டத்துபக்கம்னு காதல் கிளிகளா சுத்த கூடாது. உங்கப்பனிடம் நாளைக்கு அந்த பையனை பற்றி சொல்லி வைக்கிறேன். கட்டிக்கிறியானு கேட்டா உங்க இஷ்டம்பா என்று தலையை ஆட்டி வை.” என்று கருப்பாயி கூறி முடித்தாள்.

     “கிழவி… அது வந்து…” என்று தயங்கினாள்.

     “போதும் டி அந்த ஸ் ஸ் அரவம் அப்பவே கேட்டுச்சு. அவனிடம் பேசினா என் காதுல விழும்னு நீ போட்ட சத்தம். போ.. உன் கல்யாண சாப்பாடு சாப்பிட்டு தான் கண்ணை மூடுவேன்” என்று கூறவும் கருப்பாயியை கட்டி முடித்து கன்னத்தில் முத்தமிட்டாள் நீலா.

    “இதே சத்தம் தான்டி அங்கேயும் கேட்டுச்சு.” கரும்பாயி கூறியதும் நீலா “போ கிழவி” என்று ஓடினாள். 

-முற்றும்-

-பிரவீணா தங்கராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *