Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-8

பிரம்மனின் கிறுக்கல்கள்-8

அத்தியாயம்-8

     பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான்.

    அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில் பயணி போன்றவன் அல்ல என்று புரிந்தது முதல் பேச துவங்கினான்.

     ஏங்க டிரஸ் நீங்க வாங்கிட்டிங்க. கேக்காவது நான் வாங்கறேன்” என்றதற்கு யஷ்தவியோ “நானே என் கையால கேக் செய்யலாம்னு இருந்தேன்” என்று தலை தாழ்த்தி நின்றாள்.

     “அப்பாவா நானும் ஏதாவது பண்ண ஆசையாயிருக்கு. இதுவரை யாரிடமும் பகிரலை. உங்களை மாதிரி தான் சந்தனாவும் இரண்டு மாதம் கருவை சுமந்திருந்தா. பட் அவ போனதும் அவளோடவே என் குழந்தையும் போயிடுச்சு.

    அப்பாவிடம் சொல்லலை மேபீ சொல்லிருந்தா கவலைப்படுவார். எனக்கும் சந்தனாவுக்கும் மட்டும் தெரிந்த சந்தோஷ செய்தி. சந்தனாவோட அந்த குழந்தையும் இறந்ததால அந்த இழப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.

     உங்களை மாதிரி தான் பாவனாவை என் குழந்தையா பார்க்க ஆரம்பிச்சேன். அதனால தான் பாவனாவை விட்டு தர சொன்னப்ப என்னால விட்டு கொடுக்க முடியலை.” என்றான் ஆத்விக்.

     யஷ்தவி மெதுவாய் ஆத்விக் இழந்தது இரு உயிராக எண்ணினாள். அவள் இழந்தது ஒரு உயிரை தான். அவள் வயிற்றில் உருவான கருவை மட்டுமே. வருணை இழந்தது யஷ்தவிக்கு கவலையே கொடுக்கவில்லை. இழப்பாகவும் எண்ணிடவில்லை.

   மேலும் இதை ஏன் என்னிடம் பகிர்ந்தான். அன்னை தந்தை என்னை பற்றி என்ன சொல்லி அவனின் மனதில் ‘பாவம் இவள்’ என்ற விதையை தூவி விட்டார்களா? என்று தோன்றியது.

    அந்த நேரம் அன்பாளன் எட்டி பார்த்தவர் “ஏன் ஆத்விக் பாவனா பிறந்த நாளை உன் ஆபிஸ் நெய்பர்ஸ் சொல்லி கொண்டாட போறிங்களா? அப்படின்னா சொல்லு டா. என் பேத்திக்கு ஊஞ்சல் வாங்கணும் என் கார்டை எடுத்துட்டு போய் வாங்கி டோர் டெலிவரி கொடுக்கணும்.” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

      யஷ்தவி பதிலுக்கு ஆறுதல் உரைக்காமல் எண்ணங்களின் திக்கில் பயணிக்க, ஆத்விக்கே முகம் மலர்ந்து, “கரெக்ட் அப்பா சொன்னது போல வீட்ல டெகரேட் பண்ணி என் ஆபிஸ் பிரெண்ட்ஸ், இங்க பக்கத்துல இருக்கற நெய்பர்ஸ் இன்வெயிட் பண்ணலாமா. பாவனாவுக்கு ஹாப்பியா இருக்கும். கலர் கலர் பலூன், புது புது மனிதர்கள், கிப்ட் ரிலேட்டிவ்னு வீடு முழுக்க ஆட்களா… பாவனாவுக்கு நாம மட்டும் இல்லை நிறைய பேர் இருக்கோம்னு திருப்தி வரும்.” என்றான்.

     சிறிது நேரம் எடுத்து, “அப்பா அம்மாவை தவிர எங்க வீட்ல யாரையும் கூப்பிட வேண்டாம். உங்களுக்கு யாரை கூப்பிடணுமோ கூப்பிடுங்க. ஆனா புட் எல்லாம் நீங்களே அரேஞ்ச் பண்ணுங்க. எனக்கு நிறைய பேருக்கு சமைக்க வராது.” என்றாள் யஷ்தவி.

     ஒரு குடும்பமாய் பாவனா பிறந்த நாளை கொண்டாட மகிழ்ச்சியாய் அந்நாளை வரவேற்றனர்.

       அன்பாளனோ, பேப்பரில் கண் பதித்து “ஆத்விக் சொல்ல மறந்துட்டேன். பிறந்த நாள் கொண்டாடறதுல பெரிசில்லை. உன்னோட ஆபிஸ் வீட்டு நெய்பர்ஸ் முன்ன யஷ்தவியை என்னங்க இவர் என் கொலிக் என்றோ உன் ஆபிஸ் பிரெண்ட்ஸ் முன்ன இவங்க யஷ்தவிங்கனு மரியாதை கொடுத்து பேசினா. மற்றவங்க பார்வைக்கு பாவனா தத்து குழந்தையென்றும், நீயும் யஷ்தவியும் அவலாகவும் மற்றவரோட பேச்சுக்கு அகப்படுவீங்க.

     இதே குழந்தையோட அப்பா அம்மா அதாவது கணவன் மனைவினு  அறிமுகப்படுத்திக்கிட்டா, அந்த குழந்தைக்கு இப்ப இருந்தே இது அவ குடும்பம்னு எண்ணம் வலுக்கும். ஏதோ சொல்லணும்னு தோன்றியது.” என்று கூறிவிட்டு பேப்பரை மடித்து வைத்து அகன்றார்.

    “எனக்கு பிரச்சனையில்லை. நான் இப்பவும் வாங்க போங்க தான் கூப்பிடறேன். அப்பறமும் அப்படியே கூப்பிட்டாலும் மரியாதையான பொண்ணுனு நினைச்சிப்பாங்க. உங்க பாடு தான்” என்று யஷ்தவி சிரித்து கடந்தாள்.

       ஆத்விக்கிற்கு குழப்பமாய் போனது. புது ஆபிஸ், புது இடம் என்று இருப்பவன். முன்பாவது தங்கிருந்த வீட்டின் பக்கத்து வீட்டு ஆட்களுக்கு சந்தனா மனைவியென்று தெரியும். தந்தை தான் அதே வீடு வேண்டாமென்று சந்தனா இறந்த இரண்டு மாதத்தில் ஊருக்கு அழைத்து சென்று விட்டார்.

   பணியும் செய்ய மனமின்றி பழைய அலுவலகத்தில் வேலையையும் இழுந்து விட்டான்.

   இங்கு மீண்டும் வந்தப்பொழுது புது அலுவலகத்தில் வேலை சேர்ந்ததும் அருகே வீடு எடுத்து தங்கிவிட்டான்.

     ஆனால் யாரிடமும் அதிக பழக்கமில்லை. யஷ்தவியை குழந்தையோடு அழைத்து வந்ததை வைத்து அவர்களாகவே மணமாகி குழந்தை இருக்கும் ஆடவன் என்று எண்ணினார்கள்.

     தற்போது ங்க’ போட்டு பேசினால் தந்தை கூறியது போல தானே பேச எடுத்து கொடுத்தது போல ஆகிடும் என்று உணர்ந்து குறுக்கும் நெடுக்கும் நடந்து, பின்னர் மெத்தையில் அமர்ந்து, மெதுவாய் ”யஷ்தவி” என்று சொல்லி டார்த்தான்.

     “யஷ்… யஷ்தவி” என்றவன் என்னை விட வயசுல சின்னவங்க தானே. பெயர் சொல்லலாம்” என்றவன் துள்ளளாய் மாறினான்.
  
    “யஷ்தவி மெனு சொல்லிடு. புட் ஆர்டர் பண்ணிடுவேன். ” என்று சின்னதாய் நோட்டும் பேனாவும் வந்து நின்றான். யஷ்தவி திரும்பியவள் அதிர்வாய் பார்த்தாள்.

    அதன் பார்வை என்னவென அறியாத ஆத்விக்கோ, “ஐ அம் சாரி. அப்பா சொன்னதும் பெயரை சொன்னா என்னனு தோனுச்சு. வருண் கூப்பிட்டது போல பீல் பண்ணிட்டிங்களா.” என்றான்.

    “சேசே… வருண் எங்க பெயரை சொல்வார். மூன்று மாத திருமண வாழ்க்கையில ஏய், சனியனே, சிறுக்கி, இப்படி தான் கூப்பிடுவார். எப்பவாது யார் முன்னாணியாவது மட்டும் யஷ்தவினு முத்து மாதிரி உதிர்ப்பார். நான் அதுக்கு ஷாக் ஆகலை. இங்க வந்து இரண்டு மாதம் முடிய போகுது இப்ப தான் பெயரை சொன்னிங்களா அந்த ஷாக்” என்று இயல்பாய் குழம்பை வதக்கி கொண்டே மான்விழியில் குறும்போடு கூறினாள்.

     “இனி பெயரே சொல்லிடறேன். எனக்கும் ‘ங்க’ போட்டு பேச கஷ்டமா இருக்கு. ஏதோ அழுத்தத்தோட பேசற மாதிரி. இதோ இப்ப யஷ்தவினு கூப்பிட்டதும் ஒரு பிரெண்ட்லி பீல் கிரியேட் ஆகுது” என்று சிரித்தான்.

    ஆத்விக் சிரிப்பில் இமை சிமிட்டாது பார்த்தவள் வியந்தாள். ஆத்விக் சிரிப்பது இதுவே முதல் முறை. இறுகி போயிருந்த முகமும், வாடிய முகமே கண்டவளுக்கு அவனின் புன்சிரிப்பு அத்தனை அழகாய் தெரிந்தது.

    முன்பு இருந்த இறுக்கம் அவள் முகத்திலும் இல்லை என்பதை அவள் கண்ணாடியோ அவள் உள்ளமோ பறைச்சாற்றவில்லை.

    சித்ராவும் பாலகுமாரும் நாளை மறுநாள் கொண்டாடப்படும் பாவனா பிறந்த நாளிற்கு வந்திறங்க இந்த காட்சிகளை கண்டு உவகை பொங்க கண்டனர்.

   அதன் பின் யஷ்தவி தாயை கவனித்து வரவேற்றாள். ஆத்விக் கூட “வா.. வாங்க மாமா வாங்க அத்தை” என்று மனதார தடுமாறி அழைத்து முடித்தான். அவனே அறியாது தான் உறவுமுறை கூறினான். கேட்ட பெரியவர்களுக்கு அத்தனை பேரானந்தம்.

      அன்பாளனிடம் பாலகுமார், சித்ரா இருவரும் நலன் விசாரித்து மகிழ்ந்தனர்.

     முன்ன விட பரவாயில்லை சம்மந்தி. இரண்டு பேரும் பேசிக்கறாங்களே” என்று வியந்தார் பாலகுமார்.

     “அட இப்ப தான் பேசுதுங்க. இதுக்கு முன்ன வாங்க போங்கனு தான் இழுப்பான். பாவனா பிறந்த நாளுக்கு தான் இந்த மாற்றம்.” என்று அன்பாளன் கூறவும், “எந்த மாற்றம் யார் மூலமா வந்தா என்ன. அவங்க முகத்துல இறுக்கம் போய் இதம் வந்து இருக்கே இதுக்கே கடவுளுக்கு நன்றி சொல்லணும்” என்று வேண்டினார் சித்ரா.

       “அது வாஸ்தவம் தான்” என்ற அன்பாளன் “நானும் பிறந்த நாள் முடிஞ்சதும் ஊருக்கு போகணும். தொடர்ந்து என்னால இங்கயே இருக்க முடியாது. அதுவும் ஹார்ட் பேஷண்டா எப்படி நேரத்தை கடத்த” என்று தில்லுமுல்லை உடைத்து பேசிட அந்த நேரம் காபி தட்டோடு வந்த யஷ்தவி கேட்டு நின்றாள்.

    “இதை எதிர்பார்க்கலை மாமா. இப்படி பண்ணுவீங்கனு. அங்கிள்னு கூப்பிடாதே மாமானு கூப்பிடுமா. உங்க அம்மாவுக்கு அண்ணன் இருந்தா கூப்பிட மாட்டியானு நெயிற்ச்சியா பேசினப்பவே சுதாரிச்சியிருக்கணும்.

    இந்த செண்டிமெண்ட் பேச்சால தான் எங்கப்பாவிடம் முதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டு மௌனமா இருந்தேன். திரும்ப திரும்ப அதே செண்டிமெண்டை காட்டி கட்டி போட்டுட்டீங்களே இது நியாயமா?” என்று கேட்டாள்.

    தன் மகன் இதனை கேட்டு விட்டானோ என்று பயந்த அன்பாளன் உடனடியாக எட்டி பார்த்திட ஆத்விக்கோ பாவனாவை அழைத்து கொண்டு பைக்கில் முன்னே அமர வைத்து பறக்க சென்றிருந்தான்.

    “நடிக்க தான் செய்தேன். யாருக்காக என் பையனுக்காக. உனக்காக மா. ஏன் நீங்க தத்தெடுத்த அந்த பாவனாவுக்காக.” என்று சீற்றத்துடன் பேசினார்.

-கிறுக்கல்கள் தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *