இரசவாதி வித்தகன்-7
வித்தகன் சாப்பாட்டில் கை வைக்கும் நேரம் இப்படி அலறும் குரலை கேட்டு வாசல் பக்கம் திரும்ப, மற்ற அனைவரும் வித்தகனை தான் ஏறிட்டனர்.
“யார் சித்தப்பா? உங்க பெயரை சொல்லி… குரலே பயங்கரமா பேய் பட எபெக்டா இருக்கு?” என்று கேட்டான் வித்தகன்.
மஞ்சரி சிரிப்பை உதிர்க்க அவ்விடம் லேசாய் இயல்பானது.
சேதுபதியோ, “அட ஊர்க்காரங்க யாராவது நான் வந்ததைப் பகிர்ந்திருப்பாங்க. யாராவது கிழடுங்க வந்து கூப்பிடறாங்க. நீ சாப்பிடு” என்று மற்றவரை பார்த்து வித்தகனிடம் பதில் தந்து அமர கூறினான்.
மீண்டும் “சேதுபதி” என்ற அழைப்பில், அவர் மட்டும் செல்வதாகக் கூறி “நீ சாப்பிடு” என்று நழுவினார்.
சற்று நேரம் கழித்துத் தான் வந்தார். அதற்குள் பேசயியலாத வகையில் மேஜையில் இருந்த உணவு வித்தகனின் வாயை கட்டிவிட்டது.
கண்கள் கலங்க, காரத்தை ருசித்துச் சாப்பிட்டிருந்தான்.
“சித்தப்பா… உங்க தங்கச்சி பொண்ணுக்கு வாய் தான் ஓவரு. சமையலு சூப்பரு.” என்று விழுங்கியவனைக் கண்டு சிரித்துவிட்டார்.
“சாப்பிடறதுக்கே இங்கே தங்கிடலாம்… இத்தனை நாள் என்ன சாப்பிட்டேன்னு? எனக்குள்ள கேள்வியைக் கேட்க வச்சிட்டா” என்று விழுங்கவும், சேதுபதி கண் கலங்கிவிட்டது.
மஞ்சரியோ நாணப்பட்டதை அங்கு எவரும் பார்த்திருக்க மாட்டார்கள். வித்தகனை தான் மற்றவர் விழிகள் மொய்த்தது.
‘நம்மூர்ல இருந்து இவனை வேண்டுமின்னா லண்டன்ல போய் வளர்த்திருக்கேன் பெருமை பேசிக்கலாம். ஆனா இரத்த சொந்தமும், பாரம்பரிய உணவுமுறையும் துளியும் இல்லாம வளர்த்துட்டேன்.’ என்று சேதுபதி வருந்த, வித்தகனுக்குப் பரிமாறும் மஞ்சரியை கண்டு அவ்வோசனை உதித்தது.
எல்லா வயதானவர்களுக்கும் தன் மகன் அருகே அவனுக்கேற்ற வகையில் பெண் நின்றதும் துணையாக எண்ணி பார்க்கும் யோசனையே அவருக்கும் உதித்தது.
ஆனால் இந்த முடிவு இனி தான் எடுக்க இயலுமா? ஜெயிலிருந்து அண்ணி வந்துவிட்டாரே. தனக்குப் பிடிக்குதோ இல்லையோ அமலாஅண்ணியிடம் தான் பேசாமல் இருக்கலாம். பழகாமல் தவிர்க்கலாம் மேம்போக்காகப் பேசி நிறுத்திடலாம்.
சொந்தமகன்… அதுவும் காரணம் அறிந்தால் இவன் முடிவு என்னவோ? இப்படித் தான் சேதுபதி எண்ணம் பிறந்தது.
“சித்தப்பா உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று உரிமையாய் அமரவைக்கக் கண்கலங்கி மகனை கண்டார்.
அவருக்கு வித்தகன் அண்ணன் மகன் அல்ல. சொந்த மகன் போலத் தான் நினைப்பது. இந்நொடி வரை அதில் எந்த மாற்றமும் இல்லை.
அண்ணி தன்னிடம் அவர் மகனை கேட்பாராயென்று ஆழ்ந்தார்.
வித்தகனை போலவே அமலாவும், நிறைவாய் கண்ணீர் உகுத்தி சாப்பிடவும் ஏதோ மனதை அழுத்தியது. அவரும் இத்தனை நாள் ஜெயிலில் அளித்த உணவை தானே விழுங்கியிருப்பார்.
வித்தகனுக்கு இங்கு எதுவும் சரியில்லையென்று மட்டும் புரிந்தது.
தானாக இத்தனை வருடம் கூறாமல் தற்போது அவர்களாகக் கூற தவிப்பதும் புரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் எதையோ தொண்டையில் அதக்கி பேச கஷ்டப்படுகின்றார்.
என்னவோயென அறிந்தும், எதையும் கருத்தில் கொண்டு செல்லாமல் விளையாட்டுப் பாவனையில் திரிந்தான்.
அதைப் பார்க்க மஞ்சரிக்கு தான் ஏகக்கடுப்பு. ‘இப்படியா ஒருத்தன் அலறல் குரல் கேட்டும் நல்லா திண்ணுட்டு இருப்பான். நாக்கு செத்துப்போய் இருப்பானோ? ‘நமக்குச் சோறு தான் முக்கியம்’னு இருக்கானே’ என்று உறவுகளைக் கண்டாள்.
லேசாய் பீதியடைந்து அமர்ந்திருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.
‘எல்லாம் அந்தப் பல்லுப்போகாத கிழவியால… இந்தா வார்றேன்’ என்று நழுவினாள்.
வித்தகனுக்குக் குறிக்கோளே மஞ்சரி என்றிருக்க, அவள் செல்லவும் அவனுமே எழுந்துவிட்டான்.
“கல்யாண வீட்ல இருக்கோம். பழசை எதையும் போட்டு உழப்பாம வேலையைப் பாருங்க” என்று மற்றவரை பார்த்து கூறியவன் அன்னையிடம் பேச பயந்து ஓடினான் வித்தகன்.
சேதுபதியோ “எங்கம்மா நான் செத்தாலும் வரக்கூடாதுனு சொன்னேன் ஏன்டா வந்த? அவனை வேற இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்கனு திட்டிடுச்சு.
அம்மா… அம்மா… ஏன் இப்படி மாறியிருக்காங்க. ஏதோ பைத்தியம் போல.” என்று கவலைக் கொண்டார் சேதுபதி.
அமலாவிற்குப் பேச்சேயில்லை… மாமியார் குணம் அறிந்து எப்படியும் தன்னைத் திட்டியிருப்பார். இங்குத் தவிர வேறு போக்கிடமும் இல்லையே…’ என்று வருந்தினார்.
“அதயேன் அண்ணா கேட்கற… எப்பவுமே என் பெரிய பையனை சாகடிச்சி சின்னப் பேரனை பிரிச்சிட்டிங்களே.’ போக வர்றப்ப எல்லாம் புலம்பும். ஏதோ அதோட உலகமே பதினாலு வருஷத்துக்கு முன்ன நின்றுடுச்சு. இந்த வீட்ல காலடி எடுத்து வைக்காது. சாப்பாடு கொடுத்துவிட்டா ஒரு நாள் சாப்பிடுவாங்க. மறு நாள் சாப்பிட மாட்டாங்க. பிரம்மை பிடிச்ச மாதிரி இருப்பாங்க. என்ன இருந்தாலும் அண்ணா இறந்ததை நேர்ல பார்த்தாங்களே.” என்று பார்வதி பேசவும், மயூரன் வித்தகனை போலச் சாப்பிட்டுக் கைக்கழுவினான்.
“முடிஞ்சதை பேசாதிங்க அத்தை. எத்தனை முறை கேட்டு கேட்டு புளிச்சிடுச்சு. வித்தகன் அப்பறம் சித்தப்பா கல்யாணத்தைப் பார்த்துட்டுக் கிளம்பப் போறாங்க. அவ்ளோ தான். இந்த இடைப்பட்ட பதினைந்து நாள் எதுவும் தெரிந்து யாருக்கும் ஒன்னும் மாறப்போறதில்லை.” என்று முடிக்கவும், பெரியவர்கள் கேட்டுக்கொண்டார்கள். முதல் நாளே முள்ளில் நிற்க்கும் நிலையில் இருக்கின்றனர்.
மஞ்சரியோ அவளது பாட்டியிடம் “கிழவி… கண்ணை நோண்டி, நாக்கை கட் பண்ணிடுவேன். வாய் இருக்குனு இஷ்டத்துக்குப் பேசுவியா?
என்னவோ நீ மட்டும் தான் உன் பெரிய பையனை தூக்கி கொடுத்துட்டு கஷ்டப்படுற மாதிரி பேசற. எங்கத்தை அமலா பூவும் பொட்டும் இழந்துயிருக்கு.
போதாதுக்குத் தேவையில்லாம ஜெயிலுக்குப் போயிட்டு வந்திருக்கு.
எங்கப்பா ஜாதகத்தைக் கையில எடுத்தது தான் குற்றம்னு அவரையே பாயிண்ட் ஆப் பண்ணி பேசின. சொத்துல விஷம் வச்சிடுவேன்.” என்று திட்டவும் யாருக்கும் வாயை மூடாத கிழவி மீனாம்பாள் பேத்தியிடம் மட்டும் வாயை விடமாட்டார்.
மற்றவர் ஒதுங்கிப்போக, இவளோ இழுத்து வைத்து பதிலுக்கு வாயாடி அதட்டு போடும் குணம்.
வித்தகன் மெதுவாக வந்து, “யாரிடம் பேசற?” என்று வந்தான்.
“ம்ம்.. எல்லாம் உங்கப்பாவை பெத்த ஆத்தாவிடம் தான்” என்று முந்தானையை இடையில் சொருகி நடக்க, அவள் விளையாட்டுத்தனமாகப் பேசுகின்றாளென அவள் பின்னால் சென்றான்.
மீனாம்பாள் சின்னப் பேரனை கண்டு கண்கள் சுருங்கி நோட்டமிட அவனோ யாரோ பரதேசி என்று தான் கடந்தான்.
உண்மையில் மீனாம்பாள் தோற்றம் அப்படித் தான் இருந்தது. எப்போழுதோ கட்டிய சீலை. என்றோ வாறிய தலைமுடி, முழுவதும் கோவில் மரத்தடியில் படுத்து கொள்வதென இருந்தால் தோற்றம் அடையாளம் காண முடியுமா?
வித்தகனோ மஞ்சரி பின்னால் நதிபோலத் தொடர, ‘இந்தக் கொலுசொலி எங்க ஓடுது’ என்று பின் தொடர்ந்தான்.
“ஏய்.. மஞ்சரி… எனக்கு வழியெல்லாம் தெரியாது. நீ பாட்டுக்கு போற” என்று அவளது ஜடையைப் பிடித்து இழுத்தான்.
“யோவ் ‘பாரின் பார்ட்டி’ கையை எடுயா? நீ ஏன்யா பின்னாலயே வர்ற? உங்கண்ணா கல்யாணத்துக்குத் தானே வந்த அவர் பின்னாடி போ.
இல்லைனா என் அண்ணா உன் வயசு தானே அவனிடம் போய்ப் பேசு. உனக்கு ஏதாவது சந்தேகம்னா அவன் க்ளியர் பண்ணுவான். எங்கயாவது கூட்டிட்டு போவான்.
உங்கம்மா தான் வந்துட்டாங்களே அவங்க மடில படுத்து தூங்கு.
இல்லைனா உங்கத்தை மாமாவிடம் போய் ஊர்நிலவரம் கேளு. அப்படியே ஏன் எங்க சித்தப்பாவிடம் அத்தையைப் பார்க்க விடலைனு கேளுயா. அதை விட்டு என் பின்னாடி சுத்தற. முதல்ல ஜடையிலயிருந்து கையை எடு” என்று அவன் இழுத்த ஜடையை விட்டுவிடக் கூறினாள்.
அவனோ மறுப்பாய் தலையசைத்து ”நோவே… நீ தான் இங்க இருக்கறவங்களிலேயே இன்ட்ரஸ்டான கேரக்டரா இருக்க. உன்னை வெறுப்பேத்தி பேசறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.” என்றதும் மஞ்சரி கோபமாய்த் திரும்ப, வித்தகன் பேய் முழி முழித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்.