அத்தியாயம் 3
பிரபாகரன் கொடுத்த கார் சாவியைத் தூக்கிப் பார்த்தான் மகிழ்ந்தன்.
முகவரியை உரைத்தவன், “காரை, அங்க டெலிவரி கொடுத்திடு.”
“ஆனா சார்? நீங்க சொல்லுறதைப் பார்த்தா, அது பார் மாதிரியில்ல தெரியிது.?”
அவன் தலையசைத்து, “பாரோட மேனேஜர் கார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணி, உடனே வேணும்னு கேட்டாரு. ஏதோ அவசரம் போல.”
வியப்பாய் நோக்கிய மகிழ், “அதுக்குள்ளயா, காரை வேலைப் பார்த்துட்டீங்க சார்.?”
“டேய், நீ வேற! ஏற்கனவே வேலையை முடிச்சு வச்சிருந்தோம். நாளைக்கு, டெலிவரி கொடுக்குறதா இருந்துச்சு. இப்ப, ஏதோ அவசரம்னு கொண்டு வர சொல்லிட்டாரு.”
“ம்ம்..” என்றவன் வாகனத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்து வந்து, “என்ன பிரச்சனை.?”
“ஏன்டா, நீயும் மெக்கானிக் ஆகப் போறியா? என்னோட வேலைக்கு வேட்டு வச்சுடாதடா!”
“ஐயோ! என்ன, சார் இது? ஏதோ உங்க புண்ணியத்துல தான் ரெண்டு மாசமும் வண்டி ஓடுது. அந்த நன்றி என்னைக்கும் இருக்கும் சார்.”
“அதுசரி! நானும் எவ்வளவு நாளா சொல்லுறேன். இந்தச் சாரை விட மாட்டிறியே நீ.?”
“படிச்ச படிப்புக்கு மரியாதைக் கொடுக்கணுமே.?”
பிரபாகரன் சிரித்து, “சத்தியமா சொல்லுறேன், நீ எல்லாம் சென்னைக்குச் செட் ஆக மாட்ட. இப்படி இருந்தா, இங்க பிழைக்க முடியாது!”
“அதுக்காக, என்னோட குணத்தையோ பேச்சையோ அடையாளத்தையோ மாத்திக்க முடியாது சார்!”
“பிடிவாதம் நல்லது தான். ஆனா, அது உன்னோட வளர்ச்சிக்குத் தடை செய்யும் பொழுதும், நேர்மைக்கான சரியான அங்கீகாரத்தைக் கொடுக்காத போதும் கொஞ்சம் தளர்த்திக்கிறது தான் நல்லது. இல்லைனு வச்சுக்கோ, நீ சொன்னியே அடையாளம் அது உனக்கு இல்லாம போயிடும்!”
“நீங்க சொல்லுறது உண்மையா இருக்கலாம் சார். ஆனா, நான் நானா இருப்பேன். இல்லாம போச்சுனு, நான் நம்புனா தான் அடையாளம் என்னை விட்டுப் போனதா அர்த்தம். மகிழ்ந்தன்ற பேரும், அதை மத்தவங்க சொல்லி கூப்பிடும் போது எனக்கும் அவங்களுக்கும் வந்து போற அந்த ஒரு செகண்ட் சந்தோஷமும் போதும் சார்.
என்னோட நம்பிக்கை, என்னை இதுவரைக்கும் ஏமாத்தினதே இல்ல. ஒரு டீ குடிக்க வழி இல்லாம நின்னேன். நீங்க வந்தீங்க. இப்ப வரைக்கும் சாப்பாடு போட்டு, தங்க இடமும் கொடுத்துட்டு இருக்கீங்க. இதோ, ஓனர்கிட்ட பேசி தேவைக்கு இதுமாதிரி சின்னச் சின்ன வேலையைத் தந்து பணத்துக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கீங்க. இதுக்கு மேலயா, நான் என்னை மாத்திக்கணும்? நான் இப்படியே இருந்தாதான், உங்களை மாதிரி மனுசங்க கிடைப்பாங்க.
காலையில இருந்து வேலைப் பார்த்திருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க சார், நான் காரை விட்டுட்டு வர்றேன்!” என்ற மகிழ் கிளம்பிச் செல்ல, எப்பொழுதும் போல் இன்றும் அவனை வியப்புடனே பார்த்தபடி இருந்தான் பிரபா.
|||||
கண்களைச் கூசச்செய்யும் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான மதுபான விடுதி. உயர்தட்டு மக்களின் பொழுது போக்கிற்கான, ஆஸ்தான இடமாகப் பல காலமாய் இருந்து வருகிறது.
மாலை மங்கி விட்டால் போதும், இவ்விடம் புத்துயிர் பெற்றுவிடும். மீண்டும் பகல் பொழுது வரும் வேளையில் சோம்பலாகி உறக்கம் கொள்ளும். தேவையைப் பொறுத்து மது முதல் மாது வரை தாராளமாய்க் கிட்டும். உடலையும் மனதையும் தடம் மாற வைக்கும் போதையில் துவங்கி, நிபந்தனையற்ற கலவி வரை அனைத்தும் அரங்கேறும்.
ஒருநாள் உறவிற்காக விடுதியில் இணைவோரும் உண்டு. வெறும் பார்வையாளர்களாய் மட்டும், அங்கு வந்து செல்வோரும் உண்டு.
அவ்விடத்தைப் பொறுத்தவரை, லவனிகா அப்படியான பெண் தான். மது, ஆடல், பாடல் போன்றவைகளைத் தனது எல்லையாய் வகுத்துக் கொண்டவள். அநேக ஆண் பெண் நண்பர்கள் உண்டு அவளிற்கு. எனினும், அனைவரையுமே பொது இடங்களோடு மட்டுமே நிறுத்திக் கொள்வாள்.
அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, தன்னையும் தனது பின்புலத்தைப் பற்றியும் மற்றவர்கள் அறிந்து கொள்வதை அவள் விரும்பவில்லை.
மற்றொரு காரணம், தனிப்பட்ட முறையில் சொந்தமாய் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்திவரும் தனக்கென்று ஒரு தரநிலையை வைத்திருந்தாள். தனது அந்தரங்க வாழ்வு மற்றும் ஆசைகளினால், அடுத்தவரின் பார்வையில் அந்நிலை இறக்கம் கொள்வதை அனுமதிக்க மாட்டாள்.
ஆகையால் பணியாளாக உடன் இருக்கும் பானுமதியைத் தவிர, நெருக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்தவித நட்புறவும் இல்லை லவனிகாவிற்கு. உண்மையில் அவள், தன்னை எவரையும் நெருங்க விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
|||||
திருமண அரங்கம், மணப்பெண் திடீரென மாயமானதால் கலவரம் கொள்ள, லவனியின் பெற்றோர் பானுவைப் பிடித்துக் கொண்டனர்.
“எங்க போனானு உனக்குத் தெரியாம இருக்காது. ஒழுங்கா எங்கக்கிட்டச் சொல்லீடு!” என்று விசாரிக்க, “நிஜமாவே எனக்குத் தெரியாதுங்க. மாப்பிள்ளையோட தம்பிக்கிட்ட தான்..” என உரைக்கும் பொழுதே, பாவையின் கண்கள் அவனிடம் சென்றது.
பானுவையே பார்த்திருந்த அவன், மறுப்பாய்த் தலை அசைத்திட, “நான் ரெஸ்ட் ரூமுக்குப் போயிருந்தேன். அதுனால இங்க என்ன நடந்துச்சு, மேடம் எங்க போனாங்கனு எதுவும் எனக்குத் தெரியாது. இதோ, அவங்க மொபைல் கூட என்கிட்டதான் இருக்கு. பாருங்க!” என்று அழுத்தமாய் உரைத்தாள்.
பணிப்பெண்ணிடம் விசாரித்து நேரத்தை விரயமாக்க விரும்பாமல், காவல்துறையின் உதவியை நாடினர் லவனியின் பெற்றோர்.
மாப்பிள்ளையானவோ, அவள் தன்னையும் தனது குடும்பம் உறவுகள் மற்றும் விருந்தினர்களையும் அவமானப் படுத்தி விட்டதாய் உரைத்துக் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான்.
சுபநிகழ்வு தடைபட்டுப் போனது, புதிய தொழில் கைநழுவி செல்லும் அபாயம், திடீரென மறைந்து போன மகள் என்று செய்வது அறியாது தவித்தார், லவனியின் தந்தையான ஜெயசேகர். காவல் துறையினருக்குத் தகவல் அனுப்பிவிட்டு, மணமகனையும் சமாதானம் செய்யும் பணியில் இறங்கினார்,
“இது, எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம்னு தெரியுமா? ஒரு பொண்ணை இப்படித்தான் வளர்ப்பீங்களா? உங்களுக்கு இதுல, பிஸினஸ் ஒரு கேடு. பெத்த மகளையே சரியா பார்த்துக்க முடியல. இந்த இலட்சணத்துல, உங்களை நம்பி தொழில்ல நான் பணத்தைப் போட்டு ஏமாந்து போகணுமா.?” என்று வரைமுறையின்றி அவரின் வயதையும் கருத்தில் கொள்ளாது வார்த்தைகளைக் கொட்ட, இடம் கலவரமானது.
லவனிகா, தனது வாகனத்தைத் தவிர்த்துச் சென்றதால், அவளைக் கண்டறிவது சற்றுச் சிரமமாகத் தான் இருந்தது. விருந்தினர்களின் வசதி மற்றும் இன்னப்பிற காரணங்களிற்காக, அப்பகுதிகளைச் சுற்றி இருந்த புகைப்படக் கருவிகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்தது வேறு, காவல் துறையினரின் பணியினை மேலும் சவாலாக மாற்றி விட்டது.
மதுபான விடுதியில், இரண்டு கோப்பை மதுவை உள் இறக்கி இருந்தாள் அவள். அங்கு வந்ததுமே, பணியாளிடம் உதவி கேட்டு உடையையும் மாற்றிக் கொண்டாள். நேரம் செல்லச் செல்ல, அருந்தும் மதுவின் அளவு அதிகரிக்க, போதை தலைக்கு ஏறியது.
சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அவளால் உணர முடியாமல் போக, மெல்ல மெல்ல சுயநினைவை இழந்தாள்.
|||||
இரவு நேர விளக்குகள் ஒளிர்ந்து, சாலையை வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தன. இருபுறமும் கண்களைச் சுழற்றிய படியே வந்தான் மகிழ்ந்தன்.
மதுபான விடுதியின் வாயிலில் வாகனத்தை நிறுத்தியவன், பிரபா கொடுத்து அனுப்பிய கைப்பேசியில் இருந்து அதனின் உரிமையாளருக்கு அழைப்பு விடுத்தான்.
“ஹலோ சார்..”
“எஸ்.”
“சார், செட்ல இருந்து உங்க காரைக் கொண்டு வந்திருக்கேன்.”
“எங்க இருக்க?”
“பாருக்கு வெளிய.”
“பார்க்கிங்ல வண்டியை விட்டுட்டு, கீயை வாட்ச்மேன் கிட்ட கொடுத்துடு. நான், கால் பண்ணிச் சொல்லிடுறேன்!” என்றிட, வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்குச் சென்றான்.
அங்கிருந்த வேலை ஆளிற்கு முன்னரே விபரம் சொல்லப்பட்டு இருக்க, இடம் ஒதுக்கித் தந்தான்.
வண்டியை நிறுத்துவதற்கு, “ரைட் சைடுல, இன்னும் கொஞ்சம்..” எனப் பணியாளன் உதவிட, பெருங்கூச்சல் ஒன்று இருவரது கவனத்தையும் ஈர்த்தது.
இளம் யுவதி ஒருவள் நிதானம் இன்றி தள்ளாடியபடி நடந்து வர, நான்கைந்து போதை ஆசாமிகள், “ஏய், நில்லுடி!” என்று சப்தமிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர்.
“போங்கடா!” என அவர்களை அலட்சியம் செய்துவிட்டு அவள் வெளிப்பக்கம் நோக்கி நடக்க, வேகமாய்ச் சென்று அப்பெண்ணின் கைக்கால்களைப் பற்றித் தூக்கினர்.
அவள், “நோ! டோண்ட் டச்!” என்றபடி அவர்களின் பிடியில் இருந்து விடுபடப் போராடிக் கொண்டிருக்க, காவலாளி ‘இதெல்லாம் இங்கு இயல்பு!’ என்பது போல் கண்டும் காணாமல் இருந்தான்.
அந்நிகழ்வை அதிர்ச்சியுடன் நோக்கிய மகிழ்ந்தன், “சார், அங்க பாருங்க. அந்தப் பொண்ணை..” எனப் பேச முயற்சிக்க இடைமறித்த காவல்காரன்,
“தம்பி, வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போ. இதெல்லாம் உனக்குத் தேவை இல்லாத விஷயம்!” என்று கண்டித்தான்.
“அடப் போயா! ஒரு பொண்ணைத் தூக்கிட்டுப் போறானுங்க. தேவை இல்லாத விசயமாம்!” என, ‘தான் செய்யப் போகும் பணி எவ்வித பின்விளைவைக் கொண்டு வருமோ?’ என்ற சிந்தனையில் கைப்பேசியை இயக்கிச் சட்டைப் பையில் போட்டு கொண்டு வேகமாய் ஓடினான்.
போதையின் காரணமாய் மிருகங்களாய் மாற்றம் அடைந்திருந்தவர்களிடம் இருந்து அப்பெண்ணை விடுவிக்க, அதற்குள் மதுபான விடுதியின் பொறுப்பாளர், சீருடை அணிந்த சில பணியாளர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
“இங்க, என்ன நடக்குது?” என விசாரிக்க, நடந்த நிகழ்வை உரைத்தான் மகிழ்ந்தன்.
“சரி, நீ கிளம்பு. நாங்க பார்த்துக்கிறோம்!” என்று அவனை வெளியேற்ற முனைய,
“கிளம்பணுமா? அதெல்லாம் முடியாது சார். பார்த்துக்கிறோம்னா என்ன அர்த்தம்? உங்களை எப்படி நம்புறது?” என எதிரில் நின்று இருந்தவர்களை அலட்சியம் செய்து, அவளை ஆதரவாய் தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.
‘இங்கு நடக்கும் நிகழ்வுகள் வெளியில் தெரிய வந்தால், பெரும் பிரச்சனை ஆகிவிடும்!’ என்பதால், விடுதியின் ஊழியர்கள் மகிழ்ந்தனை உடனடியாய் அங்கிருந்து வெளியேற்றுவதிலேயே முனைப்பாய் இருந்தனர்.
போதையில் இருந்தவர்களைப் பணியாட்கள் பிடித்து வைத்துக் கொள்ள, பிரச்சனையைப் பெரிதாக்க விரும்பாது, பேச்சு வார்த்தை நடத்தினார் பொறுப்பாளர்.
“அந்தப் பொண்ணை, பத்திரமா நாங்க அவங்க வீட்டுல விட்டுடுறோம்!”
“உங்க இடத்தை நம்பி வந்தவங்களோட பாதுகாப்பைப் பத்தி யோசிச்சிருந்தா, இப்படி நடந்திருக்காதே சார்? இதுல, நீங்க பத்திரமா கொண்டு போய் விட்டுடுவீங்கனு நான் நம்பணுமா.?”
“ஏன்டா? போனா போகுதுனு பொறுமையா பேசுனா, ரொம்பத்தான் துள்ளுற? சுத்தி எவ்வளவு பேர் இருக்கோம்னு பாரு. நீ, ஒரே ஒரு ஆளு. உன்னைக் கொன்னு தூக்கிப்போட, அஞ்சு நிமிஷம் போதும் எங்களுக்கு!”
“இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாமலா, நான் உதவி செய்ய வந்திருப்பேன்.? எனக்குத் தெரியும், என்னால என்ன முடியும் முடியாதுனு. இங்க நடக்குறது எல்லாத்தையும் வீடியோ கால்ல, என் ஃப்ரெண்ட் பார்த்துக்கிட்டு இருக்காரு. படிச்ச மனுஷன். என்ன செய்யணுமோ, அதை இந்நேரம் செய்ய ஆரம்பிச்சிருப்பாரு!” என்றிட, மறுபுறம் தனக்கு வந்த காணொளி அழைப்பை காட்சியுடன் பதிவு செய்து கொண்டிருந்தான் பிரபாகரன், அதேவேளையில் காவல் துறைக்கும் புகார் அளித்து விட்டான்.
அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி அதிர, நெருக்கத்தில் சைரன் ஒலி கேட்டது.
இரவு நேர ரோந்து பணிக்காக, தினமும் சப்தமிட்டபடி காவல் துறையினரின் வண்டி செல்லும் தான். எனினும், அது இத்தனை நெருக்கமாய்க் கேட்காது. விடுதி இருக்கும் பகுதிக்குள் வராது, பிரதான சாலையிலேயே சென்றுவிடும்.
மகிழ்ந்தன் உரைத்த விசயமும், அதிகப்படியான டெசிபலில் கேட்ட ஒலியும் விடுதியைச் சேர்ந்தவர்களைப் பதற்றம் கொள்ள வைக்க, சில நொடிகளில் காவல் துறை வாகனம் விடுதிக்குள் நுழைந்தது.
Super sis nice epi 👍👌😍
💛💛💛💛💛
super magizh nee pana vishayam crt ippadi tha irukanum
சூப்பர்!!… இனி இதனால என்ன ஆகப் போகுதோ???… Interesting!!..
Interesting