Skip to content
Home » தீரனின் தென்றல் – 5

தீரனின் தென்றல் – 5

தென்றல் கண்ணில் தான் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்த்து பார்த்து மறைந்திருந்தான் ஆதீரன். நேர்காணல் அன்று தான் முழுதாக நான்கரை ஆண்டுகள் கழித்து தன்னுள் முழுமையாக நிறைந்திருக்கும் தான் வாழ உயிர் மூச்சாக அவளின் நினைவுகளை கொடுத்த அவனின் தென்றலை பார்க்கிறான்.

Thank you for reading this post, don't forget to subscribe!

காலை வழக்கம் போல அலுவலகம் வந்தவன் பார்த்தது சற்று பதட்டத்தோடு அமர்ந்திருந்த தன் தேவதை தென்றலவளை தான்… அவள் பார்க்கும் முன்னர் தன் முகத்தை திருப்பி மறைந்து கொண்டவன் நேராக அங்கிருந்து காருக்கு சென்று ஏறி அமர்ந்தவனுக்கு காண்பது கனவா நிஜமா என்று எதுவும் புரியாமல் அவளை பார்த்த பரவசத்தில் உள்ளம் பறப்பதைப் போல உணர நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டு தன்னை சமன் செய்து விட்டு மதனுக்கு ஃபோன் செய்தான்.

மதன் அழைப்பை ஏற்ற நொடி “மதன் நான் சொல்றதை மட்டும் கேளு.. இன்டர்வியூ வந்த கேண்டிடேட்ஸ் ல லைட் க்ரீன் சேரில ஒரு பொண்ணு வருவாங்க..‌ அந்த பொண்ணு பெயர் தென்றல்… அவங்க வரும் போது அவங்களுக்கே தெரியாம எனக்கு கால் பண்ணி அவங்க பேசுறது எனக்கு கேட்குற மாதிரி ஸ்பீக்கர் போட்டு வை…” என்று அவசரமாக ஆதீரன் சொல்ல

“பாஸ்…” என்று புரியாமல் குழம்பிய மதன் அடுத்த நிமிடம் “பாஸ்… நெக்ஸ்ட் நீங்க சொன்ன பெயர் தான் பாஸ்… தென்றல் ன்ற பெயர் தான்… உள்ள வர பர்மிஷன் கேட்குறாங்க” மதன் சொல்ல

“மதன் ப்ளீஸ்… ஃபோனை லைன்லயே வை… அவளுக்கு இது தெரியாம பார்த்துக்கோ… எக்காரணம் கொண்டும் என்னோட பெயரை அவ முன்னாடி சொல்லிடாதே…” என்று சொல்ல அவனும் அப்படியே செய்ய தென்றல் பேச பேச அவளின் குரலில் கரைந்து கொண்டு இருந்தான். அந்த குரலை அப்படியே பதிவு செய்து கொண்டான் ஆதீரன்…

பேசிக் கொண்டு இருக்கும் போதே  ‘தென்றலை செலக்ட் பண்ணிடு மதன்…’ என்று குறுஞ்செய்தி அனுப்பிட எதுவும் புரியாதவன் ஏற்கனவே பேசி வைத்திருந்த படிக்கு ‘நாளை இன்னொரு இன்டர்வியூ இருக்கிறது பாஸ் அதை நடத்துவார்’ என்று சொல்லி அனுப்பி வைக்க அதன் பின்னர் அவளுக்கு தெரியாமல் கோவிலுக்கு தொடர்ந்து சென்ற கார் கோவிலில் இருந்து வீட்டிற்கு புறப்பட அங்கும் அவளுக்கு தெரியாமல் பின்தொடர்ந்தது.

அந்த ஏரியாவில் அவள் இருப்பிடம் பார்த்த ஆதீரன் நெஞ்சம் வெம்பி போனது. ஊரில் இருந்தவரை தென்றல் பெரிய மாளிகையில் வாழாவிட்டாலும் கூட தன் மாமா அவளின் கால் தரையில் படாத வகையில் தாங்குவார்… அவளை அன்று அந்த வீட்டு ஓனர் தென்றலை பேசுவதை அவனால் பொறுக்கவே முடியவில்லை… ஆனால் இவனாக அவளின் முன்னால் சென்று நின்றால் மீண்டும் அவள் இங்கிருந்து எங்காவது கிளம்பி விடுவாளே….

ஆதீரனும் கூட ‘தானாக உன்னை தேடி வரமாட்டேன்’ என்று நிறைமாதமாக அவளின் வயிற்றில் இருந்த தன் குழந்தை மீது அல்லவா சத்தியம் செய்தான்… அதனால் தானே இத்தனை ஆண்டுகள் அவளை தேடாது இருந்தான்.

குழந்தை என்று நினைத்த உடன் எங்கே தன் உதிரம் என்று தேட தொடங்கியது ஆதீரனின் உள்ளம். நான்கைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருக்க அதில் தன் பிள்ளை எதுவாக இருக்கும் என்று ஆவலோடு தேடி பார்த்தான் ஆதீரன். ஆனால் அந்த குழந்தைகளை தென்றல் புன்னகையோடு பார்க்க அந்த மழலைகள் கோரஸாக “ஹாய் ஆண்டி…” என்று கையசைக்க அதில் தன் குழந்தை இல்லை என்று தெரிந்து கொண்டான் ஆதீரன்.

ஆனால் தன் குழந்தை எங்கே? என்று ஆதீரன் தேட தென்றல் ஏதோ பாதுக்காப்பற்ற உணர்வாக இருக்க என்றும் இல்லாமல் வீட்டுக்குள் சென்ற உடனே கதவை தாழிட்டு கொண்டாள்.

அதனால் அந்த வீட்டின் அருகே இருந்த கடை மற்றும் மற்ற வீடுகளில் தென்றல் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பற்றி கேட்டறிந்த ஆதீரன் அவளுக்கு அலுவலகத்தில் வேலை மற்றும் வீடும் தருவது பற்றி மதனுக்கு அழைத்து பேசினான் உடனேயே…

அதுமட்டுமின்றி தான் வெளியூர் சென்று இருப்பதாக கூறச் சொல்லி நேரடியாக வீட்டை பற்றி மதன் கேட்காமல் சுற்றி வளைத்து அவள் மூலமே தெரிந்து கொண்டு ஆதீரன் சொன்னது படியே அவள் இன்னும் இரண்டு ஆண்டுகள் வேலையை விட்டு செல்லக்கூடாது என்று ஒப்பந்தம் செய்ய வைத்தான் ஆதீரன்…

அதை எல்லாம் நினைத்தபடி மதன் வீட்டில் ஹால் ஷோபாவில் தலையை பின்னால் சாய்த்து அமர்ந்து கண் மூடி இருந்த ஆதீரன் முன்பு நிழல் ஆட கண்திறந்தான் ஆதீரன்.

“என்ன மதன் எதிர் வீடு பக்கா பர்னிச்சர் பெயிண்டிங் எல்லாம் முடிஞ்சிதா?” என்று கேட்க

“எல்லாம் முடிஞ்சது பாஸ்… பட் பாஸ் எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல… திடீர்னு இன்டர்வியூ வந்த ஒரு பொண்ணு தென்றல்… அவங்களுக்கு வேலை கொடுத்து வீடு கொடுத்து இதெல்லாம் நீங்க தான் செய்தீங்க னு தெரியாம செய்து… எனக்கு இதுதான் புரியலை பாஸ்…” மதன் கேட்க விரக்தியாக சிரித்த ஆதீரன்

“நான் சொன்னேனே மதன்… நான் ஒரு பொண்ணுக்கு துரோகம் செய்தேன் னு… அது தென்றல் தான்…” ஆதீரன் சொல்ல மதன் அதிர்ந்தான்.

“ஆமா மதன்… அன்னைக்கு நான் துரோகம் இன்னும் என்னை துரத்திட்டு இருக்கு மதன்…”

“இல்ல பாஸ் என்னால இன்னும் நம்ப முடியலை… நீங்க எப்படி பாஸ்.. அதுவும் ஒரு பொண்ணுக்கு? “

“உண்மை தான் மதன்… அன்னைக்கு நான் செய்த தப்புக்கு தான் என்னை மட்டுமே உலகமா நினைச்சு வாழ்ந்திட்டு இருந்த என் அம்மா கடைசி காலத்துல நான் அவங்களுக்கு கொள்ளி வைக்க கூடாது னு சொல்லிட்டு இறந்தாங்க… நான் பண்ண பாவத்துக்கு தண்டனையா என் தென்றல் என்னை விட்டு போனா…” என்றவனுக்கு கண்ணீரோடு குரல் கரகரக்க தோளில் தட்டி அமைதி படுத்தினான் மதன்.

“சார் அப்போ தென்றல் அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறதா சொன்னாங்க… அது?” என்று மதன் இழுக்க அந்த நிலையிலும் ஒரு புன்னகை உதட்டில் அரும்ப

“அவ என்னோட பொண்ணு மதன்… எனக்கும் என் தென்றலுக்கும் இருக்கிற காதலுக்கு கிடைச்ச உயிருள்ள பொக்கிஷம் தான் எங்க பொண்ணுஅபூர்வா” என்று பெருமிதமாக தன் மகளின் பெயரை உச்சரித்தான் ஆதீரன்.

மதனால் எதையும் நம்ப முடியவில்லை… ஆனால் அனைத்தையும் கூறுவது தன் மரியாதைக்குரிய முதலாளி ஆதீரன் ஆயிற்றே… இருந்தாலும் தன் வாழ்வில் இதற்கு முன்பு நடந்த அனைத்தையும் ஆதீரனிடம் பகிர்ந்து பலவற்றில் அவனின் ஆலோசனை கேட்டு அதன் படி நடந்திருக்கிறான் மதன்…

ஆனால் ஆதீரன் இதுவரை இதை பற்றி எல்லாம் தன்னிடம் கூறியதே இல்லையே… என்று மனதின் ஓரத்தில் ‘தன்னை வெறும் தனக்கு கீழ் வேலை செய்யும் நபராக தான் ஆதீரன் பார்க்கிறானோ’ என்று எண்ணம் தோன்ற அது அவனின் முகத்தில் பிரதிபலித்தது.

“என்ன மதன்… இவ்வளவு நாள் உங்கிட்ட இதெல்லாம் சொல்லலையே னு நினைக்கிறியா?” என்று சரியாக கணித்து கேட்டான் ஆதீரன்.

“அதில்ல பாஸ்…” மதன் தயங்க

“தென்றல் விசயத்துல நான் எடுத்த தவறான முடிவு தென்றலையும் என் அம்மாவையும் மட்டும் எங்கிட்ட இருந்து பிரிக்கல மதன்.. எனக்கு உயிருக்கு உயிரா இருந்த நண்பனையும் என்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு… என்னை பற்றி தென்றலுக்கு நான் செய்த கொடுமைகளை பற்றி உன்கிட்ட சொன்னா நீயும் என்னை தப்பா புரிஞ்சுட்டு விலகிடுவியோ னு நினைச்சேன் மதன்…

ஏன்னா நான் என் உயிர் நண்பன் குமாரவேலு வை உன்கிட்ட பார்த்தேன்… ஒரு காலத்துல குமாரு எனக்கு எப்படியோ அதே போல தான் நீ இருக்க இப்போ… அது தான் உங்கிட்ட இத்தனை நாள் இதை பத்தி சொல்லாம இருந்ததற்க்கும் இப்போ ஓபனா சொல்றதுக்கும் காரணம்…” என்று ஆதீரன் சொல்ல

“ஐயோ பாஸ்… நான் எப்போதும் உங்களுக்கு நல்ல நண்பனா இருப்பேன் பாஸ்… கண்டிப்பா எல்லா விதத்திலும் உங்களை நான் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவேன்…” என்று ஆதீரன் கையை மதன் பிடிக்க அவனை கட்டி அணைத்து அவனுக்கு தெரியாமல் தன் கண்ணீரை துடைத்து கொண்டான் ஆதீரன்.

“சரி மதன்… நான் சொல்ற வரைக்கும் என்னைப் பற்றி தென்றலுக்கு தெரிய வேண்டாம்… ஆனா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ணு மதன்…” என்று கேட்க

“சொல்லுங்க சார்… ஏன் இப்படி தயங்குறீங்க?” மதன் கேட்க

“அது… அன்னைக்கு தென்றலை ஃபாலோ பண்ணி போனப்போ அவளையும் அவ வீட்டையும் தான் பார்க்க முடிஞ்சது… பொண்ணோட பெயர் கூட பக்கத்து கடையில கேட்டு தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

என் பொண்ணை எனக்கு பார்க்கனும் மதன்… ப்ளீஸ் ஹெல்ப் பண்றியா?” என்று ஏக்கத்துடன் தயங்கி தயங்கி ஆதீரன் கேட்க

“பாஸ்… என்ன பாஸ் இது? நாளைக்கு தென்றல் மேடம் இந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆயிடுவாங்க… பாப்பாவை நான் இங்கே கூட்டிட்டு வரேன்…” மதன் சொல்ல

“முடியாது மதன்… தென்றல் எப்பவுமே அவளை சுத்தி ஆயிரம் கண்ணை வச்சிருப்பா… அவளை ஏமாத்தி இங்க கூட்டிட்டு வரது… அதுவும் பழகின ரெண்டு மூனு நாள்ல அவ பொண்ணை உன்னோட அனுப்ப மாட்டா.. நீ ஃபோட்டோ வீடியோ னு எடுத்து சென்ட் பண்ணு மதன்… நான் இப்போ கிளம்பறேன்.. கொஞ்ச நாள் தென்றல் இங்க செட்டில் ஆகட்டும் நானே இங்க வரேன்…” என்று கூறி விடை பெற்றான் ஆதீரன்.

– தொடரும்…

3 thoughts on “தீரனின் தென்றல் – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *