Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10

அத்தியாயம்-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   இன்று வாடகை கொடுக்க பாரதி பணத்தை வங்கியிலிருந்து எடுத்திருந்தாள். புது ஏ.டி.எம் கார்ட் வந்ததும் முதல் வேலையாக வாடகைக்கு தான் யோசித்தாள். போனிலிருந்து ஜீபே செய்ய நினைத்தாள்‌. ஆனால் வட்டிக்கடை ஆனந்தராஜ் நேரில் வந்து தரச்சொன்னார். அவரிடம் தற்காலிகமாக போனில் பணம் வந்து சேர்ந்தாலும் காசு சரியாக வரவு வைக்காமல் ஏதோ ‘எரர்’ உள்ளதாக செல்லிவிட்டார். அதோடு அவருக்கு பணமாக வேண்டுமென்று கூறியதால் வாடகை பணத்தை எடுத்துக்கொண்டு நடந்தாள்.

  வழியெல்லாம் ஓரளவு அறிந்தாலும் வலது பக்கமா இடது பக்கமா என்று குழம்பி நின்றாள்.

அங்கே அவளுக்கு எதிரே, புதிதான டிபார்ட்மெண்ட் கடையிருக்க அங்கிருந்த குப்பையை சரவணன் அள்ளிக் கொண்டிருந்தான்.

  அந்த டிபார்ட்மெண்ட் ஆளோ “ஏம்பா… கடைக்கு ஆளுங்க வருவாங்க போவாங்க. முதல்ல அந்த மாடு சாணம் போட்டு போயிடுச்சு. அதை சுத்தப்படுத்து.” என்று கட்டளையிட, கடை திறந்தப்போது கட்டியிருந்த வாழை மரத்தை சாப்பிட்டது மாடு. அப்பொழுது வியாபாரம் பெருகுமென மாட்டை அருகே நிறுத்தி, வணங்கி பூஜித்தனர்.
  இன்றோ அந்த மாடு வாழைத்தாரை எதிர்பார்த்து வாசலில் வந்து நின்றது. உணவேதும் இல்லையென்ற ஏமாற்றத்துடன், சாணத்தை வேறு போட்டுவிட்டு சென்றது.

  சரவணனோ “இந்தா அள்ளிடறேன்னா” என்று அள்ளினான்.
  துப்புரவு தொழிலாளிக்கென கொடுக்கப்பட்ட சட்டையும் பேண்டும் கையில் க்ளவுஸ் அணிந்திருந்தான்.

  சாணத்தை அப்புறப்படுத்திவிட்டு, திரும்ப அங்கே பாரதி தன்னையே பார்ப்பதை கண்டு, இருபக்கமும் வண்டி வரவில்லையென்று அவளிடம் வந்தான்.

“என்னங்க.. இங்க நிற்கறிங்க” என்றான். சரவணனுக்கு அவள் தங்கை ஏறும் பேருந்து நிலையத்தில் சென்று, அலுவலகம் செல்வாளென்ற வரை தெரியும். இந்த பக்கம் ஏன் வந்தாளென்று கேட்டான்.

   “அ…அது.. இந்த பக்கம் வாடகை கொடுக்க வந்தேன். உங்களை பார்த்த…தும் தேங்க்ஸ் சொல்ல நின்னுட்டேன்.” என்றாள். வட்டிக்கடை ஆனந்தராஜ் வீட்டுக்கு செல்லும் வழியில், சரவணனை கண்டதும், நேற்று பசியறிந்து இட்லி வாங்கி தந்ததை எண்ணி நன்றி நவில நினைக்கும் போது டிபார்ட்மெண்ட் செக்கியூரிட்டி சாணி அள்ள கூறியதை கண்டு ஸ்தம்பித்தாள்.

“எதுக்குங்க தேங்க்ஸ்?” என்று புரியாமல் கேட்டான்.

  “நே..நேத்து ஏதோவொரு நினைப்புல இட்லியை கருக விட்டு புகைவர வச்சிட்டேன். நீங்க வந்து அணைத்துட்டு போனிங்க. அதோட அனிதாவிடம் இட்லி வாங்கி தந்து கொடுக்க சொன்னதா அவ சொன்னா. தேங்க்ஸ். நேத்து பசிச்சது. ஆனா வேற சமைக்கற மனநிலையிலும் நான் இல்லை. நீங்க இட்லி கொடுத்துவிடவும்.. அது பசியறிந்து சாப்பாடு தந்ததுக்கு நன்றி சொல்லாம போனா நல்லாயிருக்காது.” என்றாள்.

“ஓ.. அதுவா… சரிங்க” என்று திரும்ப, “நீங்க ஏன் சாணி அள்ளனிங்க? டிபார்ட்மெண்ட் செக்கியூரிட்டி அவரே அள்ளி குப்பையில கொட்டலாமே.
   இல்லை… சாணி… அள்ளறது அருவருப்பா இருக்காது.” என்று  ஐயத்தை கேட்டாள்.

சரவணனோ துளி புன்னகையை உதிர்த்து, “கோமாதாவோடதுங்க… இதே சாணியை பூச்சி பொட்டு அண்ட விடாம முன்ன வாசலில் தெளித்தாங்க. ஏன் இப்பவும் பயிருக்கு இது உரம்‌. நம்ம ஐயர் வூட்ல கேளுங்க. சாணம் வச்சி மஞ்ச பூ எல்லாம் மார்கழி மாசத்துல நடுவழில வீட்டு வாசல்ல வைப்பாங்க. சாணிக்கு ஆயிரம் நல்லது சொல்ல இருக்குங்க.
   எந்த இடத்திலும் அசிங்கமா பார்த்தா அசிங்கம். பார்க்கற பார்வை தானே.

அதோட என் தொழில் குப்பையை தானே அள்ளணும். இதுவாது மாட்டு சாணம்.
  அங்கங்க நாய் பூனைனு நாசம் பண்ணி வைக்கும். அழுகி போனா தக்காளி, புழு வந்த பழம், அதெல்லாம் கொட்டறப்ப உடம்புல சில இடத்துல புழு பட்டு நசுக்கி தள்ளறது தான்.
குப்பையில என்ன தான் க்ளவுஸ் போட்டு அள்ளினாலும், மீந்த சோறை இரண்டு நாள் கிடந்தா குடலை பிடுங்கற மாதிரி நாத்தமெடுக்கும்.
   இந்தா.. கல்யாண மண்டபம் யார் யாரோ சாப்பிட்ட எச்சிலை கிடக்கும்‌ அந்த குப்பையெல்லாம் கூட குப்பைலாரில கொண்டுட்டு போகணும். இதாது பரவாயில்லை. சில வூட்ல காமன் பாத்ரூம் இருக்கும். காலையில எல்லாரும் ஒரே நேரத்துல வந்தா என்ன செய்வாங்க. அதோ அந்த குப்பைதொட்டி பக்கம் போனாலே மூத்திரை வாடை வரும்‌. ஆம்பளைங்க ஆளாளுக்கு அங்க ஒதுங்கிப்பாங்க. சில நேரம் நண்டு சிண்டு எல்லாம் பேண்டுவச்சிடும். ஏதாவது ஆபிஸருங்க இந்த பக்கம் போகணும் குப்பை லாரில இந்த குப்பை தொட்டி எல்லாம் மொத்தமா சுத்தப்படுத்தறப்ப மூக்கை அடக்கி, மனுஷ சாணத்தையும் அள்ளற நிலை வருமே.” என்றதும் பாரதி அருவருப்பை முகத்தில் காட்டினாள்.
இதெல்லாம் பழகிடுச்சுங்க. பார்க்கறவங்களுக்கு இந்த பக்கம் மூக்கை பொத்திட்டு போக மட்டும் தான் தெரியும்.” என்றான்.

   ”சாரி… நான் தப்பா மீன் பண்ணலை. உங்களை அவர் வேலை ஏவவும் அப்…படி கேட்டேன்.” என்றாள்.

  “நான் என்ன கலெக்டர் உத்தியோகமாங்க. எவனாவது வேலை ஏவினா முறைக்கறதுக்கு.” என்றதும் சங்கடமாய் நின்றாள்.

    பாரதியை பார்த்து “இந்தபக்கம் எதுக்கு வந்திங்க? நீங்க அனிதா கூட பஸ்ல போவிங்களே?” என்று ஐயத்தை கேட்டான்.

   “பெர்மிஷன் போட்டுட்டு வாடகை பணம் தர ஹவுஸ் ஓனரை பார்க்க போறேன். ஆக்சுவலி போன்லயே டிரான்சக்ஸன் பண்ணிட நினைச்சேன். ஆனா அவர் போன் ஏதோ எரர் ஆப்ஷன் இருக்குனு காரணம் சொல்லி நேர்ல பணம் தர சொன்னார்.” என்றாள்.

  சரவணனோ அங்கிருந்த பொதுக்குழாயில் கையை கழுவி, “ஹவுஸ் ஓனரா… வட்டிக்கடை ஆனந்தராஜ் தானே? அவன்கிட்ட நேர்ல போறிங்களா?” என்று யோசனைவயப்பட்டான்.

“ஏங்க… சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க. யாரையாவது துணைக்கு கூட்டிட்டு போங்க. ஏற்கனவே மோசமான அனுபவம் இருந்து மீண்டு வர்றப்ப கூடுதலா எச்சரிக்கையா இருங்க. எவனையும் நம்பாதிங்க” என்றான்.

பாரதி நிமிர்ந்து பார்த்தவளாக, “உண்மை தான். எனக்கு ஏற்கனவே மோசமான அனுபவம் கிடைச்சிருக்கு. அதுக்காக யாரையும் நம்பாம எச்சரிக்கையா எப்படிங்க இருக்கறது? நீங்க கலாக்கா, உங்க தங்கச்சி எல்லாருமே நல்லவங்க தானே.

ஒரு பொண்ணுக்கு அசம்பாவிதம் நடந்தா, இந்த உலகம் கூடுதலா பொண்ணுங்களை பாதுகாப்பா இருன்னு ஏன் பூட்டி வைக்கணும். இப்ப தான் நிறைய பெண்கள் முன்னுக்கு வர்றாங்க. இதுல என்னை மாதிரி ஏதாவது ஆன பெண்களால நியூஸ் வெளியே வந்து, திரும்ப வீட்டுக்குள்ள பூட்டிக்கணுமா?
    நல்லவங்க, கெட்டவங்க, நமக்கு என்னலாம் நடக்கனும்னு பிறக்கும்போதே தலையில எழுதியிருக்கும்.” என்று வருத்தமாய் அவள் பாட்டிற்கு பேசினாள்.

“அதில்லைங்க… அந்த ஆள் நட்ராஜ் வட்டி பணம் தரலலன்னா பொசுக்குன்னு வூட்ல இருக்கற பொட்டப்பிள்ளைங்க கையை பிடிப்பான்‌. அதுக்கு தான்.” என்று இழுத்தான்.

   “எனக்கு யாராவது துணைக்கு இருந்தா நல்லதுனு தோணுதுங்க. ஆனா கூட யார் வருவா? கலாக்கா அவங்க வேலையை பார்க்கணுமே. ஒவ்வொரு முறையும் கூப்பிட முடியாதே” என்றதும், சரவணன் தனது ஆட்டோ போல இருக்கும் குப்பை வண்டியை கண்டு, “ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணினா நான் துணைக்கு வர்றேங்க. ஆனா.. உங்களுக்கு..” என்று தயங்கினான்.

“நிஜமா.. கூட துணைக்கு வர்றிங்களா? அப்ப நான் வெயிட் பண்ணறேன். ஆபிஸுக்கு ஆல்ரெடி பர்மிஷன் போட்டுயிருக்கு.” என்றாள் மலர்ந்த முகமாக.

  “அந்த கோவில்ல உட்காருங்க வந்துடறேன்” என்றான்.

அதுவொரு சின்ன பிள்ளையார் கோவில். அங்கே சரவணன் வரட்டுமென காத்திருந்தாள்.
பாலபிஷேகம் செய்து கொஞ்சம் போல கேசரி வினியோகம் செய்திருக்க அதை வாங்கி கையில் வைத்து போவோர் வருவோரை கவனித்தாள்.

  இருபது நிமிடம் கழித்து துப்புரவு தொழிலாளர் உடையையும் குப்பை வண்டியையும் விட்டுவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த குழாயில் முகம் அலம்பி கைகாலை கழுவிவிட்டு, அணிந்திருந்த சட்டையிலேயே முகத்தை வலது கை புஜத்தை வைத்து தேய்து துடைத்தான்.

  “வாங்க… போயிட்டு வந்துடலாம்” என்று அவசரமாக கூப்பிட, “பிரசாதம்” என்று நீட்டினாள்.

சரவணன் கை தூய்மையாக கழுவியிருந்ததால் எடுக்க சென்றவன், “நீங்க” என்றதும் அவளிடம் ஒன்று இருப்பதை காட்டினாள்.

  “அப்ப ஓகே” என்று வாங்கி சாப்பிட்டான்.

  இருவரும் மௌனமாய் நடந்தனர். “உங்களுக்கு அப்பா அம்மா இருந்தாங்களே. அவங்களோட வாழலாம்ல. ஏன் இப்படி கஷ்டப்பட்டு இங்கலாம் இருக்கணும்.
  போலீஸே புகார் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அட்லீஸ்ட் அப்பா அம்மாவோட இருந்து இப்ப இல்லாட்டியும் வேற கல்யாணம் பண்ணிக்கலாமே. அப்படி கல்யாணம் என்றாலே பாவக்காயா இருந்தா கூட அப்பா அம்மா கூட இருக்கலாம். எதுக்குங்க தனியா இருக்கணும்?” என்று கேட்டதும், பாரதி நடந்தபடியே, “நேத்து ஒரு காரை பார்த்தேன். நம்பர் பிளேட் கூட குறிச்சி வச்சிட்டேன். எனக்கு… அது ரஞ்சித் நம்பரா இருந்தா அவனை ஏதாவது செய்து சாகடிப்பேன். என் மனசுல இதான் ஓடுது. நான் அப்பா அம்மாவிடம் இருந்தா ரஞ்சித்தை அழிக்கணும் என்ற எண்ணத்தை மறந்துடுவேன். இதுக்காக தான் தனியா இருக்கேன்.” என்றதும் சரவணன் பதில் பேசாமல் அவளை ஒரு பார்வை பார்த்தான். அதில் நெஞ்சழுத்தம் கொண்டவளோ? என்று நினைத்துக் கொண்டான்.

  வட்டிகடை ஆனந்தராஜ் வீடு வந்ததும், அவரை அழைக்க, “அண்ணோவ் உன்னை பார்க்க சோக்கா ஒரு பொண்ணு வந்திருக்கு” எனறு ஒருவன் கூறியதும் வெளிவந்தான்.‌

“வாம்மா எப்படி இருக்க. எ…எ.. நீ என்னடா?” என்று சரவணனை பார்த்து கேட்கவும், “அக்கா.. அன்னிக்கு வேஸ்டா இருக்கற துணி தர்றேன்னு சொல்லுச்சுண்ணா. அத்த வாங்க வந்தேன். அப்படியோ இவங்களும் இன்னிக்கு வாடகை தர இங்க வருவதா சொல்லவும் இட்டாந்தேன்” என்றான் சரவணன்.
 
  “ஓ.” என்றவன் ஆனந்தராஜின் மனைவியை அழைத்து கைகாட்ட அவரோ “இரண்டு நாள்ல வந்து எடுத்துக்கறேன்னு சொன்ன. ஒரு மாசமாகிடுச்சு.” என்று இரண்டு கட்டபை முழுக்க கொடுக்க, வாங்கினான்.

  அதற்குள் பாரதி “இந்த மாசம் வாடகை பணம் சார். பணத்தை போன்லயே கொடுக்கற மாதிரி வச்சிக்கலாம் சார். எனக்கு இன்னிக்கு ஆப்டே ஆபிஸுக்கு பர்மிஷன் போடற மாதிரி ஆகுது. சோ ப்ளீஸ் நெக்ஸ்ட் டைம் போன்ல போட்டுவிட்டுடறேன். உங்க பேங்க் டீட்டெயில்ஸ் மட்டும் சொல்லுங்க” என்று பாரதி கேட்டதும் ஆனந்தராஜ் மனைவியோ, “எம்மா..‌ என் நம்பரை சொல்லறேன் அதுல இனி போட்டுவிடு.” என்றார். கணவன் குணம் மனைவி அறிந்ததில் ஆனந்தராஜ் மற்றவர் முன் அடக்கி வாசித்தான்.

   அது ஒரு வகையில் பாரதிக்கு நிம்மதியளித்தது.
  “ஓகேக்கா. சார் நான் கிளம்பறேன்” என்று ரசீது போல பெற்றுக் கொண்டு நகர்ந்தாள்.

  சரவணனும் இரண்டு கட்டப்பையை எடுத்தபடி பின்தொடர்ந்தான்.‌

“யோவ்…அந்த பொண்ணு இந்த பையனுக்கு சொந்தமா? லவ்வரா? எதுக்கும் விமலாவிடம் விலாவரியா கேட்டுக்கோ. நீ பாட்டுக்கு நாய் தேங்காயை நக்கி வைக்கற மாதிரி பின்னால அலையாத. ஏன் துட்டு போன்லயே போட்டா உனக்கு எங்க நோவுது. வீட்டுக்கு வந்து தரச்சொல்லியிருக்க. அதுக்கு தான் என்னை அவசரமா படத்துக்கு போனு விரட்டினியா. எங்கயாவது எவளிடமாவது கைவைச்சி பிரச்சனையை இழுத்த… நானே சொத்துல விஷத்தை வச்சிடுவேன்.” என்று அதட்டினாள்.

ஆனந்தராஜோ ஊருக்கே ராஜா என்றாலும் வீட்டுக்கு துடைப்பக்கட்டை என்ற பாணியில் “இந்தா.. புதுசா சிவகார்த்தியன் படம் வந்துதேனு போக சொன்னேன். என்னை தப்பா நினைக்கற” என்று நழுவினார்.

  இங்கே சரவணன் பாரதி இருவரும் பிரிய வேண்டிய இடம் வந்ததும், “எனக்கு இந்த கார் நம்பர் டீட்டெயில் ஆர்.டி.ஓ ஆபிஸ்ல எப்படியாவது வாங்கிடுவேன். சப்போஸ் அந்த அட்ரஸுக்கு போறதா இருந்தா உங்களை கூப்பிடலாமா? கூட வருவிங்களா? ஜஸ்ட் அவன் தானானு க்ளாரிப்பை பண்ணிக்க” என்று கேட்டாள்.

சரவணன் எதுவும் பேசாமல் தலையாட்டினான். “ஓகே.. நான் அப்ப அப்படியே கேப் புக் பண்ணி ஆபிஸுக்கு போயிடறேன். நீங்க?” என்றாள்.

“அப்படியே பொடி நடையா போயிடுவேங்க.” என்றவனிடம், “இல்லைங்க… எனக்காக இவ்ளோ தூரம் வந்திங்க. இதை வச்சிக்கோங்க இரண்டு கட்டப்பை வேறல. ஆட்டோல போங்க.” என்று இரண்டு நூறு ரூபாய் தாளை நீட்டினாள்.

  அதனை பார்த்து, “இல்லிங்க… பணம் எல்லாம் வேணாம்.” என்று மறுத்துவிட்டு இரண்டு கட்டப்பையை எடுத்துக் கொண்டு சென்றான்.

  பாரதியோ பணத்தை தந்து அவமரியாதை செய்துட்டேனா? ஆனா அவர் இருக்கற நிலைமைக்கு பணம் உபயோகமாக இருக்கும்னு நினைச்சேன்’ என்றவளோ கேப் வரவும் அதிலேறி சென்றாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

4 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!