அத்தியாயம்-2
ரவிபிரகாஷ் வீட்டுக்கு வந்ததும் வராததும், “இத்தனை நாள் உங்க பையன் தம் அடிக்கான் தண்ணி அடிக்கான்னு மத்தவங்க சொன்னப்ப எல்லாம் நம்பலைடி ஆனா இன்னிக்கு பெத்த அப்பாவா கண் குளிர பார்த்துட்டேன்.
பழைய காலத்துல ரயில் வண்டிலயிருந்து புகைமட்டமா கிளம்புமே அது போல சார்… சள்சள்ளுனு இழுத்து விடறான். ரொம்ப சந்தோஷமா இருக்குடி ரொம்ப சந்தோஷமா இருக்கு.
பெத்த அப்பனை கூப்பிட வந்திருக்கோமே அவர் சட்டுனு பார்த்தா தப்பாச்சே, அதுக்காகவாது சிகரெட் பிடிக்காம கட்டுக்கோப்பா இருக்கலாம்ல? இதுல.. சார் நான் டைமுக்கு வரலைன்னு முனங்கறான்.” என்று பேச, விக்ரமோ, காதில் ப்ளுடூத் மாட்டி, தந்தை பேசும் இரைச்சலை தவிர்த்து அவனது அறையில் ‘உப்ஸ்’ என்று கதவை அடைத்தான்.
ரவிபிரகாஷின் மனைவி ராதிகாவோ, “இப்ப என்னிடம் பேசி என்ன பிரோஜனம். பாதி நாள் வெளியூர்ல வேலைனு நீங்க பாட்டுக்கு போறிங்க. முதல்லயே அவன் அப்படி இப்படினு சொல்ல தான் செய்தேன். ஒரிடமா வேலை வாங்கிட்டு பையனை ஒழுங்கா வளர்கலாம்னு படிச்சி படிச்சி சொன்னேன்.
நீங்க தான் ஒரு அம்மா நல்லா வளர்த்திடுவா அப்படியிப்படி சொன்னிங்க. தோள் வரை இருக்கற பிள்ளைங்களே இப்ப எல்லாம் சொல் பேச்சை கேட்கறதில்லை. இவன் உங்களையும் தாண்டி வளர்ந்து இருக்கான். நான் எல்லாம் அவன் பக்கத்துல போனா அவன் உசரத்துக்கு பாதி தான் இருக்கேன். தலையில் தட்டி சொல்பேச்சை கேட்க வைக்க முடியுமா? இதுல ஏதாவது சொன்னா ‘சரிம்மா.. சரிம்மா’னு வீட்ல தங்காம ஓடிடுவான்.
அவன் எப்ப வர்றான் போறான்னே தெரியலைங்க. நீங்க கூட வந்து புத்திமதி சொல்லுங்கனு நான் தலைப்பாடா சொன்னப்ப எல்லாம் வேலை முக்கியம்னு இருந்திங்க. இப்ப அவன் சொல் பேச்சுக்கு அடங்கலைன்னு என்னிடம் வந்து பாயிறிங்க.
பிள்ளையை பெத்தவ மட்டுமா வளர்க்கணும்? நீங்களும் தான் அவன் இப்படி வளர்ந்ததில் பொறுப்பு. அப்ப வளர்க்கலை… கண்டிக்கலை.
இப்ப ஒத்த பிள்ளையை பெத்து ஒழுங்கா வளர்க்க நமக்கு துப்பில்லைனு ஆகிடுச்சு. அதையும் என்னிடமே கொட்டறிங்க ஏன் அவனிடம் நாலடி போட்டு சொல்ல வேண்டியது தானே” என்றார் ராதிகா விக்ரமின் தாய்.
விக்ரமை சொல்லி சொல்லி பார்த்து இனி வேலைக்கு ஆகாதொன்ற முடிவில் அயர்ந்துவிட்டார்.
ரவிபிரகாஷோ ‘ஆமா… வழிநெடுக சொல்லாமலா வந்தது. ரோட்ல யாரையோ தேடிட்டு நான் பேசியதை காதுலயே வாங்கலை’ என்று சலிப்படைந்தார் அவர்.
விக்ரமிற்கு சில கெட்ட பழக்கமுண்டு. அடிக்கடி இல்லையென்றாலும் சிகெரெட் தண்ணி முதன்மையானது என்றால் பெற்றவர் பேச்சை செவிசாய்க்க கூடாதென்ற கெட்ட பழக்கம் பின் வரும் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும்.
பள்ளி கல்லூரி படிக்கும் போது வீட்டில் சனி ஞாயிறு என்றால் தங்குவது குறைவு. கிரிக்கெட் மட்டையை எடுத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள மைதானத்தில் தறுதலை கூட்டத்தில் அவனையும் காணலாம். விக்ரமை மொத்தமாக தறுதலை என்றும் ராதிகாவால் சொல்ல இயலாது. படிப்பில் சொல்லிக் கொள்ளும்படியாக மதிப்பெண்ணை பெற்று, கேம்பஸ் இன்டர்வியூவில் இடம் பிடித்து, சென்னையில வேலை தந்து அவனை அள்ளிக் கொண்டனர்.
அந்த விதத்தில் வீடு தேடி வேலை வந்து சென்ற பெருமை அவனுக்குண்டு. விக்ரம் கூட படித்த அஜய் கூட, “அம்மா… விக்ரமை சதா திட்டுவிங்க. இப்ப பாருங்க மச்சி எல்லாத்திலும் கில்லினு ப்ரூப் பண்ணிட்டான். இப்ப திருப்பூரை விட்டு நல்ல வேலைக்கு போறான்.” என்று கூறியிருந்தான்.
ஏதோ தற்போது சென்னையில் வேலை என்று ஒரு வருடம் தனியாக வாழ, கொஞ்சம்… இல்லை அதிகமாகவே விக்ரமிற்கு திமிர் கூடிவிட்டது.
இங்கு விடுமுறைக்கு என்று வந்ததில், தந்தையை அழைத்து வர சொன்னதில், தாமதமாக எழுந்தவன் நேரத்தை பார்த்து, விழுந்தடித்து வேகமாய் வந்தவன், ஹிரிணியை சாலையில் தள்ளாட வைத்து தள்ளிவிட்டு, திட்டிவிட்டு சென்றான். அதற்குள் தந்தை பேருந்து நிலையத்தில் இறங்கி அவசரமாய் கட்டண கழிப்பிடம் சென்று வந்து முகமலம்ப, இவனோ பேருந்து வந்தால் சிகரெட்டை கீழே போடலிமென எண்ணி சிகரெட்டை ஊதிவிட்டான்.
அதற்கான பேச்சை மெடலாக வாங்கிகொண்டு, தன்னை காலையிலேயே டென்ஷன் ஏத்திய பெண் இன்னமும் சாலையில தான் சுத்திக்கொண்டு இருக்கின்றாளா என்று ஹரிணியை தேடினான்.
இங்கு ஒரு வருடத்தில் வருவது குறைந்திருக்க, யார் அந்த பெண் என்று கூட அவனுக்கு தெரியாது.
அவனை பொறுத்தவரை இல்லாத கெட்டதை ஏற்கனவே கற்றுக் கொண்டவனுக்கு சென்னை சில உபரி வார்த்தைகளாக ஆங்கிலத்தில் திட்டவும் மனதில் பதிய வைத்து விட்டது.
ஆனால் இதற்கு முன் அப்படியெல்லாம் யாரையும் திட்டியதில்லை. அதுவும் பெண்ணிடம் பேசியதும் இதுவே முதல்முறை. வார்த்தையின் வீரியம் அறிந்தவன், இனி அதை உபயோகப்படுத்த கூடாதென்ற தெளிவு வந்துவிட்ட போதிலும், ஒரு அலட்சியமும் வந்துவிட்டது.
‘அந்த பொண்ணு சரியா கவனிச்சிருக்காது அப்படியே கவனிச்சாலும் வார்ததைக்கு அர்த்தம் புரியாது’ என்று விட்டுவிட்டு பாடலை கேட்டுக் கொண்டிருந்தான்.
கிச்சனிலிருந்து அசைவ நறுமணம் கமழ, மோப்பம் பிடித்தபடி, “மீன் குழம்பாம்மா” என்று வந்தான். அடுப்பில் கொதிப்பதை கண்டவன், “மா… இதை வறுத்திருந்தா செம ருசியா இருக்கும்” என்று அபிப்ராயம் கூறினான்.
“பாதி வறுக்க எடுத்து வச்சியிருக்கேன்டா.” என்று ராதிகா மிளாகாய் தயிர் போட்டு மீனை ஊறவைத்ததை காட்டி கூற, “குட் மம்மி” என்றான்.
அந்தநேரம் ரவிபிரகாஷ் வர, “ஆமான்டி… இவன் நடந்துக்கிட்டதுக்கும், நான் திட்டின திட்டுக்கும் நீ சமைச்சிருக்கவே கூடாது. இவன் மீன் வாசம் பிடிச்சி வந்து நின்றிருக்க கூடாது. ஆனா பாரு வெட்கமில்லாம அவனும், சொரனை கெட்டு நீயும் சமைச்சி போடுற. அப்பறம் அப்பன் பேச்சை எப்படி கேட்பான்.” என்று ஆரம்பிக்க, விக்ரம் வேகமாய் வெளியேறினான்.
“அவனே உத்தியோகம்னு சென்னைக்கு போயிட்டான். லீவுக்கு வந்தவனுக்கு வாயுக்கு ருசியா சாப்பிட செய்தா இப்படி பேசறிங்களே. அவனை திருத்த ஏதாவது பண்ணுங்க. அதுக்காக அவனை குறை சொல்லிட்டே இருக்காதிங்க” என்று நகர, ரவிபிரகாஷுக்கு மகனை எவ்வழியில் திருத்துவது என்று சத்தியமாக தெரியவில்லை.
தன்னை விட வளர்ந்துவிட்டான். ஆளும் உயரத்திற்கு ஏற்ற உடற்கட்டு என்று திடகாத்திரமாக இருப்பவன் பார்வை ‘பேச்சு பேச்சோட நில்லுங்க’ என்று சொல்லும்.
இந்த ஆயுதபூஜைக்கு சனி ஞாயிறு என்று விடுமுறைக்கு வந்தவனிடம் இதற்கு மேல் எதை எதிர்பார்க்க?
நாளை மறுநாள் ஆயுத பூஜை முடிந்து இரண்டு நாள் இருந்துவிட்டு பறந்திடுவான் என பெருமூச்சை வெளியிட்டார்.
மதியம் மீன் குழம்பும் வறுவலையும் அள்ளி போட்டு சாப்பிட, “அம்மா… மீனை கூட கொஞ்ச நேரம் வறுத்திருக்கலாம்ல இங்க பாருங்க ப்ரவுனாவே இல்லை’ என்று குறை கூறியப்படி சாப்பிட்டான்.
ராதிகாவோ “உனக்குன்னு ஒருத்தி வருவாள்ல.. அவளிடம் நல்லா ப்ரவுனா கருகி போற அளவுக்கு வறுக்க சொல்லுடா. நானே கால் வலியோட நின்னு வறுத்து தந்திருக்கேன் சமையல்ல குறை சொல்லறான்.
என் வீட்டுக்காரரே எதுவும் சொல்லாம சாப்பிடறார்” என்று சென்றதும், ரவிபிரகாஷிற்கு மனைவி சொன்னதே செவியில் ஒலித்தது.
‘உனக்குன்னு ஒருத்தி வருவாள்ல’ என்ற வார்த்தை ஏதோ இவருக்கு மறைமுகமாக செய்தி சொன்னது.
அன்று முழுவதும் அவரை யோசிக்கவும் வைத்தது.
இரவு தூங்கும் போது, ராதிகாவிடம், “ராதிகா… விக்ரமுக்கு கல்யாணம் பண்ணிடலாமா?” என்று அபிப்ராயம் கேட்டார்.
ராதிகா கணவரை பார்த்து, “உங்களுக்கு என்னாச்சுங்க? அவனுக்கென்ன பொறுப்பு வந்துடுச்சு? அவன் இன்னமும் சின்ன பையங்க. கல்யாணம் செய்து என்ன பண்ணப்போறான்.” என்று கேட்டார். பாவம் எல்லா அம்மாக்களை போல தன் குழந்தைக்கு என்ன தெரியும் என்ற எண்ணம். விக்ரம் பேசிய பேச்சை அறிந்தால், அதுவும் ஒரு பெண்ணிடம் மகன் பேசியதை அறிந்தால் இப்படி பேசமாட்டார்.
ரவிபிரகாஷ் இளமையில் விக்ரம் வயதை தாண்டியவர் அல்லவா, “எவடி இவ. இன்னும் சின்ன குழந்தைன்னு சொல்லிட்டு இருக்க. இவன் வயசுல எனக்கு விக்ரம் பிறந்துட்டான்.
உன் பையன் தம்மு தண்ணினு திமிரா உலாவறான். இதுல…..” என்றவர் மனைவிக்கு சிலது இன்னமும் தெரியாததால் வார்த்தையை நறுக்கி கொண்டார். “நாம தான் நம்ம பெத்ததுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைப்போம். அதெல்லாம் உன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி பாரு. அடுத்த இரண்டு மாசத்துல, கட்டிக்கிட்டவளை வாந்தி எடுக்க வைப்பான்.” என்றதும், ”நீங்களே இப்படி பேசினா அவன் எப்படி பேசாம இருப்பான். பொண்ணுகிண்ணு ஏதாவது பார்த்து வச்சிட்டு பேசறிங்களா?” என்று கேட்டதும், இல்லையென்று தலையாட்டினார்.
”இப்ப பார்த்தா சரியா இருக்கும்னு தோன்றுது ராதிகா.” என்றார்.
“என்னவோ பண்ணுங்க. மருமக வந்தாலாவது பொறுப்பா வந்தா சரி” என்று போர்வையை போர்த்தி கொட்டாவி விடுத்து ராதிகா உறங்கினார்.
இங்கு நம் நாயகிக்கு தான், உறங்க வழியேது.
பால்கனியில் ஹரிணி அணிந்த சுடிதாரை கண்டு மாலதி “அப்பவே சொன்னேன்.. இந்த மழைக்கு சேரும் சகதியுமா இருக்கும். இந்த வெள்ளை துணியை போடாதனு. கேட்டாதானே… வந்ததும் வராததும் கழட்டி துவைச்சி போட்டிருக்க, ஆனாலும் இந்த வெள்ளை துணி லேசா அழுக்கு போகாத மாதிரி இருக்கு. இதுல கவலையா உலர்ந்துட்டு இருக்கற துணியை பார்க்கற.” என்று கூற, “அந்த டிரஸை பத்தி பேசுறதை நிறுத்தறிங்களா? சும்மா தொனதொனனு.” என்று திட்டிவிட்டு, நகம் கடித்தபடி படுத்தாள்.
“அம்மா.. அக்கா ஏன் சிடுசிடுன்னு இருக்கா?” என்று வினோதினி சுரண்ட, “அடிப்போடி.. அது தெரிந்தா நான் ஏன் முழிக்க போறேன். வந்தப்ப துணில சேர் பட்டுடுச்சானு தான் கேட்டேன். தாம்தூம்னு கத்த ஆரம்பிச்சிட்டா.
பத்து பதினைந்து முறை சோப்பு போட்டு போட்டு கோபமா கும்மி எடுத்து காயப்போட்டா. அப்பறம் எது கேட்டாலும் சிடுசிடுனு பதில்” என்றார் மாலதி.
கமலகண்ணன் பெரிய மகளை கண்டு, “என்னடா… ஏதாவது வேலை செய்யற இடத்துல பிரச்சனையா?” என்று கேட்க, சட்டென “அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா.” என்றாள்.
கமலகண்ணனுக்கோ மகள் வேலை செய்யும் இடத்தில், ஏதேனும் பிரச்சனை வந்து மறைக்கின்றாளா? படித்து முடித்து கல்யாண வயதை எட்டியவளுக்கு திருமணம் செய்து வைக்கும் நேரம் கூடியதாக முடிவு செய்தார். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென எண்ணினார். இப்பொழுது பார்த்தால் தான் சரியாக முடியும்.
புரண்டு புரண்டு படுத்த ஹரிணிக்கு தூக்கம் முற்றிலும் வரவில்லை. ‘ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும்’ என்பார்கள். அப்படி தான் விக்ரம் பேசிய வார்த்தையை எண்ணி ஹரிணி இதயம் நிலைப்பாடில்லாமல் துடித்தது.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
லாவா மன்னவா-2

Super sis nice epi 👌😍 endha kaalathu pasanga yosikkama pesidranga adhu aduthavangaluku evlo kashtam nu puriyiradhu ella😕 vidhi evanga renduperum marubadiyum meet pannuvaangala parpom 🧐🤔