அத்தியாயம் 9
ரெசார்ட்டிற்கு வரும் வரை கூட எதுவும் தெரியவில்லை பிரத்தியங்கராவிற்கு. இரவு தான் மெது மெதுவாக கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
அழுது கொண்டே அன்னைக்கு அழைத்தாள்.
“ம்மா கால் இரண்டும் வலிக்குது.” என்றாள்.
பிரத்தியங்கராவின் வலியை டீலில் விட்ட சௌந்தர்யா, “ஏன் டி ஒரு ஆம்பிள்ளையோட தனியா அவ்வளவு தூரம் போவியா? ஏதாவது ஆச்சுன்னா என்ன டி பண்ணுறது?” பயந்தா போய் கேட்டார்.
சக்திவேலை 48 நாள்களுக்கு இவளுக்கு ஓட்டுநராக ஏற்பாடு செய்ததே இவர்கள் தான். இப்பொழுது தனியாக சக்திவேலுடன் சென்றதற்காக திட்டுவது என்ன லாஜிக் என்றே புரியவில்லை பிரத்தியங்கராவிற்கு.
“அவ்வளவு அக்கறை இருந்திருந்தா நீயே கூட இருந்து டெய்லி என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானோ? இதான் சாக்குனு என்னை இந்த மலையிலையே தள்ளி விட்டுட்டு நீ ஜாலியா சென்னைக்கு போயிட்டல்ல…” என்றாள் பிரத்தியங்கரா.
“உன் நல்லதுக்குனு சொன்னா என்னையே நீ எதிர்த்து பேசுறியா? அந்த ஆள் சொன்னான்னு இனிமே அங்க இங்கனு போயி வைக்காத டி.” என சௌந்தர்யா கடிந்து கொள்ள, அவரிடம் இருந்து போனை பறித்த மணியரசு,
“என்னடா எதாச்சும் பிரச்சனையா?” என மணியரசு கேட்டார்.
“அதெல்லாம் இல்லைப்பா…” என்றவள், மாசி பெரியண்ண சாமி கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த அனுபவத்தை சொன்னாள்.
“அம்மா பாருங்கப்பா அந்த அண்ணாவோட எங்கையும் போகாத சொல்லுறாங்க. அப்பறம் எப்படி கோவிலுக்கு போறதாம்?” புகார் பத்திரம் வாசித்தாள் பெண்.
“அவகிடக்காம்மா அறிவு கெட்டவ… அந்த டிரைவரை பத்தி எல்லாம் நல்லா விசாரிச்சிட்டேன் மா. அப்பறம் தான் அவரை டிரைவரா வைக்க சொன்னேன். நீ கவலை படாத. அங்க இருக்க வரை வெக்கசன் மாதிரி நினைச்சி நல்லா சுத்தி பாத்துட்டு வாம்மா.” என்றார் மணியரசு.
மறுநாள் கால் எல்லாம் வீங்கி போய் கிடந்தது பிரத்தியங்கராவிற்கு. சக்திவேல் தான் தைலம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து தேய்த்து கொள்ள சொன்னார்.
“வீட்டுக்குள்ளையே இருப்பீங்களோ பாப்பா? கொஞ்சம் நடந்ததுக்கே இப்படி வீங்கி போயி கிடக்கு?” என கேட்டார் சக்திவேல்.
“வாக்கிங்லாம் போவேன் அண்ணா. ஆனா இந்த மாதிரி மலைலாம் ஏறினது இல்லை.” என்றாள் பிரத்தியங்கரா.
“அப்படிங்களா?” என கேட்டுக் கொண்டார் சக்திவேல்.
“இன்னைக்கு எங்க அண்ணா போறோம்?” என கேட்டாள் பிரத்தியங்கரா.
நேற்று பார்த்த வ்யூ பாயின்ட்களும் மலையின் அழகும் அவளை சுண்டி இழுத்தது.
“கால் எல்லாம் புஷ்ஷூ புஷ்ஷூனு கிடக்குது பாரும்மா. இன்னைக்கு எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு போயிட்டு வருவோம். நாளைக்கு ஆகாச(ய) கங்கை பால்ஸ்க்கு கூட்டிட்டு போறேன்.” என்றார் சக்திவேல்.
சொன்ன மாதிரியே அடுத்த நாள் எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு சென்ற பின்பு, அவளை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு அழைத்து சென்றார்.
ஆயிரம் படிகள் இறங்கி செல்ல வேண்டி இருந்தது. படிகள் இறங்குவதற்கு எளிமையாக இருக்க ஒரு முன்னூறு படிகள் வரை எளிதாகவே இறங்கிவிட்டாள். அங்கிருந்து பார்க்க மலையின் அழகோ கொள்ளையாய் இருந்தது.
“பாதி தூரம் வந்துட்டோமா அண்ணா?” என அவள் கேட்க,
“உங்களோட சரியா போச்சு பாப்பா? இப்ப தான் கால்வாசி தூரம் வந்துருக்கோம்.” என சக்தி வேல் சொன்னதும், பிரத்தியங்கராவின் முகம் திகிலடைந்தது.
எப்படியோ கிட்டி முட்டி ஆயிரம் படிகள் இறங்கினாள், இன்னமும் படி இறங்கிக் கொண்டே இருப்பது போலவே கால்கள் ஆடி கொண்டே இருந்தன அவளுக்கு.
படிகள் முடிந்த பின்பு எல்லாம் பாறைகள். அதில் கயிற்றில் நடப்பது போல பல வித்தைகளுடன் நடந்து சென்றவள், நீர்வீழ்ச்சியை சென்றடைந்தாள்.
அவ்வளவு பெரிய நீர் வீழ்ச்சியை காணவே அவளுக்கு திகட்டவில்லை.
“இது அம்புட்டும் மூலிகை தண்ணிம்மா… இது குளிச்சா தீராத வியாதியே இல்லை.” என்று சக்திவேல் சொன்னார்.
நிறைய ஆண்கள் இருக்கவே குளிக்காமல் காலை மட்டும் நீரில் நனைத்து விட்டு சிறிது நேரம் அங்கேயே கழித்துவிட்டு வந்தாள்.
இறங்கும் பொழுது இருந்த சிரமத்தை விட ஏறும் பொழுது தான் திணறிவிட்டாள் பிரத்தியங்கரா. இதற்காகவே இனி மலையேற பழக வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
இப்படியே காலையில் எட்டுக்கை அம்மனை தரிசித்துவிட்டு, அடுத்து அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்வது, நாமக்கலில் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில் செல்வது என நாள்கள் ஓடியது பிரத்தியங்கராவிற்கு. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போக போக பழகிக் கொண்டாள். இப்பொழுதெல்லாம் இப்படி தனியாக சுற்றுவதே அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எல்லா இடங்களையும் மறக்காமல் போட்டோ எடுத்து கொண்டு வருபவள், மறக்காமல் இரவில் எல்லாவற்றையும் எடிட் செய்து, தனது இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவு செய்து விடுவாள்.
ஒரு முறை சக்தி வேலின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி மகன்களை கூட சந்தித்துவிட்டு வந்தாள். அவர்களும் இவளிடம் பிரியமாக இருக்கவே நாள்கள் போவதே பிரத்தியங்கராவிற்கு தெரியவில்லை.
ஒரு ஞாயிறு அன்று கார்த்திக்கிடம் பேசிக் கொண்டே, ரெசாட்ர்ட்டை ஒட்டிய காட்டு பகுதிக்குள் தனியே வந்தாள் பிரத்தியங்கரா.
“என்ன ரொம்ப சந்தோசமா இருக்க போல?” என கார்த்திக் நக்கலாக கேட்க,
“ஏன் நான் சந்தோசமா இருக்க கூடாதா? அதை தான் நீ எக்ஸ்பெக்ட் பண்ணுறியா?” என தன் பங்கிற்கு எகிறினாள் பிரத்தியங்கரா.
“உன்கிட்டலாம் மனுஷன் பேசுவானா?” என கார்த்திக் ஆரம்பிக்க, அப்படியே பேசி பேசி இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் வந்தது.
நடந்துக் கொண்டே பேசியவள், ஒரு கட்டத்தில் சிக்னல் இல்லாது, அழைப்பு துண்டிக்கப்படவும் தான், தான் எங்கே இருக்கிறோம் என்பதையே உணர்ந்தாள்.
ரெசார்ட்டை விட்டு வெகு தூரம் வந்திருந்தாள்.
“ரொம்ப தூரம் வந்துட்டோம் போலையே. திரும்பி போயிடுவோம்.” என தனக்கு தானே பேசியவள், வந்த பாதை வழியே திரும்ப செல்லலானாள்.
பிரத்தியங்கராவின் நேரமோ என்னமோ அவள் செல்லும் வழியில் ஒரு நாய் குறுக்கே நின்றுக் கொண்டு இருந்தது. அதுவும் பார்ப்பதற்கே உர்ரென முறைத்துக் கொண்டு நின்றது.
வம்பு எதற்கு என சுற்றி சென்று விடலாம் என நினைத்தாள் பிரத்தியங்கரா. ஆனால் அந்த நாயோ அவளையே உற்று பார்த்துக் கொண்டே இருந்தது.
“ஷ்ஷூ… ஷ்ஷூ…” என அவள் அதை விரட்ட பார்க்க, அவ்வளவு தான்; நாய் அவளை பார்த்து குறைக்க ஆரம்பித்தது.
நாய் குறைப்பதை கண்டு பயத்தில் ஓட ஆரம்பித்தாள் பிரத்தியங்கரா. பிரத்தியங்கரா ஓடவும் அவளை குஷியாய் துரத்திக் கொண்டே ஓடியது நாய்.
நாய் துரத்துவது நின்றது கூட தெரியாமல், கண் மண் பாராமல் ஓடிக் கொண்டே இருந்தாள் பிரத்தியங்கரா.
ஒரு இடத்தில் மூச்சு வாங்க நின்றாள். விலா எலும்பின் கீழ் ஒவ்வொரு முறை மூச்சு வாங்கும் பொழுதும் சுர்ரென குத்தியது. தாகம் வாட்டியது. அப்பொழுது தான் நாய் இல்லை என்பதை உணர்ந்தாள் பிரத்தியங்கரா.
சுற்றிலும் அடர்ந்த காடுகளாக இருந்தது. இருள் வேறு சூழ்ந்து கொண்டு வந்தது. காலில் போட்டிருந்த செருப்பு வரும் வழியில் எங்கேயோ பிய்த்து கொண்டது போல. அறுந்து போன செருப்போடு தான் இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கிறாள். பாதம் எல்லாம் அவ்வளவு வலி. அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் அழுதபடியே அப்படியே அமர்ந்து விட்டாள் பிரத்தியங்கரா. கூடடைந்த பறவைகளின் ஒலியும், சின்ன சின்ன பூச்சிகளின் ஒலியும் அவளை கலவரப்படுத்தியது.
அதே நேரம் எங்கிருந்தோ ஜல் ஜல் என கொலுசு சத்தம் கேட்க, தூக்கி வாரி போட்டது பிரத்தியங்கராவிற்கு.
“எல்லாம் இந்த கார்த்திக்கால வந்தது. அவனை வாழ்க்கையில பார்த்திருக்கவே கூடாது. அவன் லவ்வை சொன்னா எனக்கு எங்க போச்சு புத்தி?” என தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா.
கொலுசு சத்தம் சமீபிக்க, அழுகை அதிகமானது. தொண்டையெல்லாம் வலித்தது.
காற்றெல்லாம் சுகந்த மணம் பரவிக் கொண்டு இருந்தது. மரங்கள் லேசாக தலையசைத்து கொண்டிருந்தது. நிலவின் ஒளி மட்டும் படாமல் ஏகாந்தமாய் இருந்தது அந்த பொழுது. அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. அப்பொழுது ஏதோ ஒரு உருவம் ஒன்று அவளை கடந்து போவது போல இருக்க, தலையை குனிந்து கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள். அத்தனை பயமாய் இருந்தது அவளுக்கு.
பிரத்தியங்கராவை தாண்டி கொலுசு சத்தம் செல்வது போல இருக்க, பயத்தையும் மீறி, அனிச்சையாய் யார் செல்வது என ஒற்றை கண்ணால் பார்த்தாள்.
பயத்தை கைவிட்டு, நன்றாக பார்க்க, அதே நேரம் அந்த பெண்ணும் திரும்பி பிரத்தியங்கராவை தான் பார்த்தாள்.
பதினாறு பதினேழு வயது தக்க பெண் தான் எதிரில் நின்று கொண்டிருந்தாள். தலைமுடி பாதம் வரை நீண்டு கிடந்தது. ரவிக்கை அணியாது சிவப்பு நிறத்தில் ஏற்றி கட்டி புடவை அணிந்திருந்தாள். காலில் தண்டைகள் கிடந்தன. முழங்கைக்கு மேலே இரண்டு கைகளில் வங்கி இருந்தது. காதில் இரண்டு தண்டட்டியும் இரண்டு மூக்கிலும் மூக்குத்திகளுடன் வசீகர அழகுடன் காணப்பட்டாள் பெண். அவளை சுற்றி தான் மணம் வீசிக் கொண்டிருந்தது. தண்டையின் சத்தம் தான் இரவில் கொலுசின் ஒலியை போல பிரத்தியங்கராவிற்கு கேட்டது.
“பா…பாப்பா இங்க இருந்து எப்படி வெளிய போறதுன்னு தெரியுமா?” என மேல் அண்ணத்தில் ஒட்டிய நாக்கை கடினப்பட்டு பிரித்து கேட்டாள் பிரத்தியங்கரா.
எதிரில் இருந்த பெண்ணோ சற்றே சுவாரசியமாக பிரத்தியங்கராவை பார்த்தாள்.
“பாப்பா?” என்றாள் இன்னமும் பயத்தோடு.
ஒரு வேளை பேயாக இருந்தால்? நினைத்த உடனே வேர்த்து கொட்டியது பிரத்தியங்கராவிற்கு.
“என்னை உன்னால் பார்க்க முடிகிறதா?” என கேட்டாள் அந்த பெண்.
“ஹான் நல்லா தெரியறியே பாப்பா…” என்றவளுக்கு உள்ளங்கை கூட வேர்த்தது.
Very interesting
Very interesting & very thrilling
Interesting super😍😍
Interesting eni thrilling ah irukumo