Skip to content
Home » லாவா மன்னவா-5

லாவா மன்னவா-5

51 / 100 SEO Score

அத்தியாயம்-5

சாண்டல் நிற ஷர்ட்டும், கருநீலமுள்ள பேண்டும் அணிந்தபடி, முழுக்கையை மடிக்க முனைந்தான் விக்ரம்.

“அஜய்.. அவரு யார் கூட சண்டைக்கு போறாராம். கையை மடச்சி வச்சிக்கிட்டு.” என்று ரவிபிரகாஷ் எட்டி பார்த்து கூற ‘உப்ஸ்’ என்று மூச்சை விட்ட விக்ரமோ, “புல் ஹாண்ட் மடக்கினா இப்ப என்னவாம். ஏன் பொண்ணு தர மாட்டாங்களா?” என்று இடக்காய் கேட்டான்.

“சும்மா வாயேன்டா” என்றவன் விக்ரமை காண அவனோ பெர்ஃப்யூம் அடித்து, தலையை வாறினான்.

“என்ன அப்படி பார்க்கற?” என்று விக்ரம் கேட்டதும், சுதாரித்தவன், “ஒன்னுமில்லையே… புது பெர்ஃப்யூம் நல்லா இருக்கும் போலயே ஆட்டைய போடலாமானு பார்த்தேன்” என்று மழுப்பினான்.
அஜய் பேசியது அப்பட்டமான பொய் என்று அறிந்தாலும், விக்ரம் எதுவும் கேட்கவில்லை‌. இந்த நேரத்தில் பேச்சு திசைமாறி எந்த பிளாஸ்பேக்கிற்குள்ளும் நுழைந்து வர விக்ரம் தயாராகயில்லை.

ராதிகாவோ, “இந்த பக்கம் திரும்புடா” என்று விபூதியை சிறுகீற்றாக வைத்துவிட, “அம்மா.” என்றவனிடம், “என்னடா.. இந்த டிரஸுக்கு நல்லா இருக்கு. பாரு” என்று சுட்டிக்காட்ட, துடைக்காமல் தவிர்த்துவிட்டான்.‌

ரவிபிரகாஷோ ஆட்டோ பிடிக்க நினைத்தார். ஆனால் பொண்ணு பார்க்க நால்வர் மட்டும் செல்வதால், இருசக்கர வாகனத்தில் ஆளுக்கு ஒருவரை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரானார்கள்.

ரவிப்பிரகாஷ் வண்டியில் ராதிகாவும், விக்ரம் வண்டியில் ஜெய்யும் செல்வதாக கதவை பூட்டினார்கள்.

“ஜெய்.. உன் பிரெண்டுக்கு வழிசொல்லு. நான் பின்னாடியே  வர்றேன். அப்படியே ரேஸுக்கு போற மாதிரி ஓட்டவேண்டாம்.” என்று எடுத்துரைக்க, கீயை திருகியவன் வேண்டுமென்றே முறுக்க, நின்றயிடத்திலேயே பைக்கை கர்ஜிக்க வைத்தான்.

ரவிபிரகாஷ் ராதிகாவை முறைக்க, “ஜெய் ஏறிட்டியா?” என்று விக்ரம் திரும்பாமல் கேட்க, “ம்ம்.” என்றான்.

ராதிகாவோ, “உங்களுக்கு என்ன நேரத்துக்கு கிளம்பணும்னு சொல்லிட்டு அவன் போறதையே பார்க்கறிங்க.” என்று உலுக்க, “ஆஹ்… போ..” என்று முன்னே அனுப்பி வண்டியை திருகினார்.

ரவிபிரகாஷ் மனதில் பையன் ஏதேனும் செய்து தொலைப்பானோ என்ற அச்சம் உள்ளுக்குள் நிறையவே இருந்தாலும், இதற்கு முன் வந்த வரன் எல்லாமே பேச்சு வார்த்தையோடு போய் விட்டது.
இன்று முதல் முறையாக பொண்ணு பார்க்க நல்விதமாய் கிளம்பிவிட்டதாக பூரித்தார்.

“ரைட்டா லெப்டாடா?” என்று ஜெய்யை உலுக்க அவனோ, “ஆஹ்.. ரைட்டு தான்” என்றான்.

இந்த தெருவுல கொஞ்ச நாள் முன்ன, ஒருத்தி ஸ்கூட்டிலயிருந்து விழுந்து வாறினா.” என்று இடத்தை சுட்டிகாட்டினான்.

ஜெய்யோ ‘இப்ப நான் கேட்டேனா?’ என்று பார்த்து வழியை கூறினான்.
“நெக்ஸ்டு லெப்டு எடு” என்றதும் திருப்பினான் விக்ரமும், “இங்கயே வெயிட் பண்ணு. அப்பா அம்மா வரட்டும்” என்று நிறுத்த கூறினான்.

“ஏன் நம்ம முத…ல்ல போ..ய்.. பார்க்கலாமே” என்று அவ்வீட்டை எட்டி எட்டி பார்த்தான்.‌ அப்பார்வையில் லேசான எதிர்பார்ப்பு இருந்தது. ஜெய்யுக்கு இந்த கண்கொள்ளா காட்சியை ரவிபிரகாஷ் அப்பா கண்டால் நன்றாக இருக்குமே!

ராதிகா ரவிபிரகாஷ் சற்று தாமதமாக வந்தார். இருவரும் பைக்கை ஒன்று போல கமலகண்ணன் வீட்டிற்கு முன் வாசலில் வைத்தார்கள்.

இருசக்கர வாகனம் சத்தம் கேட்டு கமலகண்ணன் வெளியே வந்தார். கூடவே மாலதியும் வந்தார்.
குடும்ப சகிதமாக, வணக்கம் வைத்து வரவேற்றார்கள்.
“முதல்ல நமக்குள்ள நல்லபடியா முடிவடையட்டும்னு நாங்க மட்டும் தான் வந்தோம். கண்ணன்” என்று ரவிபிரகாஷ் கூறினார்.‌

கமலகண்ணனும் பதிலுக்கு, “நாங்களுமே கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்னு யாரிடமும் சொல்லலை ரவி. நம்ம வீட்டுக்குள்ள முதல்ல நல்லா பழகட்டும்னு நினைச்சேன்.” என்று அவரும் கூறினார்.

ராதிகாவும் மாலதியும் புன்னகைத்து வரவேற்று அமர்ந்தனர்.
கண்ணனோ “பையன் ராஜாவாட்டம் இருக்கான். திருப்பூர்ல பார்த்ததேயில்லையே. பொத்தி பொத்தி வளர்த்தியாடா?” என்று கேட்க, ரவியோ ‘ம்கூம் இவனே என்னை தாண்டி வளர்ந்து இருக்கான். இந்த உருவத்தை எல்லாம் பொத்தி வைக்க முடியுமா?” என்று நகைச்சுவையாக கூற, “என்ன நேக்கா என்னை எப்படி கேலி பண்ணறார்” என்று ஜெய்யிடம் விக்ரம் கிசுகிசுத்தான்.

மாலதிக்கு விக்ரமை கண்டதும் பிடித்திருந்தது. மகளுக்கும் பிடிக்குமென்று நம்பினார். அதனாலோ என்னவோ ராதிகாவிடம், “டீ சீவல் முறுக்கு எடுத்துக்கோங்க” என்று கொடுக்க, “நேத்தெல்லாம் பலகாரம் சுட்டு ரெடி பண்ணிட்டிங்களா” என்று பேசியபடி சுவைத்தார். விக்ரம் அமைதியின் திருவுருவமாக முகத்தில் உணர்வுகளை வெளிகாட்டாமல் சிரித்திருந்தான்.

“நல்லா ருசியா இருக்குங்க” என்று கூற, விக்ரமோ “இங்க என்ன பழைய நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் கெட்-டூ-கெதருக்கா வந்திருக்காங்க. முறுக்கு நல்லாயிருக்குன்னு பேசிட்டு சுத்தறாங்க. பொண்ணை காட்டுவாங்களா மாட்டாங்களாடா?” என்று முறுக்கை உண்டபடி மாப்பிள்ளை முறுக்கை காட்டினான்.

“ஏன்டா… அவ்ளோ ஆர்வமா இருக்க?” என்று ஜெய் கேட்க, “பின்ன இல்..லையா?” என்று அங்கிருந்த ஹரிணி புகைப்படத்தை கண்டு, யோசனை வயப்பட்டவனாக நெற்றி சுருக்கினான்.

‘அவதான் இவளா? இல்லை என் கண்ணுக்கு அப்படி தெரியுதா?’ என்று யோசிக்க, “முதல்ல நல்ல நேரத்தோட பொண்ணை பார்த்துடலாம்” என்று ராதிகா கூற, வினோதினி அக்காவை கூட்டிட்டு வா” என்றார்.

“வினோதினி சின்ன பொண்ணு பிளஸ்டூ படிக்கறா.” என்று மாலதி ராதிகாவிடம் கூற, ‘மச்சினிச்சி ஸ்கூல் படிக்குதே’ என்று ஜெய் கிண்டலடிக்க, “பொண்ணு பெயரு ஹரிணி.” என்று வேலை செய்யும் இடத்தை குறிப்பிட்டார்.

விக்ரமோ ‘ஹரிணி பேர் எல்லாம் ஓகே தான். இந்த முகம் அந்த முகம் மாதிரி தெரியுதே போட்டோ இந்த பக்கம் திரும்பியிருந்தா க்ளியரா தெரியும்?’ என்று மனதோடு நினைக்க, கொலுசொலி நெருக்கமாய் கேட்டது.

விக்ரம் ஜெய்யை பார்த்தவாறு, மெதுவாக ஏறிட முனைய, நெய்பாலிஷ் பூசப்பட்ட நகங்கள் அழகாய் காட்சியளித்தது.

விக்ரமிற்கு பாதம் பார்த்து முகத்தை பார்க்கும் எண்ணமின்றி நெய்பாலீஷ் பூசப்பட்ட பாதத்தையும், நிசப்தமா இடத்தை சிறுசப்தம் எழுப்பிய கொலுசுமே அவன் மனதை களவாடியது.

சின்னதாக மெருன் பார்டரும், மஞ்சள் சேலையுமாக அணிந்திருந்தவள் கைகுள் டீ கோப்பை ஏந்திய பாவையாக இருக்க, வளையல் அணிந்த கைகளில் நெயில் எல்லாம் அளவாக இருந்தது.
“ஜெய் உன் பிரெண்ட் விக்ரமை பொண்ணை பார்த்துக்க சொல்லு” என்று ரவிபிரகாஷ் கூறினார்.

ராதிகாவோ “இவர் சாட்சாத் மகாலட்சுமினு சொன்னார். நண்பர் பொண்ணாச்சே பில்டப் தர்றாரோனு நினைச்சேன். அப்படியில்லை… மனசுக்கு நிறைவான அழகு” என்று கூற, “மாப்பிள்ளை மட்டும் சும்மாவா. ராஜா மாதிரி இருக்கார்” என்று கமலகண்ணன் உரைத்திட, ஹரிணியும் விக்ரமும் ஒரே நேரத்தில் பார்வையை தழுவ, விக்ரம் முன்நெற்றியில் தலையிலடித்து முடிக்க, ஹரிணியோ டீ கோப்பையை தராமல், பின்னடைந்தாள்.

“நீயா?” என்று முகம் சுழித்தாள்.

“ஹரிணி டீயை கொடு” என்று மாலதி கூறியதற்கு, “இவன் மாப்பிள்ளையா?” என்றாள் மரியாதையின்றி. கமலகண்ணனோ “ஹரிணி என்ன பேச்சு இது?” என்று அதட்டினார்.

ஹரிணியோ “அப்பா.. அவனை போக சொல்லுங்க. இவனெல்லாம் மாப்பிள்ளையா? ஒரு பொண்ணுக்கு மரியாதை தர நினைக்காதவன்” என்றாள்.

விக்ரமோ, “ஏய்… அவன் இவன்னு சொன்ன பல்லை உடைச்சிடுவேன்டி.” என்று உறுமினான்.

“எங்க பல்லை ஒடையேன் பார்க்கலாம்” என்று தங்கையிடம், தட்டை கொடுத்துவிட்டு புடவை முந்தானையை முன்னால் வறிந்து கட்டினாள்.

பொண்ணை பெற்றவர்கள் பதறிக்கொண்டு, “ஹரிணி என்னடி பேசற? உனக்கு மாப்பிள்ளையை முன்னவே தெரியுமா?” என்று மாலதி வந்து கேட்டார்.
“ஹரிணி மரியாதை குறைவா பேசாத?” என்று கமலகண்ணன் தடுத்தார்.

“ஜெய் என்னடா இது? உன் பிரெண்ட் என்ன பண்ணி வச்சியிருக்கான்? நேத்தே வந்து மருமகளிடம் வம்பு பண்ணிட்டானா?” என்று கேட்டவர் பார்வை விக்ரமை சுட்டது.
ராதிகாவோ ‘இவ்ளோ நேரம் நல்லா தானே வந்தான். ஏன் இப்படி பேசறாங்க’ என்பது போல பார்த்தார்.

“அப்பா கொஞ்ச நாளுக்கு முன்ன… மழை பெய்திருந்தது.
ஆபிஸுக்கு போகற வழியில, என்னை இடிக்கிற மாதிரி வேகமா வந்தான். நான் தடுமாறி கீழே விழுந்துட்டேன். என்னை… என்னை.. திட்டிட்டான். எனக்கு இவன் வேண்டாம்.” என்றாள் ஹரிணி.

‘இவ்வளவு தானா?’ என்று கமலகண்ணன் நிம்மதியுற்றவரோ, “திட்டிட்டார்னா?” என்று கேட்டார்.

விக்ரமோ நாக்கை கன்னத்து உள்பக்கம் ஒதுக்கியபடி ‘இப்ப சொல்லேன்’ என்பது போல நக்கலாய் பார்த்தான்.

“திட்டினான்னா… திட்டினான் பா. அது போதாது” என்று விக்ரம் திட்டியதை கூற தயங்கினாள்.

“நான் திட்டினேனா? அப்ப என்ன திட்டினேன்னு சொல்லு” என்று வேண்டுமென்றே கூற,  ஹரிணியோ முகம் திருப்பினாள்.

ஹரிணியால் அவன் உதிர்த்த வார்த்தையை கொஞ்ச நாள் முன் தான் மறக்கவே முயன்றாள்‌. முழுதாக மறந்துவிட்டாள் என்று உறுதியிட்டு கூற முடியாது.

இரண்டு பக்கமிருந்த பெரியவர்கள் கலவரமுகமாக பயந்திருக்க, ஜெய்யிடம் ரவிபிரகாஷ், “ஜெய்… என்னை அசிங்கப்படுத்த நினைக்கறானா கேட்டு சொல்லுடா” என்று உரும, விக்ரமோ நேரிடையாக தந்தையை பார்த்து, “அவளுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. அதனால் என்னை வேண்டாம்னு சொல்ல பிளான் போடறா. இதுல நான் திட்டினேன்னு சாக்கு சொல்லறா. ஆக்சுவலி நான் என்ன திட்டினேன்னு சொல்ல வேண்டியது தானே?” என்று ஜம்பமாய் உரைத்தான்.

எப்படியும் தாய் தந்தை எதிரில் அது போன்ற வார்த்தையை ஒரு பெண் உதிர்க்க மாட்டாளென்ற நம்பிக்கை அவனுக்கு.

ஏதோ ஹரிணி தான் அவ்வார்த்தையை உதிர்த்தது போல கூனிகுறுகி நின்றாள். கமலகண்ணனோ மனைவி மாலதியை பார்த்து மகளிடம் என்னவென்று விசாரிக்க கண்ணை காட்ட, மாலதி மகளின் கையை பிடித்தி அவர் பக்கம் திருப்பி, “என்னடி இது? கல்யாணம் பிடிக்கலையா? ஏதாவது தடைப்படுத்த பார்க்கறியா?” என்று கேட்டதும், “அய்யோ அம்மா.. என்னை வந்ததிலருந்து தெரிந்த பொண்ணு மாதிரி நீ வா போனு ஒருமையில பேசறான். அவன் மேல சந்தேகம் வரலையா?” என்று தேம்பினாள். அன்னை தந்தை தன்னை உலுக்குகின்றனரே என்ற ஆதங்கம்.

“சரிடி… அவரை தெரியுமா? என்ன திட்டினார். எப்ப திட்டினார். உங்களுக்குள் என்ன சண்டை என்ன பிரச்சனை?” என்று மாலதி வினாக்களை தொடுத்தார்.

“அ…அன்னிக்கு மழை பெய்ததே மா.” என்றதும், மாலதி ”என்னைக்கு டி? அதான் மழை சீசன்ல மழை பெய்யுதே” என்றார்.

ஹரிணி இரண்டு நொடி கண்களை மூடி சோர்ந்தவள் சட்டென மின்னலாய், “அம்மா… அந்த வெள்ளை சுடிதார். மழையில போட்டுக்கிட்டு போனதுக்கு திட்டினிங்களே. நான் கூட பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு போய் திரும்பி வந்தப்ப வெள்ளை சுடிதார் சேரு கறையா இருந்ததே‌. நீங்க கூட அன்னைக்கு என்னை எத்தனை தடவை சோப்பு போடுவ. என் பேச்சை கேட்டியா? வெள்ளை டிரஸ் மழை பெய்தப்ப போட்டுட்டு போனியேனு கத்தினிங்க. அன்னிக்கு கூட நைட்டு நான் சாப்பிடாம கோபமா படுத்துட்டேன். முகம் டல்லாயிருக்குனு வினோதினி கூட அக்காவுக்கு என்னாச்சு என்னாச்சுனு கேட்டாளே.” என்று விவரிக்க, மாலதிக்கு அன்றைய நாள் நினைவில் வந்தது.

அன்று ஹரிணி சந்தோஷமாய் வெள்ளை உடையை ஐயர்ன் செய்து அணிந்து சென்றவள், திரும்பிய பொழுது முகம் கடுகடுக்க, எரிச்சலாக வந்தாள். எத்தனை முறை துவைத்தாள். அன்று ஹரிணி முகமே வாடியிருந்தது. சாப்பிடாமல் வேற படுத்துவிட்டாள் என்று மாலதி  புலம்பியவராயிற்றே நினைவில்லாமல் போகுமா?

மாலதி விக்ரமை கண்டு “சரி… அன்னிக்கு என்ன நடந்தது. என்ன திட்டினார்.” என்று கேட்க, “நான் ஸ்கூட்டில போகறப்ப, எதிர்க்க வேகமா வந்து என்னை விழ வச்சது இவன் தான். என் டிரஸ் சேறால கறையானது இவனால தான். இவன் தான் திட்டினான்.” என்றாள்.

“என் பையன் என்ன திட்டினான்?” என்று ராதிகா முன்வந்தார்.

ஹரிணி விக்ரமை கண்டு, “கேட்கறாங்கள… சொல்லுடா. அன்னிக்கு என்னை பார்த்து சொன்னியே… இப்ப சொல்லு. உங்க அம்மா முகத்தை பார்த்து நேரா சொல்லு.” என்று ஹரிணி மனம் கொக்கரித்தது.

அந்த வார்த்தையால் ஹரிணி எத்தனை நாள் தூக்கமின்றி கோபத்துடன் மனநிம்மதி கெட்டு இருந்தாள்.

ராதிகா மீண்டும் ஹரிணி முன் வந்து, “இங்க பாரும்மா… என்‌ பையனை முதல்ல அவன் இவன்னு சொல்றதை நிறுத்து. பெருசா திட்டினான் திட்டினான்னு சொல்லற. என்ன திட்டினானு சொல்லு.
மழையில இரண்டு வண்டி மோதறாப்ல வந்து, நீ கீழே விழுந்து உன் வெள்ளை சுடிதார் சேறும் சகதியுமா ஆனது இருக்கட்டும். அதுக்கெல்லாம் அறிமுகமில்லாதப்ப திட்டிக்கறது சகஜம் தான். அதுக்காக உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கோம்னு தெரிந்தும், அவன் இவன்னு சொல்லி அவமரியாதையா பேசறது நல்லதில்லை.” என்றார்.

விக்ரம் யாரின் தயவும் இல்லாவிட்டாலே சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவான்.
இன்று அம்மா வேறு விவரம் தெரியாமல் ஆதரவாய் பேச, கூடுதலாக ஆட்டமாடினான்.

“மிஸ்… ஹரிணி.. இப்ப என்ன? உங்களை நான் திட்டிட்டேன். என்னனு திட்டினேன்… நாயுன்னா பூனைன்னா? லூசு எருமைன்னா… பச்… எதுனாலும் சொல்லுங்க.
நான் உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கேன் ஹரிணி. க்ளியரா இப்பவே பேசிப்போம். அப்ப தானே நம்ம லைப் பெட்டரா அமையும்.” என்று முன்னெடுத்து நகர்ந்து பேச, ஹரிணி கால்கள் தானாக பின்னெடுத்து வைத்தது.

அப்படியே சற்று தூரமாக வந்தது போல தெரிய, “சொல்லுடி… ஃபக் யூனு சொன்னேன். அதை இங்க சபையில சொல்லு. கல்யாணம் நிற்கட்டும். எனக்கு அதான் வேணும். நான் என்ன பேசினேன் என்றதுல எனக்கு கவலையில்லை.” என்று கர்ஜித்தான்.

கர்ஜனை இத்தனை நெருக்கத்தில் மற்றவர் காதில் விழாத அளவிற்கு முகசுளிக்க பேசுவதை அறிந்து மீண்டும் முகத்தை வேறு பக்கம் திருப்பினாள்.

அதில் நிச்சயம் ஹரிணி இந்த சபையில் வாய் திறந்து அவ்வார்த்தையை கூற மாட்டாளென்று ஊர்ஜிதமாக, “அம்மா அவளுக்கு என்னை பிடிக்கலை. கல்யாணத்தை நிறுத்த என்‌மேல பழி போடறா. மழையில சகதி பட்டதுக்கு பெருசா என்னதிட்டிட போறேன். அதையாவது சொல்ல சொல்லுங்க. நான் இந்த இடத்துல சாரி கேட்கறேன். இல்லையா… நான் இந்த நொடியே வெளிய கிளம்பிடறேன்.” என்றான்.

ராதிகாவோ மகனுக்கு ஆதரவாக, “என்னம்மா திட்டினான். அதையும் சொல்ல மாட்டேங்கற. அப்ப உனக்கு தான் கல்யாணத்துல விருப்பமில்லையா?” என்று கேட்க, “ஐயோ ஆன்ட்டி அவன் இப்ப கூட சொன்னான். உடம்பெல்லாம் கூசுது. நான் அந்த வார்த்தையை சொல்லமாட்டேன்னு திமிர்ல இருக்கான்.” என்றாள் அருவருப்பாக.

“என்ன சொன்னான்.?” என்றதும் “நான் ஏன் சொல்லணும். அவன் அசிங்கமா சொன்னான். நம்பலைன்னா போங்க. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.” என்றதும் கோபமாக ராதிகா மகன் கையை பிடித்து, “வாங்க போகலாம்” என்றார்.
ரவிபிரகாஷ் மனைவி மகனை கண்டு, “உன் பையன் தான் தப்பு செய்திருப்பான் ராதிகா” என்றார்.

ராதிகாவோ அதற்கு “எப்ப பாரு பெத்த பிள்ளையை கரிச்சிகொட்டறிங்க. இதனால தான் எவ எவளோ என் பையனை அவன் இவன்னு சொல்லறா. இங்க பாருங்க. என் பையனுக்கு மரியாதை தராதவ, இனி எனக்கு மருமகளா வரவேண்டாம். எப்பவும் போல உங்க கண்ணுக்கு என்‌ பையனே கெட்டவனா இருக்கட்டும்.” என்று மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

கமலகண்ணன் ரவிபிரகாஷ் இருவரும் தங்கள் மகன் மகளின் இந்த விவாதசண்டையை நினைத்து கலங்க, மாலதியோ வினோதினியை கண்டு, “அங்க என்ன வேடிக்கை. உள்ள போ” என்று சின்ன மகளை விரட்டினார்.

விக்ரமோ செல்லும் போது, கண்சிமிட்டி ஹரிணியை கொதிநிலைக்கு தள்ளியே சென்றான்.
ஜெய் நண்பனை கண்டு, ‘அடப்பாவி.. ஏதோ பண்ணி தொலைச்சிருக்கான்.’ என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான்.

விக்ரம் பைக்கில் ராதிகா அமர்ந்து செல்ல ஜெய்யும் ரவிபிரகாஷும் அதேயிடத்தில் கையறுநிலையில்  நின்றியிருந்தனர்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!