இதயத்திருடா-6
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அவசரமாய் கணேசன் சட்டை எடுத்து அணிந்து யாரென கேட்டு செவ்வந்தியை பார்க்க, “தெரியலைங்க பிரெண்டாம்” என்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு “காபி டீ குடிக்கிறியா மா. நைட் டைம் வேற தோசை சாப்பிடறிங்களா?” என்று வாஞ்சயாய் கேட்டார் செவ்வந்தி.
“அக்கா… அவ.. அ…அவங்க வீட்டுக்கு போகணும். இப்பவே பாரு மணி 12 ஆகப்போகுது.” என்று அவளை விரட்ட முனைந்தான்.
ஏற்கனவே அக்கா மாமா யாரையாவது திருமணம் செய்து வைக்க முனைப்பாய் இருக்க, இவளின் நோக்கம் தெரிந்தால் கூட்டு களவானிகளாக மாறுவார்களென பேச இடம் கொடுக்காமல் தடையிட்டான்.
“இட்ஸ் ஓகே மாறா. அம்மா… நீங்க தோசை சுடுங்க” என்று வெகு உரிமையாய் பேசி அமர்ந்தாள்.
கணேசனோ “நான் சட்னி வைக்கிறேன். நீ தோசை சுடுமா.” என்று சமையலில் உதவினார்.
“சட்டுனு ஓய்ப்க்கு ஹெல்ப் பண்ணறார்ல.. வாவ் சூப்பர்.” என்று கூறவும், “இப்ப எதுக்கு எங்க வீட்டுக்குள் வந்து மோப்பம் பிடிக்கிற. உங்க வீட்ல தேட மாட்டாங்களா.” என்று அக்கா மாமா சமையல் அறையில் இருக்கவும், தாடை இறுக தைரியமாய் கேட்டான் மதிமாறன்.
“மோப்பம் பிடிக்கிறது என் வேலை.
என்ன சொன்ன எங்கப்பா தேடுவாரானா…. நடு ராத்திரில கதை எழுதினா கதை ப்லோ அப்படியே வேகமா டிபரண்ட் டிபரண்டா உதிக்குதாம். அதனால கதவை அடைச்சிட்டு கதை எழுதுவார்.” என்று தோளைக் குலுக்கினாள்.
மதிமாறனோ தலையை பிடித்து தாங்கி காணவும், “இங்க ஸ்டே பண்ணுவிங்களா… இல்லை மேல.. ரூம் இருக்கா?” என்று கண்களை சோழிப் போல சுழற்றி தேடினாள்.
“என் வீடு மேல… நான் இங்க சாப்பிட மட்டும் வருவேன்.” என்று கையை கட்டி நிமிர்வாய் உட்காரவும், அவன் செய்கையில் இருந்த மிடுக்கில் கண் இமைக்காது ரசித்தாள்.
அவளின் பார்வை தன்னை மொய்க்க, கையை பிரித்து எழுந்து கிச்சன் பக்கம் சென்றான்.
நற்பவியோ மீண்டும் ஒரு முறை வீட்டை அளவிட்டாள்.
முன்பு இது போன்றதொரு வீட்டில் தங்கிய நினைவில் மூழ்கினாள்.
“சட்டுனு கல் சூடாகலை மா. அதனால தான் தோசை லேட்டாகிடுச்சு. வீடு சின்னது தான். எங்களுக்கு இதுவே பெரிசா தெரியுது” என்று செவ்வந்தி தட்டை கொடுக்க, கணேசன் சட்னியை ஊற்றினார்.
மதிமாறனுக்கோ மதுவந்தியை இப்படி தான் கடைசியாய் கவனித்து அனுப்பினார் என்ற கலக்கம் தோன்றவும் ஸ்தம்பித்து பார்க்க, “தோசை விட சட்னி சூப்பர் மா. தேங்க்ஸ்பா. நாங்களும் காலேஜ் போறவரை இப்படி தான் அப்பார்ட்மெண்ட் லைப். இரண்டு ரூம்ல இருந்தோம்” என்று கூறவும் கணேசன் செவ்வந்தி இருவரும் கலங்கி கண் துடைத்து, “இப்ப எங்களை என்னனு கூப்பிட்டம்மா?” என்று கேட்டதும், தோசையை பிய்த்து வாயில் வைத்து, “அம்மா அப்பானு. சாரி டூ ஸே… எங்கம்மா ரொம்ப குயிக்கா நான் டென்த் படிக்கிறப்ப இறந்துட்டாங்க. அதோட அம்மானு கூப்பிட முடியலை. அதனால அம்மா வயசுல அம்மா மாதிரி இருக்கறவங்களை எனக்கு மனசுக்கு பிடிச்சவங்களை அப்படி கூப்பிடுவேன்.
உங்களை கூப்பிட்டுட்டு அப்பாவை அங்கிள் என்று கூப்பிட முடியாதுல. ஸோ அப்பானு கூப்பிட்டேன்.” என்று சாப்பிடவும் மதிமாறனோ ‘இவள் இங்க வந்து செண்டிமெண்ட் லாக் பண்ணி அக்காவை அழவைக்கிறா. மொத்தத்துல அக்கா மூலமா இங்க வர ட்ரை பண்ணறா.’ என்று நற்பவியை முறைத்தான். அவனும் தோசையை சாப்பிட்டு முடித்தான். காலையிலிருந்து சாப்பிடாதது வயிற்றை கிள்ள ஆறாவது முறுகல் தோசை உள்ளே விழுங்கினான்.
“அம்மா… நான் இந்த பக்கம் தான் ஒர்க் பார்க்க வருவேன் அடிக்கடி வந்து டீ காபி இப்படி தோசை சாப்பிட்டா ஓகே தானே.” என்று கேட்டதும் தலையாட்டினார்.
‘நான் இல்லாத போது வீட்டுக்கு வேற வர பிளான் பண்ணறாளே’ என்று அவள் கையை பிடித்து எழுப்பினான்.
“ஹாண்ட் வாஷ் அங்க பண்ணணும்” என்று கையை அவள் புஜத்தில் அழுத்தம் கொடுத்து அழைத்து சென்றான்.
“மரியாதையா இங்கிருந்து கிளம்பு. ஏன் இப்படி செண்டிமெண்ட் பிளே பண்ணற.” என்று கடிந்தான்.
“சோ ஸ்வீட் மாறா. இந்த தீண்டல் பிடிச்சிருக்கு” என்று கூறியதும் சட்டென கையை எடுத்தான்.
“தட்ஸ் குட். நான் செண்டிமெண்டா யாரிடமும் பிளே பண்ணலை. நிஜமாவே உங்களை பார்க்க வந்தேன். காலையில கையில கட்டு போட்டிருந்திங்க அதனால என்னவோ ஏதோனு பார்க்க வந்து பார்த்தாச்சு.
இன்னிக்கு மணி 12க்கு மேல… ஏற்கனவே உங்களை மதுஅக்கா பாதில விட்டுட்டு போயிட்டாங்க. அதனால மாடி வீட்டுக்கு நல்ல நாள்ல வர்றேன். இப்ப உங்க அக்கா மாமா பார்க்கறாங்க. கொஞ்சம் சிரிச்சிட்டே செண்ட் ஆப் பண்ணுங்க பார்க்கலாம்” என்று கூறவும் அவள் பேசியதை அனைத்தும் மறந்து, “வீட்டுக்கு எப்படி போவ?” என்று அக்கறையாய் கேட்டு வைத்தான்.
“நீங்க தான் டிராப் பண்ண மாட்டிங்கனு சொல்லிட்டிங்களே. அப்பறம் என்ன அக்கறை.” என்று கூறி செவ்வந்தி அருகே வந்தாள்.
“இந்த நேரத்துல எப்படிம்மா போவ” என்று பெண் பிள்ளையை பெற்று வளர்த்த பொறுப்போடு கேட்டார்கள்.
“இங்க நாலு வீடு தள்ளி என் பைக் நிறுத்தியிருக்கேன் அப்பா. பார்த்து போயிடுவேன் பயப்படாதிங்க நான் யூனிபார்ம் வேற போட்டிருக்கேன். சம்டைம் லேட் நைட் வீட்டுக்கு போறது பழக்கம் தான். உங்களுக்கு கவலையா இருக்குனா நம்பர் கொடுங்க. போனதும் வாட்ஸப்ல பத்திரமா போனதா தகவல் தர்றேன்” என்று பக்குவமாய் செவ்வந்தி நம்பரை வாங்கினாள்.
பின்னர் செவ்வந்தியிடம் கணேசனை சேர்ந்து நிற்க வைத்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
மதிமாறனுக்கோ ‘போச்சு பெரிசா டன் கணக்குல ஐசு கட்டியா இறக்குறா.’ என்று வேடிக்கையாய் திரும்பி கொண்டான்.
“மதி… கூட போய் கிளம்பியதும் வா” என்று செவ்வந்தி கூறவும் கையை முன் பக்கம் காட்டி வெளியே போ என்று தள்ளாத குறையாக கூறினான்.
நற்பவி நடந்து முன் சென்று இரண்டு வீட்டை தாண்டி அவள் பைக்கை எடுக்கவும், “உன் ஸ்கூட்டி இல்லையா?” என்று கேட்டான்.
“ஏன் புல்லட் நல்லாயில்லையா. இது எங்கக்கா பார்த்து ஓட்டணும்னு ஆசைப்பட்டு வாங்கியது.” என்று உதைத்து ஸ்டார்ட் செய்தாள்.
அவள் பைக் ஸ்டார்ட் செய்கையில் இரசித்து நிற்க, நற்பவியோ அதிரடியாய், அவன் சட்டை காலரை பிடித்து “இதயத்திருடன் நீ தான். நான் உன்னை தான் லவ் பண்ணறேன். உன்னை தான் கல்யாணம் பண்ண போறேன். மதுவந்தி அக்காவோட இடத்தை எனக்கு கொடுக்க ரெடியா இரு. எப்ப வேண்டுமென்றாலும் நான் என் அப்பா அக்காவிடம் உன்னை பத்தி சொல்லலாம்.
பீ ப்ரிப்பேர் மாறா” என்று கூறி இதயமிருக்கும் பக்கம் தட்டி செல்லவும், இதயத்தின் சப்தம் அதிகரிக்க, மெதுவாய் வீட்டினை அடைந்தான்.
செவ்வந்தி கணேசன் இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையால் அவனை புதிதாய் விழித்து பார்த்தனர்.
“நான் தூங்கப்போறேன் அக்கா. குட் நைட் மாமா” என்று மாடிபடியேறினான்.
செவ்வந்தி கணேசன் இருவரும் கதவை தாழிட்டு, “யாரு என்னனு எதுவும் சொல்லலைங்க. அவன் பாட்டுக்கு போறான்” என்று செவ்வந்தி கணவரிடம் குறைப்பட்டார்.
“காலையில கேட்டுப்போம். எனக்கென்னவோ நாம கஷ்டப்பட்டதுக்கு எல்லாம் விடிவு காலம் பொறக்குதுனு தோனுது.” என்று நிம்மதியடைந்தார்.
மதிமாறனோ தனது வீட்டில் தனதறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவன், இவ சாதாரணமாவே சும்மா போகமாட்டா. இதுல என்னை தேடி வந்துட்டா, என் வீட்டை தெரிந்து வச்சியிருக்கா. என் அக்கா மாமா வாசல்ல எனக்காக வெயிட் பண்ண்வாங்கனு வரை சொல்லறா. என்னை எப்பதிலருந்து தொடர்ந்து வந்து வாட்ச் பண்ணறாளோ, போதாதற்கு அக்கா நம்பரை வரை வாங்கிட்டா.
எப்படியும் இரண்டு பேரும் ஒன்னு சேர்ந்து அடுத்து கல்யாணத்தை பத்தி பேசி என்னை கழுத்தறுக்க போறாங்க.
இதுல அக்கா மாமா பார்க்க என் ஷர்ட் பிடிச்சி பேசியதை கேட்டிருப்பாங்களா.? சான்ஸே இல்லை. ஆனாலும் அவ செய்த வேலைக்கு டவுட் பட்டுயிருப்பாங்க.
இப்பவே மணக்கோலத்துல கனவு காண ஆரம்பிப்பாங்க. நாளைக்கு அவ யாரு என்ன இந்தளவு உரிமையா பேசறா. எப்படி பழக்கம் என்று வரிசையா கேட்பாங்க.
மாறா… அந்த நற்பவி சொன்ன மாதிரி ப்ரிப்பரா இருக்கணும். எப்படியும் பதிலை தயாரா ரெடி பண்ணணும்.’ என்று மனதோடு போராட்டம் இயற்றினான்.
“ஹாய் திருடா… வீட்டுக்கு வந்தாச்சு. நிம்மதியா தூங்கு. குட்நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் டியர்” என்று அனுப்பவும் அதனை பார்த்து விட்டு நெடுஞ்சாணாக மெத்தையில் விழுந்து உறங்கினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Wow narpavi super super. Mathimaran pavam. Intresting sis.
Super eh mathi sonna mari pavi moppam pidika tha vanthu iruka Inga ipo avan akka mama va sentiment la potu thakita avanga kekura kelvi ku ena yosichi vachi solla porano manasula aasai Iruku aana atha maraika pakura mathi
Super super super super super super super super super super super super super