Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-4

அலப்பறை கல்யாணம்-4

அத்தியாயம்-4

   தமிழரசன் அதிகாலை நேரத்தில் எழுந்தப்போது, நன்றாகவே வானம் விடியலில் வெண்மையாக காட்சியளித்தது.

  “என்னங்கடா இது எப்பவும் போல கனவா?” என்று கொட்டாவி விட்டு முகத்தை அழுத்தமாய் துடைத்து எழுந்தான்.

   சுற்றிலும் அறையை அளவிட்டவனுக்கு இப்பொழுதும் நாதஸ்வர சப்தம் கேட்டது.

  அதோடு பேச்சு சப்தமும் கேட்டிட, பல் விலக்கியவனோ, ‘என்ன பக்கத்துல எங்கயாவது கல்யாண மண்டபம் இருக்கா? ஒரே நாதஸ்வர மேள சப்தமும், பேச்சு சத்தமும் அதிகமா கேட்குது’ என்று முகம் அலம்பி, துண்டால் துடைத்து விட்டு ஹாலுக்கு வந்தான்.

   ஹால் முழுவதும் அலங்காரத்தோடு இருந்தது. மேலும் பட்டுப்புடவை வண்ண ஆடையோடு பலரும் நடமாடியிருந்தனர்.

  “யாரு நீங்களாம். கதவு திறந்து வச்சிட்டே தூங்கிட்டேனா? வீட்டை வேற அலங்காரம் பண்ணியிருக்கிங்க? இதென்ன கல்யாண வீடா?” என்று கேட்டு குழம்பினான்.

    “ஏலேய்… இடத்தை பார்த்தா எப்படியிருக்கு. மாப்பிள்ளையா லட்சணமா வந்து நிற்காம இதென்ன அரை டவுசரை போட்டுட்டு வந்து நிற்க? போ… போய்… கல்யாணத்துக்கு டிரஸை போடு” என்று ஒரு தாத்தாவின் குரல் அதிகாரமாய் ஒலித்தது.

  “என்னங்க.. பொண்ணு ஓடிப்போயிட்டாளாம். கொஞ்சம் இங்க வாங்க” என்று கிழவியின் குரல் ”என்னடி சொல்லற?” என்று ஒடிச்செல்ல தமிழ் உடம்பில் யாரோ நுழைந்து செல்வது போல இருந்தது.

  ஒரு ஆட்டம் கண்டு விழி பிதுங்கி நின்றவன், ‘என்னங்கடா இது கனவு இன்னும் கலையலையா? இந்த லட்சணத்துல பொண்ணு வேற ஒடிப்போயிடுச்சா. போறவ என்னையும் இழுத்துட்டு ஓடலாமே, போறவ என்ன இழுத்துட்டு போலம்ல கனவுல கூட வாய்க்கலைடா’ என்று இன்னும் தூக்க கலக்கத்தில் இருப்பதாகவே நினைத்தான்.

  “அய்யோ என்‌பையன் இதை தாங்க மாட்டானனே.” என்று யாரோ ஒரு ஆணை பெண் கட்டிப்பிடித்து அழவும், “ஏய்… யாருய்யா நீங்க எல்லாம்?’ என்று தலையை கோதி உதறி, கண்ணை கசக்கி கவனித்தான்.

  “இதுக்கெல்லாம் மனசு உடையாதடா. இந்த ஜென்மத்துல உன் அம்மா உனக்கு கல்யாணம் அடைந்தா தான் சாந்தியடைவேன்.’ என்று வசனம் பேச, ஏதோ பெரிய அலறல் கேட்டது.

  தமிழரசன் இரு செவிகளை தன்னிரு கையால் பொத்தி கண்களை மூடிக்கொண்டான்.‌

  பத்து நிமிடத்தில் சத்தம் குறைந்ததாக உணர இமை திறந்து, கையை எடுத்தான்.‌

  வீட்டிலிருந்த அலங்காரமும் மனிதர்களும் மாயமாக மாறியிருந்தனர்.

  ‘என்னடா இது… கல்யாண வீடு மாதிரி பரபரப்பா இருந்த மனிதர்கள் ஆளையே காணோம். இங்க எல்லாம் ஸ்டேஜ் இருந்ததே. ஐயர் மந்திரம் உச்சரித்தாரே.
   அந்த தாத்தா பாட்டி, அப்பா அம்மா யாரையும் காணலை. இதுவரை தூக்கத்துல தான் கனவு வரும். இப்ப விடிந்தும் விடியாமலையும் கனவு வருது’ என்று தலையை உலுக்கினான்.

     காபி போட பாத்திரத்தை உருட்டி வெளியேயிருந்த சேரில் நிதானமாய் அமர்ந்தான்.

    தமிழரசனுக்கு நீண்ட காலமாக இந்த ஆசை. ஓரளவு வசதி கொண்ட வீட்டில் தோட்டம் அமைத்து, வெளியே அமர்வதற்கு தோதாக இருக்கையை அமைத்து, அங்கே காலை மாலை என இரு வேளையும் காபி பருக நினைத்தான்.‌

  இத்தனை நாட்கள் அவசர கதியில் குடிப்பவனோ இன்று நிதானமாக பருகினான்.

  ‘இன்னிக்கு காய்கறி விதை கீரை எல்லாம் அமைச்சி நடணும்.
 
  சும்மா பூவும் காயும் பூத்து குலுங்க, ‘என் வீட்டு பார் என்னை பிடிக்கும்’ என்ற வாரணயிரம் படத்தை போல தன்னை மணப்பவளுக்கு தோன்றும் விதமாக பூந்தோட்டத்தை உருவாக்க வேண்டும். அப்படியே ஏதேனும் வேலை தேடவேண்டும் என்று மனதில் எண்ணினான்.

  அதோடு எப்பவும் கனவு வரும் ஒரு பொண்ணை ரசிக்க ட்ரை பண்ணுவேன். இன்னிக்கு என்ன கல்யாண மண்டபத்துல பொண்ணை காணோம்னு கனவெல்லாம் வருது?’ என்று தாடியை தேய்த்து, ‘வேலையை பாராப்போம்’ என்று ஏற்கனவேயிருந்த சிறு செடிகளுக்கு தண்ணீரை பாய்ச்சினான்.

  பிறகு அவன் வாங்கி வந்த விதைகளை பயிரிட முனைந்தான்.

  உடலெங்கும் வேர்வை அரும்பி பனியன் ஈரமானது. அதே பயிற்சியில் குளித்து முடித்து டிபன் வாங்க கடைக்கு வந்தான்.

   அங்கே பூரி ஆர்டர் தந்துவிட்டு, காத்திருக்க, ஸ்கூட்டியில் பால் ஊற்றும் பெண் வந்து சேர்ந்தாள்.

  “என்ன மலரு வரவர பால் கொண்டு வர லேட்டாகுது?” என்று கடைக்காரர் கேட்டு கொண்டே மதியம் செய்யவிருக்கும் தயிர் சாதத்திற்கு இப்பொழுதே பாலை வாங்கி வைத்தார்.

  “அப்பாவுக்கு மேலுக்கு முடியலை அண்ணா. அவரை பார்த்ததுண்டு பாலை கறந்து கொண்டா வர லேட்டாகுது.
  சாரிண்ணா இனி டைமுக்கு கொண்டா வர்றேன்.” என்றாள்.

  “சேரி சேரி… ஆஹ் மலரு அந்தா அங்கிருக்கறவருக்கு தினமும் அரை லிட்டர் பசும்பால் வேண்டும்னு கேட்டார். உனக்கு சௌகர்யம்னா கேட்டுக்கோ.” என்று தமிழரசனை சுட்டிக்காட்டினார்.

மலர் தமிழரசனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள்.

“அரை லிட்டர் பசும்பால், எவரி மார்னிங் அண்ட் ஈவினிங் வேணுமுங்க. முன்பணம் கொடுத்துடவா? இல்லை எப்படிங்க” என்று கேட்டவனை நெற்றி சுருக்கி மேலும் நக்கலாய் பார்க்க, “மலரு தம்பி கேட்குது சொல்லும் மா” என்றதும் “கொடுத்துடுவோம் அண்ணா.” என்று டீக்கடைக்காரரிடம் கூறிவிட்டு, “எந்த வீடு?” என்று தமிழிடம் கேட்டாள்.

அதற்கு டீக்கடைக்காரரோ “எல்லாம் உங்க வீட்டுக்கு பக்கத்துல தான்மா. அந்த குடோன் வீடு. பழைய வீடும் மா. தம்பி அதை வாங்கி பெயிண்ட் அடிச்சு பக்காவா மாத்திடுச்சு. பார்த்திருப்பியே.” என்றதும், ‘அந்த பழைய வீட்டை பிரிச்சி மேய்ந்தது இவன் தானா?’ என்று நீக்கலாம் பார்த்து கஷ்டப்பட்டு சிரித்தாள்.

“சரிங்க சாய்ந்திரம் கொண்டாந்துடுவேன்” என்று கூறிவிட்டு சென்றாள். வண்டியை எடுக்கும் நேரம் கண்ணாடியில் தமிழை பார்த்து, ‘ம்கூம்’ என்று சென்றாள்.

‘இருக்குற தெரிந்தவனுங்களே காசு கொடீக்காம ஏமாத்துறானுங்க. இவன் என்ன காரணத்துக்கு பாழடைந்த வீட்டை கூட்டி பெயிண்ட் அடிச்சி தங்கியிருக்கானோ? முதல்ல அட்வான்ஸ் வாங்கிட்டே பால் ஊத்தும்’ என்று சலித்து கொண்டாள் மலர்.

இங்கே நம் நாயகன் தமிழரசனோ “ஏங்க… பொண்ணா பால் ஊத்துது? வேற யாரும் இல்லையா?” என்று கேட்டான்.‌

டீக்கடைக்காரனோ, “அந்த பொண்ணோட அப்பா செந்தில் தான் இந்த ஊருக்கு பால் ஊத்திட்டு இருந்தார். இரண்டு வருஷமா கைகால் இழுத்துக்கிச்சு தம்பி. அதுலயிருந்து இந்த பொண்ணு தான் அவங்க அப்பா செய்த வேலையை அது செய்யுது. இந்த ஊர்ல தெரிந்தவங்க தானே இருக்காங்க. எல்லாம்‌ ஒரு தைரியம்‌ தான். அம்மா இல்லாத பொண்ணு வேற, ஸ்கூட்டி ஓட்டி கொண்டாந்து நேரத்துக்கு தந்துடும்.” என்று சிறு அறிமுகம் மலரை பற்றி உரைத்தார்.

“பாவம்ல” என்று உச்சுக் கொட்டினான். மதிய உணவிற்கு இப்பொழுதே சொல்லிவிட்டு சென்றான்.

வழியில் நாம் தான் யாருமில்லாது சுத்தறோம்னா, வீடு குடும்பம்னு இருந்தலும் ஒரு கட்டத்துல தனிமரமா நிற்கற சூழல் வரதான் செய்யுது. 

ம்ம்.. நல்லா தைரியமான பொண்ணு மாதிரி தான் இருக்கு. எதுக்கும் முன்பணம் வந்துடும்’ என்று பேக்கேட்டில் பர்ஸை அலசினான்.
தனியாக புதிதான வீட்டில் அடியெடுத்து இருப்பதால் கையில் காசு வைத்திருக்கவில்லை. ஏடிஎம் சென்றே பணத்தை எடுக்க வேண்டும் என்று மணியை பார்த்தான். எப்படியும் மதிய உணவு சாப்பிடும் போது பணத்தையும் எடுக்கலாம். அப்பொழுது வண்டி எடுத்துவிட வேண்டுமென்று நடந்தான்.

காலார நடந்து சென்று வீட்டுக்கு வந்தான். ஆங்காங்கே வேலி இன்னமும் சரியாக போடாததால் அதை செய்வதில் மும்முரமானான்‌.

இதே அலுவலகத்தில் வேலை செய்வதாக இருந்தால் ஐயர்ன் செய்த உடையுடன் ஏசி வசதியில் கணினி முன் இருந்திருப்பான்.  

இன்று வெயிலில் சற்று வேர்த்தது. ஆனாலும் மனதில் நிம்மதி இருந்தது.
இந்த நிம்மதி தொடர் வேண்டுமென்றால்‌ வருவாயுக்கு ஏற்றதாக ஒரு வேலையில் சேர வேண்டும்.

போனிலேயே அதற்கான தேடுதலை துவங்கும் நேரம், மேட்ரிமோனியிலிருந்து ரிசப்ஷன் பெண் அழைத்திருந்தார்.
அவளை அறிமுகப்படுத்திக் கொண்டு, “சார் நீங்க ஐடி ஜாப்ல தானே வேலை செய்யறிங்க? ஒரு முறை உங்க புரைப்பலை செக் பண்ணி தான் இந்த டீட்டெயில்” என்று ஒரு பெண் குரல்.

“இல்லைம்மா முன்ன வேலை செய்தேன். இப்ப வேலையிலிருந்து நின்றுட்டேன்.” என்று கூறினான்.
“அப்ப ஜாப் என்ற இடத்துல மாத்துங்க சார். யாராவது பொய்யான தகவல் பிராடு மாப்பகள்ளைனு என்று எங்களை புகார் தரப்போறாங்க” என்றாள்.

“ஏம்மா… நான் என் புரைப்பலை போட்டு என்‌பயோடெட்டா போட்டப்ப ஐடி இஞ்சினியர் தான். இப்ப தான் இரண்டு வாரமா வேலையை விட்டேன். இவ்வளோ நாள் இல்லாம இப்ப என்ன புதுசா? உங்க சைட்ல அப்டேடே செய்து எந்த யூஸும் வரலை தெரியுமா? இதுல நான் பிராடு பண்ணறேனா?” என்று கோபமானான்.

“முன்ன எப்படியோ உடனே உடனே அப்டேட் பண்ணுங்க. நீங்க கேட்ட விதத்துல எந்த வரனும் செட்டாகலை. அதுக்கு நாங்க என்ன செய்ய? இது ஆண் பெண் புரப்பைல் மட்டுமே பகிருர இடம். இங்க செட்டாகும்னு எந்த உத்திரவாதமும் இல்லை.” என்றாள்.

“எனக்கு செட்டாகுமா ஆகாதானு நீ சொல்லாத. உன் வேலையை பாரு.” என்று கத்தரித்தான்.

‘இந்த வாய்ஸ்.. இந்த வாய்ஸ் இதுக்கு முன்னவும் பேசியிருக்கற டோன்ல இருக்கு.’ என்று யோசித்தான்.

இவனுக்கு போன் பேசிய பெண்ணோ ‘இவன் என்ன எப்பவும் இதே போன்ல தான் பேசுவானா? கடவுளே. இதுல வேற…’ என்று நினைத்தவளை அடுத்து வார்த்தை உதிர்க்கும் முன் தொப்பென்று சத்தம் கேட்க, ‘அச்சோ’ என்று ஓடினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

4 thoughts on “அலப்பறை கல்யாணம்-4”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 4)

    அச்சோ பாவம் தமிழரசன்….! மழை விட்டும் தூவானம் விடலைங்கிற கதையா….
    ஐடி ஜாப் இருக்கிறச்ச தான் அந்த பொண்ணோட லொள்ளு தர்பார் தாங்க முடியலைன்னா, இப்ப வேலையை விட்ட பிறகும் இவளோட லொள்ளு தாங்கலையே…. இது என்ன கொடுமை டா..!

    ஒருவேளை, இந்த பால் ஊத்துற பொண்ணுத்தான் இவனுக்கு
    வாக்கப்பட வாய்ப்பு இருக்குதோ…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Wow super epi. Ena da kanavu iniku ippadi vanthuduchi nalla vishayama kamichi aduthu ippadi odi poitale antha ponnu cha. Vidu Tamil unaku oru ponnu irupa athu oru Vela intha malar ponna irukumo🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *