ஒளியானவன் 2
மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் வைஷ்ணவி. அந்த மூன்று நாட்களும், மூன்று யுகங்களாக கடந்தது அவளது தாய் தந்தையருக்கு.
இவர்களிடம் மகள் கண்விழித்ததை கூறிய செவிலி, மருத்துவரிடம் சொல்ல சென்று விட்டார். செவிலி அங்கிருந்து சென்றதும் வேகமாக மகள் இருந்த அறைக்கு சென்றனர். கண் விழித்து சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்த வைஷ்ணவி தாயைக் கண்டு அழ ஆரம்பிக்க, அருகிலேயே வந்த தந்தையை கண்டு பயந்து கத்த தொடங்கினாள்.
மகள் தன்னைக் கண்டு பயந்ததை நினைத்து அதிர்ந்து நின்றார் அன்பரசு. வைஷ்ணவியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார் லட்சுமி. அதற்குள் கேசவனும் வந்துவிட, அவரையும் கண்டு கட்டுப்படுத்த முடியாத பயத்தில் அலறினாள் வைஷ்ணவி.
மருத்துவரான கேசவனுக்கு அவளின் நிலை புரிய, சற்றென்று அவளது பயத்தை போக்க, “இங்கே பாருமா. அங்கிளை பாரு. அப்பாவை பாரு” என்று அவளை சமாதானப்படுத்திக் கொண்டே அவளை சாந்தி படுத்தும் மருந்தினை ஊசி மூலம் செலுத்தினார்.
ஊசியின் வீரியத்தினால் சற்று நேரத்திலேயே அமைதியாக கண்ணுறங்கி விட்டாள் வைஷ்ணவி. அமைதியாக உறங்கும் மகளைக் கண்டு கதறி அழுதார் லட்சுமி. “என்ன ஆயிற்று அண்ணா? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?” என்று கேசவனை பார்த்து கேட்க, வார்த்தைகள் எதுவுமே இன்றி அதிர்ச்சியில் நின்று இருந்தார் அன்பரசு.
தான் ஆசையாக வளர்த்த மகள், தன் மீது பாசமாக இருந்த மகள், திடீரென்று தன்னை பயந்து பார்த்ததில் அதிர்ந்து விட்டார் அன்பரசு. அவரால் அதிலிருந்து எளிதில் வெளிவர முடியாமல் நின்று இருக்க, “அரசு” என்று குரல் உயர்த்தி அழைத்த கேசவனை, அதே அதிர்ச்சியோடு பார்த்தார்.
“நீயே இப்படி அதிர்ச்சியானால் என்ன அர்த்தம்? நீங்கள் இருவரும் தான் அவளை இந்த பயத்திலிருந்து வெளிக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
இருவரும் புரியாமல் மருத்துவரை பார்த்தனர்.
“அவளுக்கு நடந்த விஷயத்தை வைத்து, அவள் ஆண்களை கண்டு பயப்படுகிறாள். உடனடியாக அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவளை இதிலிருந்து மீட்டு வருவது சிரமமாக இருக்கும்” என்று அவளின் நிலைமையை அவர்களுக்கு புரியும்படி பொறுமையாக கூறினார் கேசவன்.
மகள் நலமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்ட அன்பரசுவால், மனைவியை தேற்ற முடியவில்லை.
“என்னங்க அவள் நன்றாக வாழ வேண்டும் என்று, பார்த்து பார்த்து நடத்தி வைத்த கல்யாணத்தினால், அவள் வாழ்க்கை இப்படி சீரழிந்து போய்விட்டதே” என்று கதறி அழுதார்.
நண்பனின் நிலையை கண்டு வருந்திய கேசவன் உடனே இவர்கள் இருவருக்கும் முதலில் நிலைமையை புரிய வைக்க வேண்டும் என்று, மனோதத்துவ மருத்துவரை அழைத்து இவர்கள் இருவருடனும் பேச வைத்தார்.
மருத்துவர் கூறியதிலேயே கொஞ்சம் கொஞ்மாக தெளிந்தனர் இருவரும். இனிமேல் தாம் இருவரும் தான் தங்களது மகளை இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்கள். அதை புரிய வைப்பதற்காக மருத்துவருக்கு நன்றி கூறிவிட்டு, மகளை பார்க்க சென்றார்கள்.
மயக்க ஊசியின் விளைவால் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அமைதியாக உறங்கும் மகளை பார்க்கையில் லட்சுமிக்கு மனது கடந்து அடித்துக் கொண்டது. அருமையான பிள்ளையின் வாழ்க்கையை தாங்களே வீணாக்கி விட்டோமே என்ற குற்ற உணர்வு மேலங்கியது.
இனிமேல் நடந்து முடிந்த எதைப்பற்றியும் யோசிக்காமல், இந்த விஷயத்தில் இருந்து அவளை எப்படியாவது வெளியே கொண்டு வந்து, தங்களுக்கு மகளாக மட்டுமாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
நேரம் கடக்க மெதுவா அசைவு தெரிந்தது வைஷ்ணவியிடம். அவளின் அருகில் சென்று மகளது கையை மென்மையாக பிடித்து தடவி விட்டனர் இருவரும். தந்தை அன்பரசு அவளது காதின் அருகில் “வைஷுமா, அப்பா வந்திருக்கும் டா செல்லம், அப்பாவை வெறுத்திடாதே, உனக்கு என்றைக்கும் துணையாக அப்பா இருப்பேன். அப்பாவை மட்டும் ஒரு பொழுதும் வெறுத்து விடாதே கண்ணா” என்று அவர்கள் இருவரும் தனியாக இருக்கும் பொழுது, எப்படி பேசிக் கொள்வார்களோ, அதே போல் அவளது காதோரம் மென்மையாக பேசி, அவரின் குரலை அவளுக்கு பதிய வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் அன்பரசு.
அவரது குரலும், அன்பான அவர் பேச்சும், அவளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது போல. கண் திறந்து தாயையும் தந்தையும் வெறுமையாகவே பார்த்தாள். அவளின் அந்தப் பார்வை இருவருக்கும் வலித்தாலும், முன்பு போல் தன்னைக் கண்டு பயப்படவில்லை என்ற நிம்மதி அடைந்தார்.
மென்மையாக அவரது கரங்களை தடவி. “ஏதாவது உடம்புக்கு பண்ணுதா? வலிக்குதா? டாக்டரை கூப்பிடவா?” என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்டார் லட்சுமி.
மவுனமாக இல்லை என்று தலையாட்டிய வைஷ்ணவி கண்களில் இருந்து கண்ணீர் வடிய, அதைக் கண்டு பெற்றோர் இருவரும் இருபுறமும் இருந்து அவளது கண்ணீரை துடைத்தனர்.
“எதைப் பற்றியும் யோசிக்காதே குட்டிமா. இனிமேல் நீ எங்களுடனே இருந்து விடு. அப்பா உன்னை பத்திரமா பாதுகாப்பேன். சரியா? அழாதே!” என்று கண்ணீரைத் துடைத்தபடியே அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்
அவரின் ஆறுதலில் கொஞ்சம் தெளிந்தாள் என்று அவளின் முகத்தை பார்த்தாலே தெரிந்தது. அதே நேரம் அவளது செக்கப்பிற்காக கேசவன் உள்ளேன் நுழைந்தார். தங்களது அறைக்குள் வந்த கேசவனை கண்டு பயந்த வைஷ்ணவியின் கைகளை, மென்மையாக பிடித்துக்கொண்டு,
“என் நண்பன், உன்னோட கேசவ் அங்கிள் டா” என்று தந்தையின் கூற்றில் அமைதியாக இருந்தாள்.
அன்பரசு, லட்சுமி இருவரையும் சற்று நேரம் வெளியே இருக்கும்படி சொல்லிய கேசவன், அவளிடம் சிகிச்சைக்காக சில கேள்விகள் கேட்டுவிட்டு, மருத்துவ ஆலோசனை கூறினார். பின்னர் “கண்டதையும் நினைத்து மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே! எல்லாம் சரியாகும்! சரியா?” என்க, மவுனமாக தலையாட்டினாள்.
வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அங்கிள் அங்கிள் என்று அழைத்து, வாய் ஓயாமல் கதை பேசுபவள், இன்று அமைதியாக தலையை மட்டும் ஆட்டுவது அவருக்குமே வருத்தமாக தான் இருந்தது.
மௌனமாக புன்னகைத்த கேசவன், அவளது உடல் நிலையை முழுவதும் பரிசோதனை செய்துவிட்டு, அன்பரசுவை அழைத்தார். “அரசு, வைஷ்ணவி பெர்பெக்ட்லி ஆல்ரைட். அவளை நார்மல் வாடிற்கு சிஃப்ட் செய்ய சொல்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மட்டும் இங்கு இருக்கட்டும்” என்று கூறிவிட்டு வைஷ்ணவியிடம் திரும்பி,
“நாளைக்கு என்னோட பிரண்டு ஒருத்தங்க உன்னை பார்ப்பாங்கடா. அவங்களிடம் நீ மனம் விட்டு பேசலாம். நடந்ததை விருப்பம் இருந்தால் சொல்லு. அதன் பிறகு தான் எங்களாலும் இந்த விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியும், இல்லையா?” என்றார் .
அவளும் ஆமாம் என்று மௌனமாகவே தலையாட்டினாள்.
பின்னர் அவளது உடல்நிலை குறித்து இருவரிடமும் சொல்லிவிட்டு, செவிலிய அழைத்து வைஷ்ணவியை அறைக்கு மாற்ற சொல்லிவிட்டு சென்றார் கேசவன்.
அவர் கூறிய படியே அடுத்த அரை மணி நேரத்தில், வைஷ்ணவி தனி அறைக்கு மாற்றப்பட்டாள். விஐபி அறை என்பதால் அந்த அறையிலேயே அவளது பெற்றோரும் இருந்து கொண்டனர்.
முன்னறையில் அன்பரசு இருந்து கொள்ள, மகளின் கட்டில் பக்கத்தில் இருந்த சின்ன கவுச்சில் லட்சுமி அமர்ந்து கொண்டார்.
வைஷ்ணவி இன்னும் உடலளவிலும், மனதளவிலும் தேற வேண்டும் என்பதற்காகவும், அவளுக்கு இப்பொழுது ஓய்வு அதிகம் தேவை என்று உறக்கத்திலேயே வைத்திருந்தார் கேசவன்.
- தொடரும்..
Paavam vaishu
Gents a paathale bayappuduraale, ennenna lam nadanthirukkumo
oru appa va parthu intha alavuku bayapaura na apo enalam nadanthu irukum evlo kodumai pani irukan ava husband