8
ராஜமாணிக்கத்தின் தந்தைக்கு திருச்சி பக்கத்தில் புதுக்குடி என்னும் கிராமம் தான் சொந்த ஊர். அவர் பட்டாளத்தில் வேலை பார்த்து பிறகு ஒய்வு பெற்று ஊரில் கொஞ்ச நிலம் வாங்கி விவசாயம் பார்த்து கொண்டிருந்தார். ராஜமாணிக்கம் ராஜ சேகரன் இரண்டு மகன்கள், சிவகாமி ஒரே மகள். அவளுக்கு திருமண வயது வந்த போது அக்கம்பக்கம் இருக்கும் பெரிய இடத்திலிருந்து எல்லாம் பெண் கேட்டு வந்தார்கள். யாருக்கு கொடுப்பது என்று பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருந்த இடைவெளியில் அவர்கள் வீட்டில் படிப்பு ஏறாமல் மாட்டு வேலை செய்து கொண்டிருந்த நல்ல உயரமாக மூர்க்கனாக இருந்த அவருடைய தங்கை மகனுக்கே கட்டி கொடுக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாக வேண்டியதாயிற்று. அது அவனுடைய தாயின் போதனை. ஒய்வு பணம் முழுமையுமாக அவளுக்கே கொடுத்து திருமணம் செய்த போதும் அவள் திருப்தியாக இல்லாமல் இருந்தாள்.
சகல துர் நடத்தைகலுக்கும் இருப்பிடமான கணவனை திருத்தவும் முடியவில்லை. அவனுக்காக தந்தையிடம் பிடுங்கி கொடுத்தும் மாளவில்லை. தந்தையின் கடைசி காலத்தில் அவரை மனமடிய செய்து இருந்த கொஞ்ச நிலத்தையும் பிடுங்கி கொண்டு தான் விட்டாள் அவள். சின்ன மகன் ராஜ சேகரனுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. அவனை கைக்குள் போட்டு கொண்டு ராஜமாணிக்கத்தையும் அவர் மனைவியையும் ரொம்பவே படுத்தி எடுத்தாள். அவன் சம்பாதித்ததையும் அழுது அழுது ஏதேனும் காரணம் சொல்லி வாங்கி கொள்வாள். அவளுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்திருந்தால் அதையும் அவனுக்கே கட்டி வைத்து அவனை ஆண்டாண்டுக்கும் அடிமையாக வைத்திருப்பாள். நல்லவேளையாக அவளுக்கு சிவா மட்டும் ஒரே மகனாக பிறந்தான். அண்ணனையும் தம்பியையும் சேரவிடாமல் பிரித்து இடையில் அவளுடைய காரியத்தை சாதித்து கொண்டவள் சிவகாமி. அத்தனையும் ஒழுக்கம் கெட்ட கணவனுக்காக. அவர்கள் தாயால் அவளை சமாளிக்க முடியவில்லை.
தந்தை இறந்ததும் அவருக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து விட்டு பூர்விக வீட்டையும் விட்டு விட்டு சேலத்திற்கு மாற்றல் வாங்கி கொண்டு இங்கே வந்து விட்டார். ஆனால் உள்ளான காரணம் என்னவென்றால், தங்கையின் கணவன் சிறுவனான அவன் மகனுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்ததை அவர் காதால் கேட்க நேரிட்டது தான்.
“சிவா, உன் மாமன் மூன்று பெண்கள் வைத்திருக்கிறான். உன் மாமன் பொண்டாட்டிக்கு ஏகப்பட்ட சொத்து அங்கே அவளோட ஊரில். போதாகுறைக்கு இவன் வேறு நன்றாக சம்பாதிக்கிறான். அதனால் அவன் பொண்ணுகளில் ஒருத்தியை முடிந்தால் இரண்டு பேரை கூட சரிதான், எப்..ப…டி….யா..வது கட்டி கொள். ஆயுசுக்கும் கஷ்டப்படாமல் எந்த சுகத்திற்கும் குறையில்லாமல் இருக்கலாம்.”
கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பதை போல இத்தனை நாளும் அந்த ஊர் பக்கமே போகாமல் அவருடைய பெண் மக்களை அடைகாத்து வந்தார் ராஜமாணிக்கம். ஆனால் விதி விடவில்லையே. சாரு என்னும் கோழிக்குஞ்சை சிவா என்னும் பருந்து தூக்கி செல்லும் படி ஆயிற்று. வெறும் மனதளவில் காதல் என்று சொல்லி இருந்தால் கூட எப்படியாவது சாருவை அதட்டி உருட்டி சரி செய்திருப்பார். ஆனால் இப்போதோ கருவும் தங்கிப் போச்சு. காலமும் கடந்து போயாச்சு.
ஆனால் சாருவின் வார்த்தையின் படி சிவாவின் தந்தை இறந்து போய் விட்டதாகவும் அவருடைய நடத்தைகள் பிடிக்காமல் இவன் அவருடைய கடைசி காலத்தில் அவருடன் பேசுவதை தவிர்த்தான் என்றும் அவனுடைய தாயும் தன் அண்ணனை நினைத்து அவ்வப்போது புலம்புவாள் என்றும் சொல்லி சொல்லி அவன் மேல் அவளுக்கு ஒரு கழிவிரக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது என்று சொன்னாள்.
“உங்கள் வீட்டில் நம் திருமணத்திற்கு ஒப்ப மாட்டார்கள்.” சிவா சொல்ல, அவனை சமாதானபடுத்தி எப்படியும் அவனையே திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறாள் சாரு. வீட்டில் அத்தையை பற்றியும் அவளுடைய மகனை பற்றியும் மெதுவாக பேசி பார்த்திருக்கிறாள். சரியான மண்டகப்படி கிடைக்கவும் இனி அவர்களை பற்றி பேச முடியாது என்பதை புரிந்து கொண்டு இருவரும் ரகசியமாக திருமணம் முடித்திருக்கிறார்கள்.
“அவன் உன்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டான். நமக்கு தான் அவனை எல்லாம் தெரியாதே?”
“இல்லைக்கா, நாம் சித்தப்பா திருமணத்திற்கு ஒருமுறை ஊருக்கு போனோமே”
“ஆமாம், ஆனால் அது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டதே.”
“அப்போது பார்த்தது தான். மேலும் நான் நம் அத்தையை போலவே இருப்பதாக சொல்கிறார் அக்கா”
“ஒருவேளை அவனுடைய அப்பா சொன்னது போல நம் வீட்டின் கடைக் குட்டியையை திருமணம் முடித்தால் சுகமாக இருக்கலாம் என்று நினைத்தானோ?”
“அதனால் தான் உன்னை தொடர்ந்து பெங்களூரு வந்தானோ?”
“ச்சே, இல்லேக்கா. ஒருநாள் எதேச்சையாக தான் பார்த்தார்.”
“பார்த்ததும் நீ அவனுடைய மாமன் மகள் என்று தெரிந்து விட்டதாமா அந்த துரைக்கு?”
“சொன்னால் நம்ப மாட்டீர்கள்.”
“நம்புகிறோம் சொல்லு. அவனை எங்கே பார்த்தே?”
“என் கூட தான் வேலை செய்கிறார். நான்கு ஐந்து மாதம் பேசி பழகின பின்பு தான் நான் அவருடைய மாமன் மகள் என்று தெரிந்து எனக்கும் சொன்னார்”
“நீ அப்போதே அதை எங்களுக்கு சொல்லி இருந்திருக்கலாம் இல்லையா?’
“நான் சொன்னேன். நீங்கள் தான் அத்தையை பற்றி பேசினாலே திட்டினீர்கள்”
“அப்படி திட்டி இருந்தும் எங்களுக்கு அவர்களை பிடிக்காது என்று தெரிந்திருந்தும் நீ அவனை கட்டி இருந்திருப்பாயா?”
“நம் அத்தை மகன் தானே. எல்லாம் போக போக சரி ஆகி போகும் என்று நம்பினேன்.”
“அதெப்படி சரியாகும்?”
“நமக்கும் அவர்களுக்கும் எப்போதும் ஒத்து வராது.”
“அதற்காக தான் நம் வீட்டு திருமணங்களுக்கு கூட அவளை உங்கள் அப்பா அழைக்கவே இல்லை. உங்களை எல்லாம் அவள் கொள்ளி கண்ணில் காட்ட கூடாது என்று பிடிவாதமாக இருந்தார்”
இடையில் அவர்கள் தாய் சொல்லி புலம்பினாள். “அவள் குணம் தெரிந்து இத்தனை நாட்களாக உங்களை எல்லாம் அடைகாத்து காப்பாத்தினாரே, கடைசியில் இப்படி ஆகி விட்டதே.”
சாருவின் தலையில் டமால் டமால் என்று அடித்தாள் அம்மா. அவள் கையிலிருந்து சாருவை பிடுங்கி அந்த புறம் நகர்த்தி விட்டாள் நிவேதிதா.