Skip to content
Home » ஆலகால விஷம்-5

ஆலகால விஷம்-5

அத்தியாயம் -5

    சாஹிர் மீது நீஷாவுக்கு கோபமாய் இருந்தது. 

   இங்கு வந்ததும் வீட்டுக்கு போகும் ஆவலில் நேராக வாடகை கார் எடுத்துக்கொண்டது எல்லாம் சரிதான்.
   ஒருவேளை நீஷா வீட்டில் ஆட்கள் இருந்து, அவளை வரவேற்று காணாமல் போனவள் கிடைத்த சந்தோஷத்திலும் அங்கே தங்க கூறுவார்கள். பிறகு நேரம் கிடைக்கும் தருணம் தான் நீஷாவை காதலித்து மணப்பதாக கூறிடலாமென்ற கணக்கில் இருந்தான்.

  அங்கு யாருமின்றி வீடும் பாழடைந்து கிடக்க, புதரும் செடி கொடியை பார்த்தது தான்‌ மிச்சம். இதில் கையில் முள் கீறி ரத்தம் வரவும் அதை பெரிதாக எண்ணாமல் மகிழ் வீட்டுக்கு போகலாமென்றதும் எரிச்சலடைந்தான் சாஹிர்.

  சாஹிருக்கு மகிழ் என்பது பெண் என்ற எண்ணமிருந்தது. தற்போது பையன் என்றதும் அலட்சியம்.

   நிதானமாக ஹோட்டலில் ரூம் போட்டு குளித்து முடித்து தேடி செல்வோமென திட்டவட்டமாய் உரைத்தான்.

   அது தான் நீஷாவிற்கு சாஹிர் மீது கோபம்.‌

   “போய் குளி” என்றான்.

  நீஷா மெத்தையில் அதிருப்தியை காட்டி எரிச்சலோடு வீற்றிருந்தாள்.

   சாஹிர் அவளை குண்டு கட்டாக தூக்கி குளியலறைக்கு சென்றான்.

   “சாஹிர் எனக்கு இது பிடிக்கலை. கீழே இறக்கி விடு. சாஹிர்..” என்ற கத்தலை பொருட்படுத்தாமல் ஷவரில் அவளை நிறுத்தி, அவள் அனுமதியின்றி ஆடையை களைந்தான்.

   நீஷாவுக்கு பொறுமை பறந்தோட, அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.

   “என் அனுமதி இல்லாம என்னை யார் தொட்டாலும் எனக்கு பிடிக்காது” என்றாள் கோபமாக.

   சாஹிர் அவளை ஏறயிறங்க பார்த்து கதவை பட்டென சாற்றி வெளியேறியிருந்தான். நீஷா இப்படி முரண்டு பிடிப்பது இதுவே முதல் முறையென்ற ஆச்சரியம்.

   நீஷா நெடுநேரம் ஷவரில் நின்றாள்.
   ஒவ்வொரு நீர்த்துளியும் அவளது உடலை நனைத்தது.

   முடிவெடுத்தவளாக அத்தை வீடு தேடி சென்று மகிழை தூரயிருந்து பார்த்துவிட வேண்டும். சாஹிர்‌ மூலமாக தந்தையின் இருப்பிடத்தை யாரோ ஒருவர் போல கேட்டு வருணியை கண்குளிர பார்த்துவிட்டு மும்பைக்கு கிளம்ப வேண்டும்’ என்று மனதிற்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்தி கொண்டாள்.
  
   ஒரு வெள்ளை டவலை கட்டிக்கொண்டு, வெளியே வந்தப்போது போனில் ஆர்டர் தந்த உணவுவோடு வெயிட்டர் பரிமாற, சாஹிர் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

   வெயிட்டருக்கு தான் நீஷாவின் வருகை ஜாக்பாட் எனலாம்.‌ ஒரு பெண் குளித்து டவலை மட்டும் சுற்றிக்கொண்டு வந்தால் கண்கள் பூத்திடாதா?

சாஹிரும் வெயிட்டரை போக கூறவில்லை ஏன்‌ பதறவுமில்லை. நீஷாவுக்குமே வெயிட்டர் இருப்பதை கண்டுகொள்ளவில்லை. எத்தனை ஆண்கள் பார்வை அவளது அங்கங்களை அலசாமல் இல்லையே. அப்படி தான் சாதாரணமாய் எடுத்து கொண்டாள். அதனால் அணிவதற்கு உடையை எடுத்தாள்.

   வெயிட்டர் இருப்பதெல்லாம் பொருட்படுத்தாமல் மறைவுக்கு இருந்த ஸ்கிரினை நகர்த்தி, தடுப்புக்கு மறுபக்கம் உடை மாற்றினாள்.

  அந்த ஸ்கிரினை தாண்டி நீஷாவின் வளைவு நெளிவு நிழலாய் தெரிந்தது.

   வெயிட்டர் கவனம் அந்த நிழல் உருவமாக இருந்த நீஷாவின் மேனியில் இருந்தது. அவள் உள்ளாடை அணிந்து கொக்கியை மாட்டியதிலிருந்து, பெயருக்கு மெல்லிய ஆடையை, இரண்டு நொடிக்கு குறைவாக அணிந்து வந்தாள். அதுவும் பார்க்க கிளாமராக இருந்தது.

தட்டில் ரொட்டி உணவை வைத்துவிட்டு, “சாம்பார், தயிர் சாதம் எதுவும் இல்லையா?” என்று கேட்டாள்.
 
  “சார் ஆர்டர் பண்ணியதை கொண்டு வந்தேன் மேடம்.” என்று வெயிட்டர் கூறவும், வேண்டா வெறுப்பாய் வயிற்றுக்கு தள்ளினாள்.

  சாஹிர் உணவுக்கு பணத்தை தர பெற்றுக்கொண்டு தட்டு கிண்ணம் தண்ணீர் குவளை எல்லாம் தள்ளும் விசை வண்டியில் எடுத்து சென்றான். சாஹிரால் டிப்ஸாக பணத்தை பெற்றாலும் அந்த ரூம்பாயிற்கு இன்றைய நீஷாவின் தரிசனம் தான் ஹைலைட்.

 அவன் சென்றதும் சாஹிர் நீஷாவிடம் “என் மேல கோபமா?” என்று கேட்டிட, நீஷா பதில் அளிக்கவில்லை.

   வெயிட்டரும் சென்றப்பின் அவளை முழுவதும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினான்.

   பெரும்பாலும் மெத்தையில் பிடித்தமோ பிடிக்காமலோ நீஷாவுக்கு கலவியல் நடப்பதுண்டு. அதனால் சாஹிர் செய்த சமாதானம்‌ அப்பொழுது பிடித்தமின்றி நடைப்பெற்றது. நீஷாவிற்கு இவனின் உதவி தற்போது தேவையானதால் கடனேயென கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
  
   சாஹிரை பொறுத்தவரை சமாதானம் நடந்து முடிந்தது. நீஷாவை பொறுத்தவரை உள்மனதில் கனல் கொதித்திருந்தது.

     மாலை நேரம் மகிழன் வீட்டு வாசலில் காரை நிறுத்தினார்கள்.
  
    சற்று தொலைவிலிருந்து இருவரும் வீட்டை நோட்டமிட்டனர்.

   ஷீலா மற்றும் நடராஜன் தலைகள் நடமாட்டமிருந்தது. மகிழனை காணவில்லை.

    “உன் அத்தை மாமா தானே?” என்று கேட்டான்.‌

    “ம்ம்ம்” என்று நகம் கடித்தாள்.   

   “போய் பேசலாமே. அப்பா அம்மாவை எங்கன்னு கேட்கலாம். ஏன் இப்படி தூரத்துலயிருந்து அவங்களை  பார்க்கற?” என்று சாஹிர் கேட்டதற்கு, “எனக்கு எங்கத்தை மாமாவை பிடிக்காது. அத்தைக்கு வருணி தான் பேரழகி. நான் அதிர்ஷ்டமில்லாதவ. மாமாவுக்கு ஆண் பிள்ளைங்க தான் பிடிக்கும். நான் எல்லாம் தண்டம் என்பது போல பார்க்கலாம்” என்று பதில் தந்து வாசலை கவனித்தாள்‌.

   சாஹிரோ அதற்கு மேல் அழுத்தி  கூறவில்லை. அவனுக்கு தேவையில்லாத விஷயம் இது.

       அப்பொழுது இருசக்கர வாகனத்தில் தென்னிந்திய ஆண்களின் நிறத்திற்கு சற்று கூடுதலான நிறத்தில், ஆறடிக்கு சாஹிருக்கு நிகரான உயரத்தில் திண்ம தோளுடன் மகிழன் வந்தான்.

    அவன் பைக்கில் சிக்கென்று‌ தைக்கப்பட்ட சுடிதார் அணிந்து வருணி இறங்கினாள்.‌

    நீஷாவுக்கு கலவையான மாற்றம் நிகழ்ந்தது.

உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.
   மகிழன் வண்டியை நிறுத்திவிட்டு வருணி இடையில் கையை போட, அவள் அவசரமாய் தட்டிவிட்டாள். ‘அவனோ இப்படி தட்டினா எப்படி?’ என்று கையை பிடித்தான்.

   வருணியோ “இப்படி கல்யாணத்துக்கு முன்ன தொட்டு தொட்டு பேசினிங்க. கல்யாணத்தை நிறுத்திடுவேன் மகிழ் அத்தான். அப்பா உங்களை திட்ட மாட்டார். இதெல்லாம் பார்த்தா என்னை திட்டுவார்.” என்றாள்.

   மகிழோ தலைக்கு மேல் கையை உயர்த்தி வணங்கி “வீட்டுக்கு வா தெய்வமே நிச்சயதார்த்த ஆல்பம் வந்ததா அப்பா சொன்னார். இங்க உங்கப்பா இல்லைன்னாலும் எப்பப்பாரு அப்பா புராணம்” என்று அழைக்க வீட்டுக்கு சென்றனர்.

   “உ…உன்.. உன் தங்கச்சியா?” என்று சாஹிர் கேட்க, ”ம்ம்” என்றாள்.

   “பெயர் என்ன சொன்ன?” என்று கேட்டவனின் குரல் மாறுபாட்டை நீஷா அறியவில்லை.

   “மகிழன்-வருணிகாவுக்கு கல்யாணமா?” என்ற நீஷாவின் மெல்லிய முனங்கல் சத்தமும் சாஹிருக்கு கேட்கவில்லை.

  சாஹிரோ “வருணிகா” என்றவன் உச்சரித்து பார்த்தான்.

  பெயரே போதையுண்டாக்கியது. வருணிகாவின் பெயர் மட்டுமில்லை, நீண்ட கூந்தல், கண்மை, நெற்றியில் நேர் உச்சியெடுத்து, தலைபின்னி, மூன்று முழம் மல்லிப்பூ, கைகளில் வாட்ச் போடாமல் தவிர்த்து, இரண்டு பக்கமும் அரை டஜன் வளையல் என்று இன்னிசையாக சப்தம் கொடுத்தது. வளையல் சத்தமும் கொலுசு இசையுமே போதையுண்டாக்க சாஹிர் இதயம் அவளிடம் விழமுற்பட்டது.

  அதிலும் அவளது சிரிப்பு மகிழனை செல்லமாய் மிரட்டிய விதமென சாஹிர் இதயத்தில் கேமிரா இல்லாமலே, அப்படியே காட்சிகள் பதிவானது.

   நீஷாவுக்கும் அவ்வாறு தோன்றியதோ என்னவோ? இமை கொட்டாமல் அதிர்ச்சியில் இருந்தாள்.

    சற்று நேரம் பிரம்மை பிடித்தது போல பலத்த அமைதி. வீட்டிலிருந்து போட்டோ ஸ்டியோ ஆள் வெளியேறவும், நினைவிலிருந்து கவனம் களைந்து, அவனை பின் தொடர கூறினாள்.

   “உன் தங்கச்சியை விட்டுட்டு போட்டோக்காரனை எதுக்கு பாலோவ் பண்ணணும்?” என்ற சாஹிர் வினாவுக்கு “சொல்லறேன்” என்று மட்டும் பதிலளித்தாள்.

    வருணிகா அவ்விடம் இருப்பதால் ஏதோ உயிரை விட்டுவிட்டு செல்வதாக இருவரின் நிலையிருக்க, போட்டோகிராப்பர் கடைக்கு வந்தார்கள்.

   “என்ன பிளான்?” என்று கேட்டான் சாஹிர். நீஷா தான் “கொஞ்ச நேரம் சும்மாயிரு சாஹிர்” என்று கட்டளையிட்டு விட்டாளே.

    “நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்.” என்றாள். அடுத்து அவள் பேசும் முன் “இப்பவா? நோ” என்றான்.‌இங்கு வரும் முன் எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம் என்றவன் தற்போது பேசியதை உன்னிப்பாக கவனிக்கவில்லை‌.

   “இப்ப கல்யாணம் பண்ணலை. பிளானை சொல்லறேன் கேளு.” என்று கூறத் துவங்கினாள்.‌

    ‘நமக்கு கல்யாணம் ஆகப்போகுது. அதுக்கு போட்டோக்கிராப்பர் புக் பண்ண வந்திருக்கோம்‌ ரீசண்டா மகேஸ்வரன் வீட்டு நிச்சயதார்த்த போட்டோ எடுத்திங்களாம். சாம்பிளுக்கு அதை பார்க்கலாமானு கேட்டு சிஸ்டத்துல இருக்குற போட்டோவை பார்க்கறோம். எப்படியும் ஒரு காபி சிஸ்டம்ல ஸ்டியோவில் இருக்கும்‌.
அதை பார்த்துட்டு, மீதி ஹோட்டலுக்கு போய் சொல்லறேன்.

      “மகேஸ்வரன் யாரு?” என்று சந்தேகத்தை கேட்டான் சாஹிர்.

  “ம்ம்ம்ம்… எங்கப்பன் பெயர்” என்று சலிக்க, “ஓ. ஓகே” என்று முடித்துக் கொண்டான்.

    அவனுக்கும் வருணியை நெருக்கத்தில் பார்க்க ஆசைக்கொண்டது மனம். போட்டோ கிடைத்தால் நல்லதே. இருவரும் போட்டோ கடைக்கு வந்தப்போது திட்டமிட்டபடியே கேட்டனர்.

   போட்டோக்காரனும் வரப்போகும் ஆர்டர் என்று முடிவுக்கட்டி நிச்சயதார்த்த புகைப்படத்தை கணினியில் இருந்ததை காட்டினார்.

   வநீஷா சாஹிர் இருவரின் கண்களில் பாம்பின் நஞ்சு உட்புகுந்தது.

    ஒவ்வொரு புகைப்படத்திலும் வருணிகா மகிழனை கண்டு நாணத்துடன் நிற்பதை கண்டு சாஹிருக்கு கிறக்கம் பிறந்தது என்றால் நீஷாவுக்கு வெறியேறியது.‌

   மகிழன் போட்டுவிட்ட மோதிரம் விலை மதிப்பு மிக்கதாக தெரிய, அந்த நேரம் மட்டும் போட்டோக்காரன் இல்லையென்றால் அந்த கணிணியை போட்டு உடைத்து பஸ்பமாக்கியிருப்பாள்.

   இதில் மகேஸ்வரன் ரேணுகாவின் ஆசிர்வாதம், குடும்ப புகைப்படம் என்று அனைத்தையும் பார்க்க பாம்பின் நஞ்சு இதயத்தில் மெல்ல சுரக்க ஆரம்பித்தது.

‌  “தேங்க்ஸ்ங்க.. போட்டோ எடுத்த விதம் ரொம்ப அருமையா இருக்கு. குயிக்கா எங்க கல்யாணத்துக்கு நீங்க தான் போட்டோ எடுப்பிங்க. இந்த மோதிரம் அழகாயிருக்கு. இதை போலவே ஆர்டர் தரலாம்னு இருக்கேன். இந்த போட்டோவை ஒரு க்ளிக் எடுத்துக்கறேன்” என்று பேசி மகிழன்-வருணிகா இருவரும் மோதிரம் போட்ட போட்டோவை இவர்கள் போனில் ஒரு ‘க்ளிக்’ எடுத்து அங்கிருந்து நழுவினார்கள்.

  கடைக்காரன் அப்படியும் விடாமல் அவரது விசிட்டிங் கார்டை தர, சாஹிர் பெற்று கொண்டு தன் பேண்டில் திணித்து கொண்டான்.

   தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்ததும் சாஹிர் நீஷாவிடம், “ஏன் நீயா முன்ன போய் உன் தங்கையிடம் பேசலை?” என்று சந்தேகத்தை கேட்டான். இங்கு வந்ததிலிருந்து இந்த சந்தேகம் உண்டு. கேட்டால் மௌனம் சாதிக்கும் நீஷாவிடம் இன்று பதில் சொல்லியே ஆகவேண்டுமென்று நின்றான்.

   “சாஹிர்… நீயே பார்த்தியே. நான் இல்லைன்னா கூட எங்க வீட்ல ஒரு கவலையும் இல்லை. அப்படியிருக்க நான் முன்ன போய் நின்றா எப்படி ஏத்துப்பாங்க?” என்று எரிச்சலாய் மொழிந்தாள்.

    “ஏன் ஏற்றுக்க மாட்டாங்க? நீ காணாம போய் கிடைச்சா சந்தோஷப்பட மாட்டாங்களா?” என்று விடாது துரத்தி முன்னே வந்தான்.

   “மாட்டாங்க… ஏத்துக்க மாட்டாங்க… நான் என்ன இப்பவும் அவங்க பொண்ணா? வருணிக்கு அக்காவா? இல்லையே…

    நான் ஒரு தே…..யா

  மும்பை மாநகரத்துல எனக்குன்னு மவுஸ் இருக்கு. நான் ஒரு செ….ஸ் ஓர்க்கர்.
  
   இந்த ஒன்பது வருஷத்துல என்னோட படுத்தவங்க எத்தனை பேர்?

  இதெல்லாம் வருணிக்கு தெரிந்தா என்னை ஏத்துப்பாளா?” என்று உரைத்ததும் சாஹிருக்கு புரிய துவங்கியது.

  அவன் சிந்தனை எங்கெங்கோ செல்ல, “அதோட இப்ப நேர்ல போனேன் வருணி மேரேஜ் நின்றிடும். அக்கா இருக்கறப்ப தங்கைக்கு கல்யாணம் நடக்குமா? வருணிக்கு நிச்சயம் நடந்த இடம் எங்க சொந்த அத்தை மாமா‌.

   எனக்காக வருணி மேரேஜ் நின்று என்னை அங்க நிறுத்தினா? நீ தான் தேவதாஸாகணும். நான் மகிழனை கட்டிப்பேன். எனக்கு அவன் அத்தை பையன்.” என்றதும், சாஹிருக்கோ ‘அப்படி செய்தா அந்த பையனோட நீஷாவுக்கு கல்யாணமானா வருணியை நான்..’ என்றவன் எண்ணவோட்டம் தறிக்கெட்டு ஓடியது.

   ‘நோ சாஹிர். நீஷாவுக்காக இரண்டு  வருஷம் பின்னாடி சுத்திட்டு இருக்கோம். இப்ப மட்டும் வருணின்னு பாய்ந்தா, நீஷா என்னை தலைமுழ்கிடுவா. அதோட நம்ம என்ன தொழில் செய்யறோம், எப்படிபட்டவன், எத்தனை பொண்ணுக்கூட போனதெல்லாம் நீஷா வருணிக்கிட்ட சொன்னா அந்த பொண்ணு ஏத்துக்காது. நமக்கு நீஷாவே போதும்.’ என்று தேற்றிக்கொண்டான்.

   ”சரி அதுக்கு என்ன பண்ணப்போற?” என்றான்.

   கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையுடன் நின்றான்.

    கொஞ்ச நாள் வருணியை பாலோவ் பண்ணலாம். ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்தா பேசி பார்க்கலாம்.
   இல்லைனா மும்பை ரிட்டர்ன் போயிடலாம். என்னால யாரும் கஷ்டப்பட வேண்டாம்.

  சாஹிர் பணம் வச்சியிருக்கியா? இரண்டு வாரம் இங்க தங்கறதுக்கு?” என்று கேட்டாள்.

   ”அதெல்லாம் சேர்த்து வச்சதுல எடுத்துட்டு வந்தேன்‌.” என்றான்.

  “இல்லைன்னா கூட என்னை வச்சி பணம் பார்த்துடலாம். ஏதும் பிரச்சனையில்லை” என்றவளின் பேச்சு முதல் முறை கசந்தது.

  ‘திருமணம் என்றால் மட்டும் ஆணுக்கு ஒழுக்கமான பெண் தேவை’ என்றது போல சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது சாஹிரின் மனசாட்சி.

    இதே மும்பையில் அவர்கள் வாழ்ந்த இடமென்றால் தோன்றியிருக்காதோ என்னவோ, இங்கு காரை வாடகைக்கு எடுக்க, கார் ஓட்டும் மனிதன், தங்குமிடத்தில் தங்களுக்கு உணவை எடுத்து வரும் ஆண், ரிசப்ஷனில் இவர்களுக்கு தரும் மரியாதை.
   அதை விட முக்கியம் முதல் முறையாக அவனுக்கு பிடித்த முக அழகோடு, பெண்ணின் அம்சங்களாக காலம் காலமாக கூறப்பட்ட பண்பு நலனோடு கண்ட வருணிகாவை, இதயம் தடுத்தும் கண்கள் போட்டி போட்டுக்கொண்டு  பார்வையிட்டவனுக்கு வருணியை மணந்தாளென்ன? என்ற விபரீத ஆசை‌ப்பதிந்தது.

   இங்கு நீஷாவிடம் காதலிப்பதாக கூறி மணக்க கேட்டு தற்போது மலரை விட்டு மலரை தாவினால்? வநீஷாவின் அவதாரம் என்னவோ?

    இங்கு சாஹிர் நினைப்பதற்கு சற்றும் குறையாமல் ‘மகிழ் நீ வருணியை மணக்க கூடாது’ என்று நினைத்தாள் நீஷா.

     -தொடரும்..
 
 

  
  

5 thoughts on “ஆலகால விஷம்-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *