Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-27

ஐயங்காரு வீட்டு அழகே-27

அத்தியாயம்-27
  
  மெத்தையில் அப்படியொன்றும் கட்டிக்கொண்டு உருள வேண்டாம்’ என்று கூறியவளோ முதுகுகாட்டி கண்ணீரை வழிய விட்டாள். ராவணன் இமை மூடி எப்பொழுதே உறங்கியிருந்தான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

  ராவணனின் தீண்டல் அணைப்பின்றி ஏங்கியது என்னவோ காருண்யா தான்.

  மணி பன்னிரெண்டரை ஆகவும் ராவணனை பார்த்து பார்த்து, ஏங்கினாள். அவன் அணைத்து பழக்கப்படுத்தி விட்டானா? அல்லது அவன் கோபம் தன்னை வெகுவாய் பாதிக்கின்றதா?

       இதையே நினைத்து கண்ணயர்ந்துவிட்டாள்.

அடுத்த நாள் காலையில் காருண்யா எழுந்தப்பொழுது ராவணன் அங்கில்லை.
  தனக்கு திருமணமாகி ராவணனிடம் முதல் சண்டை ஆரம்பித்துள்ளது. பொதுவாய் வெஜ் பீப்பிள் நான்வெஜ்பீப்பிள் இருவரும் வெவ்வேறு துருவமே. உணவு விஷயத்தில் சண்டை வரலாமென்று தயாராகி வந்தவளே. ஆனால் இதுநாள் வரை அந்த பேச்சே எழவில்லை. முட்டையை கூட வந்த முதல் நாளே குப்பையில் கொட்டினாள். ஆனால் நேற்று முதல் சண்டையின் ஆரம்பமே என்னென்னவோ பேசிவிட்டான்.
  
  திருமணத்திற்கு முன்பிருந்து, திருமணமாகி இத்த வீட்டில் அடியெடுத்து நண்பர்களாய் பழகிய நாட்கள் வரை தான் அவனின் பாராமுகம் ஒதுக்கம் எல்லாம் துல்லியமாக கவனித்து சண்டையின் ஊடே ஹைலைட் செய்ததும் காருண்யாவுக்கு நெஞ்சைடைத்தது. அதெல்லாம் நினைவு வந்து, தற்போது கணவனை தேடினாள்.

   அவசரமாய் அறையிலிருந்து எழுந்து வந்தப்பொழுது செம்பருத்தி டீயை சுவைத்துக் கொண்டிருந்தான் ராவணன்.

    “எழுப்பிருந்தா காபி போட்டு தந்திருப்பேனே” என்று சண்டையை மறந்தவளாக பேசி வந்தாள்.

   ராவணன் எதுவும் பேசாமல் மிடறு பருகி பேப்பரில் கவனத்தை வைத்தான். ராவணனுக்கு காருண்யாவை அணைத்துக் கொண்டு உறங்காமல் நேற்றிரவு வீம்பிற்கு படுத்து விட்டான். உடனடியாக உறக்கத்தையும் தழுவினான்.
  ஆனால் நள்ளிரவு தாண்டி உறக்கம் பறிப்போனது. காருண்யாவை அணைத்தால் மட்டுமே உறக்கம் திரும்ப கிடைக்குமென்று மனம் கூற, அவன் மூளையோ ‘அவ உன்னை அப்படியொன்னும் உருள வேண்டாம்’னு சொல்லிருக்கா. தட் மீன்ஸ்… என் பிரிவு அவளை பாதிக்காதாம். அப்படியிருக்க நான் அவளிடம் வலிய போய் பேசணுமா?.’ என்று மனதில் உழப்பி, காலையில் உறக்கத்தை புறம் தள்ள, நேரமாகி, வயிறு பசிக்கவும் பல் விலக்கி காருண்யாவை எழுப்பாமல் செம்பருத்தி டீயை அவனே போட்டு பருகினான்.
  ஆனால் காருண்யாவுக்கு ‘என் கையால காபி குடிச்சவர். இப்ப என்னை விலகி நிறுத்தறார்.’ என்று மனதோடு புலம்பினாள். அவன் வேறு பேசியதற்கு பதிலும் தரவில்லை‌.

  “மதியம் ரோஸ்லின் உங்களுக்கு சாதம் கொண்டு வருவா. இப்ப காலையில் என்ன செய்யட்டும்” என்று நறுக்கி தெறித்து கேட்க, “நான் கேட்டதை தான் அப்படியே சமைச்சி கொடுக்க போறியா? என்னவோ செய். மதியம் நான் ரோஸ்லின் கொண்டு வருவதை சாப்பிட்டுப்பேன்.” என்று பதில் தந்தான்.
 
  ஒரு பார்மாலிடிஸுக்காகவது “ஏதாவது செய்.” என்று உரைத்திடுவானென்று எண்ணம். அல்லது சமாதானம் செய்யும் நோக்கத்தில் பேசுவானென்று எண்ணினாள். ஆனால் அவளாக ‘ரோஸ்ஸின் கொண்டு வருவா’ என்று கூற ஆரம்பித்ததால், ‘ரோஸ்லின் கொண்டு வருவதை சாப்பிடுவேன்’ என்று இவனாகவும் கூறினான்.  அவனும் இதயத்தோடு  பொங்கிவிட்டான்.

  இட்லி அவித்து அதையே காலை மாலை என்று இரண்டு வேலையும் கட்டிக் கொண்டாள். ராவணனுக்கு காலையில் மட்டும் வேர்கடலை சட்னி செய்து வைத்தாள்.

அலுவலகம் செல்ல பைக்கில் அமரும் போது அவன் தோளை பற்றிக் கொண்டாள்.

   எப்பொழுதும் இருக்கும் மனநிலை மாறி அமைதியாக வந்தாள்.
   ராவணனுக்கும் அந்த இறுக்கம் இருக்குமோ, என்னவோ சிக்னலில் காத்திருக்கும் நொடிகள் கூட எரிச்சலில் நின்றான்.
  
   அலுவலகம் வந்ததும், மற்றவர்கள் முன் காருண்யாவிடம் கோபத்தை காட்டா அவன் மனம் எடுத்துரைக்கவில்லை.
  அதனால் அவன் வேலையுண்டு அவனுண்டு என்று மாறினான்.

  தாமஸ் மற்றும் ரோஸ்லின் இரு கிறிஸ்டியன் என்பதாலும், இருவருமோ ராவணனுக்கு நெருக்கம் என்பதால், உணவை, பகிர்ந்துக் கொண்டார்கள்.

   காருண்யா முதல் முறை தனித்து சாப்பிடும் நிலையில் தள்ளப்பட்டிருந்தாள்.

  இன்று ரோஸ்லினை கூட துணைக்கு அவள் எதிர்பார்க்கவில்லை‌. ஆனால் கணவன் ராவணனை அருகே எதிர்பார்த்தாள். சூழ்நிலை அப்படியில்லையே.

   கேண்டீனுக்கு செல்லாமல், கேபினிலேயே உட்கார்ந்து, தான் கொண்டு வந்த இட்லியை விழுங்கினாள். ஏற்கனவே இரவில் ராவணன் தீண்டலின்றி தவித்தாள். தற்போதும் தனித்து அமர மனம் வெதும்பினாள்.

  நாலு இட்லியை இட்லிப்பொடியுடன் தொட்டு சாப்பிட்டு நீர் அருந்தியவள், டிபன் பாக்ஸை கழுவ கேண்டீனுக்கு சென்றாள்.

  ராவணன் கைகளில் லெக் பீஸுடன் சுவைத்து விழுங்க, பற்றிக்கொண்டு வந்தது.
  மேலோட்டமாய் கண்கள் டேபிளில் சென்று திரும்ப அதிர்ந்தாள்.
   ப்ரியாணி, வறுத்தகறி, முட்டை, மீன் என்று எல்லாமே காருண்யா எட்டி ஓடும்‌ விதத்தில் ராவணன் தட்டை அலங்கரித்தது. ரோஸ்லின் புன்னகை உதிர்க்க மழுப்பளாக நழுவினாள் காருண்யா.

   டிபன் பாக்ஸை கழுவி வேகமாய் அவளது இடத்திற்கு வந்து சேர்ந்தாள்‌. தாரை தாரையாக கண்ணீர் மழை கொட்டியது.
     காருண்யா பாட்டி சொல்லி வளர்த்த விஷயங்கள் நிறைய. அதில் மாமிசம் சாப்பிடறவா கெட்டவா.’ ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது பாவம்’ அப்படிப்பட்டவாளோட பழக்கத்தை தூரயெறி என்றது.
   இன்று ராவணன் கணவன் என்ற உறவில் அசைவம் சுவைக்க, மனம் முரண்டியது. 
சாப்பிட்டு முடித்ததும் அவரவர் கேபீனில் பேசி அமர, ராவணனும் வந்தான்.

  ரோஸ்லின் கடையில் வாங்கி வந்த ஸ்வீட் பீடாவை வாயில் சுவைத்து வந்தான்.
   காருண்யா அங்கிருந்து எங்கு ஓடுவாள்.
  வேலையே கண்ணும் கருத்துமாக கவனித்தாள். ஸ்வீட் பீடாவை முழுங்கியவன், தண்ணீர் குடித்துவிட்டு, அடுத்து சீரகமிட்டாயை பிரித்து வாயில் போட்டு வேறு மென்று திண்றான். குப்பைக்கூடையில் கவரை போட்டுவிட்டு வேலையில் முழ்க, காருண்யா ஒரக்கண்ணால் மட்டுமே கவனித்தாள். இன்றைக்கு செய்ய வேண்டிய வேலையில் அவரவர் சரியாக முடிக்கும் தருணம், காருண்யா ராவணன் புறம் திரும்பினாள்.

  ராவணன் சிக்லெட் போட்டு மென்றிருப்பான் போல வாயில் முட்டைவிட, ‘மனசுல குழந்தன்னு நினைப்பு.’ என்று திட்டியபடி, அவன் மெல்லும் விதத்தை ரசித்தாள்.
 
  ஒவ்வொரு முறை மெல்லும் பொழுதும், அவன் தாடை கடினமேறி விடுபட, ராவணன் திரும்பி முட்டை விட்டு அவளை பார்த்தான்.

என்னத்தையோ முனங்கிவிட்டு வேலையை பார்க்க, ஒருபேப்பரில் அதை உமிழ்ந்து சுருட்டி குப்பையில் போட்டான்.

    மாலை நேரம் வேண்டாவெறுப்பாய் பைக்கில் அமர்ந்திட, ராவணன் வீட்டுக்கு வந்ததும் குளிக்க சென்றான்.

  காருண்யா பாலை சுடவைத்து பில்டர் காபி போட்டு அருந்தினாள்.
   ராவணன் டிவியில் மூழ்கினான். பால்கனி வந்தவள், பாட்டியிடமும் ரோகிணிமிடமும் போனில் அழைத்து பேசினாள்.

பாட்டியிடம் இன்னமும் ராவணன் அசைவம் சாப்பிட்டதை உரைக்கவில்லை. சில நேரம் அவரிடம் சொல்லிவிட்டு மனதில் இருப்பதை கொட்டலாமென்று தோன்றும். ஆனால் ராவணனுக்கு தங்களுக்குள் நடக்கும் விஷயங்கள் ரோகிணியிடம் கூட கூறாதே என்று ஏற்கனவே கண்டித்து இருந்தான். அதனால் பாட்டியிடம் பேசி புதுபிரச்சனை இழுக்க விரும்பவில்லை‌. ஆனால் ரோகிணி போன் போட்டு, “என்னம்மா சமையல்” என்று கேட்டு ஆரம்பிக்க, “காலையில் இட்லி சாப்பிட்டோம் மாமி. மதியம் நான் அதே இட்லி எடுத்துக்கிட்டேன். உங்க பிள்ளையாண்டாவுக்கு ரோஸ்லின் பிரியாணி கொடுத்தா. இன்னிக்கு கிறிஸ்மஸ் என்பதால அவர் அதை விரும்பி சாப்பிட்டார்.” என்று கூறியவளின் வார்த்தையில் என்னவோ அமைதி கண்டுவிட்டார்.‌

  “இரண்டு பேரும் சண்டை போட்டிருக்கிங்களா?” என்று கேட்டதும், “இல்லை மாமி” என்று அதெல்லாம் ஒன்னுமில்லை.” என்று மறுத்தாள்.

  “இத்தனை நாள் இது செய்தேன் மாமி அது செய்தேன்னு அடுக்குவ. எம்பிள்ளையை ‘அவாளுக்கு நெய் தோசை சுட்டேன்’னு சொல்வ. இன்னைக்கு ‘உங்க பிள்ளையாண்டா’னு வருது. சரி… எதுனாலும் பேசி தீர்த்துக்கோங்க. நான் எல்லாம் அட்வைஸ் பண்ணறேன்னு நடுவுல வந்தா, கோபம் தான் அதிகமா வரும்.
   நீயே எதுனாலும் சொல்லு. உரிமையா எது சொன்னாலும் கேட்டுப்பான். உரிமையில்லாம ஒதுங்கினா சட்டை செய்ய மாட்டான்” என்று கூற, “சரிங்க மாமி” என்றாள்.
 
  அவளுக்குமே ராவணனை அடக்கி கேள்வி கேட்பது முடியாத காரியமென்று தெரிந்ததால் போனை அணைத்துவிட்டு ஆனியன் தோசை செய்ய முடிவெடுத்தாள்.
  ராவணனுக்கு அதுவும் பிடிக்கும். ஆனால் அவனோ, “எனக்கு பால் பிரெட் போதும்” என்று கூறி படுத்துக்கொள்ள சென்றான்.‌

  காருண்யாவிற்கு கோபமேற, “ஏன் இப்படி வேண்டுமின்னே பண்றேள். நான் செய்வதை சாப்பிடக்கூடாதுன்னு வம்பு பண்றேளா” என்று கூறவும் அறைக்கு செல்ல அடியெடுத்து வைத்தவன் திரும்பினான்.‌

“என்ன குரல் உயர்த்துற? எனக்கு எது பிடிக்குதோ அதை தான் சாப்பிட முடியும். உன் இஷ்டத்துக்கு உங்க பாட்டி சொன்னது போல, என்னை ட்யூன் பண்ண நினைக்காத.

  என்ன பார்க்கற… கல்யாணமாகி பெட்டி படுக்கை எடுத்து வைக்க தயாரானியே… அப்ப உங்க பாட்டி அதான்… அந்த அமிர்தா கிழவி, உன் காதுல விபூதி அடிச்சாங்களே. அதெல்லாம் நான் கேட்டேன். ‘புருஷனை கைக்குள் போட்டுக்கோடிம்மா, மாமிசம் பக்கம் போக விடாத… நம்ம மனுஷா எல்லாம் எப்படி இருப்பாளோ அப்படி கொஞ்சம் கொஞ்சமா மாத்திடு. எல்லாம் உன்னிடம் தான் இருக்கு’ன்னு, அந்த புரோக்கர் கிழவி கதை கதையா சொன்னதெல்லாம். எங்க வீட்டு ரூம் வரை கேட்டுச்சு.” என்றான்.

  “எஙக் பாட்டியை ஏதாவது செல்லாதேள்.” என்று காருண்யா கோபமாக, “அப்படிதான் பேசுவேன். ஏன்னா.. உங்க அமிர்தா பாட்டி ஆளுக்கு ஏத்தமாதிரி பேசற சீப் கேரக்டர்.

எனக்கு ஒன்னும் புரியலை.. உங்க பாட்டி பார்க்கற தினுசு தெரியுமா? ஆவூன்னா நீங்களாம் வானத்துல இருந்து குதிச்சவங்க மாதிரியும், மத்த மனிதர்கள் எல்லாம் உங்களை விட கீழானவங்க மாதிரியே பார்க்கறது பேசறது.” என்றான். காருண்யாவுக்கு இதெல்லாம் எப்ப பேசினாங்க? என்பது போல விழித்தாள்.

   அவளது திகைப்பில், “இப்பன்னு இல்லை… உங்க அமிர்தா பாட்டியை ஆரம்பத்துல இருந்தே கவனிச்சிட்டு வர்றேன். எங்க அம்மா முதல் முதல்ல வீடு கட்டி அங்க வந்தப்ப, நீங்களும் ஐயங்காரா? வடகலையா? தென்கலையா? விசாரித்தாங்க தெரியுமா? பழகற வரை அவங்க நாங்களும் உங்க இனம் என்று நினைச்சு தான் வலிய வந்து பேசினாங்க. ஐ மீன் நாங்க ஐயர் என்று நினைச்சி தான் பழகியதே.
  எங்கம்மா பேசி பழகியதுல, நாங்க உங்க இனத்து ஆள் இல்லையென்றதில், அடுத்து நாங்க எதுக்கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க அது தெரியுமா? சாதி பார்த்து பழகினவங்க.
    எங்கம்மாவோட கேரக்டர் பழக பிடிக்கவும், போக போக தான் இயல்பா பார்க்கவே செய்தாங்க. அப்ப கூட எங்க வீட்ல, அம்மா ஏதாவது அன்பா கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. ஏன் என்னயே உங்க வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. நீயா வருவ போவ.. நான் என்னைக்காவது உங்க வீட்டுக்கு வந்து விளையாடலைன்னு கேட்டியா?
   காரணம் உங்க அமிர்தா பாட்டி. என்னை வீட்டுக்குள்ளயே விடாத அளவுக்கு அவங்க ஆச்சாரம் மடிசுத்தம், அதுயிதுன்னு சொல்லி என்னை காயப்படுத்தினவங்க.
   இப்ப அந்த ஹரன் இஷ்டத்துக்கு பேசிட்டு போனதும் நான் அவங்க பார்வைக்கு நல்லவனா தெரியறேனா? கல்யாணம் ஆகறப்ப மாமிசம் திண்பேன்னு தெரியும்ல. அப்பவே கட்டித்தராம அவாய்ட் பண்ண வேண்டியது தானே. தன் பேத்திக்கு வாழ்க்கை கேள்விக்குறி ஆனதும் காரியவாதியா கல்யாணத்தை சம்மதிச்சிட்டாங்க.” என்றான்.‌

  ”இங்க பாருங்கோ.. பாட்டி பேசியதை மனசுல வச்சிண்டு என்னை கேள்விக்கேட்குறேள். நான் உங்களை  அப்படி எந்த நோக்கத்திலும்….” என்றவள் ராவணன் தாடை நிமிர்த்த, வார்த்தை தடைப்பெற்றது.
  எப்படி முழுமையாக உரைப்பாள்? அவளுமே ராவணனை தவிர்த்து பழகியதில் இந்த காரணங்களும் அடங்கியிருந்ததே.

-தொடரும்.

11 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-27”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 27)

    அச்சோ புட்டுக்கிச்சா…! இனி இந்த சண்டை காலம் முழுக்க வருமே. ராவணன் சொல்றதும் நியாயம் தானே, அசைவம் சாப்பிடறது பிடிக்கலைன்னா
    பொண்ணை கட்டி குடுக்காம இருந்திருக்கணும், அதை விட்டு
    கட்டியும் கொடுத்துட்டு, அவனை உனக்கு எத்த மாதிரி ட்யூன் பண்ணிக்கன்னு எதுக்கு கைட் பண்ணனும்..? அவங்கவங்க தனித்துவமா இருந்தா என்ன தப்பு…? அப்படியே விட்டா கொஞ்ச நாள்ல நம்ம வழிக்கு வருவாங்க, இல்லையா நம்ம அவங்க வழிக்கு போக வேண்டியது தான், அதுவும் இல்லைன்னா அவங்கவங்க தனித்துவத்துலயே இருந்திட வேண்டியது தான். அப்பத்தானே லைஃப் ஸ்மூத்தா போகும்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Crt thana ravana solrathum antha paati avaluku etha mari pesura aal thanaku oru prachanai nathum udane mrg ku samathichitu ithula ippadi vera pesurathu apo yen kalayanam pani vaikanum . Karu um apadi tha thalli iruntha iniku unmai theriyavum ippadi nadanthu kitta thappu karu sikram pesi samadhanam agunga nalla illa ippadi paka ungala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *