Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-5

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-5

அத்தியாயம்-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சரவணன் ஆட்டோ போல் அமைப்புள்ள குப்பை வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தான்.
எதிரே ஒரு பெண், ஆயாசமாக நடந்து செல்ல, ஹாரன் அடித்தான்.
சாலையில் அப்பொழுதும் வழிவிடாமல் அப்பெண் அவள் பாட்டிற்கு நடக்க, அந்த நேரம் கலா அக்கா “ஏம்மா..‌ ஹாரன் அடிக்கே காது கேட்கலை” என்று இழுக்க, அந்த இழுவைக்கு ஏற்ப பாரதி கலா மீதே வந்து சாய்ந்தாள்.

கலா சற்று உடல்பருமன் கொண்ட உருவமென்றாலும், குப்பையை போட்டுவிட்டு முன்னேற்பாடு இல்லாமல் இழுத்தமையால் இந்த தடுமாற்றம் ஏற்பட, பாரதி கலா மீதே விழவும், சரவணன் வண்டியை நிறுத்திவிட்டு ஓடிவந்தான்‌.

“கலாக்கா என்னாச்சு.” என்று வந்து தூக்க, கலாவோ, “இன்னாப்பா இது மேல பொத்துனு விழுந்துடுச்சு. பைத்தியம் பிடிச்சவளா?” என்று நிதானமாக பார்வையிட, பாரதியோ “சாரிக்கா… நான் ஏதேதோ நினைப்பில கவனிக்கலை” என்று மன்னிப்பு வேண்டினாள்.‌

“ஏன் சரவணா… இது அந்த புள்ள மாதிரியே இல்ல?” என்று கேட்க, சரவணனோ “அ..அந்த பொண்ணு தான்கா” என்று கூறினான்.‌

தன்னை கற்பழித்த ரஞ்சித் நிர்வாணத்தோடு வீடியோவை வெளியிட்டு விட்டானா? தன்னை அந்த பொண்ணு தான் என்கின்றனரே?’ என்று பயந்தவளாக, “எ..எந்த பொண்ணு? என்னை எப்படி தெரியும்?” என்று ஓடுங்கினாள்.

சரவணன் கூற தயங்க, கலாவோ “ஏம்மா… அன்னிக்கு டிரஸ் எல்லாம் அரையும் குறையுமா நினைவுயில்லாம மயங்கி குப்பையில கிடந்தியே. அப்ப சரவணன் தான் உன்னை முதல்ல பார்த்தான். அப்பறம் ஹாஸ்பிடல்ல போக என்னை கூப்பிட்டான். நானும் அவனும் தான் கவர்மெண்டு ஆஸ்பித்திரில சேர்த்தோம். அன்னிக்கு நீ கண்ணு முழிக்கற வரை போலீஸ் எங்களை விடலையே. நீ கண் திறந்து ஏதோ ஒரு பையன் உன்னை கெடுத்துட்டதா சொன்னதும் தான் எங்களையே உட்டாங்க. ஆமா… உடம்புலாம் சரியா போச்சா. நல்லா கீறியா? மனசுல கண்டதையும் போட்டு உழப்பிட்டு நடந்து வந்தியா? உங்க வூட்ல எப்படி அதுக்குள்ள உன்னை தனியா விட்டாங்க. கொஞ்ச நாளுக்கு கூடவே இருக்க வேணாம்‌.” என்றதும் பாரதி கண்ணீர் வடித்து அழவும், “ஏ.. என்னம்மா..” என்று பரிவாய் கேட்க, “நான் வீட்லயிருந்து வந்துட்டேன். நேத்து ஈவினிங்லயிருந்து ரோட்ல தான் பைத்தியம் போல கால் போன போக்குல நடந்துட்டு இருக்கேன்.” என்று குலுங்கி அழுதாள்.

“அய்யய்யோ.. ஏன்.. உங்க வீட்ல சேர்த்துக்கலை. சரவணா என்னப்பா இது” என்று கலா விழிக்க, சரவணனோ நேத்துலயிருந்து ரோட்ல நடப்பதாக பாரதி கூறியதில் இரவு சாப்பிடாமல் சுத்துவதுபுரிய, “அக்கா… அவங்களை அந்த படிக்கட்டுல உட்கார வை. நான் போய் டீ பிஸ்கேட் வாங்கிட்டு வர்றேன்.” என்று வயிற்று பசி அறிந்தவனாக, முதலில் அதை வாங்க ஓடினான்.‌

அதற்குள் கலா அங்கே உட்கார வைத்து, “தண்ணி குடிக்கறியா?” என்று கேட்டதும் பாரதி தலையாட்டினாள்.‌

சரவணன் ஓட்டும் வண்டியின் முன்பக்கம் தண்ணீர் பாட்டில் இருக்க, அதனை எடுத்து கொடுத்தார்.

பாரதி இரண்டு மடக்கு விழுங்கவும் முகம் சுழித்தாள்.
“அச்சோ… கார்ப்ரேஷன் தண்ணீம்மா. ஏன் பிடிக்கலையா?” என்று கேட்க, கலாவை பார்த்து அப்படியெல்லாம் இல்லை என்பதாக மறுத்து, தண்ணீர் பருகினாள்.

அதற்குள் ஒரு கையில் டீயும், மறுகையில் சூடான வடையும் பிஸ்கேட்டும் வாங்கி வந்தான் சரவணன். பாரதி புறம் நீட்ட, சங்கடமாய் இருந்தாலும் பெற்றுக் கொண்டாள்.
நேற்று மாலை வீட்டிலிருந்து வந்து கால் போனா போக்கில் நடந்து, நேற்று பாழடைந்த கோவிலில், இருள் கவ்விய இடமாக படுத்துவிட்டாள். காலையில் எழுந்ததும் மனம் மீண்டும் தன்னிலையை சிந்திக்க, நடக்க ஆரம்பித்தவள் இங்கே இவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. இரவு உணவு உண்ணாமல் நடந்து அசதியில் பசி வாட்ட, முதலில் டீயில் பிஸ்கேட் முக்கி எடுத்து சாப்பிட்டாள். வடையையும் விழுங்கி டீயை சரித்தவள், மீண்டும் சரவணன் வாட்டர் பாட்டிலில் நீரை அருந்தினாள்.

“உனக்கு யாராவது தெரிந்தவங்க இல்லையா? உங்கப்பா அப்மாவிடம் நான் பேசட்டா?” என்று கேட்க, நான் இனி அப்பா அம்மாவை பார்க்க போக மாட்டேன்” என்று உடைந்து அழுதாள்.

“அய்யோ.. உன்னை இப்படியே உட்டுட்டு போனா பயமா கீதேம்மா. உன்னை வேற குப்பைத் தொட்டியில பார்த்தே கதி கலங்கி, ஒரு வாரமா உன் நினைப்பு தான். இப்ப இப்படி பார்த்துட்டு உட்டுட்டு போனா சோறு இறங்காதே” என்று கலா கூற, சரவணனுக்கும் அதே எண்ணம்.

என்ன தான் அவன் இயல்பான வேலையில் மூழ்கினாலும், குப்பையில் அழகான பெண்ணின் நிலையை பார்த்து ஆடிப்போனதில், பாரதி நினைவு வராமல் இல்லை. என்ன… அவன் சூழ்நிலையும் பகிர்வதற்கும் ஆட்களின்றி மனதில் புதைத்து கொண்டான்.

“இன்னா பண்ணலாம் சரவணா?” என்று சரவணனிடமே ஆலோசனை கேட்க, “அக்கா… முதல்ல நம்ம வேலையை பார்ப்போம். அதுவரை பாண்டி அண்ணா டீக்கடையில் இருக்கட்டும். வேலை முடிச்சிட்டு வந்து இவங்களிடம் பேசு” என்றான்.

“ஆமாம்மா.. இன்னும் நாலைந்து தெரு போய் குப்பை வாறனும்‌. இல்லைன்னு வை… என்னம்மோ நாங்க தான் குப்பை போட்டு இந்த தெருவை நாறடிச்சதா போற வர்றவனுங்க குப்பை தொட்டியை கிராஸ் பண்ணறச்ச, குப்பை வழியுது இந்த குப்பைக்காரங்க க்ளீன் பண்ணினா இன்னானு பேசிட்டு போவானுங்க.” என்று கூறவும், அவர்கள் நிலை புரிந்தவாறு, நான் அங்க இருக்கேன் அக்கா. நீங்க வோலை முடிச்சிட்டு வாங்க. எனக்கு… உங்ககிட்ட கொஞ்சம் உதவி தேவைப்படுது” என்று கண்ணீரை துடைத்தாள்.

கலாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்து “சரி.. சரவணா நான் பாண்டி டீ கடையில் இந்த பொண்ணை விட்டுட்டு சொல்லிட்டு போறேன். நீ கிளம்பு” என்று அனுப்ப சரவணன் சரியென்று புறப்பட்டான்.

கலாவோடு பாரதி நட்நது சென்று பாண்டி அண்ணாவின் டீக்கடையில் அமர்ந்து தலையாட்டி பாரதி ஏதோ சொல்வதை பார்த்தவன், எப்பவும் செல்லும் அப்பார்ட்மெண்ட் பக்கம் வண்டியை திருப்பினான்.

பாரதிக்கு தன்னை இந்த நிலையில் தள்ளிய ரஞ்சித்தை போலீஸில் உள்ளே தள்ள நினைத்தாள்.

தாய் தந்தை தனக்கு உதவவில்லை என்றதும் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டாள். சௌந்தரராஜன் மணிமேகலை இருந்த நிலையில் அவளை போக விட்டு விட்டனர். அவர்கள் இருந்த நிலையில் தடுத்தாலும் பாரதி சொல்வதை கேட்க முடியாது. பாரதி பிடிவாதம் அறிந்து, தடுத்தும் சென்றுவிட்டாளே.

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு உடை இருப்பிடம் கூட தற்போது இல்லாத நாடோடி நிலைமையில், தனக்கு நீதி கிடைக்க, போலீஸில் சென்றால் அவர்கள் பெற்றோரிடம் போக கூறலாம். இல்லை… ஒன்றுமில்லாத தன்னிடம் தந்தை கூறியது போல தன்னை வேறு விதமாக நடத்தினாலும் ஆச்சரியப்படுவதில்லை.
முதலில் உணவு உடை இருப்பிடம் என்ற அத்தியாவசியத்தை கவனிக்க வேண்டும். நேற்று போல பாழடைந்த கோவில் எல்லாம் தினமும் உறங்கயியலாது. யாராவது கவனித்தால் மீண்டும் தன் மானத்தை சூறையாட தானே வழிவகை செய்தது போல ஆகும்.

அதனால் தங்க ஒரு இடம் மட்டும் இருந்தால், தான் வேலைக்கு எப்பவும் போல சென்று வந்து மாத சம்பளம் பெற்று தன் வயிற்றை நிறைக்க முடியும். அதோடு போலீஸிடம் சென்றால், அப்பா அம்மா உதவ வரவில்லை என்றால் கூட, தன்னை குப்பை வண்டியில் தன்னிலை இழுந்து கிடந்த போது இருவரும் காப்பாற்றியதை போலீஸில் கூறினால் அவர்கள் வாய் மொழியை கேட்டு தனக்கு உதவலாம். போலீஸ் கேஸ் ஃபைல் செய்ய உதவியாக அமையும்.
கேஸ் ஃபைல் செய்துவிட்டால் அந்த ரஞ்சித்தின் இருப்பிடம் அறிந்து அவனை கைது செய்வார்கள்.’ இப்படி எல்லாம் நினைத்தாள் பாரதி.

அவள் எண்ணங்களுக்கு கடவுள் செவி சாய்பாரா? என்று தான் இனி காண வேண்டும்.

கலாவோ பாரதி இங்கே இருப்பதால் அவசரமாய் வந்து சேர்ந்தாள்.

சரவணன் வரும் பொழுது கலா கையை பிசைந்து, பாரதியிடம் தவிப்பாய்‌ நின்றார்.‌

சரவணன் வந்ததும் பாண்டி அண்ணன் டீ தர, சற்று ஒதுக்கமாய் “என்னக்கா? ஏதோ உதவணும்னு சொன்னாங்க” என்று கேட்டான்.‌

“அத்த ஏன் கேட்கற சரவணா… இந்த புள்ளையை கெடுத்தவனை போலீஸ்ல புகார் தர அவங்க அப்பா அம்மா வூட்ல விடலையாம். நடந்ததை மறந்துடு, கல்யாணம் கட்டி வைக்கிறேன்னு சொல்லி மனசை மாத்த பார்த்தாங்களாம். இதுக்கு அந்த பொண்ணுக்கு பிடிக்கலை. தப்பு செய்தவனை தண்டிக்கணும்னு வூட்ல இருந்து வந்துடுச்சு போல.
இப்ப நம்ம தான் இந்த பொண்ணை ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனோம். அத்த போலீஸாண்ட சொல்ல சொல்லுது. இந்த உதவியை செய்ய சொல்லி கால்ல வேற விழுது.” என்று கூறினார்.

சரவணன் கலா அக்கா சொன்னதை கேட்டு பாரதியை விசித்திரமாக பார்த்தான்.

“பெயருக்கு ஏத்த மாதிரி புரட்சியா பேசலாம். நடைமுறைக்கு ஒத்து வரணுமே.” என்று கலா அங்கலாய்த்து, “அந்த முருகன் தான் பதில் தரணும்” என்று வேறு பெருமூச்சை வெளியிட்டார்.

“அவங்க சொன்னதுல தப்பா தெரியலைக்கா?” என்று கூறினான் சரவணன்.

கலா உதவ மறுத்து நிதர்சனத்தை எடுத்துரைக்க, சரவணன் இப்படி பேசவும் கண்ணீரை துடைத்து, “உ..உங்க பெயர் என்ன?” என்றாள்.

“ச..சரவணன்’ என்றாள்.

“அக்கா.. அந்த முருகன் பதில் தரணும்னு சொன்னிங்க. இதோ.. சரவணன் ரூபத்துல பதில் சொல்லிட்டார். நான் சொன்னதுல தப்பில்லைன்னு.” என்றதும் கலா இருவரையும் மாறி மாறி பார்த்து குழம்பினார்.‌

ஒரு பேச்சுக்கு அந்த முருகன் பதில் சொல்லணும் என்று கூற, எதார்த்தமாய் சரவணன் பாரதி பேசியதில் தப்பு என்ன? என்று வார்த்தை விட, இதில் சரவணன் பெயர் முருகனின்‌ பெயராக அமைய, பாரதி கலாவிடம் வினாத் தொடுத்து நின்றதில் ஏதேதோ மூவருக்குள் தங்கள் சந்திப்பு நல்லதற்காக என்று எடுத்துக் கொண்டார் கலா.

“சரி… வூட்ல இருந்து வந்துட்ட. இப்ப எங்க போவ?” என்று கேட்க, “நான் ஆல்ரெடி வேலைகக்கு போயிட்டு இருக்கேன் அக்கா. முப்பதாயிரம் சம்பளம் வாங்கறேன். எனக்கு தேவை… நம்பிக்கையான இடத்துல ஒரு குட்டி வீடு. வாடகை குறைவா… இப்பத்திக்கு அது போதும். போலீஸ் ஸ்டேஷன் போகறப்ப நீங்க வந்து எனக்கு உதவினா உங்களுக்கு நன்றியா இருப்பேன்.‌” என்று கூறினாள்.

கலா தலையை சொறிந்து சரவணனை காண, அவனோ, “இந்த நிலைமையில பாதுகாப்பான இடம் வீடுனா…” என்றவன், கலாவிடம் திரும்பி, “எங்க வீடு பார்க்கறது” என்று நின்றான்.‌

கலாவோ “வட்டிக்கடை ஆனந்தராஜ் வீடு இருக்கு. ஆனா அங்க… எப்படி தங்குவ? உன்னை பாத்தா வசதியான புள்ளையா தெரியுது.” என்று கூற, பாரதியோ “பாதுகாப்பா இருந்தா போதும் அக்கா. நான் இப்ப வசதியை பார்க்கற நிலைமையில் இல்லை. என் நோக்கம் அந்த ரஞ்சித்துக்கு தண்டனை வாங்கி தரணும். என்னை மாதிரி பொண்ணுங்க காதலிக்கலைன்னு சொல்லிட்டு ஒதுங்கினா, அவளை நாசம் பண்ண கூடாது.” என்றாள்.

சரவணனுக்கு அந்த ரஞ்சித் காதலிப்பதாக கூறி பாரதியை தொந்தரவு செய்து, சமயம் பார்த்து கைவரிசை காட்டியதாக புரிந்துக் கொண்டான்.‌

“அப்பன்னா வாடி தங்கம்.” என்று அழைத்து சென்றார் கலா. சரவணன் அவர்களை பின் தொடர்ந்தபடி வந்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

7 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-5”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    பாரதியோட குறிக்கோள் சரி தான், ஆனா, இவ ஒருத்தி எடுக்கிற தீர்மானத்தால இதெல்லாம் நடக்கப்போறதில்லை. ஊர் கூடி தேரிழுத்த தான் தேரே நகரும்ங்கிற மாதிரி, சரவணா, கலா அக்கா, போலீஸ், வக்கில்ன்னு நிறைய பேரோட ஒத்துழைப்பு இருந்தாத்தான்
    இதெல்லாம் நடக்கும் போலயிருக்கே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!