அத்தியாயம்-9
அடுத்த நாள் காலை சாரா
ஜன்னல் வழியாக வந்த மெல்லிய வெளிச்சம் அறையை மெதுவாக ஒளிரச் செய்தது. அதில் சாரா விழித்துக் கொண்டவள், முதலில் வழக்கம்போல் அருகில் கையை நீட்டினாள்.
இந்த முறை அவள் கை வெறுமையைத் தொடவில்லை.
சார்லஸ் அவளருகே இருந்தான்.
சிறிது நிமிடம் அவள் அசையாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் உறங்கியப்பின் இரவு எப்போது வந்தான்… எப்படி படுத்தான்… அவளுக்கே தெரியவில்லை.
சார்லஸ் முகத்தில் லேசான சோர்வு.
அவன் கண்கள் மூடியிருந்தாலும், நிம்மதியான தூக்கம் இல்லை என்பது தெரிந்தது.
இவள் காணவும், உடலை முறுக்கி திரும்பி படுக்க முனைந்தவன் அவளது பார்வையால் அவளை காண, சாராவோ “டாக்டர் சாரே… எப்ப வந்திங்கள்?” என்று மெதுவாக கேட்டாள்.
சார்லஸ் கண்களை மெதுவாகத் திறந்து, “லேட்டா தான் வந்தேன்… நீ தூங்கிட்டே இருந்த. எழுப்பலை” என்றான்.
“என்ன ஆச்சு… அவசரம்னு போனிங்கலே…” என்றவள் குரலில் அக்கறை.
சார்லஸ் ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டான். “ஒரு காலேஜ் பையன் சாரா. பெயர் ஜோசப், கொஞ்ச நாள் முன்னே பார்த்த பேஷண்ட்.
அவனுக்கு ஆங்கர் இஸ்ஸூ. அக்ரிசைவ் பிஹேவியர்.
நேத்து ரொம்ப மோசமா ஆகிடுச்சாம்.
வீட்டுல எல்லாரையும் அடிச்சுட்டு, ரூம்ல பூட்டிக்கிட்டிருந்தான்” என்று சார்லஸ் பேசும்போது, குரலில் இருந்த சோர்வு அப்பட்டமாய் தெரிந்தது.
“அவனோட அப்பா ரொம்ப பேனிக் ஆகி கால் பண்ணினார்.
நான் போயிட்டு பேசினேன்.
அவனை காம் பண்ணி, செடக்ஷன் கொடுத்து தூங்க வச்சேன்
இப்போ ஸ்டபிள் தான்… ஆனா இன்னும் ட்ரீட்மென்ட் தேவை”
அவன் பேச்சு மெதுவாக குறைந்தது.
அவன் தலையை மெத்தையில் சாய்த்தான்.
“மனசு உடம்பை விட கஷ்டமா இருக்கும்னு பீல் ஆகுது.” என்றவன் அசதியில் உறங்கத்தை தொடர்ந்தான்.
அந்த ஒரு வரி சாரா உள்ளுக்குள் ஏதோ ஒன்றைத் தட்டி எழுப்பியது.
அவள் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘மனசு’அந்த வார்த்தை அவளுக்குள் ஒலித்தது.
அவளுக்கும் ஒரு மனசு இருக்குதே…
அதுல எவ்வளவு சொல்லாத விஷயங்கள் இருக்கின்றது.
ஒரு நொடி அவள் உதடுகள் திறந்தது. ஏதாவது சொல்லலாமென வேகம் எழுந்தது.
ஆனால் சார்லஸ் முகத்தில் இருந்த அந்த சோர்வை பார்த்ததும், அவள் வார்த்தை திரும்பிப் போனது.
‘இப்ப சொன்னா.. என்னாகும்?’ என்று சாரா மனசே அவளை கேள்வி கேட்டது.
‘சார்லஸ் என்ன நினைப்பான்?
சார்லஸ் ஆல்ரெடி நிறைய பேஷண்ட் நிறைய பிரச்சனை என்று நடைமுறையித் பார்த்துட்டு இருக்கார். அதனால மனசும் உடலும் சோர்வாகுது.
இதுல நான் வேற புதுசா என் பிரச்சனையை சேர்த்தா?’ என்றவள் பார்வை மெதுவாக கீழே சரிந்தது.
‘சார்லஸ் டாக்டர்… நோயாளி பிரச்சனைய நிறைய கேட்கறான், அனலைஸ் பண்ணறான், சால்வ பண்ணறான். நான் கிரேஸை பத்தி சொன்னா, அதையும் ஒரு கேஸ் மாதிரி தான் பார்ப்பாரா?’ என்ற
அந்த எண்ணம் எழவும் அவள் மனம் சற்றே வலித்தது. இத்தனை குழப்பத்தில் சார்லஸ் அவளை ஹாலிலிருந்து அறைக்கு தூக்கிக் கொண்டு வந்ததை நினைவில் கூட தோன்றாமல் நின்றாள்.
அத்துடன் இரவு முழுக்க ஓடி வந்து… ஒரு உயிரை சமாதானப்படுத்தி வைத்து… இப்போ இங்கே வந்து சாய்ந்து கிடக்கிறான்.
‘இவருக்கு இப்ப ரெஸ்ட் தான் வேணும். அம்மை சொன்ன மாதிரி நான் இவரிடம் ஏதாவது விளிச்சு பிரச்சனையை தோண்டி துருவ கூடாது.’ என்று நினைத்து அவள் மெதுவாக எழுந்தாள்.
சார்லஸை தொல்லை செய்யாமல், அவன் மேல் இருந்த போர்வையை சரி செய்தாள்.
தன்னையும் ஒரு பேஷண்ட் கேஸ் என்று எண்ணிவிட்டால் தன்னிடம் அன்பு செலுத்துவது குறைந்திடுமா? அந்த கேள்விக்கு சாராவிடம் பதில் இல்லை.
ஒரு விஷயம் மட்டும் அவள் மனதில தெளிவா இருந்தது.
தானாக எந்தவிதமான முட்டாள்தனத்தையும் செய்துவிடக்கூடாதென.
மனதை மாற்ற அவளுக்கு சாயா தேவைப்படவும், பல்லை விலக்கி கிச்சனை உருட்ட சென்றாள்.
நிர்மலா சத்தம் கேட்டு வந்து சேர, “சார்லஸ் எப்ப வந்தான் சாரா?” என்று கேட்க, “நான் உறங்கில்லோ. சேட்டன் லேட் நைட் வந்ததாயி சம்சாரிச்சு.” என்றவள் கூடுதலாக ஏதோ கல்லூரி படிக்கும் பையன் ஆங்கர் இஸ்ஸூ என்று பெற்றவர்களையும் வீட்டையுமே இரண்டாக்க, அவனை கட்டுப்படுத்தி வந்து சேர்ந்ததாக எடுத்துக்கூறினாள்.
“ம்ம்ம் இவனுக்கு இதே வேலை. பைத்தியத்துக்கும், மூளை குழம்பியவங்களுக்கும் ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட்னு ஓடியே இவன் காலம் போகுது.
டாக்டர் படிக்கணும்னு சொன்னான். நானும் சரின்னு சொன்னேன். இவன் இந்த பிரிவுல படிக்க போய் இப்படியான பேஷண்டை பார்த்துட்டு இருக்கான். இதெல்லாம் தேவையா?” என்று சலித்தார்.
ஒரே நொடியில் மனோதத்துவ டாக்டர் என்றாலே பைத்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பதாக முடிவு கட்டிவிட்டதில் சாரா கூடுதலாக உடைந்துவிட்டாள்.
டீ கொதிக்க, சாராவை தட்டி சுட்டி காட்டவும், “சோரி” என்றாள்.
“ம்ம்ம். காலகாலத்துக்கு கல்யாணம் ஆனதும் ஹனிமூன் போனா நீயேன் சிந்தனையை எங்கங்கே யோசித்துட்டு டீயை கொதித்து சிந்தவிட போற. எல்லாம் இவனை சொல்லணும்.
காதலிச்சான் பாரு… குழந்தையை வச்சிட்டு இருந்தவளை.” என்று துகிராவை தேவையற்று திட்டினார்.
சாராவுக்கு துகிரா சேச்சி இங்கு தேவையற்று வார்த்தையில் விழவும், சாயாவை அறைக்கு எடுத்து செல்வதாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
காலை நேரம் இன்னும் முழுவதும் விழித்திருக்கவில்லை. சாரா அவளுக்கான சாயாவை, அறையின் திரைச்சீலை வழியாக சூரிய ஒளி மெதுவாக உள்நுழைவதை கண்டு, மிடறு மிடறாய் பருகினாள்.
சார்லஸ் பாதி உறக்கத்தில் திரும்பிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம்…
பால், ஏலக்காய் கலந்த டீயில் இஞ்சி நறுமணம் என்று அனைத்தும் கலந்த அந்த சூடான டீயின் வாசனை அறையை நிரப்பியது.
அவன் புருவம் சுருக்கினான்.
மூக்கால் வாசம் இழுத்தான்.
“ம்ம்ம்…” என்று மெதுவாக கண்களைத் திறந்தான்.
அவனது பார்வை நேராக ஜன்னல் கதவு அருகே நின்றிருந்த சாராவை தொட்டது.
கையில் டீ கப். அவனுக்கான டீயும் பெட்டிற்கு அருகேயிருந்த மேஜையில் இருக்க களைப்புக்கு எடுத்தான்.
சாராவின் முகம் பேரமைதியில் கிடந்தது. சார்லஸ் எழுந்து டீக்கப்பை எடுத்து பருகியதை கூட அவள் கவனிக்காமல் இருந்ததை கவனித்தான்.
“சாரா” என்றதும் திரும்பினாள்.
அவன் டீயை பருகியது அதுவும் பல் விலக்காமல் பருகியது கூட சாரா சிந்தித்து கேள்வி எழுப்பவில்லை.
“டீ ஏ ஓன். சோர்வை எல்லாம் உறிந்து எடுத்தும் போலயே” என்றான். சாராவிடம் அதே அமைதி.
சார்லஸ் அவளை கூர்ந்து பார்த்தான். சாரா அவளாக பேசவே இல்லை. ஏதேனும் பேசினால் முகத்தில் காட்டும், சிறு சிரிப்பும் இல்லை.
சாரா கண்கள் கூட நேராக அவனை பார்க்கவில்லை.
ஜன்னல் புறமே வெறித்திருந்தது.
சார்லஸ் புருவம் சுருங்கியது.
“என்னாச்சு?” என்றான்.
சாரா உடனே தலையசைத்து
“ஒன்னுமில்லா…” என்றாள்
“ஒன்னுமில்லனா இப்படி அமைதியா இருப்பியா? நான் பிரஷ் கூட பண்ணலை. டீ குடிச்சேன். நீ நோட் பண்ணலை. கேள்வி கேட்கலை” என்று சற்று சிரிப்போடு கேட்டாலும், கவனிப்பு இருந்தது.
சாரா சற்றே தடுமாறினாள்.
“அல்லா… அப்படி ஒன்றும் இல்லா”
சார்லஸ் கப்பை கீழே வைத்தான்.
“சாரா…” என்றவன் குரல் கொஞ்சம் மென்மையுடன் விளித்தான்.
“நீ… ஹனிமூன் விஷயத்தால தானா இப்படி இருக்கே?”
அந்த ஒரு கேள்வி…
சாரா முகம் ஒரு நொடி மாறியது.
“எந்தா?”
“அது… நேத்து அம்மா பேசினாங்கலே… மேத்யூ மெர்ஸி குலுமனாலி போறாங்க. நாமலும் வெளிய போகலாம்… ஹனிமூன்… அதுயிதுனு..” என்று கூறியதில் சார்லஸ் சற்றே பின்னங்கழுத்தை தடவினான்.
“நான் இப்ப ஹனிமூன் வேண்டாம்னு சொன்னதுக்காக… உனக்கு ஹர்ட் ஆயிடுச்சா?” என்றான்.
அவளது கண்களில் இருந்தது
குழப்பமா? இல்லை சின்ன ஏமாற்றமா? டாக்டர் அவனுக்கே புரியவில்லை. சாரா மனம் திறந்து பேசவில்லையே. இது தான் காரணம் என்று சார்லஸாக வேறு காரணங்களை அல்லவா நினைத்துக் கொண்டுள்ளான்.
“அய்யோ… அதெல்லாம் அல்லா…”
அவள் மெதுவாக சிரிக்க முயன்றாள்.
“எனிக்கு அப்படி ஒன்றும் தோன்னில்லா…” என்று கூறியவளை சார்லஸ் இன்னும் நம்பவில்லை.
“சூரா?” என்றான்
“ம்ம்ம்…” என அவள் தலையசைத்தாள்.
“நிங்கள் பிஸி ஆயிருந்தாலே…
அது ஓகே அல்லோ… பின்னே போயிட்டு வராம்” அவள் சொன்ன வார்த்தைகள் நேற்று போல இதத்தை தருவித்தது.
ஏனோ நேற்று அரவணைத்து மகிழ்ந்தவனால் இன்று சாராவை கூர்ந்து பார்த்திடும் போது அதில் ஏதோ ஒட்டாத தன்மை இருந்ததை சார்லஸ் கவனித்தான்.
“அப்படின்னா… ஏன் இப்படி அமைதியா இருக்க. நீ மறுபடியும் ஒரு மாதிரி இருக்க” என்றதும் சாரா உடனே பதில் சொல்லவில்லை.
சார்லஸின் கண்ணை நேரிடையாக பார்ப்பதை தவிர்த்தாள்.
“ஒன்னுமில்லா… லேசா டயர்ட்” என்று அவள் சொல்லும்போது கூட, குரல் நேராக வரவில்லை.
சார்லஸ் உள்ளுக்குள் சிரித்தான்.
‘இவளுக்கு ஹனிமூன் போகாதது வருத்தம் தருது. வாயை திறந்து சொல்ல மாட்டாளே தவிர… இவளுக்கு என் மேல இஷ்டம். அப்படியிருக்க வருத்தம் வர்றது இயல்பு தான்” என்று
டீயை முழுதாக குடித்து முடித்து வைத்தவன், “சாரா ஒன்னுமில்லை ஒன்னுமில்லைனு நீ சொல்லைனா நான் ஹனிமூன் போகாதது தான் வருத்தம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றான்.
சார்லஸின் விளையாட்டுத்தனமான பேச்சால்,
சாரா கண்கள் லேசா பெரிதானது.
“அய்யடா” என அவள் மெதுவாக சிரித்தாள்.
“டாக்டர் சாரு… நிங்கள் ஓவரா என்னி அனலைஸ் செய்யுதே, பட்சே தப்பாய் கெஸ் செய்து” என்றாள்.
“அது தான் என் புரபஷன் மா. தப்பா இருக்காது. நிச்சயமா ஹனிமூன் போவாதது உனக்கு கஷ்டமா இருக்கு. நம்ம கூடவே மேரேஜ் ஆனா உன் அண்ணா என் தங்கை எல்லாம் ஹாப்பியா குலுமனாலி போறாங்க. நான் உன்னை எங்கயும் கூட்டிட்டு போகலைனு நீ பீல் ஆகற” என்றதும் மறுப்பாய் தலையசைத்தாள்.
“நீ பீல் ஆகுறா. சம்திங் அது உன் முகத்துல அப்பட்டமா தெரியுது சாரா” என்றதும் சாரா சற்றே அமைதியானாள்.
ஆம் முகம் வருத்தத்தை காட்டுகின்றதே… அந்த வருந்தம் வேறு என்று கூற தான் சாராவுக்கு தொண்டைக்குள் பாறாங்கல் ஏற்றிய உணர்வு.
சாராவுக்கு சார்லஸ் தனது வருத்தத்தை வேறு விதமான ஹனிமூன் செல்லாததற்கு என்று எண்ணியதால்.. அவள் மெதுவாக, ஒரு நொடி நின்று
“எனிக்கு…” என்று ஆரம்பித்தவள் தயங்கி தயங்கி வார்த்தையை நிறுத்தினாள்.
“எனிக்கு.. அப்படி ஹனிம் எக்ஸ்பெக்டேஷன் இல்லா…”
சார்லஸ் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“பட்சே… சில சமயம்…
என்னோட மனசு… நிங்களிடம் நிறைய பறையணும்னு இருக்கு.” என்றாள். சார்லஸ் புருவம் சுருங்கியது.
“அப்போ சொல்லலாமே… என்ன பேசணும்” என்றதும் சாரா உடனே தலை குனிந்தாள்.
“அதெல்லாம்… இன்னிக்கு இவ்விட சொல்லணும்னு தோணில்லா… நிங்கள் ஒரு நாளைக்கு எத்தனை பேஷண்டை கண்டு?” என்று சிரித்து மழுப்பி, நிங்கள் ரெஸ்ட் எடுத்துகக்கல்லே நேத்து ரொம்ப டையர்ட் அல்லோ…” என்று
சார்லஸ் அவளை பார்த்தான்.
சாரா பேச்சை திசைத்திருப்புவதை கண்டறிந்ததாக நினைத்தவன், உள்ளுக்குள் ‘ஹ்ம்ம்…
டெபனட்லி ஹனிமூன் போகாதது வருத்தம் தான். ஒரு பொண்ணா ஆமானு சொல்வா? பட் உடனே போகலாம்னு சொன்னா அது அம்மா சொன்னதற்காகவும், மெர்ஜி மேத்யூ போறாங்க என்று நானும் அழைச்சிட்டு போவதா குழப்பிப்பா. சோ… அடுத்து இரண்டு வாரத்துல ஏதாவது பேச்சு வாக்குல பிடிச்ச பிளேஸ் எதுனு கேட்டு, சர்பிரைஸா அங்க கூட்டிட்டு போகணும். பார்க்கலாம்’ என்று முடிவு செய்தான்.
சாரா சார்லஸ் பேச்சு முடிய,…
அவள் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், அவள் முகத்தில் இருந்த அந்த சின்ன சிரிப்பும் மறைந்தது.
‘நான் சொன்னாலும்…
டாக்டர் சாரே புரிஞ்சிப்பாரா?’ என்று அவள் மனம் அவளையே கேள்வி கேட்டது.
முதலில் மனோதத்துவ டாக்டரிடம் வரும் பேஷண்ட் எல்லாம் நிர்மலா அத்தையை பைத்தியம் என்ற ரேஞ்சிற்கு அல்லவா பேசினார். சார்லஸ் அவரது பேஷண்டை என்ன விதமாக அணுகின்றார் என்று ஆராய்ந்தே பின்னர் பேச முடிவெடுத்தாள்.
தனது வாழ்வு துவங்கும் முன், அவளது பேச்சால் மூடுவி
ழா அடைவதை சாரா விரும்பவில்லை. அவளுக்கு இந்த சார்லஸை அந்தளவு பிடித்திருந்தது. அவனோடு பேசுவது அவன் முகத்தை பார்ப்பதை கூட கர்த்தர் அணுகிரகம் என்று நம்புகின்றாள்.
-தொடரும்.
