Skip to content
Home » இதயத்திருடா-20

இதயத்திருடா-20

இதயத்திருடா-20

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

      நந்தவனம் அப்பார்ட்மெண்ட் இடம் வந்ததும் கார் நிற்க பின்னால் வந்த மாறன் தயங்கியபடி வண்டியை நிறுத்தினான்.

    இங்கேயே பார்க் பண்ணிக்கலாம் சார்.” என்று டிரைவர் கூறவும் ஆமோதிப்பாய் தலையாட்டினான்.

     அப்பார்ட்மெண்ட் சிசிடிவி கேமிராவும் உள்ளே வர செக்கியூரிட்டியின் அனுமதி கார்டை வைத்து எடுக்கும் விதிமுறை இருக்கவே உள்ளே வந்ததும் கதவு தாழிட்டதை கண்டான்.

     “இருபது வீடு இருக்கு சார். இருபது வீட்டு ஆட்களுக்குமே ஒரு கதவை திறக்கற மிஷின் கார்டு இருக்கு. ஆனாலும் செக்கியூரிட்டி தான் அதிகமா பார்த்துக்கறது. அதோ நடுவுல கட்டியிருக்குற பில்டிங்,  விழா நடக்கவும், ஜிம், கிட்ஸ் கார்டன் இருக்கும்.

    இது நம்ம நித்திஷ் ஐயா முன்ன வாழ்ந்த வீடு. கொஞ்சம் பழைய பில்டிங். ஆல்டரேஷன் எல்லாம் பண்ணி மாடலா மாத்தலாம்னு கூட இருந்தார். மேடம் இரண்டு பேரும் சின்னதுல இருந்து வாழ்ந்த இடம் அதனால எதையும் மாத்த வேண்டாம்னு சொல்லிட்டார்.

    அடுத்த அபார்ட்மெண்ட் கூட ஒன்னு இருக்கு. அது ப்ரனித் சாருது. மாடலா மாற்றி இருக்கார். அதுவும் பூட்டி தான் இருக்கு. இங்க வர்றப்ப தங்குவாங்க. எங்க இப்ப எல்லாம் வரவே முடிய மாட்டேங்குது. நித்திஷ் சார் மட்டும் வாரம் ஒருமுறை இல்லை மாசம் இரண்டு முறை வருவார். டீ போட்டு குடிப்பார். அதோட சில நேரம் சமைச்சி சாப்பிடுவார் கதை எழுதிட்டு தூங்குவார்” என்றார்  டிரைவர்.

     கதவை திறந்து பார்க்க வீடு ஆள் புழக்கம் இருப்பதை காட்டியது.

     கொண்டு வந்த உடையை டிரைவர் வலது பக்க அறையில் வைத்து விட்டு வர்றேன் சார்” என்று கூறினார்.

    மெத்தையில் ‘தொப்’பென படுத்தான். மஹா காட்டிய நபர் சரத். சரத் இறந்துவிட்டான். பொட்டலாம் டன் கணக்கிலும் இல்லை. அதனால் அதை தேடி யாரும் வரப்போவதில்லை.

      நற்பவியை தேடி கொல்ல முயற்சிக்கலாம். ஆனால் அவளோடு அங்கே வீட்டில் இருந்தால் நித்திஷ் சாரை காணும் போதெல்லாம் உறுத்துகிறது.

    தன்னை கொலை பண்ண வர காரணம் இல்லை. ஒரு வேளை வருவார்களா?” என்று முழித்தான்.

    வீட்டின் ஜன்னலை திறந்து மெயின் கதவை பார்த்தான். கதவை மூடியபடியே செக்கியூரிட்டி ஒரு சின்ன தடும்பிலேயே பேசி அனுப்புவதை கண்டான்.

    கேஸ் எடுத்து வருபவனை பார்த்து ஏதோவொரு வீட்டிற்கு கால் செய்து ஊர்ஜிதப்படுத்தி கொண்டு திறப்பதை கண்டான்.

    வெளியே செல்பவரை மட்டும் கேள்விக் கேட்காமல் அனுப்புவதை அறிந்தான்.

    ஆக இங்கே ஒருவரும் உள்ளே வருவதற்கும் வாய்ப்புகள் இல்லை. நித்திஷ் சாரின் தன்னை பாதுகாப்பதாக எடுத்து கொள்வதா? என்றதும் சிறுமுறுவல் உதிர்த்தது.
  
   அந்த கண்ணீரிலும் முறுவல்?

    பொண்ணை கட்டிக் கொடுக்க யோசிக்கிறார். ஆனா பொண்ணு காதலிச்ச என்னை, எனக்கு எதுவும் ஆகக்கூடாதுனும் யோசிக்கிறார் இந்த மனுஷனை புரிஞ்சிக்கவே முடியலை.

    நற்பவியிடமிருந்து போன் வரவும் எடுத்தான்.

    “சொல்லுமா?” என்றான் மதிமாறன்.

     “வீடு..” பிடிச்சிருக்காயென்று கேட்க வந்தவள் அவன் இருக்கும் சூழ்நிலையால் தொண்டை அடைத்து, “தனியா இருக்க கஷ்டமாயிருக்கா மாறா” என்றாள்.

       “சேசே.. இல்லைமா. எனக்கிந்த தனிமை வேண்டும். ஆக்சுவலி…. என்னவோ அங்க இயல்பா இருக்க முடியலை. இங்க இப்ப ப்ரியா இருக்கேன்.

   சத்தம் போட்டு அழ முடியுது. மறைஞ்சி மறைஞ்சி கண்ணிரை துடைக்க வேண்டியதில்லை. நான் மட்டும் தான் அதனால முடிஞ்சளவு அழுது என் கவலையை புதைக்கிறேன்.
 
     அக்கா மாமா கஷ்டபடாம போய் சேர்ந்ததுக்கு கடவுள் நன்றி சொன்னேன். அட்லிஸ்ட் அவங்க இறக்கறதுக்கு முன்னயே உன்னை எனக்கானவளா அறிமுகப்படுத்தி ஆசைத்தீர அவங்களோட சேர்ந்து உட்கார்ந்து சமைச்சி சாப்பிட்டு தனியா தனிமரமா இல்லைனு காமிச்சு நிம்மதியை தந்துட்டேன்” என்றவன் குரல் சற்று மாறியிருந்தது.

     “மாறா… ஆர் யூ ஓகே.” என்றான்.

     “யா… ஓகே. இப்ப என்னை நானே தேற்றிக்கிட்டேன்” என்றான் கரகரப்பான குரலில்.

     “ஏன் மாறா உன்னை தேற்ற நான் இல்லையா.” என்றாள் நற்பவி வலியோடு.

   “அப்படியில்லைமா.. என்ன தான் நீ தேற்றினாலும் என் மனசுனு ஒன்னு அதை அக்சப்ட் பண்ணணும். இப்ப தான் ப்ரிப்பராகிக்கறேன்.” என்றான்.

     “அம்மா அப்பாவோட போஸ்ட்மார்ட்டம் ரிசல்ட் வந்துடுச்சு. பால்ல விஷம் கலந்து செத்து இருக்காங்க.” என்றாள் பவி.

    “அது தான் உங்க அக்காவே பைண்ட் பண்ணி சொன்னாங்களே.” என்றான்.

     “மாறா சரத் போன்ல எந்த டீட்டெயிலும் இல்லை. எல்லா கதவும் அடச்சிகிடக்கு.” என்றாள்.

     “ஏதாவது ஒரு ஜன்னல் திறந்திருக்கும்” என்றவன் பேச்சு நற்பவியை குழப்ப, “மாறா… கேட்கறேன்னு தப்பா நினைக்காத. அவனோட ரிலேட்டிவ் பிரெண்ட்ஸ் எதுவும் தெரியுமா?” என்று கேட்டு விட்டாள்.

   எங்கே போலீஸ் தானடி நீ என்ற ஏளனம் அவன் பேசிடுவானோ என்ற பயமும், காதலில் விரிசல் வந்துடுமோ என்ற சஞ்சலம் அதிகமாகே பேச்சில் தெரிந்தது.

    “தெரியாது பவி. ரோட்டில ஒரு நாள் புக்கை தூக்கிப்போட்டு அழுதுட்டு இருந்தான். அப்ப என்ன ஏதுனு கேட்டு வேலைக்கு சேர்த்தது. அப்பா அம்மா இல்லைனு தான் சொன்னான். பிரெண்ட் யாராவது காலேஜில இருக்காங்களானு தெரியலை.” என்று கூறினான் மாறன்.

     “பவி.. லாக்கப் டெத் என்னாச்சு. உன் நிலை என்னனு கேட்கவேயில்லை.” என்று அக்கா மாமா இறப்பை தவிர்த்து பவிக்கான நிலையை கேட்டான்.

    “தெரியலை மாறா. அங்கிள் நான் பார்த்துக்கறேன் சொன்னார். என்னப் பண்ண போறாருனு தெரியலை. வெளியே வராதா, நான் பேசிட்டு சால்வ் பண்ணிட்டு சொல்றேன்னார். அதுவரை பிரஸ் மீட் பண்ண வேண்டாம்னு மட்டும் சொன்னார்.” என்றாள்.
   
    “ம்ம்” என்றான்.

     “சாப்பாடு கொடுத்து விடறேன் மாறா” என்று கூறினாள்.

     “நான் சமைச்சிப்பேனே.” என்றான்.

    “நீ சமைக்காம சாப்பிடாம தூங்கிட்டா.” என்று கூறவும், “சரி கொடுத்து விடு” என்றான்.

     போனை வெறித்தவன் கல் போல் இருந்தான்.
 
    ‘சரத் உன்னை தேடி யாரு வருவா யார் வரமாட்டானு எனக்கு தெரியும் டா. இத்தனை நாள் நீ ஜஸ்ட் பேரர் என்றதோட கடந்துட்டேன். நீ இப்ப உஷாராகி உன் பிரெண்ட்ஸ் அல்லக்கைகளை பார்க்காம இருக்கலாம். ஆனா நீ இதுக்கு முன்ன யாரிடம் பழகின என்று எனக்கு தெரியும் டா. என் கடை சிசிடிவி கேமிராவுல ஒரு முறை உன் பிரெண்ட்ஸ் எல்லாம் வந்து சாப்பிட்டு இருக்காங்க.

     அந்த டேட் அண்ட் டைம் கண்டுபிடிச்சி தேடி போவேன்.’  என்றவன் வெறிப்பிடித்தவன் போன்று நின்றிருந்தான். அங்கு சிசிடிவி இருப்பதே யாருக்கும் தெரியாது.

இது மாறன் ஆறு மாதம் முன்பே வடிவமைத்தது. எப்பொழுது மேலே ஏசியாக மாற்றினானே அப்பொழுதே வைக்கப்பட்டது.

    அதனால் சரத்தினை சந்தித்தவர்களை தேடி கண்டறிந்து எவன் எப்படிப்பட்டவனென ஒரு கை பார்த்திட முனைந்தான்.

    மதுவந்தி இறந்தப்பொழுது இருந்த மனநிலையை ஒத்து இருந்தான்.

       நேரங்கள் கடக்க, அழைப்பு மணி கேட்டதும் எழுந்து வந்தான். எப்படியும் டிரைவர் அல்லது நற்பவி வருவார்களோ என்று எண்ணி கதவை திறக்க அங்கே நித்திஷ் இருந்தார்.

     கதவை திறந்தவன் தலைகுனிந்தவாறு வழிவிட்டான். அவனின் பார்வை நற்பவியை தேடியது.

    “என் மகள் இப்ப வரமாட்டா.” என்று நித்திஷ் கூறவும், கதவடைத்தான்.

      “உனக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். முதல்ல சாப்பிடு” என்றவர் தட்டை வைத்து பரிமாறினார்.

     “நீங்க சார்?” என்றான்.

     “சமைக்கறது ஒரு கலை. அந்த கலையில முதல் விஷயம் பரிமாறறது. நாம செய்ததை பரிமாறி மத்தவங்க சாப்பிட்டு ருசிக்கறதை பார்க்கறது தான் சமையல் கலை நிபுணருக்கு அழகு.” என்றதும் மெதுவாய் மாறன் பேசாமல் சாப்பிட்டான்.

     ஒரளவு கொண்டு வந்ததை சரியாய் வைக்க விழுங்கினான்.

       சாம்பார் முடித்து ரசம் வைத்து அடுத்து தயிர் சாதம் வைக்க, அங்கிள் போதும்” என்ற கணம், “என் மக நற்பவி சொன்னா… அப்பா உங்களை மாதிரியே மாறனும் தயிர் சாதம் செய்வாருனு.” என்றதும் மதிமாறன் அடுத்து என்ன பேசுவாரென புரிந்தவனாய் சாப்பிட்டு கை அலம்பினான்.

     அவன் கைத்துடைக்கவும், நித்திஷ் அவருக்கான உணவை வேறு தட்டில் வைத்து அமர்ந்தார்.

   “சீரக மிட்டாய்” என்று கிஸ்மிஸ்ஸோடு இருந்தவையை நீட்டினார்.

    அதனை எடுக்க போனவன் வேண்டாமென மறுத்து அமர்ந்தான்.

     “என் பொண்ணுனு தெரிந்து தான் காதலிச்சியா? இல்லை காதலிச்சப் பிறகு தெரியுமா?” என்றார் நித்திஷ் வாசுதேவன்.

     “முதல்ல மீட் பண்ணினப்ப தெரியாது. அப்பா அம்மா பத்தி சொல்லறப்ப சொன்னா. அப்பவே யார் பொண்ணுனு தெரிந்துச்சுக்கிட்டேன்.

     ஆனா அப்ப லவ் பண்ணலை. ஆக்சுவலி அவ பண்ணிடக்கூடாதுனு தான் ஊர்லயிருந்து அவளை இக்னோர் செய்து வந்தேன். என்னை மறந்துடுவானு பார்த்தேன். ஆனா இங்க வரை தேடி வந்துட்டா.

   அவளை பிடிச்சது. ஆனா உங்க பொண்ணு என்ற அர்த்தத்துல. ஆனா அவளுக்கு அடிப்பட்டதும் என்னால ஏற்றுக்க முடியலை. காதலை
வெளிப்படுத்திட்டேன்.” என்று கூறவும் சாப்பாட்டில் கையை பிசைந்தவர் “நான் அவ லவ்வுக்கு சாப்போர்ட் பண்ணலை.” என்றார்.

     “நீங்க என்னை ஏற்கவும் மாட்டிங்கனும்…. அட்த சேம் உங்க பொண்ணு என்னை விட்டு ஒதுங்கவும் மாட்டானும் தெரியும்.

      “என்னை பிடிக்காதவர் எதுக்கு இந்த பாதுகாப்பு? எனக்கு பிடிக்கலை. தயவுசெய்து நான் வேற இடத்துல தங்கிக்கறேன். நீங்க என்ன சேஃபா அடைச்சி வைக்க பார்க்கறிங்க. நான் வெளியே போகணும்.” என்று கோபமானான் மதிமாறன்.

    “வெளியே போகணும் துடிப்பது  என் மக நற்பவிக்கு தெரியுமா?” என்றான் வாசுதேவ்.

     இல்லை என்பதாய் தலையாட்டி, “பட் நான் போகணும். என் மாமா அக்காவை கொன்றவங்களை கொல்லணும்” என்றான் ஆக்ரோஷமாய்.

-இதயம் திருடுவோம்
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “இதயத்திருடா-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!