Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-28

ஐயங்காரு வீட்டு அழகே-28

அத்தியாயம்-28

Thank you for reading this post, don't forget to subscribe!

     “என் கண்ணை பார்த்து சொல்லு.” என்றதும் ராவணன் கேட்ட தேரணை திகிலை தர மௌனமானாள்.

   பாட்டியோடு வளர்ந்ததாலோ அல்லது என்ன காரணமோ சில நேரம் காருண்யா தன்னையும் அறியாமல் ஆச்சாரம் சுத்தம் பத்தமென்றும், இனம் பார்த்து பழகும் மடத்தனத்தை அவளுமே செய்திருக்கின்றாள்.

   ஆனால் அதெல்லாம் இப்பொழுது மறுத்தால் ஏற்கும் ஜீவன் ராவணன் இல்லையே.

  விசும்பலோடு “இப்ப என்னாண்ட பேசுவேளா இல்லையா? நேக்கு உங்களை கட்டிண்டு தூங்கி பழகிடுச்சு.
  நீங்க தள்ளி படுத்தா நேக்கு பிராணமே போகுது. உறக்கமே இல்லை..‌. முன்ன எப்படியோ..? நானே ராவணன் என்றால் முரடன்னு நினைச்சதுண்டு. இப்ப இந்த முரடனுக்குள்ள தான் என்னை தொலைச்சிட்டு நிற்கேன்.
   ஹரனோட விவாஹம் நின்றதும், உங்களோட பேச தயக்கமிருந்தது.
  உங்களிடமே ஹரன் போட்டோ காட்டி அவனை பத்தி பேசி வெட்கப்பட்டு சிரிச்சிருக்கேன்.‌ அப்படியிருக்க உங்களோட விவாஹம் என்றதும் பேச தயக்கமிருக்காதா?
   கையை தொட்டதுக்கு தொடைச்சேன்.. இல்லைன்னு சொல்லலை. என்னை முழுசா உங்களுக்கு அர்ப்பணிச்ச பிறகு என்னைக்காவது நீங்க தொட்டு நான் தட்டி விட்டிருக்கேனா? கொஞ்சம் யோசித்து பாருங்கோ. எச்சி தண்ணி குடிக்க மாட்டேனு உங்களாண்ட தான் சொன்னேன். அன்னிக்கு சிரிச்சிட்டே போனேள். இன்னிக்கு மட்டும் குற்றம் சுமத்தறேள். அப்படி பார்த்தா கூட நீங்க சாப்பிட்ட எச்சி தட்டில நான் சாப்பிட்டுயிருக்கேன். அது உங்களுக்கு நினைவுவரலையா?
  இந்த வெஜ்-நான்வெஜ் மட்டும் வித்தியாசம் தராது. நீங்க வேற ஆளு. நான் வேற ஆளுன்னு சில சம்பிரதாயம் பார்க்க தான் தோன்றும். எல்லாரும் எல்லா பழக்கத்தையும் அன்பால தான் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டு கொடுப்பா. அதர்வைஸ் அவாஅவா பழக்கவழக்கம் அவாளுக்கு முக்கியம்னு பிடிச்சிட்டு தான் தொங்குவா. நீங்க மாமிசம் சாப்பிடறது நேக்கு பிரச்சனையில்லை. உங்களுக்கு அதான் பிடிக்கும்னா சாப்பிட்டுக்கோங்க. ஆனா என்னை தள்ளி நிறுத்தி சண்டை போடாதேள்.” என்று அவனை கட்டிக்கொள்ள, ராவணன் திக்குமுக்காடி போனான்.
  
   “ஏய்… காரு… என்னடி அழுவற” என்று அவளை முகம் பார்க்க வைத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
 
    “நேக்கு நீங்க முகம் திருப்பிட்டு போனா பிராணம் போகுது. எங்காத்துல என்னை இப்படி யாரும் திட்டியதில்லை‌. பாட்டி அப்பா திட்டுவா ஆனா இந்தளவு நேக்கு வலிக்காது.” என்று தேம்பினாள்.

   ‘ஒருவேளை தப்பானா கண்ணோட்டத்தில் எல்லாமே தப்பா தோன்றியதோ’ என்று ராவணன் நிதானமானான்.
   தன்னை அணைத்துக் கொண்டு அழுபவளிடம், இன்னமும் முகம் காட்டி தட்டி விட அவனுக்கு விருப்பமில்லை.
  அவளை போலவே அவனுக்குமே அவளை கட்டிக்கொண்டு உறங்காமல் போனதில் உறக்கம் பறிப்போனது தான் மிச்சம். அதோடு அவள் சொல்வதிலும் நியாயத்தை கண்டான். பொதுவாய் ராவணன் அவனது பக்கம் மட்டும் பார்த்து பேசுபவன் அல்ல. எதிர்தரப்பிலும் யோசித்து முடிப்பவன்‌. அந்த நிதானம் அவனிடம் உண்டு.

  மெதுமெதுவாக கரங்கள் அவளை இறுக பற்றியது. “காரு.” என்று தாடை நிமிர்த்தி இமையில் முத்தம் வைக்க, “சாப்பிட வாங்கோ” என்று அழைக்க, “நிஜமாவே பாலும் பிரட்டும் போதும்டி. என்வி ஹெவியா சாப்பிட்டேன்‌.” என்று வயிற்றை பிடித்து கூறினான்.

“கோவத்தில் சொல்லலியே.” என்று சந்தேகத்துடன் கேட்க, “இல்லை.” என்றான்.
 
  “நேக்கு பசி பிராணம் வாங்குது. உங்களுக்குன்னு ஆனியன் எல்லாம் கட் பண்ணிட்டேன்.” என்றாள்.

  “ஆனியன் தோசை நீ சாப்பிடுவியா?” என்று கேட்டான்.

  “காலையிலும் மதியானமும் இட்லி சாப்பிட்டேன். பசிக்கு‌… ஆனியன் வேற கட் பண்ணிட்டேன். அதை ப்ரிட்ஜில வைக்கவும் முடியாது. வெங்காயம் வைக்கிற விலைக்கு தூரவும் போடமுடியாது.” என்றாள்.

  “வா நான் சுட்டு தர்றேன்.” என்று இடது கையை பிடித்து அழைத்து செல்ல, வலது கையால் கண்ணீரை துடைத்தபடி அவனை தொடர்ந்தாள்.

    அவளை தூக்கி அங்கிருந்த கிச்சனில் அமரவைத்து, தோசை வார்த்தான். ஆனியன் தூவி இட்லி பொடி எல்லாம் போட்டு மொறுகலாய் தர, தேங்காய் சட்னி தொட்டு சுவைத்தாள்.

  “இதுக்கு பிறகு இதே பிரச்சனையால் சண்டை வருமா? அசைவத்தை வீட்டுக்குள்ளயும் சாப்பிட கொண்டு வருவேளா? நான் வேற வந்த அன்னைக்கே முட்டையை குப்பையில போட்டேன். ஏதாவது மனசுல வச்சிண்டுயிருந்தா கொட்டிடுங்கோ” என்றாள்.

  ராவணனோ அவளிடம் மீண்டும் ஏதாவது பேசி சண்டை பெரிதாகுமோ என்ற காரணத்தால் “வீட்டுக்கெல்லாம் கொண்டு வரமாட்டேன் பயப்படாத. நீ வந்ததும் குப்பையில் முட்டையை போட்டப்ப செம கோபம் வந்தது. வந்ததும் வராததும் என் வீட்டு ப்ரிட்ஜிலயிருந்து நான் வாங்கி வச்ச முட்டையை குப்பையில போட்டுட்டாளேனு. ஆனா வந்த அன்னைக்கே உரிமையா இது உன் வீடுனு நீயா நினைச்சியிருந்து உன் வீட்ல முட்டை வேண்டாம்னு போட்டிருந்தா…. அதான்.. அதை பெரிதா எடுத்துக்கலை.” என்று தேற்றினான். அவளை ஒரு நாள் பிரிந்ததற்கே அவனுக்குமே மூச்சு முட்டிவிட்டது.
     முதல் சண்டைக்கு பிறகான கூடலை அவன் மனம் வெகுவாய் எதிர்பார்த்தது.

  அவளுமே சாப்பிட்டதும் தட்டுகழுவ போட்டவள் கை அலம்பி அவன் தோளில் கிளியை போல தோற்றிக்கொண்டாள்.

    இருவரும் மெத்தையருகே வந்து நின்றனர். ராவணன் காருண்யா பேச்சால் மெதுவாக அவளை பார்த்து நின்றான். இதே சண்டைக்கு முன்பு எல்லாம் மெத்தையருகே வந்தாலே கையை பிடித்து இழுத்து மேலே அணைப்பானே. இன்று அவசரம் காட்டாமல் தவிர்க்க, “கோபத்துல பேசறது எல்லாம் கணக்குல சேர்த்துப்பேளா. நேக்கு உங்களை கட்டிண்டு உருண்டா மட்டுமே உறக்கம் வருது. போதுமோனோ” என்று அவனது புஜத்தை பற்றி கூறினாள்.

ராவணனோ, ”அவ்ளோ மிஸ் பண்ணியிருந்தா ரியாக்ஷனா காட்டு” என்று புருவம் உயர்த்தி முறுவலித்தான்.

  மெதுவாக நாணத்துடன், அவன் கன்னத்தில் முத்தம் வைத்து முடித்தாள். அவன் குறுஞ்சிரிப்பில் உதடு விரிய, எச்சிலை கூட்டி முத்தங்களை பூட்டினாள்.

  ராவணன் அவளாக முத்தமிடும் தருணம் வரை காத்திருந்தவன் பிறகே அவளை அணைக்க துவங்கினான்.

   ஊடல் தளர்ந்த கூடல் என்பதால் சற்று வன்மையாக மாறினார்கள் நேற்றைய பிரிவை ஈடுகட்டும் விதமாக…..
 
  அடுத்த நாள் விடியலில், அலுவலகம் செல்ல தயாரானார்கள்.
   ராவணன் எழுந்து வரும் போது பாயசாத்தில் நெய் முந்திரியை வறுத்து கொட்டினாள்.

  வாசம் பிடித்து வந்தவன், “என்ன இன்னிக்கு? முதல் சண்டை போட்டதால செலிபிரேட் பண்ணறியா” என்று வந்தவன் ஸ்பூனால் பாயாசத்தை எடுத்து பருக வந்தான்.

  “பகவானே என்ன பண்றேள்.” என்று ஸ்பூனை பிடுங்கி வைத்து, “சாமி கும்பிட்டு அப்பறம் சாப்பிடணும். எச்சி பண்ணாதேள்” என்று தட்டிவிட்டாள்.

  அவள் கூறிவிட்டு பக்தியாக பூச்சரத்தை கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்து சாமிக்கு வைத்து சாம்பிராணி போட்டு வீட்டையே மணமாக மாற்றினாள்.

  அலுவலகம் கிளம்பிய ராவணனோ, கழுத்து பட்டனை போட்டு நிற்க, சாப்பிட வந்தான்.

   பாயாசம் கொஞ்சம் போல வடை, என்று செய்து பரிமாற போக, “எனக்கு பாயாசம் வேண்டாம்.” என்று கூறி இட்லி வடை சாம்பார் என்று விழுங்கினான்.

  “சாமிக்கு படைக்கும் முன்ன எச்சி பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன். கோச்சிண்டேளா? இன்னிக்கு சாமிக்கு…” என்று கையை பிசைந்து கேட்டாள்.

  அவன் நிறுத்துமாறு கூறி, “உங்க சடங்கு சம்பிரதாயத்துல ஆயிரம் சாமி இருக்கலாம்‌. ஐய்யாயிரம் பூஜை விழானு இருக்கும். எனக்கு எதுவும் தேவையில்லை. நீ சாமி கும்பிடறியா? அது உன் இஷ்டம். என்ன விஷேசம் நான் தெரிந்துக்க விரும்பலை. ” என்று முடித்தான்.
 
  “சாமி எல்லாம் கும்பிட சொல்லலை. பாயாசம் குடிக்கலாமே.” என்று நீட்ட, “நான் குடிக்கறப்ப பிடுங்கினா எனக்கு அப்பறம் குடிக்க பிடிக்காது.” என்றான்.

  கடிகாரத்தை பார்த்து, “சரி கிளம்பு… டைம் ஆகுது சேரியோட தான் வரப்போறியா?” என்று கேட்டான்.

  “ம்ம்.” என்று கூற, புறப்பட்டார்கள்.

  பைக்கில் செல்லும் போது, “முன்ன பாதுஷா செய்தியே… அப்பவும் ஏதோ விசேஷமா?” என்று கேட்க, “ஆ…ஆமா‌” என்றாள்‌.

“அப்போ… அது பைக் வாங்கியதால எனக்காக செய்யலை?” என்று கேட்க, “குதற்கமா நினைக்காதேள்” என்று கூற, ராவணன் அமைதியானான்.
   அலுவலகம் வந்ததும் வேலையில் கவனம் பதிந்தது. இன்னும் பத்து நாளில் வேலை முடிந்திடும். அதற்கான தீவிரம் அங்கிருந்த குழுவில் இருந்தது.
   ரோஸ்லினுக்கு பாயாசம் தருவதற்கென்று கொண்டுவந்திருந்தாள் காருண்யா.

  டீ-கப்பில் ஊற்றிதும், “எனக்கும்” என்ற ராவணன் குரலில் சிரிக்காமல் முதலில் அவனுக்கு ஊற்றி தர, ‘உஷாராகிட்ட போல” என்று சிரிப்புடன் கூற, “பின்ன… கோபம் ஜிவ்வுன்னு ஏறுதே‌” என்றாள்.

“நைட் ஷோ புக் பண்ணவா?” என்று கேட்டான். “உங்க விருப்பம்” என்றாள்.

   மடமடவென போனில் டிக்கெட் பதிவு செய்து முடித்தான். வேலைகளை முடித்து படம் பார்த்து நேற்றைய பேச்சிற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் வீட்டிற்கு வந்து பேசினார்கள்.
 
   அதுவும் பால்ய சிநேகிதர்களாக இருந்தப்பொழுது இருவருக்குள் தோன்றிய எண்ணங்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.

  “நீ இரட்டை குடுமி, கோபுர பொட்டு, விபூதி குங்குமம், தெத்து பல்லு, முட்டி வரை போட்ட பிராக், கண்ணாடி வளையல், முத்துக்கம்மல், வார் செருப்பு மாட்டிட்டு வீட்டுக்கு வரும் பொழுது அவ்ளோ ஜாலியா இருக்கும்.

   அப்பா அம்மா விளையாட வேற அனுப்ப மாட்டாங்க. நீயா வருவியா ரொம்ப க்ளோஸான பீல்.
   உனக்கு நினைவிருக்கா? பிஸ்கேட் பொடி பண்ணி, சாக்லேட்டை உன் ஸ்கர்ட்ல கடிச்சி குட்டி குட்டியா மாத்தி, ஜெல்லி சாப்பிட்டு அதுல ஜூஸை  ப்ரிட்ஜ்ல வச்சி கட்டியாக்கி, கார்ட்ஸ் விளையாடி, பிஸினஸில் லூடோல போட்டி போட்டுக்கிட்டு ஜெயிச்சு, ஸ்னேகன் லேடர்ல பாம்பு கொத்தி கீழே வந்தப்ப எப்படி பீல் பண்ணுவோம்.

   ஸ்கூல்ல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து மிஸ்கிட்ட அடிவாங்கினேன். அப்பவே உனக்காக… ஆனா இப்படியொரு சிக்கலில் சிக்குவேன்னு நினைக்கலை.” என்று சிரிக்கவும், ‘நானுமே நினைக்கலை… இப்படியொரு முரடனோட எனக்கு கல்யாணம் நடக்கும்னு.” என்று ராவணனை ரசித்தபடி கூறினாள்.

  “ஏஜ் அட்டன் பண்ணின பிறகு அந்தளவு பிரெண்ட்ஷிப் தொடரலைல?” என்று கேட்க, காருண்யா தலையாட்டினாள்.

  “அன்னிக்கு இருந்த மனநிலையில, தண்ணி ஊத்தி சேலையெல்லாம் கட்டி, அன்னிக்கு வந்தவா எல்லாம் ஓவர் அட்வைஸ். பாட்டி நைட்டு முழுக்க ராமாயணம் படிக்கற மாதிரி கண்விழிச்சு ஆம்பள பசங்களாண்ட பேசக்கூடாது பழக கூடாது. ஆம்பளைங்களோட தள்ளி நின்னு பழகுனு அம்மா மாதிரி சொன்னாங்க‌‌. எனக்கு அந்த நேரம் பசுமரத்தாணி மாதிரி இறங்கியது. அதோட நேக்கு உன்னை சந்திக்க சங்கோஜம் இருந்தது.” என்றாள்.

  ராவணனோ “நீ வீட்டுக்குள்ளயே முடங்கிட்ட. நான் வீட்டையே அப்ப தான் தாண்டினேன். கிரிக்கேட் கேரம் போர்ட், வாலி பால்னு, அப்பா வெளியே போக விட்டாரா. சைக்கிள்ல கையை விட்டுட்டு சும்மா ராஜா மாதிரி பறக்கற பீல். உண்மையில் பசங்க பிரெண்ட்ஷிப் அதுக்கு பிறகு தான்‌.
  புதுபுது பீலிங். சிகரேட் கூட பிடிக்க ட்ரை பண்ணினேன். அப்ப பார்த்துட்டார்.” என்றான். “அச்சோ… அப்பறம் அடி வெளுத்தாரா மாமா?” என்று கேட்க, “அட… அதான் இல்லை. நேரா புகை மது யூஸ் பண்ணி உடம்பு கெட்டு ஹாஸ்பிடல்ல இருக்கறவங்களை பார்க்க கூட்டிட்டு போயிட்டார்.

இந்த சினிமாவுல புகை பிடிப்போருக்கு புற்றுநோய் வரும்னு காட்டறப்ப சில சீன்ஸ் காட்டுவாங்களே. ப்ப்பா.. அது மாதிரி நேர்ல போய் காட்டினார். அள்ளுவிட்டுடுச்சு… இனி ஸ்மோக் தண்ணி அடிக்க மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணினேன். அதனால் தான் பெங்களூர்ல வேலைக்கு போனப்பவும் அப்பா பயப்படாம அனுப்பினார்.
   நான் தண்ணி தம்மு டிரக்ஸ் எதுவும் தொடமாட்டேன்னு புரிஞ்சு அனுப்பினார்.” என்றதும், காருண்யா திருட்டு முழியில், “நீங்க பெங்களூரிலிருந்து சென்னை வராதப்ப, நான் தப்பா நினைச்சிருக்கேன்” என்றாள் தர்மபத்தினி.

  “ம்ம்ம. தெரியும். ‘அவாயெல்லாம் பெங்களூர்ல வேலை பார்த்து பெத்தவாளை பார்க்க கூட வரலைன்னா என்ன அர்த்தம்.. தம்மு தண்ணினு சனி ஞாயிறு ஆடிட்டு இருக்கான்னு தெரியாதோனோ’ அப்படின்னு உங்க பாட்டி உங்கப்பாவிடம் நீயிருக்கறப்ப தான் சொல்வாங்க. ஏன் நீயுமே ரோஸ்லினிடம் குட்டி பாவாடையோட திரியற ஊரு அங்கயே சுத்தினவன். லவ் எல்லாம் இருக்குமோ இல்லையோனு சொன்னியாமே.” என்றான்.‌

  எத்தனை முறை ராவணனை பற்றி பேச்சு வந்தால், அப்படிப்பட்டவன் என்று பூசி மொழுகிடுவாள்.
  இன்று அபத்தபாக தோன்ற, “சாரி ராவணா.. நேக்கு உன்னை பத்தி தேரியாதோனு தப்பா பேசிட்டேன். ரோஸ்லின் போட்டுக்கொடுத்துட்டா.” என்றாள்.

  “ம்ம்… போட்டுல்லாம் தரலை. ஜஸ்ட் பிரெண்ட்லியா பேசறப்ப சொன்னா.” என்றவர்கள் இரவெல்லாம் வீட்டில் கைகேர்த்து பேசி தீர்த்தனர்.

-தொடரும்.

10 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-28”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 28)

    அது சரி, இப்படி அதிகமா பேசி பேசியே திரும்பவும் முட்டிப்பாங்க, அப்புறம் கட்டிப்பாங்க. முட்டிக்கிட்டதுக்கு ஒருத்தடவை, கட்டிக்கிட்டதுக்கு ஒருத்தடவை நிறைய வாங்கிக்கவும் கொடுத்துக்கவும்
    செய்வாங்க, அதானே வாழ்க்கையே… அடிச்சுக்கோ, பிடிச்சுக்கோ.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *