Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-1

அலப்பறை கல்யாணம்-1

*அலப்பறை கல்யாணம்*

   எட்டு அடுக்கு கட்டிடம், நன்றாக உயர்ந்து கம்பீரமாய் கண்ணாடி மாளிகை போல ஒய்யாரமாய் நவீன வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தது.

  சற்று தூரத்தில் இருக்கும் ரோட்டில் செல்லும் வண்டிகள் எல்லாம் இந்த கம்பெனில வேலை கிடைச்சா நல்லாயிருக்கும் என்று எண்ணாமல் கடக்க முடியாது‌.

  அத்தகைய பெயர் பெற்ற DCL  கம்பெனியில் இன்று சம்பள நாள்.

  “என்ன மச்சி இந்த மாசம் சம்பளம் அதிகப்படுத்தியிருக்காங்களாமே. செம வசதி தான். எப்ப ட்ரீட் தர்றிங்க” என்று கேசவன் அவன் போனில் பேங்க் பேலன்ஸை ஆராய்ந்தபடி குமாரிடம் கேட்டான்.‌

அதற்கு குமாரோ “அட நீ வேறப்பா லாஸ்ட் மந்த் என்‌மனைவி கார் கேட்டான்னு கார் வாங்கிட்டேன்.‌ இப்ப சம்பளம் கூடுதலா வந்தும் காருக்கு இ.எம்.ஐ கட்ட இடிக்குது. இப்ப எங்கம்மா வேற பொண்டாட்டிக்காக கார் வாங்கிட்டான் கடன் வாங்கிட்டான்னு புலம்புவாங்க.

இதுக்கு சொந்த பந்தம் யாரும் வேண்டாம்னு சன்னியாசம் வாங்கிக்கலாம். நாயா வேலை செய்து என்ன புரோஜனம்” என்று வருத்தமாய் கூறினான்.

   இங்கே ஒருவன் தன் கவலையை கூறி வருந்த “அங்க பாரு நம்ம ஹீரோ தமிழரசன். வாழ்ந்தா அவனை போல வாழணும். பாரு அப்பா அம்மா யாருமில்லை. போதாதுக்கு கல்யாணமும் பண்ணலை பொண்டாட்டியும் இல்லை. வர்ற சம்பளம் எல்லாமே சேவிங் தான்‌.” என்று கிண்டலாகவும் அதே சமயத்தில் சற்று பொறாமை கொண்டும் கேசவன் கூறியது வார்த்தையில் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

  இவர்கள் பேச்சுக்குரிய தமிழரசன் அவன் நண்பன் சதிஷோடு இவர்களை நோக்கி வந்தான்.

“என்ன தமிழ்? எப்பவும் போல ட்ரீட் தர்றது.” என்று கேசவன் கூப்பிட, “சாரி ப்ரோ. நீங்க ரொம்ப குடிக்கறிங்க. அது உங்க உடல் நலத்துக்கு கெடுதல். இனி ட்ரீட் கிடையாது” என்று தன்மையாக பதில் தந்தான்.

  அங்கிருந்தவர்கள் ‘க்ளுக்’கென சிரித்து விட, அது கேசவனுக்கு கடுப்பானது. செல்லப்போனால் கேசவனை டீ டோட்டலராக நினைத்த இரண்டு பெண்கள் வாய் பிளந்து, “ப்ரோ நீங்க குடிப்பீங்களா?” என்று உச்சு கொட்டி செல்ல,  நல்லவனாக அரட்டை அடித்து பேசியவனுக்கு அவமானம் ஆனதாக எண்ணினான்.

  இத்தனை பேர் மத்தியில் குடிப்பவனை குடிப்பவனாக ‘அடையாளப்படுத்திய கோபம். ”டேய்… என்ன பேசற? ட்ரீட் கேட்டா என்னவெல்லாம் பேசுவியா? நான் குடிக்கலாமா வேண்டாமானு நீ சொல்ல கூடாது.” என்று எகிறினான் கேசவன்.

தமிழரசனோ “என்கிட்ட ட்ரீட் கேட்டா நான் என் தரப்பை தான் சொல்லுவேன் ப்ரோ. உடம்பை கெடுத்துக்காதிங்க. வாரம் வாரம் தண்ணி அடிச்சி பணத்தை செலவு செய்து, நட்பு வட்டாரத்தை பெருக்கி வச்சியிருக்கிங்க.

   இந்த குடியை நிறுத்துங்க. யார் என்ன எப்படிபட்டவங்கன்னு பார்த்து ஆராய்ந்து முடிவெடுங்க.” என்று கேசவன் நல்லதிற்கு கூறினான்.

நாயகன் என்றாலே நாலு கருத்து வந்துவிடும் அல்லவா?!

   “நீ என்கிட்ட இந்த ஈரவெங்காயத்தை செல்லாத. உன் வேலையை பாருடா. இந்த மயிருக்கு தான் உனக்கு கல்யாணம் ஆகாம சுத்திட்டு இருக்க” என்று தமிழரசன் திருமணமாகாததை சுட்டி காட்டி, தனிப்பட்ட வாழ்வை இழுத்தான் கேசவன்.‌

  தமிழரசனோ “ஹலோ கேசவன். என்ன பேசறிங்க. நீங்களா வந்திங்க. ட்ரீட் கேட்டிங்க. உடம்புக்கு கெடுதல் வாங்கி தர முடியாதுன்னா ஓவரா பேசறிங்க. கல்யாணம் ஆகலைன்னு நான் வந்து சொன்னேனா? நான் இப்ப வரை கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கலை.

   அப்படி பார்த்திருந்தா நீ நான்னு வந்து விழுந்திருப்பாங்க.” என்று கெத்தாக கூறினான்.

  உண்மையில் தமிழரசன் கல்யாணம் என்ற ஒன்றை சிந்திக்கவில்லை.

   “அட சீன் போடாதடா. உனக்கு யாரும் இல்லை. அதனால் நீ தனியா தான் இருக்கணும்.” என்று பேசினான் கேசவன்.

  எப்பவும் தண்ணி அடித்துவிட்டு உலறுவது கேசவனின் வேலை. அந்த பேச்சு எல்லாம் கேட்க சில கூட்டம் உண்டு. இன்றும் அதே ரகத்தில் இருந்தான்.

தமிழோ “இங்க பாருங்க கேசவன். ஏதோ ஒன் ஆப் தி ஓர்க்கர் என்ற மரியாதை கொடுத்தேன். ஆனா தண்ணி அடிச்சிட்டு உலறுவது போல இப்பவும் உலறிட்டு இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்.
  இந்த ஈரவெங்கய பேச்சை உங்க வீட்ல, உங்க அடிமைகளிடம் காட்டுங்க. என்னிடம் வேண்டாம்.
   மரியாதை தந்தா மரியாதை கிடைக்கும். மரியாதை இல்லைன்னா போடா மயிருன்னு விட்டுடுவேன். எனக்கும் பேச தெரியும். ஆனா எதிர்தரப்புவாதி அதுக்கு ஈகுவளா இருக்கணும். என்னை பொறுத்தவரை பேஸிக் மேனர்ஸ் இல்லாத நீ திறமையில்லாத வேஸ்ட் பெல்லோ. உனக்கு எப்படி தான் இங்க வேலை கொடுக்கறாங்களோ” என்று அவனும் காயப்பட்ட உணர்வோடு பேசினான்.‌

   தமிழரசன் கேசவன் சண்டையை நண்பன் சதிஷ் தடுத்து, கேண்டீனுக்கு அழைத்து சென்றான்.‌

  கேசவனுக்கு இருக்கும் எரிச்சலில் நாய்பட்ட பாட்டில் அலைந்தான் என்றால் தகும்.

  சதிஷ் இரண்டு சமோசா மற்றும் லெமன் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு தமிழரசனை இருக்கையில் அமர கூறினான்.

  “என்னாச்சு தமிழ். எப்பவும் பதிலுக்கு பதில் சொல்லுக்கு சொல்னு கொடுப்ப. இன்னிக்கு சைலண்டா ரிப்ளை பண்ணிருக்க?” என்றான் சதிஷ்.‌

   என்னடா நக்கலா?” என்று நண்பனை விளையாட்டாய் முறைக்க, “இல்லைடா எப்பவும் வெட்டு ஒன்னு துண்டு இரண்டுனு பேசுவ. இன்னிக்கு என்னவோ குறையுது.” என்று சதிஷ் புரியாது பார்த்தான்.
   தமிழோ “இல்லைடா மச்சான். இப்ப தான் டீம் லீடரா போஸ்டிங் வந்திருக்கு. இந்த நேரம் நான் எப்பவும் போல கத்தினேன். என்னவோ தலைகனம் ஏறி பேசறதா போகும். இதே சாதாரண எம்பிளாயியா இருந்தா அந்த கேசவனை வச்சி செய்துயிருப்பேன்.

  பொறுப்பு சிலது தலையில் இருக்க பார்த்து நிதானமா பேசறேன். அந்த கேன கேசவன் என்னவேன்னா பேசறான்?” என்று பற்களை நறநறவென கடித்தான்.

  சதிஷ் சமோசாவிற்கும் ஜூஸுக்கும் பணத்தை தந்து இருவரும் பருகி முடிக்க, “டீம் லீடர், ஹை பொஸிஷன் இதெல்லாம் யோசிக்காத. இனி இவனை மாதிரி ஆட்களுக்கு பதில் பேசு‌. உனக்கு செல்லி கொடுக்கணுமா? சரி விடு. நீ ஏன் கல்யாணம் பண்ணலை. ஒரு கல்யாணத்தை பண்ணறது?” என்று கேட்டான். நண்பனின் வாழ்வில் யாருமில்லையென்ற வெறுமை அகலுவதற்கு வழிகாட்டும் விதமாக திருமண பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

  “இதுவரை கல்யாணத்தை பத்தி யோசித்தில்லை மச்சி. ஆனா இனி பொண்ணு பார்க்கணும். எவன் எவனோ வாயுக்கு வந்தபடி பேசறான்.” என்று வருத்தமுற்றான்.

   ”இன்னிக்கு டீம் லீடரா மாறியிருக்க. இதே சந்தோஷத்தோடு மேட்ரிமோனில பொண்ணு பார்க்கற. உன்னோட டீட்டெயில் அப்லோட் பண்ணு. எது பிக்ஸ் ஆகுதோ உனக்கு பிடிச்சிருக்கோ அக்சப்ட் பண்ணு. சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுடா 90’ஸ்” என்று இருப்பிடத்தை இயல்பாக்க முயன்றான்.
அதற்கு ஏற்றவாறு தமிழரசனும், ம்ம் பார்க்கணும் டா. எனக்குன்னு ஒருத்தி எங்கயிருக்காளோ?” என்று கனவு உலகத்தில் நுழைந்தான் நாயகன்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்‌

இது ஒரு குறுநாவல் பிரெண்ட்ஸ்.

வெண்மேகமாய் கலைந்ததே முடிந்ததும் பதிவு வரும். அந்த கதை 3 ஆர் 4 அத்தியாயம் முடிய இருக்கும். எழுத எழுத வந்தா தெரியும்.

கொஞ்சம் காமெடி கொஞ்சம் ஃபேண்டஸி கலந்து இருக்கும்.

4 thoughts on “அலப்பறை கல்யாணம்-1”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம் …!
    பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 1)

    அடப்பாவி கேசவா..! ட்ரீட் கேட்டதுக்கு, ரொம்ப குடிக்கிற
    அவாய்ட் பண்ணுன்னு சொன்னதுக்கா இத்தனை அலப்பறை…? அது சரி, இந்த தமிழரசன், சும்மா போன ஓணானை பேன்ட்டுக்குள்ள விட்டுட்டான் போலவே…. ?இதனால பின்னாடி இந்த கேசவனால தமிழரசனுக்கு ஏதாவது வில்லங்கம் ஏற்பட்டுடுமோ…???

    😆😆😆
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *