முரண்
மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே ‘க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்’ வாசிகள்.
பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து ஆறுமாதமாகின்றது. இருவருக்கும் எதிரெதிர் வீடு என்பதாலும் ஒரே வயது கொண்ட மங்கைகள் அதிலும் இருவரும் கேரம்போர்டு சாம்பியன் என்று நல்ல சிநேகிதம் உருவாகியது.
இருவரின் கணவர்களும் சென்றப்பின், தனியாக இருப்பதால் இருவரின் பொழுது போக்கில் பாதி நேரம் கேரம்போர்டு தான் ஆக்கிரமித்து இருக்கும்.
இப்படி சில நேரம் மளிகை கடைக்கு, காய்கறி கடை, டிரஸ் வாங்குவது என்பதற்கு சேர்ந்து போகவும் இவர்களின் கணவர்மார்களுக்கு பாதி டென்ஷன் அகன்றது.
சுபா போகும் போதே மளிகை கடைக்கு சென்று அண்ணாச்சி கடையில் லிஸ்டு கொடுத்து விட்டு போட்டு வையுங்க அண்ணா” என்று கூறி நகர்ந்தாள்.
வனிதாவோ சூப்பர் மார்க்கெட் போகவும் துணைக்கு சுபா வந்து சேர்ந்தாள்.
“எத்தனை முறை சொல்லறது சுபா. என்னோட நீங்களும் இந்த சூப்பர் மார்க்கெட்லயே புரோவிஷனல் வாங்கலாம். அதை விட்டு அந்த குட்டி கடையில லிஸ்ட் கொடுத்துட்டு வர்றிங்க.” என்று கேட்டு பருப்பு பேக்கெட்டை எடுத்து வைத்தாள்.
சுபா எதுவும் கூறவில்லை மென்புன்னகையை சிந்தினாள்.
“இந்த சிரிப்பு தான் சுபா… உங்க பிரெண்ட்ஷிப்ல எனக்கு பிடிச்சது. சிலருக்கு தான் இந்த மாதிரி இயல்பா சிரிக்க வரும். தெத்து பல் தெரிய கியூட்டா…” என்று வனிதா பேசவும், “வனிதா… இந்த பவுடர் தானே போனமுறை சரியில்லைனு சொன்னிங்க. திரும்ப அதே வாங்கறிங்க.” என்று சுபா பேச்சு சுவாரசியத்தில் வனிதா மறந்து எடுத்துவிட்டாரோ என்று குறிப்பிட்டாள்.
“என்ன பண்ணறது சுபா. இதை தவிர வேறயில்லை. டில்பிளேல மற்றது எல்லாம் அதிகப்படியா இருக்கு. இது தான் பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி இருந்தது. சரி வேற இல்லையென்றதும் அதே வாங்கிட்டேன்” என்று கூறினாள்.
“அட இது புதுசா வந்திருக்கு. அடுத்த தடவை கிடைக்காது” என்று விலையுயர்ந்த ஷேம்பு பாட்டிலை எடுத்து வைத்தாள்.
கூடுதலாக டிரேலியில் ஒன் பிளஸ் ஒன் ஆபர் கொண்டதை பெரும்பாலும் எடுத்து போட்டிருந்தாள் வனிதா.
பில் போடும் இடம் வந்ததும் அங்கிருந்த ப்ரிட்ஜில் சோர்வாக இருக்கவும் குளிர் பானத்தையும் பில் போட்டாள்.
“கவர் போட்டுடலாமா மேம்?” என்று கேட்க, தலையாட்டினாள்.
எல்லாமே போட்டு இரண்டு கேரிபேக் கவரில் கொடுத்து முடித்தார்கள்.
பணத்தை கொடுத்து இரண்டு ரூபாய் இல்லையென்று சாக்லேட் வேறு கொடுத்தார்கள்.
“கொடுங்க வனிதா ஒரு பேக்கை நான் எடுத்துட்டு வர்றேன்” என்றாள் சுபா.
“உங்களுக்கு எதுக்கு சிரமம் பரவாயில்லை. நீங்களும் மளிகைப்பொருட்கள் போட்டு வச்சிருந்தா சுமக்கணும்லயா?” என்று வனிதா மறுக்க, பரவாயில்லை கொடுங்க அப்ப வாஙகிக்கறேன்” என்று வாங்கி கொண்டாள்.
காய்கறி வாங்கிடவும் அது ஒரு கூடை சேர்ந்தது.
ரோட் கிராஸ் செய்யும் போது கூடவே ஒரு முதிய பெண்மணி பிச்சை கேட்டு கையேந்தவும் சுபா கைகள் தானாக ஐந்து ரூபாய் நாணயத்தை வழங்கிவிட்டாள்.
வனிதாவோ ரோட்டில் வேகமாய் நடந்து வருவதில் எதுவும் கேட்கவில்லை.
சுபாவும் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்களை வாங்க பணத்தை தரவும், ஒரு இரண்டு நிமிஷம்மா நீங்க கேட்ட வேர்கடலை மட்டும் போடலை. கடலை சூடா இப்ப தான் வருக்கறாங்களாம். வந்ததும் அதை மட்டும் கடை பையனிடம் கொடுத்துவிடறேன் மா” என்றார்.
“சரி அண்ணா” என்று சுபா மற்றவையை வாங்கி கொண்டாள்.
வனிதாவோ சற்று தள்ளி நின்றிருந்தாள். சூப்பர் மார்க்கெடிலிருந்து வந்ததால் தள்ளி நின்றிருந்தாள்.
இருவரும் படிக்கட்டு ஏறி தங்கள் இல்லம் வந்ததும், சுபா கூப்பிட வனிதாவும் வந்தாள். ரோட்டில் பணத்தை போட்டதையும், சூப்பர் மார்க்கெட்டில் ஏன் வாங்க மாட்டேன்கின்றாளென கௌட்கும் ஆவலிலும் வந்தாள்.
சுபா போகும் போதே லெமன் ஜூஸ் போட்டு வைத்து சென்றதால் அதனை வனிதாவுக்கு பருக கொடுத்தாள்.
கேட்க வேண்டியதை கேட்டு விடவும் சுபாவோ இரண்டு மடக்கு லெமன் ஜூஸ் பருகிவிட்டு, தனது மளிகைப் பொருட்களின் பில்லை எடுத்து கொடுத்து, உங்க பில்லையும் என் பில்லிலும் பொதுவா இருக்கற பொருட்களோட விலையை நோட் பண்ணி பாருங்க. நான் ஏன் சூப்பர் மார்க்கட்டில வாங்கறேன்னு சொல்லாம தெரியும்” என்று பொறுமையாய் மளிகை பில்லை எடுத்து கொடுத்தாள்.
“பிச்சைக்காரிக்கு கூட காசு போடறிங்க. அதென்ன வேலைக்காரியா போய் சம்பாரிக்க வேண்டியது தானே. எப்ப பாரு பிச்சை கேட்கறாங்க” என்று வனிதா கூறவும் சுபா வனிதாவின் இரண்டு கையிலிருந்த கவரை சுட்டிக் காட்டினாள்.
“இந்த கவருக்கும் சேர்த்து தானே பில் போட்டாங்க” என்றதும் வனிதா ஆமா என்றாள்.
“ஒன்னு எவ்ளோ?” என்றதும் “இருபது ரூபா சுபா.” என்று வருந்தினாள்.
இரண்டு கவர் ரேட்டை கூட்டி முடித்து “அப்போ நாற்பது ரூபாய் அந்தயிடத்துல வேஸ்டா.” என்றதும் வனிதா திருதிருவென விழித்தாள்.
“நான் தெரிந்தே ஐந்து ரூபாய் கொடுத்தேன். அந்த பிச்சைக்காரி லேடிக்கு. நீங்க தெரிந்தே நாற்பது ரூபாய் அந்த சூப்பர் மார்க்கெட்ல கொடுத்திருக்கிங்க. என்ன அவங்க நவீனமா நம்மிடம் காசு பிடுங்கறாங்க. நீங்க பில்லை கம்பேர் பண்ணி பாருங்க அப்ப புரியும்.” என்று பேச காலிங் பெல் சத்தம் கேட்டது.
ஏற்கனவே பருப்பு வகைகள் ஐந்து ஐந்து ரூபாய் வித்தியாசம் கண்டதும் ஆடியிருந்தாள்.
மீதியை கம்பேர் செய்து இங்கயே முட்டாளாய் மாறி நிற்க மனமின்றி மடித்து வைத்தாள்.
வேர்கடலை கால் கிலோ சூடாக வந்து கொடுத்து சென்றிருந்தான் கடைப்பையன்.
அந்த கவரின் சூட்டே தற்போது தான் சுடசுட வந்ததை பறை சாற்றியது.
ஒரு டப்பாவில் மாற்றிவிட்டு சூடாக வனிதாவுக்கும் சாப்பிட கொடுத்தாள்.
வனிதாவும் சூடாக இருக்க சாப்பிட்டவள் “என்னப்பா ப்ரஸ் டேஸ்ட் இருக்கு. ரியலி சூப்பர்.” என்றவள் அங்கேயே மடமடவென பில்லை பார்த்து முடித்தாள். நீங்க சொல்லறது கரெக்ட் எண்பது ரூபாயுக்கு மேல காசு அதிகமாகுது.
பிரெஷ் எல்லாம் ஆஃபர் என்று வாங்கினாலும் கணக்கு இடிக்குது. வாங்க தேவையேயில்லாததை வாங்கவும் ஆசை முளைச்சிடுது.” என்று சோகமானாள்.
“இப்ப புரியுதா… நாம தெரிந்தே பணத்தை கொடுக்கறதுக்கு பேர் முட்டாள் தனமில்லை இல்லை வனிதா. அவங்களா நம்ம காசை இப்படி அதிகமா வாங்கற ஏமாத்தும் தனம் தான் பெரிய முட்டாள் தனம்.
இரண்டுமே முரண் இருக்கு” என்றதும் வனிதா தனது வேர்கடலையை பேக்கெட்டை சுவைத்து பார்க்க கொஞ்சமாய் எண்ணெய் சீக்கு வாடை வீசியதும் அதை ஆமோதிப்பதாக தலையாட்டினாள்.
முரண் உண்டு என்று.
-சுபம்
பிரவீணா தங்கராஜ்.
சூப்பர் …உண்மையான வரிகள்
உண்மை உண்மை மறுக்க முடியாத உண்மை….ஆஃப்பர்,1+1ன்னு நமக்கு மிச்சம்ங்கற மாதிரி ஒரு இமேஜ் விரிச்சு வச்சு நம்மள நல்லா ஏமாத்துவானுங்க கேட்ட வியாபார யுத்தி 🤦🤦🤦🤦🤦🤦