அத்தியாயம்.. 5
வாசலில் மணி அடித்தது. ஆயா எரிச்சல் அடைந்தாள். இது வேற….அப்பப்ப அடிச்சுக்கிட்டு.
யாராவது வந்து ஜாடை மாடையாக வம்பிழுப்பது சகஜமாகிவிட்டது. கதவை திறந்தாள் ஆயா.
“கதவை திறக்க இத்தனை நேரமா?” என்று எரிந்து விழுந்தபடி நின்றான் ரமேஷ். அவன்
ஆயாவை முறைத்துப் பார்த்தான்.
“தம்பி….இனிமே இங்க உங்களுக்கு என்ன வேலை.? அம்மா வீட்டில் இல்லை.” என்று
புளுக்கினாள்.
“ஆபீசுக்கு ஃபோன் பண்ணி கேட்டுட்டு தான் வரேன். லீவுணனு சொன்னாங்க. வழிய
விடுங்க.”
புதுசா என்ன ரணப்படுத்தப் போரானோ.? சமையல் வேலையை கவனிக்கச் சென்றாள் ஆயா.
ரமேஷ் பார்த்தான். பூனைக் குட்டி போல் சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள் சுஜா. தலை
கலைந்து அலங்கோலமாக விரிந்திருந்தது. நேற்று போட்டிருந்த பிங்க் சுடிதார் கசங்கி
அழுக்காக தெரிந்தது. வேர்வையும் கண்ணீரும் பார்த்த துணியின் நிலைமை வேறு எப்படி
இருக்கும்.? முகம் தடித்து கண்கள் வீங்கி சிவப்பாக கிடந்தது. நலம் கெட புழுதியில்
எறியப்பட்ட வீணை அவள்.
“சுஜா…. “
சடாரென்று நிமிர்ந்தாள். ரமேஷ்! மீண்டும் துக்கம் புரண்டு வந்தது. ஊமை போல் பார்த்தாள்.
விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்திருக்கானோ.?
“சுஜா….மூன்று முறை கூப்பிட்டும் அவள் பேசாதிருந்தாள். “எழுந்திரு.” அவளை மென்மையாக
தொட்டான். நடுங்கினாள். “வேண்டாம்….தோடா வேண்டாம்.” புதிதாக குரல் வந்தது போல்
வெடித்தாள்.
“சுஜா…. எனக்கு அதிக நேரமில்லை.”
“அதுக்கு நான் என்ன செய்யணும்.?”
“என்னை மன்னித்துவிடு கண்மணி. எல்லாமே எப்படியோ நடந்து போச்சு.” அவள் வியப்புடன்
நிமிர்ந்து பார்த்தாள். புதிதாக ரத்தம் செலுத்தப்பட்டவள் போல் புத்துணர்ச்சி நிரம்ப
சிலிர்த்தாள். அந்த மேனாமினுக்கியை வைத்துக் கொண்டு பேச முடியவில்லை போலும். தவறு
புரிந்து திருந்து விட்டான். எனக்குத் தெரியும் ரமேஷ்….எனக்குத் தெரியும்….என்னையும்
ஆர்த்தியையும் விட்டுவிட்டு போக மாட்டீங்க….
“ரமேஷ்….” எழுந்து சடாரென்று அவனை காட்டிக் கொண்டாள்.
“வந்திட்டீங்களா ரமேஷ்……அவளை விட்டு விட்டு வந்திட்டீங்க தானே.? பரவாயில்லை.
உங்க தப்பை மன்னிச்சிடறேன். சாக்கடையில் காலை வச்சிட்டா காலையா வெட்டி
விடறோம்.? அது மாதிரி தான் இதுவும். அந்த சாக்கடையின் நினைப்பை மனசிலிருந்து
அழுவிடுங்க. தேங்க்ஸ் ரமேஷ்….. தேங்க்ஸ். உங்களை இனி விடவே மாட்டேன்…” அதிக
உணர்வளைகலால் திணறிய சுஜா கடைசி வார்த்தைகளை சொல்லிக் கொண்டே…மெல்லிய
ஆயாசம் ஆட்கொள்ள அவள் நினைவு தப்பியது. “ஆயா……” அவன் போட்ட கூச்சலில் ஆயா
ஓடி வந்தாள். “தண்ணி கொடுங்க……”
“தம்பி….நான் அம்மாவை பார்த்துக்கறேன். தயவு செய்து போயிடுங்க. அந்தப் பெண்ணை
நீங்க விட்டிட்டு வரலை. உங்க மூஞ்சியை பார்த்தாலே தெரியுது. இஞ்சி தின்ன குரங்கு மாதிரி.
போயிடுங்க.”
ரமேஷ் சுருக்கென்று உணர்ந்தான். கிழவி பலே ஆல் தான். அனுபவ அறிவு உள்ளவள். கண்டு
பிடித்து விட்டாள்.
“வெந்த புண்ணிலே வேலை பாச்சாதீங்க தம்பி. போயிடுங்க. தாபாலில் கூட கையெழுத்து
வாங்கலாம்.” ஆயா திடக் குரலில் கூறினான்.
அதற்குள் சுஜா தெளிந்து உட்கார்ந்தாள்.
“ஆயா, அவர் பேசட்டும். என்ன பேசனுமோ பேசட்டும். எனக்கும் எல்லாம் தெரியணும். நான்
தாங்கிக்குவேன். நீங்க விடுங்க ஆயா.”
ஆயா சட்டென்று இங்கிதம் தெரிந்து மறைந்தாள். சுஜா எழுந்து முடியை சீர் செய்து, முகம்
கழுவினாள். துடைத்துவிட்டு போட்டு வைத்துக் கொண்டாள். ஆயா சோனந்து சரிதான். இவர்
சேரவில்லை. எல்லை தாண்டியவன் எதுக்கு வருவான்.? பிரிவினையை அதிகாரபூர்வமாக்க
கையெழுத்துக்கு வந்திருக்கான்.
“கடைசி கடைசியாக உன்னை என் கணவனாக நினைச்சு, நம்பிக்கை வைச்சு
கட்டிக்கிட்டேன். மன்னிக்கனும். என் பலகீனமே உன் மேலே நான் வச்ச காதலும்
நம்பிக்கையும் தான். பத்திரத்திலே கையெழுத்திடனும் அவ்வளவு தானே….எத்தனை
கையெழுத்து வேணாலும் வாங்கிக்க ஒண்ணே ஒண்ணு சொல்றேன்….மூணு வருஷமா
நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே…..அப்பவே உண்மையை சொல்லிட்டு போய்
தொலைந்திருக்கலாமே.? ச்சே ஒரு மண் குதிரையை நம்பி, பூரிப்பா இந்த தாலியை சுமந்திட்டு
இருக்கேன்….இனி என் கழுத்தில் இது விலங்கு.”
ஆறு பவுன் தாலி. வெக்கமில்லாமல் வாங்கி வைத்துக் கொண்டான்.
“சுஜா……எனக்கும் கஷ்டமாத் தான் இருக்கு. நான் மூணு வருடம் முன் மனம் தடுமாறி
தர்ஷனியிடம் தவறா நடந்துக்கிட்டேன். கல்யாணம் பண்ண வேண்டியதா போச்சு. சூழ்நிலை
சந்தர்ப்பம் என் பயணம் திசை மாறிடுச்சு. நாம் சட்டப்படி பிரிவது தான் முறை. நீ தான் நாம்
சேர்ந்து வாழ சம்மதிக்கலையே? இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை, நீ மனசை
மாத்திக்கலாம். உனக்கு ஒரு சந்தர்ப்பம் தரேன். என்ன சொல்றே.?”
சுஜாவின் கடுகளவு நம்பிக்கையும் மறந்தது. வெறுப்புடன் சொன்னாள்
“சந்தர்ப்பமா கொடுக்கிறே? இதுக்கு தூக்கு போட்டுக்கலாம். உன்னுடன் ஒரு துப்பு கெட்ட
வாழ்க்கை வாழ எனக்கு அவசியமில்லை.”
“தாங்க்ஸ் சுஜா….” என்றதில், அவனுக்கு எங்கே அவள் ஒப்புக் கொண்டு வந்துவிடுவாளோ
என்கிற பயம் தெரிந்தது. சுஜா நிலைமை புரிந்து மேலும் துக்கித்தாள். இப்படி பட்டவனையா
உயிருக்கு உயிரா காதலித்தோம்? வெட்கம். அவமானமாக இருந்தது.
“சுஜா……சத்தியம் செய்யறேன் ஆரத்தியை கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன். நீ
நல்லாயிருக்கணும். நான் உனக்கு தகுதி இல்லாதவன். என்னை மன்னித்து விடு கண்ணம்மா.
அது சொல்லத் தான் வந்தேன்.’
“சொல்லியாச்சுசில்லே கிளம்பு.”
‘நீ வேறு கல்யாணம் பண்ணிக்கணும். யூ ஆர் ஸ்டில் ப்ரிட்டி.”
“உன்னோட பாராட்டு எனக்குத் தேவையில்லை. அருவருப்பா இருக்கு. கெட் அவுட். இல்லே
மரியாதை கெட்டுவிடும்.”
“சரி சரி. கையெழுத்து……டைவர்ஸ் பத்திரத்தில்……”
எல்லாம் தயாராகத்தான் வந்திருக்கான். இது அவன் எப்பொழுதோ எடுத்துவிட்ட முடிவு.
அவன் நீட்டிய காகிதங்களில் கையெழுத்திட்டு தந்தாள். அவன் முகம் மலர்ந்தது.
“தேங்க்ஸ் சுஜா. தர்ஷினி ரொம்ப கவலைப்பட்டாள். நீ பிரச்சனை
பண்ணுவியோன்னு……சுஜா இந்த வீட்டில் நீ இருந்துக்கலாம். உனக்கு சம்பாத்தியம் இருக்கு.
மியூசிசுவல் அண்டர்ஸ்டாண்டிங் என்று டிவோர்ஸ் போட்டால் சீக்கிரம் முடிஞ்சுடும். அப்புறம்
ஆர்த்தியோட எதிர்காலத்துக்கு ஒரு லட்சம் தரேன்.”
அவள் சிரித்தாள். “உன் தாராள மனசுக்கு நன்றி. என் குழந்தையை பார்த்துக்க எனக்குத்
தெரியும்.? நீ ஒத்த பைசா கூட கொடுக்க வேணாம். வீடு வேணுமா எடுத்துக்ககோ.” என்றாள்.
“இல்லில்லே அது உனக்குத் தான்.” என்றான் பாரி வள்ளல் தொனியில்.
“குட்….எல்லாம் சுமூகமா முடிஞ்சு போச்சு. தர்ஷினி கவலையோட காத்திருப்பா. நான் வரேன்.”
முகமெல்லாம் வெளிச்சமாக ஏதோ கல்யாணம் பேசி முடித்து விட்டது போல எழுந்தான்.
சடாரென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு தேங்க்ஸ்….டபுள் தேங்க்ஸ் என்று விட்டுப்
போனான். சுஜா முகம் சுழித்தாள்.
சோப்பு போட்டது கன்னத்தை கழுவி சுத்தப்படுத்திக் கொண்டாள் சுஜா. மானசையும் அவன்
நினைவுகள் இல்லாமல் கழுவி விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சுஜா அலுவலகம் செல்ல ஆரம்பித்துவிட்டாள். அடுத்தடுத்து வந்த நாட்கள் எல்லாம்
அர்த்தமற்றதாக உணர்ந்தாள். ஆர்த்தியிடம் மட்டுமே சிரித்தாள். மெல்லிய அடிக்குரலில்
அவள் வாழ்க்கையைப் பற்றியும், அவளைப் பற்றியும் நரம்பில்லாத விமர்சனங்கள் எழுந்தன.
“பணத்துக்கு ஆசைப்பட்டு புருஷனை துபாய்க்கு அனுப்பினா……இப்ப புருஷன்
இன்னொருத்தியை தேடிக் கிட்டான். இப்ப அழுது என்ன பிரயோஜனம்.?” பக்கத்தில் இருந்து
எல்லாம் பார்த்தது போல் பேசினார்கள்.
இரவில் நட்சத்திரங்களை பார்ப்பது….மாலை சூரியனை ரசிப்பது, குத்திக் குருவிகளின் இனிய
சிர்ப் சிர்ப் கேட்டு மகிழ்வது. ஆர்த்தியின் சிரிப்பில் லயிப்பது என்று சுஜா தன் மனதிற்கு தானே
ஒத்தடம் கொடுத்துக் கொண்டாள்.
“அம்மா….அப்பா டிவோர்ஸ் பண்ணிட்டாறா? இனிமே வரமாட்டாரா.?” ஆர்த்தி தெளிவாக
கேட்டதுக்கு “ம்ம்ம்….”என்று மட்டுமே சொன்னாள். ஆர்த்தி சகஜமாக கேட்டது ஆச்சரியமா
இருந்தது. இந்தக் காலத்து குழந்தைகள் ரொம்ப சூட்சமம் நிரந்த தெளிவானவர்கள் என்று
தோன்றியது. “உனக்கு வருத்தமா.?’ என்றாள்.
“வருத்தம் தான். ஆனா அழாதேம்மா. நானிருக்கேன்லே? அப்பாவை மறந்திடு. நமக்கு வேற
சாய்ஸ் இல்லே.” ஆர்த்தி தன் குட்டிக் கைகளால் அம்மாவின் கண்ணீர் துடைத்து பெரிய
மனுஷி போல் பேசினாள். அவளின் தெளிவும் வைராக்கியமும் தனக்குக் வர வேண்டும் என்று
ஆசைப்பட்டாள் சுஜா. வரும் என்று நம்பினாள்.
கோர்ட் மூலம் விவாகரத்து கிடைத்து விட்டது. ஒரு போலி மனிதனோடு வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வந்துவிட்டது. என்று மகிழ்வதா? இல்லை தன் நிஜமான காதல் முற்று பெறாமல்
இன்னமும் ஆழ்மனதில் கனன்று கொண்டு வலி தருவதை என்னை கவலைப்படுவதா என்று
அவளுக்குத் தெரியவில்லை. இதனை வருட வாழ்க்கையை தூக்கிப் போட வேண்டிய
கட்டாயம் ரணத்தை ஏற்படுத்தியது.
வீட்டுக்கு வந்ததும் ஒரு வெறுமை தான் சூழ்ந்து நின்றது. கண்ணீர் அவள் அனுமதி பெறாமல்
மழை நீர் போல் கொட்டியது. கல்யாண பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். அவளை திருமதி
ரமேஷ் என்றாக்கிய ரோஸ் மஞ்சள் பத்திரிகை பொய்யாகிவிட்டது. இதோ இந்த விவாகரத்து
பத்திரிகை தான் நிஜம். மந்திரங்கள் ஒலித்த கல்யாணத்தை தந்திரங்கள் வென்றுவிட்டது.
விவாகறத்து பத்திரகையை மாற பீரோவில் போட்டு மூடினாள். தன் துக்கத்தை இதோடு
மூடிவிட முடிவு செய்தாள்.
“அக்கா நடந்தது நடந்துவிட்டது. அம்மா நீ புது வாழ்க்கை ஆரம்பிக்கணும்னு சொல்றா. ஆனந்
கூட அப்படித்தான் சொல்றார். நீ தான் முடிவு செய்யணும்.” என்றாள் சுதா.
சுஜா தன் நிலை குறித்து தானே கைத்த சிரிப்பு சிரித்தாள். அவள் தான் முடிவு பண்ணணுமாம்.
இதுவரை அவல இந்த முடிவுகளை எடுத்தாள்.?
“சரி சுதா பார்க்கலாம். நான் தைரியமா இருக்கேன்னு அம்மா கிட்டே சொல்லிடு. அவங்க
வீணா கவலைப் பட வேண்டாம்.”
ரமேஷ்யின் அப்பா அம்மா, தன் மகன் உத்தம புத்திரன் என்றும், இவள் யாரோ ஒரு
வாலிபனோடு சுற்றுவது தெரிந்து, மனசொடிந்து தான் இந்த விவாகரத்திணை செய்ததாக
புரளியை, கண்ணீர் உருண்டோட கூறி, ஆங்காங்கே பலரிடம் பற்ற வைத்துவிட்டுப்
போனார்கள். அவர்களால் குறிப்பிடப்பட்ட வாலிபன் ஸ்ரீதர் தான். இந்த ஒரு வருடத்தில்
அவன் இந்தப் பக்கம் வரவுமில்லை……ஒரு ஃபோன் கூட பண்ணவில்லை. அவளிடம் அடி
வாங்கிக் கொண்டு போனவன் தான்.
ஒரு நாள் ஆர்த்தி சந்தோஷமாக வீட்டுக்கு வந்தாள். அவள் கையில் ஒரு டிராயிங் ஷீட். அதில்
கொத்துக் கொத்தாக ரோஜா மலர்கள் மிக அற்புதமாக வரையாப்பட்டிருந்தது.
“அம்மா பாரு இந்த டிராயிங்கை.”
“ரொம்ப அழகா இருக்கே, லவ்லி.”
“ரோஜா மலர்கள் சிலவற்றில் பனித்துளி தங்கியிருந்தது. அது துல்லியமாக
வரையப்பட்டிருந்தது. “யார் இதை வரஞ்சது ஆர்த்தி.?”
“ஸ்ரீதர் அங்கிள் அம்மா.”
சட்டென்று தூக்கிப் போட்டு நிமிர்ந்தாள். மறந்து போன இவன் மறையவில்லை. ஆர்த்தி
மனதில் உட்கார்ந்து விட்டான். அவளுக்குத் தான் தெரியாமல் போனது. எரிச்சல் மண்டியது.
பொற்றாமரை குளத்தருக்கே அடிவாங்கியவன் குழந்தையிடம் நெருங்கி பழகி பழி
வாங்குகிறானோ.?
“இது எப்படி உன் கைக்கு வந்துச்சு.?”
“அம்மா….அங்கிள் அப்பப்ப ஸ்கூலுக்கு வந்து என் கூட பேசுவார்.”
அந்த ஓவியத்தடியில் ஒரு பாரசீக கவிதையின் தமிழாக்கம் எழுதப்பட்டிருந்தது.
“வியாபாரிக்களே வியாபாரிகளே
ரோஜாக்களை விற்று விற்று
எதை வாங்கப் போகிறீர்கள்
அதை விட அழகானதாய்.?”
எழுப்பப்பட்டிருக்கும் கேள்வியில் ஒரு ரசிக மனதின் மென்மை மலர்ந்திருப்பது தெரிந்தது.
“அம்மா ரொம்ப அழகாயிருக்கு இல்லே கவிதை? அங்கிள் சொன்னாரம்மா….இந்த ரோஜா
மாதிரி உங்கம்மா. ஒரு வியாபாரி மாதிரி உங்கப்பா தூக்கி எறிஞ்சிட்டாரே……நீ அம்மாவை
பத்திரமா பார்த்துக்கணும்.”
பூநாகம் போல் பூப் போன்ற குழந்தை மனசை கெடுகிறானே!
“ஆர்த்தி அந்த அங்கிள் கிட்டே சொல்லு….ரோஜா கிட்டே முள்ளும் இருக்கும். கண்ட கண்ட
வியாபாரிங்க பறிச்சா குத்தும்ன்னு சொல்லு. சரியா.?” குழந்தையிடம் மென்மையாக
சொன்னாள். குமறலை காட்டாமல்.
“சரிம்மா….” ஆர்த்தி ஆழம் தெரியாமல் குதித்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
“உங்க கணவரை டிவிவர்ஸ் பண்ணுங்கன்ணு….சொன்னவன் தானே இவன். பல
கேள்விகளுக்கு அவனிடம் பதில் கிடைக்கும் என்று தோன்றியது. திருமணமே முறிந்துவிட்டது,
இனி பதில் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன? அவள் திருமண வாழ்க்கையை
கானல் நீராக்கி விட்டான். எவ்வளவு அன்னியோன்யமான தம்பதிகள் என்று பலரும் பாராட்ட
எத்தனை மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். எல்லாம் போய் என்றாகிவிட்டது. ஏனோ திரும்பவும்
துக்கமும் அழுகையும் பீறிட்டு வந்தது. செல் அடித்தது..”ஹலோ..”
“இத கேளுங்க….நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி, அமைதிக்கு பேர் தான்
சாந்தி….”
பாடல் முழுவதையும் கேட்டாள். அருந்த அவள் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அது ஸ்ரீதர்
என்று அவளுக்குத் தெரிந்தது. இருந்தும் அந்தப் பாடலின் தோணியும் சொற்களும் பாடகரின்
சோகக் குரலும் அவளுக்கு விவரிக்க இயலாத ஆறுதல் தந்தது. என் துயர் பத்தி யாருக்கு
கவலை.?
ஸ்ரீதர் பேசினான். “சாந்திங்கறதுக்கு பதில் சுஜான்னு போட்டுக்கோங்க. உங்க துயரத்தை
என்னால் தாங்க முடியலை. ஆரத்தியோட பிறந்த நாளன்று இதைத் தான் பாடினேன். அப்ப
நீங்க என் தூயரே நீ தானேடான்னு சொன்னீங்க. எங்கே கட் பண்ணிடுவீங்களோன்னு
நினைச்சேன். பரவாயில்லை முழுசா பாடலை கேட்டதுக்கு நன்றி. உங்களுக்காக ஒரு மனசு
ஏங்கிட்டு இருக்குன்னு நீங்க புரிஞ்சுக்கணும். இந்த ஒரு வருஷமா உங்க பக்கமே நான்
வரலை. ஏன் தெரியுமா? காலம் தான் உங்க மனப் புண்ணை ஆற்றக் கூடிய ஆற்றல்
உடையது. துயர கூட்டிலிருந்து வெளியே வாங்க. என்னை ஒரு நண்பனாகவாவது
ஏத்துக்கோங்க. குட் நைட்.” செல்லை தூண்டித்தான்.
ப்சு என்று அவன் பேச்சை ஒதுக்கினாள் சுஜா.