அத்தியாயம்—6
ஒரு வாரம் ஓடிவிட்டது. இந்த ஒரு வாரமும் ரமேஷ் பத்தி நினைக்காதது அவளுக்கு
மகிழ்ச்சியாக இருந்தது. மனசு ஏதோ விடுதலை பெற்ற உணர்வுடன் பூக்க தொடங்கியது. ஒரு
இரவு மொட்டை மாடியில் இருந்த போது ஸ்ரீதர் கூப்பிட்டான். ரொம்ப நேரம் அடித்துக்
கொண்டிருந்தது. அவள் எடுக்கவேயில்லை. பிறகு பதினைந்து நிமிடம் வரை அவன் கால்
வரவேயில்லை. நாம் அடிப்போமா என்று அவள் கை துருதுருத்தது.. ஏதோ ஒரு சந்தோஷம்
மனதிற்குள் வந்தது. அவள் அடித்தாள். அவன் எடுத்தான்.
“என்ன அள்ளி ராணிக்கு இந்த பக்தன் மேல் கருணை வந்திடுச்சா.?”
“உங்க மேலே இல்லே……இல்லே என் மேலே தான் வந்திடுச்சு. எத்தனை நாட்கள் மனசை
பிழிந்தெடுப்பது? அதான் உங்க கூட பேசலாமுன்னு…”
“ஆணையிட்டேன் நெருங்காதே அன்னை இனம் பொறுக்காதேன்னு பாடின சுஜாவா இது?
நம்ப முடியவில்லை….”
“என்ன பண்றது.? என் நிலைமை அப்படி….வில்லன் கூடாவெல்லாம் பேச வேண்டியதா
இருக்கு.”
அவன் வாய்விட்டு குறும்பாக சிரித்தான். கடலைகள் பாதம் தொட்டது போல் இருந்தது.
எவ்வளவு நாளாச்சு மனிதர்கள் சிரிப்பு சத்தம் மனதில் பதிய.? ஐ. சி. யூ விலிருந்து அவள் மனம்
வெளிவந்துவிட்டது.
“சுஜா….இப்ப பாடப் போறேன். கேப்பிங்களா.?”
“ம்….வேறவழி.?’
“போதும் உந்தன் ஜாலமே. புரியுதே உன் வேஷமே. ஊமையான பெண்களுக்கு பிரேமை
உள்ளம் இருக்காதா.?”
பட்டென்று சுஜா போனை துண்டித்தாள்.. அவசரப்பட்டு விட்டோமோ என்று ஸ்ரீதர் நொந்து
கொண்டான். திரும்ப திரும்ப அடித்தான். பயனில்லை.
இந்த ரெண்டு வாரத்தில் ஸ்ரீதர் குறைந்தது இருபது தடவையாவது கூப்பிட்டிருப்பான். சுஜா
எடுக்கவே இல்லை. இன்று பேசுவது என்று முடிவு பண்ணினாள். ஆர்த்தி தூங்கின பின்,
மொட்டை மாடிக்குச் சென்றாள். ஸ்ரீ நம்பரை தட்டினாள். உடனே எடுத்து உற்சாகமாக
“ஹலோ” என்றான்.
“உங்களுக்கு கோபமே வராதா.? என் மேல் எரிச்சல் கூட படலையா.?”
“மயிலை பாடச் சொன்னால் அது எப்படி பாடும்.? என் தப்பு தானே.?”
“ஸ்ரீதர் உங்க கூட பேசறது எனக்கு சந்தோஷமா இருக்கும்னு தோணுது.. என் வலி என்
காவாலி எல்லாம் மறக்க இந்த உதவி செய்வீங்களா.?”
“என்ன சுஜா நீங்க.? இட்ஸ் மை பிளஷர்.”
“உங்களை நம்பலாமா.?’
“நம்பலாம். வரம்பு மீரா மாட்டேன்.”
“தேங்க்ஸ்.”
“இட்ஸ் ஓ. கே.”
சென்னையிலிருந்து சுதா கூப்பிட்டாள். “அக்கா எப்படி இருக்கே.?”
“ரொம்ப நல்லாயிருக்கேன். நானும் ஆர்த்தியும் ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் போனோம். ஆர்த்திக்கு
வரைய ரொம்ப பிடிச்சிருக்கு. ஓவியங்களை ரசிச்சு பார்த்தா. ஒரு ஓவியம் நல்லாயிருக்குன்னு
வாங்கினோம். அது அருவிக்கரை அருவி பொங்கி ஆர்ப்பரித்து கொட்டுது. ஜோவென்ற
சத்தத்தையும் பறவைகளின் பறக்கும் படபட சத்தமும் கேட்குது போல. அதை தன் வீடியோ
காமிராவில் பதிவு செய்கிறாள் ஒரு கல்லூரி மாணவி. இது தான் ஓவியம். எவ்வளவு தத்ரூபமா
இருக்கு தெரியுமா.?”
“இவ்வளவு நீளமாக, இயல்பாக சுஜா வேசியது சுதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வருடம்
ஓடிவிட்டது……அக்காவின் கலகல பேச்சு கேட்டு.
“அக்கா….ஸ்ரீதர் வந்திருந்தாரா.?”
“ம்ம்ம்,,,,,உனக்கெப்படி தெரியும்.?”
“நான்தான் அவரை உன்னையும் ஆர்த்தியையும் வெளிஏ அழைச்சுக்கிடட்டு போகச்
சொன்னேன். உனக்கு ஒரு மாறுதலா இருக்குமேன்னு தான். இந்த ஒரு வருஷமா அவர் உன்
கூடத் தான் பேசலை. எங்க கூட பேசிட்டு தான் இருக்கார். அம்மாவுக்கு கூட அவரை ரொம்ப
பிடிச்சிருக்கு. ஆனந்துக் கூட.”
“இதெல்லாம் என்கிட்டே நீ இது நாள் வரை சொல்லவேயில்லை.”
“கோபப்படாதே……எதாயும் கேக்கற நிலமையில் நீ இல்லை. நீயா அவர் கிட்டே
பேசியிருக்கே. அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டார் தெரியுமா.? முடிஞ்சு போன கடந்த
காலத்தை மராந்திடு அக்கா. புதுசா வாழ ஆரம்பி. ஸ்ரீதரோட நட்பு உனக்கு தெம்பு தரும்…..”
“அப்படியா சொல்றே.? சரி….” இழுத்தாற் போல் சொன்னாள்.
“அப்புறம் அக்கா….ஒரு மகிழ்ச்சியான செய்தி, அதை சொல்லத்தான் ஃபோன் செய்தேன்.”
“என்ன சுதா……கண்டிப்பா தித்திப்பான விஷயமா தான் இருக்கும். சொல்லு.”
“ஆர்த்திக்கு தம்பி பாப்பாவோ தங்கையோ பிறக்கப் போவுது. எட்டு மாசத்திலே.” என்றாள்
சுதா குரலில் வெட்கமும் மகிழ்ச்சியும் தெரிந்தது. “வாழ்த்துக்கள் சுதா. ரொம்ப சந்தோஷமா
இருக்கு. டாக்டர் கிட்டே செக் அப்புக்கு போனியா.?” அதன் பிறகு சுதா எப்படியெல்லாம்
கவனமா இருக்கணும்……பால் கீரை, பழங்கள் அதிகமா எடுத்துக்கணும் என்றெல்லாம்
சொல்லி போனை வைத்தாள். அவள் மனசு நிறைந்து போயிற்று. சுதாவை பார்க்க வேணும்
போல் இருந்தது.
மாலை டீ குடிக்கும் போது ஆர்த்தி சொன்னாள் “அம்மா….என் வகுப்பு தோழி ஸ்ரீஜாவுக்கு
தம்பி பிறக்கப் போவுதாம். ரொம்ப பீத்திக்கிறா. எனக்கு மட்டும் யாருமில்லை.” ஏக்கமாக
சொன்னாள்.
“உனக்கும் தம்பியோ தங்கையோ பிறக்கப் போவுது ஆர்த்திம்மா. நீயும் பீத்திக்கலாம்.”
“ஐ….நிஜமாவா.? ஆனா உன் வயிறு பெரிசவேயில்லையே?
“சுதா சித்திக்கு. அப்ப உனக்கு தம்பியோ தங்கையோ தானே.?”
ஆர்த்தி குதித்தாள். தன் கையிலிருந்த பெரிய பொம்மையை தூக்கி எறிந்தாள்.
“இனிமே நீ வேண்டாம். எங்களுக்கு நிஜ பாப்பா கிடைக்கப் போவுது.” கைதட்டி சுற்றி சுற்றி
டான்ஸ் ஆடினாள். சுஜா புன்னகைத்தாள். எவ்வளவு பெரிய குடுப்பினை உறவுகள்!
“ஸ்ரீதருக்கு ஃபோன் செய்தாள். அவள் குரலில் மகிழ்ச்சி. “ஸ்ரீதர்….ஆர்த்திக்கு தங்கையயோ
தம்பியோ….”
“பிறக்கப் போவுது. தெரியும். சுதா சொன்னாங்க.”
“ம்ம்….உங்களுக்குத் தான் முதல்லே தகவல் வந்திருக்கு போலிருக்கு.”
“அந்த பாக்கியமாவது கிடச்சிருக்கே. போராமையா இருக்கா.?”
“ஆமா. நீங்க தான் அவங்க எல்லார் மனசையும் அள்ளிட்டீங்களே.”
“அள்ள வேண்டிய மனசை அள்ளலையே.”
“என் மனசிலே உங்களுக்கு தனி இடம் இருக்கு. ஸ்ரீதர்.”
“சிறந்த வில்லனாகவா.?”
அவள் வாய்விட்டுச் சிரித்தாள். பிறகு சொன்னாள்.
“இல்லே……ஒரு நாளள் நண்பனா.”
“சரி ஏதோ, இப்போதைக்கு ஓ. கே. சுஜா. என் பிறந்தநாள் அடுத்த வெள்ளி வருது. ஒரு சின்ன
விருந்து நீ வரணும்.”
“பிறந்த நாளெல்லாம் கொண்டாடுவீங்களா என்ன?”
“இந்த வருடம் மட்டும். அழைப்பு உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான்.”
“உங்க பெற்றரவர் கிட்டே என்னை யாருன்னு அறிமுகப்படுத்துவீங்க.?”
“அவங்க கிட்டே நான் சொல்லிட்டேன். உங்களை பார்க்கணும்னு ஆவலா இருக்காங்க.”
“நான் உங்களை என் பிரெண்டா தான் நினைக்கிறேன்னு சொல்லிட்டீங்களா.?”
“சொல்லிட்டேன்.”
“அப்ப சரி. தேங்க்ஸ்.”
“கட்டாயம் மாலை அஞ்சு மணிக்கு வந்திடுங்க.”
“நிச்சயமா.”
சுஜா மனசு லேசாக இருந்தது. பூட்டிய வீட்டை திறந்து, ஒட்டடை அடுத்து வர்ணமும்
அடித்தது போல் அவள் மனசு புதுசாக இருந்தது. ஸ்ரீதருக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று
சிந்தித்தாள்.
சுஜா ஆர்த்தியை கூட்டிக் கொண்டு கடைவீதிக்குப் போனாள்.
“அம்மா…. முதல்லே அழகான கிரீட்டிங் காரட் வாங்கலாம்.”
வண்ண வண்ண கார்டுகளை, அதன் வாசகங்களை பார்த்தார்கள். ஒரு கார்டை எடுத்துத் தந்த
ஆர்த்தி “இது அழகா இருக்கும்மா.”
கடலலைகள். பவுர்ணமி இரவு, அழகான கப்பல் மிதக்கிறது. அதில் “நட்பு கேட்டு
பெறுவதில்லை. கேட்காமலே தருவது’ என்று எழுதியிருந்தது. சுஜாவுக்குப் பிடித்தது. அதையே
வாங்கினார்கள். கார்டு சரி, வேறு என்ன பரிசு வாங்கலாம்? கைக் கெடிகாரம்….வேண்டாம்.
இதோ இந்த அழகான தங்க ஃபிரேம் போட்ட குளிர் கண்ணாடி? ஸ்ரீதருக்கு எடுப்பாக
இருக்கும். ஆர்த்திக்கும் பிடித்தது. ரிப்பன் கட்டிய பளபள காகிதத்தில் சுற்றி பேக்
பண்ணியாச்சு “டூ மை டியர் பிரெண்ட்? வாழ்க்கையை குளிர்ச்சியாக பார்ப்பதற்கு என்று
உள்ளே ஒரு வாசகம் எழுதி வைத்தாள் சுஜா.
வெள்ளியன்று உற்சாகமாக சுஜா ஆர்த்தியுடன் கிளம்பினாள். அழகான பச்சையில், பிரௌன்
பார்டர் உள்ள பட்டு காட்டன் புடவையை அணிந்து கொண்டாள். ஸ்ரீதர் வீட்டை அடைந்த
போது சரியாக மணி ஐந்தடித்தது.
ஸ்ரீதர் பளிச் கிரீம் கலர் ஷர்ட்….ஜரிகைக் கரை வேட்டியுடன் மாப்பிள்ளை போலவே
அட்டகாசமாக இருந்தான்.
“அங்கிள் யூ ஆர் வெரி ஹாண்ட்சம்.” என்றாள் ஆர்த்தி.
“உன் கஞ்சக்கார அம்மாவாலே அதை கூட பாராட்ட முடியாதா? ஆனா நான் சொல்லிடறேன்
சுஜா நீ ரொம்ப அழகா இருக்கே. உள்ளே வாங்க.”
வீடு பெரிதாக நவீனமாக இருந்தது. அம்மா, அப்பா சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள்.
உற்சாகத்துடன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து, கேக் வெட்டினான் ஸ்ரீதர். கைதட்டி ஹாப்பி
பர்த்டே பாடினார்கள். ஆர்த்தியிடம் முதல் துண்டை கொடுத்தான் ஸ்ரீதர். சுஜா கொடுத்த
பரிசை வாங்கிக் கொண்டான். விருந்து சாப்பிட்டார்கள். ஐஸ்கிரீமூடன் அமர்ந்தார்கள்.
ஸ்ரீதரின் அம்மா கனகவல்லி சுஜாவுடன் பேச ஆரம்பித்தார்.
“சுஜா உனக்கு என்ன வயசு.?”
அநாகரீகமான கேள்வியா இருக்கே….”இருபத்தெட்டு.” என்றாள்
“சொந்த ஊர்.?”
“திருநெல்வேலி அம்மா.”
“என்ன படிச்சிருக்கே.?’
“எம், எஸ். சி”
“உனக்கு ஸ்ரீதரை பிடிச்சிருக்கா.?”
“……” இது என்ன கேள்வி? முகம் சுளித்தாள்.
“சொல்லு.”
“உங்க புள்ள ஒரு நல்ல மனிதர். எனக்கு நல்ல ப்ரெண்ட்.”
“எவ்வளவு நாள் ப்ரெண்டாவே இருப்பீங்க.?”
“நட்புக்கு ஏது எல்லை.? காலம் பூரா.”
“அவனுக்குன்னு மனைவி வந்தா……இந்த அன்பு தொடருமா என்பது வர்றவளை பொறுத்தது.”
“அது உண்மை தான்.”
“அப்ப புருஷனை பறிகொடுத்த மாதிரி நட்பையும் பறி கொடுக்க தயாரா.?”
சுஜாவின் கண்களில் நீர் நிறந்தது. தலை குனிந்தாள்.
“அம்மா ப்ளீஸ்…. எதுக்கு அவங்களை கஷ்டப்படுத்தணும்.? யார் வந்தாலும் நட்பு தொடரும்.
இப்படி பேசாதீங்கம்மா.” ஸ்ரீதர் பதறினான்.
“நீ சும்மா இருடா. இந்த மாதிரி ரெண்டும் கெட்டானா இருக்கக் கூடாது. சுஜா ஒரு முடிவுக்கு
வா. ஸ்ரீதரை கல்யாணம் பண்ண விருப்பமா.
சுஜா விருட்டென்று எழுந்தாள்.
“அம்மா மகன் உறவு எப்படி தொடருமோ. அது போல் நட்பும் தொடரும். நான் வரேன்.
தேங்க்ஸ் விருந்துக்கு.” சுஜா ஆரத்தியை இழுத்துக் கொண்டு விரைந்து கார் ஏறி சென்று
விட்டாள். வீட்டுக்கு போனதும் ஆர்த்திக்கு தெரியாமல் இரவு வெகு நேரம் அழுதாள்.
Intresting