Skip to content
Home » பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்

26. அநிருத்தரின் பிரார்த்தனை


     முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்கள். பலர் இளவரசரைப் பற்றிய தங்கள் கவலையையும் வெளியிட்டார்கள். முதன் மந்திரியும் கவலை தேங்கிய முகத்துடனேதான் தோன்றினார். ஆனாலும் இரு கைகளையும் தூக்கி ஜனங்களுக்கு ஆறுதலும் ஆசியும் கூறும் பாவனையில் சமிக்ஞை செய்துகொண்டு சென்றார். அரண்மனைக் கட்டிடத்தின் முகப்பை அடைந்ததும் பல்லக்கு கீழே இறக்கப்பட்டது. முதன் மந்திரி வெளி வந்து முதலில் மேலே நோக்கினார். பெரிய ராணியும் இளவரசியும் அங்கே நிற்பதைப் பார்த்து, வணக்கம் செலுத்தினார். பிறகு, துவந்த யுத்தம் நடந்த இடத்தை நோக்கினார். இவ்வளவு நேரம் தங்களைச் சுற்றி நடப்பது ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல் வந்தியத்தேவனும், பினாகபாணியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆழ்வார்க்கடியான் இதற்குள் இறங்கிவந்து முதன் மந்திரியின் காதருகில் ஏதோ சொன்னான். அவர் தம்முடன் வந்த சேவகர்களைப் பார்த்து, “அரண்மனை முற்றத்தில் கலகம் செய்யும் இந்த முரடர்களை உடனே சிறைப்படுத்துங்கள்!” என்று கட்டளையிட்டார்; சேவகர்களுடன் ஆழ்வார்க்கடியானும் கூட்டத்தைப் பிளந்து கொண்டு சென்றான். சண்டை போட்ட இருவரையும் சேவகர்கள் கைப்பற்றி அவர்களுடைய கைகளை வாரினால் பிணைத்தார்கள். ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனை நோக்கி ஜாடை செய்யவே, அவன் தன்னைச் சிறைப்படுத்தும்போது சும்மாயிருந்தான்.

     அநிருத்தர் மேல்மாடத்துக்குச் சென்றார். அங்கு நின்றபடி ஜனங்களைப்பார்த்து, “உங்களுடைய கவலையையும் கோபத்தையும் நான் அறிவேன். சக்கரவர்த்தியும், ராணிமார்களும் உங்களைப் போலவே துயரத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவர்களுடைய கவலையை அதிகப்படுத்தும்படியான காரியம் எதுவும் நீங்கள் செய்யவேண்டாம். இளவரசரைத் தேடுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் அமைதியாக வீடு திரும்புங்கள்” என்று கூறினார்.

     “சக்கரவர்த்தியை நாங்கள் பார்க்கவேண்டும். சக்கரவர்த்தி பழையாறைக்குத் திரும்பி வரவேண்டும்” என்று கூட்டத்தில் ஒருவரும் கூறினார்.

     “இலங்கையில் உள்ள எங்கள் ஊர் வீரர்கள் கதி என்ன?” என்று இன்னொருவர் கேட்டார்.

     “சக்கரவர்த்தி தஞ்சை அரண்மனையில் பத்திரமாயிருக்கிறார். அவர் தங்கியுள்ள அரண்மனையை இப்போது வேளக்காரப்படையினர் இரவு பகல் என்று காவல் புரிகின்றனர். கூடிய சீக்கிரத்தில் சக்கரவர்த்தியை இந்த நகருக்கு நானே அழைத்து வருகிறேன். இலங்கையில் உள்ள நம் வீரர்களைப் பற்றியும் உங்களுக்கு கவலை வேண்டாம்; ஈழத்துப் போர் நமக்குப் பூரண வெற்றியுடன் முடிந்து விட்டது. நம் வீரர்கள் விரைவில் திரும்பி வந்து சேருவார்கள்!” என்று முதன் மந்திரி அறிவித்ததும் கூட்டத்தில் பெரும் உற்சாக ஆரவாரம் ஏற்பட்டது. சுந்தரசோழரையும், அன்பில் அநிருத்தரையும் வாழ்த்திக் கொண்டு ஜனங்கள் திரும்பலானார்கள்.

     முதன் மந்திரி பெரிய மகாராணியைப் பார்த்து, “தேவி, தங்களிடம் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்! அரண்மனைக்குள் போகலாமா?” என்றார். இளவரசியைத் திரும்பி பார்த்து, “அம்மா! உன்னிடம் பிற்பாடு வருகிறேன்” என்று கூறியதும், குந்தவை தன்னுடைய இருப்பிடத்துக்குப் புறப்பட்டாள்.

     அவளுடைய மனத்தில் இப்போது பல கவலைகள் குடிகொண்டன. சோழ சாம்ராஜ்யத்தில் யாராவது ஒருவரிடம் குந்தவை பயம் கொண்டிருந்தாள் என்றால், அவர் முதன் மந்திரி அநிருத்தர்தான். கழுகுப் பார்வையுள்ள மனிதர் அவர். புறக்கண்களினால் பார்ப்பதைத் தவிர எதிரேயுள்ளவர்களின் நெஞ்சிலும் ஊடுருவிப் பார்த்து, அவர்களுடைய அந்தரங்க எண்ணங்களை அறியும் ஆற்றல் படைத்தவர். அவருக்கு எவ்வளவு தெரியும் – எவ்வளவு தெரியாது; அவரிடம் எதைச் சொல்லலாம் எதைச் சொல்லாமல் விடலாம் என்பதைப்பற்றி இளைய பிராட்டிக்கு ஒரே குழப்பமாயிருந்தது. வாணர் குல வீரரையும், பினாகபாணியையும் சேர்த்து அவர் சிறைப்படுத்தும்படி கட்டளையிட்டது இளவரசிக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. அதை வெளிக் காட்டிக் கொள்ளவும் முடியவில்லை. அந்த மாபெரும் ஜனக்கூட்டத்தின் முன்னால் வந்தியத்தேவனுக்குப் பரிந்து பேசவும் முடியவில்லை. “என்னிடம் பிற்பாடு வரப்போகிறாராமே? வரட்டும்; ஒரு கை பார்த்து விடுகிறேன்!” என்று மனத்தில் கறுவிக்கொண்டே தன் அந்தப்புரத்தை நோக்கி விரைந்து சென்றாள்.

     செம்பியன் மாதேவி சோழ சாம்ராஜ்யத்தில் அனைவருடைய பயபக்தி மரியாதைக்கும் உரியவராயிருந்தவர். முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயரும் அதற்கு விலக்கானவர் அல்ல. ஆனாலும், அம்மூதாட்டி இச்சமயம் ஏதோ ஒருவித பயத்துடனேயே நடந்து கொண்டார். அநிருத்தர் ஆசனத்தில் அமர்ந்த பிறகே தாம் அமர்ந்தார்.

     “ஐயா! சில காலமாக என் தலையில் இடிமேல் இடியாக விழுந்து கொண்டிருக்கிறது. நீரும் அத்தகைய செய்தி ஏதேனும் கொண்டு வந்தீரா? அல்லது ஆறுதலான வார்த்தை சொல்லப் போகிறீரா?” என்று வினவினார்.

     “அம்மணி! மன்னியுங்கள்! தங்கள் கேள்விக்கு என்னால் விடை சொல்ல முடியவில்லை. நான் கொண்டு வந்திருக்கும் செய்தியைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தைப் பொறுத்திருக்கிறது!” என்றார் தந்திரத்திலே தேர்ந்த மாதிரி.

     “பொன்னியின் செல்வனைப் பற்றிய செய்தி உண்மைதானா, ஐயா! என்னால் நம்பவே முடியவில்லையே? அருள் மொழிவர்மனைப் பற்றி நாம் என்னவெல்லாம் நம்பிக் கொண்டிருந்தோம்? இந்த உலகத்தையே ஒரு குடை நிழலில் ஆளப்பிறந்தவன் என்று நாம் எத்தனை தடவை பேசியிருக்கிறோம்?…”

     “பெருமாட்டி! ஜோசியர்கள் அவ்விதம் சொல்வதாகத் தாங்கள் என்னிடம் கூறியது உண்மைதான். அடியேன் தங்களை மறுத்தும் பேசியதில்லை; ஒத்துக்கொண்டும் பேசியதில்லை!”

     “அது போகட்டும்; இப்போது சொல்லுங்கள். பொன்னியின் செல்வனைச் சமுத்திர ராஜன் கொள்ளை கொண்டு விட்டது நிச்சயந்தானா?”

     “நிச்சயம் என்று யார் சொல்ல முடியும், தாயே! அம்மாதிரி செய்தி நாடு நகரமெங்கும் பரவியிருப்பது நிச்சயம்.”

     “அது உண்மை என்று ஏற்பட்டால், இந்தச் சோழ நாட்டின் கதி என்ன? எத்தகைய விபரீதங்கள் ஏற்படும்?”

     “விபரீதங்கள் அது உண்மை என்று ஏற்படும் வரையில் காத்திருக்கப் போவதில்லையென்று தோன்றுகிறது…”

     “ஆம், ஆம்! விபரீதம் நேரிடுவதற்கு வதந்தியே போதுமானதுதான். இந்தப் பழையாறை நகரமக்கள் இவ்வளவு ஆத்திரங்கொண்டு திரளாக அரண்மனைக்குள் பிரவேசித்ததை இதுவரையில் நான் பார்த்ததில்லை….”

     “பழையாறையில் மட்டுந்தான் இப்படி நடந்ததென்று கருத வேண்டாம்; தஞ்சாவூர் நகரம் நேற்று முதல் அல்லோலகல்லோலமாயிருக்கிறது. வேளக்காரப் படையினர் சக்கரவர்த்தியின் அரண்மனையைவிட்டு நகர மறுத்துவிட்டார்கள். மக்கள் கோட்டைக்குள் திரள் திரளாகப் புகுந்து பழுவேட்டரையர்களின் மாளிகைகளைச் சூழ்ந்து கொண்டார்கள். மதங் கொண்ட யானைகளை ஜனங்கள் பேரில் ஏவி விட்டு அவர்களைக் கலைந்து போகும்படி செய்ய வேண்டியதாயிற்று…”

     “ஐயோ! இது என்ன விபரீதம்! எத்தகைய பயங்கரமான செய்தி!”

     “மதுராந்தகர் பழையாறைக்கு வந்துவிட்டதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிடில் அந்தப் பயங்கரமான பழி அவரையும் சேர்ந்திருக்கும்…”

     “ஐயா! மதுராந்தகன் எப்படி மாறிப் போயிருக்கிறான் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.”

     “ஆச்சரியப்பட மாட்டேன், தாயே! அவை எல்லாம் எனக்குச் சில காலமாகத் தெரிந்த விஷயந்தான்.”

     “தெரிந்திருந்தும் அவனுடைய மனத்தை மாற்றத் தாங்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லை. இப்போதாவது யோசனை சொல்லி உதவுங்கள்.”

     “அம்மா! மதுராந்தகருடைய மனத்தை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருடைய கட்சியை ஆதரித்துப் பேசவே நான் வந்திருக்கிறேன்….”

     “அப்படியென்றால்? எனக்கு விளங்கவில்லை, ஐயா!”

     “அம்மணி! மதுராந்தகர் இந்தச் சோழ சிங்காதனம் தமக்கு உரியது என்று கருதுகிறார். சக்கரவர்த்திக்குப் பிறகு தாம் இந்த இராஜ்யத்தை ஆளவேண்டுமென்று ஆசைப்படுகிறார். அது நியாயமான ஆசை, நன்றாக அவர் மனத்தில் வேரூன்றி விட்ட ஆசை. அதைத் தடுக்க முயல்வதினால் சோழ ராஜ்யத்துக்கு நன்மை ஏற்படாது. அதை நிறைவேற்றி வைப்பதுதான் உசிதம்…”

     “ஐயோ! இது என்ன வார்த்தை? தாங்கள் கூடவா சோழ சக்கரவர்த்திக்குத் துரோகம் செய்யத் துணிந்துவிட்டீர்கள்? இது என்ன விபரீத காலம்?”

     “பெருமாட்டி! சக்கரவர்த்திக்குத் துரோகம் செய்ய நான் கனவிலும் கருதியதில்லை. சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரிலேயே வந்தேன். அவர் தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ளச் சொன்னதைத்தான் சொல்கிறேன், சக்கரவர்த்தியின் காலத்துக்குப் பிறகு மதுராந்தகர் சிங்காதனம் ஏற விரும்புகிறார். பழுவேட்டரையர்கள் அதற்காகச் சதி செய்கிறார்கள். ஆனால் சக்கரவர்த்தி இப்போது மதுராந்தகருக்கு முடிசூட்டி விட்டுச் சிங்காசனத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறார். இதற்குத் தங்கள் சம்மதத்தைப் பெற்று வரும்படி என்னை அனுப்பியிருக்கிறார்…”

     “சக்கரவர்த்தி அவ்விதம் செய்ய விரும்பலாம். ஆனால் அதற்கு என்னுடைய சம்மதம் ஒருநாளும் கிட்டாது. என் பதியின் விருப்பத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கல்விக் கடலின் கரை கண்ட முதல் அமைச்சரே! சக்கரவர்த்தியே சொன்னாலும் தாங்கள் இந்த முறைதவறான காரியத்தை என்னிடம் சொல்ல எப்படி வந்தீர்? சோழ சிங்காசன உரிமையைப் பற்றித் தங்களுக்கும் எனக்கும் மட்டும் தெரிந்த சில உண்மைகள் இருக்கின்றனவென்பதைத் தாங்கள் அடியோடு மறந்துவிட்டீர்களா…?”

     “அம்மணி! நான் எதையும் மறக்கவில்லை. தங்களுக்குத் தெரியாத சில உண்மைகளும் எனக்குத் தெரியும். ஆகையினாலேயே சக்கரவர்த்தியின் தூதனாகத் தங்களிடம் வந்தேன்…”

     “ஐயா! தங்களுடைய மதி நுட்பமும், இராஜ தந்திரமும் உலகம் அறிந்தவை. அவற்றைப் பெண்பாலாகிய என்னிடம் காட்ட வேண்டாம்…”

     “பெருமாட்டி! தங்களிடம் நான் வாதாட வரவில்லை. என் சாமார்த்தியத்தைக் காட்டுவதற்கும் வரவில்லை. இந்தச் சோழநாட்டைப் பேரபாயத்திலிருந்து காப்பாற்றி அருளும்படி மன்றாடிப் பிரார்த்தனை செய்ய வந்தேன்.”

     “தங்கள் பிரார்த்தனையைப் பிறைசூடும் பெருமானிடம் செலுத்திக் கொள்ளுங்கள், அல்லது தங்கள் இஷ்ட தெய்வமான விஷ்ணு மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்…”

     “ஆம், தாயே! தாங்கள் பெரிய மனது செய்யாமற் போனால் அம்பலத்தானும், அரங்கத்தானும்தான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.”

     “அப்படி என்ன ஆபத்து, இந்த நாட்டுக்கு வந்துவிட்டது? மதுராந்தகன் சிங்காதனம் ஏறுவதால் அதை எப்படித் தடுக்க முடியும்?”

     “கேளுங்கள், பெருமாட்டி! இன்றைக்கு இந்நகர மாந்தர் கொதித்தெழுந்தது போல், காஞ்சிபுரத்திலிருந்து இராமேசுவரம் வரை உள்ள மக்கள் இன்னும் இரண்டு மூன்று நாளைக்குள் ஆத்திரமடைந்து கொதித்தெழுவார்கள். அத்துடன் முடிந்து விடாது, இலங்கையிலிருந்து பூதிவிக்கிரமகேசரி ஏற்கனவே, படை திரட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார் என்று அறிகிறேன். ஆதித்த கரிகாலனுக்குச் செய்தி எட்டும்போது அவனும் பொறுக்கமாட்டான். வடதிசைச் சைன்யத்துடன் தஞ்சையை நோக்கிக் கிளம்புவான். பழுவேட்டரையர்களும், மற்ற சிற்றரசர்களும் ஏற்கெனவே படை திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த யுத்தத்தைப் போன்ற பயங்கரமான தாயாதிச் சண்டை இந்த நாட்டில் நடைபெறும். தங்களுடைய உற்றார் உறவினர் எல்லாரும் அழிந்து விடுவார்கள். இதையெல்லாம் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா…?”

     “ஐயா! மதிநுட்பம் மிகுந்த முதல் மந்திரியே! எனக்கு உற்றார் உறவினர் என்று யாரும் இல்லை. மேற்கே மலை நாட்டில் அவதரித்த சங்கரர் என்ற மகாபுருஷனைப் பற்றித் தாங்கள் கேள்விப்பட்டிருப்பீர். அந்த மகான்,

     ‘மாதாச பார்வதி தேவி
     பிதா தேவோ மகேச்வர
     பாந்தவா: சிவபக்தாஸ்ச’
என்று அருளியிருக்கிறார். என்னுடைய அன்னை பார்வதி தேவி. என்தந்தை பரமசிவன்; என் உற்றார் உறவினர் சிவ பக்தர்கள், இந்த உலகில் வேறு பந்துக்கள் எனக்கு இல்லை…”

     “அம்மணி! அதே சுலோகத்தில் சங்கரர் அருளியுள்ள நாலாவது வாக்கியத்தைத் தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

     ‘ஸ்வதேசோ புவனத்ரய’
என்றும் அவர்தான் சொல்லியிருக்கிறார். நாம் பிறந்த தேசந்தான் நமக்கு மூன்று உலகமும், தங்களுடைய சொந்த நாடு உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதைத் தாங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்களா?”

     “என்னுடைய சொந்த தேசம் எனக்கு மூன்று உலகத்தையும் விட அருமையானதுதான். ஆனால் இந்தச் சாண் அகலத்துச் சோழநாடுதான் நம்முடைய சொந்த நாடா? ஒரு நாளுமில்லை. வடக்கே கைலையங்கிரி வரையில் உள்ள நாடு என்னுடைய நாடு. சோழ நாட்டில் இடமில்லாவிட்டால் நான் காசி க்ஷேத்திரத்துக்குப் போவேன்; காஷ்மீரத்துக்கும் கைலாசத்துக்கும் போவேன். அப்படி யாத்திரை கிளம்பும் யோசனை எனக்கு வெகு நாளாக உண்டு, அதற்கு உதவி செய்யுங்கள்…”

     “தாயே! தெற்கே திரிகோண மலையிலிருந்து வடக்கே இமோத்கிரி வரையில் உள்ள தேசம் நமது ஸ்வதேசம் என்று ஒத்துக்கொள்கிறேன். இப்படிப் பரந்துள்ள பாரத புண்ணிய பூமிக்குத் தற்போது பேரபாயம் நேர்ந்திருக்கிறது. பட்டாணியர்கள், துருக்கர்கள், மொகலாயர்கள், அராபியர்கள் என்னும் சாதியினர் பொங்கிக் கிளம்பி எந்தப் புது நாட்டைக் கைப்பற்றலாம் என்று புறப்பட்டிருக்கிறார்கள். ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு யவனர்களும், ஹுணர்களும் படையெடுத்து வந்ததுபோல் இந்தப் புதிய மதத்தினர் இப்போது அணிஅணியாக இந்நாட்டின் மீது படையெடுக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடைய மதம் விசித்திரமான மதம். கோவில்களை இடிப்பதும் விக்கிரகங்களை உடைப்பதும் புண்ணியம் என்று நம்புகிறவர்கள். அம்மணி! இவர்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய பேரரசர்கள் யாரும் இப்போது வடநாட்டில் இல்லை. சோழநாட்டு வீரர்கள் கங்கை நதி வரையில், அப்பால் இமயமலை வரையில் சென்று பெரிய பாரத சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கப் போகிறார்கள் என்றும், கோயில்களை இடிக்கும் கூட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போகிறார்கள் என்றும், அடியேன் கனவு கண்டு வந்தேன். அந்தக் கனவை நனவாக்கத் தாங்கள் உதவி செய்யுங்கள். மதுராந்தகருக்குப் பட்டம் கட்டச் சம்மதித்துச் சோழநாட்டில் தாயாதிச் சண்டை ஏற்படாமலிருக்க உதவி புரியுங்கள்!”

     இதைக்கேட்ட செம்பியன் மாதேவி சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர், “ஐயா! ஏதேதோ இந்தப் பேதைப் பெண்ணுக்கு விளங்காத விஷயங்களைச் சொல்லி என்னைக் கலங்க அடித்து விட்டீர்கள். இந்தப் புண்ணிய பாரத பூமிக்கு அப்படிப்பட்ட ஆபத்து நேரிடுவதாயிருந்தால், அதை சர்வேசுவரன் பார்த்துத் தடுக்க வேண்டுமே தவிர, இந்த அபலையினால் என்ன செய்ய முடியும்? என்னுடைய கணவர் இறைவனடியைச் சேரும் சமயத்தில் எனக்குச் சொல்லிவிட்டுப் போனதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன். அதற்கு விரோதமான காரியம் எதுவும் நான் செய்ய மாட்டேன்!” என்றார்.

     “அப்படியானால் இதுவரையில் தாங்கள் அறியாத ஓர் உண்மையை இப்போது நான் தெரியப்படுத்தியாக வேண்டும்!” என்றார் அநிருத்தர்.

     இச்சமயத்தில் மதுராந்தகன் அங்கே தடபுடலாகப் பிரவேசித்து, “அம்மா! இது என்ன நான் கேள்விப்படுவது? அருள்மொழிவர்மனைக் கடல் கொண்டு விட்டதா?” என்று கேட்டான்.

     “பெருமாட்டி! தங்கள் செல்வக் குமாரருக்கு ஆறுதல் சொல்லுங்கள். நான் சொல்ல விரும்பியதை இன்னொரு சமயம் சொல்லிக் கொள்கிறேன்” என்று முதன் மந்திரி கூறி விட்டுக் கிளம்பினார்.

     அவர் வாசற்படி தாண்டியதும், “இதோ போகிறாரே, இவர்தான் என்னுடைய முதன்மையான சத்துரு. நான் இங்கிருக்கும் போதே தங்களுக்குத் துர்போதனை செய்ய வந்துவிட்டார் அல்லவா?” என்று இளவரசர் மதுராந்தகன் கூறியது அநிருத்தரின் காதிலும் விழுந்தது.

27. குந்தவையின் திகைப்பு


     முதன் மந்திரி அநிருத்தர் குந்தவையின் அரண்மனையை அடைந்தார். இளவரசி அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று நமஸ்கரித்தாள்.

     “வீரத்திலும் குணத்திலும் சிறந்த கணவனை அடைந்து நீடுழி வாழ்வாயாக!” என்று முதன் மந்திரி அநிருத்தர் ஆசீர்வதித்தார்.

     “ஐயா! இந்தச் சமயத்தில் இத்தகைய ஆசீர்வாதத்தைத் தானா செய்வது?” என்றாள் இளவரசர்.

     “ஏதோ இக்கிழவனுக்குத் தெரிந்த ஆசியைக் கூறினேன். வேறு எந்த ஆசியைக் கோருகிறாய், அம்மா?”

     “என் அருமைத் தந்தையின் உடல் நிலையைப்பற்றி எல்லாரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அருள்மொழிவர்மரைப் பற்றி நாடெல்லாம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது…”

     “ஆனால் உன்னுடைய திரு முகத்தில் அதைப்பற்றிய கவலை எதையும் நான் காணவில்லையே, தாயே!”

     “வீரமறக் குலத்தில் பிறந்தவள் நான். எல்லோரையும் போல் அபாயம் என்றதும் அழுதுகொண்டிருக்கச் சொல்கிறீர்களா?…”

     “ஒரு நாளும் அவ்விதம் சொல்லமாட்டேன். என்னைப் போன்ற வீரமற்ற ஜனங்களுக்கு இளவரசி ஆறுதல் கூறும்படி தான் சொல்லுகிறேன்.”

     “ஆச்சாரியரே! தங்களுக்கா நான் ஆறுதல் கூறவேண்டும்? உலகமே புரண்டாலும், நிலை கலங்காத வயிர நெஞ்சம் படைத்தவராயிற்றே தாங்கள்!”

     “அப்படிப்பட்ட என்னையும் கலக்கி விடுகிறாய், அம்மா! அந்தப்புரத்துப் பெண்கள் ஆடல் பாடல்களில் ஆனந்தமாகக் காலங்கழித்து வரவேண்டும் அதைவிட்டு இராஜாங்க விஷயங்களில் நீ தலையிட்டதனால் எத்தகைய விபரீதம் நேர்ந்தது பார்த்தாயா!”

     “ஐயோ! இது என்ன பழி? நான் எந்த இராஜாங்க விஷயத்தில் தலையிட்டேன்? என்னால் என்ன விபரீதம் நடந்தது?”

     “இன்னும் சில காலத்துக்குப் பொன்னியின் செல்வன் இலங்கையிலேயே இருக்கவேண்டும் என்று நான் சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு விரோதமாக நீ உடனே புறப்பட்டு வரும்படி உன் தம்பிக்கு ஓலை அனுப்பினாய். உன் விருப்பத்துக்கு மாறாக இந்தக் கிழவன் பேச்சை யார் மதிப்பார்கள்? அதனால் நேர்ந்துவிட்ட விபத்தைப் பார்த்தாயா? சோழநாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் கடல் கொண்டு விட்டது. சற்றுமுன் இந்த அரண்மனை வாசலில் ஜனத்திரள் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததைப் பார்த்தாய். இம்மாதிரி நாடெங்கும் இன்று குழப்பம் நடந்து வருகிறது. இந்த அல்லோலகல்லோலத்துக்குக் காரணம் நீயல்லவா தாயே!”

     “என்னுடைய ஓலையைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மன் இலங்கையிலிருந்து புறப்பட்டான் என்று ஏன் சொல்கிறீர்கள்? பழுவேட்டரையர் இரண்டு கப்பல் நிறைய வீரர்களை அனுப்பி இளவரசனைச் சிறைப் பிடித்துக்கொண்டு வரச்செய்தது உமக்குத் தெரியாதா?”

     “தெரியும் அம்மா! தெரியும்! அத்துடனிருந்தால், இப்பொழுது பொன்னியின் செல்வனுக்கு நேர்ந்துவிட்ட கதிக்குப் பழுவேட்டரையர்களைப் பொறுப்பாளிகளாக்கலாம். அவர்கள் அனுப்பிய கப்பல்கள் இரண்டும் நாசமாகிவிட்டன. உன்னுடைய ஓலைக்காகத்தான் இளவரசன் புறப்பட்டான் என்று அவர்கள் சொன்னால், யார் அதை மறுக்க முடியும்?”

     “ஐயா! நான் ஓலை அனுப்பியது தங்களுக்கு எப்படித் தெரியும்? பழுவேட்டரையர்களுக்கு எப்படித் தெரியும்?”

     “நல்ல கேள்வி கேட்டாய், அம்மா! எங்களுக்கு மட்டுந்தானா தெரியும்? உலகத்துக்கெல்லாம் தெரியும். நீ அனுப்பிய தூதன் இலங்கையில் முதலில் நம் வீரர்களால் சிறைப்படுத்தப்பட்டான். அதனால் இலங்கையில் உள்ளவர்களுக்கெல்லாம் தெரியும். அவனோடு கோடிக்கரை வரை சென்ற வைத்தியர் மகன் மூலமாக இந்த நாட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் தெரியும். நீ அந்தரங்கமாகச் செய்த காரியம் இவ்வளவு தூரம் அம்பலமாகியிருக்கிறது! ஆகையினாலேதான் ஸ்திரீகள் இராஜாங்கக் காரியங்களில் தலையிடக் கூடாது என்று நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.”

     குந்தவை சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றாள். மறுமொழி என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. முதன்மந்திரி நன்றாகத் தன்னை மடக்கிவிட்டார். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் இருக்கிறது. இந்த எண்ணம் தோன்றியதும் வாணர்குல வீரன் மீது அவளுக்குக் கோபம் எழுந்தது. வீர சாகஸச் செயல்கள் அவன் செய்யக்கூடியவன்தான். ஆனால் காரியத்தைப் பகிரங்கப்படுத்திக் கெடுத்து விட்டானே? அவனைப் பார்த்து நன்றாகக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு எண்ணியதும் முதல் மந்திரியின் கட்டளையின்படி அவன் சிறைப்படுத்தப்பட்டது நினைவு வந்தது. என்னவெல்லாம் தொந்தரவுக்கு ஆளாகிக் கொண்டு எனக்கும் தொந்தரவு அளிக்கிறான்! சற்றுநேரம் சும்மா இருந்திருக்கக் கூடாதா? வைத்தியர் மகன் ஏதாவது உளறினால் அதற்காக அவர் பேரில் மேல் மாடத்திலிருந்து பாய்ந்து சண்டை துவக்கியிருக்க வேண்டுமா?

     “ஐயா! ஒரு கோரிக்கை செய்து கொள்கிறேன். பெரிய மனது செய்து நிறைவேற்றித் தரவேண்டும்.”

     “தேவி! கட்டளை இடு! இந்த இராஜ்யத்தில் உன்னுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?”

     “தாங்கள் அரண்மனை வாசலுக்கு வரும் சமயத்தில் இரண்டு பேர்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சிறைப்படுத்தத் தாங்கள் கட்டளையிட்டீர்கள்.”

     “அவர்கள் செய்தது பெருங்குற்றம். அரண்மனையில் மகாராணியின் கண் முன்னால் அவர்கள் சண்டை தொடங்கியது பெரும் பிசகு! அதுவும் எப்பேர்ப்பட்ட சமயத்தில்? பெரும் ஜனக்கூட்டம் கொதிப்புடனிருந்த நேரத்தில்! காரணம் தெரியாத ஜனங்கள் தாங்களும் சண்டையில் கலந்து கொண்டிருந்தால் எத்தகைய விபத்து நேர்ந்திருக்கும்? சிறு நெருப்புப்பொறி பெருங்காட்டையே அழிப்பது போல் நாடு நகரமெல்லாம் கலகமும் குழப்பமும் விளைந்திருக்குமே!”

     “ஆம், ஐயா! அவர்கள் செய்தது பெரும் குற்றம்தான். ஆயினும் அவர்களில் ஒருவனை மன்னித்து விடுதலை செய்யும்படி தங்களை மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்.”

     “இளவரசியின் அருளுக்குப்பாத்திரமான அந்தப் பாக்கியசாலி யார்?”

     “நான் இலங்கைத் தீவுக்கு அனுப்பிய தூதன் அவன்தான்.”

     “பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று!”

     “எதனால் இவ்வாறு சொல்கிறீர்கள்?”

     “அந்தத் தூதனை நானே சிறைப் படுத்த வேண்டும் என்றிருந்தேன். இங்கே அவனாகவே எளிதில் அகப்பட்டுக் கொண்டான்.”

     “எதற்காக? என்ன குற்றத்திற்காக?”

     “தாயே! அவன் பேரில் பயங்கரமான குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.”

     “அது என்ன?”

     “பொன்னியின் செல்வனை அவன்தான் கடலில் தள்ளி மூழ்கடித்து விட்டான் என்று.”

     “என்ன நாராசமான வார்த்தைகள்! அப்படிக் குற்றம்சாட்டுவது யார்?”

     “பலரும் அவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள். இளவரசரைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்த பார்த்திபேந்திரன் சொல்கிறான்; பழுவேட்டரையர்கள் ‘இருக்கலாம்’ என்கிறார்கள். நானும் சந்தேகிக்கிறேன்.”

     “ஆச்சாரியரே! ஜாக்கிரதை! நான் ஒரு கொலைகாரனைப் பிடித்து அனுப்பி என் தம்பியைக்கொன்று விட்டு வரச் சொன்னதாகவா சந்தேகிக்கிறீர்!”

     “ஒரு நாளும் இல்லை, தாயே! அவனை உனது நம்பிக்கைக்குரிய தூதன் என்று நினைத்துக்கொண்டு நீ அனுப்பினாய். அது தவறாயிருக்கலாம் அல்லவா? அவன் மாற்றார்களின் ஒற்றனாயிருக்கலாம் அல்லவா?”

     “இல்லவே இல்லை, ஆதித்த கரிகாலன் அவனை என்னுடைய உதவிக்கு அனுப்பினான். அவனைப் பூரணமாக நம்பலாம் என்று எழுதி அனுப்பினான்…”

     “ஆதித்த கரிகாலனும் ஏமாந்திருக்கலாம் அல்லவா இளவரசி? வழியில் அவன் மாற்றப்பட்டும் இருக்கலாம் அல்லவா? நான் இங்கே வரும்போது ‘ஒற்றன்’ என்ற குற்றச்சாட்டு என் காதில் விழுந்தது. மேலே இருந்தவனைப் பார்த்துக் கீழே நின்றவன் குற்றம் சாட்டினான். அது என்ன, அம்மா?”

     “மேலே நின்றவன்தான் என் தமையன் அனுப்பிய தூதன். வாணர் குலத்தில் வந்த வல்லவரையன் வந்தியத்தேவன். கீழே நின்றவர் வைத்தியர் மகன் பினாகபாணி. வந்தியத்தேவனைப் பழுவேட்டரையர்களின் ஒற்றன் என்று வைத்தியர் மகன் குற்றம் சாட்டினான், என்ன அறிவீனம்?”

     “ஏன் இருக்கக் கூடாது, தாயே!”

     “ஒருநாளும் இருக்கமுடியாது, பழுவேட்டரையர் காவலிலிருந்து அவன் தப்பி வந்தவன். அவனைத் திரும்பக் கைப்பற்றப் பழுவேட்டரையர்கள் எத்தனையோ ஆட்களை அனுப்பிப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள்…”

     “அவனிடம் பழுவூர் முத்திரை மோதிரம் எவ்விதம் வந்தது தாயே?”

     “அந்த வஞ்சக அரக்கி, – மாயமோகினி – விஷ நாகம் – தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள், – பழுவூர் இளையராணி கொடுத்துத்தான் அவனுக்கு அம்மோதிரம் கிடைத்தது.”

     “அது உனக்குத் தெரிந்திருப்பது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். நான் சொன்னால் நீ நம்பியிருக்கமாட்டாய். அந்த வல்லத்து வீரன் பழுவேட்டரையர்களின் ஒற்றன் அல்ல என்பது சரி. ஆனால் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருக்கலாம் அல்லவா!”

     “அது எப்படி முடியும்?”

     “எப்படி முடியும் என்று சொல்கிறேன். வந்தியத்தேவன், – நீ இலங்கைக்கு அனுப்பிய அந்தரங்கத்தூதன், – தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் பழுவூர் ராணியைப் பல்லக்கில் சந்தித்தான். அப்போது முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொண்டான். பிறகு, கோட்டைக்குள் பழுவூர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அவளைச் சந்தித்தான். அவனைப் பழுவூர் இளைய ராணி பொக்கிஷ நிலவறையில் ஒளித்து வைத்திருந்து வெளியே அனுப்பினாள். உன்னிடம் ஓலை கொண்டு வரப் போகிறான் என்று அவளுக்குத் தெரியும். இலங்கையிலிருந்து அவன் திரும்பி வரும்போது அரிச்சந்திர நதிக்கரையில் பாழடைந்த பாண்டியன் அரண்மனையில் நள்ளிரவில் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அதற்குப் பிறகும் பழுவூர் முத்திரை மோதிரம் வந்தியத்தேவனிடம் இருக்கிறது. இதையெல்லாம் பற்றி நீ என்ன நினைக்கிறாய், அம்மா! உன் தூதனிடம் இன்னமும் பரிபூரண நம்பிக்கை வைத்திருக்கிறாயா?”

     குந்தவையின் உள்ளம் இப்போது உண்மையாகவே குழப்பத்தில் ஆழ்ந்தது.

28. ஒற்றனுக்கு ஒற்றன்


     மௌனமாயிருந்த அரசிளங் குமரியைப் பார்த்து முதன் மந்திரி அநிருத்தர், “தாயே! ஏன் பேசாமலிருக்கிறாய்? வந்தியத்தேவனை இன்னமும் நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.

     “ஐயா! அமைச்சர் திலகமே! நான் என்ன சொல்லட்டும்? இன்னும் சற்று நேரம் தாங்கள் பேசிக் கொண்டே போனால் என்னை நானே சந்தேகிக்கும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்றாள் இளவரசி.

     “காலம் அப்படி இருக்கிறது, அம்மா! யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று தீர்மானிப்பது இந்த நாளில் அவ்வளவு சுலபமில்லைதான். நாலாபுறமும் அவ்வளவு விரோதிகள் சூழ்ந்திருக்கிறார்கள்; அவ்வளவு மர்மமான சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன!” என்றார் முதன் மந்திரி அநிருத்தர்.

     “ஆனாலும் தங்களுக்குத் தெரியாத மர்மமும், தாங்கள் அறியாத சூழ்ச்சியும் இராது என்று தோன்றுகிறது. நான் அனுப்பிய தூதனைப் பற்றி அவ்வளவு விவரங்களையும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டாள் குந்தவை தேவி.

     “அம்மணி! நான் ஆயிரம் கண்களும், இரண்டாயிரம் செவிகளும் படைத்தவன். நாடெங்கும் அவை பரவியிருக்கின்றன. பழுவூர் அரண்மனையில் என் ஆட்கள் இருக்கிறார்கள். பழுவூர் இளையராணியின் மெய்க்காவலர்களிலே எனக்குச் செய்தி அனுப்புகிறவன் ஒருவன் இருக்கிறான். ஆழ்வார்க்கடியானைப் போல் ஊர் ஊராக அலைந்து திரிந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றுப்புற நாடுகளிலோ நான் அறியாமல் எந்தக் காரியமும் நடைபெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆயினும், யார் கண்டது? என்னையும் ஏமாற்றக் கூடியவர்கள் இருக்கலாம். நான் அறியாத மர்மங்களும் நடைபெறலாம்!”

     இவ்வாறு முதல் மந்திரி சொன்னபோது, பொன்னியின் செல்வன் இப்போது சூடாமணி விஹாரத்தில் இருப்பதும் இந்தப் பொல்லாத மனிதருக்குத் தெரியுமோ என்ற எண்ணம் குந்தவைக்கு உண்டாயிற்று. அதை அவள் வெளியிடாமல் மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள்.

     “ஐயா! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம்; ஆனால் அந்த வாணர் குல வீரன் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருப்பான் என்று மட்டும் என்னால் நம்பமுடியவில்லை. அவனைத் தயவு செய்து விடுதலை செய்து விடுங்கள்!” என்றாள்.

     “நன்றாக யோசித்துப் பார், அம்மா! அந்தப் பெண் நந்தினியிடம் மாயமந்திர சக்தி ஏதோ இருக்கிறது! சிவபக்தன் மதுராந்தகன் அவளுடைய வலையில் விழுந்து இராஜ்யத்தில் ஆசை கொண்டான். சம்புவரையரின் மகன் கந்தமாறன் அவளுடைய ஓலையை எடுத்துக்கொண்டு ஆதித்த கரிகாலனிடம் போயிருக்கிறான். பழுவேட்டரையர்களின் பரம விரோதியாயிருந்த பார்த்திபேந்திரன் இன்று பழுவூர் ராணியின் அடிமையாகி விட்டான். சோழ இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கு ஒரு பகுதியும், ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பகுதியும் கொடுத்து ராஜி செய்து வைக்கவும் அவன் முன் வந்திருக்கிறான்…”

     “இது என்ன அக்கிரமம்! இராஜ்யத்தை இரண்டாகப் பிரிக்கவாவது? எங்கள் குலத்து முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்துப் பெரிதாக்கிய மகா இராஜ்யம் இது!”

     “இராஜ்யத்தைப் பிரிப்பதை நீ விரும்பமாட்டாய்; நானும் விரும்பவில்லை, தாயே! பத்து நாட்களுக்கு முன் இந்த யோசனையைச் சொல்லியிருந்தால் பார்த்திபேந்திரனும் பொங்கி எழுந்திருந்திருப்பான். இப்போது அவனே இந்த ஏற்பாட்டுக்கு முதன்மையாக நிற்கிறான்…”

     “இது என்ன விந்தை! அந்த பழுவூர் ராணியிடம் அப்படிப்பட்ட மாய சக்தி என்னதான் இருக்கும்?”

     “இளவரசி! அதை நான் உன்னிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். நீ என்னைக் கேட்கிறாய். போகட்டும்; வந்தியத்தேவன் மட்டும் அவளுடைய மாய சக்திக்கு உட்படமாட்டான் என்று எதனால் நீ அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?”

     “ஐயா! காரணங் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. மனதுக்கு மனதே சாட்சி என்பார்கள். வாணர்குல வீரன் அத்தகைய துரோகம் செய்ய மாட்டான் என்று என் மனத்தில் ஏனோ நிச்சயமாகத் தோன்றுகிறது.”

     “அப்படியானால், அதை பரீட்சித்துப் பார்த்துவிடலாம், அம்மா!”

     “அப்படி என்ன பரீட்சை?”

     “காஞ்சிக்கு ஒரு தூதனை நாம் உடனே அனுப்பியாக வேண்டும். ஆதித்த கரிகாலனுக்கு மிக நம்பிக்கையான ஆளிடம் அவசரமாக ஓலை கொடுத்து அனுப்ப வேண்டும்.”

     “என்ன விஷயம் பற்றி?”

     “சற்று முன்னால், நந்தினியை விஷநாகம் என்று நீ சொல்லிவிட்டு அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாய். உண்மையில் விஷநாகத்தைவிட அவள் பன்மடங்கு கொடியவள். இந்தச் சோழ குலத்தை அடியோடு நாசம் செய்து பூண்டோ டு ஒழித்து விட அவள் திட்டமிட்டிருக்கிறாள்.”

     “கடவுளே! என்ன பயங்கரம்!” என்று குந்தவை கூறியபோது அவளுடைய உள்ளக் கடல் பற்பல எண்ண அலைகளினால் கொந்தளித்தது.

     “உன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைக்கும்படி அவள் சம்புவரையரைத் தூண்டியிருக்கிறாள். சம்புவரையர் மகள் ஒருத்தியையும், பழுவேட்டரையர் குமாரி ஒருத்தியையும் கரிகாலனுக்கு மணம் செய்விப்பது பற்றிப் பேசிவருகிறாள். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து ராஜிசெய்விக்கும் விஷயத்தையும் அங்கே முடிவு செய்யப் போகிறாளாம். இவையெல்லாம் வெளிப்படையான பேச்சு. ஆனால் அவளுடைய அந்தரங்கத்தில் என்ன நோக்கம் வைத்திருக்கிறாளோ அது யாருக்கும் தெரியாது. எல்லாம் அறிந்தவன் என்று கர்வம் கொண்டிருக்கும் என்னால்கூட அவள் நோக்கத்தை அறிய முடியவில்லை.”

     “அதைப்பற்றி நாம் என்ன செய்யவேண்டும், ஐயா?”

     “ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் போகாமல் எப்படியாவது தடை செய்யவேண்டும். அதற்குத்தான் நீயும் நானும் ஓலை கொடுத்து வந்தியத்தேவனிடம் அனுப்ப வேண்டும். நம்முடைய விருப்பத்தை மீறிக் கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்படும் பட்சத்தில் வந்தியத்தேவனும் அவனுடன் போக வேண்டும். உடம்பைப் பிரியாத நிழலைப் போல் அவன் உன் தமையனைத் தொடர்ந்து காவல் புரிய வேண்டும். நந்தினியைத் தனியாகச் சந்திப்பதற்குக்கூட அவன் இடந்தரக் கூடாது…”

     குந்தவை பெருமூச்சுவிட்டாள்; முதன் மந்திரி கூறுவது எவ்வளவு முக்கியமான காரியம் என்பதை அவள் உணர்ந்தாள். எல்லா விவரங்களும் அறிந்து அவர் சொல்கிறாரா, அல்லது இராஜாங்க நோக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு சொல்கிறாரா என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

     “ஐயா! அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பது அவ்வளவு முக்கியமான காரியம் என்று ஏன் கருதுகிறீர்கள்!” என்று கேட்டாள்.

     “அம்மணி! வீரபாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் சோழகுலத்தைப் பூண்டோ டு அழிக்கச் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய பழுவேட்டரையருடைய பொக்கிஷத்திலிருந்து புதிய தங்கக்காசுகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதைக் காட்டிலும் இன்னும் ஏதேனும் நான் இதைப்பற்றிச் சொல்ல வேண்டுமா?”

     “வேண்டாம்” என்று முணுமுணுத்தாள் குந்தவை. சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் படுத்திருக்கும் இளவரசனின் நினைவு அவளுக்கு வந்தது. பொன்னியின் செல்வனையும் அபாயங்கள் சூழ்ந்திருக்கலாம் அல்லவா?

     “ஐயா! சோழநாட்டுக்கு விபத்துக்கு மேல் விபத்தாக வந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் முதன் மந்திரியாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான்! என் தம்பியின் விஷயமாக என்ன ஏற்பாடு செய்தீர்கள்?” என்று கேட்டாள்.

     “சோழ நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களிலும், விஷ்ணு, ஆலயங்களிலும் இளவரசருடைய சுகக்ஷேமத்தைக் கோரிப் பிரார்த்தனை செய்து அர்ச்சனை அபிஷேகம் நடத்தச் சொல்லியிருக்கிறேன். அப்படியே புத்த விஹாரங்களிலும், சமணப் பள்ளிகளிலும் பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நாகைப் பட்டினம் சூடாமணி விஹாரத்தில் புத்த பிக்ஷுக்கள் ஒரு மண்டலம் விசேஷப் பிரார்த்தனை நடத்தப் போகிறார்கள். வேறு என்ன செய்யலாம் என்று நீ சொல்கிறாய்?”

     சூடாமணி விஹாரத்தைப் பற்றிச் சொல்லும் போது முதன் மந்திரியின் முகத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்று குந்தவை கவனித்தாள், ஒன்றுமே தெரியவில்லை.

     “ஐயா! சூடாமணி விஹாரம் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. சூடாமணி விஹாரத்தின்மீது பெரிய பழுவேட்டரையர் ஏதோ கோபம் கொண்டிருக்கிறாராம். இலங்கையில் பிக்ஷுக்கள் இளவரசருக்கு முடிசூட்டுவதாகச் சொன்ன செய்தி வந்ததிலிருந்து அந்தக் கோபம் முற்றியிருக்கிறதாம். இளவரசர் காணாமற் போனதற்குப் பழியைச் சூடாமணி விஹாரத்திலுள்ள பிக்ஷுக்களின் மீது சுமத்தினாலும் சுமத்துவார்கள். அதற்குத் தக்க பாதுகாப்பு, தாங்கள்தான் செய்யவேண்டும்” என்று சொன்னாள்.

     “உடனே செய்கிறேன், அம்மா! சக்கரவர்த்தியின் கட்டளையுடன் சூடாமணி விஹாரத்தைப் பாதுகாக்க ஒரு சிறிய சைன்யத்தையே வேணுமானாலும் அனுப்பி வைக்கிறேன். வந்தியத்தேவனைக் காஞ்சிக்கு அனுப்புவது பற்றி என்ன சொல்கிறாய்?”

     “ஐயா! அவ்வளவு முக்கியமான காரியத்துக்கு வேறு யாரையாவது அனுப்புவது நல்லதல்லவா?”

     “உனக்கு மட்டும் அவனிடம் நம்பிக்கையிருந்தால் அவனையே அனுப்ப விரும்புகிறேன். அவனுடைய வீர சாகஸச் செயல்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். எதற்கும் அஞ்சாத அஸகாய சூரனையே இந்தக் காரியத்துக்கு நாம் அனுப்ப வேண்டும். இன்றைக்கு நான் அரண்மனை முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தபோது என் கண்ணாலேயே பார்த்தேனே! அந்த வைத்தியனை என்ன பாடுபடுத்திவிட்டான். நான் குறுக்கிட்டுத் தடுத்திராவிட்டால் வைத்தியர் மகன் யமனுக்கு வைத்தியம் செய்யப் போயிருப்பான்…”

     இளைய பிராட்டி இதைக் கேட்டுப் பூரிப்பு அடைந்தாள். ஆயினும் சிறிய தயக்கத்துடன், “வீரனாயிருந்தால் மட்டும் போதுமா? படபடப்புக்காரனாயிருக்கிறானே? எவ்வளவு விரைவில் சண்டை தொடங்கிவிட்டான்!”

     “அதற்கு வேணுமானால் பின்னோடு என்னுடைய சீடன் திருமலையையும் அனுப்பி வைக்கிறேன். நிதானமான யோசனைக்குப் பெயர்போனவன் ஆழ்வார்க்கடியான்!” என்றார் அநிருத்தர்.

     இளையபிராட்டி தன் மனத்திற்குள், இவருடைய உள்ளத்தில் இருப்பதைக் கடவுளும் அறிவாரோ, என்னமோ தெரியவில்லை; ஒற்றனுக்குத் துணையாக ஒற்றன் ஒருவனையே அனுப்பி வைக்க விரும்புகிறார் போலும்!” என்று எண்ணிக் கொண்டாள்.

29. வானதியின் மாறுதல்


     குந்தவை வந்தியத்தேவனைச் சிறையிலிருந்து மீட்டு மறுபடியும் பிரயாணம் அனுப்புவதற்காகப் புறப்பட்டபோது, வானதி எதிரே வந்தாள். இளைய பிராட்டியிடம் அடிபணிந்து நின்றாள்.

     “என் கண்ணே! உன்னை விட்டுவிட்டு வந்து விட்டேன். இன்னும் கொஞ்சம் முக்கியமான அலுவல் இருக்கிறது. அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். சற்று நேரம் தோட்டத்தில் சென்றிரு! ஓடைப்பக்கம் மட்டும் போகாதே” என்றாள்.

     “அக்கா! தங்களுக்கு இனி தொந்தரவு கொடுக்கமாட்டேன். கொடும்பாளூருக்குப் போக விரும்புகிறேன், அநுமதி கொடுங்கள்!” என்றாள் வானதி.

     “இது என்ன, என் தலையில் நீயுமா இடியைப் போடுகிறாய்? உனக்கு என் பேரில் என்ன கோபம்? உன் பிறந்தகத்தின் மீது திடீரென்று என்ன பாசம்?”

     “உங்கள் பேரில் நான் கோபங் கொண்டால் என்னைப் போல் நன்றி கெட்டவள் யாரும் இல்லை. என் பிறந்தகத்தின் பேரில் புதிதாகப் பாசம் ஒன்றும் பிறந்துவிடவும் இல்லை. தாயும் தந்தையும் இல்லாத எனக்குப் பிறந்தகம் என்ன வந்தது? எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள காளி கோவிலுக்குப் பூசைபோடுவதாக என் தாயார் ஒருமுறை வேண்டிக்கொண்டாளாம். அதை நிறைவேற்றுவதற்கு முன் அவள் கண்ணை மூடிவிட்டாள். எனக்கு அடிக்கடி மயக்கம் வருகிறதல்லவா? ஒருவேளை அந்த வேண்டுதலை நிறைவேற்றாததால்தான் இப்படி என்னைப் படுத்துகிறதோ என்னமோ?”

     “அதற்காக நீ அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை; நானே சொல்லி அனுப்பி அந்த வேண்டுதலை நிறைவேற்றச் சொல்கிறேன்.”

     “அது மட்டுமல்ல அக்கா! என் பெரிய தகப்பனார் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் தஞ்சையைத் தாண்டிப் பழையாறைக்கு வரமாட்டார். அவர் வரும்போது நான் கொடும்பாளூரிலிருக்க விரும்புகிறேன். அவரிடம் இலங்கையில் நடந்தவற்றையெல்லாம் நேரில் கேட்க ஆசைப்படுகிறேன்!”

     “இலங்கையில் நடந்தவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உனக்கு என்ன அவ்வளவு ஆசை?”

     “அது என்ன அப்படிக் கேட்கிறீர்கள்? என் தந்தை இலங்கைப் போரில் வீர சொர்க்கம் அடைந்ததை மறந்து விட்டீர்களா…?”

     “மறக்கவில்லை. அந்தப் பழி இப்போது நீங்கிவிட்டது…”

     “முழுவதும் நீங்கியதாக எனக்குத் தோன்றவில்லை. யுத்தம் முடிவதற்குள்ளே அவசரப் பட்டுக்கொண்டு பெரிய வேளார் திரும்புகிறார்.”

     “அவரை மறுபடி இலங்கைக்குப் போய்ப் போர் நடத்தும்படி சொல்லப் போகிறாயா? அதற்காகவா கொடும்பாளூர் போக வேண்டும் என்கிறாய்?”

     “அவ்வளவு பெரிய விஷயங்களைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார்? நடந்ததைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவே விரும்புகிறேன்…”

     “ஆகா! உன் மனது இப்போது எனக்குத் தெரிகிறது. பொன்னியின் செல்வன் இலங்கைப் போரில் புரிந்த வீரச் செயல்களைப்பற்றி உன் பெரிய தகப்பனாரிடம் கேட்க விரும்புகிறாய், இல்லையா?”

     “அது ஒரு தவறா, அக்கா?”

     “அது தவறில்லை, ஆனால் இத்தகைய சமயத்தில் என்னைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன் என்கிறாயே, அதுதான் பெரிய தவறு!”

     “அக்கா! நானா தங்களைத் தனியே விட்டுவிட்டுப் போகிறேன்? என்னைப்போல் தங்களுக்கு எத்தனையோ தோழிகள், தங்கள் கருத்தை அறிந்து காரியத்தில் நிறைவேற்ற எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்…”

     “நீ கூட இப்படிப் பேச ஆரம்பித்து விட்டாயா, வானதி? என் தம்பியைப் பற்றி செய்தி கேட்டு உன்மனம் பேதலித்து விட்டது போலிருக்கிறது. அந்தச் செய்தியைப் பற்றி நீ அதிகமாய்க் கவலைப்பட வேண்டாம்…

     “தங்கள் தம்பியைப் பற்றி தங்களுக்கு இல்லாத கவலை எனக்கு என்ன இருக்க முடியும், அக்கா!”

     “உண்மையைச் சொல்! ஓடையில் நீயாக வேண்டுமென்று விழுந்தாயா? மயக்கம் வந்து விழுந்தாயா?”

     “வேண்டுமென்று எதற்காக விழ வேண்டும்? மயக்கம் வந்து தான் விழுந்தேன் தாங்களும் அந்த வாணர் குலத்து வீரருமாக என்னைக் காப்பாற்றினீர்கள்.”

     “காப்பாற்றியதற்கு நன்றி உள்ளவளாகத் தோன்றவில்லையே?”

     “இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல; ஏழேழு ஜன்மத்திலும் நன்றியுள்ளவளாயிருப்பேன்.”

     “இந்த ஜனமம் இத்துடன் முடிந்து போய்விட்டது போல் பேசுகிறாயே? நான் சொல்கிறேன் கேள், வானதி! வீணாக மனதை வருத்தப்படுத்திக் கொள்ளாதே! அருள்மொழி வர்மனுக்கு அபாயம் எதுவும் வந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. சற்றுமுன் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்த ஜனங்களுக்குச் சொன்னதையே உனக்கும் சொல்லுகிறேன். அன்றொரு நாள் காவிரித்தாய் என் தம்பியைக் காப்பாற்றினாள். அதுபோல் சமுத்திரராஜனும் அவனைக் காப்பாற்றியிருக்க வேண்டும். சீக்கிரத்தில் நல்ல செய்தியை நாம் கேள்விப்படுவோம்.”

     “எந்த ஆதாரத்தைக் கொண்டு இவ்வளவு உறுதியாகத் தைரியம் சொல்கிறீர்கள் அக்கா?”

     “என் மனத்திற்குள் ஏதோ ஒன்று சொல்கிறது. என் அருமைத் தம்பிக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அது என் உள்மனத்திற்குத் தெரிந்திருக்கும். நான் இப்படிச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்…”

     “மனது சொல்வதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை அக்கா! உள் மனத்திலும் நம்பிக்கை இல்லை! வெளி மனத்திலும் நம்பிக்கை இல்லை!”

     “அது எப்படி நீ மட்டும் அவ்வளவு தீர்மானமாகச் சொல்லுகிறாய்?”

     “என் உள் மனத்திலும், வெளி மனத்திலும் சில நாளாக ஒரு பிரமை தோன்றிக் கொண்டிருந்தது. தூக்கத்தில், கனவிலும் தோன்றியது. விழித்துக் கொண்டிருக்கும் போதும் சில சமயம் அப்படிப் பிரமை உண்டாயிற்று.”

     “அது என்ன வானதி?”

     “தண்ணீரில் தங்கள் தம்பியின் முகம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. என்னை அழைப்பது போலவும் இருந்தது. கனவிலும் இந்தப் பிரமை அடிக்கடி ஏற்பட்டு வந்தது.”

     “அதை ஏன் பிரமை என்று சொல்லுகிறாய்? நமக்கு வந்திருக்கும் செய்திக்கும் உன்னுடைய மனத்தோற்றத்துக்கும் பொருத்தமாக இருக்கிறதே?”

     “இன்னும் முழுவதும் கேட்டால் அது எவ்வளவு பைத்தியக்காரப் பிரமை என்பதை அறிவீர்கள். ஓடையில் மயக்கம் போட்டு விழுந்தேனல்லவா? அப்போது நான் நாகலோகத்துக்கே போய் விட்டேன். அங்கே ஒரு திருமண வைபவம் நடந்தது…”

     “யாருக்கும் யாருக்கும் திருமணம்?”

     “அதைச் சொல்ல விருப்பமில்லை, அக்கா! மொத்தத்தில் மனத்தில் தோன்றுவதிலும், கனவில் தோன்றுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும்தான் இனிமேல் நம்புவது என்று தீர்மானித்திருக்கிறேன்…”

     “வானதி! நீ சொல்வது முற்றும் தவறு. கண்ணால் காண்பதும், காதினால் கேட்பதும் சில சமயம் பொய்யாக இருக்கும். மனத்திற்குள் தோன்றுவதுதான் நிச்சயம் உண்மையாயிருக்கும். கதைகள், காவியங்களிலிருந்து இதற்கு எத்தனையோ உதாரணங்கள் நான் உனக்குச் சொல்லுவேன்…”

     “பிறகு ஒரு சமயம் கேட்டுக் கொள்கிறேன், அக்கா! இப்போது எனக்கு விடை கொடுங்கள்!” என்றாள் வானதி.

     இளவரசி குந்தவைக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு தைரியமும், திடீரென்று எப்படி ஏற்பட்டன என்று ஆச்சரியப்பட்டாள்.

     “வானதி! இது என்ன அவசரம்? அப்படியே நீ கட்டாயம் ஊருக்குப் போக வேண்டுமென்றாலும், சிலநாள் கழித்துப் புறப்படக்கூடாதா? இப்போது நாடெங்கும் ஒரே குழப்பமாய் இருக்குமே? உன்னைத் தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டாமா?”

     “எனக்கு என்ன பயம், அக்கா! கொடும்பாளூரிலிருந்து என்னை அழைத்து வந்த பல்லக்குத் தூக்கிகளும் காவல் வீரர் நால்வரும் ஒரு வேலையுமின்றி இத்தனை காலம் இங்கே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள்…”

     “அழகாயிருக்கிறது! உன்னை அப்படி நான் அனுப்பி விடுவேன் என்றா நினைக்கிறாய்?”

     “உங்களை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன் அக்கா! எனக்குப் பயம் ஒன்றுமில்லை. கொடும்பாளூர் வானதியை இந்த நாட்டில் யாரும் எதுவும் செய்யத் துணிய மாட்டார்கள். அதிலும் இளையபிராட்டியின் அன்புக்குகந்த தோழி நான் என்பது யாருக்குத் தெரியாது? ஒரே ஒரு காரியத்துக்கு மட்டும் அனுமதி கொடுங்கள். போகும்போது அந்தக் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்கு இன்னொரு தடவை போய் அவரைச் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன். அவ்விதம் செய்யலாமா?”

     “அவரிடம் எனக்குக்கூட வரவேண்டும் என்று ஆசைதான். ஆனால் நீ இவ்வளவு அவசரப்படுகிறாயே?”

     “இல்லை, அக்கா! இந்தத் தடவை அவரை நான் தனியாகப் பார்த்து ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்…”

     குந்தவை மூக்கின்மீது விரலை வைத்து அதிசயப்பட்டாள்.

     இந்தப் பெண் ஒரு நாளில், ஒரு ஜாம நேரத்தில், இவ்வளவு பிடிவாதக்காரியாக மாறிவிட்டது எப்படி என்று இளவரசிக்குப் புரியவேயில்லை. அவள் பிரயாணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தாள்.

     “சரி, வானதி! உன் விருப்பம் போலச் செய்யலாம். நீ பிரயாணத்துக்கு வேண்டிய ஆயத்தம் செய். அதற்குள் சிறையிலிருக்கும் அந்த வாணர் குலத்து வீரகுமாரனை விடுதலை செய்துவிட்டு வருகிறேன்” என்றாள்.

30. இரு சிறைகள்


     வானதியை விட்டுப் பிரிந்ததும் அரசிளங்குமரி நேரே பழையாறைச் சிறைச்சாலைக்குச் சென்றாள். காவலர்களை வெளியிலேயே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் வந்தியத்தேவன் அடைபட்டிருந்த இடத்துக்குப் போனாள். அவன் தனி அறையில் பூட்டப் பட்டிருந்தான். சிறையின் உச்சியைப் பார்த்துக்கொண்டு உற்சாகமாகத் தெம்மாங்கு பாடிக் கொண்டிருந்தான்.

     “வானச் சுடர்கள் எல்லாம்
          மானே உந்தனைக்கண்டு
     மேனி சிலிர்க்குதடி –
          மெய்மறந்து நிற்குதடி!”
     குந்தவை அருகில் வந்து நின்று தொண்டையைக் கனைத்த பிறகுதான் அவளைத் திரும்பி பார்த்தான். உடனே எழுந்து நின்று, “வருக! வருக! இளவரசியாரே! வருக! ஆசனத்தில் அமருக!” என்று உபசரித்தான். “எந்த ஆசனத்தில் அமரட்டும்?” என்று இளவரசி கேட்டாள்.

     “இது தங்கள் அரண்மனை. இங்கு நடப்பது தங்கள் ஆட்சி, தங்கள் ஆணை. இங்குள்ள சிம்மாசனம் எதில் வேண்டுமானாலும் தங்கள் விருப்பம் போல் அமரலாம்” என்றான் வல்லவரையன்.

     “ஐயா! உமது முன்னோர்கள் ஆணை செலுத்தி மூவுலகையும் ஆண்டபோது வல்லத்து அரண்மனை இவ்விதந்தான் இருந்தது போலும்! எங்கள் நகரில் இந்த இடத்தைச் சிறைச்சாலை என்று சொல்லுவார்கள்” என்றாள் இளவரசி.

     “அம்மணி! எங்கள் ஊரில் இப்போது அரண்மனையும் இல்லை; சிறைச்சாலையும் இல்லை. பல தேசத்து அரசர்களுமாகச் சேர்ந்து அரண்மனை, சிறைச்சாலை எல்லாவற்றையும் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டார்கள், நூறு வருஷங்களுக்கு முன்பு…”

     “ஏன்? ஏன்? வல்லத்து அரண்மனை மீதும் சிறையின் பேரிலும் அவர்களுக்கு என்ன அவ்வளவு கோபம்?”

     “எல்லாம் ஒரு கவிஞரால் வந்த வினை!”

     “ஆ! அது எப்படி?”

     “என் குலத்து முன்னோர்கள் தென் நாட்டின் பேரரசர்களாக அரசு புரிந்த நாளில், காலாகாலத்தில் கப்பம் செலுத்தாத அரசர்களை அதிகாரிகள் சிறைப்பிடித்துக் கொண்டு வருவார்கள். அரண்மனை முற்றத்தின் இருபுறத்திலும் அரசர்களை அடைத்து வைக்கும் சிறைகள் இருந்தன. சக்கரவர்த்தி கருணை புரிந்து எப்போது தங்களை வரும்படி சொல்லி அனுப்புவார், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்று அச்சிற்றரசர்கள் காத்திருப்பார்கள். பேரரசரைக் காணும்பேறு அவர்களுக்கு எளிதிலே கிட்டாது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கவிஞர்களும் புலவர்களும் சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குப் போவார்கள். சக்கரவர்த்தி முன்னிலையில் பாடல்களைச் சொல்லிப் பரிசுகள் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்லுவார்கள். அப்போது சிறையில் காத்திருக்கும் சிற்றரசர்கள் ‘அடாடா! இந்தப் புலவர்களுக்கு வந்த யோகத்தைப் பார்! இவர்கள் கொண்டு போகும் பரிசுகளைப் பார்!’ என்று சொல்லி வியப்பார்கள். ‘ஓகோ! இந்தப் புலவன் கொண்டு போவது என் வெண் கொற்றக் குடையல்லவா?’ என்பான் ஓர் அரசன். ‘அடடே! இந்தக் கவிஞன் என் சிவிகையில் அமர்ந்து போகிறானே!’ என்பான் இன்னொரு வேந்தன். ‘ஐயோ! என் பட்டத்து யானையை இவன் கொண்டு போகிறானே!’ என்பான் இன்னொரு மன்னன். ‘இது என் குதிரை! இந்தக் கவிராயனை என் குதிரை கட்டாயம் ஒரு நாள் கீழே தள்ளிவிடும்!’ என்று சொல்லி மகிழ்வான் வேறொரு சிற்றரசன். எல்லாப் புலவர்களுக்கும் கடைசியில் இன்னொரு புலவர் வந்தார். அவர் சிறையிலிருந்த சிற்றரசர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். கேட்டுக் கொண்டே சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்குச் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்:

     ‘என் கவிகை என் சிவிகை
          என் கவசம் என் துவசம்
     என் கரியீது என் பரியீது
          என்பரால் – பன்கவள
     மாவேந்தன் வாணன்
          வரிசைப் பரிசு பெற்ற
     பாவேந்தரை வேந்தர்
          பார்த்து!’
     “இவ்விதம் அந்தப் புலவர்கள் பாடிய பாடல் தமிழ் நாடெங்கும் அப்பாலும் பரவிவிட்டது. மக்கள் அடிக்கடி பாடியும் கேட்டும் மகிழ்ந்தார்கள். இதனால் எங்கள் இராஜ்யத்துக்கே ஆபத்து வந்துவிட்டது. எல்லா அரசர்களுமாகச் சேர்ந்து வந்து படையெடுத்து எங்கள் ஊரையும் அரண்மனையையும், சிறைச்சாலையையும் எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள்…”

     “எல்லாவற்றையும் அழித்தாலும் அந்தக் கவியின் பாடலை அழிக்க முடியவில்லையல்லவா? உங்கள் குலம் பாக்கியம் செய்த குலந்தான்! அதன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!”

     “வாணர் குலத்தின் வீரப் புகழைக் கெடுக்க நான் ஒருவன் இப்போது ஏற்பட்டிருக்கிறேன்…”

     “ஆகா! அந்த உண்மையை நீரே ஒப்புக் கொள்கின்றீர் அன்றோ?”

     “ஒப்புக் கொள்ளாமல் வேறு என்ன செய்வது? அடிமைத்தனங்களுக்குள்ளே பெண்ணடிமை மிகப் பொல்லாதது. ஒரு பெண்மணியின் வார்த்தையைக் கேட்கப் போய், என் முன்னோர்களில் குலப்புகழுக்கு நான் மாசு தேடிக்கொள்ள நேர்ந்தது. ஓடி ஒளிந்து, மறைந்து திரிந்து உயிர் வாழ நேர்ந்தது. என் கோபத்தையெல்லாம் அந்த வைத்தியர் மகனைக் கொன்று தீர்த்துக்கொள்ளலாம் என்று பார்த்தேன். அதற்கும் ஒரு தடை வந்து குறுக்கிட்டு விட்டது…”

     “ஐயா! வைத்தியர் மகன் பினாகபாணி மீது உமக்கு ஏன் அவ்வளவு கோபம்?”

     “கோபத்துக்கு வேண்டிய காரணம் இருக்கிறது. நல்ல ஆளைப் பிடித்து என்னோடு கோடிக்கரைக்கு அனுப்பினீர்கள். அவன் என் காரியத்தையே கெடுத்துவிட இருந்தான். அது போகிறதென்றால், சற்று முன் இந்த ஊர் வீதியில் அவன் என்னைப் பகைவர்களின் ஒற்றன் என்று சொல்லிப் பழுவேட்டரையர்களிடம் பிடித்துக்கொடுக்கப் பார்த்தான். அங்கிருந்து தப்பி வந்தால், அரண்மனை முற்றத்தில் ஆயிரம் பதினாயிரம் பேருக்கு எதிரில் என்னைப் ‘பழுவூர் ராணியின் ஒற்றன்’ என்று குற்றம் சாட்டினான்…”

     “வல்லத்து இளவரசரே! அது உண்மையல்லவா?”

     “எது உண்மையல்லவா?”

     “நீர் பழுவூர் ராணி நந்தினி தேவியின் ஒற்றன் என்று பினாகபாணி குற்றம் சாட்டியதைக் கேட்கிறேன். உண்மையைச் சொல்வீரா?”

     “நான் உண்மை சொல்லுவதில்லையென்று விரதம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தேவி!”

     “ஆகா! அது என்ன விரதம்? அரிச்சந்திர நதிக்கரையில் பழுவூர் ராணியைப் பார்த்ததிலிருந்து அப்படிப்பட்ட விரதம் எடுத்துக் கொண்டீரா?”

     “இல்லை, இல்லை! அதற்கு முன்னாலேயே அந்த முடிவுக்கு வந்து விட்டேன். நான் உண்மைக்கு மாறானதைச் சொல்லிக் கொண்டிருந்த வரையில் எல்லாரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் வாய் தவறி ‘இளவரசர் நாகைப்பட்டினத்தில் பத்திரமாயிருக்கிறார்’ என்று சொன்னேன். ஒருவரும் நம்பவில்லை கேட்டவர்கள் எல்லாரும் சிரித்தார்கள்…”

     “எவ்வளவு தவறான காரியத்தைச் செய்தீர்! உம்முடைய வார்த்தையை அவர்கள் நம்பாததே நல்லதாய்ப் போயிற்று! நம்பியிருந்தால் எவ்வளவு பிசகாகப் போயிருக்கும்?”

     “இனிமேல் எப்போதும் இத்தகைய தவறுகள் நேரவே நேராது…”

     “உமது வாக்குறுதிக்கு மிக்க நன்றி!”

     “என்ன வாக்குறுதி கொடுத்தேன்?”

     “இனிமேல் தவறு எதுவும் நேராமல் நான் இட்ட காரியத்தைச் செய்வதாக…”

     “கடவுளே! அப்படி நான் ஒன்றும் வாக்குறுதி கொடுக்கவில்லை. போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்…”

     “அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியதுதான்” என்றாள்.

     வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.

     “நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?”

     “இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?”

     இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களினால் உற்றுப் பார்த்துவிட்டு, “ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?” என்றாள்.

     “அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்.”

     “நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர்தப்ப முடியாது…”

     “சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?”

     “இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்…”

     “பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?”

     “என்னுடைய இதயமாகிற சிறைச் சாலையைத்தான் சொல்கிறேன்.”

     “தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ, மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி….”

     “யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒருநாள் பழைய கதை ஆகலாம்.”

     “ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற, அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதல் மந்திரியும், தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணியமாட்டார்கள்…”

     “இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர்மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?”

     “அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்.”

     “அதிலேதான் என்ன தவறு?”

     “நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம்தான் தவறு…”

     “‘அன்பிற்கும் உண்டோ , அடைக்கும் தாழ்’ என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?”

     “அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?”

     “ஆம்! பொருந்தும்தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்…”

     “நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் ஆவலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்…”

     “இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?”

     “ஆம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் ஆலயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!…”

     “மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்…”

     “தேவி தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவரவேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது! விடை கொடுங்கள்…”

     “ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?”

     “தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றேவல் செய்ய வந்தவன்…”

     இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனுடைய உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.

     “வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாநகரில் சிலர் கணவனுடன் உடன் கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக்குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்.!”

     “கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!”

     “உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது…”

     வல்லவரையன் சொல்லிழந்து செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.

     “ஐயா! உம்முடைய பதட்டமான காரியங்களினால் உமது உயிருக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால், என்னுடைய கதி என்ன ஆகும் என்பதைச் சிறிது எண்ணிப் பாரும்.”

     “தேவி! தங்களுடைய இதய சிங்காசனத்தில் இடம் பெற்ற இந்தப் பாக்கியசாலி உயிருக்குப் பயந்த கோழையாயிருக்க முடியுமா?”

     “கோழைத்தனம் வேறு, ஜாக்கிரதை வேறு, ஐயா! முதன் மந்திரி அநிருத்தருக்குக்கூடத் தங்கள் வீரத்தைப் பற்றி ஐயம் கிடையாது.”

     “பின்னர், எதைப்பற்றி அவர் ஐயப்படுகிறார்…”

     “நீர் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுறுகிறார்..”

     “அப்படியானால், வைத்தியர் மகன் பினாகபாணிக்கு அளித்த மறுமொழியை அவருக்கும் அளிக்கச் சித்தமாயிருக்கிறேன். சிறைக்கதவைத் திறந்து விடுங்கள்! அந்த மனிதர் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள்!”

     “வைத்தியர் மகனாவது மற்போரில் சிறிது பழக்கமுள்ளவன். அநிருத்தர் சொற்போர் அறிவாறேயன்றி மற்போர் அறியார். அறிவின் கூர்மையே அவருடைய ஆயுதம். வாளின் கூர்மையை அவர் என்றும் துணை கொண்டதில்லை…”

     “அப்படியானால், என்னுடைய வாளின் கூர்மையைத்தான் முதன் முதலில் பரீட்சை பார்க்கட்டுமே?”

     “ஐயா! இந்த நாட்டில் சக்கரவர்த்திக்கு அடுத்த மரியாதைக்குரியவர் முதன் மந்திரி அநிருத்தர். அவருடன் பகிரங்கமாக முரண்படப் பழுவேட்டரையர்களும் தயங்குகிறார்கள்…”

     “பழுவேட்டரையர்கள் குற்றம் உள்ள நெஞ்சினர். அவர்கள் பயப்படுவார்கள்; நான் ஏன் பயப்பட வேண்டும்?”

     “இளம் பிராயத்திலிருந்து என் தந்தையின் உற்ற தோழர் அவர். முதன் மந்திரிக்குச் செய்த அவமரியாதை சக்கரவர்த்திக்கும், எனக்கும் செய்த அவமரியாதையாகும்.”

     “அப்படியானால், அவருடைய நம்பிக்கையை நான் பெறுவதற்கு வழியையேனும் சொல்லுங்கள்.”

     “முதன் மந்திரி, காஞ்சிக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரை அனுப்ப விரும்புகிறார். உம்மை அனுப்பலாம், நம்பி அனுப்பலாம் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன்.”

     “தேவி! காஞ்சிக்கு என்னை அனுப்பாதீர்கள்! என் மனத்திற்குள் ஏதோ ஒரு குரல், ‘காஞ்சிக்குப் போகாதே!’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.”

     “அது ஒருவேளை பழுவூர் இளைய ராணியின் குரலாயிருக்கலாம் அல்லவா?”

     “இல்லவே இல்லை! தங்களுடைய சொல்லுக்கு மாறாக அந்த விஷ நாகத்தின் குரலை நான் கேட்பேனா?”

     “ஐயா! பழுவூர் இளைய ராணியைப் பற்றி இனி எந்தச் சமயத்திலும் அப்படியெல்லாம் பேசாதீர்கள்!”

     “இது என்ன? ஏன் இந்தத் திடீர் மாறுதல்?”

     “ஆம்; என் மனம் அவள் விஷயத்தில் அடியோடு மாறிவிட்டது. நீர் இலங்கையிலிருந்து கொண்டு வந்த செய்தியைக் கேட்ட பிறகு.”

     “அப்படியானால் இனி நான் பழுவூர் இளைய ராணியிடமும் பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டியதுதானோ?”

     “ஆம்!”

     “அவள் பயபக்தியுடன் பூஜை செய்யும் கொலை வாளை என்னிடம் கொடுத்து, ‘இன்னாருடைய தலையைக் கொண்டு வா!’ என்று சொன்னாலும் கொண்டுவர வேண்டியதுதானோ?”

     குந்தவை தேவியின் உடம்பு நடுங்கிற்று. மறுமொழி கூறியபோது அவளுடைய குரலும் நடுங்கிற்று.

     “பழுவூர் ராணியிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவள் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவள் எத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவளுக்கே தெரியாமலிருக்கலாம் அல்லவா?”

     “அப்படித்தான் அவளும் கூறினாள். ‘நான் எதற்காக இந்தக் கத்தியைப் பூஜை செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை’ என்றாள்.”

     இதைக் கேட்ட இளவரசி இன்னும் அதிகமாக நடுங்கிய குரலில் “இந்தச் சோழர் தொல்குடியைத் தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்” என்றாள்.

     “காப்பாற்றுகிற தெய்வம் இந்த ஏழையைச் சாதனமாக வைத்துக்கொண்டு காப்பாற்றட்டும்” என்றான் வந்தியத்தேவன்.

     “ஐயா! நானும் அவ்வாறுதான் நம்பியிருக்கிறேன். நீர் காஞ்சியிலிருந்து திரும்பி வந்ததும் மறுபடி ஒருதடவை இலங்கைக்குப் போக வேண்டும். அந்த ஊமைத்தாயை எப்படியாவது இங்கே அழைத்து வரவேண்டும்…”

     “அவளை அழைத்து வருவது சுழிக்காற்றைக் குடத்தில் அடைத்துக் கொண்டு வருவது போலத்தான். இப்படி ஒரு முறை யாரோ சொன்னார்கள், ஆம். அந்த வீர வைஷ்ணவன் தான். ஒருவேளை அவனே அழைத்து வந்திருக்கலாம்.”

     “இல்லை; அவனால் அந்தக் காரியம் முடியவில்லை. உம்மாலேதான் அந்தக் காரியம் ஆக வேண்டும்.”

     “அப்படியானால் என்னைக் காஞ்சிக்கு அனுப்பாதீர்கள், தேவி!”

     “ஏன்?”

     “அங்கே என் எஜமானர் இருக்கிறார். அவர் கேட்டால் நான் எல்லா விவரங்களையும் சொல்லித்தான் ஆகவேண்டும். பழுவேட்டரையர்களும், மற்றச் சிற்றரசர்களும் செய்யும் சதியைப்பற்றி அறிந்தால் உடனே வெகுண்டு எழுவார். சக்கரவர்த்தியைச் சிறைவைப்பது போல் வைத்திருக்கிறார்கள் என்று அறிந்தால் உடனே படை எடுத்துக் கிளம்புவார். பொன்னியின் செல்வரைப் பற்றிய செய்தி அவர் காதில் எட்டியிருந்தால் இதற்குள்ளேயே ஒருவேளை புறப்பட்டிருந்தாலும் புறப்பட்டிருப்பார்…”

     “அதற்காகவேதான் – உம்மை அனுப்ப விரும்புகிறேன். அவர் காஞ்சியைவிட்டுப் புறப்படாமல் எப்படியாவது தடுத்து விடவேண்டும்.”

     “நான் காஞ்சியை அடைவதற்குள் அவர் புறப்பட்டிருந்தால்?”

     “வழியில் அவர் எங்கே இருந்தாலும் அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக நீர் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது…”

     “சொல்லுங்கள்!”

     “பெரிய பழுவேட்டரையர் இளையராணியுடன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது…”

     “உண்மையில் இளைய ராணிதான் போகிறாளா! அல்லது இளைய ராணியின் பல்லக்கில்…”

     “இல்லை; இளைய ராணிதான் போகிறாள். என் சித்தப்பாதான் இன்னும் இங்கே இருக்கிறாரே!”

     “எதற்காகப் போகிறார்களாம்?”

     “ஆதித்த கரிகாலனையும் கடம்பூருக்கு வரும்படி அழைத்திருக்கிறார்கள். கல்யாணப் பேச்சு என்பது வெளிப்படையான காரணம். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துக் கொடுத்துச் சமாதானம் செய்து வைக்கப் போவதாகவும் ஒரு பேச்சு நடந்து வருகிறது.”

     “என் எஜமானர் அதற்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார்.”

     “அதைப் பற்றியெல்லாம் இப்போது எனக்குக் கவலை இல்லை.”

     “பின்னே என்ன கவலை தேவி!”

     “இன்னதென்று சொல்லமுடியாத பயம் என் மனத்தில் குடி கொண்டிருக்கிறது நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக் கொள்கிறது. அரைத் தூக்கத்தில் விவரமில்லாத பயங்கரங்கள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. நல்ல தூக்கத்தில் அகோரமான கனவுகள் கண்டு விழித்துக் கொள்கிறேன். அப்புறம் வெகு நேரம் வரையில் என் உடம்பு நடுங்கிக் கொண்டிருக்கிறது.”

     “இந்த நிலையில் தங்களைப் பிரிந்து என்னை ஏன் போகச் சொல்லுகிறீர்கள்? தங்களுக்கு எத்தகைய அபாயம் வந்தாலும் என் உயிரைக் கொடுத்து…”

     “ஐயா! என்னுடைய பயம் என்னைப் பற்றியதே அன்று. என் தமையனைப் பற்றியது; பழுவூர் ராணியைப் பற்றியது. அவர்கள் சந்தித்தால் என்ன நேரிடுமோ என்று எண்ணி என் உள்ளம் கலங்குகிறது. அவர்கள் தனியாகச் சந்திக்க முடியாதபடி நீர் தடை செய்ய வேண்டும்…”

     “தேவி! அவர் ஒன்றும் செய்வதற்கு நினைத்தால் அதை யார் தடுக்க முடியும்?”

     “ஐயா! என் தமையனைக் காப்பாற்றும் இரும்புக் கவசம் போல் நீர் உதவவேண்டும். அவசியமானால் நந்தினி யார் என்பதை என் சகோதரனிடம் சொல்லிவிட வேண்டும்…”

     “அதை அவர் நம்ப வேண்டுமே?”

     “நம்பும்படியாகச் சொல்வது உமது பொறுப்பு. எப்படிச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது. அவர்களை எப்படியேனும் சந்திக்க முடியாதபடி செய்தால் மிக்க நலமாயிருக்கும்.”

     “தேவி! என்னாலியன்ற முயற்சிகளைச் செய்து பார்க்கிறேன். தோல்வி அடைந்தால் என்னைக் குற்றம் சொல்ல வேண்டாம்” என்றான் வந்தியத்தேவன்.”

     “ஐயா! தாங்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி அடைந்தாலும் என் இதயச் சிறையிலிருந்து இந்த ஜன்மத்தில் தங்களுக்கு விடுதலை கிடையாது!” என்றாள் அரசிளங்குமரி.

கல்கி

1 thought on “பொன்னியின் செல்வன் | பாகம்-3 | கொலை வாள் | 26-30 அத்தியாயங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *