Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 3

மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 3

அத்தியாயம் – 3

சத்யவதியின் கையைப் பிடித்தவள் “அம்மா” என்றழைக்க, “கீர்த்தி, நான் இந்த அர்த்தத்தில் பேசலை. அங்கே நடந்ததே வேறே” எனக் கண்களில் கண்ணீரோடு கூறினார்.

“மா, எனக்கு உங்களைத் தெரியும் மா. அந்த ஆள நான் எதிர்த்துப் பேசிட்டேன்னு இப்படி ஒரு வதந்தி கிளப்பிவிட்டுருக்கான். நீங்க கவலைப்படாதீங்க. இது நீங்க பேசினது இல்லைனு மீடியாக்குச் சொல்லிட்டு, அப்படியே அந்த ஆள் மேலே மானநஷ்ட வழக்குப் போடறேன்” என்றாள்.

“அது நமக்குத் தான் நஷ்டமா முடியும் கீர்த்திமா. குரல் என்னோடது தான். நாம கேஸ் போட்டா, குரலை வைத்து நான் தான் ஈசியா ப்ரூவ் ஆகிடும். இப்போ என்ன செய்யறதுனு தெரியலை” என்று பதறினார்.

“மா, டென்ஷன் ஆகாதீங்க. இருங்க நான் நம்ம வக்கீலை வரச் சொல்றேன். அவர் கிட்டேப் பேசிட்டு முடிவு எடுக்கலாம்” என்றாள்.

“இப்போ மீடியாக்கு என்ன பதில் சொல்றது?” என மீண்டும் பதறினார் சத்யவதி.

நினைவு தெரிந்த நாள் முதல் சத்யவதி எதற்கும் கலங்கி கீர்த்திப் பார்த்தது இல்லை. அவளுக்கு விவரம் தெரிந்த பின் தான் பெற்றோர் பிரிவும் நடந்தது. அப்போது எல்லாம் கூட சத்யவதி இந்த அளவு கலங்கிக் கண்டதில்லை. அடுத்து என்ன என்பதைப் போல தான் நடந்துக் கொண்டார்.

“மா, இருங்க“ என்றவள், மேனேஜரை அழைத்தாள். அவர் வருவதற்குள் வக்கீலுக்கும் அழைத்து வீட்டிற்கு வரச் சொன்னாள் கீர்த்தி.  

மேனேஜர்  வந்ததும் “சர், இப்போ மணி ரெண்டு. சரியா நாலரை மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்னு போய் சொல்லிடுங்க. “ என்றாள்.

மேனேஜர் செல்லவும் மீண்டும் அந்த வீடியோவைப் பார்க்க, சத்யவதியோ வேதனையில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் வக்கீல் குணசேகரன் வந்தார்.

வழக்கமாக எல்லாமே சத்யவதியே பார்த்துக் கொள்வார். வக்கீல் கையெழுத்துப் போடச் சொல்லும் இடங்களில் ஸைன் பண்ணுவது மட்டுமே கீர்த்தியின் வேலை. அநேக சமயங்களில் எதற்காக கையெழுத்து என்பதைக் கூட கேட்காமல் சென்றிருக்கிறாள்.

இப்போது சத்யவதி அமைதியாக அமர்ந்திருக்க, ஸ்ரீகீரத்திதான் பேச ஆரம்பித்தாள்.

“சர், உங்களுக்கு விஷயம் தெரிஞ்சு இருக்கும். எனக்கு அந்த ஆடியோ மேலே நம்பிக்கை இல்லை. நாம இப்போ என்ன செய்யணும்?” எனக் கேட்டாள்.

“நியூஸ் வந்ததும் நான் அந்த சேனலுக்கு ஃபோன் பண்ணிப் பேசினேன்மா. அவங்க ஆடியோவை உண்மை கண்டறியும் சோதனை செய்துட்டுத் தான் வெளியிடறதா சொல்லிட்டாங்க. அதனால் நாம நேரடியா அந்த ப்ரொடியூசர் கிட்டே தான் பேசணும். அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு நமக்கு முழுசாத் தெரிஞ்சா நல்லா இருக்கும்.” என்றார் வக்கீல்.

தயாரிப்பாளர் சங்க மீட்டிங் சென்றதும், அங்கே பேசியதும் அதற்கு பின் மீடியாவில் பேசியதையும் பற்றிக் கூறினாள் ஸ்ரீகீர்த்தி.

“அந்த கருணாகரன் இத்தனை தூரம் இறங்கிப் பேசக் கூடியவர் இல்லையேமா. அதுவும் நீ பேசியதை எல்லாம் அவர் கணக்கில் கூட எடுத்துக் கொள்ள மாட்டார். நீ இந்தப் பக்கத்தில் பெரிய நடிகை தான். முதலிடத்திலும் இருக்கிறாய். ஆனால் கருணாகரன் இந்தியா முழுதும் பிசினஸ் செய்து வருபவர். உன்னைப் போல பலரை உருவாக்கியிருக்கிறார். இன்னும் உருவாக்குவார். அந்த நிலையில் இருந்து இறங்கி உன்னிடம் வம்பு வளர்ப்பது போல செய்கிறார் என்றால் நீ சொன்னது மட்டும் காரணமாக இருக்காது” என்றார் வக்கீல் குணசேகரன்.

ஸ்ரீகீர்த்தியோ “இல்லை சர், எனக்கும் அவருக்கும் இதுவரை நேரடியாக எந்த பேச்சு வார்த்தையும் கிடையாது. அவர் தயாரிப்பில் நான் நடித்ததும் இல்லை. ஒருவேளை என்னைப் போன்ற சின்னப் பெண் அவர் கருத்தை எதிர்த்ததில் ஈகோவை டச் செய்திருக்கலாம். மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது” என்றாள்.

“இதுவரை உங்க கிட்டே ஏதாவது படம் நடிக்க கேட்டிருக்காரா?” எனக் கேட்டார் குணசேகரன்.

“இல்லை” என்று கீர்த்தி கூறும்போது அத்தனை நேரம் பேசாமல் இருந்த சத்யவதி “ஆமாம்.” என்றார்.

ஸ்ரீகீர்த்தி யோசனையோடு பார்க்க, குணசேகரனோ “எப்போ கேட்டிருந்தார்? நீங்க என்ன சொன்னீங்க?” எனக் கேட்டார்.

“நான் கீர்த்தி அவர் பேனர்லே நடிக்க மாட்டான்னு சொன்னேன்.”

“ஏன்?“ என வக்கீல் கேட்க, “எனக்கு என் பொண்ணு அவர் தயாரிப்பில் படம் நடிப்பதில் இஷ்டம் இல்லை.” என்றார் சத்யவதி.

கீர்த்தி அமைதியாகப் பார்த்திருக்க, சத்யவதியும் குணசேகரணும் பேசிக் கொண்டிருந்தனர்.

“விளக்கமா சொல்றீங்களா? “

“கீர்த்தி நடிக்கும் படங்களை முடிவு செய்வது நான் தான். அஃப்கோர்ஸ் அவளுக்கும் பிடித்தால் மட்டும் தான் நடிப்பாள். ஆனால் அவளுக்குப் பிரச்சினை இல்லாமல் நடிக்கக் கூடிய படங்களை மட்டுமே ஒப்புக் கொள்வேன். அதனால் தான் பெரிய ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களோடு இன்னும் இவள் வேலை செய்யவில்லை. சின்ன தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் படங்களில் நடிப்பது கீர்த்திக்கும் ஸ்கோப் இருக்கும். அதே சமயம் மற்ற பிரச்சினைகளும் இருக்காது. இப்போது தான் கருணாகரன் ஆபீஸ் மூலம் கீர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிக்கக் கேட்டிருந்தார்கள்.”

“பின் எப்படி கருணாகரன் உங்களோடு பேசினார்?”

“முதலில் அவர்கள் ஆபீஸ் மூலம் பேசிய போது நான் மறுத்து விடவே, கருணாகரன் அவரே என்னிடம் போனில் பேசினார். அவரிடமும் நான் மறுக்க, ‘இத்தனை நாள் உன்னைச் சும்மா விட்டு வைத்தது நான் செய்த தப்பு. சீக்கிரமே நீயே உன் மகளை என்னிடம் அனுப்புவாய் பார்’னு சொல்லவும், ‘நான் இருக்கும் வரை அது நடக்காது’ னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன். அதுக்குப் பிறகு தான் இந்தப் பிரச்சினை நடந்திருக்கு”

“இன்னிக்கு வெளியான ஆடியோவில் இருக்கிற வார்த்தைகள் எல்லாம் கருணாகரனோடு இந்த படம் நடிக்க கேட்டப்போ பேசியது தானா?”

சற்றுத் தயங்கி பின் “இல்லை. கீர்த்தி முதல் முதலில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்ததே கருணாகரன் கம்பெனி தான். அந்த சமயத்தில் எனக்கும் அவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தான் இப்போ வந்திருக்கிற ஆடியோ” எனவும் வக்கீல், கீர்த்தி இருவருமே திடுக்கிட்டனர்.

“மா, அப்போ என்ன நடந்தது?” எனக் கீர்த்தி கேட்க, சத்யவதி ஏழு வருடங்களுக்கு முன் நடந்தைக் கூறினார். சத்யவதி பேசி முடித்ததும் மற்ற இருவரும் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை.

முதலில் சுதாரித்த ஸ்ரீகீர்த்தி “மா, நீங்க கவலைப்படாதீங்க. சீக்கிரம் சமாளிச்சிடுவோம்” என்றாள்.

அதன் பின் வக்கீலும் “கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் நம்ம பக்கம் உண்மை இருக்கிறதால் வெற்றி கிடைக்கும்னு நம்புவோம்” என்றார்.

கீர்த்தியின் புறம் திரும்பிய குணசேகரன் “கீர்த்தி, நீ பேசினது என்பது வெறும் சாக்குதான் கருணாகரனுக்கு. அவர் படத்தில் நீ நடிப்பது மட்டுமே அவர் நோக்கம் மாதிரி தெரியலை. அதையும் தாண்டி ஏதோ செய்ய நினைக்கிறார். அல்லது உங்க அம்மாவைப் பழி வாங்கத் தான் அவரே நேரடியா இறங்கியிருக்கிறார். இப்போ நாம பேசற ஒவ்வொரு வார்த்தையும் கவனமா இருக்கனும். சின்னத் தப்பு நடந்தாலும் அவரோட பேச்சுக்கு வலிமை சேர்க்கிற மாதிரி ஆகிடும். “ என்றார்.

“சர், இப்போ முதலில் மீடியாவச் சமாளிக்கணும். அடுத்து அந்த ஆடியோ அதை உடைக்கணும். என்ன பண்ணலாம் ?”

“மீடியாவில் இது செயற்கை நுண்ணறிவு வச்சுப் பண்ணிருக்காங்கன்னு சொல்லுங்க. என் அம்மாவோ, நானோ இதுவரை கருணாகரனை நேரடியாகப் பார்த்தது கூட இல்லைன்னு சொல்லுங்க”

“இல்லை சர் அது சரிவராது. அந்த ஆடியோவில் கருணாகரன் வாய்ஸ் இல்லை. அதோட எந்த இரண்டாம் நபரின் குரலும் இல்லை. நாம கருணாகரன் பேர் சொன்னா அவர் கிட்டேப் பேசினதா சொல்ல மாட்டார்” என்றாள் கீர்த்தி.

“ம். அப்படினா, இது அவங்க டப்பிங் பேசினதுனு சொல்லுங்க. அதை வெட்டி எடுத்து இப்படி வைரல் ஆக்கிருக்காங்கனு சொல்லுங்க”

“மீடியா ஒத்துப்பாங்களா?”

“அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? மீடியா எப்படியும் பேசத் தான் போறாங்க. அவங்களுக்குத் தேவை நம்ம பதில். நாம சொல்லிட்டா, அடுத்த அடுத்த யூகங்களைப் போடுவாங்க. ஆனால் எதுவும் பேசலைனா அவங்களை மதிக்கலைனு சொல்லிடுவாங்க. பிரபலமா இருந்துட்டு மீடியாவ பகைச்சுக்க வேண்டாம்.” என்றார் வக்கீல்.

“அப்போ கருணாகரன் விஷயம்?”

“அதை டிஸ்கஸ் பண்ணலாம். முதலில் இப்போ மீடியாவைப் பார்த்துட்டு வந்துடாலம்” என்றார்.

குணசேகரன், ஸ்ரீகீர்த்தி இருவரும் சொல்லியிருந்தபடி நாலரை மணியளவில் மீடியா முன் தோன்றி அந்தக் குரல் தன் தாயின் குரல் தான் என்றும், ஒரு படத்திற்கு டப்பிங் பேசியதை செயற்கை நுண்ணறிவு கொண்டு வார்த்தைகளை மாற்றி வெளியிட்டதாகவும் கூறினாள். மீடியா அதை ஒத்துக் கொள்ள மறுக்க, எங்களுக்குத் தெரிந்தது இதுதான். மற்றபடி உங்கள் யூகங்களுக்குப் பதில் இல்லை. என்று கூறினாள்.

கடைசியாக “மெய் எதுவென விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக் கொண்டாள்.

அத்தோடு நிருபர்களை பவுன்சர்ஸ் அப்புறப்படுத்த, வக்கீல் குணசேகரனுக்கு வேறொரு அப்பாய்ண்ட்மென்ட் இருப்பதால் அப்படியே புறப்பட்டார்.

மீண்டும் வீட்டிற்குள் வந்த கீர்த்தி தன் அன்னையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள். அப்போது கீர்த்தியின் ஃபோன் அடிக்க அவள் பேசியதை சத்யா கவனித்தார்.

“இல்லைபா, இப்போதைக்கு இவ்ளோதான் பண்ண முடியும். மேலே என்னனு வக்கீல் சொல்றேன்னு சொல்லிருக்கார்.” எனவும், எதிர்ப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ

“சரிப்பா” என்றவள், “பா, சாரி, நான் இன்னிக்கு வரலை. அம்மா கூட இருக்கேன்” என்று சொன்னாள் கீர்த்தி.

அங்கிருந்து என்ன பதிலோ “தெரியும்பா. இருந்தாலும் உங்ககூட இருக்கேன்னு சொன்னேனே  அதான்” எனக் கூறினாள்.

கீர்த்தி ஃபோன் வைக்கும்போது சத்யவதி “நீ போயிட்டு வா கீர்த்தி. என்னால் தான் அவருக்கு முழு சந்தோஷம் கிடைக்கலை. உன்னால் கிடைக்கக்கூடிய சின்ன சின்ன சந்தோஷத்தை அவருக்கு மறுக்காதே.” என்றார்.

“மா, நீங்க வேதனையில் இருக்கீங்க. நாங்க எப்படி சந்தோஷமா இருப்போம்?”

“என்னோட வேதனை பதினைந்து வருஷமா இருக்கு கீர்த்தி. ஆனால் இன்னிக்கு நடந்ததைப் பார்த்து அவருக்கு எத்தனைக் கஷ்டமா இருக்கும்னு எனக்குத் தெரியும். நீ என் கூடத் தான் எப்பவும் இருக்க. நாம எப்போ வேணா  ஒருத்தருக்கு  ஒருத்தர் ஆறுதல் தேடிக்கலாம். அவர் கூட யாரும் இல்லை. நீ கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தா, அவருக்கும் இங்கே நடக்கிறது தெரியும். போயிட்டு வா” என்று விட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டார் சத்யவதி.

அறையின் வாசல் வரைச் சென்றவர் “ஜாக்கிரதையாப் போயிட்டு வா. சமையல்காரம்மா கிட்டே சொல்லிருக்கத் தானே?” எனக் கேட்டார்.

“அது” என்று தயங்கிய கீர்த்தி “அங்கே சாப்பாடு வேண்டாம்னு அப்பா சொல்லிடறாங்க. அதனால் நாங்க வெளியில்தான் போய் சாப்பிடப் போறோம்” என்றாள்.

“ம். சரி. ஆனால் நான் இல்லைனு கண்டதையும் சாப்பிடாத. ரொம்ப நேரம் வெளியிலும் இருக்க வேண்டாம்“ என்று கூறினார் சத்யா.

பின் “எத்தனை காலம் ஆனாலும் சீதைதான் அக்னிப் பிரவேசம் செய்தாக வேண்டும்.இல்லையா” எனக் கூற, கீர்த்தி திடுக்கிட்டுத் தன் அன்னையைப் பார்த்தாள்.

உண்மைதானே என்றுதான் தோன்றியது கீர்த்திக்கு. என் அன்னை சத்யவதியும் பதினைந்து வருடங்களாக அக்னியில் தான் வாசம் செய்கிறாள். அவளின் அக்னிப் பிரவேசத்தில் தான் இன்றைக்கு ஸ்ரீகீர்த்தி திரையில் நட்சத்திரமாக ஜொலிக்கிறாள்.

நாடக மேடையில் சீதையாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி சத்யவதி, நிஜ வாழ்க்கையிலும் அதே துயரத்தை அனுபவிக்கிறாள். இராவணனின் சிறையில் இருந்ததால் சீதைக்கு நடந்த அக்னிப் பிரவேசம், குடும்பத்தினர் விரும்பாத அல்லது ஒத்துக் கொள்ளாதத் துறையில் சத்யவதி நிலைத்து இருப்பதால் குடும்பத்தினரை விட்டு விலகி இருக்கிறாள். இதுவும் அக்னிப் பிரவேசம் தானே.

தன் அன்னைக்கு எந்தப் பதிலும் கீர்த்தி கூறவில்லை. அதை எதிர்பார்க்காமல் நிறைந்த கண்களோடு அவரின் அறைக்குச் சென்றார் சத்யவதி.

-தொடரும் –

12 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – அத்தியாயம் 3”

  1. Pennaga piranthaal ithupondra problems face panni than aaga vendiyathu iruku.
    I think sathyavathi good in character. But how can she solve the problem.

  2. கதையின் நகர்வு அருமை. .. சின்ன விசயத்திற்கு பழி வாங்கறேன் சொல்லி தானும் வாழாமல் அடுத்தவர்களையும் வாழ விடறதில்லை

  3. நினைச்சேன், இந்த கருணாகரன் இவ அம்மாவ பழி வாங்கத் தான் இந்த பிரச்சனையை ஊதி பெருசாக்கறாரோ?

    1. எஸ் . எஸ். அம்மாவை பழி வாங்கத்தான். எதுக்காகன்னு வரும் எபிசோட்களில் பார்க்கலாம். நன்றி மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *