Skip to content
Home » தேவதையாக வந்தவளே 15

தேவதையாக வந்தவளே 15

தேவதை 15

பதிவு அலுவலகத்தின் முன்பு கார் நின்றது. இன்னுமே அவள் எடுத்த முடிவு சரியா தவறா என்ற குழப்பம் அவளுக்கு இருந்தது. அவள் முகம் பதட்டத்தை அப்பட்டமாக அப்பிக் கொண்டு இருந்தது. அவன் காரை திறந்து இறங்கியவன், அவள் பக்கம் வந்து முன் கார்க் கதவை அவளுக்காக திறந்து விட்டான். அவள் விழி உயர்த்தி அவனை பார்த்தாள்.

“எப்படி இவனால் புன்னகையை வாடவிடாமல் முகத்தில் தேக்கி வைக்க முடிகிறது??, தன்னால் முடியவில்லையே??”, அவசரமாக அவள் மனம் எண்ணியது.

முதல் நாள் மாலை வாகனத்தில் ஏற மாட்டேன் என்று சொன்னவளை, காலையில் அதே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறான். அதுவும் பின்னிருக்கையில் ஏறச் சென்றவளை. ஏதேதோ கூறி முன்னிருக்கையிலும் ஏற வைத்திருந்தவன், குழந்தையிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான். இதோ திருமண பதிவு அலுவலகத்திற்கு வந்தாகிவிட்டது, இப்பொழுது அடுத்து என்ன???.

அவள் இறங்காமல் இருப்பதை பார்த்து குழந்தையை கையில் வாங்க சென்றான். ஆனால் ஷாலினி தாயை விட்டு வருவாளா என்ன??,

முகத்தை சுருக்கி தலையை ஆட்டியது அந்த கண்மணி. அதில் தன்னை மறந்தவன் இரு கைகளையும் உயர்த்தி ஓகே என்று கூறிவிட்டு கையை மடக்கி கட்டிக் கொண்டான்.

“அவ்வளவு தான் மாலினி, நீ இறங்கி தான் ஆக வேண்டும். வேறு வழியும் இருந்திருக்கவில்லை, இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. இதற்கு மேல் பின்வாங்கவும் முடியாது. ஒரு கை பார்த்து விடலாம்”, என்று முடிவுடன் பாதங்களை கீழே இறக்கி வைத்தாள் மாலினி.

இந்த ஏற்பாடுகளை எல்லாம் அவன் முன்னமே செய்திருந்தானா, அல்லது இப்போதுதான் செய்திருந்தானா?? என்று தெரியவில்லை. அவள் சம்மதித்த மறு நிமிடம் அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அவளுக்கான சான்றிதழ்கள் எதையும் அவன் கேட்கவில்லை. அவனிடமே அது எல்லாம் இருக்கிறதோ என்னவோ குழம்பி இருந்தவள் அதை பற்றி கேட்கவும் இல்லை. சிந்திக்கும் நிலையில் இல்லாதவள் அதை பற்றி சிந்திக்கவும் இல்லை. ஆனால் இப்பொழுதுதான் அந்த எண்ணமே அவளுக்கு தோன்றியது. குழந்தையையும் அவளையும் அலுவலகத்தின் ஒரு ஓரத்தில் அமர வைத்தான். அங்கு ஏற்கனவே இருவர் நின்று கொண்டிருந்தனர். அந்த இருவரையும் எங்கோ பார்த்தது போல இருந்தது. ஆனால் எங்கே என்று அவள் ஞாபகத்திற்கு வரவில்லை. அவளுக்கு காவலாக அவர்களை வைத்துவிட்டு மற்ற வேலைகளை அவனே பார்த்தான்.

“மாலினி நீ செய்யறது சரியா??, குழந்தைக்காகவே என்றாலும், இவ்வளவு தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது??, நீ ஒன்னும் அனாதை கிடையாது. தாய் தந்தை இல்லாம தனியா கல்யாணம் பண்ணிக்கிற தைரியம் உனக்கு எப்படி வந்துச்சு??, அவனுக்கும் அப்பா அம்மா இருக்காங்க. ஆனா இங்க இப்ப இந்த நிமிஷம் யாருமே இல்ல. அனாதை போல கல்யாணமா??, ஊரார் பார்க்கக் நடந்த கல்யாணமே உனக்கு நிலைக்கல. இது மட்டும் உனக்கு நிலைச்சிடுமா??, நாளைக்கு உன் தம்பியும் அப்பாவும் பார்த்தாங்கன்னா என்ன ஆகும்??. அவங்க உன் முகத்துக்கு நேரா கேள்வி கேப்பாங்க??, அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவ??. இந்த குழந்தைக்கு நீ அம்மா ஆயிடுவ. ஆனா அது கூட சேர்ந்து இவனுக்கும் மனைவியாகுற??. அவனை டைவர்ஸ் பண்ணிட்டு இவன கல்யாணம் பண்ணி இருக்கியே??, இதுக்கு தான் விவாகரத்து பண்ணிகிட்டியான்னு கேட்பாங்களே, அப்ப என்ன பதில் சொல்லுவ??, நரம்பில்லாத நாக்கு தானே. என்ன கேள்வி வேணாலும் கேட்கும். இதுல இவங்க அம்மாவை வேற நான் எதிர்கொள்ளனும். அவங்களுக்கு இந்த திருமணத்துல சுத்தமா உடன்பாடில்ல. உன்னோட குடும்பம், அவங்களோட குடும்பம், இவங்களோட கோபம் இது எல்லாத்தையும் நீ எதிர்கொண்டாகணும். கேட்கிற கேள்விக்கு எல்லாம் நீ பதில் சொல்லி ஆகணும்“, அவள் மனம் அரற்றிக் கொண்டிருந்தது.

“இல்லனா மட்டும் உன்னை கரிச்சு கொட்டாம , கேள்வி கேட்காம இருக்காங்களா??. இந்த ஒன்றரை வருஷத்துல நீ இருக்கியா செத்தியான்னு கூட பார்க்காத மத்தவங்களுக்காக நீ ஏன் யோசிக்கிற??, இவனோட அம்மா சொந்த பொண்ணு கல்யாணத்தையே ஏத்துக்கல. எனக்கு இது இரண்டாவது திருமணம் வேற, எப்படி ஏத்துப்பாங்க?? “, தலையை உலுக்கிக் கொண்டவளின் பார்வை அரவிந்தன் மேல் சென்று நின்றது. “இவனும் ஒருவேளை உன்னோட முதல் கணவன் ஆகாஷ மாதிரி இருந்துட்டா என்ன பண்றது?? “, அவள் மனது ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க. அவனை தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி.

அவள் பார்ப்பதை உணர்ந்தானோ என்னவோ, அவ்வப்போது அவளையும் திரும்பி பார்த்தான். உணர்ந்து திரும்பி பார்த்தானா, அல்லது தன் ஆள் மனது சிந்தித்துக் கொண்டிருப்பது அவனுக்கு கேட்டு விட்டதா??, இல்லை எங்காவது ஓடி விடப் போகிறேன் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறானா??, என்ற எண்ணமும் மேல் எழுந்து நின்றது.

“அம்மா பாப்பாக்கு பசிக்குது”, என்று மகளின் குரலில் தன் சுயத்திற்கு வந்தவள்.

டிபன் பாக்ஸில் வைத்திருந்த உலர்ந்த மாதுளம் பழங்களை குழந்தைக்கு எடுத்துக் கொடுத்தாள். அவள் மெல்ல ஸ்பூன் வழியாக பழங்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க. அவள் சிந்தனையும் பார்வையும் மீண்டும் அரவிந்தனின் மீது சென்றது. அங்கிருந்தே அவளை அழைத்தான். குழந்தையை ஒரு கையிலும் ஹேண்ட்பேக்கை மறு கையிலும் பிடித்துக்கொண்டு செல்ல எத்தனைக்க அவள் அருகில் இருந்தவர்கள் ஹேன்ட் பேக்கை வாங்குவதற்காக கையை நீட்டினார்கள். அவர்களை முறைத்து விட்டு ஹேண்ட் பேக்கை தன் புறம் இழுத்துக் கொண்டவள். குழந்தையையும் தன்னோடு அணைத்தபடி தூக்கிக் கொண்டு. அவன் அருகில் வந்து நின்றாள். அந்த செயலில் அவன் இதழ்கள் இன்னும் அழகாக விரிந்தது. சார்பு அலுவலர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் ஏற இறங்க பார்த்துவிட்டு.

“இதுதான் பொண்ணா??, கையில குழந்தை இருக்கு. அது யாருடையது? “, என்று கேட்டார்.

“எங்களுடையது தான் சார் “, என்றான் அரவிந்த்.

“கலிகாலம் குழந்தையை பெத்துகிட்டு கல்யாணம் பண்ணிக்கிறாங்க”, வெற்றிலையை மென்று கொண்டே இவர்கள் இருவரையும் சேர்த்து மென்றார் அவர். அதில் அவள் முகம் சுருங்கியது.

“இல்ல சார், முறைப்படி எங்க ஊரு கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப ரெஜிஸ்டர் பண்ண வேண்டியது அவசியம்னு தெரிஞ்சது. அதனால ரிஜிஸ்டர் பண்ண வந்தோம்”, தங்கள் இருவரையும் யாரும் தவறாக நினைக்க கூடாது என்பதில் அவனும் உறுதியாக இருந்தான் போலும்.

“அந்த பொண்ணு கழுத்துல தாலி இல்லையே? “, என்று அந்த ரெஜிஸ்டர் அவள் கழுத்தை பார்த்துக் கொண்டே கேட்டார்.

அவள் சுடிதார் ஷாலால் தன் கழுத்தை இன்னும் மறைத்தாள்.

“சார் இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா, இப்படி சாதா டிரஸ்ல வருவோமா??. பேரு மாலினியா இருக்கலாம். ஆனா கன்வெர்ட்டர்ட் கிறிஸ்டியன் சார். கோவில்னு சொன்னதுனால நீங்க கன்பியூஷன் ஆயிட்டீங்க போல. கிறிஸ்டியன் கோயில். அதாவது சர்ச்சுல மோதிரம் மாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அது சின்ன சபை மாதிரி இருக்கிற சர்ச்ச். அதனால அங்க அவங்க ரெஜிஸ்டர் பண்ணல. முதல்ல எங்களுக்கு அது அவசியம்னு தோணல. ஆனா இப்ப அவங்க வீட்லயும். என் வீட்லயும் பிரச்சனை வருது. அதுதான் முறையா ரிஜிஸ்டர் பண்ணிட்டா தான, பிற்காலத்துல என் பொண்ணுக்கு ஒரு அங்கீகாரம் இருக்கும் “, என்றான் அவன்

“இவன் என்ன இவ்வளவு சரளமாக பொய் சொல்கிறான்??. இப்படித்தான் தன்னிடமும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறானா, அவர் கேட்கும் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு சரளமாக பொய் வருகிறதே? “, அதிர்ச்சியுடன் அவனை யோசனையாக பார்த்து நின்றாள் மாலினி.

“இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் காதலுக்காக என்னென்னமோ பண்ணி தொலையுதுங்க. இப்படியா மதம் மாறி கல்யாணம் பண்ணிக்கிறது. இந்தா பொண்ணு இப்படி மதம் மாறலாமா தப்பு இல்லையோ??, நம்ம கடவுள் நமக்கு என்ன குறை வச்சுட்டாருன்னு இப்படி எல்லாம் பண்ணிட்டு திரியிறீங்க??, நம்ம சாஸ்திரப்படி தாலி கட்டுறது தானே மரபு? “, அவர் ஆன்மீகவாதி போல எதை எதையோ அறிவுரை போல கூற ஆரம்பித்து விட்டார்.

“எனக்கும் அப்படி தான் சார் தோணுச்சு. அதான் சாஸ்திரத்துக்கு சரடுல தாலியை கோர்த்து வாங்கி வச்சிருக்கேன். அதை கழுத்துல போட்டுருவேன்”, என்றான் அரவிந்த்.

அவள் திடுக்கிட்டு அவனை திரும்பிப் பார்த்தாள். அவன் ஏன் அதைக் கண்டு கொள்ளப் போகிறான்??. கர்ம சிரத்தையாக திருமண பதிவில் முக்கியத்துவம் கொடுத்து நின்று கொண்டிருந்தான். ரெஜிஸ்டர் காட்டிய இடத்தில் அவன் கையெழுத்திட. அந்த கோப்பு அவளிடம் நீட்டப்பட்டது. எச்சிலை உள் கூட்டி விழுங்கினாள்.

கையெழுத்து இட சென்றவள் சற்று தயங்கினாள்..

“அம்மா”, என்று ஷாலினியின் குரலுக்கு. தானாகவே அவள் கரங்கள் கையெழுத்திட்டது.

“மாலை வாங்கிட்டு வரலையா??”, என்று கேட்டார் அந்த சார்பு அலுவலர் .

“கல்யாணம் ஆகாதவங்க தான் சார் மாலைமாத்திக்கணும், எங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே. அதனால நாங்க இப்ப மாத்திக்கல. ஆனா சரடு இருக்கு சார். அதை உங்க திருப்திக்காக அவள் கழுத்துல போடுறேன்”, என்ன பேசிக்கொண்டே பாக்கெட்டில் இருந்து எடுத்து சடார் என்று அவள் கழுத்தில் போட்டு விட்டான். இதை அங்கிருந்த இரண்டு எடுபிடி ஆட்கள் வீடியோ மூலமாக அரவிந்தின் தந்தைக்கு காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் அங்கிருந்தே மனமார வாழ்த்தி, கையை உயர்த்தி அவர்களை ஆசீர்வாதம் செய்தார். அவள் அதிர்ந்து விழித்தாள். தலைகுனிந்து தன் கழுத்தில் இருக்கும் மங்கள நாணை பார்த்தாள். அது தங்கச் சங்கிலியால் தங்கத்தாலியில் கோர்த்து இருந்தது.

இதை எப்பொழுது இவன் வாங்கினான்??.

“குழந்தை ரொம்ப அழகா இருக்குதே? “, என்று குழந்தையின் மீது அவரின் கவனம் சென்றது.

“எங்க அம்மா தங்கச்சி போல சார்”, என்று கூறியவன். சந்தேகம் வரக்கூடாது என்று தாயும் தங்கையும் இருப்பது போல, குடும்பமாக இருக்கும் புகைப்படத்தை காட்டினான். அவருக்கு சந்தேகம் இருந்தது போலும், அலைபேசியை கையில் வாங்கி பார்த்தார். இடுங்கி இருந்த அவருடைய புருவம் நேரானது. தன்னை இவன் ஏமாற்றி விட்டான் என்று மாலினியின் மனம் கூப்பாடு போட்டது . எல்லாவற்றையும் திட்டமிட்டு செயலாற்றி இருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் பதில் இருக்கிறது. அலுவலகர் சந்தேகப்படக் கூடாது என்று அதற்கும் கையில் இருக்கும் புகைப்படத்தை காட்டுகிறான். முதலில் அந்த புகைப்படம் உண்மையானதா, இல்லை அது மார்பிங் செய்ததா??. இவ்வளவு நேரம் வராத சந்தேகம் இப்பொழுது வந்தது அவளுக்கு.

“போகலாம் மாலினி”, என்று கூறியபடியே அவள் கையை பற்றினான். யாரும் அறியாத வண்ணம் அவள் அதை தட்டி விட்டுவிட்டு அவனை தீ பார்வை பார்த்தாள்.

“ஐயோ பார்வையாலே எரிச்சிடுவா போலையே??,

இப்ப என்ன??, எதுக்கு இந்த முறைப்பு??, இப்ப நான் ஒன்னும் உன் கழுத்துல மூணு முடிச்சு போடலையே. சட்டப்படி நீ என்னோட மனைவி. பாக்குறவங்க எல்லாம் கழுத்துல தாலி இல்லன்னு கேப்பாங்க இல்லையா, இப்ப இவரும் அதை தானே கேட்டாரு. ஒவ்வொருத்தருக்கா இந்த கதைய நான் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா??, அதனால வாங்கி வச்சிருந்தத கழுத்துல போட்டேன். இத நீ போட்டுக்கிட்டு இருந்தாலும் சரி, இல்ல கழட்டி பீரோல வச்சாலும் சரி. எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் யாரும் என்னையும் உன்னையும் தப்பா பேசக்கூடாது. அப்புறம் அது குழந்தைக்கும் தப்பான பேரை கொண்டு வந்து விட்டுடும். உன் கைய பிடிக்க கூடாதுன்னா சரி நான் பிடிக்கல. அப்புறம் உன் இஷ்டம்”, என்று கூறியபடி அவன் முன்னால் நடக்க ஆரம்பித்து விட்டான்.

இவன் குழந்தையை காரணம் காட்டி ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருக்கிறான். வர துடித்த கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு அவளும் நடக்க ஆரம்பித்தாள். இதற்கு மேல் என்ன செய்து விட முடியும் அவளால்??.

துணிந்தாயிற்று, இனிமேல் வருவதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

“காரில் ஏறி அமர்ந்தான். அவள் பின்னால் ஏறச் செல்ல.

அவன் அதை லாக் செய்து இருந்தான். அவள் அதை திறக்க முயற்சித்துக் கொண்டே இருக்க. அவன் எக்கி முன் கதவை திறந்து விட்டான்.

“நான் உனக்கு டிரைவர் இல்ல மாலினி. உன்னோட ஹஸ்பண்ட். இனிமே முன்னாடி ஏறு “, என்று அழுத்தமாக கூறினான்.

எல்லாமே இவனுடைய இஷ்டமா??, தனக்கென்று எதுவும் இல்லையா??, உதட்டை மடித்து கடித்தவள் அமைதியாக அவன் சொன்னதை செய்தாள்..

“உன் வீட்டுக்கு போகலாமா??, இல்ல நம்ம வீட்டுக்கு போலாமா? “, என்று கேட்டான் .

3 thoughts on “தேவதையாக வந்தவளே 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *