Skip to content
Home » ஓர் ஊரில் ஒரு நிலவரசி-7

ஓர் ஊரில் ஒரு நிலவரசி-7

7
அன்று அந்த கிராமத்தில் உள்ள வைத்தியசாலையில் பெருங்கூட்டம் இருந்தது. வைத்தியர்கள்
ஓய்வு ஒழிச்சல் இன்றி நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின்
“ஐயோ அம்மா தாங்க முடியவில்லையே” என்ற கூப்பாட்டையும் மீறி கட்டிடத்தின்
பக்கவாட்டில் மருந்திற்காக பச்சிலை அரைக்கும் சத்தமும் “ஆ அப்படித் தான். இன்னும்
நன்றாக மையைப் போல அரைக்க வேண்டும்” என்று மருந்தாளுனர்களின் அறிவுறுத்தலும்
சேர்ந்து அந்த இடத்தையே பரபரப்பான சந்தைக் கடையைப் போல ஆக்கி விட்டிருந்தது.
காத்திருக்கும் நோயாளிகளுக்கிடையே புகுந்து வேகவேகமாக மூச்சிரைக்க வேக நடையில்
விரைந்து வந்தான் நடுத்தர வயதினன். உள்ளே நுழையும் போதே “வைத்தியரே, அய்யோ
வைத்தியரே காப்பாத்துங்களேன்” என்று அழுது கொண்டே வந்தான்.
அங்கே பணியாற்றும் ஒரு வாலிபன் அந்த நடுத்தர வயதினனை கையால் மேற்கொண்டு
புலம்பாமல் தன் கையால் அரவணைத்தவாறு “பொறுமை. சற்றே நிதானபடுத்திக் கொண்டு
வந்த விஷயத்தை சொல்லும்” என்றான்.
அவனுக்கு கட்டுப்பட்டவனாக சற்றே நிதானப்பட்ட அந்த மனிதன் “அய்யா, என் மனைவிக்கு
பிரசவ நேரமுங்க. இன்னைக்கு பிறந்த ஆண் குழந்தை செத்துப் போச்சுங்க”
“அச்சச்சோ” என்று அவனை ஆதுரத்துடன் தட்டிக் கொடுத்தான் அந்த வாலிபன்.
“அது பரவாயில்லைங்க. இன்னொரு குழந்தையும் இருந்திருக்கும் போல. அது கர்பப்பையில
குறுக்கால கிடக்குதுங்க. என் பொஞ்சாதி வலி பொறுக்க மாட்டாமல் வேதனைப்படுறாள்.
அய்யா கொஞ்சம் யாராவது வந்தீங்கன்னா தாயையும் சேயையும் வேறு வேறா பிரிச்சிடலாம்.
கொஞ்சம் வெரசா வாருங்க” என்று சற்றேறக்குறைய அவன் கையைப் பிடித்து தரதரவென்று
இழுத்துக் கொண்டு போகப் பார்த்தான்.
அவன் உள்ளே போய் விவரம் சொல்லவும் தலைமை மருத்துவரே அவனோடு கிளம்பினார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதற்குள் இன்னும் நான்கைந்து பேர் இதே போல
வந்து நின்றார்கள். பிரசவத்தில் கோளாறு. யாருக்கென்று போவார் அந்த வைத்தியர்?
அதிலும் இன்னும் என்ன கொடுமை என்னவென்றால் மருத்துவர் கிளம்புவதற்குள்
வீட்டிலிருந்து ஆள் வந்து தகவல் சொன்னார்கள். “பிரசவித்த பெண்களும் குழந்தைகளும்
இறந்து போய் விட்டார்கள்” என்று.
உள்ளே தங்கள் நோயுடன் போராடிக் கொண்டிருந்தவர்களும் இந்த தகவலால் நிலை
குலைந்தவர்களாக பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்து என்ன என்ன என்று ஒருவருக்கு
ஒருவர் விவரம் அறிய முற்பட்டனர்.
அதற்குள் பக்கத்தில் இருந்த கால்நடை மருத்துவமனையில் இருந்து தகவல் வந்தது
என்னவென்றால் இன்றைக்கு பிரசவித்த ஆடுகள் அத்தனையும் தாங்கள் ஈன்ற மூன்று நான்கு
குட்டிகளுடன் இறந்து விட்டது என்று. மாடுகளும் கூட பிரசவத்தில் இறந்திருக்கிறது.
என்னடா இது கொடுமை….?

Thank you for reading this post, don't forget to subscribe!


அந்த மருத்துவமனையில் தங்கள் நோய்க்கு வைத்தியம் பார்க்க வந்தவர்கள் இந்த தகவலால்
மேலும் சோர்ந்து போனார்கள். கிராமத்தினரோ குய்யோ முறையோ என்று கூப்பாடு
போட்டுக் கொண்டிருந்தார்கள்.
“எல்லாம் அந்த கொடுமைக்கார அசுரனால் தான்”
“அவனுக்கு கொள்ளை வர மாட்டேங்குதே”
“அவனை என்ன தான் பண்ணுவது?”
“அந்த மகமாயி தான் அவன் கையைப் பிடுங்கி வைக்கணும்”
“கண்ணை நோண்டணும்”
கண்ணுக்கு எதிரில் இல்லாத அந்த மகாசுரனை இன்னும் பெண்கள் மண்ணை வாரி தூற்றி
சாபம் இட்டார்கள்.
“அவன் மேல் பழியைப் போடாமல் வேறு ஏதேனும் காரணம் இருக்குமான்னு பாருங்கப்பா.
ஆளாளுக்கு பேசாதீங்க”
“இப்படி அநியாயமா ஒரே நேரத்திலே பிரசவசித்த எல்லாம் செத்துப் போகணும் என்றால் அது
அசுரனால் தான் இருக்க முடியும்”
“அவனைத் தவிர வேறு யாருக்கு நம்ம ஊரு மேலே இத்தனை வன்மம் இருக்க முடியும்?”
“யாரு தான் காப்பாத்துறது நம்மை?”
“அவன் தான் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்?” முன்பு கேட்டவனே இப்போதும்
கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அவனைத் தவிர
எல்லோரும் இது அசுரனால் தான் என்று திட்டவட்டமாக நம்பினார்கள்.
இந்த கிராமத்தில் பழக்கமல்லாத பழக்கமாக அல்லது இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும்
அது மகாசுரனால் என்று உறுதியாக நம்பத் தொடங்கி விட்டிருந்தனர் மக்கள். அதனால்
இதுவும் மகாசுரனால் தான் நடந்திருக்கும் என்று புரிந்தது. ஆனால் இது என்ன மாதிரியான
தாக்குதல் என்பது தான் புரியவில்லை யாருக்கும்.
உள்ளூர் பூசாரி வேலைக்கு ஆக மாட்டான். இந்நேரம் எங்கே சென்று பதுங்கிக்
கொண்டிருக்கிறானோ! பழைய மந்திரவாதியைக் கண்டு பிடித்து அழைத்து வர வேண்டும்.
கன்னியப்பனைக் கூட்டி வர சொன்னார் மணியக்காரர்.
ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தேறியது.
ஆம். வடக்குத் தெரு செல்லாயி வீட்டில் இருக்கும் கூன் கிழவி தன் உடம்பின் சக்தி
அத்தனையையும் திரட்டி ஓ என்று ஓங்காரமிட்டாள். இந்த கிழவிக்கு எப்படி இத்தனை சக்தி
வந்தது என்று வியந்தவர்களும் பயந்தவர்க்களுமாக அவளை நோக்கி சென்றார்கள்.
கூட்டத்தைக் கண்டதும் கிழவி இன்னும் ஊளையிட்டாள். “ஏய் நில்லுங்கடா, என்னை

28

யாருன்னு நெனச்சீங்க?”
மணியக்காரர் முன்னால் வந்து “ஆத்தா இது என்ன இப்படி ஆயிட்டே?” என்றார்.
“ஆத்தாவா…? நான் உன் ஆத்தாவாடா?”
“இந்த ஊருலேய பெரிய மனுஷி நீ. ஏன் இப்படி கூப்பாடு போடுவே? நாங்களே பீதி பிடிச்சிப்
போய் கிடக்கோம்”
“அப்படி என்ன ஆச்சு?”
“ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடக்கு. புதுசா கேக்கறே?”
“என்ன நடந்ததுன்னு சொல்றதுனா சொல்லு. இல்லாட்டா இங்கே இருந்து நகரு” என்றும்
இல்லாத திருநாளாக இன்று ரொம்பவே அதிகாரத் தொனியில் கட்டளையிட்டாள் கிழவி.
அந்த அதிகாரத்துக்கு அடி பணிந்தவராக “இன்னைக்கு பிரசவித்த பொம்பிளைங்க
மட்டுமல்லாமல் ஆடு மாடுங்க பிரசவித்த குட்டிகள் எல்லாம் கூட செத்துப் போச்சு ஆத்தா”
என்றார் கவலையுடன்.
“ஆத்தாவா……….ஹ….ஹா………ஹா……… டேய் கூறு கெட்டவனே நான் ஆத்தா இல்லேடா.
முட்டாப்பயலே நான் மகாசுரன் வந்திருக்கேன்” சொன்னவள் அப்படியே பறந்து வீட்டின்
கூரை மீது போய் ஜங் என்று அமர்ந்தாள்.
“ஏய் நீயா திரும்ப எதுக்கு இங்கே வந்தே? உன்னைத் தான் அடிச்சி விரட்டிட்டோமே”
கிழவியின் பேத்தி செல்லாயி மட்டும் “ஐயோ, ஆத்தா கீழே இறங்கு” என்று கூவிக்
கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்துக் கிழவி “தே…….சும்மா கிட” என்று அதட்டியவள் கூட்டத்தினரைப் பார்த்து
மீண்டும் எக்களி கொட்டி சிரித்தாள். மிகவும் கோராமையாக இருந்தது அந்த சிரிப்பு.
“விரட்டினா..! விரட்டினால் போய்டுவேனா?”
“உன் வேலை தானா இதெல்லாம்?”
“ஆமாம்”
“இதென்ன கோழைத்தனம்”
“காத்துல வந்தேன். மந்திரவாதியை வெச்சி அடிச்சி விரட்டினீங்க”
“ஆமாம். தோத்துப் போனவன் அப்படியே போயிடனும். எதுக்குத் திரும்ப இங்கே வந்தே?”
மகாசுரன் பதில் சொல்லவில்லை. ஆனால் கூனுக்கிழவி அப்படியே சொயன்ன்னு பறந்து
போய் அங்கே ஓங்கி உயர்ந்து பரந்து விரிந்த மரத்தின் மீது போய் உட்கார்ந்தாள்.
“நான் காத்துல வந்த போது அக்கினியை வெச்சி என்னைய விரட்டினிங்க. இப்போ.?
ஹா….ஹா…ஹா…” ஆதி பயங்கரமாக சிரித்தவள் தலையை ஒரு இடமாகா வைக்காமல்

ஆட்டிக் கொண்டே சொன்னாள். ”இப்போ.! நான் கர்பத்துக்குள்ளே வந்திருக்கேன்”
“கர்பத்திலேயா…! அப்படி கூட வர முடியுமா?”
“அதானே! சும்மா பயமுறுத்தாதே”
“இன்னைக்கு எத்தனை குழந்தைகளும் குட்டிகளும் செத்துப் போச்சு”
“ஆங்…….. அது.” உண்மையில் கூட்டத்தினருக்கு கணக்குத் தெரியவில்லை.
“இன்னைக்கு நடந்தது ஒரு சின்ன மாதிரி தான். இனி இந்த ஊரில் ஒரு குளு குஞ்சு பிறக்காது.
அது ஆடா இருந்தாலும் சரி. மாடா இருந்தாலும் சரி. அவ்வளவு தான். இப்போ என்னை
என்ன செய்ய முடியும் உங்களால்………!” ஆங்காரமாகிப் போன மகாசுரன் “என்னையேவா
உண்டி வில்லால் அடிச்சீங்க? இனி ஒரு பொடிப்பய இந்த ஊர்ல இருப்பானா. ஹா
ஹா……..ஹா …..!”
“இரு. அந்த மந்திரவாதியை கூட்டிக்கிட்டு வந்து உன்னை ஒரு வழி பண்ணறோம்”
“ஹா….ஹா…….. அந்த மந்திரவாதி இப்போ எங்கேன்னு தெரியுமா?”
“கன்னியப்பன் போய் கூட்டிக்கிட்டு வருவான். கன்னியப்பா உடனே கிளம்பு. போய்
எப்படியாவது அந்த மந்திரவாதியைக் கூட்டிக் கிட்டு வா”
“கிறுக்குப்பயல்களே. அவன் உங்க பேச்சைக் கேட்டு என்னை எதிர்த்து வேலை செய்ததில்
அவன் மந்திரம் எல்லாம் அவனை விட்டுப் போயிருச்சு. இப்போ அவன் இமயமலைக்குப்
போயிருக்கான். திரும்ப தவம் இருந்து மந்திரம் படிக்க”
“அய்யோ …” கூட்டமே அலறியது.
“அம்மாம் தொலைவு எப்படி போய் வருவது?”
“அது சரி இமயமலை எங்கே இருக்கு”
“அதோ அந்த காட்டுக்கு அப்பாலே மலைக்குப் பின்னாலே இருக்கு”
“உங்களுக்குள்ளே பினாத்திக் கிட்டு இருங்க. என்னய்யா எதிர்த்து நின்னீங்க” என்று
சிரித்தவாறே மரத்தின் உச்சியிலிருந்து தொப்பென்று கீழே குதித்தது. அதாவது இவ்வளவு
நேரம் மந்திரவாதி கூடு விட்டு கூடு பாய்ந்திருந்த கூனுக்கிழவி தான் கீழே விழுந்தாள். விழும்
போது மரத்தில் இடிப்பட்டு கீழே வந்து விழும் போது மண்டை சிதறி அந்த இடத்திலேயே
செத்தாள்.
திக்பிரமை அடைந்து அமர்ந்திருந்தார்கள் கிராமத்தினர். தங்களுக்குள் ஆயிரத்தெட்டு
யோசனை செய்தார்கள். நடமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள் என்று பலவற்றை தள்ளினார்கள்.
இறுதியாக மன்னரிடம் முறையிடுவது என்று முடிவெடுத்தார்கள். மகாசுரன் கர்பத்தில்
வந்ததால் இனி அவன் மீண்டும் இங்கே வர கொஞ்சம் மாதங்களாவது ஆகும் என்றும்
அதற்குள் மன்னரைப் போய் பார்த்து வருவது என்று முக்கியமான மனிதர்கள் ஒரு சிறு
கூட்டமாக கிளம்பினார்கள்.

30
மன்னர் இவர்கள் குறையைக் கேட்டறிந்தார். என்ன செய்யலாம் என்று ஆஸ்தான
ஜோசியரிடமும் முதல் அமைச்சரிடமும் விவாதித்தார். அவர்கள் முடிவுப்படி காளி தெய்வத்தின்
கருணை வேண்டி ஒரு யாகம் செய்ய கிளம்பினார்கள்.
தெய்வத்தின் படைகளுக்கும் மகாசுரனுக்கும் மிகப்பெரிய யுத்தம் நடந்தது. இடி இடித்ததைப்
போல மகாசுரனுக்கு அடி விழுந்தது. இடி இடித்தது. மழை பெய்தது. நெருப்பு எரிந்தது.
சகலவிதத்திலும் மகாசுரனால் நகர இயலாத வகையில் காளி அவனை நொறுக்கினாள்.
தோற்றுப் போன மகாசுரன் காளியின் முன் மண்டியிட்டான்.”அம்மா கருணை காட்டு” என்று
கெஞ்சினான்.
காளியும் ஒரு தாயல்லாவா! கெட்டவன் என்ற ஒரு விஷயத்திற்காக எந்த தாயாவது தன்
பிள்ளையைத் தண்டிப்பாளா? அதிலும் இந்த உலகை காக்க வந்தவள் எப்படி தன் முன்
மண்டியிட்டு நின்றவனை உயிரை எடுப்பாள்?
“இந்த மக்களை தொந்திரவு செய்ய மாட்டேன் என்று உறுதி கொடு”
“இனி இந்த ஊர் இருக்கும் திசைக்கே வர மாட்டேன்”
“சரி பிழைத்துப் போ. அதோ அங்கே தெரிகிறதே உன் நாடு சுரநாடு அங்கே போய் விடு. இந்த
பக்கம் வரக்கூடாது.”
“சரி அம்மா. ஆனால் ஒரே ஒரு கோரிக்கை”
“என்ன?”
“நானாக யாரையும் போய் தொந்திரவு செய்ய மாட்டேன். என்னிடம் வருபவர்களை நான் எது
செய்தாலும் நீ கோபித்துக் கொள்ளக் கூடாது”
“நீ மனிதர்களை தின்ன கூடாது”
“விலங்குகளைத் தின்று கொள்கிறேன்”
“அது தான் சரி. ஆனால் அதையும் கூட சமைத்து தான் உன்ன வேண்டும். அப்போது தான் நீ
உன் இடத்தை விட்டு இங்கே வர மாட்டாய்”
“அப்படியே ஆகட்டும் அம்மா.”
அத்துடன் மகாசுரனின் கொடுமை இந்த கிராமத்தில் மட்டுமலாது இந்த நாட்டின் பக்கமும்
இல்லாமல் போனது. அதனால் தான் ஒவ்வொரு வருடமும் காளி மகாசுரனை சண்டையிட்டு
வெற்றிக் கொண்ட நாளை இங்கே திருநாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜேந்திரனுக்கு கதையை சொல்லி முடித்த மாரியம்மா “நான் கதை சொல்லி முடிக்கையில
அத்தனை வேர்கடலையையும் தின்னே தீத்துப்புட்டே. இதை வித்தது நாலு படி அரிசி
வாங்கலாம் என்று இருந்தேன். இனி சோத்துக்கு என்ன செய்வேன்?” என்று புலம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *