ஆகாயம் இருள் பூச தொடங்கும் நேரம் மின்மினியாக நட்சத்திர பட்டாளம் நிலவனை கண்ணடித்தபடி சுற்றி வர, வெட்கத்தில் நிலவன் ஒளிந்தும் ஒளியாமலும் தன் இருப்பை மெலிதாக வெளிப்படுத்தும் அந்த ரம்யமான சூழலை ரசித்தபடி பின்னணியில் இளையராஜா இசைமழையை பொழிய, அதை ரசித்தவாறே பிளாக் காபியை மிடறுமிடறாக அருந்திக் கொண்டிருந்தாள் ஆதினி.
விழிகள் என்னவோ வெளியே நிலவும் ரம்மியமான சூழலை ரசித்து கொண்டிருந்தாலும் மனம் உலைகலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.
ஏன் இப்படி மாறிப்போனான்?
எப்படி நடந்திருக்கும்?
எதற்காக இப்படி பண்றான்?
யாருக்காக?
அப்படி என்ன ஆயிற்று?
தன் மீது தான் ஏதும் தவறோ? இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருந்தவள் மனமோ தானாக அவர்களது காதல் காலத்தை நினைத்து கொண்டது.
நினைவுகளில் மூழ்கியவளின் கவனம் அலைபேசியில் அழைப்பு வரவே நிகழ்வுக்கு வந்தவள் மீதமிருந்த காபியை அருந்தி விட்டு ஒரு முடிவுடன் எழுந்து தன்னவன் வருகைக்காக தயாரானாள். அவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது.
நேரம் 9 மணி
வீட்டு அழைப்பு மணி சத்தம் கேட்டது. தன்னவன் வந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் ஒரு முறை நிலைகண்ணாடியில் தன்னை சரிபார்த்து கொண்டவள், கதவை திறக்க ஆவலுடன் ஓடினாள்.
இன்று எங்கேனும் கூட்டி சென்று மனம் திறந்து பேச வேண்டும் என்று நினைத்து கொண்டே கதவை திறந்தாள்.
“வாங்க” என்றாள். அவனோ மௌனத்தை தத்தெடுத்திருந்தான்.
” ரெப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று இரண்டாவது முறையாக கூற, அதே மௌனம்.
” தீரா நான் உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்ற ஆதினியின் வார்த்தையில் அழுத்தம் கூடியது.
” ம்ம் கேக்குது” சுரத்தை இல்லாது பதில் சொன்னான் தீரா.
“என்ன பாத்து பேசுங்க தீரா”
” நான் என்ன செவுருகிட்ட பேசுறன்னா சொன்னேன்” குரலில் சலிப்பு தட்டியது அவனுக்கு.
தன்னை நிதானித்தவள் ” ப்ச் ஏன் இவ்வளவு டென்ஷன்? ரிலாக்ஸ் தீரா. என்னை பாருங்க நான் எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லை” என்றாள்.
அவளை ஒரு நொடி கவனித்தவன்
” வெளியே எங்கேயும் நான் வரல கருமம் என்ன விட்ரு ” என அதிகாரமாக ஒலித்தது.
” ஓ
காதலிக்கும் வரைக்கும் தான் காதலனாது காதல் கவிதைகளோடு உலா வரும் போல….
கல்யாணத்திற்கு பின் காதல் கருமாந்திரமாக உருவெடுக்கிறது போல” என்று அவனை பார்த்து நக்கலுடன் பேசியவள்
“அதோட நான் வெளியே எங்கேயும் கூப்பிடலயே தீரா”
“அப்புறம் எதுக்கு இந்த புடவை அலங்காரம் எல்லாம்”
மனதில் ஏமாற்றம் பரவினாலும் ” ஏன் வெளியே போனாதான் புடவை கட்டனுமா என்ன? என் தீரா செல்லம் ரசிக்கனும்னு கூட கட்டுவேன் ” என குரலில் குழைந்தாள்.
” ப்ச் இப்ப நான் ரசிக்கிற மூட்ல இல்லை ஜஸ்ட் லீவ் மீ ” அவளை விலக்கி விட்டு குளியலறை நோக்கி போக எத்தனித்தான்.
அத்தனை நேரம் கட்டுபடுத்தி வைத்த மனது உடைப்பெடுத்து வெடிக்க தயாரானது.
” என்ன தான் ஆச்சு தீரா உங்களுக்கு? ஏன் இப்படி என்ன அவாய்ட் பண்றீங்க? நான் என்ன தப்பு பண்ணேண்? உங்களுக்கு நான் சலிச்சிட்டனா ? “
“ப்ச் வந்ததுமே ஏன்டி ஆரம்பிக்கிற?” என்றான் நாயகன்.
“நான் எதையும் ஆரம்பிக்கல தீரா பட் எனக்கு இன்னைக்கு தெரிஞ்சே ஆகனும் தீரா. உன் மைண்ட்ல என்ன ஓடுது? எதுக்கு என்ன அவாய்ட் பண்ற? இப்பயெல்லாம் என் முகம் பார்த்து கூட பேச மாட்டேங்கிற ஏன்?” என்று கேள்வியை அடுக்கினாள்.
” ஏய் ஏன்டி வந்ததும் உசுர வாங்கற மனுஷன கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்க விடேன் ” என்று ஆவேசமாக கத்தினான்.
“என்னால தான் உங்க நிம்மதி கெடுதா தீரா” அடிப்பட்ட உணர்வில் அமைதியாக கேட்டாள்.
“ப்ச்” என்றவாறு அவளை தள்ளி விட்டு நகர்ந்து போக எத்தனிக்க அதனை எதிர்பாக்காத ஆதினி தடுமாறி விழ போக பிடித்து கொண்டான்.
மனம் தானாக தங்களது முதல் சந்திப்பை நினைவூட்டியது.
” அச்சோ என் குழந்தை பயந்திருக்குமே சாரிடா தங்கம் ” என்றவாறு ஆறுமாத சிசுவை சுமந்திருக்கும் அவள் வயிற்றினை தீண்ட வர விலகி நின்றாள்.
” இப்ப கூட உங்களுக்கு என்னை பற்றி அக்கறை இல்லையா? “
” மறுபடியும் மொதல்ல இருந்தாடி ?”
அவன் சொன்ன தொனியில் மனதிற்குள் முனுக்கென்று வலி உருவாக அதனை மறைத்தவாறு
” நீங்க ரொம்ப மாறீட்டீங்க தீரா.. லவ் பண்ணும் போது உருகி உருகி லவ் பண்ணிட்டு இப்ப என் முகத்தை கூட பார்க்காமல் திருப்பிகிறீங்க. இனிமேல் நீங்களா வந்து பேசாமல் நான் பேச போறது இல்லை ” என்று வீம்புடன் படுக்கையறை சென்று தலையணையை மட்டும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள், ஹாலில் இருந்த சோபாவில் படுத்து கொண்டாள்.
தன்னவளின் வேதனை புரியாமல் இல்லை, இருந்தாலும் அவன் இருக்கும் சூழல், அப்படி அவனை நடத்திட வைத்தது. அவனை என்ன தடுத்தது என்று அவன் மட்டுமே அறிவான். அது தெரிய வரும் போது அவள் உடைந்து விடுவாள் என்றெண்ணி அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன் நடத்தையால் உடைத்து கொண்டிருந்தான்.
உணவு உண்ணாமல் ஒருமுறை அவளை வந்து பார்த்தவன் பெருமூச்சுடன் சாப்பிடாமல் உறங்க சென்றான்.
மறுநாள் காலையில் எப்போதும் போல எழுந்து கிளம்பி கொண்டிருந்தான். இத்தனை நாட்களில் பேசாமல் இருந்தாலும் அவனுக்கு செய்யும் கடமையை என்றும் தவற விட்டதில்லை ஆதினி.
இன்றோ இன்னும் எழுந்து கொள்ளாமல் முன்னிரவில் எப்படி படுத்திருந்தாளோ அப்படியே இருக்கவும் மெல்ல அருகில் சென்று பார்த்தான். தூக்கத்தில் தான் இருந்தாள் முகம் வீங்கி இருந்தது. இரவெல்லாம் அழுதிருப்பாளோ? குற்ற உணர்ச்சி நெஞ்சை குத்தியது. தொட்டு எழுப்பலாம் என்று தொட்டால் உடம்பு சூடாக இருந்தது , காய்ச்சல் கண்டிருந்து.
‘கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம இவளும் ஏன் தான் இப்படி பண்றாளோ ச்ச’ என்று மனதிற்குள் திட்டியவன் அவளை தூக்கி கொண்டு ஆட்டோ வரவைத்து மருத்துவமனை சென்றான்.
மருத்துவமனையில் தாய்மை அடைந்திருப்பதை கூறியதால் உடனே சிகிச்சை அளிக்க பட்டது.
கண் திறந்தவுடன் ” ஏண்டி இப்படி பண்ற? என்ன நிம்மதியா இருக்க விட மாட்டியா? ஏதோ வேலை டென்ஷன் பேசிட்டேன்…சரி கத்திட்டேன் தான் என்ன பண்ணணும் கால்ல விழுந்துனாலும் மன்னிப்பு கேக்குறேன் தயவுசெய்து அழாதடி… கஷ்டமா இருக்கு”
” எனக்கும் கஷ்டமா இருக்கு தீரா நீ என்கிட்ட பேசாமல் போகும் போது. என்ன டென்ஷனா இருந்தாலும் உன்னை பாத்ததும் எல்லாம் பறந்து போயிடும் உன் சந்தோஷத்தில் தான் என் நிம்மதினு சொல்வீங்க. இப்பல்லாம் உங்களுக்கு என் முகத்தை கூட பாக்க முடிலயே அந்தளவுக்கு என் காதல் இறங்கி போயிருச்சா”
” ஹே அப்படி எல்லாம் இல்லைடி ஆபிஸ்ல கொஞ்சம் பிரஷர் அந்த டென்ஷன் தான் வேற ஒன்னும் இல்ல”
“ஆபிஸ் வேலை எல்லாம் ஆபிஸோட வீட்டுக்கு வந்தா பொண்டாட்டி மட்டும் தான் கண்ணுக்கு தெரியனும்னு சொல்வீங்க இப்ப அந்தளவுக்கு என்ன டென்ஷன் ஆபிஸ்ல”
“இங்க பாரு இதான்.. இதான் எனக்கு பிடிக்காது.. ஆபிஸ் டென்ஷன் சொல்லிட்டேனா அதோட விட்ரனும்… அத விட்டு என்ன என்னுனு கேட்டா என்ன அர்த்தம்? அப்படியா சரினு விடேன் அடுத்து ஆபிஸ்ல என்ன பிரச்சினைனு நோண்ட கூடாது”
” “
” என்னடி”
” சரி இப்ப நான் என்ன பண்ணணும் ஜடம் மாதிரி அந்த வீட்டில் இருக்கனும் அவ்வளவு தானே. எதுவும் உங்ககிட்ட கேக்க கூடாது எதுவும் பேச கூடாது. அப்படியே எதாவது பேசனும்னா கூட செவுருகிட்ட பேசிக்கிறேன் போதுமா” என்று படபடவென பொரிந்தாள்.
” அப்படி சொல்ல வரலடி”
” சரிங்க விடுங்கங்க இனி உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்ங்க” சொல்லும் போதே தொண்டை அடைத்தது.
சிறிது நேரம் அவளையே பார்த்திருந்து விட்டு மருத்துவரை பார்க்க சென்றான்.
மருத்துவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுக்கும் படியும், சந்தோஷமாக பார்த்து கொள்ளும் படியும் அறிவுரை வழங்கி ட்ரிப்ஸ் முடியவும் அழைத்து செல்லலாம் என்று கூறினார்.
மருத்துவரிடம் பேசிவிட்டு வந்து மேலும் அரைமணிதுளி கடந்ததும் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர். வரும் வழி எங்கும் மௌனமே ஆட்சி செய்தது.
அவளுக்கு ஓய்வு தேவையென படுக்கையில் படுக்க வைத்து விட்டு அலுவலகத்தில் அழைத்து லீவு சொல்லி விட்டு எளிதாக எதுவும் சமைக்கலாம் என்று சமைத்து கொண்டிருந்தான்.
ஆதினி உறங்கி கொண்டிருந்தாள். திடீரென்று தீராவின் உயர்ந்த குரல் கேக்கவும் விழித்தாள். யாரிடமோ அலைபேசியில் ஹிந்தியில் கத்தி பேசி கொண்டிருந்தான்.
” தமிழ் மே போலோ… நை நை.. ஐசாமத் ஹர்ணா… நை .. பௌத் தி தியா…. டைம் சாஹியே… கியூ ஐஸா… டெலிட் ஹர்தோ அரே பிளிஸ் டெலிட் ஹர்தோ ….அரேஏ ” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதினி எழுந்து வந்து தீராவின் தோளை தொட்டாள். அவளை அதிர்வுடன் பார்த்தவன் விலகி சென்று அலைபேசியுடன் வெளியே வந்து பேசிக்கொண்டிருந்தான்.
செல்லும் அவனையே வெறித்து பார்த்தாள். உறக்கம் களைந்ததும் பசி எடுத்தது. அவன் வந்ததும் இருவருமாக சாப்பிடலாம் என்று நினைத்து காத்திருந்தாள். மணித்துளிகள் தான் கரைந்தனவேயன்றி தீரா வரவில்லை. பால்கனியில் நின்று எட்டி பார்த்தாள் அவனது ஈருருளி(Bike) இருந்த இடம் காலியாக இருந்தது.
தன்னிடம் சொல்லி கொள்ளாமல் சென்று விட்டானே என்ற ஆதங்கமும் காத்திருந்த பசியும் அவளை மேலும் சினமூட்ட முதலில் பசியை போக்கி கொள்ளலாம் என்று சமையலறையில் இருந்ததை எடுத்து வைத்தாள். பருப்பு சோறும் அப்பளமும் அவித்த முட்டையும் இருந்தது. உண்டு விட்டு சிறிது நேரம் ஓய்வாக சோபாவில் அமர்ந்தவள் எப்போது உறங்கி போனாள் என்று தெரியாது.
அழைப்பு மணி அடித்து ஓயவும் தான் எழுத்தவள் கதவினை திறக்க, தரைதளத்தில் இருக்கும் கிறிஸ்டினா நின்றிருந்தாள்.
“ஹாய் என்ன சொல்றான் என் மருமகன்” என்று வந்தாள்.
“நீயாடி நான் அவர்தான் வந்துட்டாரோனு நினைச்சேன்”
இடுப்பில் 1கை வைத்து முறைத்தவள் “ஆனாலும் இது ஓவர். ஒரே லவ்ஸ் தான். அக்கம் பக்கம் ஆளு இருகாங்க அவங்களோட பேசனும் பழகனும் எண்ணம் இருக்கா ? “
” அப்படி இல்லடி தங்கம் மனசு சரியில்லை அதான் யார் கிட்டயும் பேச தோணலை”
” இது நல்லா இருக்கே மனசு சரியில்லைனா முடங்கி இருந்தா சரி ஆகிடுமா ? நாலு பேர் கிட்ட பேசுனாதான் ரிலாக்ஸ் ஆகும். அதோட இப்ப குட்டி தம்பி வேறு உள்ள இருக்கான் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா? ஆமா உனக்கென்னாச்சு? காலைல அண்ணா உன்னை தூக்கிட்டு ஆட்டோல போனாரே?” என்றவளின் அன்பினில் கண்ணீர் இமையில் தேங்கி நிற்க அதட்டினாள் அவள்.
“என்ன இது சின்னபுள்ளதனமா அழுதுட்டு. ஏதாவது பிரச்னையா என்ன?” அவளை கட்டி கொண்டு விசும்பியவள் தீரா தன்னை விலகி போவதாக சொன்னாள்.
“இந்த ஆம்பளங்களே இப்படி தான்டி . லவ் பண்ணும் போது மட்டும் உருகி உருகி லவ் பண்ண வேண்டியது கல்யாண ஆன பிறகு நம்மள அலைய விட வேண்டியது. சரி விடு எல்லாம் சரி ஆகும். தீபக்கும் கொஞ்ச நாளா என்கிட்ட சரியா பேசுறது இல்லை தான் விட்டு பிடிப்போம்னு விட்டுட்டேன். எனக்கு தான் இப்படினு பாத்தா உனக்கும் இப்படி தானா?” என்று சிரித்தாள்.
“நான் பீல் பண்ணி பேசுரேன் நீ சிரிக்கிற உதபட போறடி” என்று பேசுகையிலே கீழே இருந்து தீபக் கிறிஸ்டினாவை அழைக்க,
” ஓகே நான் கிளம்புரேன்டி. மிஸ்டர் ரோமியோ கூப்பிடுராரு. ஹெல்த்த பாத்துகோ” என்றுரைத்து சென்று விட்டாள்.
அவள் சென்ற சில மணிதுளிகளில் மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க இம்முறை வந்தது தீரா.
” ம்ம் செல்லம்.. நீ.. இங்க இருக்யா.. வா.. வா.. வா இல்ல இல்ல நீ இர்ரு நான் வாரேன்.. என்ன.. என்ன மன்னிச்சிடுடி உன்க்கு நா பெரரிய்ய துதோகம் பண்ட்டேன்” என்று சொல்லி கீழே விழுந்தான்.
கதவை திறந்ததும் ஒவ்வாத நெடி ஒன்று நாசியை நெருட தள்ளாட்டத்துடன் உள் நுழைந்தவன் ” ஆ..த..னீஈ.. என் ச்சல்லம்.. எங்கடி இர்க்க.. ” அவன் பேசுகையில் அவன் முதல் முறையாக மதுவருந்தி வந்திருக்கான் என்பதை உணர்ந்து அதிர்ந்தவள் கதவை அடைத்து விட்டு சோபாவில் வந்து தளர்ந்து அமர்ந்தாள்.
எழுந்தமர்ந்தவன் ” நீ என்னிய மன்னிச்சிடுவ தானடி.. இரு உன் காலுல விழ்ரேன் “
சோபாவின் கால்களை பிடித்து கொண்டு “என்ன மன்னிச்சிடுடி உனக்கு துரோகம் பண்ட்டேன்… உன்னை ஒம்ப கஷ்டபடுத்ரேன்.. என்னடி இது.. உன் காலு இவ்ளோ ஸ்ட்ராங்க் ஆகிருச்சா என்ட்ட சொல்லவேஏஏஏ இல்ல” என்றவனை அவன் சொன்ன சேதியில் அதிர்ச்சியில் வெறித்து பார்த்தவள் விழி அகலாது அவன் செய்கைகளை பார்த்திருந்தாள்.
ஒரு சொல்
நெஞ்சை கிழிக்குமா..?
ஒரு சொல்
உயிரை பிழியுமா..?
ஒரு சொல்
மரணவலி தந்திடுமா..?
ஆம்.. காதல் மனம்
உதிர்த்திடும் சொல்
முள்ளாய் இருந்தால்…
ஒவ்வொரு நாளும்..
ஒவ்வொரு முறையும்..
ஒவ்வொரு சொல்லும்..
அவளை கூறு போட்டிட
அதனை தகர்த்திடும்
வித்தையறியாது பேதை
கலங்கி போய் நின்றாள்…
தீரா காதலுடன்…
Superb story going good . Ena problem avanuku
என்ன துரோகம் பண்ணிட்டான். துரோகம்ன்னாலே அது ஒண்ணே ஒண்ணைத்தான் குறிக்கும்.
அநேகமா பொண்டாட்டி இருக்கும் பொழுதே இன்னொருத்தி பின்னாடி போயிட்டானோ..?
அந்த வீடியோவைத்தான் டெலீட் பண்ண சொன்னானோ…?
இருக்கும், இருக்கும்.
இவன் ஏன் இவகிட்ட இப்படி நடந்துக்குறான்!!??… என்ன காரணமாக இருக்கும்???
இவன் என்ன பன்னான் ….
Nice epi
Intresting 😍😍😍
Thanking you for your valuable coments