Skip to content
Home » லாவா மன்னவா-6

லாவா மன்னவா-6

51 / 100 SEO Score

அத்தியாயம்-6

விக்ரம் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருக்க, ரவிபிரகாஷும் அஜய்யும் அங்கிருந்தனர்.

“சாரி ரவி” என்று கமலகண்ணன் கூற, “இதுல உன் மக தப்பு எதுவும் இருக்காது. எனக்கு தெரியும். என் பையன் தான் ஏதோ பேசியிருக்கான்.” என்று கமலகண்ணனிடம் கூறியபடி ஹரிணியை நெருங்கி வந்தார்.‌

“என் பையன் என்ன பேசினான்னு தெரியாது. ஆனா அவன் பேசியது தப்பாயிருக்கலாம். அதுக்காக அவன் கெட்டவன் இல்லைம்மா. நான் வேண்டுமின்னா சாரி கேட்கறேன் அவன் பேசியதை மறந்துடு.” என்றார்.

கமலகண்ணனோ “ஏன்டா சின்ன பொண்ணுக்கிட்ட இப்படி பேசற. நாம பேசி வச்சது போல கல்யாணம் நடக்கும்‌. ஏன்டா உடைஞ்சி போற மாதிரி இருக்க” என்று நண்பனிடம் ஆறுதலாக பேசினார்.

உடனே ஹரிணியோ “அப்பா… ஏதாவது சமாதானம் செய்யற மாதிரி பேசாதிங்க. நான் இந்த கல்யாணத்துக்கு துளியும் சம்மதிக்க மாட்டேன்.” என்றாள்.

கமலகண்ணனோ “உனக்கு கல்யாணம் செய்வதா முடிவெடுத்தாச்சு ஹரிணி. அதுவும் என் நண்பன் மகனே வந்ததும் நான் முடிவே பண்ணிட்டேன்.
இப்ப உனக்கு முடிச்சா தான் அடுத்து வினோதினிக்கு படிப்பும் சேமிப்பும் பார்க்க முடியும்” என்றார் கறாராக. அவருக்கு இருந்த உடல்நிலை பிரச்சனை அப்படி பேச வைத்தது.

ரவியாவது விக்ரமிடம் உடல்நிலை காரணம் காட்டி நடிக்க நினைத்தார். இங்கு கமலகண்ணன் நிலையோ நிஜமாகவே அவருக்கு உடல்நிலை பிரச்சனை கழுத்தை நெறித்தது.
அதனால் முடிந்தளவு ஹரிணிக்கு வரன் தேடினார். உயிருக்கு ஆபத்து நேரும் முன் ஹரிணியையாவது திருமணம் செய்து வைத்துவிட்டு, மூத்த மாப்பிள்ளையை வீட்டுக்கு தூணாக நிறுத்த முயன்றார்.
அதில் நண்பன் மகனே மகளை பார்க்க வரவும் நேற்று இரவெல்லாம் விக்ரம்-ஹரிணி கல்யாணம் முடிந்திடும் அளவிற்கு கனவு கோட்டையை கட்டிவிட்டார்.

இன்று மகளால் தரைமட்டமாக நேர்ந்தால் விடுவாரா?

மாலதியோ “ஏங்க அவ தான் ஏதோ திட்டியதா சொல்லறாளே. ஒருவேளை அசிங்கமா ஏதாவது பேசியிருக்கலாம்.” என்று மகளுக்காக வந்தார். மாலதிக்கு கூட கமலகண்ணன் உடல்நிலை தெரியாது.
அதனால் மகளுக்காக பேசினார். ஒருவேளை கமலகண்ணனுக்கு நிலையறிந்தால் மகளை தான் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கும் விதமாக பேசுவார்.

ராதிகாவிடமிருந்து ஜெய்யுக்கு அலைப்பேசி அழைப்பு வந்தது. “அப்பா… அம்மா தான்” என்று சுட்டிக்காட்டி அழைப்பை ஏற்றான்.

“அங்கிருந்து கிளம்பிட்டிங்களா?” என்றார். “அப்பா.. உள்ள தான் இருக்கார் மா” என்றான் அஜய்.

“ஏன்டா… பெத்த பையனை அவன் இவன்னு சொல்லிட்டு இருக்கா. இன்னுமா அங்கிருந்து கிளம்பலை? அவருக்கு தான் கிறுக்கு பிடிச்சிடுச்சா? நீயாவது அவரை இழுத்துட்டு வரலாம்ல? அரை மணி நேரத்துல கூட்டிட்டு வா” என்று கட்டளையிட்டார்.‌

“சரிம்மா” என்று அணைத்துவிட்டு, “அப்பா… நாம போகலாம்” என்று அஜய் கூப்பிட, “நில்லுடா.” என்றவர், ஹரிணி அருகே வந்தார்.

“ரொம்ப எதிர்பார்த்தேன்மா… கமலகண்ணன் தான் சம்பந்தியா வரப்போவதை நினைச்சி நேத்தே கல்யாணம் முடியற அளவுக்கு கற்பனையில் கல்யாணத்தை முடிச்சிட்டு சந்தோஷமா நானும் அவனும் பட்டு வேஷ்டி சட்டையில மண்டபத்துல நின்றதா மனகோட்டை கட்டிய நினைப்பு.

கற்பனையும் கனவும் நிஜத்துல வாழ வைக்காதுனு தெரியுது.
எனக்கு இப்பவும் நீ என் வீட்டு மருமகளா வரணும்னு ஆசைம்மா.
எனக்கு என்ன சொல்ல தெரியலை. விக்ரம் என்னத்த சொல்லி தொலைச்சான்னும் தெரியலை. ஆனா ஒன்னும்மா.. இதை மீறி என் பையனை கல்யாணம் பண்ண சம்மதிச்சா, என்னைக்காவது ஒரு நாள் அதுக்கு நீ அவனுக்கு நன்றி சொல்லற விதமா நடந்துப்பான். எதுக்கும் யோசித்து சொல்லும்மா.” என்றதும் ஹரிணி ஆயாசமாக தலையை உலுக்கி முடித்தாள்.

கமலகண்ணனோ “ஹரிணி” என்று அதட்ட, “அதட்டாதடா… உன் பொண்ணு பக்கம் தான் நியாயம் இருக்கும். எதுக்கும் இரண்டு நாள் நேரம் எடுத்துக்கோங்க. மனசு மாறினா போன் பண்ணு கமலகண்ணா.
அப்படி இல்லைன்னா… இது நம்ம காலேஜ் டேஸ்ல சந்திச்ச கடைசி சந்திப்பா நினைச்சிப்போம். எங்கயாவது பார்த்தா பேசுடா… முகத்தை திருப்பிக்காத” என்று கூறியவர் நண்பனை அணைத்து விடுவித்து, “வர்றேன் தங்கச்சி” என்று மாலதியிடம் கூறிவிட்டு, “யோசிச்சு சொல்லும்மா” என்று மீண்டும் ஹரிணியிடம் எதிர்பார்ப்புடன் கோரிக்கை வைத்து சென்றார்.

ரவிபிரகாஷின் பைக் சாவியை அஜய் வாங்கிக் கொண்டு வண்டியை ஓட்டினான். ரவிபிரகாஷ்‌ அஜய்யின் பின்னால் அமர்ந்து வீடு நோக்கி சென்றார்கள்.

மாலதியோ “நல்ல வேளை அக்கம் பக்கத்தில பொண்ணு பார்க்கறாங்கன்னு எந்தவிதத்திலும் சொல்லலை. இல்லைன்னா வந்த சம்பந்தம் என்னாச்சுனு கேட்டு கேட்டு நம்ம நிம்மதியை கெடுத்திருப்பாங்க.” என்றார்.

கமலகண்ணனோ கோபமாக மாறி, “என்ன தான் திட்டினார்? ஏதாவது கோபத்துல நாலு வார்த்தை பேசறது தான். அதுக்கு வீட்டுக்கு வந்தவங்களை ஹால்லயே உட்கார வச்சி காபி தண்ணி கூட குடிக்க விடாம விரட்டறதா ஹரிணி?
அந்த நேரம் காபி கொடுத்துட்டு பொறுமையா கூட என்னிடமோ உங்க அம்மாவிடமோ பிரச்சனையை பேசியிருக்கலாம்.
என்ன அவசரம் உனக்கு?” என்று கடிந்தார்.

வினோதினியோ நடந்த விவகாரத்தில் புரிந்தும் புரியாமலும் நின்றாள். ஏதேனும் பேசி இந்த நேரம் அதிங்கபிரசங்கியாக காட்டிக்க மனமில்லை.

“சாரிப்பா… நீங்க அடுத்து யாரை கொண்டு வந்து நிறுத்தினாலும் கல்யாணம் பண்ணிக்கறேன். ஆனா இந்த பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று உறுதியாக கூறினாள்.

கமலகண்ணனுக்கோ மாலதியை பார்த்து முடிக்க, “ஹரிணி தேவையில்லாம பேசமாட்டா. அவ சொல்லுக்கு மதிப்பு கொடுங்க” என்று மறுத்தார்.

தான் மகளுக்கென பார்த்த முதல் வரனே இப்படி ஆனதில் வருத்தம் கொண்டார் கமலகண்ணன்.

அன்றைய நாள் பெயருக்கு இரண்டு இட்லி வைத்து வயிற்றை நிரப்பிவிட்டு படுத்துவிட்டார்.
மற்றபடி ஹரிணி எல்லாம் ‘அப்பாடா இவனிடமிருந்து தப்பிச்சேன். பெயரை பாரு… விக்ரம்னு ஹீரோ பெயரை வச்சிட்டு சுத்தறான்’ என்று மனதிற்குள் நிம்மதியடைந்து சாப்பிட்டாள்.

மாலதி எல்லா நாளும் போல ஒரு நாளாக கடந்தார். வினோதினியும் பலகாரத்தை மென்றபடி அக்கா அருகே படுத்தாள்.

ரவிபிரகாஷ் விக்ரமிடம் “என்னடா பேசி தொலைச்ச? வீட்ல இருக்கறவங்களிடம் தான் மட்டு மரியாதை இல்லாம பேசுவனு பார்த்தா, வெளியவும் இப்படி தானா? இப்படியே பண்ணிட்டு இருந்த உனக்கு கல்யாணமே ஆகாது” என்று கண்டிக்க, விக்ரமோ “ரொம்ப நல்லதா போச்சு. கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணுக்கூட வாழறதுக்கு தனியாவே வாழ்ந்துப்பேன்” என்றுரைத்தான்.

“சும்மா அவனை சொல்வதை நிறுத்துங்க. என் மகன் மேல எந்த தப்பும் இருக்காது. அவன் இவன்னு மரியாதை இல்லாம எல்லார் முன்னயும் பேசறா. அவயென்ன செய்தாளோ? என் பையன் காரியம் இல்லாம திட்டியிருக்க மாட்டான்” என்று பெத்த பையனுக்காக வாக்காளத்து வாங்க, விக்ரமோ செய்த தவறு உறுத்த, வேகவேகமாய் அள்ளி சாப்பிட்டு படுத்தான்.
அஜய் எல்லாம் ரவிபிரகாஷை வீட்டில் விட்டுவிட்டு சென்றான்.

அடுத்த நாள் உறக்கம் களைத்து எழுந்தவனுக்கு ஊர்சுற்ற புறப்பட்டான்.
அஜயும் விக்ரமும் படத்திற்கு சென்றனர்.

“அந்த பொண்ணை என்னனு திட்டின விக்ரம்” என்று கேட்க, “மூடிட்டு படத்தை பாரு. என்னவோ அப்ப வாயுக்கு வந்ததை திட்டிட்டேன். அவளுக்கும் எனக்கும் முட்டிக்கிச்சு. அவளுக்கும் எனக்கும் செட்டாகாது. வேற பொண்ணு பார்ப்பார். அந்த பொண்ணுக்கு ஏதாவது குறை இருந்தா கூட கேள்வி கேட்காம தாலி கட்டறேன்னு எங்கப்பாவிடம் சொல்லிடு போதுமா. இப்ப படத்தை பார்க்க விடு” என்று கன்னத்தில் கைவைத்து சினிமாவை கவனித்தான்.

அஜய் அதன்பின் அமைதியாக படம் பார்த்தான்.

படம் முடியவும், “நாளைக்கு சிவன் கோவிலுக்கு வர்றியா போயிட்டு வருவோம்” என்றான்.

ஏற்கனவே ராதிகா சிவன் கோவிலுக்கு போனா நல்லதுன்னு சொல்லறாங்க. ஒரெட்டு போக சொல்லணும். அஜய் அவன் வரலைன்னா இழுத்துட்டு போடா. நாளைக்கு ஒரு நாள் தான் இருப்பான். நாளைக்கு நைட்டு சென்னைக்கு பஸ் புக் பண்ணிட்டான்.” என்று கூறியிருக்க விக்ரமே கோவிலுக்கு கூப்பிடவும் “போயிட்டு வரலாம்டா” என்று முடித்து கொண்டான்.

இருவரும் வண்டியில் வர, எதிரே ஹரிணி மிதமான வேகத்தில் ஸ்கூட்டியில் வந்தாள்.

விக்ரம் எதிரே வந்த ஹரிணியை பார்த்துவிட்டு அவள் அந்தப்பக்கம் திரும்ப போவதை அறிந்தவனாக, வேகமெடுத்தான்.

“மச்சான் இந்தபக்கம்” என்று ஏதோ கூற வரும் முன், ஹரிணி இன்டிகேட்டர் போடாமலேயே வண்டியை திருப்ப, சரியாக விக்ரம் இடிக்கும் நிலையில் அவளாக வசமாக சென்றாள்.

விக்ரம் நொடியில் போட்ட திட்டமென்றாலும் ஹரிணி பயந்தவளாக, “சாரி சார் சாரி சார். நான் தான் பார்க்காம வண்டியை திருப்பிட்டேன்” என்று இரண்டு கையிலும் சடன் பிரேக்கை போட்டவளாக இறுக பற்றி மன்னிப்பு கோட்டாள்.
தலையில் கவிழ்த்திருந்த ஹெல்மெட்டை நிதானமாக கழற்றிய விக்ரமோ, “அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி. நீ தான் ஒழுங்கா வண்டியை ஓட்டலைனு புரிதா? உன்கிட்டலாம் யார் வண்டியை கொடுத்தது. எவன் லைசன்ஸ் தந்தான்.” என்று கேட்டதும் இவனா என்று ஹரிணி துவண்டாள். இவனிடமா சார் சார் சாரி எல்லாம் கேட்டோமென்ற வருத்தம்.

“எனிவே… உன்னை மன்னிச்சிட்டேன்.” என்று எகத்தாளமாய் கூற, “அடச்சீ… அன்னிக்கும் நான் சரியா தான் வந்தேன். இன்னிக்கும் இன்டிகேட்டர் போடலையே தவிர நான் நிதானமான வேகத்தில் வந்தேன். நீ தான் அப்படியே காட்டாறு மாதிரி வந்திருப்ப. உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு மமதை ஆகாத. நீ போட்ட ஹெல்மெட் அது இருந்ததால கேட்டேன். மத்தபடி உன்‌முகற கட்டை என்றால் கேட்டிருப்பேனானு உனக்கே தெரியும். அதை வேற என் வாயால சொல்லணுமா?” என்று எகிறினாள்.

“ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சிட்ட. அடுத்த தடவை பார்றேன் உன்னை இடிச்சி ரத்த காவு வாங்கறேன்” என்று கூற ஹரிணி அவனை கேவலமாக கடந்து சென்றாள்.

“அந்த பொண்ணு என்றதும் ஒதுங்கலாம்ல. ஏன் வம்புக்குன்னு நீயா போய் பேசற?” என்று அஜய் கேட்டதும், “ஆமா ஆசை பாரு… நானா போய் பேச” என்றவன் அன்றைய நாளையும் திண்றுவிட்டு உறங்கி பொழுதை கழித்தான்.

அந்த நாள் முழுக்க ரவிபிரகாஷ் கோபமாகவே இருந்தார்.
ராதிகா கூட பையன் நாளைக்கு கோவிலுக்கு போறான். இன்னிக்கு கறி வாங்கிட்டு வாங்க என்று கூற, “இப்ப அவன் திண்ணு அதுல வேற கொழுப்பு ஏறணுமா. வேண்டும்னா அவனையே வாங்க சொல்லு” என்று கடிந்துவிட்டார்.

அதனால் ராதிகா மகனுக்கு என்று அவரே போய் பார்த்து வாங்கியதில் எமபாதகன் சாப்பிட்டு படுத்து கண்ணயர்ந்துவிட்டான்.‌

ரவிபிரகாஷுக்கு தான் மனம் பாரம் ஏறியது.
இவனுக்கு ஹரிணி பொருத்தமாக இருந்தாள். ஏனோ அடுத்த வரன் தேடும் ஆசை கூட அவருக்கு வற்றியது.

கடவுள் விட்ட வழி என்று கடந்திட, காலையிலேயே குளித்து முடித்து அன்னை கையால் விபூதி வைக்கப்பட்டு, “பார்த்து ஜாக்கிரதையா கோவிலுக்கு போயிட்டு வாடா. நைட் ஊருக்கு போக பையை ரெடி பண்ணறேன்” என்று மகனை வழியனுப்பி வைத்தார்.

சில நேரம் பரிகாரம் செய்தாலோ, இறைவனை தரிச்சாதாலோ, மற்றவருக்கு உதவி செய்தாலோ, ஏதோவொரு அற்புதம் நிகழும். அதற்கான பலனால் எப்பேற்பட்ட கஷ்டமும் அகலும். நடக்காத நிகழ்வும் நடந்திடும். அப்படி தான் கமலகண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. “ரவி… என் பொண்ணு ஹரிணி உன் பையன் விக்ரமை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லிட்டா” என்று கூறினார். என்னடா சொல்ற?” என்று ரவி மகிழ, “ஆமா டா என் தரப்புல கல்யாணம் நின்றதா இருக்க வேண்டாம். எனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்னு என்‌மக சொல்லிட்டா. ” என்று காரணத்தையும் விளக்கினார்.

“ரொம்ப சந்தோஷம் டா. நாம ஒருமுறை சந்திப்போம்” என்று கிளம்ப ஆயத்தமானார்.

ராதிகா போனில் பேசியதும் பூரிப்படைந்து கிளம்பும் கணவனிடம் என்ன ஏதென விசாரிக்க, அவரும் விளக்கினார்.

“யாரு அந்த பொண்ணா.. ஒன்னும் வேண்டாம். என் பையனை அவன் இவன்னு ஏசிட்டு இப்ப ஊர்காரங்க யாராவது கேட்டிருப்பாங்க. பொண்ணு பார்க்க வந்துட்டு போனவங்க என்ன சொன்னாங்கன்னு கேட்டதும் பதில் சொல்ல சங்கடப்பட்டு இப்ப சரின்னு சொல்லறாளா?” என்று கோபமானார்.‌

“இங்கபாரு… உன் பையன் கல்யாணத்தை பண்ணிக்கறேன்னு சொல்லறப்பவே கட்டி வைக்கறது தான் புத்திசாலித்தனம். அவன் என்ன நிலையில் இருக்கான்னு தெரியாம சண்டைக்கு ஓடாத. இந்த சம்பந்தம் போச்சு உன் புள்ள தனிமரமா தான் நிற்பான். என்னதான் நானும் அவனும் முறுக்கிட்டு இருந்தாலும், உன்னை விட அவன் மனநிலையை தெரிந்தவன் நான் தான். ஏதாவது செய்து கல்யாணத்தை நீ கெடுக்காத. அப்பறம் ஆயுசுக்கும் அழுவ. அவன் அமைதியா சம்மதிச்சா விட்டுடணும்.” என்று கூறியவர் ராதிகாவை எச்சரிக்கை செய்தே புறப்பட்டார்.

அப்படியிருந்தும் ராதிகா முதல் வேலையாக மகனுக்கு அழைத்தார்.

அவனோ கோவிலுக்கு சென்றதால் போனை சைலண்டில் போட்டுயிருந்தான்.

அஜயுக்கும் அழைத்து சோர்ந்தவர், “இந்த மனுஷன் இவனுக்கு விருப்பமில்லாம கல்யாணம் பேசிட்டு ஏதாவது எம்மகன் எதிர்த்து மறுத்தா அப்பறம், அதை மட்டும் பெருசா பேசுவார். இப்பவே போன் அட்டன் பண்ணினா என்னவாம். அஜயை விட்டு தடுக்கலாம். விக்ரம் காதுல போட்டு விடலாம். என் பையனை போய் அவமரியாதையா பேசினவ எனக்கு மருமகளா” என்று தொடர்ந்து முயன்றார்.

அரை மணி நேரம் கழித்து, டீக்கடையில் டீயை கூறிவிட்டு மிளகாய் பஜ்ஜியை விழுங்கினான்.
“அம்மா இத்தனை தடவை கால் பண்ணிருக்காங்க” என்று விக்ரம் போனை பார்வையிட, “எனக்கும் கால் பண்ணிருக்காங்க” என்றான் அஜய்.

விக்ரமோ “நான் என்னனு கேட்கறேன்” என்று அன்னையின் அலைப்பேசிக்கு அழைத்தான்.

அடுத்த நொடி மடமடவென்று “அந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளாம்டா. அன்னிக்கு அப்படி பேசினவ, இப்ப ஏன் சம்மதிச்சா. உங்கப்பாவிடம் உன் சம்மதம் கேட்டுட்டு போக சொன்னா அவர் இப்பவே அவர் பிரெண்டை பார்க்க ஓடிட்டார். இதை சொல்ல தான் கண்ணா போன்‌ போட்டேன். எதுனாலும் உங்கப்பாவிடம் மறுத்துடு. அவ நம்ம வீட்டுக்கு வேணாம்.” என்று ஏற்றி விட்டார்.

கழுத்து நரம்புகள் புடைக்க, ‘ஃபக் யூ’னு அவளை அசிங்கமா திட்டியிருக்கேன்.‌ ரோஷத்தோட கல்யாணத்தை டிராப் பண்ணிட்டான்னு பார்த்தா… எதுக்கு சம்மதிச்சிருப்பா’ என்றவன் நண்பனை கூட மறந்து அவளை சந்திக்க கோபமாய் புறப்பட்டான். அவனுக்கு தான் ஹரிணி வீடு நன்றாக தெரிந்துவிட்டதே.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

 

 

1 thought on “லாவா மன்னவா-6”

  1. Super sis nice epi 👌😍❤️ harina unmaiyilaiye sammadhan sonnala🤔🧐 ella avanga appa sentiment ah pesi k solla vechara ella pazhivaanguraala parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!