Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-3

பிரம்மனின் கிறுக்கல்கள்-3

அத்தியாயம்-3

     மனதில் பலவிதமான போராட்டம் சுழன்று எப்படியும் கேட்டுவிடும் எண்ணத்தில் ஆத்விக் அறை முன் வந்து நின்றாள்.

     “குழந்தையை கொடுங்க தூங்க வைக்கணும்” என்றாள் யஷ்தவி.

      “காலையில இருந்து குழந்தை உங்களிடம் தானே இருந்தா. இனி நைட் நான் பார்த்துப்பேன். நீங்க உங்களுக்கு கொடுத்த ரூம்ல தூங்குங்க. குட் நைட்” என்று கதவை சாற்ற பார்த்தான்.

    “குழந்தை அம்மாவோட தான் இருக்கும். தயவு செய்து கொடுங்க” என்றாள் யஷ்தவி.

     “ஹலோ குழந்தை அப்பாவோட இருக்கும். நீங்க போகலாம்.” என்றான்.

    இருவரும் பேசுவதே ஆபூர்வமாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு மாறாக எலியும் பூனையுமாக மோதினார்கள். மாறி மாறி நாகரீகமாக கேட்டு பார்த்து பாவனாவை தரவில்லையென்றதும் யஷ்தவி கோபத்தில் அந்த சொல்லை கூறினாள்.

     “நீங்க ஒன்னும் குழந்தைக்கு அப்பா இல்லை. நான் தான் மலரோட பிரசவத்துல இருந்து கூடவே இருந்தேன். சொல்லப்போனா தத்து எடுக்க தாய் நான் இருக்கேனு தான் குழந்தையை அந்த ஆசிரமத்துல கொடுத்தாங்க.” என்றாள். பாவனா மீது முக்கிய பங்கு எனக்கு தான் என்பது போல பேசினாள்.

     “நான் குழந்தைக்கு அப்பா இல்லை தான். அதே சமயம் நீங்களும் குழந்தைக்கு சொந்த அம்மா இல்லை. நாம இரண்டு பேருமே குழந்தையை தத்தெடுத்திருக்கோம். ஆனா பெரும்பாலும் குழந்தைக்கு அப்பா வழி தான் உரிமை அதிகம். என்னோட இரவு இருக்கட்டும்.” என்றவன் நொடியும் தாமதிக்காது கதவை தாழிட்டு விட்டான்.

   கேர் டேக்கர் இருந்தால் இது தானே நடக்கும் என்பது ஆத்விக்கின் எண்ணம். ஆனால் யஷ்தவி ஒன்றும் கேர் டேக்கர் இல்லையே. அவளும் ஆத்விக் போல பாவனாவை தத்தெடுக்க தேடி வந்தவள் தானே.

     சொல்லப்போனால் பாவனாவால் இந்த தம்பதியினர் உருவாக காரணம். இந்த தம்பதியினரால் பாவனா வரவில்லை என்பது உண்மை.

      வெளியே யஷ்தவி தவித்தவளாக நின்றாள்.

     கதவை தட்டவும் பிடிக்கவில்லை. முதலில் சாப்பிட்டு வருவோம் என்று கிச்சனில் போனாள். சின்னதாய் மூன்று ரவாதோசையை சாப்பிட்டு பாத்திரம் கழுவினாள். ஹாலிலேயே யஷ்தவி சோபாவில் உறங்கினாள்.

      இரவு பாவனா அழுவது கேட்க பாலை சூடுபடுத்த ஆத்விக் எழுந்து வெளிவர, அதற்குள் மிதமாய் ஆற்றி பாட்டிலில் ஊற்றி மூடியபடி யஷ்தவி வந்தாள்.

       பாவனா பசியாற குடித்து முடிக்க, யஷ்தவி முதுகை நீவிவிட்டு மடியில் படுக்க வைத்தாள்.

     “கதவை பட்டுனு முடியதுக்கு சாரி. ஆக்சுவலி எனக்கு இங்க ரூம்ல தனியா தூங்க மூச்சடைக்குது. சந்தனா இறப்பு தான் கண்முன்ன வருது. அதனால தான் நைட் என்னோட தூங்கட்டும்னு பாவனாவை என்னோடவே வச்சிக்க முயன்றேன்.” என்றான் ஆத்விக்.

    அவன் கூற வரும் நியாயம் புரிந்தது. தன்னவள் அருகே இருந்த இடம். அப்படியிருக்க அவள் நினைவை ஒதுக்க பாவனா அங்குயிருந்தால் அவள் முகம் கண்டு மனம் சற்று வலியை இறகாய் வருடும் என்பது உண்மை தானே.

     “சரி… மூன்று நாள் உங்களோடவும் மூன்று நாள் என்னோடவும் பாவானா தூங்கட்டும். மீதி ஒரு நாள் ஹால்ல படுக்க வைக்கலாம். ஓகேனா குழந்தையை உங்க ரூம்ல தூங்க வச்சிட்டு நான் எனக்கு கொடுத்த அறையில போயிடறேன்.” என்றாள். யஷ்தவியின் இந்த யோசனை ஆத்விக் மனதுக்கு சரியாக தோன்ற சம்மதித்தான்.

     யஷ்தவி குழந்தையை தூக்கி கொண்டு ஆத்விக் அறைக்குள் இருந்த மெத்தையில் கிடத்தி விட்டு வெளியேறினாள்.

     சப்போஸ் குழந்தை எதுக்காகவாது அழுதா உடனே என்னை எழுப்புங்க” என்று யஷ்தவி கதவை வெறுமென சாற்றி வெளியேறினாள்.

    தன்னை இந்தளவு புரிந்து கொண்ட பெண்ணாக யஷ்தவியை மதித்தான்.

     பாவனாவின் அம்மா மலரும் கொரானா வார்டில் தான் சந்தித்தது.
சந்தனாவோடு தானும் மலர் மற்றும் யஷ்தவி கணவர் வருண், யஷ்தவி என்று ஒரே கட்டிடத்தில் தனிதனி பிரிவில் இருந்தப்போது இந்த மூன்று குடும்பமும் ஒரு குடும்பமாக மாறுமென துளியும் எண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் கொரானா பலரையும் கோராமாய் விழுங்கியது.

   கர்ப்பிணியாய் இருந்த மலர் குழந்தை பெற்று ஆறாவது நாள் மூச்சு திணறுவதற்கு முன் என் குழந்தையை விட்டுட்டு போறேனே என்று அலறி துடித்தது அந்த கட்டிடமே அறிந்திருக்கும். கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சு திணற பேச முடியாது துடித்து காற்றோடு காணாமல் போயிருந்தாள் மலர்.
 
    அடுத்து வருண் யஷ்தவி ஆத்விக் சந்தனா என்று நால்வர் மட்டும் இருக்க, நால்வருமே அபாயகமான கட்டத்தை தாண்டியதாக தான் மருத்துவர் கூறியது. அப்படி இருந்த நாட்களில் தான் மலரின் குழந்தை தற்போது எங்கிருக்கின்றாள் என்ன ஆனாள் என்ற கேள்வி குடைய, யஷ்தவி தான் மருத்துவரிடம் கேட்டு விசாரித்தாள்.

      மலர் இறந்ததால் குழந்தை ஒரு ஆசிரமத்தில் பராமரிப்பில் இருப்பதாக கூறினார்.

     அதற்கு பின் திரைக்கு பின்னாலிருந்து மாறி மாறி குழந்தை பற்றியும், கொரானாவல் இப்படி தாய் தந்தையரை இழந்து உறவுகள் தவிப்பதுமாக பேச்சு போனது. அப்பொழுது கூட குழந்தை மீது கருணை சுரந்தது. தத்தெடுக்க செய்வோமென இருவரும் எண்ணவில்லை.

      அடுத்த நாளிலேயே சந்தனா இறக்க தான் வாழ்க்கையின் வெறுமையை உணர்ந்தான் ஆத்விக். அதுவும் இறந்தவளின் சடலத்தை கூட காட்டாமல் அப்படியே போனது ஆத்விக்கின் மனதால் ஏற்கமுடியவில்லை.
 
      அதற்கு மறுநாள் வருண் இறந்ததாக கேள்விப்படவும், அடுத்து தான் இறக்க நேர்வது என்று இறப்பிற்காக காத்திருந்தான்.
ஆனால் சூழ்நிலையோ சதியை கூட சாதகமாய் மாற்ற மாட்டேனென ஆத்விக்கை நலம் பெற வைத்து வழியனுப்பி விட்டது. அதன் பின் காலம் வேகமெடுத்து சென்றது.

   அன்பாளன் ஆறுமாதம் கழித்து திருமணம் பற்றிய பேச்சை விடாது எடுக்க, வாழவே பிடிக்காமல் அன்பாளனுக்கும் பிடிக்கொடுக்காமல் நழுவினான்.

    ஆத்விக்கால் சஞ்சனாவை மறக்க முடியவில்லை. அவன் பழைய அலுவலகத்தில் பணிப்புரிந்த நேரம் காதலித்து மணந்து கொண்டான். அவளுக்கென யாருமில்லை ஆத்விக் தான் எல்லாமாக மாறினான். இரண்டு வருட தாம்பத்திய வாழ்வில் குழந்தையும் இல்லை. ஒரு வேளை குழந்தை இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை சென்றது.

    சட்டென மலரின் குழந்தை நினைவு வந்ததும், அந்த குழந்தையை பற்றி அறிந்திட புறப்பட்டான்.

     நீயேன் அந்த குழந்தையை கேட்கறப்பா என்ற மருத்துவர் கேட்டதற்கு அந்த நொடி அவனை அறியாது உதிர்த்த வார்ததை தான். “யாரும் தத்தெடுக்கலைனா நான் தத்தெடுத்து வளர்க்கலாம்னு ஆசையா இருக்கு டாக்டர்” என்றான்.
 
   மருத்துவர் ஆசிரமத்தின் பெயரையும் ஆசிரமத்தையும் தேடி வந்த நேரம் அவனுக்கும் முன் யஷ்தவி நின்றிருந்தாள்.

       அதுவும் தாய் தந்தையோடு பிடிவாதமாக மலரின் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க போவதாக கூறி வாதம் செய்தாள்.
   
    அவர்களும் குழந்தை அங்கு இருந்தால் பார்க்கலாமென யஷ்தவி பிடிவாததால் அழைத்து வந்திருந்தனர்.

    ஒரே குழந்தையை தேடி இருவர் ஒன்றாக வந்ததில் ஆசிரமத்து நியமிப்பாளர் திணறினார். கொஞ்சம் யோசிப்பதாக கூறினார்.

      அந்த நேரம் தான் அன்பாளன் மூச்சு வாங்க வந்தார்.

   எங்கே ஆத்விக் அவசரப்பட்டு தத்தெடுத்து பிறகு திருமணமே செய்யாமல் போயிடுவானோ என்று கலங்கினார்.

     யஷ்தவி ஆத்விக் இருவரும் கொரானாவல் பாதிப்படைந்து பேசி பழகி, இருந்தாலும் பாவனாவால் முறுக்கி இருந்தனர்.

    அந்த இடைப்பட்ட நேரத்தில் பாலகுமார் அன்பாளன் இருவரும் ஒரே ஊர் பக்கத்து பக்கத்து தெரு என்று அறிந்து பேசி பழகினார்கள்.

   அன்பாளனோ “காதல் திருமணம் அவனா பண்ணிக்கிட்டு வந்து நின்றான் சார்.  அப்ப முகத்துல முழிக்காதேனு விரட்டிட்டேன். அந்த பொண்ணு இறந்துட்டா. இப்ப என்னடானா ஊர்ல பொண்ணு பார்க்கலாம்னா என் வாழ்க்கையோட அடுத்த பகுதி யாருக்காவது உபயோகமா இருக்கணும்னு தத்தெடுக்கறேன்னு பேசறான்.” என்று புலம்பினார்.

     பாலகுமாரோ, “என்மகளுக்கு நாங்க பார்த்து தான் திருமணம் செய்து வைத்தோம். தூரத்து உறவுக்கார பையன் தான். ஆனா இப்படி நட்டாத்துல விட்டுட்டு கொரானாவுக்கு உசிரை காணிக்கை வச்சிட்டு என் மகளை விதவையா தவிக்க விட்டுட்டு போயிட்டான்” என்று அழுதார்.

   சித்ராவோ “அதுகூட பராவயில்லை அண்ணா. ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ மறுமணம் பண்ண எப்படியாவது கைல கால்ல விழுந்து வாங்க முயற்சிப் பண்ணுவேன். இப்படி பொசுக்குனு நாங்க தங்கிருந்த இடத்துல மலருனு ஒருத்தங்களோட குழந்தை அநாதையா இருக்கு. ஆதரவு தந்து இனி என் காலம் முழுக்க அவளுக்காக வாழ போறேனு வந்துட்டா. இப்ப கல்யாண பேச்சை ஏன் ஆரம்பிச்சோம்னு இருக்கு.” என்று மூக்குறிந்தார்.

     “ஏன் சார் இப்படி பண்ணினா என்ன? இவங்க இரண்டு பேரை விதியால இணைத்து வச்சா?” என்று அன்பாளனின் திட்டம் தான்.

    இவர்கள் திட்டத்தை யஷ்தவி ஆத்விக்கிடம் கூறினால் ஆளுக்கு ஒருபக்கம் முகத்திருப்புதலை காட்டுவார்களென ஆசிரமத்து நிர்வாகியை தேடி போனார்கள்.

      தங்கள் நிலையை விளக்கி இருவரும் ஒரு குழந்தையை கேட்பதால் இருவரையும் மணந்து குழந்தையை தத்தெடுக்க கூற ஆலோசனை கூற வேண்டுமென கேட்டார்கள்.

     ஆதிரமம் நடத்தும் சுந்தரமோ ஆழ்ந்து யோசித்து, பேசி பார்க்கின்றேன் என்று ஆதரவு கொடுத்து ஆத்விக் யஷ்தவி இருவரையும் அழைத்து பேசினார்.

     “நீங்க இரண்டு பேரும் ஒரே குழந்தையை கேட்கறிங்க. ஆனா எங்களுக்கு சிங்கிள் பேரண்ட்ஸுக்கு கொடுக்கறதுக்கு பதிலா அப்பா அம்மா என்ற குடும்பத்துக்கு குழந்தை போனா நாங்க சந்தோஷப்படுவோம்.

     நீங்க இருவருமே துணையை இழந்தவங்க. உங்க பெற்றோர் ஒரே ஊர்க்காரங்க. நீங்க ஏன் மறுமணம் செய்து குழந்தையை தத்தெடுக்கக் கூடாது. யோசித்து பாருங்க… இல்லைனா குழப்பிக்காதிங்க. உங்க வேலையை பாருங்க. நாங்க கணவன் மனைவி என்று குடும்பமா இருக்கறவங்களுக்கு தத்து கொடுத்துக்கறோம். ஏற்கனவே இரண்டு ஜோடி கேட்டிருக்காங்க” என்று குண்டை தூக்கி போட்டார் நிர்வாகி சுந்தரம்.

    அதன் விளைவே ஆத்விக் யஷ்தவி வேறுவழியின்றி மணந்து கொண்டனர். அப்பொழுதும் எளிதில் கொடுத்திடவில்லை. திருமணத்திற்கு முன் ஒருமாதம் குழந்தையை யஷ்தவியோடு பழக விட்டார்.

  பெரியவர்கள் கணவன் மனைவி என்று ஊரறிய திருமணம் முடிக்க மாற்றினாலும், சிறியவர்கள் தங்களுக்குள் சில சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு மணந்தனர். அதுவே நண்பர்கள் தாண்டி கணவன் மனைவியாக இருவருமே இருக்கப் போவதில்லை என்ற முடிவோடு.

    கடந்த நிகழ்வுகளை பாவனாவையே பார்த்து கொண்டு மூழ்கி நேரம் கழித்தே உறங்கினான் ஆத்விக்.

-கிறுக்கல்கள் தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
     
   

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *