Skip to content
Home » இருளில் ஒளியானவன்-15

இருளில் ஒளியானவன்-15

இருளில் ஒளியானவன் 15

அன்பரசு தனது மேனேஜருக்கு அழைத்து, மகள் வருவதைப் பற்றி முன்பே கூறி, அவளிடம் யாரும் திருமணத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி, முன்பு அலுவலகத்திற்கு வரும் பொழுது எப்படி அவளிடம் பேசினார்களோ, அப்படியே பேச வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதன்படியே வைஷ்ணவி அலுவலகத்திற்குள் நுழைந்ததும் வெகு நாள் கழித்து தங்கள் அலுவலகத்திற்கு வரும் முதலாளியை வரவேற்கும் விதமாக வரவேற்றார்களே தவிர, மற்றபடி அவர்களிடம் அவர்கள் எதுவும் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசவில்லை.

வைஷ்ணவி அலுவலகத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தாலும், அனைவரையும் எப்படி எதிர்கொள்வது என்று தயங்கி கொண்டே தான் வந்தாள். ஆனால் அவர்கள் தன்னுடன் சாதாரணமாக பேசுவதைக் கண்டு, அவளும் தன்னை சகஜம் ஆக்கிக் கொண்டாள்.

நேராக தனது இருக்கையில் அமர்ந்து என்ன வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று கணணியை உயிர்பித்து ஆராய ஆரம்பித்தாள். சற்று நேரத்திற்கு அவளுக்கு சூடாக குடிப்பதற்கு கொடுத்து அனுப்பிவிட்டு பின்னாடியே வந்த மேனேஜர், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வேலைகளைப் பற்றி விளக்கினார்.

“சாரும் இப்பொழுதெல்லாம் அலுவலகத்திற்கு அதிகம் வருவதில்லை மேடம். அதனால் நாங்கள் வேலைகளை பற்றி அவருக்கு ஃபோனில் தான் சொல்வோம்” என்று அவரிடம் கூறிய அனைத்தையும் அவளுக்கும் விளக்கமாக கூறினார்.

முழுவதையும் பொறுமையாக கேட்ட வைஷ்ணவி, ஓரிரு மாற்றங்களை கூறி “இதை இப்படி செய்யுங்கள் சார்” என்றாள்.

அவரும் புன்னகையுடன் “சரி மேடம், என்று விட்டு எதுவும் வேண்டுமென்றால் கூப்பிடுங்க” என்று கூறி சென்றார்.

அவளும் புன்னகையுடன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை அல்லவா! ஆகையால் அந்த இரண்டு மாத வேலைகளை எல்லாம் ஒரு முறை மீண்டும் சரி பார்த்தாள். அனைத்தும் ஓரளவுக்கு சரியாக இருப்பது திருப்தியாக இருந்தது. இப்படியே நேரம் கடக்க மதிய உணவு நேரத்திற்கு வந்தார் அன்பரசு.

அவர் முகத்தில் தெரிந்த நிம்மதியில் “என்னப்பா? என்ன விஷயமாக வெளியே போனீர்கள்? அப்படி என்ன முக்கியமான வேலை? அந்த வேலை நீங்கள் நினைத்தபடி முடிந்துவிட்டது போல் இருக்கிறதே? முகம் பிரகாசமாக இருக்கிறது!” என்று காலையில் கேட்க வேண்டாம் என்று இருந்தவள், தந்தையின் முகத்தில் இருந்த நிம்மதியைக் கண்டு அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டாள்.

படபடவென்று பேசும் மகளை கண்களில் புன்னகையுடன் கண்டார் அன்பரசு. “என்னப்பா? நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீங்க மௌனமா பார்த்துகிட்டே இருக்கீங்க?” என்றால் அவரிடம் பதில் வராததால்.

“என் பொண்ணு பேசுறது ரசித்து கேட்கிறேன், இதுல என்ன இருக்கு?” என்று சொல்லி “ஆமாம், நான் போன விஷயம் நல்லபடியாக முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது. அதனால் தான் என் முகம் நிம்மதியாக இருக்கிறது” என்றார் புன்னகையுடன்.

அப்பாவின் வேலை சிறப்பாக முடிந்ததில் மகிழ்ந்த வைஷ்ணவையும், “அப்படியாப்பா! ரொம்ப சந்தோஷம். என்ன வேலைப்பா?” என்று கேட்டு அவர்கள் தொழில் ரீதியான இரண்டு மூன்று கம்பெனி பெயர்களைச் சொல்லி “அதைப்பற்றியா?” என்றாள்.

ஒவ்வொன்றுக்கும் மறுப்பாக தலையாட்டிய அன்பரசு, ‘அதெல்லாம் என் தொழில் சார்ந்த வேலைகள். ஆனால் நான் இன்று என் சொந்த வேலைக்காக சென்றேன்” என்றார்.

சொந்த வேலையாக என்று யோசித்த வைஷ்ணவிக்கு, அவர் எதைச் சொல்கிறார் என்று புரியாமல், குழப்பமாக “எனக்கு தெரியலப்பா! நீங்களே சொல்லி விடுங்கள்” என்றாள்.

அவருக்கும் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை? ஆனால் சொல்லித்தானே ஆக வேண்டும் அவளின் அருகில் சென்று நின்று, அவள் தலையை ஆதுரியமாக தடவி விட்டு, “உன் வாழ்க்கையின் அடுத்த கட்ட முடிவை எடுக்க போயிருந்தேன், அது நல்லவிதமாக முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது” என்றார்.

அவள் குழப்பமாக அப்பாவை பார்க்க, எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டு, “அப்பா உன் திருமணத்தில் தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு விட்டேன். அதை நினைத்து இத்தனை நாள் என் மனதிற்குள் ஒரு அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. இப்பொழுது அதிலிருந்து உன்னை மீட்க முடிவு செய்து விட்டேன்” என்றார்.

திருமணம் என்றதும் அவளுக்கு கைகள் படபடவென்று சில்லிட்டு போனது. அதை அவர் உணர்ந்தார். சிறிதாக அழுத்தம் கொடுத்து, “அப்பா உன் கூட இருக்கிறேன் குட்டிமா. எதற்கும் பயப்படாதே! இனிமேல் உன் விஷயத்தில் அப்பா ரொம்பவும் கவனமாக இருப்பேன். உனக்கு எது தேவையோ அதை மட்டும் தான் செய்வேன். அந்த நம்பிக்கை உனக்கு என் மேல் இருக்கிறதா?” என்றார் கவலையாக.

அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. “உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை அப்பா. உங்களை நம்பாமல் நான் வேறு யாரை நம்ப போகிறேன். நீங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று, நான் முழுமையாக நம்புகிறேன்” என்றார் கண்ணீரோடு.

எழுந்து அவளது கண்ணீரை துடைத்து விட்டு, “இனிமேல் இன்னும் கவனமாக இருப்பேன்” என்று அவளை தன்னுடன் அணைத்துக் கொண்டு “உனக்கு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
அவள் உடல் ஒரு முறை அதிர்ந்து நின்றது.
அதை உணர்ந்தவர் மேலும் அவளை இருக்கமாக அணைத்து தான் இருப்பதை அவளுக்கு அறிவுறுத்தினார்.

இப்பொழுது அவளும் தந்தையை வயிற்றுடன் அணைத்துக் கொண்டாள். “அப்பா இது சரியா வருமா? அதற்கு அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா?” என்றாள் வெறுமையாக.

அவளின் இந்த கேள்வியிலேயே அவளுக்கு அவனுடன் வாழ பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டார். மருத்துவமனையில் கேசவன் அவர்களிடம் தெளிவாக கூறியிருந்தார், நடந்ததைப் பற்றி ஓயாமல் அவளுடன் பேசக்கூடாது என்று. ஆகையால் இன்று வரைக்கும் அவர்கள் வெங்கடை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!
அவளுக்கும் என்ன நினைப்பு இருக்கும் என்றுமே அவர்களுக்கு தெரியவில்லை. அவளாக பேசும் பொழுது கேட்டுக் கொள்ளலாம் என்று தான் இத்தனை நாள் காத்திருந்தார்கள்.
ஆனால் விவாகரத்துக்கு பதிவு செய்த பிறகு, அவளிடம் அதைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் வந்தது. அவளும் வெங்கட் வீட்டில் என்ன சொல்வார்களோ என்று தான் கேட்டதால், அதை வைத்து அவளுக்கு அவனுடன் வாழ விருப்பமில்லை என்பதை புரிந்து கொண்டார் அன்பரசு.

தனியாக அவளிடம் இனிமேலும் பேச பயமாக இருந்தது அவருக்கு. ஆகையால் “குட்டிமா வீட்டுக்கு போகலாமா? அம்மா நமக்காக காத்துக் கொண்டிருப்பாள்” என்றார்.

வழக்கமாக மதிய சாப்பாட்டிற்கு அன்பரசு வீட்டிற்கு செல்லும் பழக்கம் இல்லையே ஆகையால் அவள் குழப்பமாக தந்தையை பார்க்க,
“வேலை முடிந்ததும் மதிய உணவுக்கு உன்னையும் அழைத்துக் கொண்டு வருவதாக, லட்சுமிக்கு போன் செய்து சொல்லிவிட்டேன் டா. அவள் நமக்காக காத்துக் கொண்டிருப்பாள். ஆகையால் வீட்டிற்கு போவோம். போய் சாப்பிட்டுவிட்டு, நடந்ததை முழுமையாக கூறுகிறேன், சரியா?” என்றார்.

அவளுக்கும் இப்பொழுது வேலை செய்யும் மனநிலை இல்லாதது போல் தோன்றியது. ஆகவே அப்பா கூறியதும் சரி என்று தலையாட்டி, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.
மேனேஜரை அழைத்து அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை சொல்லிய அன்பரசு, மகளை அழைத்துக் கொண்டு தங்களது வீட்டிற்கு வந்தார்.

மனைவியிடமும் மேலோட்டமாக விஷயத்தை சொல்லி இருந்ததால், இருவரும் வந்ததும் “சீக்கிரம் கை கால் கழுவிட்டு வாங்க, சாப்பிடலாம்” என்று சமையல் மேஜை அருகிலேயே காத்திருந்தார்.

மகளுக்கு பிடித்தது போல் மதியம் உணவு சமைத்திருக்க, தந்தை அருகில் அமர்ந்த வைஷ்ணவிக்கும் கணவருக்கும் உணவு பரிமாறி விட்டு, மகளின் அருகிலேயே அவரும் அமர்ந்து கொண்டார்.

மூவரும் அதிகம் பேசாமல் சாப்பிட்டு முடித்தனர். உணவு வேலை முடிந்ததும் வைஷ்ணவியை பார்த்த அன்பரசு “அப்பாவின் அறைக்கு வாமா” என்று கூறி அவர்களது அறைக்கு சென்றார் விட்டார்.

திருமணத்தை பற்றியும் அதன் பின் நடந்தவற்றை பற்றியும் நினைக்க பிடிக்கா விட்டாலும் அனைத்தையும் கடந்துதான் ஆகவேண்டும் என்று உணர்ந்த வைஷ்ணவி தயக்கமாக மெதுவாக நடந்து அப்பாவின் அறைக்கு சென்றாள்.

உணவு மேதையை சுத்தம் செய்து விட்டு, வைஷ்ணவிக்கு பின்னாலயே தங்களது அறைக்குள் நுழைந்தார் லட்சுமி.

  • தொடரும்..

4 thoughts on “இருளில் ஒளியானவன்-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *