அத்தியாயம் 6
ஒலித்த கைப்பேசியை எடுத்து செவியோடு இணைத்தான் மகிழ்ந்தன்.
“பிரபா சார்..”
“அப்பாடி! நல்லவேளை என்னை ஞாபகம் வச்சிருக்க. ரொம்ப சந்தோஷம்!”
“என்ன சார்.?”
“பின்ன என்னடா.? நைட் போனவனை ஆளைக் காணோமேனு நான் மூச்சைப் பிடிச்சிட்டு உட்கார்ந்து இருந்தா, நீ ஒரு ஃபோன் கூட பண்ணல! நான் போட்டாலும், அட்டண் பண்ணிப் பேச மாட்டிற? காரோட ஓனருக்குக் கால் பண்ணிக் கேட்டா, அவன் அப்பவே போயிட்டான்னு சொல்லுறாரு. நான், என்னனுடா நினைக்கிறது.?”
“சார், நான் ஒன்னும் வயசுப் பொண்ணு இல்ல.”
“அடப்பாவி! பொண்ணுங்கனு மட்டும் இல்ல, ஆம்பளைங்களுக்குமே இப்ப இருக்கிற காலக்கட்டத்துல சேஃப் இல்லனு தான், நான் சொல்லுவேன்.”
“அச்சோ! என்ன சார், இப்படிச் சொல்லுறீங்க.?”
“அடிச்சுத் தூக்கிட்டுப் போயி, உடம்புல இருக்கிற பார்ட்ஸ் எல்லாம் எடுத்து வித்திடுவானுங்கடா. உன்னையும் என்னையும் மாதிரி, இங்க பிழைக்க வந்தவன் இலட்சம் பேரு இருக்கான். நமக்கெல்லாம் ஏதாவது ஆச்சுனா, ஏன்னு கேட்க கூட நாதி இல்ல. நம்மளை பெத்தவங்களால, போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையிறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்? போலீஸ் காரவங்க கேஸை விசாரிச்சு முடிக்கிறதுக்குள்ள, இவங்க மனசு நொந்து செத்தே போயிடுவாங்க!”
பிரபாவின் பேச்சினில் திகைத்த மகிழ், “சார் சார் சார், போதும்! என்ன இப்படிப் பேசுறீங்க? நல்லதாவே நினைப்போம். நல்லதே நடக்கும்!”
“ஆமா நினைச்சு!” என மறுபுறம் அலுத்துக் கொண்டவன், “அனுபவம், நம்ம எண்ணங்களையே மாத்தி விட்டுடும்டா. இவ்வளவு அப்பாவியா இருக்காத!”
“அப்பாவித்தனம் வேற! இயல்பு வேற சார். நான், இப்படித்தான்!” என்று மகிழ் சிரிக்க, “சரி, இப்ப எங்க இருக்க.?”
“மகாபலிபுரம்!”
“அங்க, எங்கடா போன?”
“அர்த்த ராத்திரில டிரைவர் வேலை ஒண்ணு கிடைச்சிச்சு சார்.”
“அதுசரி! ஏன், என்னோட காலை எடுக்கல.”
“ஃபோனை சைலண்ட்ல வச்சிருந்தேன். கவனிக்கல.”
“பத்திரமா வந்து சேரு, மகிழா!”
“சரி சார்!” என்றுவிட்டு இணைப்பைத் துண்டிக்க, கிழக்கே எழுந்த கதிரவனின் ஒளியில் செதுக்கிய பொன் போல மிளிர்ந்தது, பல்லவர் கால கலைத் திறனிற்குச் சான்றாய் இருக்கும் அவ்விடம்.
இரு கரங்களையும் கட்டிக் கொண்டு, வாகனத்தின் மீது சாய்ந்து நின்றபடி, சூரியனின் உதயத்தைப் பார்த்து இருந்தாள் லவனிகா.
“மேடம்..” என்ற அழைப்பில் திரும்பிட, தண்ணீர் பாட்டிலை நீட்டினான் மகிழ்ந்தன். அதை வாங்கி முகம் கழுவி, வாயைக் கொப்பளித்து விட்டு நிமிர்ந்தவளின் கையில் தற்போது தேநீர் கோப்பையைக் கொடுத்தான்.
ஆவி பறந்த காலை பானம், தொண்டைக்குள் சூடாய் இறங்கிட, போதையின் மயக்கம் மெல்ல மெல்ல விடைபெற்றுச் சென்றது.
அருந்தி முடித்தவளின் முகமும் உடலும் ஒருவித தெளிவிற்கு வந்திருக்க, “தேங்க்ஸ் மேன்!” என்றாள் மகிழிடம்.
“அச்சோ! தேங்க்ஸை சொல்லி துரத்தி விட்டுடாதீங்க மேடம். எனக்குக் கண்டிப்பா சம்பளம் வேணும்.”
“சரி சரி, தர்றேன்.”
“அப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு. எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க, நான் வீடியோ எடுத்து வச்சுக்கிறேன்.”
புரியாமல் பார்த்தவள், “எதுக்கு?”
“இல்ல, நீங்க தெளிவா தான் சொன்னீங்களானு தெரியல. இதையும் போதையில சொல்லிட்டு, அப்புறம் யார் நீனு திரும்ப கேட்டுட்டீங்கனா.?”
அவள் சிரித்து, “நீ எப்பவுமே இப்படித்தானா.?”
“இப்படியே தான். அப்பப்ப எல்லாம் மாத்திக்கிறதுக்கு என்கிட்ட வேற முகமோ குரலோ இல்ல.”
வியப்பில் அவளின் விழிகள் விரிய, “நைஸ் ரிப்ளை!”
“தேங்க்ஸ் மேடம்.”
“சரி, உன்னோட பேர் என்ன.?”
“மகிழ்ந்தன்.”
“மகிழ்ந்தன்!” எனச் சொல்லிப் பார்த்தவளின் முகம் அனிச்சையாய் மலர்ந்திருந்தது.
“உங்க பேரு மேடம்.?”
“லவனிகா.”
“இந்த டிரைவர் வேலை எப்ப வரைக்கும் போகும்.?”
“எனக்கு உன்மேல இருக்கிற நம்பிக்கை குறையாத வரைக்கும்.”
புரியாமல் குழம்பியவன், “என்ன சொன்னீங்க மேடம்.?”
“நாளைக்கு வேலையில ஜாய்ன் பண்ணீடு. எனக்கு, இனி நீதான் டிரைவர். ப்ளஸ் அசிஸ்டெண்ட்.”
“அசிஸ்டெண்ட்டா? ஐயோ, அதுக்கு நிறைய படிச்சிருக்கணுமே.?”
“ஏன், நீ என்ன படிச்சிருக்க?”
“டுவல்த்.”
“இந்தமாதிரி என்னைப் பார்த்துக்கிறதுக்கு, இவ்வளவு படிச்சிருந்தா போதும்.”
“ஓ.. ஓகே மேடம்.”
“அப்புறம் பாடிகார்டாவும் இருக்கணும்.”
“ஹான்..?” என்று திருதிருவென விழித்தவன் முன்னும் பின்னுமாய் திரும்பி ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் காட்டி, “என்னோட பாடிய பார்த்தீங்களா? முருங்கைக்காய் கூட கொஞ்சம் வலிமையா இருக்கும். இந்த பாடிய வச்சுக்கிட்டு நான் கார்ட் வேலை பார்க்கவா? நிஜமாவே தெளிஞ்சிட்டீங்களா? இல்ல, இன்னும் போதையில தான் இருக்கீங்களா? நான் வேணும்னா, இன்னொரு டீ வாங்கித் தரவா?” என மூச்சு விடாமல் பேச, கலகலவென சிரித்தாள் அவள்.
“மேன். நான் ஒன்னும் கோல்டு இல்ல, தூக்கிட்டுப் போறதுக்கு. அதேபோல பெரிய செலிபிரிட்டியும் இல்ல, எல்லாரும் என்மேல வந்து விழுகுறதுக்கு. பிஸினெஸ் பக்கமோ ஃபேமிலி பக்கமோ எதிரிங்கனு யாரும் பெருசா இல்ல, உயிர் பயத்தோட வாழுறதுக்கு. ஐம் ஜெஸ்ட் எ நார்மல் பர்சன். நேத்து நைட் நடந்த மாதிரி ஏதாவது நடந்தா, என்னை சேஃப்டி பண்ண ஒரு ஆள் வேணும். நீ அதுக்கு சரியா இருப்பனு தோணுச்சு. அதான் சொன்னேன்.
டுவன்டி ஃபோர் பார் செவன், எப்பவும் நீ என்கூட என்னோட ஷேடோ மாதிரி இருக்கணும். என் வீட்டுலயே தங்கிக்கலாம். ஃபுட் ப்ரோவைடிங்கும் உண்டு. உன்னோட பதில் என்ன, சொல்லு!”
“எல்லாமே நீங்களே தருவீங்களா மேடம்.?”
தலை அசைத்தவள் சற்றே நிதானித்து, “ஹேய்.. மேன். டிரஸ், பேஸிக் நீட்ஸ் எல்லாம் நீதான் பார்த்துக்கணும்.”
“சரி சரி, யூனிஃபார்ம் எல்லாம் நானே தச்சுப் போட்டுக்கிறேன்.”
“வாட் யூனிஃபார்ம்? மேன் வெயிட் வெயிட். ஐ ஹேட் யூனிஃபார்ம்ஸ். மேல இருந்து கீழ வரை ஒன்னு போல ஒரே கலர்ல.? ஓ காட், ஐ ஹேட் இட். அப்படி எதுவும் செஞ்சிடாத. உன்னோட டிரஸ்ஸையே ரெகுலரா வியர் பண்ணு. பட், கொஞ்சம் பெட்டரா டிரை பண்ணு. என்ன.?” என அவனது உடையை முன்னும் பின்னும் பார்த்துவிட்டு, “இப்ப நீ போட்டிருக்கதை ப்ளீஸ் திரும்பவும் போடாத. என்ன கலர் மேன் இது? கெஸ் பண்ணவே முடியல.”
“என்கிட்ட இருக்குற நாலு நல்ல சட்டையில, இதுவும் ஒன்னு. அதைப் போய் இப்படிச் சொல்லீட்டீங்களே மேடம்?”
“நல்ல சட்டையா.? ஓ காட்! அப்ப, மத்தது எல்லாம் எப்படி இருக்கும்?”
“சரி விடுங்க மேடம். வேலை இல்லாட்டினா பரவாயில்ல. நான், வேற தேடிக்கிறேன்!”
அவனது சொற்களைக் கேட்டுத் திகைத்தவள், “என்ன மேன், சடனா இப்படிச் சொல்லீட்ட.?”
“வேற என்ன செய்ய? என்கிட்ட தான், நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நல்லசட்டை இல்லையே.?”
“இண்ட்ரெஸ்ட்டிங்!” எனப் புன்னகைத்தவள், “உன்னோட மொபைல் கொடு!”
“எதுக்கு மேடம்?”
“ஒரு கால் பண்ணணும்.”
“என்னோடதுல பேச முடியாது மேடம். பணம் இல்லாதனால, ரீசார்ஜ் பண்ணல. இது என் ஃப்ரெண்டோடது. இதுல பேசுங்க! நான், அவருக்கிட்ட சொல்லிக்கிறேன்.” என்று பிரபாவின் கைப்பேசியைக் கொடுத்தான் மகிழ்.
தனது நிறுவனத்தின் மேலாளருக்கு அழைத்திட.. மறுபுறம், “ஹலோ.”
“ஐம் லவனிகா ஹியர்.”
அவன் பதறி, “மேடம், நீங்க எங்க இருக்கீங்க? உங்களைக் காணோம்னு பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு.”
“சுச்சுவேஷன் என்ன.?”
“மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க மேரேஜை கேன்சல் பண்ணீட்டுப் போயிட்டாங்க. காம்பென்ஷேசனா, ஒன் குரோர் கேட்டிருக்காங்க, சார்க்கிட்ட இருந்து!”
“அது, அவங்க பிஸினெஸ். அவங்களே பார்த்துக்கட்டும்.”
“சாரோட ஆளுங்க ஒருபக்கம், போலீஸ் காரங்க இன்னொரு பக்கம்னு தேடிக்கிட்டு இருக்காங்க.”
“கம்பிளைண்ட் கொடுத்திருக்காரா?”
“இல்ல மேடம். அன்அஃபீஸியலா சர்ச் பண்ணுறாங்க.”
“ஓகே, நான் பார்த்துக்கிறேன். எனக்கு ஒரு வேலை ஆகணும்!” என்றவள் தனது தேவையை உரைக்க, “எஸ் மேடம். நான் அரேஞ்ச் பண்ணுறேன். நீங்க ஹோட்டலுக்குப் போங்க.” எனப் பேச்சை முடித்தான் அவன்.
“மகிழ் காரை ஸ்டார்ட் பண்ணு.”
அவன் கேள்வியாய் பார்க்க, “ஹோட்டலுக்கு, நான் அட்ரஸ் சொல்லுறேன்!” என்றவள் ஏறி அமர, வாகனத்தை இயக்கினான்.
வழியில் ஆடவனின் பின்புலத்தைப் பற்றி கேட்டறிந்து கொண்டாள். சரியாய் வறுமைக் கோட்டில் நிற்கும் சராசரி குடும்பம் எனப் புரிந்தது.
தனது மேலாளர் உரைத்த நட்சத்திர விடுதிக்குச் சென்றவள் அங்கிருந்த பொறுப்பாளரிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, “ஃபைவ் மினிட்ஸ்கு முன்னாடி தான் உங்க கம்பெனி மேனேஜர் கால் பண்ணாரு மேடம். இது என்னோட கார்ட்!” எனத் தனது விசா அட்டையைக் கொடுத்தவன் அதற்கான பின் நம்பரையும் உரைத்தான்.
“இதுனால உங்களுக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”
“என்னோட பர்சனல் கார்ட் தான் இது. சார் அமௌண்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டாரு. நோ இஸ்யூஸ்.”
“தேங்க்யூ.”
“ரூம் புக் பண்ணிடவா மேம்.?”
“யா, டூ ரூம்ஸ்!” என்றவள் வெளியேறி வர, “என்ன மேடம் வந்துட்டீங்க? ரெஸ்ட் எடுக்கப் போறீங்கனு நினைச்சேன்.”
“ஏன், உனக்கு ரெஸ்ட் வேணுமா.?”
வருத்தத்துடன் தலை அசைத்தவன், “எஸ் மேடம். நைட் எல்லாம் தூங்கல.”
“கொஞ்சம் பர்சஸ் பண்ணணும், வா. மதியம் ரெஸ்ட் எடுத்துக்கோ.” என்றவள் நகரில் இருந்த பன்மாடி விற்பனையகத்திற்கு அழைத்துச் சென்றாள்.
தனக்கு மாற்றுடை, ஆண்கள் அணியும் உடையில் இரண்டு வகை என ஒவ்வொன்றாய் தேர்வு செய்து எடுத்து கொடுக்க, விலையை பார்த்த மகிழிற்கு மயக்கம் வராதது ஒன்றுதான் குறை.
‘எப்பாடி? இவ்வளவு காசுக்கு எல்லாம் துணி விக்கிறாங்களா என்ன.? அப்படி இந்த சட்டையில என்னதான் இருக்கு?’ என வியப்புடன் அதனை திருப்பிப் பார்க்க, “அங்க இருக்கு பார், டிரையல் ரூம். சைஸ் சரியா இருக்கான்னு, போய் போட்டுப் பாரு!” என்றாள் லவனிகா.
அவனிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.
“ஏது எனக்கா?”
“ஆமா, என்னாச்சு?”
“இல்ல மேடம் வேணாம். நான் இதுவரைக்கும் பிளாட்பாரத்துல விக்கிற சட்டையைத் தவிர வேற எதுவும் போட்டது இல்ல.”
“அதுனால என்ன, இப்பப் போடு.”
“வேணாம் மேடம். நல்லா இருக்காது எனக்கு. அங்க இருக்க பொம்மையைப் பாருங்களேன்? அதுமாதிரி அழகா இருந்து, இந்த டிரஸ் போட்டா பார்க்க நல்லா இருக்கும். நான் போட்டா, எலும்புக்கூடுக்கு துணி போர்த்தி விட்டமாதிரி உடம்போட ஒட்டாம நிக்கும்.”
சின்னதாய்ச் சிரித்தவள், “யார் சொன்னா, அப்படி?”
“எனக்கே தெரியும்.”
“நல்லா இருக்குமா இருக்காதானு உனக்கு எப்படி தெரியும்? பார்க்கிற நான்தான் அதைச் சொல்லணும். போய், சேஞ்ச் பண்ணீட்டு வா.”
அவன் மறுப்பாய்த் தலையசைக்க, “என்ன மகிழ்?”
“மேடம் மேடம். இந்த காசுல என்னோட ஒரு மாச பொழுதை ஓட்டிடுவேன். இவ்வளவு காசுக்கு எல்லாம் துணி போட்டா, அதை நினைச்சு நினைச்சே எனக்கு நாலு நாளைக்குத் தூக்கம் வராது!”
“உன்னை ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன். அங்க உன்னை மாதிரி டிரஸ் போட்டா, உள்ளேயே விட மாட்டாங்க. நான் சொல்லுறது புரியிதா? இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக்கணும். அதுதான், நமக்கு மரியாதை!”
அவன் இன்னுமே தயங்கி நிற்க, “உனக்கு வேலை கொடுத்த, என்னோட ஆர்டர் இது. சேஞ்ச் பண்ணு!” எனக் கட்டளையாய் உரைக்க, வேறு வழியின்றி சென்றான் அவன்.
ஐந்து நிமிடத்தில் வந்தவனைப் பார்த்து, “குட்!” என்று மேல் இருந்து கீழாய் ஆராய்ந்தவள், “பிரைஸ் டேக்கைக் கூட ரிமூவ் பண்ணாம போட்டிருக்க?” என அங்கே பணிபுரியும் பெண்ணை அழைத்து கத்தரிக்கச் சொன்னாள்.
“ஓகே. உன்னோட டிரஸ்ஸே போட்டுக்கோ. ரூமுக்குப் போயி குளிச்சி ரெடியாகிக்கலாம்!” என்றுவிட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு அவள் செல்ல, ஒன்றும் புரியாமல் பின் தொடர்ந்தான் மகிழ்ந்தன்.
Very nice epi interesting 👍👌
Good…
Super cute😍
💛💛💛💛💛
இன்ட்ரஸ்டிங்!!… நல்ல flow la கொண்டு போறீங்க!!..
Nice interesting eni tha magizh life vera mari iruka pothu