Skip to content
Home » இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன்-22

இருளில் ஒளியானவன் 22

கோயிலில் அமைத்திருந்த மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தான் விஷ்ணு. வாய் மந்திரங்களை கூறிக்கொண்டு இருந்தாலும், கண்களோ எப்பொழுது வைஷ்ணவியை பார்ப்போம் என்று, அவள் வரும் திசையை நோக்கி அடிக்கடி திரும்பிக் கொண்டு இருந்தது.

நண்பர்கள் அவனை கிண்டல் செய்து கொண்டு இருக்க, சற்று நேரத்திற்கெல்லாம் வைஷ்ணவி கோவிலுக்கு வந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு, அவனது ஆர்வம் மேலும் அதிகமாக, ஐயர் சொல்லும் மந்திரங்களை தவறு தவறாக சொல்ல ஆரம்பித்தான்.

“தம்பி மந்திரத்தை கவனமா சொல்லுங்க. பொண்ணு எப்படியும் இங்கதான் வரும்” என்று ஐயரும் அவனை ஓட்ட ஆரம்பித்தார்.
ஐயர் அப்படி கூறியதும் அவனின் அருகில் இருந்த நண்பர்களும் சொந்தங்களும் சிரித்து விட, அவனுக்குள்ளும் சிறிது வெட்கம் தோன்றி தலையை கோதி தன்னை சமாளித்து கொண்டான். 

முகூர்த்த நேரம் நெருங்கியதும் கல்யாணப் பெண்ணை அழைத்துக் கொண்டு வரும்படி ஐயர் கூற, உடனே சாரங்கன் அங்கிருந்த ஊர் பெண்னிடம், போய் கல்யாண பொண்ணை கூட்டிட்டு வரும்படி கூறினார்.

அப்பெண் வந்து கூறியதும், மகளை அணைத்து விடுத்த லட்சுமி, மணமேடைக்கு செல்லும்படி கண்ணைக் காட்டினார்.
அருகில் இருந்த தந்தையை லேசாக அணைத்து, பின்னர் தாய் தந்தையர் இருவரின் காலிலும் விழுந்து வணங்கி, மணமேடையை நோக்கி ஊர் பெண்களுடன் மெதுவாக நடந்து சென்றாள் வைஷ்ணவி.

விஷ்ணுவிற்கு அவளை நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பது போல் எண்ணம் தான் தோன்றியது. ஆமாம் திருமணம் என்று பேச்சு வந்த பிறகு, வைஷ்ணவி விஷ்ணுவுடன் பேசுவதை வெகுவாக குறைத்து விட்டாள். எங்காவது அன்பரசு இல்லாமல் தனித்து செல்ல வேண்டும் என்றால், சாரங்கள் அவளை அழைத்துச் செல்வார்.

விஷ்ணுவுடன் வெளியே செல்வதை முழுவதுமாக தவிர்த்து விட்டாள். அது மட்டுமல்லாது மும்பையில் இருந்து வந்த பிறகு பேசிய அளவிற்கு கூட அவள் அவனிடம் பேசவில்லை. என்றாவது எதிர்பாராமல் பார்த்தால், அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறி விலகிவிடுவாள்.

அவளின் செயல் அவனுக்கு வருத்தமாக இருந்தாலும், தன் காதலுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான் விஷ்ணு. இரு தாய்மார்களுக்கும் வைஷ்ணவியின் செயல் கண்டு சிறிது வருத்தமாக தான் இருந்தது.

சங்கீதா நேரடியாகவே கேட்டுவிட்டார், “திருமணத்திற்கு பிறகு அவள் இப்படியே இருந்தாள் என்ன செய்வது விஷ்ணு?” என்று.

“அம்மா, நீங்கள் கண்டதையும் நினைத்து வருந்தாதீர்கள். அவளை நான் கவனித்துக் கொள்வேன். எங்களைப் போல் ஓர் சிறந்த தம்பதியர் இல்லை என்று, எல்லோரும் பாராட்டும்படி நாங்கள் வாழ்வோம். கவலைப்படாமல் இருங்கள்” என்று ஆறுதல் கூறி விடுவான்.

திருமணத்திற்கான நகையும் புடவையும் எடுக்கச் சென்ற அன்று மட்டும்தான் அவனது அருகில் அமர்ந்தாள். முதலில் உங்கள் இஷ்டம் என்று ஒதுங்கி அமர்ந்திருந்தவளிடம்,
“இன்று உனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், பின்னர் நாம் மணமொத்த தம்பதிகளாக இருப்போம். அப்பொழுது நம் கல்யாணம் புடவை உன் விருப்பப்படி இல்லை என்றால், பின்னர் உனக்கு வருத்தமாக இருக்கும். அதனால்தான் நான் உன்னை வற்புறுத்தி, இங்கு அழைத்து வந்தேன்” என்று வைஷ்ணவிக்கு புரியும்படி கூறினான் விஷ்ணு.

அவளும் யோசித்துப் பார்த்தாள். அவன் சொல்லுவதும் சரி என்று பட, லேசாக புன்னகைத்துக் கொண்டு, “எனக்கு எது உடுத்தினால் நன்றாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ! அப்படியே எடுங்கள்” என்று முழு பொறுப்பையும் அவனிடம் கொடுத்து விட்டாள்.

அவள் அப்படி எப்பொழுது சொல்லுவாள் என்று காத்துக் கொண்டு இருந்தான் போல விஷ்ணு. அவள் கூறிய பிறகு ஒரு நூறு புடவையாவது அவள் மேல் வைத்து வைத்து பார்த்து விட்டான். புடவை எடுத்துப் போட்டவரும் களைத்து விட்டார். வைஷ்ணவியும் களைத்துவிட்டாள்.

முடிவாக இப்பொழுது அவள் கட்டியிருக்கும் புடவையை செலக்ட் செய்து விட்டு, “இது உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்” என்று அவள் மேல் வைக்க, அவளுக்குமே அக்கலரும் மிகவும் பிடித்து விட, “சரி” என்று ஒத்துக் கொண்டாள்.

முடிவாக புடவை செலக்ட் செய்ததும் பெரியவர்கள் நிம்மதி அடைந்தனர். இவ்வளவு நேரம் அவனது அலப்பறையை கண்டு களைத்துப் போய் தானே அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

தாங்கள் தேர்ந்தெடுத்த புடவையில், அன்னம் போல் நடை நடந்து வரும் வைஷ்ணவியை விழியாகலாது பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனிடம் “பொண்ணு இங்க தான் வந்து உட்காரும் தம்பி. கொஞ்சம் இந்த பக்கம் திரும்பி இருங்க தம்பி” என்று அய்யர் கூறியதும் மேடையில் இருந்த இவர்கள் சிரித்து விட்டார்கள்.

‘இந்த ஐயர் நம்மள ரொம்பத்தான் ஓட்டுகிறார்’ என்று அவரை முறைத்துக் கொண்டே, தன் அருகில் வந்து அமர்ந்த வைஷ்ணவியை பார்த்து புன்னகை தான்.

அவளோ குனிந்த தலை நிமிராமல் இருந்ததால், அவனது புன்னகையை பார்க்கவில்லை. அதைக் கண்டு அவனது நண்பர்கள் மேலும் கிண்டல் செய்தனர்.

நல்ல நேரம் நெருங்கவும், ஐயர் தாலியை எடுத்து விஷ்ணுவின் கையில் கொடுத்து, “மாங்கல்யம் தந்துனானே..” என்று மந்திரத்தை சொல்ல, கெட்டி மேளங்கள் உச்சஸ்த்தானியில் ஒலிக்க, பெற்றவர்களும் பெரியவர்களும் ஆசீர்வாதம் செய்ய, வைஷ்ணவி கழுத்தில் தாலி கட்டி, அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் விஷ்ணு.

அதன் பிறகு செய்ய வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களையும் விஷ்ணு மகிழ்வாக முறைப்படி, தன் விளையாட்டுத்தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு செய்தான். வைஷ்ணவியும் ஐயர் சொன்ன அனைத்தையும் முறைப்படி முழுமனதாக செய்தாள்.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும், சாமி கும்பிட்ட பிறகு கோயிலில் இருந்து, மண்டபத்தை நோக்கி கிளம்பினார்கள் அனைவரும்.

மனைவி என்ற உரிமையில் தன் அருகில் அமர்ந்திருந்த வைஷ்ணவியின் கையை மென்மையாக பற்றி கொண்டான் விஷ்ணு. அவளுக்கும் அவன் கையை விட்டு தன் கையை எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். பத்து நிமிடத்திற்குள் மண்டபத்திற்கு வந்திருக்க, ‘ஏன் அதற்குள் மண்டபம் வந்து விட்டது, இன்னும் கொஞ்ச நேரம் பயணம் தொடர்திருக்கலாமே’ என்று தோன்றியது விஷ்ணுவிற்கு.

வரவேற்பு மேடையில் ஜோடியாக ஏறி நின்ற விஷ்ணு வைஷ்ணவி தம்பதியனரை, சுற்றமும் நட்பும் வாழ்த்தி புகைப்படம் எடுத்து சென்றார்கள்.
விஷ்ணுவின் தாய் தந்தையரின் சொந்தங்கள் அதிகம் ஆகையால் இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவேற்பை முடிக்க முடியவில்லை.
வரவேற்பு முடிந்ததும் சென்னைக்கு இன்றே சென்று விட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருக்க, திருமணத்திற்கு வந்தவர்கள் வரவேற்பு முடிந்து கிளம்பவே அதிக நேரம் ஆகிவிட்டது.

ஆகையால் சாரங்கனின் தம்பி “அண்ணா அவசர அவசரமாக இன்று நீங்கள் கிளம்ப வேண்டாம். நிதானமாக நாளை கிளம்புங்கள்” என்றார் சாரங்கனிடம்.

அவருக்கும் அது சரியாகப்பட, அன்பரசுவிடம் கூறினார்.
அன்பரசுவும் “எது நல்லதோ, அப்படியே செய்து கொள்ளலாம்” என்றார்.

புதன்கிழமை சென்னையில் மருத்துவமனை சார்பாக விஷ்ணுவிற்கு விருந்து இருப்பதால், அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று மகேஷ் அன்றே கிளம்புவதாக கூற, அவனுடன் கேசவன், மாலா இருவரும், மற்றவர்களை நாளை கிளம்பி பத்திரமாக வரும்படி சொல்லிவிட்டு சென்னை சென்று விட்டார்கள்.

திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியர் சென்னை சென்றுவிடுவார்கள். அங்கு தான் முதல் இரவக்கான சடங்கு செய்யலாம் என்று முடிவு செய்திருக்கும் போது, திடீரென்று இங்கு தங்குவதாக முடிவானதால், இரவு சடங்கை ஊருக்கு சென்று நல்ல நாள் பார்த்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார் சங்கீதா.

அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றதும், மண்டபத்தில் இருந்து மணமக்களை அழைத்துக் கொண்டு, அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு வந்தார்கள் அனைவரும்.

வீட்டிற்கு வந்தும் அக்கம் பக்கம் உள்ளவர்கள்  மாப்பிள்ளையையும் பெண்ணையும் பார்க்க வந்து கொண்டே இருக்க, அவர்களுக்கு ஓய்வே இல்லை.

வந்தவர் அனைவருடனும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அவளை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான் விஷ்ணு.

  • தொடரும்..

4 thoughts on “இருளில் ஒளியானவன்-22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *