அத்தியாயம் 1
முகத்திற்கு நேராய், காலணியைத் தூக்கிப் பிடித்துப் பார்த்தான் மகிழ்ந்தன். தேய்ந்து போன அந்தப் பழைய செருப்பில், இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டோடு மதிப்பிழப்புச் செய்யப்பட்ட இருபத்து ஐந்து பைசா நாணயத்தின் அளவில் துளை இருக்க, அதன் வழியே முன்புறத்தைக் காண முடிந்தது.
அழகுடன் காட்சியளித்தது, எதிரே இருந்த சுப்பிரமணிய சுவாமி கோவில். இறைவனைத் தரிசிப்பதற்கு, காலணியைக் கழட்டி விட்டு செல்ல வேண்டும் என்பது தான் பாரத நாட்டில் நமக்குப் போதிக்கப்பட்ட பொதுவிதி. ஆனால், காலணியின் பிய்ந்து போன பகுதியின் வழியாகத்தான் இறைவன் குடியிருக்கும் கோவிலையே கண்டான் அவன்.
“கோபுர தரிசனம் கோடி புண்ணியம் மகிழா. கும்பிட்டுக்க!” என்று அவனது தந்தை காளிதாசன் சிறுவயதில் உரைத்தது நினைவிற்கு வர, கையில் இருந்ததைக் கீழே போட்டு விட்டு வணங்கினான்.
“சுப்பிரமணியா, உனக்கே இது நல்லா இருக்கா? எவ்வளவு சோதிச்சாலும் தாங்குறேன்றதுக்காக, இப்படியா என்னை வச்சு செய்வ? அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லாம நிக்கிறேன். கொஞ்சம் கருணைக் காட்டு!” என வேண்டிட,
“இது என்னப்பா, வெளிய நின்னு கும்பிடுற? உள்ளப் போயி முருகன்கிட்ட கேளு, உனக்கு வேணுங்கிறதைத் தருவான்!” என்று உரைத்துச் சென்றார், வயதான மனிதர் ஒருவர்.
தன்னைக் கடந்து போன அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்தவன், ‘நிஜம் தானோ? உள்ளப் போகாம வெளியவே நின்னு கும்பிடுறதால தான், இப்படி நடக்குதோ? இவ்வளவு தூரம் வந்தாச்சு. ஒரு நாலு எட்டு, எடுத்து வச்சு உள்ள போயிட்டு வர்றதுல என்ன குறைஞ்சிட போறோம்.?’ எனத் தனக்குத்தானே நினைத்தபடிக்
கோவிலை நோக்கிச் சென்றான்.
தெய்வத்திற்கு என்று பூவோ பழமோ வாங்கிச் செல்லும் அளவிற்கு, அவனது பொருளாதார நிலை தற்போது தாராளமாய் இல்லை. அப்படியே இருந்தாலும் கூட, இருபது ரூபாய்க்கு மேல் செலவு செய்திட மாட்டான்.
“ஆமா! நூறு நூத்தம்பதுனு காசைக் கொடுத்து சாமிக்குச் செய்யிறதுக்கு, யாருக்காவது சாப்பாடு வாங்கித் தரலாம். இல்லேனா உதவினு தேவைப்படுறவங்களுக்குச் செய்யலாம்!” என்று விடுவான்.
மகிழ்ந்தனை ஈன்றவர்கள், அவனை அப்படித்தான் வளர்த்து இருந்தனர். கண்ணால் காண முடியாது உணர்வுகளின் வழியே மட்டுமே உணரக்கூடிய இறைவனைக் காட்டிலும், சக மனிதர்களின் மீதான நம்பிக்கையும் மதிப்பும் அவர்களிற்கு அதிகம். அந்த நம்பிக்கையும் மதிப்பும் துளி அளவும் குறைந்து விடாதபடி தான், காலமும் இதுவரை அவர்களை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறது.
பேண்ட் பாக்கெட்டில் இருந்து, ஐந்து ரூபாய் நாணயத்தைத் துலாவி எடுத்தான். கோவிலிற்கு வெளியே வரிசையாய் இருந்த கடைகளில் முதலாமதில், “அம்மா, ஒரு கற்பூரம் கொடுங்க.” என்று வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
கோவிலிற்குள் கற்பூரம் கொளுத்துவதற்கு என்று தனி இடம் இருந்தது. முதலில் அதனைக் கொளுத்தி, நெருப்பின் அனலைக் கைகளில் அள்ளி முகத்தில் பூசிக் கொண்டு நகர்ந்தான்.
கருவறையில் துணைவியரான வள்ளி தெய்வானையுடன் இணைந்து இருந்த சுப்பிரமணியனைத் தரிசித்து விட்டு வெளியே வரும் பொழுது, “ஐயா… ஐயா...” என வரிசையாய் தானம் கேட்பவர்களின் குரல்.
கொடுக்க நினைத்தாலும், அவனிடம் எதுவும் இல்லாத சூழல்.
‘பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை!’ என்று தெருவின் எல்லையை ஒட்டிய தேநீர் கடையில் இருந்து பாடல் ஒலிக் கேட்க, சிரித்துக் கொண்டு நகர்ந்தான்.
“ஐயா… ஐயா…” என்று மீண்டும் தொடர்ந்து வந்த அழைப்புகளிற்கு இடையில், “சார், ஒரு நிமிசம்.” என்பது மட்டும் தனித்துக் கேட்டது அவனிற்கு.
அனிச்சையாய்த் திரும்பின, மகிழ்ந்தனின் கால்கள்.
ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினான், இரு கால்களையும் இழந்த ஒருவன். நகர்வதற்கு வசதியாய் சிறிய சக்கரங்கள் பொருத்திய மரப்பலகையில் அமர்ந்து இருந்தான் அவன்.
‘என்ன?’ என்பது போல் பார்க்க, “கற்பூரம் வாங்க காசு எடுத்தப்ப, பேண்ட் பாக்கெட்ல இருந்து ரூபாய் கீழ விழுந்திடுச்சு சார்.”
தனது கால்சராயைத் தொட்டுப் பார்த்தான். வெறுமையாய் இருந்தது உள்ளிருந்த பை.
“பரவாயில்லப்பா, நீயே வச்சுக்க!” என்றுவிட்டு நகர, “ஹலோ மிஸ்டர்! ஐம் நாட் எ பெக்கர்!” என்றான் அவன்.
சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தவனின் கண்கள், வியப்பில் விரிந்திருந்தன.
அடுத்த நொடியே எதிரே இருந்தவனின் முகத்தைப் பார்ப்பதற்கு வசதியாய் முழங்கால்களை மடக்கி அமர்ந்த மகிழ்ந்தன், “அட! இங்கிலீஷ் எல்லாம் பேசுறீங்க? என்ன படிச்சிருக்கீங்க சார்.?”
அந்த மாற்றுத் திறனாளி இவனை வினோதமாய்ப் பார்க்க, “எனக்கு எல்லாம் காலேஜ் வாசலை மிதிக்கக்கூட வாய்ப்புக் கிடைக்கல. ஆனா, நீங்க இந்த நிலைமையிலயும் படிச்சு இங்கிலீஷ் பேசுறீங்களே.?” என வெள்ளை மனதுடன் உரைக்க, எதிரே இருந்தவனின் முகத்தில் இருந்த கடுமை மறைந்து கனிவு குடியேறியது.
“தப்பா நினைக்காதீங்க. உங்க தோற்றத்தைப் பார்த்துப் பிச்சைக்காரன்னு நினைச்சிட்டேன்!”
அவன் சிரித்து, “தப்பில்ல. இந்த நிலைமையில கோயில் வாசல்ல இருந்தா, அப்படித்தான் நினைக்கத் தோணும்.”
“பனை மரத்துக்கு அடியில நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுனு தான் சொல்லும் இந்த உலகம். அதுமாதிரி ஆகிப் போச்சு, பெரும்பாலான கோயில்ல வெளிய இருக்கிறவங்களோட நிலைமை!”
அவன் சின்னதாய்ச் சிரிக்க, “நான் மகிழ்ந்தன். உங்க பேர் என்ன சார்.?”
“பிரபாகரன்.”
“அடடா! ஒரு இயக்கத்தோட தலைவர் பேரை வச்சிருக்கிறவரை, இப்படி நினைச்சிட்டேனே? முதல்ல, கொடுங்க அந்தக் காசை.” என்று பிரபாவின் கையில் இருந்த பத்து ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டான் மகிழ்ந்தன்.
அவன் சட்டென்று சிரித்துவிட, “இந்தக் காசால, எனக்கு ஒண்ணும் ஆகப் போறது இல்ல. விக்கிற விலைவாசிக்கு, ஒரு கப் டீயே பதினஞ்சு ரூபா. ஆனா, தானம் கேட்கிறவங்களுக்கு அப்படி இல்லேல? என்னை மாதிரி இன்னொருத்தர் அவங்களுக்குக் காசு கொடுத்தா, ஏதோ ஒண்ணை வாங்கிச் சாப்பிடுவாங்க இல்ல.? அப்படி நினைச்சு தான் கொடுத்தேன்! மத்தபடி, வேற எந்த எண்ணமும் இல்ல சார்.”
“ஹோ, கையில காசு இல்லாமலேயே தானமா?”
“தரணும்னு நினைக்கல. ஆனா, பையில இருந்து நழுவி விழுந்ததைத் திருப்பி வாங்க, கை வரல!”
“இப்படி எல்லாம் இருந்தா, இந்தக் காலத்துல ஏமாத்திடுவாங்கப்பா.”
“அப்படி ஒரு நிகழ்வு இதுவரைக்கும் எனக்கு நடந்தது இல்ல. அப்படியே நடந்தாலும், நான் பெருசா எதுவும் வருத்தப்பட்டுக்க மாட்டேன்.” என்றான் மகிழ்.
பிரபா சிரித்து, “நல்ல ஆளுதான்!” என்றுவிட்டுக் கையில் இருந்த கட்டையைத் தரையில் ஊன்றி, தான் இருந்த வண்டியை நகர்த்திக் கொண்டு கிளம்பினான்.
உடன் இணைந்து நடக்கத் துவங்கியவன், “என்ன படிச்சிருக்கீங்க சார்?”
“மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.”
“என்ன? இன்ஜினியரா? கால் இல்லாம எப்படிச் சார்.?”
“அப்ப எல்லாம், நல்லா தான் இருந்தேன். கால் போயி, இப்பதான் ஒரு இரண்டரை வருசம் ஆகுது.”
“ஐயோ! ஆரம்பத்துல இருந்தே இல்லேனா, இதுதான் விதினு மனசு ஏத்துக்கும். முதல்ல இருந்து, பின்னாடி இல்லாம போச்சுனா அதெல்லாம் பெரிய கொடுமை சார்!”
ஒரு நீண்ட பெருமூச்சை வெளிவிட்டு, தலை அசைத்தான் பிரபாகரன்.
நகர்ந்த சில நொடிகளின் அமைதியை விரட்டி, “என்ன வேலை செய்யிறீங்க சார்.?” என மகிழ் மீண்டும் பேச்சைத் துவக்க, “இப்படித்தான், ஒருத்தரைப் பார்த்த பத்து நிமிசத்துல மொத்தத்தையும் விசாரிப்பியா.?” என்றான் மற்றவன்.
“இதுல என்ன இருக்கு? மனுசனுக்கு மனுசன் தெரிஞ்சுக்கிறது தான.? நாளைப்பின்ன ஏதாவது அவசரம்னா, உங்களை மாதிரி ஆளுங்க தான உதவிக்கு வருவாங்க?”
“எந்த காலத்துல இருக்க நீ? கண் முன்னாடி யாராவது செத்துக் கிடந்தா கூட, எவனும் ஒரு செகண்ட் நின்னு பார்க்க மாட்டான். விபரம் தெரியாதவனா இருக்கியே.?”
அதைக் கேட்டு சிரித்த மகிழ்ந்தன், “தெரியாம என்ன? அதெல்லாம் தெரியும் சார். ரொம்ப யோசிக்கிற ஆளாவோ, புத்திசாலியாவோ இருந்தா நிம்மதியா வாழ முடியாது. ‘முட்டாள்களின் சந்தோஷத்திற்குக் குறைவு இருப்பது இல்லை’னு எங்கேயோ படிச்ச ஞாபகம். அதுனால, நான் முட்டாளா இருக்கத்தான் ஆசைப்படுறேன்!”
உடன் வந்தவனை வியப்பாய் நோக்கிய பிரபா, “உண்மை தான் போல. உன்னை மாதிரி இருந்தா சந்தோஷமா இருக்கலாம்னு தோணுது!” என்றபடி அந்த இடத்திலேயே நின்று கொள்ள, சுற்றிலும் பார்த்தான் மகிழ்.
பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது அந்த வீதி. வண்டிகளைப் பழுது பார்க்கும் கடைகளும், வாகனங்களின் பழைய மற்றும் புதிய உதிரி பாகங்களின் விற்பனையகமும் நிறைந்து காணப்பட்டது.
“இது என்ன ரோடு சார்.?”
“சர்வீஸ் ரோடுனு பேரு. இங்க வந்துட்டா, வண்டியில சரிபண்ண முடியாத பிரச்சனைனு எதுவும் கிடையாது. கஸ்டமர் எந்த மாதிரி வண்டி வேணும்னு கேட்கிறாங்களோ, அதேமாதிரி பக்காவா ரெடி பண்ணிக் கொடுத்திடுவோம்!”
“ம்ம்…” என்றபடிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே தலை அசைத்தவன், “நீங்க, இங்க என்ன செய்யிறீங்க சார்.?”
“மெக்கானிக் ப்பா..” என்றவன், தான் பணிபுரியும் கடைக்குள் சென்று மேல் சட்டையை மாற்றிக் கொண்டு வந்தான்.
அங்கேயே நின்றிருந்த மகிழ்ந்தனைப் பார்த்தவன், “நீ, என்ன படிச்சிருக்க.?”
“பிளஸ் டூ சார். அதுக்கு மேல படிக்க ஆசைதான். அப்பாக்கு அவசரம்னு ஆக்ஸிடெண்ட்ல போயிட்டாரு. வயித்தையும் வீட்டையும் பார்க்கணும்ல, வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன்.”
“ம்ம்.. என்ன வேலை செய்யிற.?”
“இப்ப எந்த வேலையும் இல்ல. தேடிக்கிட்டு இருக்கேன்.”
“அப்ப, இதுக்கு முன்னாடி.?”
“ஒரு ஸ்டேஷ்னரி கடையில வேலை பார்த்தேன் சார். எட்டு வருசம்.”
“அவ்வளவு நாளும், ஒரே இடத்துல வேலை பார்த்தியா.?”
மகிழ்ந்தன் சிரித்துத் தலை அசைக்க, “அதிசயந்தான். இப்ப என்ன ஆச்சு.?”
“முதலாளிக்கு உடம்பு முடியல. கடை இருந்த இடத்தை வித்து அவருக்கு ஆஸ்பத்திரி செலவு செஞ்சுட்டு, ஊரு பக்கம் கூட்டிட்டுப் போயிட்டாங்க அவரோட வீட்டுக்காரம்மா. எனக்குக் கையில முப்பதாயிரத்தைக் கொடுத்து, வேற வேலைத் தேடிக்கோனு சொன்னாங்க.
ஊருல அம்மாக்கு பாதி ரூபாயை அனுப்பிட்டு, மீதியை என்னோட செலவுக்கு வச்சுக்கிட்டேன். காசு கரையிறதுக்கு உள்ள எப்படியும் ஒரு வேலையில சேர்ந்துடலாம்னு நினைச்சேன். ஆனா, எதுவும் அமையல. இப்போதைக்கு, இது மட்டும் தான் இருக்கு!” என்று கோவிலின் அருகே பிரபா தந்த பத்து ரூபாய் நோட்டைக் காட்டினான் மகிழ்ந்தன்.
ஆடவனின் முகத்தில் இருபது சதவிகிதம் அளவிற்கு வருத்தம் தெரிந்ததே தவிர, மற்றபடி அவன் கவலைக் கொண்டதாய்த் தெரியவில்லை.
‘வேலை இல்லை’ என்று திடீரெனச் சொல்லிச் சென்ற முன்னால் பணிசெய்த முதலாளியின் மீதோ, காலத்தின் மீதோ, ஏன் விதியின் மீதோ கூட அவன் பழிபோட வில்லை. அதேநேரம் எவ்வித குற்றப் பத்திரிக்கையையும் வாசிக்கவில்லை.
வாழ்வை, அது அழைக்கும் வழியில் சென்று, இடையில் அறிமுகம் செய்யும் ஆட்களோடு இணைத்துப் பயணிக்கத் தயாராய் இருந்தான்.
தற்போது மகிழ்ந்தனின் வாழ்வானது, பிரபாகரனை அறிமுகம் செய்து இருந்தது. இந்த அறிமுகமானது இருவரது எதிர்காலத்தையும் எவ்வித மாற்றங்களிற்கு உட்படுத்தி, இவர்களிடம் இருந்து எதைப் பெற்று எதனைப் பரிசளிக்கப் போகின்றது என்பதைக் கதையோடு பயணித்து நாமும் தெரிந்து கொள்வோம்.
Very nice starting sis👌👍🥰 eagerly waiting to read this story ❤️
Nice start sis…. Keep rocking….
Good & Positive Starting
Nice starting
Nice starting sis 😃😃😃😃
nice starting
மகிழ், ரொம்ப positive person ah இருக்கானே!!… இனி எப்படி இருக்கான்னு பார்க்கலாம்!!… Nice start!!..
Super😍