துஷ்யந்தா-20
விதுரன் பார்வை பிரகதியை எரிந்திருக்க வேண்டும். அது போன்ற மாயசக்தி இல்லாததால் உயிரோடு நடமாடி உஷா தேவியை வரவேற்க போனாள் பிரகதி.
ஏற்கனவே டிபியில் பிக்சரில் பார்த்ததாலும் பேசியதாலும் வாங்க ஆன்டி” என்று வரவேற்றாள்.
அபிமன்யுவிற்கு விஷால் அளவிற்கு விதுரனை பற்றி தெரியாததால் பார்வையை அவள் மீதே வைத்தான்.
தனக்காக அம்மா பார்த்த பெண் என்ற ஆவலாக இருக்கும். ஆனால் அது விதுரன் அறிந்தால் தானே. இவள் என்னவள் அவளை காண என்ன தைரியம் என்று வெறி தான் ஏறியது.
நொடியில் கோமதி சித்தி பிரகதி காலில் மெட்டி இல்லையா? என்ற கேள்வியால் மூன்று நாட்கள் முன் வாங்கியது அவன் ஷர்ட் பாக்கேட்டில் இருக்க, அதனை தொட்டு தடவினான்.
பிரகதி உஷாதேவி அபிமன்யு இருவரையும் அழைத்து அன்னை அறையில் நுழையும் நேரம் அவள் கரம் பற்றி நிறுத்தினான் விதுரன்.
எதற்கென்று புரியாமல் நின்ற நிலையில் அவளை சேரில் அமர வைத்து மண்டியிட்டான். அங்கே நடப்பது புரியாது குழம்ப மெட்டியிருந்த பாக்ஸை எடுத்து திறந்து அவளின் செப்பல் அணிந்த பாதத்தை தன் தொடையில் வைத்தான்.
கால்சட்டையில் அழுக்காகும் என்று பிரகதி எடுக்க அவள் பாதத்தை அழுத்தமாக வைத்து நிமிர்ந்தவன் சினமேறிய கண்களில் கட்டுபடுத்தி, மெட்டியை அணிவித்தான்.
அதே போல மற்றொரு காலையும் வைத்து போட்டு விட்டு, எழுந்தவன் சின்னதாய் படிந்த தூசியை தட்டி விட்டு, “தாலி மட்டுமில்லை… இந்த மெட்டியும் உன் காலோட இருக்கணும். நீ திருமதி.பிரகதி விதுரன் நினைவிருக்கட்டும்.” என்று திரும்பி பாராது சென்றவனை அபிமன்யு எச்சில் விழுங்கி தொண்டை அசைவில் பிரகதி பக்கமிருந்து அன்னை பக்கமாக மாறியிருந்தான்.
பிரகதிக்கு அவன் செய்கை விசித்திரமாகபட்டது. தலையை உலுக்கி கொண்டு நீங்க வாங்க ஆன்டி” என்று அன்னையை பார்க்க அழைத்து சென்றாள்.
உஷாதேவி கனிவாய் விசாரித்து அன்னையிடம் நீண்ட நாள் தோழியாக பாவித்து பேச உள்ளம் நிறைந்தது. என்ன பதில் பேசி கலைந்துரையாடலில் பங்கேற்க முடியாது ஊமையாய் இருக்கும் தாயை காண வலித்தது.
பேச்சு சடுதியில் விதுரனை பற்றி மாறியது. பிறகு அபிமன்யுவிடம் நின்றது. “இவனை தான் உங்க மகளுக்கு கட்டிக்க கேட்டது. என்ன செய்ய எதுவும் இனி நடக்காது. பரவாயில்லை காலை பிடித்து இத்தனை பேர் பார்க்க மெட்டி அணிவிக்கிறானே. அந்தளவு அன்பு வச்சா போதுமே” என்றார். இதென்ன விதுரன் செய்கைக்கு இப்படி ஒரு அர்த்தமா? என்று தான் பிரகதிக்கு தோன்றியது. அவனுக்கு என் மீது அன்பா? என்று எண்ணவே முடியவில்லை.
அபிமன்யு பார்வை மெட்டியில் நிலைத்திருக்க, ஓஎம்ஜி அவன் அபிமன்யுவிடம் மெட்டி அணிவித்து அவன் பொருள் நான் என்று மிரட்டியிரைக்கின்றான் என்று புரிந்தது. ஆனால் மெட்டி? கோமதி அத்தை கூறியதன் விளைவா? என்று மனம் பல கேள்வியை எழுப்பியது.
இவன் எல்லாம் சொல் பேச்சை கேட்பவனா? ஆதித்யா தாத்தா கூறியதற்கே செவிமடுக்காதாவன்.
பிரகதி அப்ப நாங்க கிளம்பறோம். எதுனாலும் போன் பண்ணுமா. சொந்தம் ஆகலைனா என்ன சிநேகிதியாவே இருந்துப்போம் என்று ஆசிர்வதித்து கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றதும் அரை மணி நேரத்தில் விதுரன் பத்மாவதியை சந்திக்க வந்தான். பிரகதி கூடவே அறைக்குள் வந்து நின்றாள்.
நாளைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்ண கேட்டுட்டேன். உங்களுக்கு நடைமுறை வாழ்க்கை கொஞ்சம் சிரமம் தான். ஆனா வேற வழியில்லை. உங்களை பக்கத்துலிருந்து பார்த்துக்க தேவினு நர்ஸ் வர்றாங்க. பட்டு கூட துணைக்கு வச்சிக்கோங்க. அது உங்க அபிப்ராயம். எதுனாலும் இந்த டிவைஸ் அழுத்துங்க. மாடில உங்க பொண்ணு ரூம் வரை இந்த சத்தம் கேட்கும்.” என்று அருகே வைத்து விட்டு நகர்ந்தான்.
“எங்கம்மா உங்க வீட்டுக்கு வர மாட்டாங்க. நாங்க எங்க வீட்டுக்கு போறோம். போதும் உன்னால பட்ட துன்பம். இதுக்கு மேல உன்னோட இருக்க முடியாது.” என்றாள்.
அவளை ஏறயிறங்க பார்த்து விட்டு கழுத்துல நான் கட்டிய தாலி இருக்கு. கால்ல மெட்டி போட்டாச்சு. அடுத்து ஈருடல் ஒருயிர். நீ மறந்திருக்கலாம்… நான் தள்ளி வைச்சிருக்கேன். அவ்ளோ தான். இதுக்கு மேல சித்திரவதை வேண்டாம்னு முடிவெடுத்தா நீயா வீட்டுக்கு வர்ற. இல்லை அது இதுனு ஆடினா… இதுக்கு மேல உங்கம்மா கஷ்டப்படுவாங்க. கதிர் கார் இங்க தான் இருக்கு. வர்றேன்” என்று கூற பிரகதி ஸ்தம்பித்தவளாக நின்றாள்.
இவன் அசுரன். இவனோடு வாழ்வது தனக்கு சற்றும் ஒவ்வாது. ஆனால் கண்ணீர் வெளியேற தாய் பார்க்கும் நிலையை கண்டு இதற்கு மேல் கஷ்டம் தரவோ யோசிக்கவோ இயலாது அமைதியானாள்.
டாக்டரிடம் அன்னைக்கு உணவு எது எது கொடுக்கலாம். அதுவும் எந்தளவு கொடுக்கலாம் எந்த மாத்திரை எந்ததெந்த வேளை என்று அனைத்தும் கேட்டு கொண்டாள். இதோ இன்று புறப்பட தயாராகி அன்னையை வீலில் அமர வைத்து அவளே தள்ளிக்கொண்டு நடந்தாள்.
கதிர் உடைமைகளை எடுத்து காரை ஸ்டார்ட் செய்ய, விதுரனின் வீட்டு வளாகத்துக்குள் நிமிடங்கள் கடந்து வந்து சேர்ந்தது.
இந்த வீட்டிற்கு வந்து இரண்டு வாரத்திற்கு மேலாகியது. ஏற்கனவே ஆதித்யா ஒரறையில் இருந்து வந்தார்.
“வா மா. இதோ அந்த அறையில் அம்மாவுக்குனு ஒதுங்கியிருக்கு. காற்று நல்லா வரும். விதுரன் அம்மா அப்பா அறை.” என்று தகவலளித்தார்.
விதுரன் இருக்குமிடமே தெரியவில்லை. பட்டுவை பார்த்துக்க சொல்லி தனதறைக்கு சென்றாள். குளித்து விட்டு வெளியே வர சிசிடிவி என்றது நினைவு வந்தது. அப்படியும் பதறவில்லை. இங்கு வந்ததிலிருந்து உடை மாற்றும் அறையிலேயே தன் ஆடை அணிந்து வந்ததால் அச்சம் ஏற்படவில்லை.
சுற்றி சுற்றி பார்வை பதித்தாள். ஆனால் எதையும் பெரிதாக யோசிக்காது அன்னையை காண ஓடினாள்.
தாயும் டவல் பாத் எடுத்து கைகளுக்கு மருந்து பூசியிருந்தனர்.
அன்னையை விட்டு ஒரு நொடி கூட நகரவில்லை. ஆதித்யாவோ பத்மாவதியிடம் பல கதையை கூறி நேரம் போக்கினார். பத்மாவதி அம்மா விதுரனின் தாய் தந்தையரை பற்றியும் அறிந்து கொண்டார்.
ஆதித்யாவோ பேசி தாயுக்கு நேரம் கடத்த உதவ, முதல் முறையாக அன்னைக்கு போட்ட ஜூவனஸோடு அவருக்கும் எடுத்து வந்தாள்.
“இதெல்லாம் நீ செய்யணும்னு அவசியமில்லையே மா. சொன்னா வேலைக்காரங்க செய்வாங்க” என்று கூறினார்.
“எங்கம்மாவுக்கு நான் செய்ய ஆசை தாத்தா” என்றாள் பிரகதி. அவளின் தாத்தா அழைப்பில் இதம் உணர்ந்தார்.
கோமதி சசிதரன் வரவும் ஆதித்யா வரவேற்றார்.
“வாம்மா மருமகளே.. எப்படியிருக்க.. கொள்ளு பேரன் எப்படியிருக்கான்?” என்றார்.
பிரகதி தயக்கமாய் வரவேற்றாள். “வாங்க அத்தை” என்று அவளுக்கே அந்த அழைப்பு தன் வாயிலிருந்து வந்ததா? என்றிருந்தது.
விதுரனின் உறவை தான் அலட்சியப்படுத்த வேண்டும் என்று ஆதித்யா தாத்தாவை கூட தாத்தாவென்று அழைக்க கூடாதென்று எண்ணியிருக்க, அன்று கோமதி தன் கையை கட்டிய ஷாலை கழற்றி, அன்னையினை காண வைத்தவராயிற்றே என்ற எண்ணத்தில் அழைத்து விட்டாள்.
எண்ணங்களை தூர வைத்து கூல்டிரிக்ஸ் எடுக்க போக அதற்கு முன்னே பணியாட்கள் எடுத்து வந்தனர்.
அதனை பிரகதி எடுத்து கையில் தர கோமதி வாங்கி பிரகதி தலையில் கை வைத்து உச்சி முகர்ந்தார்.
“முன்ன நாங்க எல்லாம் இங்க தான் ஒரேயிடத்தில் இருந்தோம்.
நான் ஒரறையில, என் தம்பி திவாகர் ஒரறையில், அப்பறம் மகாலட்சுமி-சிவராமன் ஒரறையில் என்று கீழ மூன்று அறையும், கோமதி-சுந்தர் ஒரறை, சசிதரன் ஒரறை, விதுரன் ஒரறை என்று மேல மூன்று அறையும் நிரம்பி இருக்கும். மாடில மாசத்துக்கு ஒருமுறை அங்க நிலா வெளிச்சத்துல சாப்பிட்டு அங்க இருக்கற ரூம்ல விளையாடி கதை பேசி ஆனந்தமா இருந்தது. இப்ப தான் வெறிச்சோடி போயிருக்கு” என்றதும் கோமதி வருந்தினார்.
“இங்கயிருக்க அஞ்சி தான் கோமதி மகன் சசிதரனை அழைத்து செல்ல விதுரனே இந்த வீட்டை விட பெரிய அளவில் கட்டி இருக்க வைத்தான். ஆதித்யாவையும் இங்க வராதிங்க என்று விரட்டி விட்டான்.
இதெல்லாம் பத்மாவதிக்கு ஆதித்யா கூற செவி வழியில் சேகரித்தவை.
பாவம் விமான விபத்து மூலமாக நால்வரை இழந்து தவித்திருப்பனர் என்று போனை எடுத்து அனிலிகாவுக்கு அழைத்தாள்.
அனிலிகா எடுத்ததும் மொத்த கதையும் கூறினாள். இடையில் பேசிய பொழுது எல்லாம் அழுது அழுது வருந்தியவளை ஆறுதல் கூற முடியாது தவித்திருந்தாள் அனிலிகா.
பேசிக்கொண்டே திரும்பியவள் விதுரனை மோத, “யார் வர்றாங்கனு தெரியாம பேச்சு. விளங்கிடும்” என்று முனங்கி சென்றான்.
விதுரன் அதிகம் துன்புறுத்தவில்லை. பிரகதியே வீட்டில் இயல்பாய் இருக்க முடிந்தது. விதுரனோ தன்னை கொல்ல நினைப்பது யார் என்ற வேட்டையில் இறங்கி இருந்தான்.
அவனுக்கு தெரிந்து கூட பணிப்புரியும் ஆட்களிருந்து அனைவருமே வன்மத்தை மனதில் வைத்து அடிப்பணிந்து வாழ்பவர்களே. இதில் யார் என்ன என்று தேடி கண்டறிய? ஆனாலும் சமிபத்தில் ஆச்சாரியா தான் நினைவு வந்தது. ஆனால் அவர் தான் பார்வை வீசினாலே அஞ்சி ஓடுங்கும் ஆள். அந்தளவு மாற்றியிருந்தான் என்பதால் வேறு யாரென கண்டறிந்திட இயலாது தவித்தான்.
ஒரு பர்தா பெண் வேடத்தில் வந்தது யாரோ. முகம் மறைக்கவே பர்தா அணிந்திருக்க வேண்டும். ஏறி சென்ற காரும் லாரியின் எண் கொண்டு போலி அட்ரஸில் இருந்தது.
ஹாலில் அமர்ந்தவன் சசியிடம் பேச ஆரம்பித்தான்.
“எப்ப தீபிகாவை குழந்தையோட உங்க வீட்டுக்கு திரும்ப அழைப்பிங்க?” என்றான் விதுரன்.
சசி தடுமாறி வார்த்தை உபயோகிக்க கோமதி முன் வந்து பதில் தர வந்தார்.
“சித்தி ப்ளிஸ்.. அவனே பேசட்டும். திக்கினா கூட பரவாயில்லை. அவன் சொல்ல வர்ற, பேச வர்ற விஷயங்கள் அவன் வாயால வரட்டும்” என்று கோமதியை அடக்கினான்.
பிரகதி ஒர் கணம் விதுரனை திரும்பி பார்த்தாள்.
சசிதரனோ “டெல்.. லிவெரி டே.. ட் மு..முன்னவ..வே குழந்.. தை.. பிறந்… துடுச்சு. அத்.. னால.. மூனு மாசம் தங்கி ட்டு வர் வாளாம்” என்றான் சசிதரன்.
விதுரனோ “குழந்தை அதிக நாள் அங்க இருக்க வேண்டாம். பரமகுரு வேண்டுமென்ன நம்ம பேச்சை கேட்பார். அந்த கீதா.. பொம்பளையே இல்லை. அதிக நாள் நம்ம வீட்டு வாரிசு அங்கிருக்க வேண்டாம். நீ குழந்தையை தூக்கிட்டு வந்திடு. அவ தானா வருவா.” என்று பேசினான் விதுரன்.
பிரகதிக்கு “பெண் வீட்டாரென்றால் அவ்வளவு கேவலமா பரமகுருனு சொல்லற கீதானு பேசற. அவங்க உன்னோட அம்மா அப்பா வயசு இருக்கும் தானே.
தாயையும் பிள்ளையும் பிரிக்க பார்க்கற. அவயென்ன மிஷினா. குழந்தை பெற்று கொடுத்துட்டு நீங்க சொன்னதும் இங்க வர்ற… பிள்ள பெத்த உடம்பு அம்மா வீட்ல இருக்கணும்னு நினைக்கிறது என்ன தப்பு. அத்தை இவன் பேச்சை கேட்டு ஆடாதிங்க. மதர்ஸ் பீடிங் மட்டும் முக்கியமில்லை. தாய் கூடவே இருக்கறதும் தான் உங்க வீட்டு வாரிசுக்கு நல்லது.” என்று பதில் தந்தாள்.
“ஏய்… நான் என்ன பண்ணினாலும் மூக்கை நுழைக்கிற பேசாம உங்க வீட்டுக்கு போடி.” என்றான் விதுரன்.
“அத்தை நான் உங்களிடம் பேசறேன். அவனை போக சொல்லுங்க.” என்றாள்.
சித்தியை இவள் அத்தை என்ற வார்த்தை கூறி பேசுவது அப்பொழுது தான் அறிந்தான்.
அதனால் வெறுப்பேற்றும் விதமாக மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“ஆமா மெஷின் தான். அப்படி தான் குழந்தையை பிரிப்போம். என்னடி பிரச்சனை உனக்கு. உன் குழந்தையை பிரிக்கற மாதிரி பேசற தாத்ரு சொல்லி வைங்க இவளுக்கு. என்னிடம் மோத வேண்டாம்னு.” என்றான்.
“திரும்ப திரும்ப மெஷின்னு சொன்ன… தூங்கிட்டு இருக்கறப்ப மண்டையை உடைச்சிடுவேன். சொல்லி வைங்க தாத்தா… நான் தீபிகா குழந்தையையே பிரிக்க கூடாதுனு சொல்லறேன். என் குழந்தையை வேற பிரிப்பியா?” என்றாள்.
விதுரன் திகைத்து நிற்க, ஆதித்யாவோ அதற்கு சிரித்தபடி, “பிரகதி குழந்தையை எல்லாம் பிரிக்க முடியாது டா. அதுக்கு கொஞ்சநாளாவது ஆகுமே” என்றார். பிரகதி ஏதோவொரு நினைவில் “அதானே” என்றாள். அதன் பின் கோமதி சசிதரன் மற்றும் ஆதித்யா சிரிக்க, தான் சொல்லியதை ரீவெண்ட் பண்ணி பார்த்தாள்.
விதுரனை ஒரவிழியில் காண அவனோ மென்குரலில் “டூ லேட் ஆனா இன்னில இருந்தே பிராஸஸ்ல இறங்கலாம் டெவில்” என்று கூறி அவள் முறைக்க மாடிக்கு தாவினாள். பத்மாவதி உதடு பிரியாது ஆனந்த கண்ணீர் வடித்தார்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Wow very intresting.
Super👍
INTERSTING