அத்தியாயம் 13
சில நாட்களுக்கு முன்பு…
“மார்த்தாண்டா உனக்கான காலமும் நேரமும் கூடி வந்துடுச்சு.” என்றார் நாடி சோதிடர் சிவவாக்கியர்.
சிவவாக்கியரும் மார்த்தாண்டமும் தூரத்து சொந்தங்கள். எப்பொழுதாவது குடும்ப நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வது உண்டு.
இருவரும் கிட்டத்தட்ட சம வயதினர் என்பதால் பெயர் சொல்லியே அழைத்து கொள்ளுவார்கள்.
சிவவாக்கியரிடம் தீர்க்க முடியாத பிரச்சனைகளோடு வருபவர்களை சில சமயம் மார்த்தாண்டத்திடம் அனுப்புவார். அதற்கென தனியாக ஒரு தொகையை மார்த்தாண்டத்திடம் இருந்து பெற்று கொள்ளுவார் சிவவாக்கியர்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை சிவா.” என தட்டி கழிக்க பார்த்தார் சிவவாக்கியர்.
“நீ எது பின்னாடி போறேன்னு எனக்கு தெரியாதுனு நினைக்கிறியா மார்த்தாண்டா?” என கேட்டார் சிவவாக்கியர்.
மார்த்தாண்டத்தின் நடை நின்றது.
“தூரத்து சொந்தம்னாலும் நானும் உங்க குடும்பம் தானே மார்த்தாண்டா. எல்லாரும் எல்லாத்தையும் மறந்திட்டாங்கனு நினைக்கிறியா? எல்லாரும் எல்லாத்தையும் காலப்போக்குல நியாபகம் வச்சிக்கிறது இல்லை அவ்வளவு தான்.” என்றார் சிவவாக்கியர்.
மார்த்தாண்டம் எதுவும் பேசவில்லை.
சிவவாக்கியரே தொடர்ந்தார்.
“என்கிட்ட ஒரு பொண்ணோட ஜாதகம் வந்துச்சு. சந்திர கிரகணத்துல பொறந்த பொண்ணு. நாடி தேடி எடுக்கவே ரொம்ப சிரமமா போச்சு. பல நாள் தேடி கண்டுபிடிச்சி எடுத்தேன். அந்த பொண்ணோட நாடியை படிக்க படிக்க எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக்குச்சு. எனக்கு என்னமோ நீ செய்ய போற வேலைக்கு சரியான பொண்ணா அந்த பொண்ணு தான் இருக்கும்னு நினைக்கிறேன்.”
“எல்லா பொண்ணுங்களும் இந்த விசயத்துக்கு சரியாய் இருக்க மாட்டாங்க சிவா. அது அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு இல்லையா?”
சிவவாக்கியர் சொல்வதின் மேல் நம்பிக்கை இல்லாது பேசினார் மார்த்தாண்டம்.
“அந்த பொண்ணோட குலதெய்வம் கொல்லிப்பாவை. இன்னும் கொஞ்ச நாள்ல குலதெய்வ வழிபாட்டுக்கு கொல்லி மலைக்கும் போக போறா…” என்றபடியே மார்த்தாண்டத்தின் முகத்தை பார்த்தார் சிவவாக்கியர்.
மார்த்தாண்டத்தின் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சர்யம், மகிழ்ச்சி என கலவையான உணர்வுகள் வந்து போயின!
“சிவா…” என்ற மார்த்தாண்டத்திற்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
“இதை விதின்னு நான் நம்பறேன் மார்த்தாண்டா. உன்னோட நாடியும் அந்த பொண்ணோட நாடியும் பாத்தவன்ற முறையில சொல்லுறேன் மார்த்தாண்டா. உங்க இரண்டு பேருக்குமே இன்னும் கொஞ்ச நாள்ல பேராபத்து ஒன்னு வர போவுது. தக்கனது தான் பிழைக்கும் மார்த்தாண்டா. நீ பிழைக்கனும்! நீ பிழைச்சி இதுவரை நம்ம குடும்பத்திலையே யாரும் சாதிக்காததை நீ சாதிச்சு காட்டனும்!” என்றார் சிவவாக்கியர் கண்கள் மின்ன!
இத்தனை மெனக்கெட்டு சிவவாக்கியர் வந்து மார்த்தாண்டத்திடம் வெறுமனே தகவல்களை தருவதில் என்ன பிரயோஜனம் இருக்க போகிறது?
வனபத்திரகாளியின் அருளை பெற்றவர்கள் மார்த்தாண்டத்தின் குடும்பத்தினர். மேலும் கொல்லிப்பாவையை அடக்கி விட்டால் கணக்கில் அடங்கா சக்திகளும் பொன்னும் பொருளும் கிடைக்கும் அவர்களுக்கு. நெல்லுக்கு பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாயாதா என்ன? அது கூட புரியாத ஆளா மார்த்தாண்டம்.
“நீ சொன்னதெல்லாம் நடக்கனும் சிவா. நடத்தி காட்டுவேன்.” என்ற மார்த்தாண்டத்தில் மனதில் புது தெம்பு வந்திருந்தது.
நிகழ போகும் சூரிய கிரகணமும், சிவவாக்கியர் சொன்ன தகவல்களும் மார்த்தாண்டத்தின் மனதில் புது ஒளியை பரவ செய்தது.
உண்மையில் இது விதியின் விளையாட்டே தான்! இத்தனை தலைமுறையாக விதியினால் வஞ்சிக்கப்பட்டவர்கள், இன்று அதே விதியினால் தங்களுக்கு வேண்டியதை அடைய போகிறார்கள் என்று நம்பினார் மார்த்தாண்டம்.
சிவவாக்கியர் வந்து சென்றதுமே பில்லி, சூனியம், ஏவல், கட்டு போன்ற எதிர்மறை செயல்கள் அனைத்தையுமே நிறுத்திவிட்டார் மார்த்தாண்டம்.
வீட்டு பெண்களையும் சுத்தபத்தமாக இருக்க சொன்னார்.
ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) கடும் விரதம் இருந்தார் மார்த்தாண்டம். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு. அதுவும் அசைவத்தை ஒதுக்கி காய்கறிகள் பழங்கள் நீர் மட்டுமே உணவு என்றிருந்தார். நித்தமும் வனபத்திரகாளியினை பூஜித்தார். ஒரு தவம் போல் உடலையும் மனதையும் சுத்தம் செய்து வனபத்தரகாளியிடம் தவம் இருந்தார் மார்த்தாண்டம்.
மக்கள் எல்லாம் வந்து பார்த்துவிட்டு ஏமாந்து போயினர். எல்லாம் சில காலத்திற்கு தான் என தனக்கு தானே சொல்லி சிரித்துக் கொண்டார் மார்த்தாண்டம்.
வீட்டில் அனைவருக்குமே மார்த்தாண்டம் ஏதோ பெரியதாக செய்ய போகிறார் என்று தோன்றியது. ஆனாலும் அவர் என்ன செய்ய போகிறார் என்ற தெளிவு யாருக்கும் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் பிரத்தியங்கரா கொல்லிமலைக்கு சென்றதும், அவளை தூரத்தில் இருந்து கண்காணிக்க அவரது சிஷ்யனான முருகனை அங்கே அனுப்பி வைத்திருந்தார் மார்த்தாண்டம். அதன் மூலம் அவள் எங்கே தங்கியிருக்கிறார், எப்பொழுது கோவிலுக்கு சென்று வருகிறாள் என்பதெல்லாம் தெரிந்து வைத்திருந்தார் மார்த்தாண்டம்.
பிரத்தியங்கராவும் தன்னை ஒருவன் வேவு பார்க்கிறான் என்பதே அறியாமல் கோவிலுக்கு செல்வதும், மற்ற இடங்களை சுற்றி பார்ப்பதும், கார்த்திக்குடன் சண்டை போடுவதும் என நாள்களை கழித்துக் கொண்டிருந்தாள்.
பிரத்தியங்கராவை வேவு பார்ப்பதை தாண்டியும் முருகனுக்கு ஒரு வேலை இருந்தது. அது பலி இடுவதற்கு தோதான ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பது ஆகும்.
கொல்லிப்பாவையின் கோவில் இருக்கும் மலையும் மாசி பெரியண்ண சாமி இருக்கும் மலையும் பலி கொடுப்பதற்கு தோதுபடாது. இரண்டும் உக்கிர தெய்வங்கள்! அவைகளை தாண்டி பலி இடுவது சாத்தியமில்லை.
ஆகாய கங்கையின் நீர் வீழ்ச்சி தான் சரியான இடமாக பட்டது முருகனுக்கு. பக்கத்திலே அறப்பளீஸ்வரர் கோவில் இருந்தாலும் அதை விட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை தேர்வு செய்வதற்கான காரணங்கள் இருந்தன.
பலி கொடுப்பவரும் பலி பொருளும் நீராடி உடல் தூய்மையோடு இருக்க வேண்டும். அத்தோடு சூரியகிரணத்தன்று நீர்வீழ்ச்சியை காண வேண்டும் என யாரும் அங்கே வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் அனுமதி இல்லை என விரட்டிவிடவது மிக எளிதாக இருக்கும். இப்படி பல காரணங்களை முன்னிருத்தி ஆகாய கங்கையை நீர்வீழ்ச்சிக்கு அருகிலே பலி கொடுக்க முடிவு செய்தனர் மார்த்தாண்டமும் முருகனும்.
பிரத்தியங்கராவிற்கு வாழ்க்கை தங்கு தடையின்றி சென்றது. வீட்டையோ பெற்றோரையோ இப்பொழுதெல்லாம் அவள் தேடுவதே செய்வதே இல்லை.
கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த பின்பு எங்காவது சுற்றுவது எதையாவது வாங்கி கொண்டு வந்து அமுதாவோடு நேரம் செலவழிப்பது என இனிமையாக சென்றது பிரத்தியங்கராவிற்கு.
வந்த புதிதில் இங்கே எப்படி இத்தனை நாட்கள் இருக்க என அழுகையே வந்தது பெண்ணிற்கு. இப்பொழுது எல்லாமே தலைகீழ்.
சௌந்தர்யாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டே அமுதாவை பார்க்க சென்றாள் பிரத்தியங்கரா.
“விளக்கெல்லாம் சரியா தானே போடுற?” என கேட்டார் சௌந்தர்யா.
“அதெல்லாம் சரியா தான் மா போடுறேன்.” என அலுத்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.
“இன்னும் ஒரு வாரம் தான் டி. அத்தோட அந்த மலங்காட்டுக்கு ஒரு முழுக்கு போட்டுட்டு நீ வீடு வந்திடு. அப்போ தான் எனக்கு நிம்மதி!” சௌந்தர்யா.
“ஏன் மா இந்த மலையை பத்தி இப்படி பேசுற? நல்லா தானே மா இருக்கு?”
“எது நல்லா இருக்கா? உன் அப்பன் வீட்டு புத்தி அப்படியே வந்திடும் போலையே உனக்கு?” என மட்டம் தட்டினார் சௌந்தர்யா.
“அநியாயமா பேசாத ம்மா. எனக்கு அப்பா புத்தி வராம யார் புத்தி வரும்னு நினைக்கிற? பைத்தியம் மாதிரி எதாவது உளறாம இரும்மா…” என்றாள் பிரத்தியங்கரா எரிச்சல் படர்ந்த குரலில்.
கணவர் வீட்டையும் கணவர் வீட்டு பழக்கவழக்கங்களையும் பின்பற்ற விரும்பாத பெண்ணரசி சௌந்தர்யா. அவருக்கு கொல்லி மலையை பிடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே!
“அங்க போனதுல இருந்து ஓவர் திமிராகிடுச்சு டி உனக்கு.” என சௌந்தர்யா பிரத்தியங்கராவை வெளுத்து கட்டிக் கொண்டு இருந்தார்.
கடனே என கேட்டுக் கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா.
தூரத்தில் அமுதா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் தானே இதழ்கள் பூத்தது பிரத்தியங்கராவிற்கு.
“நான் அப்பறம் பேசுறேன். ஃபோனை வை ம்மா.” என்று அழைப்பை துண்டித்தாள் பிரத்தியங்கரா.
அன்றைக்கு என்னமோ அவ்வளவு வெக்கையாய் இருந்தது. வியர்த்து வழிந்து போயி தான் அமுதாவின் முன்பு நின்றாள் பிரத்தியங்கரா.
“ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா அமுதா?” என கேட்டபடியே அமுதாவின் அருகில் வந்தவள், இயல்பு போல அவளின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
அமுதாவிற்கு சிரிப்பு வந்தது. இந்த மொத்த மலையையும் காக்கும் தன்னை நேரே கண் கொண்டு கூட பார்க்க பயப்படும் மனிதர்களின் மத்தியில் இவள் தன் கையை பிடிக்கிறாளே…! தைரியம் தான்! என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
பிரத்தியங்கரா ஏதேதோ கதை அளந்து கொண்டிருந்தாள். ஆனால் அமுதாவின் கவனமெல்லாம் அவள் கையில் இருக்கும் தின்பண்டத்திலே இருந்தது. இன்று என்ன கொண்டு வந்திருப்பால் என்றே அமுதாவின் எண்ணங்கள் ஓடியது.
அமுதாவின் கவனமெல்லாம் தன் கையிலே இருப்பதை கண்ட பிரத்தியங்கராவிற்கு சிரிப்பு வந்தது. உடனேயே அங்கேயே அமர ஒரு இடத்தை தேடி பிடித்து இருவரும் அமர்ந்தனர்.
“இந்தா குலோப் ஜாமூன். எனக்கு இது ரொம்ப பிடிக்கும். அதான் உனக்கும் வாங்கிட்டு வந்தேன்.” என்றாள் பிரத்தியங்கரா.
அதிரசத்தின் நிறத்தில் தண்ணிக்குள் உருண்டையாய் மிதந்து கொண்டிருந்தது குலோப் ஜாமூன்.
“இது…” என அமுதா இழுக்க,
“இதோ இந்த ஸ்பூனை வச்சி இப்படி சாப்பிடு.” என செய்து காட்டினாள் பிரத்தியங்கரா.
கரு மேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டன. நிலவிய வெப்பத்திற்கு மழை வரும் போல இருந்தது.
குலோப் ஜாமுனை எடுத்து வாயில் போட்டாள் கொல்லி. போட்ட நிமிடம் தித்திப்பான இனிப்பு வாயில் கரைந்து போனது. அமுதாவிற்கும் அது நொடியில் பிடித்து போனது.
“இன்னும் எடுத்துக்கோ…” என சொல்லி ஊக்கினாள் பிரத்தியங்கரா.
சட்டென ஒரு துளி மழை அவள் கையில் வந்து விழுந்தது. நிமிர்ந்து வானத்தை பார்த்தாள். படபடவென மழைத்துளிகள் வந்து விழுந்தன.
“அச்சச்சோ நான் குடை வேற எடுத்துட்டு வரலையே… நீ வச்சிருக்கியா அமுதா?” என அமுதாவை நோக்கி கேட்டாள் பிரத்தியங்கரா.
பிரத்தியங்கராவின் கவலையை போக்கும் பொருட்டு, அமுதாவாகிய கொல்லி வானத்தை ஒரு நொடி உற்று பார்த்தாள். சூழ்ந்த கரு மேகங்கள் எல்லாம் விலகி போயின. அதை கண்ட பிரத்தியங்கரா அதிர்ந்து போனாள்!
தன் கண்களால் கண்டதை அவளால் நம்ப முடியவில்லை. அதே சமயம் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
“அமுதா நீ… நீ… யாரு?” என நடுங்கும் குரலில் முதன் முதலாக சந்தேக கண்ணோடு கொல்லியை பார்த்து கேட்டாள் பிரத்தியங்கரா.
Super super super👍👍👍 Eagerly waiting for next update 😍😍😍😍
wow ipo tha amutha yarunu yosikra prathi