Skip to content
Home » லாவா மன்னவா-4

லாவா மன்னவா-4

53 / 100 SEO Score

அத்தியாயம்-4

 

ஜெய் விக்ரமின் தந்தை ரவிபிரகாஷை அழைத்து வீட்டுக்கு வரும் வழியில், “ஏன்ப்பா விக்ரம் போட்டோ காட்டலை. என் போன்ல என் கூட நிறைய ஸ்டில் அவனோட எடுத்து வச்சியிருந்தேன்.” என்று விக்ரம் போட்டோவை காட்டாமல் தவிர்த்து வந்ததில் காரணம் கேட்டான்.

 

“என்னனு தெரியலை ஜெய்… அங்க அந்த பொண்ணு இல்லை. நான் இப்ப விக்ரம் போட்டோ பார்க்க காட்டினேன்னு வை. இப்ப நான் வந்து இங்க யாரு என்னனு எட்டி பார்த்த மாதிரி, விக்ரம் போட்டோவை பார்த்து ஏதாவது விசாரிக்க இப்பவே கமலகண்ணன் கிளம்பினான்னு வை ,அப்பறம் உன் பிரெண்ட் பத்தி தான் ஊரே புகழ்ந்து சொல்லுமே.

எதுக்கு வேண்டாத வேலை. பேசாம நாளைக்கு விக்ரமை நேர்ல கூட்டிட்டு வந்து காட்டி, நாளைக்கே சிம்பிளா தட்டை மாத்திடணும். பிறகு கமலகண்ணனை கூப்பிட்டு தனியா சிலதை சொல்லிடலாம்.

ஓரளவு கை நனைச்சிட்டா விக்ரமை வேண்டாம்னு சொல்ல தோனாதுனு நம்பறேன். என்ன கேடித்தனம் பண்ணினாலும் விக்ரம் முகம் இருக்கே… எந்த பொண்ணும் ரசிப்பா.” என்று பெருமைபட்டார்.

 

ஜெய்யோ எதுவும் பேசாமல் அமைதியுற்றான். அவனுக்கே ஒரு தங்கை இருந்தால் இந்த அக்கப்போரே வேண்டாம், என் தங்கையை கட்டிக்கோடா மச்சான்’ என்று கூறிவிடுவான். அந்தளவு ஜெய்யுக்கு விக்ரமை பிடிக்கும்.

விக்ரமை போல ஜெய்யும் அவன் பெற்றோருக்கு ஒரே மகன்.

 

“சரிப்பா… நாளைக்கு பொண்ணு பார்த்துட்டு வந்து சொல்லுங்க. அவனிடம் என்ன ரியாக்ஷன்னு நான் கேட்டுக்கறேன்” என்று வீட்டில் வந்து நிறுத்தினான்.

 

“ஜெய்… நாளைக்கு நீயும் பொண்ணு பார்க்க வா. எங்களுக்கு நீயும் ஒரு பையன் தான். அதோட உன் பிரெண்ட் நீ இருந்தா கொஞ்சம் இயல்பா இருப்பான். கண்ட்ரோலில் பார்த்துக்கலாம்” என்று கூற, ஜெய்யோ ஆமோதிப்பாய் தலையாட்டினான்.

 

“சரிப்பா அப்ப நான் வந்துடறேன்” என்று நேரத்தை கேட்டுக்கொண்டு சென்றான்.

 

ராதிகாவிடம் ‘நாளைக்கு பொண்ணு பார்க்க போறது வேற யார் வீட்டுக்கோ இல்லை. என் பிரெண்ட் கமலகண்ணனோட பொண்ணு ஹரிணி தான்.

அந்த பொண்ணு வீட்ல இல்லை. போட்டோவுல சாட்சாத் மகாலட்சுமி கடாட்சம்.

நம்ம விக்ரமுக்கு ஏத்த பொண்ணு. இந்த வரன் முடிவடைந்திடும். நடுவுல எந்த குழப்பமும் பிரச்சனையும் வராது.

கமலகண்ணனோட பொண்டாட்டி மாலதி பொண்ணு பார்க்க வர்றோம்னு முறுக்கு சுடறா. சின்ன பொண்ணு வினோதினி அவளுமே பிளஸ்டூ படிக்கறா‌. இங்க தான் மூன்று ஸ்டாப் தள்ளி வீடு. பார்றேன்… எங்க எங்கயோ வரன் வந்துட்டு போச்சு. கடைசில பொண்ணு பக்கத்துல இருக்கு.” என்று பேச பேச ராதிகாவோ “ரொம்ப முடிவான மாதிரி பேசாதிங்க. உங்க பையன் என்ன உலகத்துல இருக்கானோ? பொண்ணை சரி சொல்வானா? நாம தான் கல்யாணம் அமைய டென்ஷன்ல இருக்கோம். அவன் என்னைக்காவது ஏதாவது யோசித்திருக்கானா?” என்று கேட்டு புலம்ப, “முதல்ல நீ வாயை வச்சிட்டு சும்மாயிரு” என்று கூறினார்.

 

ராதிகாவுக்கு இரண்டு வருடம் தாண்டினால் ஒன்று விட்ட அண்ணன் மகள் படிப்பை முடித்தப்பின் விக்ரமிற்கு முடிக்கும் எண்ணமிருந்தது. ஆனால் அவள் இன்னமும் கல்லூரி முடிக்கவில்லை‌. ரவிபிரகாஷிடம் இப்பொழுதே கூறினால் படிப்பை காரணம் காட்டி வேறிடம் தான் நாடுவார்.

சொந்தத்தில் அவருக்கு சுத்தமாய் விருப்பமில்லை.

 

இரவு சாப்பிட்டு உறங்க, கதவு படாரென்று சத்தம் எழுப்பியது.

 

ரவிபிரகாஷ் எழுந்து வந்து கதவை திறந்தவாறு, “வயசானவங்க இரண்டு பேர் தூங்கறாங்களே இப்படியா சத்தம் போடறது. காலிங் பெல் அடிச்சா வரப்போறோம்” என்றார்.

 

விக்ரமோ பேச்சு காதில் விழாத அளவுக்கு ஹாலில் வந்தவன் ஐஸ் வாட்டரை எடுத்து மடக்மடக்கென்று குடித்து சில்லென்ற தண்ணீரால் முகத்தை அலம்பினான்.

 

“அம்மா… அம்மா‌” என்று கத்த, “அவளை எதுக்கு கூப்பிடற… அவளே சோர்வா படுத்திருக்கா.” என்று ரவிபிரகாஷ் கூறவும், சமையல் பாத்திரத்தை உருட்டினான்.

 

அங்கே தட்டில் சோறும் குழம்பும் தனியாக ஒரு கிண்ணத்தில் இருந்தது. மற்றொரு மூடிப்போட்ட டிபனை திறக்க அதில் முட்டை இருந்தது.

சோஃபாவில் சாப்பிட அமர்ந்தவன் கையோடு முறுக்கையும் பக்கத்தில் ஒரு தட்டில் வைத்தபடி டிவியை போட்டு சாப்பாட்டை விழுங்கினான். ரவிபிரகாஷ் விக்ரமை பார்த்து, “டிவி சத்தத்தை குறை. அவ தூங்கறா. பக்கத்துல இருக்கற வீட்ல எல்லாம் கேட்கணுமா?” என்று பொரியவும், “இப்ப நான் சாப்பிடவா வேண்டாமா. ஏன் என்னை குறுகுறுனு பார்க்கறிங்க” என்று கத்தினான்.

அவன் பேசிய தோரணையில் உடல் சிலிரித்து கை உதற, விக்ரம் கையில் ஒட்டியிருந்த சோற்று பருக்கைகள் லேசாக சிதறியது.

 

“நா..நாளைக்கு பொண்ணு பார்க்க போகணும்.” என்று கூற விக்ரமோ கை விரலை சப்பியபடி “தெரியும்.. லாஸ்டா மூன்று முறை இப்படி தான் சொன்னிங்க. இங்க வர்றப்பவே பொண்ணு பார்க்கற விஷயம் புட்டுக்குச்சு. இப்ப இந்த ஊர்லயே யாரோ சிக்கிட்டாங்க போல. பச் பாவம் அவங்களுக்காக நான் வருத்தப்படறேன். உங்க காலேஜ் பிரெண்டுக்காக… அவர் பொண்ணுக்காக..‌ ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூற, ரவிபிரகாஷுக்கு ரத்த கொதிப்பு வராத குறை தான்.

 

‘இங்க இவனுக்கு மூன்று முறை வரன் தட்டி கழித்து பொண்ணு பார்க்கும் வேலை மறுத்தது எல்லாம் கொஞ்சமும் உறுத்தலை. நல்லா ஹாயா இருக்கான். என்னிடம் என்ன நக்கல். நாளைக்கு என்ன பேச்சு பேசுவானோ?’ என்று அறைக்கு சென்றிட, கடைசியாக முட்டையை மட்டும் தனியாக வாயில் அதக்கினான்.

 

ஒரு செம்பு நீரை பருகிவிட்டு, “நெக்ஸ்ட் எல்லாம் அங்கயே சாப்பிட்டுட்டு வந்துடணும். இங்க வந்ததும் தூங்கிடணும். என்ன பசியா.” என்று தட்டை மட்டும் கழுவி வைத்தான்.

 

தனது அறைக்கு வந்தவன், சட்டையை கழற்றி கைக்கு தோதாக போட்டுவிட்டு மெத்தையில் விழ்ந்தான்.‌

அஜய் மாலையில் விக்ரமை போனில் அழைத்து ‘பொண்ணு வீட்டுக்கு அப்பா கூப்பிட்டுட்டு போய் பார்த்தார்டா. பொண்ணு போட்டோ நல்லா இருந்தது. அப்பாவோட காலேஜ் பிரெண்ட தான். கல்யாணம் முடிவாகற ரேஞ்சுல இருக்கு. நீயா ஏதாவது பேசி அப்பாவை காயப்படுத்தாத’ என்று முன்னெச்சரிக்கையாக கூறியிருக்க, தன் மனதின் குமைச்சலை விடுத்து, “பெண்ணு பெயரு என்னடா?” என்று கேட்க, “ஹரிணி” என்றான்.

 

விக்ரமோ “ஹரிணியா… அந்த பொண்ணு போட்டோ?” என்று கேட்டதற்கு, “போடா… இந்த முறை அப்பா உன் போட்டோவை தரலை. அதனால் அந்த பொண்ணு போட்டோவும் எடுக்கலை. உன்னையும் நேர்ல பார்த்துக்க சொல்லிட்டார். பொண்ணுலாம் அழகா இருக்குடா.” என்று நண்பனுக்கு தான் பார்த்த ஹரிணியை விவரித்தான்.

 

இதற்கு முன் புகைப்படத்தில் பார்த்தவளை எல்லாம், வாட்சப்பில் பார்த்துட்டு, ‘முகறகட்டை நல்லாவேயில்லை. அந்தாளுக்கு டேஸ்டே இல்லையா? என்ன இழவோ’ என்று சலித்ததில், போட்டோவை தரவில்லையோ என்று நினைத்தான்.

எதுவென்றாலும் பொண்ணு பார்த்து தாலி கட்டறது, தான் தானே என்ற மிதப்புடன் வந்திருந்தான்.

 

 

அதிகாலை தோட்டத்தில் உள்ள மாமரத்தில் உள்ள கனிகளை, அங்கு வந்த கிளிகள் கொத்தி திண்ண வந்து கிளையில் அமர்ந்திருக்க, ‘கீச்கீச்’ என்ற இனிமையான சப்தத்தில் விக்ரம் எழுந்தான்.

 

சோம்பல் முறித்து வெளியே வந்தவன், தந்தை இல்லை என்றதை அறிந்து பல் விலக்கி சமையல் அறையில் நுழைந்தான்.

 

“நைட் எத்தனை மணிக்கு வந்த” என்று சட்னி அரைக்க தேங்காயை சில்லு சில்லாக எடுத்தார் ராதிகா.

 

“கடைசி பஸ்ல வந்தேன். ஏன்மா… சாப்பாட்டை ஹாட்பாக்ஸில் வச்சியிருக்கலாம்ல ஆறி போயிருந்தது.” என்று டீயை எடுத்து பருகினான்.

 

“மறந்துட்டேன் டா கண்ணா” என்று கூற, ரவிபிரகாஷ் புதினா கொத்தமல்லி என்று வாங்கி வந்ததை வைத்துவிட்டு, “ராதிகா… சாயந்திரம் மூன்று மணிக்கு பொண்ணு பார்க்க இங்கிருந்து கிளம்பி போறோம். நாலு நாலரைக்கு அங்க போய் சேர்ந்து ஐந்துக்குல்ல பேசிமுடிச்சிட்டு திரும்பிடலாம். சொல்லி வை” என்று மனைவியிடம் கூறுவது போல மகனிடம் கூறினார்.

 

டீயை தொண்டையில் நனைத்தவன், “ஓவரா தான் பில்டப் பண்ணறார். முடிவே பண்ணிட்டாரா? நீ பொண்ணை பார்க்கலையாம்மா?” என்று கேள்வி கணைகளை துளைத்தான்.

 

“அவரே ஓரமா போய் எந்த வீடு எந்த மனுஷங்கன்று பார்க்க போனார். அவர் பிரெண்ட் என்றதும் தான் தலைகாட்டி பேசிட்டு வந்திருக்கார். இல்லைன்னா இப்படி தெம்ப பேசுவாரா? அவருக்கு உன் கல்யாணம் முடிக்கணும்னு சதா நினைப்பு. எனக்கொன்னும் அவசரமில்லை… வர்ற மருமக வரட்டும். உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் ‘உம்’ சொல்லு சரியா கண்ணா.. இல்லைன்னா.. நம்ம வள்ளி அண்ணியோட பொண்ணு முத வருஷம் படிக்கு. இரண்டு வருஷத்துல படிப்பு முடியவும் பேசுவோம்.” என்று நாடி பிடித்து கொஞ்சி முடித்து செல்ல, ‘வள்ளி அத்தை பொண்ணா?’ என்றவன் கண்கள் அதிர்ச்சியுடன் மறுப்பாய் தலையாட்டி,  ஜெய்யை பார்க்க போவதாக பைக் கீயை எடுத்து ஓடினான்.

 

அதிகாலையே அஜய்யை தேடிவந்தான்.

“விக்ரம் எப்ப வந்த?” என்ற அஜய்யின் அன்னை கேட்ட கேள்விக்கு, “நேத்து நைட்டே வந்துட்டேன்மா” என்று நிற்காமல் பதில் தந்து ஜெய்யின் அறையை தட்டினான்.

கதவு மூடவில்லை, லேசாக சாற்றி மட்டுமே இருக்க, உள்ளே வந்தவன் போர்வையை இழுத்தான்.‌

 

“பச்” என்று அஜய் சலித்துக் கொண்டு யாரென பார்வையிட்டான்.

 

“நீயா… அதுக்குள்ள வந்துட்ட?” என்று எழுந்தான்.

 

“யார்டா அந்த பொண்ணு? வா… வந்து வீட்டை காட்டு. ஈவினிங் போகறதுக்குள்ள நாம தனியா பார்த்துட்டு வந்துடலாம்” என்று கூற, ஜெய்யோ அதிர்ச்சியடைந்தான்.

“என்ன விளையாடறியா? அப்பா திட்டுவார்.” என்று உறங்க செல்ல, அங்கிருந்த தண்ணீர் செம்பை எடுத்து அஜய் மீதே ஊற்றி “டேய்.. என்ன தூக்கம்? வந்து காட்டு” என்று அதட்டினான்.‌

“தோடா… எதுக்கு… எந்திரிச்சதும் வந்து பொண்ணு வீட்டை காட்ட சொல்லற. ஏன் ஏதாவது ஏழரை இழுத்து வைக்கவா? இந்த ஆட்டத்துக்கே நான் வரலை. பாவம்டா அந்த மனுஷன். உன்னை மூன்று வரன் வேண்டாம்னு தட்டி கழிச்சு போனதும் எப்படி வருத்தப்பட்டார்னு நேர்ல பார்த்தவன் நான். இந்த வரன் அவரோட பிரெண்ட் பொண்ணு என்றதும் மனுஷன் சந்தோஷமா இருக்கறது உனக்கு பிடிக்கலையா.

நான் எந்த தெருனு கூட சொல்லமாட்டேன்.

காலங்காத்தால ஆர்வத்துல வந்தியாக்கும். போடா” என்றான்.

 

அஜய் தன் தந்தைக்கு உதவும் மனதில் இருக்க, இனி தன்னுடன் வர மறுப்பானென்று புரிந்த விக்ரமோ, “நான் ஏழரை இழுக்கலை‌ ஆனா ஏழரை எனக்கு முன்ன ரீச் ஆகியிருக்கும். பார்க்கறியா..? எனக்கு போய் கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படறிங்க?” என்றவன் கப்போர்ட் டோரை திறந்து, சட்டையை எடுத்து, “டேய்.. குளிச்சிட்டு வா. ஊரையாவது சுத்துவோம்” என்று அழைத்தான்.

 

அஜய் வேண்டாவெறுப்பாய் எழுந்தான்.

 

அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை விக்ரம் பத்திரிக்கை நியூஸ்பேப்பரை எல்லாம் புரட்டினான்.

 

விக்ரம் பைக்கில் பாதி தூரம் வந்தவன், “எந்த வீடு? இப்ப சொல்ல போறியா இல்லையா?” என்று கேட்க “உங்கப்பாவுக்கு போனா மாசம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. அதனால் தான் அவர் அவசரமா உனக்கு கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசைப்படறார். தயவுசெய்து என்னை எதுக்கும் துணைக்கு கூப்பிடாத. நேரா உங்க வீட்டுக்கு வண்டியை விடு. இன்னிக்கு அங்க தான் பட்டறை” என்று விக்ரமின் நண்பன் அஜய் என்பதை நிருபித்தான்.

 

விக்ரம் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தங்கள் வீட்டிற்கே நண்பனை அழைத்து வந்து சேர்ந்தான்.

 

விக்ரம் வண்டியை நிறுத்திவிட்டு மெதுவாக நடக்க, “ரவிப்பா.. நீங்க சொன்ன மாதிரியே காலையிலேயே வந்துட்டான். அதனால் நீங்க சொன்ன பொய்யை அவிழ்த்து விட்டாச்சு. எதுக்கும் ஹார்ட் அட்டாக் வந்தவரா அவன் பார்க்கறச்ச சோகமா நடிங்க. அவன் வந்துடப் போறான்பா’ என்று விஷயத்தை சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து லோக்கல் சேனலில் படம் பார்க்க ஆரம்பித்தார்கள். அஜய்யோ ‘அப்பாடி… நிம்மதியா படமாவது பா

ர்த்துடணும்’ என்று நண்பனை கண்டு, அதே முகபாவணையில் இருந்தான்.

 

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!