Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-21

அந்த வானம் எந்தன் வசம்-21

21

வெயிலின் கொடூரம் குறைந்து தலைநகர் தில்லியில் வசந்த காலத்தின் தொடக்கத்தில் சாலையோர குல்மொகர் மரங்கள் செக்கச்செவேல் என்று பூக்களாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அலுவலக நேரம். இளம் காலை சூடு இதமாக இருந்தது. தில்லியின் காலை நேர போக்குவரத்து நெரிசலில் பேருந்தில் பயணிப்பது அதை விட கொடுமை. நடப்பதோ ஒரு சுகானுபவம்.

“ஹாய் நிவி”

பிளாட்பாரமில் நடந்து போய் கொண்டிருந்தவளை அழைத்த குரல் கேட்டு திரும்பி பார்த்தவள் நின்றாள். ஹேமாக்கா தான். அவள் கணவர் நம்பிராஜனுடன்  பழைய இரு சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தவள் இவளை கண்டதும் அவளருகில் இறங்கி கொண்டாள்.

“ஹாய் அங்கிள், குட் மார்னிங்”

“குட்  மார்னிங் நிவி.”

“ஏன் அங்கிள், அக்காவை தான் மாற்ற முடியாது. அட்லீஸ்ட் இந்த வண்டியையாவது மாற்றலாம் தானே”

“நல்லா சொல்லு நிவி. நானும் ரொம்ப நாளா சொல்றேன். கேட்க மாட்டேங்கிறார்”

“அக்கா நீங்க எதை சொல்றீங்க? உங்களையா? வண்டியையா?”

“ஏய் வாயாடி. நானும் வண்டியை தான் சொன்னேன்.”

“உங்களுக்கு ரொம்ப தான் தைரியம் அங்கிள். இந்த பாடாவதி வண்டியில் அக்காவை டபுள்ஸ் வேறு.”

“எனக்கெல்லாம் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி” என்று உடலை ஒரு குலுக்கு குலுக்கினார் நம்பிராஜன்.

“ஆமாமாம். இந்த தலைநகர் தில்லியில் ஒற்றை இலக்கம் இரட்டை இலக்கம் என்று தினம் ஒரு ரூல்ஸ். எதுக்கு வம்பு என்று மூலையில் போட்டு வைத்திருந்த வண்டியை தூசி தட்டி எடுத்து கொட கொடன்னு சத்தமுடன் ஓட்டிட்டு வரார்.”

“இந்த வண்டி சத்தம் இல்லை என்றால் உன்  அக்காவின் தொன தொனப்பை  கேட்கணும். அதுக்கு இந்த வண்டி சத்தம் தேவலை.”

“ஆமாம் நான் தொன தொணப்பு தான். அப்புறம் என்னை ஏன் தினம் பிடித்து கொண்டு வருகிறீர்களாம்”

“இந்த காலை நேர போக்குவரத்து நெரிசலில் பஸ் பிடித்து வருவது கஷ்டமாச்சேன்னு போனா போவுதுன்னு தான்.”

“ரெண்டு பேரும் எப்படி தான் சண்டை போட்டு கொண்டே இருப்பீர்களோ?”

“பாரு, நிவி எத்தனை கஷ்டப்படறா, அதுக்கு தான் அவள் எதிரில் சண்டை போடாதேன்னு சொல்றேன்”

“யாரு, நானா சண்டை போடறேன்?”

இருவரும் சிரித்து கொண்டார்கள். 

நம்பி தான் சொன்னார், “நிவி இந்த சண்டே எங்களுக்கு இருபத்தி ஐந்தாவது திருமண நாள். சின்ன பார்ட்டி வீட்டில். அவசியம் வந்து விடு.”

இருபத்தி ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்வது என்பது சும்மாவா? மனதிற்கு பிடித்த வாழ்க்கை என்றால் நூறு வருடம் கூட சேர்ந்து வாழலாம் போலும். அலுக்காது.

நம்பிராஜன் மத்திய அரசின் நீதி துறையில் வேலையில் இருக்கிறார். ஹேமாக்கா, நிவி பணி  புரியும் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இருக்கும் வேறு ஒரு தனியார் அலுவலகத்தில் இருக்கிறாள். தமிழ் இருவரையும் சேர்த்து வைத்தது.

நிவி ஒரு பன்னாட்டு குளிர்பான கம்பனியில் இருக்கிறாள். நிவி தில்லிக்கு வந்து இதோ மூன்று வருடமாக போகிறது. இங்கேயும் மார்கெட்டிங் தான். ஆனால் இப்போது அவள் களத்தில் இறங்கி பணி  செய்வதில்லை. அடுத்த கட்டத்தில் பணி உயர்வில் இருக்கிறாள்.

“ஹாய் குட்மார்னிங்”

எதிரில் வந்த ஜெய்சிங் இவளை பார்த்து கையை அசைத்தவன் உன்னை பாஸ் கூப்பிடுகிறார் என்று சொல்லி விட்டு போனான்.

“வா நிவேதிதா,” என்று தமிழில் சொன்னவன் ராம் மனோகர்.

“நான் கேட்டிருந்த ரிபோர்ட்டை தயார் செய்து விட்டாயா”

“ஒரு தடவை தான் தப்பு செய்தேன் ராம்.”

“ஹரே யார் லீவ் இட்.” தன்னை அறியாமல் இந்திக்கு மாறியவன் எதிரில் இருந்த நிவியை கண்டு மீண்டும் தமிழ் சொன்னான்.

ராம் மனோகர் இந்த பன்னாட்டு குளிர்பான கம்பனியில் வேலையில் சேர்ந்து மிக குறுகிய காலக் 

கட்டத்திலேயே மிகவும் உயர்ந்த பதவிக்கு முன்னேறி கொண்டிருந்தான். இப்போதும் கம்பனியின் சி.இ.ஓ பதவிக்கு இவனுக்கும் ஆதித்யா பட்டாசார்யாவிற்கும் கடும் போட்டி. ஒவ்வொரு தேர்வாக இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் தேர்வாகி கொண்டே வந்தார்கள். இன்னும் ஒரு போட்டி உள்ளது. அதற்கு தயாராகி கொண்டிருக்கும் ராமுக்கு எல்லா வகையிலும் பெருந்துணையாக இருந்து ரிபோர்ட் தயார் செய்து தருவது எல்லாமே நிவேதிதா தான். இன்றும் கம்பனியின் கடைசி மூன்று மாத உற்பத்தி மற்றும் விற்பனை பற்றிய விரிவான அறிக்கையை தான் ராம் நிவேதிதாவிடம் கேட்டிருந்தான்.

“தெரியும் நிவி. உன் திறமை தெரிந்து தான் நான் இந்த கம்பெனிக்கு வரும் போது உன்னையும் அழைத்து கொண்டு வந்தேன். இன்னும் நல்ல பணிவுயர்வுடன். சொல்ல போனால் உன்னை அழைத்து கொண்டு போகிறேன் என்று சிவரட்சகனுக்கு என் மேல் கோபம் தான்”

“தாங்க்ஸ் ராம். எனக்கு அந்த நேரத்தில் இந்த இடமாறுதல் தேவையாக இருந்தது”

எப்பவும் அவளை கேட்கும் கேள்வியை தான் அப்போதும் கேட்டான் ராம். “என்ன ஆச்சு நிவி. நீயும் உன் கணவரும் பிரிஞ்சிட்டீங்களா?”

எப்போதும் யாரையும் இந்த எல்லையை தாண்ட அவள் விட்டதே இல்லை. அவனுக்கும் அது தெரியும்.இதே பதிலை தான் கேட்டுக் கொண்டிருக்கிறான். என்றாவது ஒருநாள் என்ன விஷயம் என்று சொல்ல விட  மாட்டாளா? 

“அதை விடுங்க பாஸ். இன்று காலை ஊரில் இருந்து அப்பா கூப்பிட்டார். எங்கள் சொந்த ஊரில் சித்தப்பா மகளுக்கு கல்யாணம் என்று சொன்னார். பதினைந்து நாளாவது லீவ் போட்டு விட்டு வர சொன்னார். இப்பவும் போகனுமான்னு யோசனையாகத் தான் இருக்கு.”

“யோசிக்க ஒண்ணுமில்லை. போய் வா நிவி”

“போகணும் தான்” என்றவள் தூர பார்வையாக சொன்னாள். “நானும் கடந்த மூன்று வருடங்களாக பிரேக் இல்லாமல் வேலை செய்கிறேன்.”

“எந்த ஊர்?”

“திருச்சி பக்கம் புதுக்குடி”

3 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *