Skip to content
Home » அரிதாரம் – 23

அரிதாரம் – 23

ஆராதனா பேசியதிலேயே அவளது சம்மதத்தையும் உணர்ந்த நிகேதனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை தெரிவிக்கும் விதமாக புன்னகைத்து “ரொம்ப சந்தோஷம் ஆராதனா. நாம் நிச்சயம் ரொம்ப சந்தோஷமாக, ரொம்ப நாள் வாழ்வோம். கவலைப்படாதே! 

எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. போய்விட்டு வருகிறேன். வந்த பிறகு உனக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு. அதை வந்து சொல்றேன் சரியா?”  என்றான். 

அவளும் குழப்பமாக சரி என்று தலையாட்ட, 

“சரி நீ போய் தூங்கி ஓய்வெடு. நாளைக்கு காலையில ஷூட்டிங் போனும் இல்ல” என்று சொல்லிவிட்டு, “நாளைக்கு காலையிலேயே நான் கிளம்பி விடுவேன். என்னை தேடாதே!” என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றான். 

பின்னர் தான் செய்ய வேண்டிய வேலைகளை மடமடவென்று செய்ய ஆரம்பித்தான் நிகேதன். 

தீபனுக்கு ஃபோன் செய்து தனது அறைக்கு வர சொல்லி என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதையும் அவனுக்கு கட்டளையிட்டான். பின்னர் ‘நிலாவிடம் சொல்லி விட்டாயா?” என்று கேட்டான். 

அவனும் இல்லை என்று தலையாட்ட, “ஏன்டா?” என்றான்.

“இல்லைண்ணா, நான் எதுவும் சொல்லுவதை விட, அப்பா அம்மா நேராகச் சென்று அவளை பெண் கேட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? அதனால் தான்” என்றான் அவனும் தலையை சொரிந்து கொண்டே.

“சரி அவள் இப்பொழுது உறங்கி இருப்பாளா?” 

“இல்லை அண்ணா” என்றான் டக்கென்று. 

“ஓ” என்று சொல்லி “அவளை உடனே வரச் சொல்லு” என்றான் நிகேதன். 

நிலாகும் அவசர அவசரமாக அவனது அறைக்கு வர, “நாளை காலையில் நான் சென்னைக்கு போகிறேன். படப்பிடிப்பு முடியும் வரை நீ ஆராதனாவுடன் தான் இருக்க வேண்டும். அவளுக்கு என்ன வேண்டுமோ கேட்டு செய்து கொடு. சரியா?” என்றான். 

‘சரி’ எனும் விதமாக தலையாட்ட, 

“ஏன்? வாய் திறந்து எதுவும் சொல்ல மாட்டாயா?” 

“சரிங்க சார்” என்றாள் சட்டென்று. 

“சாரா” என்று மென்மையாக கேட்டு விட்டு, “வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?” என்றான். 

இல்லை என்று மறுப்பாக தலையாட்டினாள் அவள். 

அவன் “என்ன?” என்று கேட்க, 

“இல்லை சார்” என்றாள் படபடப்பாக. 

அவளின் படபடப்பை கண்டு லேசாக சிரித்த நிகேதன், “நான் சாராதண மனிதன் தான். என்னை பார்த்து ஏன் பயப்படுகிறாய்” என்றான்.

அவள் அப்பவும் தயங்கி நிற்க, “சரி காலையில் ஆராதனா எழுந்ததிலிருந்து உன் வேலை ஆரம்பிக்கிறது” என்று சொல்லிவிட்டு “சரி போ” என்றான். 

இருவரையும் பார்த்து தலையாட்டி விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி விட்டாள் நிலா.  

அவள் சென்றதும் “பார்க்க நல்ல பெண் போல் தான் இருக்கிறாள்” என்றான் தீபனிடம்.

அவனும் புன்னகைக்க, 

“ஆராதனாவுடன் பழக சொல்லு. அவளிடம் இருந்து தைரியத்தையும் கத்துக்கச் சொல்லு. எது கேட்டாலும் டக் டக் என்று பதில் சொல்லணும். இப்படி பயந்த மாதிரி தலையை தலையை ஆட்ட கூடாது சொல்லி வையி” என்று சொல்லிவிட்டு, “சரி நான் நாளைக்கு ஊருக்கு போயிட்டு வந்துடறேன். அதுவரைக்கும் இங்கு உள்ள வேலைகளை கவனமாக கவனித்துக் கொள்” என்று கூறி தீபனையும் அனுப்பி வைத்து, கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று கட்டிலில் படுத்தான் நிகேதன்.  

படுத்தவனுக்கு உறக்கம் தான் வர மறுத்தது, செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து. இப்படி சும்மா படுத்து கிடப்பதற்கு பேசாமல் கிளம்பி விடலாம் என்று நினைத்த நிகேதன், உடனே அங்கிருந்து தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். 

அண்ணனிடம் பேசிவிட்டு நிலா இருந்த அறைக்கு வந்த தீபன் “அண்ணன் சொன்னதெல்லாம் புரிந்ததா?” என்றான். 

அவளும் தலையாட்டி “ஆனா கடைசி வரைக்கும், ஏன் என்னை திடீரென்று வரச்சொன்னார் என்று கேட்க நினைத்தேன். பின்னர் அவரிடம் ஒரு விசயம் பற்றி பேச நினைத்தேன். எதுவும் முடியவில்லை” என்றாள்.

“அப்படி என்ன கேட்க வேண்டும்” என்றான். 

“இல்லை நம்ம காதலை பற்றிதான்” என்றாள் கவலையாக.

அவளின் கவலையில் தன் முடிவை மாற்றி, அவளின் அருகில் அமர்ந்து, அவளது கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டு, “கவலைப்படாதே நிலா, நான் அண்ணனிடம் நம் காதலை சொல்லிவிட்டேன். அவர் அப்பா, அம்மாவிடம் பேசுகிறேன் என்றார். அப்பா அம்மாவுடன் வந்து பேசலாம் என்று தான் உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீ இப்படி பயப்படுகிறாயே!” என்றான் வருத்தமாக. 

நிகேதனுக்கு தங்கள் காதல் தெரியும் என்பதில் முதலில் மகிழ்ந்தாலும் பிறகு அவர் சம்மதிக்க மாட்டாரோ என்று வருந்தவும் செய்தாள். பின்னர் அவர் சம்மதித்ததினால் தானே பெற்றோரிடமும் பேசுவதாக கூறியிருக்கிறார் என்று மிகவும் மகிழ்ந்தாள். பலவிதமான உணர்ச்சி கலவைகள் பிரதிபலிக்க அவளது கைகளில் அழுத்தம் கொடுத்த தீபன், “அப்பா அம்மாவும் சரி, அண்ணாவும் சரி என்றும் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல” என்று புன்னகையுடன் கூறி, அவளை தோளுடன் அணைத்து கொள்ள, அவனிடம் இருந்து வேகமாக விலகிய நிலா, 

“சரி சரி, என்னவென்றாலும் நாளை காலை பேசிக்கலாம். எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் தூங்கணும். நீங்க போங்க” என்று அவனை கை பிடித்து வெளியே தள்ளி கதவை சாற்றி, அதில் சாய்ந்து புன்னகைத்துக் கொண்டாள். 

பின்னிரவுக்கு பிறகு கிளம்பிய நிகேதன் காலை பத்து மணி அளவில் அவர்களது வீட்டிற்கு வந்தான். அவனைக் கண்டதும் அவனது தாய் 

“என்னடா? ஷூட்டிங் முடிந்த பிறகு தான் வருவேன் என்று சொல்லிட்டு போனீங்க இரண்டு பேரும். இப்ப என்ன நீ மட்டும் வந்துட்ட? தீபன் எப்படி இருக்கிறான்? ஷூட்டிங் எல்லாம் எப்படி போகுது?” என்று அவனிடம் கேள்விகளை கேட்டு துளைத்தார். 

“ஒரு முக்கியமான வேலை விஷயமா வந்தேன் அம்மா” என்று சொல்லிவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். 

“இப்பதான் வீட்டுக்குள்ள வரான். அவன்கிட்ட ஏன் இவ்வளவு கேள்வி கேக்குற? போய் முதல்ல குடிக்கிறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வந்து கொடு” என்று மனைவியை  கடிந்து கொண்ட விஜயன், மகனின் அருகில் அமர்ந்து 

“என்னடா? ரொம்ப முக்கியமான வேலையா?” என்றார். 

“என்னை சொல்லிட்டு இவரு மட்டும் கேள்வி கேட்பார்” என்று முனங்கியபடியே மகன் குடிப்பதற்கு தயார் செய்ய சமையல் அறைக்கு சென்றார் ஷர்மிளா.

தந்தை கேட்டதும் கண்களைத் திறந்த நிகேதன் நிமிர்ந்து அமர்ந்து “நீங்க இன்னும் ஆபீஸ்க்கு போலையா அப்பா” என்று கேட்டு “நல்ல வேளையாக வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள் இரண்டு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசணும்” என்றான் புன்னகையாக. 

மகனின் புன்னகை கண்டதும் தனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி பொங்க, “ஏய் ஷர்மி, சீக்கிரம் வா. உன் பையன் கல்யாணம் பண்ணிக்க போறானாம்” என்றார்.

“அப்பா” என்று அதிர்ந்த நிகேதன், “எப்படிப்பா?” என்றான் ஆச்சரியமாக.

“ஹாஹா” என்று வாய்விட்டு சிரித்தவர், “நாங்களும் அந்த வயதை கடந்து தானே வந்திருக்கிறோம்” என்றார். 

தந்தையின் சிரிப்பில் மகிழ்ந்த நிகேதன், தாய் கொடுத்த காபியை வாங்கி ரசித்து குடித்த படி, “ஒன்று இல்ல, இரண்டு விஷயங்கள் சொல்லணும். எனக்கு முன்னே உங்க சின்ன பையன் காதலில் விழுந்து விட்டான்” என்றான். 

ஷர்மிளா ஆச்சரியமாக, “உனக்கு முன்னேவா? அப்படி என்றால் நீயும் காதலிக்கிறாயா?” என்றார். 

வெட்கப் புன்னகை சிந்திய நிகேதன் ஆமாம் என்று தலையாட்ட, மகனின் வெட்கத்தைக் கண்டு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தோன்ற, “யாருடா? அந்த பொண்ணு” என்றார் விஜயன். 

“அது யாருன்னு தெரியுறதுக்கு முன்னாடி, உங்களுக்கு நிலாவை தெரியுமா?” என்றான். 

உடனே சர்மிளா “தெரியும், ரொம்ப நல்ல பொண்ணு. அமைதியான பொண்ணு. இப்பதான் படிப்பு முடிச்சுட்டு வேலைக்கு போகிறாள்” என்றார். 

“ஓ, உங்களுக்கும் தெரியுமா? அந்த பொண்ணு தான் தீபன் விரும்புகிறான்” என்றான் 

அதில் மகிழ்ந்த சார்மிளா “உண்மையாவா?” என்று கூறி விஜயனிடம் “ரொம்ப நல்ல பொண்ணுங்க. நான் தீபனுடன் ஆசிரமத்திற்கு போகும்பொழுது எல்லாம் அவளை பார்த்திருக்கிறேன்” என்று அவளது பெருமைகளை பற்றி கூற ஆரம்பித்தார். 

மனைவியின் முகத்தில் இருந்த உற்சாகத்தை கண்டு மகிழ்ந்த விஜயன், “நல்ல வேலை டா, அவளுக்கு பிடித்தவளே மருமகளா வந்துட்டா! இல்லன்னா இந்த மாமியார் தொல்லைகள் தாங்காது” என்று மனைவியை கிண்டல் செய்த விஜயன், மகனின் புறம் திரும்பி “சரி நீ சொல்லு. நீ யார விரும்புகிறாய்?” என்றார்.  

“ஆமாம் சொல்லு. ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணத்தை பண்ணிடலாம்” என்றார் குதூகலமாக. 

“இல்லை இல்லை. எனக்குத்தான் முதலில் திருமணம். தீபனும் நிலாவும் இன்னும் ஓரிரெண்டு வருடங்கள் போகட்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி, அவர்கள் சொல்லும் பொழுது திருமணம் செய்து வைக்கலாம். அதற்கு முன் நிர்வாகியிடம் பேசி திருமணத்தை உறுதி மட்டும் செய்து கொள்வோம்” என்றான் உறுதியாக 

நிகேதன் சொல்லுவதும் சரியாகப்பட, “சரி, நான் நிர்வாகியிடம் பேசி, நிலாவை தீபனுக்கு திருமணம் முடிக்க சம்மதம் வாங்கி விடுகிறேன்” என்ற விஜயன், உடனே அவருக்கு அழைத்தும் விட்டார். விசயத்தை கேட்ட நிர்வாகிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

“இதற்கு நான் ஏன் மறுப்பு சொல்ல போகிறேன்? என் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்ந்தாலே எனக்கு போதும். அவர்கள் விருப்பப்படியே, அவர்கள் எப்ப சொல்கிறார்களோ அப்பொழுது திருமணத்தை நடத்தி விடலாம்” என்றார் மகிழ்ச்சியாக 

அவருடன் பேசி முடித்ததும் மனைவி மகன் இருவரிடமும் நிர்வாகி சொன்ன விஷயங்களை சொல்லிய விஜயன், “இப்பொழுது நீ சொல்லு. நீ யாரை விரும்புகிறாய்?” என்றார். 

தந்தை கேட்டதும் அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது. “நான் ஒரு பெண்ணை ஒரு பங்க்ஷனில் பார்த்தேன். பார்த்ததும் மிகவும் பிடித்து விட்டது. முதலில் அது ஏதோ ஒரு தீர்ப்புதான் கடந்து விட நினைத்தேன். ஆனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை. அதன் பிறகு அவளைப் பற்றி தெரிந்து கொள்வதிலேயே என் கவனம் சென்றதை உணர்ந்து, அவளை நான் விரும்புவதை புரிந்து கொண்டு, கல்யாணம் செய்துக்கலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு அவள் சம்மதம் வேண்டும் என்று காத்திருக்க” 

என்றதும் “என் பிள்ளையை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?” என்று ஷர்மிளா பெருமையாக. “ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதே! யார் அந்த பெண் என்று சொல்?” என்றார் மகனின் நாடி பிடித்து. 

தன் தாயின் ஆர்வத்தை கண்டதும் புன்னகைத்துக் கொண்டே “நடிகை ஆராதனாவை தெரியுமா? அவளைத்தான் நான் உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன்” என்றான் நிகேதன்.

-தொடரும்..

– அருள்மொழி மணவாளன்..

3 thoughts on “அரிதாரம் – 23”

  1. Avatar

    சூப்பர். .. ஆராதனா பற்றிய உண்மை தெரிந்தால் இவர்கள் அவளை ஏற்றுக் கொள்ளவார்களா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *