Skip to content
Home » மொழி அறியா காதல் – அத்தியாயம் 3

மொழி அறியா காதல் – அத்தியாயம் 3

திடீரென முன்னறிவிப்பு ஏதும் இன்றி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்ற மகனைக் கண்டதும் மேகலைக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

“என்ட தங்கமே. வந்துட்டா மகன்? எத்தனை வருஷம் ஆகிட்டு வெளிநாடு பெயிட்டு. இப்ப தான் இந்த அம்மாவ பார்க்க வரணும்னு நெனவு வந்துச்சா? அப்புறம் எதுக்கு வெலன கோல்ல அப்படி கத்தின? அம்மாக்கு எப்படி கவலை வந்த தெரியுமா?” எனச் சிறுபிள்ளையாட்டம் மூக்கை உறிஞ்சினார் மேகலை.

தாயைப் பக்கவாட்டாக அணைத்துக்கொண்ட நவீன், “சொரி அம்மா. நீங்க கலியாணத்த பத்தி கதைக்கவும் எனக்கு சூடாகிட்டு. ஒங்களுக்கு தான் தெரியுமே எனக்கு இப்ப கலியாணத்த பத்தி எல்லாம் நெனக்க டைம் இல்லன்டு. சரி உடுங்க எல்லாம். வந்ததும் ஒங்கட டேம தொறக்காம.” என்றான் சமாதானமாக.


யாழ்ப்பாணம் முற்றவேலி அரங்கம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

சற்று நேரத்தில் தமிழ் சினிமாவில் பிரபல பாடகரான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது.

சுற்றியும் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நின்றிருக்க, ஒரு பக்கம் பெய்ட் டிக்கெட்டில் வந்திருந்த மக்கள் மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்திருக்க, இலவச டிக்கெட்டில் வந்திருந்த மக்கள் இன்னொரு பக்கம் திரண்டிருந்தனர்.

என்ன தான் கதிரைகள் குவிந்து கிடந்தாலும் எதிர்ப்பார்த்ததை விட அதிகமான மக்கள் வருகை தந்ததால் பெரும்பானோர் நின்ற வண்ணமே நிகழ்ச்சி ஆரம்பிக்கக் காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் பிரபலங்கள் மேடையை நோக்கி வர, மக்களின் கூச்சலும் ஆரவாரமும் வானைப் பிளந்தன.

“டேய் நவீன் அங்கப் பாருடா ரம்பா…” என்றவாறு மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த முரளி விசிலடிக்க, பெருமூச்சுடன் சலிப்பாக அதனைப் பார்வை இட்டான் நவீன்.

“வணக்கம் ஜஃப்னா (யாழ்ப்பாணம்)…” என நடிகை ரம்பா மைக்கை எடுத்துப் பேச ஆரம்பிக்கவும் இளைஞர்களின் ஆரவாரம் அதிகரித்தது.

முரளி தொண்டை கிழியக் கத்த, அவன் அருகில் அமர்ந்திருந்த நவீனோ, “அடேய் மூதேவி வாய மூடுடா. காது கிழியுது. நாட்டுக்கு வந்ததும் மனுஷனுக்கு ஜெட்லாக் போக நித்திரைகொள்ளக் கூட உடாம கூட்டிட்டு வந்துட்டு எரிச்சல் டேஷ கிளப்புற.” என்றான் எரிச்சலாக.

முரளிக்கோ நவீன் திட்டிய எதுவும் காதில் ஏறவில்லை.

இன்னொரு பக்கம் மேடையை விட்டு சற்றுத் தள்ளி சனத் திரளுக்கு மத்தியில் முட்டி மோதி நின்று கொண்டு இருந்தனர் அமாயா மற்றும் சௌந்தர்யா.

“இதுக்கு தான் சொன்னேன் வானம் நான் வாரல்லன்டு. இப்பப் பாரு இப்படி அங்கேயும் இங்கேயும் அடிபட்டுட்டு ஸ்டேஜ எட்டி எட்டி பாக்கணும். இதுக்கு வராமலே இருந்து இருக்க ஏலும்.” என்றாள் அமாயா சலிப்பாக.

“ஹேய் சொரி டி. பெய்ட் டிக்கெட் எடுக்குற அளவுக்கு எல்லாம் எங்க அம்மா பொக்கட் மணி தாரல்ல டி. அதான் ஃப்ரீ டிக்கெட்ல வர வேண்டியதாப் போச்சு. நீ கோச்சுக்காம கொஞ்ச நேரம் பொறுமையா இரு. ஹரிஹரன் பாட தொடங்கினதும் சனம் எல்லாம் மௌன விரதத்துக்கு பெயித்துடுவாங்க.” என்றாள் சௌந்தர்யா.

“ஏ? மொத்த சனமும் நித்திரை கொள்ளுற அளவுக்கு கேவலமா இருக்குமா ஒன்ட ஹரிஹரனோட பாட்டு?” எனக் கேட்டாள் அமாயா நக்கலாக.

அவளை ஏறிட்டு முறைத்த சௌந்தர்யா பதிலுக்கு ஏதோ கூற வாயெடுக்க, அதற்குள், ‘காதல் ரோஜாவே…’ என ஹரிஹரன் பாட ஆரம்பிக்கவும் சௌந்தர்யாவின் கவனம் ஆர்வமாக மேடையை நோக்கித் திரும்பியது.

ஏனோதானோ எனக் கேட்டுக் கொண்டிருந்த அமாயாவும் சற்று நேரத்தில் ஹரிஹரனின் குரலில் கட்டுண்டாள்.

அதனைத் தொடர்ந்து வந்திருந்த பின்னணிப் பாடகர்கள் மாறி மாறிப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.

பெரும்பானோர் இசை நிகழ்ச்சியில் சங்கமித்து இருந்தாலும் சில களைகள் ஒரு ஓரமாக கும்பலாக சரக்கடித்துக் கொண்டிருந்தனர்.

சுற்றியும் காவல் துறையினர் பாதுகாப்புக்கு நின்றிருந்தும் ஓரளவுக்கு மேல் மக்கள் சனத்தைத் கட்டுப்படுத்த முடியவில்லை.

நவீனின் கைப்பேசி ஒலி எழுப்ப, “மச்சான் கோல் ஒன்டு வருது டா. அம்மான்னு நெனக்கிறேன். நல்லா நேரம் ஆகிட்டுல்ல. அது தான் பயந்து கோல் பண்ணுறாங்களா இருக்கும். நான் கொஞ்சம் தள்ளிப் போய் கதைச்சிட்டு வாரேன். இங்க சரியான சத்தமா இருக்குது. ஒன்டும் கேக்கறல்ல.” என்ற நவீன் அங்கிருந்து எழுந்து மேடையை விட்டு சற்றுத் தூரம் தள்ளி வந்தான்.

அங்கு கூட இலவச டிக்கெட்டில் வந்த மக்கள் குவிந்திருக்க, “என்ன இப்பிடி சனமா இருக்கு? இந்த சத்தத்துல எங்க அம்மா கிட்ட கதைக்க ஏலும்? கோல் ஆன்சர் பண்ணி கதைக்காட்டிம் அம்மா பயந்துப்போய் நித்திரை கொள்ள மாட்டாங்க. வெளியவே பெய்ட்டு கதைப்போம். அப்பிடியே என்ன சரி திண்ண வாங்கிட்டு வருவோம்.” எனத் தனக்கே கூறிக்கொண்ட நவீன் அங்கு திரண்டிருந்த சனத்தைத் தள்ளிக்கொண்டு வெளியேற முயன்றான்.

அவனது கைப்பேசியும் விடாது சத்தமிட, காற்சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை வெளியே எடுத்தவன் அதனுள்ளிருந்து அவன் எதற்கும் தேவைப்படலாம் என் எடுத்து வந்திருந்த கடவுச்சீட்டும் அவனது தேசிய அடையாள அட்டையும் கீழே விழுந்ததைக் கவனிக்கவில்லை.

கூட்டத்தை விலகி நவீன் வெளியே வரும் முன்பே திடீரெனக் கேட்ட, ‘காவலா…’ பாடலிலும் தமன்னாவின் ஆடலுடன் கூடிய வருகையிலும் இலவச டிக்கெட் பகுதியில் நின்றிருந்தவர்களுக்கு உற்சாகம் அதிகமாகி பின் வரிசையில் நின்றிருந்தவர்கள் அனைவரையும் தள்ளிக்கொண்டு மேடையை நோக்கி வேகமாக நகர்ந்தனர்.

அதில் சனத்திரளுக்கு இடையில் மாட்டிக்கொண்ட நவீனால் எந்தப் பக்கமும் அசைய முடியவில்லை.

“அடேய்களா… கொஞ்சம் வழி உடுங்கடா.” என்ற நவீனின் சத்தம் யாரின் செவிகளையும் எட்டவில்லை.

‘ச்சே… இவனுகளுக்கு நல்லா மினுக்க மினுக்க வெள்ளத் தோல கண்ணா போதுமே. எங்குட்டு நின்டுட்டு இருக்கிறோம்னே விளங்காது.’ என சுற்றி இருந்தவர்களை மனதில் அர்ச்சித்தவாறு ஒருவாறு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை விட்டு சற்றுத் தள்ளி வந்தான் நவீன்.

“அம்மா… இன்னும் நித்திரை கொள்ளாம என்ன பண்ணுற?”

“……..”

“நான் சொல்லிட்டு தானே வந்தேன் முரளியோட பயணம் ஒன்னு போறேன்னு.”

“…….”

“நான் இங்க ஹொட்டேல்ல திண்டேன். நீங்க திண்டுட்டு நேரத்தோட நித்திரை கொள்ளுங்க. நான் வர எப்பிடியும் வெலன ஆகும்.”

“…….”

“ம்ம்ம் சரி நான் வெக்கிறேன். இங்க சரியான சத்தம். நீங்க கதைக்கிறது ஒன்னும் க்ளியரா கேட்குதில்ல.”

தாயுடன் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் சற்றுத் தள்ளி இருந்த ஒரு கடையில் சிற்றுண்டி சிலவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றான்.

முன்பு இருந்ததை விட மக்கள் கூட்டம் அதிகமாகி இருக்க, நவீனால் உள்ளே செல்லவே முடியவில்லை.

இன்னுமே தமன்னா தான் ஏதோ ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்க, சுற்றியும் இளைஞர்களின் கூச்சல் காதைப் பிளந்தது.

திடீரென நவீன் நின்றிருந்த இடத்தில் இருந்த மக்கள் பெரும் கூச்சலுடன் அடித்துப் பிடித்துக் கொண்டு முன்னேறிச் செல்ல, நவீன் என்ன நடக்கின்றது என்பதை உணரும் முன்பே அங்கு சிறு கலவரமே ஏற்பட்டு விட்டது.

காவல் துறையினர் நிலைமையைக் கையில் எடுக்க முயன்றும் அனைத்தும் கை மீறிப் போய் விட்டது.

இலவச டிக்கெட்டில் வந்திருந்த மக்கள் மேடைக்கு முன் பெய்ட் டிக்கெட்டில் வந்திருந்தவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கியது மட்டுமல்லாமல் மேடைக்கு முன் பாதுகாப்புக்கு போட்டிருந்த தடுப்பையும் காவல் துறையினரையும் மீறி உடைத்துக் கொண்டு பலர் மேடையை நெருங்கியதால் இக் குளறுபடி ஏற்பட்டு இருந்தது.

போதையில் இருந்தவர்கள் அவ்விடம் நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து ஏனையோரும் இசை நிகழ்ச்சியை மேலும் அருகில் காண்பதற்காக முன்னேறி வந்திருந்தனர்.

ஏற்கனவே இடப்பற்றாக்குறை இருந்த இடத்தை இலவச டிக்கெட்டில் வந்திருந்த பெரிய மக்கள் திரளொன்றே அடையவும் பெய்ட் டிக்கெட்டில் வந்திருந்தவர்கள் கோபப்பட, பதிலுக்கு ஏக வசனத்தில் வார்த்தைகளை விட என வாக்குவாதத்தில் ஆரம்பித்து கைக்கலப்பில் முடிந்தது.

சிலர் ஒலிபெருக்கிக் கம்பங்களிலும் மின்விளக்குக் கம்பங்களிலும் கூட ஏறி நின்று கொண்டனர்.

கலவரத்தை அதிகரிப்பது போல் கதிரைகளை உடைத்துக்கொண்டு ஒருசிலர் அடிதடியில் ஈடுபட்டனர்.

பின் வரிசையில் சனத் திரளுக்குள் மாட்டிக் கொண்ட நவீனோ எந்தப் பக்கமும் அசைய முடியாமல் தடுமாற, திடீரென ஒரு பக்கத்தில் இருந்து வந்த விசையில் தள்ளப்பட்டு கீழே விழுந்தவனின் கையில் இருந்த கைப்பேசி தூரம் சென்று விழுந்தது.

நவீன் அதனை உணரும் முன்பே அவன் மீது வந்து விழுந்தாள் அமாயா.

சௌந்தர்யாவுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த அமாயா திடீர் கலவரத்திலும் சன நெருக்கத்திலும் மாட்டிக்கொண்டு சௌந்தர்யாவை விட்டு விலகி சற்றுத் தள்ளப்பட்டு வந்து விட்டாள்.

அமாயா என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும் பெரும் கூட்டத்திற்கு நடுவில் மாட்டிக் கொண்டால் அவள் மனதில் ஏற்படும் திடீர் பயத்தால் ஒருவித நடுக்கத்துடன் மூச்சு வாங்க ஆரம்பிக்கும். (Panic Attack)

இன்று கூட அப் பயத்தில் இருந்து வெளி வரவே சௌந்தர்யாவுடன் சேர்ந்து பிடிக்காவிட்டாலும் நிகழ்ச்சியைக் காண வந்திருந்தாள்.

நடந்த கலவரத்தில் லேசாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்த அமாயா திடீரென பின்னால் இருந்து வந்த விசையில் தள்ளப்பட்டு சரியாக நவீனின் மீது விழுந்திருந்தாள்.

2 thoughts on “மொழி அறியா காதல் – அத்தியாயம் 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *