அத்தியாயம் 7
உப்புக் காற்று முகத்தில் உரச, கண்களிற்கு முன்னே தெரியும் கடலை வேடிக்கைப் பார்த்தபடி வண்டியில் அமர்ந்து இருந்தாள் லவனிகா.
மனம் நிர்மலமாய் இருந்தது.
அருகே ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்த மகிழ்ந்தனிடம் இருந்து சீரான இடைவெளியில் வெளிவந்த சுவாசத்தின் மெல்லிய ஒலி, அவன் பக்கம் பாவையைத் திரும்ப வைத்தது.
முதல் நாள் இரவு தான் அறிமுகமானான் என அவளால் நம்ப இயலவில்லை. இதுவரை வாழ்வினில் பார்த்த, பேசிய, பழகிய, சூழலின் காரணமாக விலகி, அல்லது இவளே விலக்கி என கடந்து வந்த மனிதர்கள் எவரும் ஏற்படுத்தாத ஓர் உணர்வை அவன் உண்டாக்கி இருந்தான்.
காத்திருந்த திருமணம் கை நழுவிப் போனதன் சுவடே, இந்நொடி அவளின் மனதில் இல்லை. தற்போது தான் புரிந்தது, ‘தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையின் மீது இருந்தது, பெரியவர்களால் இடப்பட்ட முடிச்சினால் உண்டான உணர்வு!’ என.
இதுவே உயிரும் உணர்வுமாய் பிணைந்த உறவாய் இருந்திருந்தால், இந்நேரத்திற்கு இத்தனை இலகுவான ஒரு சூழலில் பின்புலம் அறியாத ஓர் ஆடவனின் அருகே இவ்வளவு அமைதியாய் அமர்ந்திருக்க முடியுமா என்ன.?
கணவனாக வேண்டியவன் இரண்டு ஆண்டுகளாய் பாவையின் உள்ளத்தில் ஏற்படுத்தாத நம்பிக்கையையும் பாதுகாப்பையும் தாக்கத்தையும், இரண்டே நிமிடங்களில் உண்டாக்கி இருந்தான் மகிழ்ந்தன். அதுதான், அவனைத் தற்போது தன் அருகிலேயே வைத்துக் கொள்ள லவனிகாவைத் தூண்டியது.
நான்கு வயதில் அன்னையை இழந்த பின், அவளின் தந்தை தொழில் வளர்ச்சிக்காக என்று, வசதி படைத்த பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். அப்பெண்ணிற்கும் அது, இரண்டாவது திருமணம் தான்.
வந்தவள் சிற்றன்னைக்கு என வரையறுக்கப்பட்ட எந்த குணத்துடனும் பொருந்தாமல் விலகியே இருந்தாள்.
லவனிக்கு எவ்வித அசௌகர்யத்தையும் அவள் தரவில்லை. அதேபோல் மகளாகவும் ஏற்கவில்லை.
‘உனக்கு வேண்டியதைச் செய்யலாம். விருப்பம் போல் இருக்கலாம். ஆனால் எந்நிலையிலும் என்னை அன்னை என்ற உறவில் நெருங்காதே!’ இதுதான் அவளின் நிலைப்பாடாக இருந்தது.
பத்து வயது வரை தந்தையுடன் இல்லத்தில் இருந்தவள், பின்னர் தங்கும் வசதியுடன் கூடிய மேல்தட்டு மக்களிற்கு என்றே இயங்கும் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள்.
அன்று தந்தையைப் பிரிந்தவள் தான். இன்றுவரை அவருடன் இணைய இயலவில்லை.
பள்ளிக் கல்வி முடிந்த பின்னர், கல்லூரி காலம் முழுவதும் அயல்நாட்டில் கழிந்தது. ஓராண்டு காலம் அங்கேயே பணி செய்தவள், மீண்டும் தாய் நாட்டிற்குத் திரும்பும் பொழுது, அவள் முன்பிருந்த வீடு அப்படியே இல்லை.
ஜெயசேகரின் இரண்டாம் மனைவி மற்றும் மகனிற்கு உரிமையாகிப் போனது. இல்லத்தில் அவர்களின் ஆட்சி. எவருடனும் ஒட்டாமல் ஓர் அகதியைப் போல் அங்கு இருக்க இயலாது, சில மாதங்களிலேயே வெளியேறி விட்டாள்.
பட்டறிவு கொடுத்த பலத்தினால் அவளின் அன்னைக்கு உரிமையான சொத்துகளை விற்று, தனக்கென ஒரு கட்டுமான நிறுவனத்தைக் கட்டமைத்தவள், தனியாய் வீட்டையும் வாங்கி குடிபெயர்ந்தாள்.
தந்தை மகள் உறவு மட்டும், அவ்வப்போது கைப்பேசி வழியாக தொடர்ந்து கொண்டிருந்தது.
ஜெயசேகர் திருமணத்திற்கு வரன் கொண்டு வந்தபொழுது, ‘அப்பா சொல்லுற ஆளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, இனிமேலாவது அவர்கூட கொஞ்சம் நெருக்கமா ரிலேஷன்ஸிப்பை மெயிண்டெயின் பண்ணலாம்!” என்று நினைத்தே சம்மதித்தாள்.
அத்தோடு மாப்பிள்ளையும் அப்படி ஒன்றும் மோசம் இல்ல. பார்வைக்கு நன்றாகவே இருந்தான். ஒன்றிரண்டு முறை அவனைச் சந்தித்துப் பேசிய பொழுது, பெரிதாய் குறை காண இயலாத அளவிற்கு நல்குணத்துடனே நடந்து கொண்டான். பெயர் சொல்லும் அளவிற்கான தொழில். அன்னை, தந்தை, தம்பி என அளவான குடும்பம். இதைக்கடந்து லவனிக்குப் பெரிதாக எதுவும் தேவைப் படவில்லை.
“அப்பா இருந்தாலுமே நமக்குனு ஒரு ஃபேமிலி இதுவரைக்கும் இல்ல. மேரேஜ் ஆனா, எனக்காகனு ஒரு குடும்பம், ஒரு துணை கிடைக்குமே.?” என்ற ஆசையும் எதிர்பார்ப்பும், அவளுள் ஒருவித மகிழ்ச்சிகரமான உணர்வைத் தூண்டி இருந்தது.
நிச்சயம் நடந்து இரண்டு வருடங்களாய் அவன் சரியாக அவளுடன் பேசாமல் இருந்ததைக் கூட, தவறாய் எண்ணவில்லை.
“பிஸினஸ் பண்ணா அப்படித்தான். நானும் கன்ஸ்ட்ரெக்ஷன் வொர்க் பார்க்கிறேன். எப்ப ரெண்டு பேருக்கும் டைம் கிடைக்கும்னு சொல்ல முடியாது. கிடைக்கும் போது, பேசிக்கலாம். எப்படினாலும் மேரேஜுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒன்னா, ஒரே வீட்டுல தான இருக்க போறோம்? அப்ப லைஃபை என்ஜாய் பண்ணலாம்!” என்று திட்டமிட்டாள்.
வருங்கால கணவனிடம் அதைப் பகிர்ந்த பொழுதுகூட, “நீ இவ்வளவு அண்டர்ஸ்டேண்டிங்கா இருக்கிறது, எனக்கு ரொம்ப ரிலீஃபா இருக்கு!” என அவன் மறுமொழி உரைத்ததோடு சரி.
அதன்பின்னர், இவள்தான் அவ்வப்பொழுது அழைத்துப் பேசுவாள். இரண்டு மூன்று வார்த்தைகளில் பேச்சை முடித்துக் கொள்வான் அவன்.
‘அதிகம் பேச மாட்டான் அவன்!’ என்ற புரிதலால், லவனியும் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொண்டாள். ஆனால் திருமணமே ஒரு தொழில் முறை ஒப்பந்தம் என அறிந்த பொழுது, ஏனோ அதை அவளால் ஜீரணிக்க இயலவில்லை.
‘ஒப்பந்தத்தின் பெயரில் முடிச்சிடப்படும் உறவில் இருந்து, தான் எதிர்பார்த்த குடும்பமும் அதன் அரவணைப்பும் எங்ஙனம் கிட்டும்.?’ என்ற வினா, அவளை முழுமையாய் அப்பிணைப்பில் இருந்து பின்வாங்க வைத்து விட்டது.
கடந்து போன நிகழ்வுகளை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
உடலை மெல்ல அசைத்து ஒரு கொட்டாவியை வெளியேற்றியபடி, இமைகளைப் பிரித்தான் மகிழ்ந்தன்.
அரவம் உணர்ந்து அவள் திரும்பிட, “ரொம்ப நேரம் தூங்கிட்டேனா மேடம்?”
அவள் புன்னகைக்க, “ஒரு நிமிசம், மூஞ்சியைக் கழுவிக்கிறேன்!” என்று வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலோடு இறங்கினான்.
வாகனத்தின் பக்கக் கண்ணாடியைக் கீழிறக்கி கதவின் ஜன்னல் பகுதியில் முழங்கையைப் பதித்து கையின் விரல்கள் அனைத்தையும் மூடி அதன்மீது தனது தலையின் பின்பக்கத்திற்கு ஆதரவு கொடுத்தபடி, அவனைப் பார்த்தாள் லவனிகா.
உடைகளை வாங்கிக் கொண்டு விடுதி அறைக்கு வந்து அவனைத் தயாராக சொன்ன போது, “எனக்கா ரூம்? எவ்வளவு மேடம் வாடகை?” என விசாரித்து, பெரும் ஆர்பாட்டமே நடத்தி விட்டான்.
“அச்சச்சோ! இவ்வளவு காசுக்கு எல்லாம் நான் ஆளே இல்ல. நீங்க முதல்ல ரூமை கேன்சல் பண்ணுங்க. நான் பப்ளிக் பாத்ரூம்ல ரெடி ஆகிக்கிறேன்!” என்றவனை முறைத்தவள், “ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னியே மேன்? அப்படியே பாத்ரூம்லயே படுத்துப்பியா?”
“அதுக்குனு இந்த ரூம்ல படுக்கணுமா? ஏசியோட குளிர்ச்சிக்கு இங்க இருக்குற மெத்தை முதல் கொண்டு ஒவ்வொன்னும் சில்லுனு இருக்கு. அதை தொட்டுப் பார்த்தாலே உடம்பு எல்லாம் கூசுது. சத்தியமா என்னால தூங்க முடியாது. அதோட தூக்கமும் வராது. எனக்குக் காரே போதும். கண்ணை மூடி டிரைவர் சீட்ல உட்கார்ந்தா, தானா தூக்கம் வந்துட்டுப் போகுது?” என்று வெளியேறி ஓடினான்.
“ஏய் நில்லு. என்னோட ஆர்டர் இது, ரூமுல போய் ரெடியாகிட்டு வா.” எனக் கட்டளையிட்டு அவனை நிறுத்த, தயாராகி வந்த அடுத்த நொடியே தனக்கென்று பதிவு செய்த அறையை,
“உங்க ரூம் இருக்கட்டும் மேடம். ஆனா எனக்கு வேணாம். இதுக்கு ஒத்துக்கிறதா இருந்தா, உங்களுக்குக் கார் ஓட்டுறேன். இல்லேனா, நான் இப்படியே கிளம்புறேன். நீங்க வேற ஆளை டிரைவரா போட்டு, வீடு போய் சேருங்க!” எனப் பிடிவாதமாய் ரத்துசெய்ய வைத்து விட்டான் மகிழ்ந்தன்.
உணவிற்காக, உயர்ரக நட்சத்திர விடுதி சென்ற போதும் இதுதான் நிகழ்ந்தது.
“ஏது, காபி நூறு ரூபாயா.?” என விலை பட்டியலைப் பார்த்தவனிற்கு பசி மரத்துப் போனது.
“காபி வித்தே, இந்த ஹோட்டலை கட்டி இருப்பாரு போல ஓனர்!” என மனதில் எண்ணியதை வாய் வழியாய் வெளியிலும் உரைக்க, சட்டென்று சிரித்தாள் லவனி.
“மேன், பசிக்குச் சாப்பிடுறப்ப அது எவ்வளவு விலைனு எல்லாம் பார்க்கக்கூடாது!”
“விலையை பார்த்ததுமே பசி போயிடுச்சு. இதுல எங்க இருந்து சாப்பிடுறது? நீங்க சாப்பிட்டு வாங்க மேடம். நான் கார்ல வெயிட் பண்றேன்.” என எழுந்தவனை, “ஏய் உட்காரு! உனக்கு வேலைக் கொடுத்ததுக்கு, நீ தர்ற மரியாதையா இது.? என்னை இன்செல்ட் பண்ணுற மாதிரி நடந்துக்காத மகிழ்!” என்று சற்று காட்டமாகவே உரைத்தாள்.
“ஐயையோ! நான் எங்க உங்களை இன்செல்ட் பண்ணேன்?”
“நான் ஆஃபர் பண்ணுறதை, வேணாம்னு மறுக்கிறதும் இன்செல்ட் தான்.”
“அப்படியா? இப்படி எல்லாம் எனக்கு யாரும் சொல்லித் தரலயே? கொடுக்கிறது உங்களுடைய விருப்பம். அதை ஏத்துக்கிறதும் மறுக்கிறதும் என்னோட உரிமை. இதுல எங்க இருந்து அவமரியாதை வந்துச்சு?
ஆமா, நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சீங்க? இப்படிச் சொல்லிக் கொடுத்திருக்காங்க? ஒருத்தருக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலைச் செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்துறது, வன்முறைனு தெரியாதா மேடம் உங்களுக்கு.?”
அவள் திகைப்புடன் மகிழ்ந்தனைப் பார்க்க, “உங்களை காயப் படுத்தவோ, அவ மரியாதை செய்யவோ விரும்பல நான். அதுக்காக இந்த ஒருதடவை மட்டும் சாப்பிடுறேன்!” என மேஜையில் அவனிற்காக பரிமாறப்பட்ட உணவை உண்டுவிட்டு எழுந்தான்.
பயின்றது பன்னிரெண்டாம் வகுப்பு வரைதான் என்ற போதும், சமூகத்தையும் வாழ்வையும் தனிமனித உரிமைகளையும் உணர்வுகளையும் பற்றிய அவனின் சிந்தனையும் புரிதலும் பாவையை வியப்படைய வைத்தது.
அதை எந்நிலையிலும் தயக்கமின்றி எதிரே இருப்பவரின் முகத்திற்கு நேராய் உரைக்கும் அவனின் நேர்மை, உண்மையில் ரசனையைத் தூண்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.
தான் முதல்நாள் அணிந்திருந்த சட்டையால் முகத்தைத் துடைத்த மகிழ்ந்தன், கை விரல்களால் தலையைக் கோதிக் கொண்டு, வாகனத்தின் பக்கக் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்துக் கொண்டான்.
“உஸ்..” என வாய்வழியாய் சிறிதளவு காற்றை வெளியேற்றிட, அடுத்த நொடி இதழ்களில் புன்னகை ஓடிவந்து ஒட்டிக் கொண்டது.
முழங்கை வரை மடித்திருந்த சட்டையை கீழிறக்கி, அதனின் கசங்கலைக் கையால் நீவி சரிசெய்து மீண்டும் சரியாய் மடித்துவிட்டான். காலர் மற்றும் மார்பிற்குக்குக் கீழான பகுதியையும் அதேபோல் ஒழுங்கு படுத்தியவன், “மேடம், ரெஸ்ட் ரூம் போறேன். நீங்க.?”
“இல்ல.”
“எதுவும் வாங்கிட்டு வரவா மேடம்.?”
“ஒரு டீ மட்டும்!”
தலை அசைத்துவிட்டு அவன் செல்ல, அலையடிக்கும் கடலின்புறம் திரும்பினாள்.
‘ஏன் இப்படி ஓடி வந்த லவனி?’ என மனம் வினா எழுப்பியது.
‘இருந்திருந்தா, இந்நேரம் மேரேஜ் ஆகி இருக்கும். எந்த ஒரு புரிதலுமே இல்லாத அந்த லைஃபை எப்படி அக்செப்ட் பண்ண முடியும்!’ என்று பதில் சொன்னது மற்றொரு மனம்.
‘உன்னை யாரு அக்செப்ட் பண்ண சொன்னா? ரிஜெக்ட் பண்ணு, முகத்துக்கு நேரா. அதுக்குக்கூட தைரியம் இல்லயா உனக்கு? எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிப் பழகு!
எப்படினாலும், நீ போயித்தான ஆகணும்? உன்னோட லைஃப், வீடு, பிஸினஸ் எல்லாம் அங்கதான் இருக்கு. அதை அப்படியே விட்டுட்டு, உன்னால எங்கேயும் ஓட முடியாது.
நீ, தப்பு செய்யல. ஓடி வந்து, நீதான் அஃபெண்டர்னு பிளேம் பண்ணுற சான்சை நீயே அவங்களுக்குக் கொடுத்துட்ட. திஸ் இஸ் நாட் ரைட் ஃபார் யுவர் செல்ஃப் எஸ்டீம்!” எனத் தெளிந்த சிந்தனை எடுத்துரைக்க, தன்னைத் தானே சற்று சுயபரிசோதனை செய்து கொண்டாள் லவனிகா.
“மேடம் டீ!” என மகிழ்ந்தன் தேநீர் கோப்பையை நீட்டிட, “சென்னைக்குக் கிளம்பலாம்!” என்று அதனை வாங்கிக் கொண்டு புன்னகைத்தாள்.
💛💛💛💛💛💛
Super sis nice epi 👌👍😍
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
ரெண்டு பேரோட உரையாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!!.. சூப்பர் எபி!!..
Magizh character super😍
Snerla poi mugathu nera ninnu pathil sollu ethuku ippadi oliyanun nee thappu panlaye avanga panathu tha thappu