பாகம் 15
இத்தனை நேரம் சந்திராவைப் பற்றி மாயாவிடம் கூறி கொண்டிருந்த சாரதாவுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல இங்கு சந்திராவுக்கும் ஏனோ சூர்யாவின் அன்னையின் அணைப்பு வேண்டும் போல இருந்தது. இவர்கள் யாரும் ஒரே வீட்டில் பிறக்கவில்லை. ஆனாலும் அதையும் தாண்டி உணர்ச்சியால் இணைந்திருந்தனர். இதைப் பற்றி மாயாவும் புரிந்துக் கொள்வாள். எட்டாம் மாதம் ஆனதால் ஆயா தன் பேத்திக்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டார் . அதன் படியே அய்யரிடம் நாள் குறித்து, சந்திராவுக்குச் சொன்னார். சூர்யாவிடம் , “அய்யா! உங்க அம்மாவுக்கு சொல்லணும். வயசுல பெரியவங்க. வீட்டுக்கு வந்து பூ பழம் வச்சு கூப்பிடனும். அதுதான் முறை” “ஓகே வாங்க” ராஜுவுக்கு வீடுத் தெரியும் என்பதால் அன்று மாலையே ராஜுவும் ஆயாவும் சூர்யா வீட்டிற்குச் சென்றனர். அப்போதுதான் மாயாவை ராஜு பார்த்தான், வெகு அருகில். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்தாள் மாயா . சாரதா சிறிது நேரம் ஆயாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அங்கே தலை குனிந்து மாயா நின்றுக் கொண்டிருந்தாள். அப்போது ராஜுவின் காந்தப் பார்வை தன்னை இழுப்பதை அவள் உணர்ந்தாள். அவள் பார்க்காத ஆண்களா ? இது வேறு . அதை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதே தவிப்பில்தான் இருந்தான் ராஜு. இதுவரை தனக்கு ஒரு கால் ஊனம். தனக்கென்று வாழ்வில் ஒன்றும் இல்லை என்று வாழ்ந்துக் கொண்டிருந்தவனுக்கு மனதில் இது ஏதோ ஒரு புது அனுபவமாக இருந்தது. முதல் முறை, அவளைக் கொண்டு வந்து விடும்போது பார்த்தவன்தான். ஆனால் இத்தனை அருகில் பார்க்கவில்லையே ? இது மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்றியது. “கண்டிப்பா வரேங்க “,
அவர்கள் கிளம்பியதும்,
“தம்பி நீங்க போங்க நான் கொஞ்சம் இவங்ககிட்ட பேசணும்”
“சரிங்க , ஆத்தா வண்டிக்கு வந்துடு” “மாயா! நீ போய் அவரை கீழ இறக்கி விட்டுட்டு வா” சாரதா கட்டளையிட்டார்.
“சரிங்கம்மா !” மாயா கதவை மூடிக் கொண்டு வெளியேறினாள். யாரும் இல்லாத தனிமையில், “ஆயா சந்திரா நல்லா இருக்காளா ?” சாரதாவின் குரலில் அத்தனை ஏக்கம்.
“அம்மா உங்களுக்கு எப்படி அவங்கள ?” “அதெல்லாம் இருக்கட்டும். அவ புருசனோட சந்தோசமா இருக்காளா ? இப்போ எத்தனை மாசம் ஆகுது?” தாயின் பரிதவிப்பு சாரதாவின் முகத்தில் தெரிந்தது. சந்திரா இவரது மகளாக இருப்பாளோ என்ற சந்தேகம் ஆய்வுக்கு வந்து விட்டது ஒரு நொடி. “நல்லா இருக்குமா .பாவம் அதுக்கும் எட்டு மாசம் ஆகுது. யாரும் அதுக்கு சீமந்தம் பத்தி பேசல. அதுக்கு யாரு இருக்கா யாரு இல்ல ஒன்னும் சொல்ல மாட்டேங்குது. உங்களுக்கு அவ மேல என்னமா அக்கறை? உங் களுக்கும் அதுக்கு என்னம்மா சம்மந்தம் ?”
“அவ எனக்கு பொண்ணு முறை. ஏதோ சின்ன மனஸ்தாபம் . எங்களுக்கும் அவங்களுக்கும் பேச்சு வார்த்தை இல்லாம போச்சு. அவளையும் உங்க பேத்தியா நினச்சு பார்த்துகோங்கம்மா”. “நீங்க சொல்லவே வேணாம்மா. அது எனக்கும் பேத்திதான். உங்ககிட்ட சொல்லறத்துக்கு என்ன? என்னோட பேத்திக்கு மூணு மாசம். ரோட்டுல நடந்து போகும்போது ரெண்டு பசங்க காருல புடிச்சுக்கிட்டு போய்ட்டாங்க, அப்போ சந்திரா அம்மாதான் பின்னாடியே ஓடி போய் காரு நம்பரை எழுதி போலீசுல குடுத்து எங்க பேத்தியை ரெண்டே மணி நேரத்துல துரத்தி புடிச்சாங்க. பேப்பர்ல கூட வந்தது. என்னோட பேர் சொல்லதீங்கன்னு சந்திரா பொண்ணு சொல்லிடிச்சு. அப்போ அதுக்கும் மூணு மாசம். இந்த காலத்துல யாரு இந்த மாதிரி உதவி பண்ணுவா ? அவங்க தான் எங்களுக்கு தெய்வம். இந்த காலத்துல பொண்ணுங்க தொலைஞ்சா?? நினைக்கவே பயமா இருக்கு” “எப்பையுமே அவ தன்னை பத்தி யோசிக்க மாட்டா . மத்தவங்கள பத்திதான் யோசிப்பா, அவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துகோங்கம்மா. உங்களுக்கு எப்ப எது வேணுன்னாலும் எனக்கு சொல்லுங்க. உங்கள பார்த்ததுல எனக்கு மனசுக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கு”. கை கூப்பி அவர்களை வழி அனுப்பினார் சாரதா . இதை எல்லாம் கேட்டுக் கொண்டே வந்த மாயாவுக்கு, “என்னதான் இருந்தாலும் அவங்க, அய்யாவை வேண்டான்னு சொல்லி இருக்கக் கூடாது. அய்யாவையே வேண்டாங்கன்னா அவங்க எப்படி இருந்தா என்ன ? அய்யா எத்தனை நல்லவரு ? ஒரு நாள் ஒருத்தர தப்பா பார்த்துருப்பாரா ? நானே அவன் இத்த பண்ணான் . இவன் இங்க கடிச்சான்னு எத்தனை சொல்லி இருக்கேன் ? ஒரு நாள் பார்த்துருக்காரா ? அப்பேர்பட்டவரை இந்த பொண்ணுக்கு வேண்டான்னு சொல்ல எப்படித்தான் மனசு வந்துச்சோ ? எல்லாம் இருக்குறப்போ அருமை தெரியாது. இவங்க என்னன்னா சந்திரா சந்திரான்னு ஒரு நாளைக்கு நூறு தடவ சொல்லறாங்க. பெத்த புள்ளைய வேண்ணானு சொன்னவள பத்தி இவங்களுக்கு என்ன?”
மனதிற்குள் ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தாள் மாயா. அதற்கு நேர் எதிர்மறையாக இருந்தான் ராஜு. ஆயாதான் பேசிக் கொண்டு வந்தாள் . ராஜு “ம்” கொட்டிக் கொண்டு வந்தான். அவர்கள் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்தே மந்திரித்து விட்டது போல இருக்கும் மாமனை ராணியும் கவனித்து கொண்டிருக்கிறாள். பாட்டு, சினிமா என்றாலே வெறுப்பு கொள்பவன் வரிசையாக காதல் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தால் ? யாருக்குத்தான் தெரியாதாம். அது மட்டுமா? முகத்திற்கு பவுடர் போடுவதும், தலையை அடிக்கடி சீவுவதும் ஆயாவுக்கும் தெரிந்ததே. ராஜூவை பார்த்த ராணியின் கணவன் கூட ” ஏண்டி! இங்க என்னடி நடக்குது? “என்று கேட்டார் சீமந்தத்தில். அன்று பார்த்தது மட்டும் அல்ல இதற்கான காரணம். இப்போதெல்லாம் அடிக்கடி அவன் மாயாவை சந்திக்க ஆரம்பித்துவிட்டானே! அடுத்த இரண்டு நாட்களிலேயே ராணிக்கு சீமந்தம் நடந்தது. தனக்கும் சீமந்தம் செய்துக் கொள்ள ஆசையாக இருந்தது. வெட்கத்தை விட்டு ஆயாவிடம் கேட்டாள் சந்திரா. “அதுக்கு என்ன கண்ணு? உனக்கு இல்லாததா ? ராணிக்கு வாங்கும்போது உனக்கும் சேர்த்துதான் வாங்கினேன் என்று இவளுக்கு கை நிறைய வளையல் போட்டு விட்டாள் . அப்போது உணவு அறைப்பக்கமாக வந்த சூர்யா, “என்ன? என்னாச்சு எனி ப்ராப்லம் ? என்று கேட்டுக் கொண்டே இவர்களை சந்தேகப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு வந்தான். அவனின் நீண்ட காலடி சத்தத்தை கேட்டவுடன் தானாகவே சந்திரா எழுந்துக் கொண்டாள்
“வாங்க சார். நான்தான் சந்திராவுக்கு சும்மா வளையல் போட்டு விட்டேன். இந்தாங்க சார் நீங்களும் போடுங்க” ஆயா நீட்டினாள். இருவருமே அதிர்ச்சியாக பார்த்தனர்.
“நான் எப்படி ?” தடுமாறினான் சூர்யா.
“அய்யா! நீங்க இப்போ யாரோ ஒரு ஆம்பிள இல்ல. எங்களுக்கு படி அளக்கற முதலாளி. அது மட்டும் இல்லாம உங்களுக்கு இருக்கற நல்ல மனசு யாருக்கு வரும் ? ”
“ஆல் தி பெஸ்ட் சந்திரா” மனதார வாழ்த்தினான். மற்றவர்கள் யாருக்கும் சந்திராவை பிடிக்காது என்பதால் ஆயா யாருக்கும் சொல்லவில்லை. மறுநாள் காலையில் சூர்யா அலுவலகத்துக்கு வரவில்லை. வீணா அனைத்து மீட்டிங்கையும் வேறு நாளுக்கு மாற்றிக் கொண்டிருந்தாள். “என்னாச்சு வீணா ? சார் இன்னிக்கு வரல?”சந்திரா கேட்டாள் . “ஓ! உனக்கே தெரியாதா ? அவங்க அப்பா இறந்துட்டாரு” ஒரு மாதிரி இளக்காரமாக பதில் வந்தது.
“ஒனக்கு யாரு சொன்னா ?” முகத்தில் குழப்பமாக கேட்டாள் சந்திரா. “சாருதான்” சொல்லிக் கொண்டே வேறு யாருக்கோ கால் செய்தாள் . தனது நாற்காலியில் வந்து அமர்ந்தவளுக்கு ஒரே குழப்பம். ‘அவங்க அப்பா இறந்துட்டாரா ? இவர்களுக்கும் அவங்களுக்கும் சம்மந்தமே கிடையாதே? அப்புறம் எப்படி இவருக்கு ? இப்போ ஆன்டிக்கு யாரு கூட இருப்பாங்க? இல்ல யாரு இருந்தாலும் இல்லனாலும் அவங்க மனசு என்னைதான் தேடும். நான் போகணும். உடனே போய் சூர்யாவையும் பாக்கணும்’யோசித்தவள் அறை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ராஜுவின் ஆட்டோவிலேயே சூர்யா வீட்டிற்கு சென்றாள் . அவர்கள் வீடே நிசப்தமாக இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை. மாயாவுக்கு யாரிடம் என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. அவர்கள் இருவருமே உண்ணாத போது தான் மட்டும் எப்படி உண்பது? எதுவும் சமைக்கவில்லை. இருவரிடமும் துளி காப்பியாவது குடியுங்கள் என்று எத்தனையோ கெஞ்சிப் பார்த்தாள் . இருவருமே தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டார்கள். இவர்களின் வருத்தம் அவளையும் படுத்தியது. அவள் கணவனும்தான் இறந்தான். ஆனால் அதை எல்லாம் உணரக் கூடிய நிலையில் பாவம் அவள் அப்போது இல்லை. இங்கே என்ன பிரச்சனை என்பதெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் கணவன் இறந்ததே காலை செய்தித் தாளில் பார்த்து தானே தெரிந்துக் கொண்டார் சாரதா.
” அம்மா பாவம்” என்று நினைத்தாள் . ஆம்! நான்கு நாட்களுக்கு முன் சூர்யா ரத்தம் கொடுத்தது அவன் தந்தைக்குத் தான். இரங்கல் செய்தியில் பார்த்துதான் அவன் தந்தை இறந்தது அவனுக்கு தெரியும். விஷயத்தை செய்தி தாளில் படித்தவன் அவர்தானா இவர் என்று மருத்துவமனையில் கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான். இவனுக்குப் போக இஷ்டம் இல்லை. ஆனால் சாரதாப் போக வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். அன்னைக்காக இருவரும் சென்றனர். அங்கு யாரோ ஒரு பெண் மனைவி ஸ்தானத்தில் நின்றிருந்தார். யாரோ ஒருவன் மகனாக நின்றிருந்தான். சூர்யாவுக்கு மனம் கொதித்தது. “பாத்தீங்களா? நான் படிச்சு பெரிய ஆளா வந்துட்டேன். ஆனா அதைக் கூட உங்களுக்கு பாக்க இஷ்டம் இல்லை”. பிணத்திடம் கோபம் வந்தது. ‘எல்லா தப்பையும் பண்ணிட்டு எந்த தண்டனையும் இல்லாம தப்பிச்சுடீங்க இல்ல ?’ மனம் குமுறியது சாரதாவிற்கு . வீட்டில் வந்து குளித்து விட்டு அமைதியாக அவரவர் அறைகளில் அமர்ந்தவர்கள்தான். அதற்கு பிறகு எந்த அசைவும் இல்லை . ஆனால் மதியம் சாரதா சூர்யாவிடம்,
“சூர்யா எனக்கு சந்திராவை பாக்கணும் சூர்யா” என்று வந்து நின்றார். “அம்மா உனக்கு என்ன சொல்லணுமோ அத கேட்க நான் இருக்கேன். அவ எதுக்கு?” “தெரியல சூர்யா. என் மனசு அவளைத்தான் தேடுது”. கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. “ம்மா! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு”. குழந்தை போல அழும் அன்னையை மகனுக்கு தேற்ற தெரியவில்லை. அப்போது காலிங் பெல் அடித்தது. “மாயா! வாசல்ல யாருன்னு பாரு” வாயிலில் நின்றிருந்தது சந்திராதான் . “இங்க சூர்யா சார்?” மாயாவிடம் கேட்டாள் .
“நீங்க?”
“சந்திரா ”
சந்திராவை பார்த்த மாயாவிற்கு அந்த நிலையிலும், எவ்ளோ அழகா இருக்காங்க? என்றுதான் தோன்றியது.
“வாங்க! உள்ள வாங்க “
உள்ளே அழைத்துச் சென்றாள் மாயா . எப்போதும் போல எந்த தயக்கமும் இல்லாமல் உள்ளே சென்ற சந்திராவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் என்றால், அவளுக்கு அடுத்த ஆச்சர்யமும் காத்திருந்தது. எந்த தயக்கமும் இல்லாமல், சூர்யாவின் அறைக்கு சென்றாள் . அங்கே மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்த சாரதாவை தலையில் தடவினாள் .
“வந்துட்டியா சந்திரா! இவன் கிட்ட கேட்டா உன்ன கூப்பிட முடியாதுன்னு சொல்லிட்டான். குழந்தையாக மாறிய அன்னையை பார்த்த மகனுக்கு மனதில் பயம் தொற்றிக் கொண்டது.
“சரி! சரி! அதான் வந்துட்டேனே ? அழக் கூடாது என்று மகள் சொன்னதுதான் தாமதம்” ஓ “வென வெடித்து அழுகை கிளம்பியது. அவரின் அத்தனை வருடத்து துக்கத்தையும் அன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும் போல தோன்றியது. தன்னை பெற்ற அன்னை எதற்காக சந்திராவை தேடினார் என்பது இப்போது சூர்யாவுக்கு புரிந்தது. ஆம்! அவன் அன்னை தேடிய அன்னை, சந்திராதான். சிறு பிராயத்தில் இருந்து தேடிக் கொண்டிருந்த அன்னை . குழந்தையாக மாறி அழும் அன்னையை பார்த்து அவனுக்கும் கண் கலங்கியது. அதை சந்திராவால் தாங்க முடியுமா? அவனையும் அருகில் அழைத்தாள். நாற்காலியில் அவனை அமரச் செய்தவள் ஒரு பக்கம் அன்னையை தோளில் சாய்த்துக் கொண்டிருந்தாள். மறு பக்கம் சூர்யாவின் தலையை தடவினாள் . அப்போதே அவளை, அவள் இடுப்பை கட்டிக் கொண்டு காலையில் நடந்த அவமானத்தை சொல்லி அழ வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. மனதை அடக்கியவன் சட்டென எழுந்து முகம் கழுவிக் கொண்டான். சாரதாவை தேற்றியவள்,
“ஆன்டி! ஆன்டி! நான் சொல்லறதை கேட்கணும். போய் முகம் கழுவிக்கிட்டு வாங்க. முதல்ல ஏதாவது சூடா குடிங்க. மனசுக்கு தெம்பா இருக்கும். பாருங்க. படிச்சு பெரிய ஆளா வந்து நிக்கறாரு உங்க புள்ளை . இதை விட வேற என்ன வேணும்? அவருக்காக நீங்க உங்கள சமாதானப்படுத்திக்க வேணாம் ? நீங்க பெத்த குழந்தை அங்க அழுதுகிட்டு இருக்கு பாருங்க. நம்ம குழந்தையை பாருங்க. பாருங்க ஆன்டி”
தலையை நிமிர்த்து மகனின் முகத்தை பார்க்க வைத்தாள் . மகனை பார்த்தவருக்கு இன்னும் அழுகை வெடித்துக் கிளம்பியது.
“நானும் இவனும் என்ன பாவம் பண்ணோம் சந்திரா ? பொண்டாட்டிங்கற எடத்துல வேற யாரோ ஒருத்தி நிக்கறா ? அவதான் வேண்டான்னு சொல்லிட்டு தூக்கி போட்டுட்டு போய்ட்டாளே ? அவன் புள்ளைன்னா ? அப்போ இவன் யாரு?” மீண்டும் கதறினாள். அவள் அழும்வரை அழட்டும் என்று அவள் முதுகை நீவி சமாதானப் படுத்தினாள் . வெகு நேரத்திற்கு பின், தானே சமாதானம் அடைந்தார் சாரதா . எழுந்து முகத்தை கழுவிக் கொண்டு வந்தவர் ,
“ரொம்ப தேங்க்ஸ் சந்திரா .உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். நீ எப்படி இங்க ?”
“உங்களுக்காகத்தான் !” சந்திரா பதில் உரைத்தார்.
அன்னை அவள் முகத்தை தடவினார். வயிற்றை தடவினார்.
“நீ சொன்ன மாதிரி இவனுக்காக நான் மனச மாத்திக்கணும் . ஆனா இந்த உலகத்துல ஆம்பளைங்க எந்த தப்பும் பண்ணாலும் அவங்களுக்கு தண்டனையே கிடையாதில்ல ?”
சந்திராவால் பதில் சொல்ல முடியவில்லை. இதே கேள்வியைத்தான் மாயாவும் பல நேரங்களில் கேட்டிருக்கிறாள் . பாவம் இந்த பாவப்பட்ட பெண்களுக்கு பதில்தான் கிடைக்கவில்லை.
“நீங்க போய் முகத்தை கழுவிட்டு வாங்க ஆன்டி! முதல்ல சூடா காபி சாப்பிடுங்க. அப்புறமா ஏதாவது சாப்பிடுங்க”. சொல்லிக் கொண்டே முந்தானையை எடுத்து சொருகிக் கொண்டு அனைவருக்கும் காபி போட போனாள் . மாயாவும் பின்னோடே சென்றாள் . “இருங்க நான் பண்ணறேன்” “என்ன மாயா எனக்கேவா? ” கிண்டலாக சொன்னாள் சந்திரா. “போ! நீ போய் உட்காரு. இவங்க சாப்பிடலன்னா நீயும் ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்ட. உனக்கும் காபி போடறேன்”. இவளையும் உரிமையாக உட்காரவைத்து அவளே காபி போட்டாள் . அனைவரும் காபி குடிக்க சூர்யா மட்டும் எழுந்து சூடாக இருந்த பாலில் ஹூர்லிக்ஸை போட்டு கொண்டு வந்தான். மிதமான சூட்டில் அவளுக்கு ஏற்றபடி பாலை ஆத்திக் கொண்டு வந்தவனை பார்த்த மாயாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பாதி குடித்தவள் போதும் என்று விட்டாள் . இவனே அவளை கட்டாயப்படுத்தி ஊட்டினான் . அந்த வீட்டை பார்த்த மாயாவுக்கு அது துக்கம் நடந்த வீடு என்பதே மறந்து விட்டது. ஹார்லிக்ஸை குடித்து விட்டு வீட்டில் அனைத்து அறைகளுக்கும் சென்று விளக்கை போட்டுக் கொண்டிருந்த சந்திராவை பார்த்த மாயாவுக்கு ஒன்றுதான் தோன்றியது. “இவர் யாரை வேண்டுமானாமலும் திருமணம் செய்துக் கொண்டிருக்கலாம். ஆனால் “இந்த” வீட்டின் உயிர்ப்பே இவர்தான்”. சூர்யாவின் அறைக்குச் சென்று விளக்கை போட்டவள், அவன் அவனது அறைக்கு வரவும்,
“சார்! உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கணும்” “ம்” “நீங்களும் உங்க அம்மாவும் அத்தனை கஷ்டப்பட்டீங்க சரி! ஏன் உங்க அப்பாகிட்டேர்ந்து உங்க அம்மா ஜீவனாம்சம் வாங்கல ?நீங்க இதை தப்பா எடுத்துக்க கூடாது. என்னோட கேள்வி உங்கள காயப்படுத்தக் கூடாது”. “முதல்ல எங்க அம்மா விவாகரத்தே வாங்கல ” “என்ன ?” “எப்போ நாங்க வேண்டான்னு அவரு அவ்ளோ தெளிவா வெளில அனுப்பிட்டாரோ அதுக்கப்புறம் எதுக்கு விவாகரத்து? அதேதான் பணத்துக்கும். அம்மா நான் போய் கேட்டுப் பாக்கறேன்னுதான் சொன்னாங்க. விடலை பருவம் அதிகமான கோபம், வெறுப்பு. நாந்தான் போகக் கூடாதுன்னு சொல்லிட்டேன்”.
“ஓ ! எனக்கு இன்னொரு சந்தேகம்! அவங்கதான் ஐ மீன்.. உங்க அப்பாவை வேண்டான்னு சொல்லிட்டு போனாங்களே ? அப்புறம் எப்படி மறுபடியும்?” “அதெல்லாம் பத்தி எனக்கும் எங்க அம்மாவுக்கும் எதுவுமே தெரியாது சந்திரா. அவரு அத்தனை அழகா சீக்ரட் மைண்டைன் பண்ணி இருக்காரு. இன் பாக்ட் அந்த பையன் யாரோட குழந்தைன்னு கூட எங்களுக்கு தெரியாது. அவர் வேண்டாம்னாரு . நாங்க மொத்தமா ஒதுங்கிட்டோம். ஜஸ்ட் அவர் எனக்கு ஒரு பையோலாஜிக்கல் பாதர்.அதுக்கு மேல ஒன்னும் இல்ல. அம்மா, நான் கொல்லி வைக்கற உரிமையாவது கிடைக்குன்னு நினைச்சாங்க. ஒரு மகனா அது நான் பண்ண வேண்டிய கடமைனு சொன்னாங்க. பட் அதையும் அவர் வேண்டான்னு ஒதுக்கிட்டாரு”.
“அது அவரோட விருப்பம் இல்ல சார். எப்போ மகனுக்கு செய்யவேண்டிய கடமைகளை அப்பாவா அவர் செய்யலையோ அப்ப அவருக்கான கடமையை நீங்க செய்ய வேண்டான்னு கடவுளோட விருப்பம். அதே சமயம் உங்களை கடவுள் விட்டு கொடுக்கல. உங்ககிட்டேர்ந்து அப்பாவுக்கு தேவையான ரத்தத்தை வாங்கிக்கிட்டாரு. எப்பையுமே கடவுளோட கணக்கு தப்பாகாது சார்”
“சந்திரா நீ கிளம்பு. ராஜு வந்துருப்பார்” அவன் நாசுக்காக கடவுள் பேச்சை தவிர்க்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது . பெருமூச்சு விட்டு கிளம்பினாள். “மாயா! நீ கூட போய் ஆட்டோ ஏத்தி விடு” “சரிங்க அய்யா” சாரதாவிடம் சொல்லிக் கொள்ள போனாள் சந்திரா. மீண்டும் ராஜூவுக்கே அழைத்து சந்திராவை வீட்டில் விட சொல்லி இருந்தான் சூர்யா. அவர் வருவதற்குள், தன்னுடைய பீரோவில் இருந்து நகை பெட்டியை எடுத்து சந்திராவிடம் கொடுத்தார் சாரதா. அதில் அழகான தங்க வளையல்கள் இருந்தன. “நேத்துதான் நானும் அவனும் போய் உனக்காக வாங்கிட்டு வந்தோம். புடிச்சிருக்கா ? ”
“ம்ம் !ரொம்ப அழகா இருக்கு ஆன்டி. எப்படி கை சைஸ் தெரிஞ்சது? ” “அவன்தான் செலக்ட் பண்ணினான்.நேத்துனா நானே போட்டு விட்டுருப்பேன். இன்னிக்கு வேணாம். நீயே வீட்டுல போய் அம்மா கையால போட்டுக்கோ”.
“நீங்க போட்டு விடறதுன்னா ஓகே. இல்லனா வேணாம்”.
“உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்.இன்னிக்கி நான் வேணாம்” தாடையை பிடித்துக் கொஞ்சினார்.
“சரி! அவரை போட்டு விடச் சொல்லுங்க. முதலாளி எங்களுக்கு தெய்வம்” குறும்பாக தலை சாய்த்து அவள் சொன்னதன் அர்த்தம் அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவுக்குத்தானே தெரியும் ? எம்மா இங்க என்ன நடக்குது ? மாயாவுக்கு தலை சுற்றியது.
ஆமா…! நிசமாவே இங்கே என்னா நடக்குதுன்னு தெரியலையே…!
😜😜😜
என்ன நடக்குது ஒன்னும் புரியல