365 நாட்கள்
காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி.
சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது.
அது குளத்தை சுத்தப்படுத்தும் பணி. நூறு நாள் வேலைக்காக வந்து சேர்ந்திருக்கின்றாள் ரேவதி. குழந்தையை மேட்டில் ஒரமாய் அமர வைத்துவிட்டு சேலை முந்தானையை நன்றாக இழுத்து சொருகினாள்.
குழந்தை மணற்மேட்டில் மண்ணை துழாவி கையில் உருட்டி வாயில் வைத்து முடித்தான்.
“ரேவதி உன் பையன் மண்ணு திண்ணுதே பாரு” என்றார் கூட பணிப்புரியும் சுந்தரி.
“அடவிடுங்கக்கா.. வீடும் மண்வீடு தான். அங்கயும் மண்ணை திண்ணுது. எத்தனை முறை தான் எடுத்துவிடறது. சாப்பிடுற சாப்பாட்டுலயே கல்லு கடக்கு. நம்ம வாழ்க்கையில கல்லும் மண்ணும் இருக்கறது தானே.” என்று மண்வெட்டி கொண்டு தூர்வாறினாள்.
“ஏன் ரேவதி வூட்ல உன் புருஷன் இல்லை. யாரிடமாவது விட்டுட்டு வரலாம்ல. கைக்குழந்தையை போற வேலைக்கு எல்லாம் இழுத்துட்டு வர்ற. ஒரு நேரம் போல ஒரு நேரம் கெட்டது நடந்திடப்போகுது.” என்றதும் ரேவதி குழந்தையை பார்த்து விட்டு, “முடியலக்கா… என் வூட்டுக்கார் ஒரு வேலை வெட்டி பார்த்தா நான் ஏன் இப்படி வேகாத வெயில்ல குழந்தையை வச்சிட்டு அலையுறேன். இரண்டும் பொட்ட பிள்ளைனை ஆண் வாரிசு வேண்டுமின்னு இதோ இவனை பெத்துக்கிட்டோம். என் பொண்ணு ஆறாவது படிக்குது. இன்னொன்னு நாலாவது படிக்குது.
அதுங்களுக்கு வயிறை நிறைக்கவே முடியலை. இதுல இந்த குழந்தைக்கு பால் கொடுக்க எனக்கு சுரக்கணுமே.
அந்தாளு கொண்டு வந்து தர்ற பணம் பத்தையே. ஏதோ மேல் நோகாத வேலைக்கு போகுது. அது கொண்டு வர்றது வச்சி நாக்கு தான் வழிக்கணும். என்னை நம்பி மூனு குழந்தையாச்சே.
ஏதோ நாலு இடத்துல வேலை பார்த்தா தான் முனு வேளை கஞ்சி குடிக்க முடியும்.
இதுல குழந்தையை எங்கவுடறது. பால் குடி குடிக்கறவனை.” என்று நேரத்தை பேசி கடத்தினார்கள்.
இடையில் டீயும் சமோசாவும் வரும். அதில் டீயை வாங்கி ஆவிப்பறக்க குடித்திடுவாள். சில நேரம் மதிய உணவை கூட மறந்து விட்டு டீயை மட்டும் தொண்டையை நனைத்து கொள்வாள்.
தாய் தந்தையும் பெரிய வசதி இல்லை என்பதாலும் கணவன் வீட்டிலும் அப்படியொன்னும் வசதி இல்லாததால் உழைக்கும் கரமாய் தவிக்க வேண்டியது எழுதப்படாத விதியானது.
குறிப்பிட்ட நேரம் பணி செய்து பணத்தை வாங்கிடவும் குழந்தை உடல் எல்லாம் மண் பூசி ஒட்டியிருந்தது.
வீட்டுக்கு வந்ததும் குழந்தையை குளிக்க வைத்து தானும் குளித்து சோறையே மூன்று மணிக்கு தான் ரசமும் ஊறுகாயும் வயிற்றுக்கு இறக்கினாள்.
இதில் நான்கு மணிக்கு புழுதி பறக்க இருமகளும் ஒடிவந்து சேர இரண்டு ரூபாய் சமோசா பத்து ரூபாய்க்கு வாங்கியதை எடுத்து கொடுத்தாள்.
“அம்மா… வழிபடும் கரங்கள் தான் சிறந்ததுனு எங்க மிஸ் சொன்னாங்க. அப்படியா மா?” என்று மகள் கேட்க, “வழிபடும் கரங்கள்னா?” என்று கேட்டு பாத்திரத்தை அலசினாள் ரேவதி.
சாமியை தினமும் வணங்கி அவருக்கு பூ பழம் அர்ச்சனை செய்து கும்பிடறவங்க மா.” என்று மகள் எடுத்துரைக்க, ரேவதிக்கு தன் கைகள் திறந்து பார்த்தாள்.
மண்ணை எடுத்து தலையில் சுமந்து குளத்யின் வரப்பில் கொட்டி சீர்செய்ததில் கையெல்லாம் சிவந்திருந்தது.
இதில் வெள்ளி கிழமை வழிபடவும் நேரமில்லாது, கொசுக்கடிக்கும் முன் பாத்திரம் விளக்கி கொண்டிருக்கின்றாள்
அவள் எப்படி கூறுவது, வழிபடும் கரங்களை விட உழைக்கும் கரங்களாக தன் கைகள் இருப்பதை.
தனக்கான நாள் விடியும் என்ற எண்ணத்தில் முகம் கழுவி குழந்தையை படிக்க கூறினாள்.
சாமி கூம்பிடறோமோ. உழைக்கிறோமோ.. தன் மகளின் கையில் புத்தகமும் வாசிப்பும் இருந்தாலே போதுமென்றது மனம்.
இரவும் பத்துமணிக்கு வந்து சேர்ந்த கண்ணப்பனை மூக்கு முட்ட முறைத்தாள். ஏதோ சம்பாதிக்கின்றான்.நேரத்திற்கு வந்தாலாவது பரவாயில்லை. நேரம் கழித்து வந்து தன்னை அல்லல் படுத்துவதிலே இருக்கின்றானே என்ற கடுப்பு அவளுக்கு.
அவனோ “எம்புள்ள முறைக்கிற.. குழந்தையை பெத்துட்டு சம்பாதிக்கலைனு தெரியுது. எனக்கு என்ன கம்பியூட்டரு உத்தியோகமா.
உன் தலையெழுத்து என் சம்பாத்தியம் போதலை. நீயும் சம்பாதிக்கணும்.” என்று உடை மாற்றி வரவும் திரும்பி படுத்து கொண்டாள்.
முன்னேற வேண்டுமென்ற துடிப்பு கொஞ்சமும் இல்லை. இது தான் நம் தலையெழுத்து என்று சாக்கு சொல்லிவிட்டு கிடப்பவனை கண்டு திட்டவும் முடியாது. கண்ணப்பனுக்கு வயது முப்பத்தெட்டு போனமுறை இலவசமாக உடல் பரிசோதனை செய்தப் போது சுகர் ஏறிகடப்பதை தெரிவித்தனர். அதிலிருந்து பணம் ஈட்டாவிட்டாலும் குடும்ப தலைவன் ஒருவன் இருப்பதையே அவள் விரும்பினாள்.
மற்றபடி கண்ணப்பனை பணம் சம்பாதிக்க அவளுமே வற்புறுத்தி எடுக்கவில்லை.
யார் தலையில் வறுமை என்று எழுதியிருக்க அதை யாராலும் மாற்ற இயலாது. வாழ்க்கையை இலவசத்தின் மூலமாக அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை. எங்கு வேலையோ ஓடவேண்டும். நூறு நாளும் வேலை என்றாலும் சரி (365) முந்நூற்றி அறுபத்தி ஐந்து நாள் வேலையென்றாலும் சரி உழைக்க வேண்டிய நிர்பந்தம் ரேவதிக்கு.
நாளைக்கு ஏதோ மழையால் சிதைந்த ரோட்டை சரிப்படுத்த கூப்பிட்டு இருக்கின்றனர். ஜல்லி கல்லின் கணத்தை தலையில் சுமக்க தயாரானாள்.
-சுபம்
-பிரவீணா தங்கராஜ்.