Skip to content
Home » சித்தி – 19

சித்தி – 19

    தன்னை பற்றி மரகதத்திடம் சொல்ல தொடங்கினாள் உமா பாரதி. 

வீட்டு வேலைகள் நான்தான் செய்ய வேண்டும். சரியாக உணவும் தர மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்கு நான் பள்ளிக்கூடம் சென்றேன். 

அதுவும் ஐந்தாவது வரை தான். அதன் பிறகு நான் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்வது கிடையாது. செல்லவும் முடியாது. வீடே தான் என் உலகம். கோயிலுக்கு செல்ல மட்டும் அனுமதி உண்டு. தண்ணீர் வேண்டுமானால் நான் எப்பொழுது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம். மற்றபடி உணவு சித்தி சொல்லும் பொழுது மட்டும்தான். 

ஆரம்பத்தில் சித்தியை பற்றி அப்பாவிடம் சொன்னேன். அவர் சித்தியை  கண்டிப்பார். அவர் சென்ற பிறகு எனக்கு முன்னை விட அதிகமாக அடி விழும். அதன்பிறகு அப்பாவிடம் சொல்வதை விட்டுவிட்டேன். 

முதலில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் போகப் போக பழகி விட்டது. இருபது மணி நேரமும் வேலை வேலை வேலை தான். ஏதாவது ஒன்று சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். எப்பொழுதாவது கோயிலுக்கு செல்வேன் யாருடனும் அதிகம் பேசக்கூடாது. 

இதில் சித்தியின் தம்பி காளிமுத்து வேறு. என்னை திருமணம் செய்து கொள் என்று தொந்தரவு செய்து கொண்டே இருப்பார். அவரிடம் இருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்ள படாத பாடு பட்டேன். 

அவருக்கு தப்பாமல் பிறந்த மகனும் அதே போல் என்னிடம் நடந்து கொண்டான்.  ஒரு நாள் அவர்களின் உண்மையான முகம் என் அப்பாவிற்கு தெரிந்தது. அதன் பிறகு அவர்களை என்னிடம் நெருங்காமல் என் அப்பா பார்த்துக் கொண்டார.  அன்றிலிருந்து தான் என்னால் நிம்மதியாக தூங்க முடிந்தது. 

இருந்தும் அவரால் கூட என் சித்தியிடம் இருந்து என்னை காப்பாற்ற முடியவில்லை. இப்படி இருக்கும் பொழுது தான் நீங்கள் என்னை பெண் கேட்டு வந்தீர்கள். அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லாததால், நான் என் தந்தையுடனே இருந்துவிடும் முடிவில் தான் இருந்தேன். ஆனால் அப்பா தான் பிடிவாதமாக என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். 

நான் சிறுவயதிலிருந்தேன் பாசத்திற்கு மிகவும் ஏங்கினேன். அங்கு என்னிடம் யாரும் சாப்பிட்டாயா? என்று கேட்டது இல்லை. இங்கு வந்ததிலிருந்து நீங்கள் என்னை உங்கள் மகள் போல் அன்பு கவனித்துக் கொள்கிறீர்கள். அப்படி இருக்கும்பொழுது உங்களின் பேத்தியை நான் எப்படி வேறொரு பெண்ணாக பார்ப்பேன்.

திருமணம் முடிந்ததும் கணவனின் சொந்தம் முழுவதும் என்னுடைய சொந்தமாக மாறும்பொழுது அவருடைய மகள் எனக்கு மகள் தானே? அவளை நான் எப்படி கொடுமைப் படுத்துவேன்.

அம்மாவின் பாசத்திற்கு ஏங்கி வளர்ந்த என்னாள், என்னை போல் அஞ்சலியும் ஏங்கி விடக்கூடாது என்றுதான் அவளுடன் நான் பாசமாக இருக்கிறேன் ஆனால் அது அஞ்சலிக்கும் புரியவில்லை. அவளது அப்பாவிற்கும் புரியவில்லை. அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினாள். 

உமா பாரதியின் வாழ்க்கையில் நடந்ததை கேட்டு மரகதத்திற்கும் மனது மிகவும் பாரமாக இருந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் அவளை தன்னுடன் அணைத்து கொண்டு முதுகை தடவி விட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.

சற்று முன் வீட்டிற்கு வந்திருந்த ஜீவானந்த், உமா பாரதியின் மொத்த பேச்சையும் கேட்டு, தன் மனைவி பாரதி எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டு நின்றிருந்தான். 

அழுது கொண்டிருக்கும் தன் மனைவியை அணைத்து ஆறுதல் சொல்ல துறுதுறுத்த தன் கையை கஷ்டப்பட்டு அடக்கி, அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். 

தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவானந்தை பார்த்த மரகதம் உமா பாரதியிடம், “ஆனந்து சாப்பிட வந்து விட்டான். அவனுக்கு சாப்பாடு எடுத்து வை” என்று தன்னிடம் இருந்து உமா பாரதியே விலக்கினார். 

ஜீவானந்த் வந்துவிட்டான் என்ற கூற்றில் சற்றென்று எழுந்து, முகத்தை துடைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள். அவளின் பின்னாலே செல்ல துடித்த கால்கள் அங்கு அமர்ந்திருக்கும் அத்தையை கண்டதும் அப்படியே தடுமாறி நின்றது.

அவனின் நிலையை உணர்ந்த மரகதமும் ஜீவானந்திடம் “நம்ம தோட்டம் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்” என்று வெளியே சென்று விட்டார்.

அவர் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு, கதவை மூடி விட்டு சமையல் அறைக்குள் சென்றான் ஜீவானந்த்.

தோசை சுட்டுக் கொண்டிருந்த உமா பாரதியின் பின்னால் சென்று, அவளின் வயிற்றில் கை வைத்து தன்னுடன் சேர்த்து அணைத்தான்.

திடீரென்று தன்னை பின்னால் இருந்து அணைத்ததில் அவள் உள்ளம் திடுக்கிட,  அவளின் உடல் மின்சாரம் பாய்ந்தது போல் நடுங்க, அவனிடமிருந்து விலக போராடினாள் உமா பாரதி. 

அவளின உடம்பு சிலிர்த்ததை தன் அணைப்பில் உணர்ந்தவன், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தன்னிடம் இருந்து விலக முயன்றவளை, “ஏய் அசையாம நில்லுடி” என்று சொல்லிவிட்டு அவளை மேலும் இறுக்கமாக அணைத்தான். தன் கணவனா இப்படி பேசுவது என்று வியந்து அவனைப் பார்த்தாள். 

அவனும் அவன் கண்கள் அவளின் கண்களை பார்த்துக்கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு,  உமா பாரதியை தன்னை பார்த்தவாறு திரும்பினான். 

அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே “சாரி டி” என்று சொல்லி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். 

தன் கணவனின் ஆறுதலான இந்த வார்த்தையில் முழுவதும் உடைந்து விட்டாள் உமா பாரதி. அவன் இதழ் பதித்த அடுத்த நொடி அவளது கண்களில் இருந்து கண்ணீர் வடிய தேம்ப ஆரம்பித்து விட்டாள். 

அவளது அழுகை அவனது இதயத்தை வலிக்க செய்தது.  அவளின் முதுகை தடவி விட்டபடியே, “சாரி டி…  சாரி” என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அப்படியே அணைத்த படி தங்கள் அறைக்கு அழைத்து வந்து, கட்டிலில் அமர வைத்து, அவளது கைகளை தன் கைகளுக்குள் புதைத்து கொண்டு, “சாரிடி” என்று மீண்டும் கூறினான். 

இவ்வளவு காலம்  இவ்வாறான ஆறுதல் அணைப்பை அனுபவிக்காத உமா பாரதிக்கு கணவனின் இந்த ஆறுதல், அவளின் ஆழ்மனதின் ஏக்கங்களை தூண்டி விட்டது. 

நேரங்கள் கடக்க அவளது அழுகை குறைந்த பாடில்லை. அவளை தன்னை பார்க்கச் செய்து, “இப்போ அழுகையை நிறுத்தப் போகிறாயா? இல்லையா?” என்று சற்று அதட்டலாக கேட்டான் ஜீவானந்த். 

ஆனது அதட்டல் கொஞ்சம் வேலை செய்ய, சட்டு என்று அழுகையை நிறுத்தி அவனை சோகமாக பார்த்தாள்.  

அவளது பார்வை அவனுக்குள் ஏதோ செய்ய அவள் தலையை ஆதுரியமாக தடவி, “ஏன் இந்த அழுகை?” என்று அமைதியாக  கேட்டான்.‌

கணவனின் கனிவான பேச்சில் மனம் நெகிழ்ந்தாள் உமா பாரதி. அவனிடம் எவ்வளவு பேச வேண்டும் என்று தோன்றினாலும், இதுவரை அவனிடம் பேசிராத காரணத்தினால் எதுவும் பேச முடியாமல் திணறியபடி அவனை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். 

அவளின் பார்வையை வைத்தே, அவள் தன்னிடம் ஏதோ கூற விரும்புகிறாள் என்று உணர்ந்த ஜீவானந்த், அவள் கைகளை மெதுவாக அழுத்தம் கொடுத்து, “என்னிடம் எதுவும் கேட்க வேண்டுமா?” என்று அவளின் கண்களை பார்த்து கேட்டான். 

‘ஆம்’ என்று தலையை ஆட்டி, தயங்கி தயங்கி உமா பாரதி கேட்ட கேள்வியில் அதிர்ந்து விட்டான் ஜீவானந்த்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

2 thoughts on “சித்தி – 19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *