பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான்.
பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் வகுப்புகள் எடுப்பதில் மும்முரமானாள். மருத்துவர் கொடுத்த மருந்துகளைத் தவறாமல் உட்கொண்டாள் அவள்.
அதிரடியாக அவளது குறைபாடு முற்றிலும் போய்விட்டது என்று சொல்ல முடியாது. வருடக்கணக்கில் மனதிலேற்றி வைத்த பாதிப்பை வெறும் ஏழு நாட்களில் குணப்படுத்திவிட முடியுமா என்ன? அவ்வளவு பெரிய மாற்றம் நிகழவேண்டுமென எதிர்பார்ப்பது பேராசை தானே!
ஆனால் மனதைக் கட்டுக்குள் வைப்பதில் மட்டும் கொஞ்சம் வெற்றி பெற்றாள் எனலாம். இதோ அந்த வாரத்தின் கவுன்சலிங் செல்ல வேண்டிய நாள்.
பாரதி மருத்துவரிடம் கவுன்சலிங்குக்குச் செல்ல ஆயத்தமானாள். அன்று வாரயிறுதி என்பதால் கடந்த இரு வாரங்களைப் போல பாலா தாமதமாகத் தான் வருவான் என்று எதிர்பார்த்துக் கதவைப் பூட்டியவள் அவன் திடுமென வந்து நின்றதும் அதிர்ந்தே போனாள்.
“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன் பாரதி… ரெண்டு பேரும் சேர்ந்தே டாக்டரைப் பாக்க போகலாம்” என்றான் அவன்.
பாரதி உடனே மறுப்பாகத் தலையசைத்தாள்.
“என்னால தனியா போக முடியும்… நீங்க வரவேண்டாம்”
அவளது மறுப்புக்கான காரணம் புரியவும் பாலாவின் முகத்தில் வேதனையின் ரேகைகள் தெரிந்தன.
“ப்ளீஸ் பாரதி! கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் வந்துடுறேன்” வார்த்தை தான் கெஞ்சலாக இருந்ததே தவிர தொனி என்னவோ அழுத்தமாக ஆணையிடுவது போல இருந்தது.
யாரிடமும் எதற்காகவும் வாதிட்டும் பிடிவாதம் பிடித்தும் பழக்கமில்லாத பாரதி அவனிடமும் பணிந்தே போனாள்.
பாலா வீட்டுக்குள் போனவன் அடுத்த ஐந்தாவது நிமிடம் வேறோரு ஹென்லே டீசர்ட் ஜீன்சில் திரும்பி வந்து கதவைப் பூட்டினான்.
“வா பாரதி”
இருவரும் சேர்ந்து மின்தூக்கியில் ஏறியதும் அதன் ஒரு மூலையில் ஒடுங்கி நின்று கொண்டாள் பாரதி.
அவளது விலகல் பாலாவைப் பாதித்தது. அதை அவனது இறுக்கமான உடல்மொழியில் கண்டுகொண்டாலும் முன்பு போல அவனிடம் பேசவோ, கரம் கோர்த்து நிற்கவோ அவளுக்குப் பயம். எங்கே மீண்டும் அவன் தன்னைக் காயப்படுத்திவிடுவானோ என்ற பயம்.
அதைச் சொன்னால் தன் விலகலை விட அந்தப் பயம் அவனை இன்னும் வேதனைக்குள்ளாக்கிவிடுமே!
தரை தளத்தில் இறங்கி தரிப்பிடத்தில் இருந்த காரில் கிளம்பிய இருவரும் மருத்துவமனைக்கு வந்து சேரும் வரை பேசிக்கொள்ளவில்லை.
மருத்துவர் பிரியம்வதா அவர்கள் இருவரும் ஒன்றாய் வந்திருப்பதைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.
“வெல்கம் பேக் பாலா”
“ஹலோ மேம்” என சினேகமாகப் புன்னகைத்தான் அவன்.
“ப்ளீஸ் சிட்டவுன்”
இருவரையும் அமரச் சொன்னவர் “தென், ஆர் யூ ஓ.கே பாரதி?” என்று கேட்டபடி அவர்களின் முன்னே அமர்ந்தார்.
“ஃபீலிங் பெட்டர் மேம்” என்றாள் பாரதி அமைதியாக.
“அண்ட் வாட் அபவுட் யூ பாலா?”
“ஐ அம் நாட் ஃபீலிங் வெல் மேம்” என்று சொல்லி அவரைத் திடுக்கிட வைத்தான் அவன்.
“வாட் ஹேப்பண்ட் பாலா?” என்று பிரியம்வதா கேட்கவும் பாலா தயக்கமாக பாரதியைப் பார்த்தான்.
அவளோ பிரியம்வதாவைப் பார்த்தாளே தவிர பாலாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனவே பாலாவே தனது மனநிலையை அவரிடம் சொல்ல ஆரம்பித்தான்.
“பாரதிக்கு இருக்குற பிரச்சனைய பத்தி எனக்கு நீங்க சொன்னப்ப என்னால அதோட தீவிரத்தைப் புரிஞ்சிக்க முடியல மேம்… எனக்குள்ள அப்ப என்ன மாதிரியான உணர்வு வந்துச்சுனு உங்களுக்கே தெரியும்… இந்த மாதிரி பிரச்சனைய பத்தி நான் தியரியா கூட எங்கயும் படிச்சதில்ல மேம்… திடீர்னு உன் பொண்டாட்டிக்கு அந்தப் பிரச்சனைனு சொன்னதும் என்னால அதை ஏத்துக்க முடியல… பட் அந்தப் பிரச்சனையால அவ எவ்ளோ காயப்படுறானு நேர்ல பாத்ததும் துடிச்சுப் போயிட்டேன்… ஷீ வாஸ் ஹர்ட்டிங் ஹெர்செல்ஃப்…. அப்ப தான் நான் எவ்ளோ மோசமா அவ கிட்ட நடந்துக்கிட்டேன்னு புரிஞ்சுது மேம்… என்னை விட்டு அவளை ரொம்ப தூரம் விலக்கிவச்சிருந்தது எவ்ளோ பெரிய தப்புனு எனக்குத் தெரிஞ்சிடுச்சு… இப்ப எனக்கு என் ஒய்போட ப்ராப்ளம் சரியாகணும்… அதுக்கு நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்லுங்க”
பாரதி கணவனைப் பார்க்கவில்லையே தவிர அவனது சொற்கள் அவள் காதில் கேட்டுக்கொண்டு தான் இருந்தன. அவன் பேச பேச உணர்ச்சிமேலீட்டால் கண் கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் அவள்.
பிரியம்வதா அவனிடம் ஃபேமிலி தெரபியின் முக்கியத்துவம் பற்றி கூறினார். அப்போது தான் அவனால் பாரதியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடியுமென கூறினார் அவர்.
பாலாவும் ஃபேமிலி தெரபிக்குச் சம்மதித்தான். அடுத்து பாரதிக்கான ஸ்பீச் தெரபி ஆரம்பித்தது. அதில் பாரதி கடந்த ஒரு வாரத்தை எப்படி செலவளித்தாள் என்பதில் ஆரம்பித்து அவளுக்கும் பாலாவுக்குமான உறவு எந்நிலையில் உள்ளது என்பது வரை அனைத்தையும் கேட்டுக்கொண்டார் பிரியம்வதா.
பாரதியின் கவனம் முழுவதும் இப்போது டியூசன் எடுப்பதிலும், சுயமாய் சம்பாதிப்பதிலும் குவிந்துவிட்டதென்பதைப் புரிந்துகொண்டார் அவர்.
பாலாவின் புறக்கணிப்பை எண்ணி மனதை வருத்திக்கொள்ளாமல் அவள் சரியான முடிவை எடுத்த விதம் முதிர்ச்சியான அணுகுமுறை எனப் பாராட்டினார்.
பாரதியின் முகத்தில் புன்சிரிப்பு முகிழ்த்தது.
“இந்த ஏழு நாள்ல எப்பவாச்சும் யூ ஹேவ் எனி செக்சுவல் ட்ரபிள்ஸ்?”
“ஒரே ஒரு தடவை மட்டும் மேடம்”
“ஹவ் டிட் யூ ஃபேஸ் தட் சிச்சுவேசன்?”
“நான்..” என்றவள் தலையைக் குனிந்துகொண்டபடி “ஹாட்வாட்டர்ல குளிச்சேன்” என்றாள்.
“நீ சொல்லுற விதத்தைப் பாத்தா சாதாரணமான ஹாட் வாட்டர்னு தோணலையே?”
பிரியம்வதா கேட்டதும் ஆமென தலையாட்டினாள்.
“டோண்ட் ஹார்ம் யுவர்செல்ஃப் பாரதி”
“அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியல மேடம்… என் பிரச்சனை தீரணும்னு நான் கவுன்சலிங் வந்ததுக்குக் காரணமே என் புருசன் கூட நல்லபடியா வாழணும்ங்கிறது தான்… அவரே என்னை வெறுத்ததும் என்னால வேற எதை பத்தியும் யோசிக்க முடியல… ஆனா என்னால ஊருக்கும் திரும்பிப் போக முடியல… பாலாவுக்கும் என்னை ஊருக்கு அனுப்பி வைக்க விருப்பமில்லனு தோணுச்சு… என் கவனத்தைத் திசை திருப்பியே ஆகணும்னு தீர்மானிச்சப்ப தான் அந்த ஆன்லைன் டியூசன் ஆப் பத்தி பாத்தேன்… இப்ப நான் ஒரு ஃபுல்டைமா அந்த ஆப்ல குழந்தைங்களுக்கு இங்கிலீஸ் க்ராமர், ஸ்போக்கன் இங்கிலீஸ் எடுக்குறேன்… என் நேரத்தை அந்த ஆப் எடுத்துக்குறதால சினிமா, சீரியல்னு பாத்து என் மனசை அலைபாய விட எனக்கு நேரம் இல்ல மேம்”
பிரியம்வதா அவள் சொன்னதை குறித்துக்கொண்டார். பின்னர் தனது கருத்தைக் கூறினார்.
“சினிமா, சீரியல்ல இண்டிமேட் சீன்ஸ் வர்றது சகஜம் பாரதி… நீ அதை நார்மலா ஃபேஸ் பண்ணிக்க கத்துக்கணும்… அதை பாத்து பயந்து ஓடக்கூடாது… அதுக்கு உன்னை ட்ரெயின் பண்ணுறது தான் இந்த தெரபியோட நோக்கம்”
“புரியுது மேம்”
இருவரும் பேசி முடித்த பிறகு பாலாவை உள்ளே அழைத்தார் அவர்.
பாலா அமர்ந்ததும் “உங்க ஒய்ப் இப்ப தன்னோட கவனத்தை வேற பக்கம் திருப்பிருப்பாங்க… நல்ல விசயம் தான்… ஆனா பிரச்சனைக்கான ரெமடி இது இல்ல… எனிஹவ், அவங்க மாற்றத்துக்கான முதல் அடி இந்த முயற்சி… ஃபீலிங் ப்ரவுட் ஆப் யூ பாரதி… கேரி ஆன் யுவர் ஒர்க்ஸ்… டோண்ட் ஸ்டாப் மெடிசின்ஸ் அண்ட் தெரபி” என்று இருவரிடமும் பேசியவர் பாலாவிடம் பாரதியை எவ்வாறு பார்த்துகொள்ள வேண்டும், இந்நேரத்தில் அவளது உணர்வுகள் எப்படி இருக்குமென கூறினார்.
“நான் ப்ரிஸ்கிரைப் பண்ணுற மெடிசின்ஸோட டோசேஜ் அதிகமாச்சுனா சம்டைம்ஸ் பாரதிக்கு ஹாலூசினேசனை உருவாக்கலாம்… அவங்க டயர்டா ஃபீல் பண்ணலாம்… சில நேரங்கள்ல அதிகப்படியான கோவம் கூட வரும் அவங்களுக்கு… யூ ஹேவ் டு அண்டர்ஸ்டான்ட் ஹெர் சிச்சுவேசன் பாலா… அண்ட் ஹார்மோன் இன்ஜெக்சன் சில மெடிசின்ஸால பாரதிக்கு பிசிக்கல் ரிலேசன்ஷிப்புக்கான டிசையர் படிப்படியா குறைய ஆரம்பிக்கும்… சம்டைம்ஸ் அதுக்கான நாட்டம் அவங்களுக்கு இல்லாமலும் போகும்… இது எல்லாமே ஷார்ட் டேர்ம்ல வரக் கூடிய சைட் எஃபெக்ட்ஸ்… அதையும் நீங்க புரிஞ்சிக்கணும்”
பாலா தலையை ஆட்டிவைத்தான். பின்னர் வழக்கம் போல பிரியம்வதா கொடுத்த மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு பாலா பணம் செலுத்த கவுண்டருக்குப் போக எத்தனிக்கையில் அவனைத் தடுத்து நிறுத்தினாள் பாரதி.
“என்ன பாரதி?” என்றவனிடம்
“நானே வாங்கிக்கிறேன்… ப்ரிஸ்கிரிப்சனைக் குடுங்க” என்று கை நீட்டினாள் அவள்.
அவள் பேசியதை அங்கே நடந்து போன செவிலியைத் தவிர வேறு யாரும் கேட்டிருக்க முடியாது. ஆனாலும் பாலாவுக்குச் சுறுசுறுவென கோபம் வந்துவிட்டது.
மருந்து சீட்டை அவளது உள்ளங்கையில் அழுத்தியவன் அங்கே நிற்க பிடிக்காமல் விறுவிறுவென நடந்து போய்விட பாரதி பெருமூச்சுவிட்டபடி பணம் செலுத்திவிட்டு மருந்தை வாங்கிக்கொண்டாள்.
பின்னர் தரிப்பிடத்துக்கு வந்தவள் கார்க்கதவு திறக்கவும் ஏறி அமர்ந்தாள்.
கார் வீட்டுக்குச் செல்லும் வழியில் போகாமல் வேறு பாதையில் செல்லவும் “எங்க போறிங்க?” என்று மெதுவாக அவனிடம் வினவினாள் அவள்.
வெடுக்கென திரும்பிய பாலா “உன்னை ஒன்னும் கடத்திட்டுப் போகல… நம்ம எங்க போயிட்டிருக்கோம்னு அந்த இடம் வந்தா தெரிஞ்சிடும்” என்றான்.
போகிற இடம் வந்த பிறகு நான் ஏன் கேட்கப்போகிறேன் என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள் பாரதி,
கார் போய் நின்ற இடம் வழக்கமாக அவர்கள் இருவரும் தேநீர் அருந்தும் கடை. பாலாவுடன் அங்கே வந்த பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்கவும் கண்கள் கலங்கி நாசி சிவந்துபோனது பாரதிக்கு.
“இறங்குறியா இல்ல காருக்கே டீ கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று அவன் கேட்கவும்
“இல்ல நான் வர்றேன்” என்று இறங்கினாள் அவள்.
அங்கே போடப்பட்ட அலுமினிய மேஜைகளின் அருகே நின்று கொண்டு “ரெண்டு இஞ்சி டீ… ரெண்டு உருளைக்கிழங்கு போண்டா” என அவன் ஆர்டர் செய்யும்போதே
“எனக்கு வேண்டாம்” என்று பாரதியிடமிருந்து மறுப்பு வந்தது.
“உன்னைப் பாக்க வச்சு சாப்பிட்டு வயித்துவலில துன்பப்பட எனக்கு ஆசை இல்ல” நறுக்குத் தெறித்தாற்போல பேசி அவளது மறுப்புக்கு முடிவுரை எழுதினான் பாலா.
சுடச்சுட தேநீரும், மிதமான சூட்டில் போண்டாக்களும் வரவும் தனக்கும் அவளுக்குமாக எடுத்துக்கொண்டான் பாலா.
தேநீர் வழக்கம் போல பிரமாதம். உருளைக்கிழங்கு மசாலா தான் கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்தது. இருப்பினும் அந்தக் காரத்தைத் தேநீரின் சுவை குறைத்துவிட அந்தக் காம்பினேசன் ஜோராக இருந்தது.
பாரதியும் மடமடவென தேநீரை அருந்தி போண்டாவை விழுங்கினாள்.
“போண்டா, டீ செம… ஆனா என் பொண்டாட்டி தான்…” என வாய்க்குள் முணுமுணுத்தவனை முறைத்தபடியே கடைசி துண்டு போண்டாவை உள்ளே தள்ளியவள் கை கழுவ போய்விட பாலா தேநீர் மற்றும் போண்டாக்களுக்குப் பணம் செலுத்திவிட்டு வந்தான்.
பாரதி கை கழுவிவிட்டு வந்ததும் அவள் முன்னே உள்ளங்கையை நீட்டினான்.
“என்ன?” புரியாமல் கேட்டாள் அவள்.
“மெடிசினுக்கு நீ தான பணம் குடுத்த… இப்ப டீக்கு நான் குடுத்துட்டேன்… என் காசுல செலவு பண்ண தான் உங்களுக்குப் பிடிக்காதே… அதனால ஐம்பது ரூபால உன் ஷேர் இருபத்தஞ்சை எடுத்து வை” என்றான் கறாராக.
“நானா உங்க கிட்ட டீ கேட்டேன்? நீங்களே வாங்கி குடுத்துட்டு இப்ப காசையும் புடுங்கிறிங்க” என அவளும் கோபத்தோடு சிடுசிடுக்கவே
“இது என்னோட டீ டைம்.. இப்ப டீ குடிக்கலனா எனக்குத் தலைவலி வந்துடும்… எனக்குத் தனியா குடிக்கப் பிடிக்காதுனு உனக்கே தெரியும்” என்றான் அவன்.
“ரெண்டு வாரமா தனியா தானே இருந்திங்க… இப்ப என்னாச்சு?” என்றவள் அவனது முறைப்பின் உஷ்ணம் தாங்காமல் தலையைக் குனிந்துகொண்டாள்.
“போய்க் கார்ல உக்காரு… வந்துடுறேன்” என்றான் அவன்.
உடனே தலையை நிமிர்த்தியவள் “ஸ்மோக் பண்ண போறிங்களா?” என்று காட்டமாகக் கேட்டதும் முறைப்பு நீங்கி சிரிப்பு நிறைந்தது பாலாவின் வதனத்தில்.
“ஒரே ஒரு தம்… அது இல்லனா நீ பேசுற பேச்சைப் பொறுத்துக்குற சகிப்புத்தன்மை எனக்கு இல்லாம போயிடும்” என்றான் பாலா.
“நான் உங்களை ஒன்னும் சொல்லமாட்டேன்… வாங்க போகலாம்”
பிடிவாதமாக நின்று அவனை அழைத்துக்கொண்டு போனாள் பாரதி. இரண்டு வாரங்கள் அவர்களுக்குள் இருந்த விலகல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிப்பதற்கான அறிகுறியே இது!
அப்பாட…! திரும்பவும் அவளை ஹர்ட் பண்ணாம இருந்தா சரி.தான்.
கடைசி வரிகள் புன்னகையை தந்தன
இருவரும் புரிதல் நல்லது
Nice
Nice epi👍
❤️❤️❤️❤️❤️❤️
Interesting. Nice episode sis. Waiting for next. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️