அதுவொரு கலங்கிய குட்டை. அங்கே நிறைய நல்ல மீன்களும், புழுக்களும் நீந்திக்கொண்டிருக்கும்.
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
அதனருகே நிறைய மரங்கள் வளர்ந்து செழித்திருந்தன. மீன்களை பிடிக்கவும், மீன்களுக்கு உணவளிக்க பறவைகளும் வந்து சென்றிருந்த தருணம்.
தனி தனி மரத்தில், ஒரு ஆலமரம் மிகசிறப்பு வாய்ந்தது. மூன்று விதமான பறவை மட்டுமே அங்கே இளைப்பாற வரும். மூன்று பறவைகளும் விதவிதமான விதையில் வேற்றுவரின் நிலத்தில் விதையை பயிரிட்டு விளைச்சலை பார்த்து வந்தனர்.
முதல் பறவையின் பெயர் ஷா, இரண்டாம் பறவையின் பெயர் பூ, மூன்றாம் பறவையின் பெயர் த்ரி. மூன்று பறவையும் நட்புடன் பயணித்தது. மூன்று பறவைகளின் துணைகளும் இவர்கள் நட்பை புரிந்த துணையே!
இம்மூன்று பறவைகள் எப்பொழுதும் கலங்கிய குட்டையில், புழுக்களை தவிர்த்து, அழகழகான மீன்களுக்கு ஆலமரத்தில் அமர்ந்தபடி, தங்கள் உழைப்பில் விதைத்த பயிரில் உணவை சேகரித்து, நித்தமும் சில உணவை மீன்களுக்கும் வழங்கும் விதமாக அளித்து செல்லும்.
மூன்று பறவையும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.
இவ்வாறான தருணத்தில் வேறொருவரின் நிலத்தில் விதை பயிருடுவதற்கு பதிலாக சொந்த நிலத்தில் பயிரிடு என்று ஷாவின் துணை ஒரு தனி விதையையும் நிலத்தையும் கொடுத்து, ‘நீயே தனிச்சையாக பயிரிட்டு வளர்த்து நீயே உணவை தயார் செய்’ என்று அன்பளிப்பாக தந்தது.
இதற்கு பூவும், த்ரியும் வாழ்த்து தெரிவித்து, மகிழ்ந்தார்கள்.
நாட்கள் செல்ல புது பறவை ஒன்று இந்த ஆலமரம் போன்ற வேடந்தாங்கலில் ஐக்கியம் ஆனது. அதன்பெயர் ஏசா. புதுப்பறவையான ஏசாவும் இந்த மூன்று பறவையின் குணங்களை கொண்டிருந்தது. ஏசா பறவையும் ஏற்கனவே தனி நிலத்தில் விதையிட்டு பயிர் விளைவிக்கும்.
ஏசா, ஷா, பூ, த்ரி நான்கு பறவையும் ஆலமரத்தின் விழுதில் விளையாடியபடி, நிறைய பேசி தங்கள் பொழுதை கழித்தாலும், அவரவர் விதைகளை பயிரிடுவதில் முனைப்பாகவும் கடமையுடனும் பயணித்தது.
பூவிற்கு ஏற்கனவே தனித்துவமான நிலம் தன் விதையால் பயிரிட பிடிக்கும் என்று, பூவுமே தன் விதையை பயிரிட தனிநிலத்தை தேர்ந்தெடுக்க, உலகமெல்லாம் சுற்றி சுழன்றது.
பூவிற்கு அதற்கு பிடித்தமான நிலத்தை ஷாவை போலவே அதுவே தேடி வாங்கியது. இதற்கும் ஷா, ஏசா, த்ரி மூன்று பறவையும் வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
ஒரு விதை பயிரிட்டு, எவ்வாறு செம்மையாக வளர்ந்து, சரியான விலைக்கு சென்று சந்தையில் சேர்ப்பது என்ற விவாதங்களை இந்த ஏசா, ஷா, பூ, த்ரி, நால்வரும் பேசி தீர்ப்பார்கள்.
பெரும்பாலும் அரட்டைகளும் உண்டு, அதே நேரத்தில் பயிருக்கு தேவையான உரம் எது, எந்த உரத்தை எந்த பயிருக்கு அளித்தால் சரியாக இருக்கும், எந்தெந்த காலத்தில் எந்ததெந்த காலத்தில் விளைச்சல் செய்யலாம் என்ற நுணுக்கங்களையும் பேசுவார்கள். அதனால் இந்த ஆலமரம் எப்பொழுதும் தென்றல் வீசி கீச்கீசென்று சப்தம் கொடுக்கும்.
எப்பொழுதோ கொண்டாடப்படும் தோழமை தினமாக இல்லாமல் தினம் தினம் தோழமையை பகிர்ந்து கொண்டாடுவார்கள்.
இவ்வாறு வசந்தகாலமாக செல்லும் காலத்தில் ஷாவுக்கு விளைச்சல் நிலத்தில் விளைந்த கனியை, உலகறியும் சந்தையில் முன் வைக்க பெரிய சலுகைகள் வந்தது. எப்பொழுதும் உழைப்பை போட்டுவிட்டு, பலனை அறுவடை செய்யும் ஷாவிற்கு, இந்த நல்வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு இரவும் பகலும் உழைத்தது ஷா பறவை.
அந்த நேரத்தில் பிராண்டடிற்கு பெயர் போன பகலவன் சந்தையிலும் ஷா, பூ, த்ரிக்கும் கனிகளை வாங்கி விற்பனை செய்ய வாய்ப்பு அமைந்தது. அந்த பிராண்டிற்கு பெயர் போன பகலவன் சந்தையில் விழா கூட கொண்டாட, ஷா, பூ, த்ரி மூன்று பேரும் சென்று வந்தனர்.
புத்தம் புதிய அனுபவமாக, பெரிய பெரிய பறவைகளின் ஆசிகளும் அன்பும் பெற்றார்கள்.
அங்கு சென்று வந்ததின் நேர்மறை எண்ணம் அதிகரிக்க, ஏற்கனவே இரவும் பகலும் உழைத்திடும் பூவிற்கும், நல்வாய்ப்பிற்காக உலகறியும் சந்தையில், பூவின் கனிகளையும் வாங்கி சந்தைப்படுத்தினார்கள்.
இத்தனை நாள் தனது தனிநிலத்தில் விளைந்த பயிர்களில் விளைந்த கனிகள், காய்கள் எல்லாம் ஓரளவு சிறப்பாக சந்தையாக, கூடுதலாக உலக சந்தைக்கும் பெயர் பெற்று தர, இரட்டிப்பு சந்தோஷம் அடைந்தனர் ஷா ம்றறும் பூ பறவைகள்.
இதை அறிந்த த்ரியின் துணைப்பறவை த்ரியிடம் “நீ மட்டும் தான் வேறொரு நிலத்தில் விதையை விளைவிக்கின்றாய். உன்னுடன் இருக்கும் ஷாவும் பூவும் கூட தனி நிலத்தில் கனிகள் விளைவிக்கின்றனர். அவர்களே தனிநிலம் வாங்கும் போது நீ வாங்கினால் என்ன? நீ ஒரு சில நாளில் விதைக்கு உரம் கூட போடாமல் ஊரை சுற்றுகின்றாய். அரட்டை அடிக்க மட்டும் ஆலமரத்திற்கு செல்கின்றாய். இனி ஆலமரத்திற்கு செல்வதை குறை. உன் விளைச்சலை கவனி” என்று சொன்னது. த்ரியின் துணைக்கு ஷா மற்றும் பூவின் நட்பால் தன் துணை தன் கூட்டையும் குழந்தையையும் சரியாக பாதுகாக்காமல் இருந்ததாக பொய் குற்றம் சாட்டியது. ஞில ஆண்பறவைகள் தன் நட்பை மட்டும் எக்காரணத்துக்கொண்டும் இழக்காது. ஆனால் பெண்பறவைகளுக்கு நட்பு என்ற ஒன்று இருப்பதை கத்தரிக்க துடிக்குமே அது போல.
இத்தனை நாட்கள் இல்லாத பிரிவு த்ரிக்கு தோன்றியிருக்குமோ? இல்லையோ? அல்லது துணையின் வார்த்தைக்கு செவி சாய்க்கும் குடும்ப பறவையாக மாறிட நினைத்தது.
மற்றொரு முக்கிய காரணமாக ஷா மற்றும் பூ மீது ஏற்பட்ட பொறாமையோ, த்ரியுக்கு அந்த ஆலமரத்தில் பேசி சிரிக்க பிடிக்கவில்லை. கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று காரணத்தை உரைத்துவிட்டு ஆலமரத்தில் அமைதியாக அமர்ந்துக்கொள்ளும்.
ஆனால் ஷாவும் பூவும் இந்த உலக சந்தையில் அதிகம் பேசுவார்கள். அதிலும் வேடந்தாங்கல் பறவையான ஏசாவும் சேர்ந்து, தனிநிலத்தில் விளையும் பயிர்களை பற்றியும், விளைச்சலை பற்றியும், பல்வேறு சந்தேகங்களையும் பேசி மகிழுவார்கள்.
‘இங்கே நான் மட்டும் தான் தனிநிலம் வாங்காத பறவை அதனால் பேச முடியவில்லையே. நானும் தனிநிலம் வாங்க எத்தனை முறை யோசித்தேன்’ என்று உள்ளுக்குள் வெதும்பியது த்ரி.
த்ரிக்கு எத்தனை நாள் உள்ளுக்குள் பொறாமை புகுந்து தீயாக பரவியதோ, ஷாவிற்கு உலக சந்தையில் கனிக்கு நல்ல வரவேற்பு வந்து பெயர் தர, வேண்டுமென்றே அதை கவனித்தும் இம்முறை வாழ்த்து தெரிவிக்க கூட மனமில்லை. இத்தனைக்கும் சந்தையில் குளம், குட்டையில், ஏரியில், ஆற்றில் உள்ள பறவைகளின் புகழ்மாலையை பறைச்சாற்றும் எல்லா இடத்தின் நோட்டீஸ் போர்டில் போட்டப்பின்னும் பலதரப்பட்ட முகமறியா பறவைகள் வாழ்த்தியும், த்ரி மட்டும் உடல்நிலை காரணம் காட்டி வாழ்த்துவதற்கு கூட மனமின்றி நடித்தது.
ஆனால் ஆலமரத்தில்.. தினமும் பேசும் பொழுது ஓட்டு கேட்டு தகவல்களை சேகரிக்கும் அல்பபுத்தி எப்படியோ த்ரிக்கு வந்துவிட்டது. கூடுதலாக ஏற்கனவே ஷாவின் கனிகளை பிராண்ட் மார்க்கெட்டான பகலவனில் விற்ற, அதே கனியின் விதையை விதைத்து, அந்த பிராண்ட் மார்க்கெட்டில் த்ரி கொடுக்க திட்டம் போட, அந்த விஷயம் ஷாவுக்கு தெரியவும், “இதே கனியை தானே நான் பகலவனுக்கு விற்றேன். என்னை போலவே ஏன் அதே கனியை பயிரிட்டு விற்க பார்க்கின்றாய்? தனி தனி பறவைக்கு தனி தனி விதைகளை போட்டு பயிரிட தெரியுமே. ஏன் இவ்வாறு செய்கின்றாய்?” என்று கேட்டது ஷா.
த்ரியோ “இந்த கனியில் மாற்று விதை சில கலந்து உள்ளேன். உன் கனி போல இருக்காது” என்று பொய்யும் பூசி மொழுகியது. ஷாவுக்கு இத்தனை நாள் பழகியதில் த்ரிக்காக இரண்டு முறை த்ரி பயிரிட்ட விதை கிடைத்தும் அந்த விதை பயிரிடாமல் வேறொரு விதைப்போட்டு புது விதையில் தான் புது கனியை பயிரிட்டது. இப்பொழுது நாம் கூறும் போது மட்டும் த்ரி பச்சை பொய் சொல்லி ஏமாற்றுகின்றதே’ என்ற அதிருப்தி முதலில் தோன்றியது.
ஆனாலும் ஆலமரத்தில் பூ, த்ரி, ஏசாவுடன் கிடைத்த நட்பில் த்ரியின் இந்த தந்திரம் அறிந்தும் பழகியதில் மாற்றமின்றி அதே நேரத்தில் த்ரியிடம் விலகியது. இந்த விலகல் த்ரிக்கும் நன்கு தெரியும்.
எந்த நொடி த்ரியின் நட்பில் தோழமையில் இவ்வாறு போலி தன்மையும் நாடகத்தன்மையும், ஷா அறிந்ததோ அப்பொழுதே ஷாவுக்கு த்ரியின் நட்பில் உண்மை தன்மை அறுப்பட்டது.
ஷாவுக்கு உலக சந்தையில் மீண்டும் நற்பெயர் கிடைக்க, எப்பொழுது நல்ல விஷயத்திற்கு ஒரு வாழ்த்து கூட கூறவில்லை த்ரி. இத்தனைக்கும் பல வருட நட்பில் சுற்றி திரிந்த பறவைகள். வாழ்த்து என்பது மனதார ஒருவர் மற்றவருக்கு தரும் ஆசி. அதனால் இத்தகைய பொறாமை குணம் கொண்ட த்ரியின் வாழ்த்து தனக்கு இல்லையென்றாலும் ஷா சந்தோஷமாக தான் கடந்தது. ஷாவுக்கு கடந்து செல்ல கற்று தர வேண்டுமா என்ன?
த்ரியின் துணை பறவை சொன்னதற்கு நல்ல துணைவியாக, மேலும் தானும் தனிநிலம் வேண்டும், தானும் உலக சந்தையில் இடம் பெற வேண்டும் என்று ‘புலியை பார்த்து பூனை சூடு போடும் விதமாக’ உழைக்க எண்ணியது. என்ன தான் உழைத்தாலும் ஷாவும், பூவும் அளவிற்கு த்ரியால் உழைக்க முடியாத சூழ்நிலை.
காரணம் தான் உழைத்து வளர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், தான் மற்றவரை போல பேசப்பட்டு வளர வேண்டும் என்ற எண்ணத்திற்கும் வித்தியாசம் இருக்கும் அல்லவா?!
தனிநிலம் ஒரு பக்கம் இருக்கட்டும். உலக சந்தையிலாவது தனது கனி விற்க ஏற்பாடு செய்யலாமென, த்ரி தன் உடல்நிலை சரியில்லை என்ற பொய்காரணத்தை கூட மூட்டைக்கட்டி, பூவிடம் நெயிர்ச்சியாக விவரம் கேட்டது. “நான் காரணத்தோடு வந்து உன்னிடம் பேசுகின்றேன் என்று எண்ணாதே பூவே. நீ உலக சந்தைக்கு எவ்விதமான கனிகளை உற்பத்தி செய்கின்றாய். நான் அதை அறிந்தால் நானும் இம்முறை முயற்சிக்க பார்க்கின்றேன்” என்று கேட்டது.
பூவிற்கு ஷா-த்ரி இருவருக்குள் நடக்கும் பனிப்போர் ஓரளவு தெரியும். ஆனாலும் அவரவர் பிரச்சனையில் மூன்றாம் நபர் நுழைய வேண்டாமென எண்ணி, உலகசந்தை பற்றி விவரம் கூறி, இந்த சந்தைக்கு இந்த அளவில் உரத்தினை போட்டு கனியை வளர்த்தால் இத்தகைய செழுமை கிடைக்கும். அதை விற்கலாம்” என்ற அறிவித்தது.
மீண்டும் த்ரி காரியத்தை மட்டும் கேட்டுவிட்டு ஆலமரத்திலிருந்து பறந்து சென்றது.
அதென்னவே உலக சந்தைக்கு த்ரியின் கனி தேர்வாக தாமதமாக, தனிநிலமாவது வாங்க வேண்டுமென்று முடிவெடுத்தது. அந்தளவு ஏசா, ஷா, பூ மூவரின் பேச்சில் தனிநிலத்தின் விதைகள் பயிரிடும் முறை பற்றிய விரிவான பேச்சு அமைய, அனைத்தையும் கூர்மையாக உடற்சோர்வை காரணம் காட்டி, ஆலமரத்தில் ஓட்டுக்கேட்டு தகவலை மட்டும் அறிந்துக் கொண்டது.
பறவையை படைத்த இறைவனோ பொய்யாக சொல்லி புலம்பும் த்ரியை கவனித்து, ‘உண்மையை கூறம்மா’ என்று நிஜமாகவே உடல்நிலை பாதிப்பை உருவாக்கி சற்றே ஆட்டம் காண ஏற்படுத்தி விட்டார்.
த்ரி பறவையின் ஒரு சிறகு கிளையில் மாட்டி லேசாக காயம் அடைந்தது.
ஆனாலும் துணைப்பறவையின் உதாசினம் மற்றும் மட்டம் தட்டும் நிலை, மேலும் ஏசா, ஷா, பூ மூவரின் தனிநிலம் போல தனக்கும் தனி நிலம் வேண்டுமென்ற மோகம் காரணமாக, துணையை உலுக்கி அன்றே பூவின் நிலத்தை போலவே அதே மண் வளம் கொண்ட நிலத்தை அபகரித்தது.
பூவிற்கு முதலில் ‘என்ன இது என் மண் வளத்தை போலவே வாங்கிவிட்டது. எத்தனையோ மண்வளம் உண்டு. பறவைக்கு எத்தனையோ விதைகள் உண்டு. என்னுடையதையே போன்ற மண்வளத்தின் சிறப்பு பெயரிலேயே தனிநிலம் வாங்கியுள்ளதே’ என்ற கவலை உண்டானது.
ஆனால் பூவிற்கு எப்பொழுதும் தன் உழைப்பில் நம்பிக்கை உண்டு. நீரில்லா பாலைவன நிலத்தில் கூட கனியை பயிரிடும் வித்தையும், அதை எங்கே சந்தைப்படுத்தும் நுணுக்கமும் அறியும் புத்திசாலி பூ.
அதனால் த்ரி செய்த மண்வளத்தின் திருட்டை, போனால் போகட்டுமென்று விட்டுவிட்டது. பெரிய மனதுடன் த்ரியின் நிலதிறப்பு விழாவுக்கும் வாழ்த்தியது.
ஆனால் ஷா வாழ்த்தவில்லை. ஷாவை பொறுத்தவரை ஒரு பறவையின் எண்ணமும் வார்த்தையும் ஒன்றாக இருக்க வேண்டும். நேர்மையாக, நட்பில் பொறாமையின்றி எவ்வித ஆதாயமின்றி பழக வேண்டும் என்ற எண்ணம். இந்த போலியாக பழகும் வழக்கம் ஷாவுக்கு சுட்டு போட்டாலும் வராது. அதனால் விலகியது விலகியதே. த்ரி-ஷா நட்பு உடைந்தது உடைந்ததே. தனக்கு வாழ்த்த மனமில்லாத த்ரிக்கு தானும் வாழ்த்தவில்லை.
ஆனாலும் ஆலமரத்தில் நான்கு பறவையும் ஒன்றாக தான் எப்பொழுதும் போல இளைப்பாறும்.
த்ரி தனது நிலத்தில் தானாக விதை, உரம், தண்ணீர், வாங்கி பயிரிடாது, ஏசா, ஷா, பூ மூவரின் உழைப்பின் சூட்சமத்தை மட்டும் பறந்து திரிந்து அப்படியே செயல்படுத்தியது. அது எப்படியோ பூவுக்கு பளிச்சென தெரிய நேர்ந்தது.
ஷாவை போல அமைதியாக விலக பூ பூவல்ல. அப்பறவை ஒரு புயல் பொன்றவள்.
த்ரியிடம் ஆலமரத்தில் வைத்து, “நீ என்னுடைய பறக்கும் திசையின் தடத்தை, பின் தொடர்ந்து என் பாணியில் பயிரிடுகின்றாய். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உன் சுயமான அறிவை கொண்டு சிறப்பாய் அதை செய்’ என்று சிம்பிளாக ‘என்னை பார்த்து காபி செய்யாதே’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டது.
சொன்னதோடு மட்டுமில்லாமல் ஆலமரத்திலிருந்து இனி மொத்தமாய் வரமாட்டேன் என்று பறந்து விட்டது.
தற்போது ஏசா, ஷா, த்ரி மட்டுமே ஆலமரத்தில் இருந்தது. இம்முறை ஷாவுக்கு நமக்கு நிகழ்ந்த வலியையும் இங்கே கொட்டி தீர்க்கலாமா என்று எண்ணியது. ஆனால் அப்பொழுதும் தவிர்த்தது.
காரணம் இந்த தனிநிலம் எல்லாம் இப்பொழுது வந்தது. நட்பு ஆரம்பத்தில் பெற்றது என்ற எண்ணத்தில் அமைதிக்காத்தது. அப்படியிருந்தும் ஆலமரத்தில் த்ரியுடன் பேசுவது இல்லை. எல்லாம் ஏசாவுக்காக மட்டுமே இருந்தது ஷா பறவை. புதுப்பறவை மீது கொண்ட நட்பையும் மதித்தது.
ஆனால் த்ரி, பூ சொன்னதால் அதை விட்டு, மீண்டும் ஷாவின் நிலத்தை வளத்தை போல, தன் மண்வளத்தில் நிலத்தை மாற்றியது.
ஏனோ முன்பு நட்பிற்காக தன் விலகலை கூட சொல்லி காயப்படுத்தாத ஷா, இம்முறை பூவை போலவே ‘நீ பூவின் மண்வளத்தை போல சில செயலை காபி அடித்தாய். தற்போது என் நிலத்தை போலவே உன்னுடைய தனிநிலத்தை மேம்படுத்த முனைகின்றாய். தயவு செய்து எனது பாதையின் தடத்தையும் பின் தொடராதே. உனக்கென சில பாணியை இருக்கு அதையே உருவாக்கு” என்று கூறி ஆலமரத்திலிருந்து ஷாவும் விடைப்பெற்றது.
த்ரி ஏசாவிடம் “நான் யாரை பார்த்தும் என் தனிநிலத்தை மேம்படுத்தவில்லை. எனக்கு பிறக்கும்போதும், பறக்கும் போதும் நிலத்தை எவ்வாறு மேம்படுத்த என்று தெரியும். நான் மேதை’ என்று பெருமையாக கூறியது. ஏசாவோ நான் இப்பொழுது வந்த பறவை. உங்கள் மூவரின் நட்பில் நான் யாருக்கு நியாயம் வழங்குவேன்.’ என்று கூற த்ரியோ ஆலமரத்தில் இருந்து முற்றிலும் விலகி பறந்தது.
ஆனால் சில நாளில் ஏசாவின் நிலத்தில் உள்ள தோட்டத்தில் உற்பத்தி செய்த கனிகளும் த்ரி நிலத்தில் இருக்க, ஏசாவுக்கும் பக்கென்று ஆனது.
அவரவருக்கு தனி பாணி என்ற சிறப்பு உள்ளதே. ஏன் இப்படி? என்று அரசமரத்தில் அமர, அங்கே ஷாவும் பூவும் வாடியிருந்தனர். அப்பொழுதே தான் ஒன்று புலப்பட்டது. த்ரி பயிரில் மட்டும் தங்கள் பாணியை புகுத்தவில்லை, ஷாவை போல சிறகை கத்தரிப்பது, ஷாவின் துணைபறவை திசைகாட்டும் கருவியை வாங்கி தந்தது போலவே சில நாளில் த்ரியின் துணையிடம் திசைகாட்டும் கருவியை வாங்கியது.
பூவின் பேறு காலத்தில் உடலில் சதை போட்டதால் சில உபகரணம் வாங்கி உடலை இளைக்க வைத்ததை வாங்கியது போல த்ரியும் உடலை குறைக்க, உடனே பெருமைக்கு வாங்கியது என்று தனிப்பட்ட வாழ்விலும் இது போல நிறையவே, மற்றவர் பாணியை அப்படியே காபி செய்வதை அறிந்ததும், பழகிய போது தெரியாத விஷயம் இப்பொழுது புலப்பட்டது. ஆக த்ரி முதலிலிருந்தே காரியத்தோடும் மற்றவர் பாணியையே கூடவேயிருந்து பின்பற்றி இதில் ஜம்பம் பேசுவதை நட்பிலிருந்து விலகிய கண்ணோட்டத்தில் பின் அறிந்ததும் அதிர்ச்சியானது. த்ரியென்ற குயிலின் சுபாவமே அப்படி தானே. ஷா, பூ இருவருமே காகத்தின் இனம். முள் போன்ற கூடு என்றாலும் தனி கூட்டில் தனக்கென பாணியில் உருவாக்கும் தன்மையுடையவர்கள். இந்த த்ரியான குயில் காக்கா கூட்டில் திருட்டு தனமாய் கலைத்து விடும் அல்பம் தானே.
உள்ளத்தில் த்ரியால் ஏற்பட்ட நட்பு உடைந்ததால் சற்று வேதனை என்றாலும் உழைப்பில் குறை வைக்க முடியுமா என்று முனைப்பில் இருக்க, இந்த த்ரியோ, அங்கிருந்த குட்டையில், தன் புலம்பலை இலைமறையாக ஒப்பாரி வைத்தது.
நட்பு எல்லாம் பொய், தேவைக்கு பழகுவார்கள், உதவியெல்லாம் செய்தாலும் தன்னை விட்டு உதாசினம் செய்வார்கள் என்று ஞான உபதேசம் வழங்கியது.
பெரும்பாலும் இங்கே குட்டையில் புலம்பினால், அங்கே வந்து செல்லும் பல மீன்களும், பறவைகளும் ஆறுதல் உரைத்தது. இத்தனை நாள் த்ரியின் நட்பில் இருந்த ஷாவுக்கும் பூவுக்கும் ‘என்னடா இது? யார் யாரை வெறுத்தது. உடல்நிலை சோர்வு என்று பொய் உரைத்தது த்ரி. கமுக்கமாக ஆலமரத்தில் அமர்ந்து தனிநிலத்தை எவ்வாறு பெறுவது, வடிவமைப்பது என்று ஒலியெல்லாம் கேட்டது த்ரி. ஆனால் பிளேட்டையே மாற்றி போட்டு பேசுகின்றதே? இத்தனை நாள் பழக்கம் என்பது பொய்யா?
ஆமாம்.. உதவியா செய்ததாமே? என்ன உதவி? ஷா சிந்திக்கும் பொழுது ஏதேனும் பழத்தை தேடி பறக்க, எனக்கெல்லாம் சில பழம் விதைக்க தெரியும் என்று சில பழங்களை தந்தது.
நானே என் விதையால் பயிரிடுவேன். எனக்கு தேவை விதைகள் என்று ஷா கூற, “ஏன் ஷா நான் கொடுத்தால் என் கனியை வாங்கி வைத்துக் கொள்ள மாட்டாயா?’ என்று வலிய வந்து வீட்டில் கொட்டியது தான் உதவியா? ஆனாலும் 30, 25 கனியில் வேறு வழியின்றி ஷா சில கனியின் விதையை தானே எடுத்தது. அப்படி பார்த்தாலும் சொல்லி காட்டிய இந்த உதவி தற்போது கேவலத்தின் உச்சமாக எண்ணியது ஷா. சே சில உதவியை பெறாமலே இருந்திருக்கலாமோ? ஆனால் பதிலுக்கு ஷாவுமே உதவியதை அந்த த்ரி அறியவில்லை போலும்.
பரவாயில்லை…. நட்பா பொறாமையா என்ற கோட்பாட்டில் த்ரி என்றைக்கோ நட்பை கெடுத்துக்கொண்டது. இதில் கால் வரை தண்ணீர் போனால் என்ன? கழுத்து வரை தண்ணீர் போனால் என்ன? ஷாவுக்கு இப்படிப்பட்ட பறவையிடம் நட்பு முறிந்ததிற்கு வருந்தம் தோன்றவில்லை.
த்ரிக்கு தான் பேச நல்ல நட்பு இல்லாமல், இத்தனை நாள் குளத்தில் மீன்கள் புழுக்கள் என்று அலட்சியப்படுத்திய மேதாவி, ஓடியோடி மீன்களிடமும், முகம் தெரியா பறவையிடம், புழுக்களிடமும் குசலம் விசாரித்து பேசியது.
இதில் ஒப்பாரி புலம்பலில் த்ரியின் உண்மை முகம் தெரியாமல், சிலர் ஆறுதல் தெரிவிக்க, நட்பு என்ற பந்தத்தை இழந்து தனிமரத்தில் தனிநிலத்தில், மற்றவரின் வளத்தை போலவே திருடி வைத்து, இது நானே கண்டறிந்தேன் என்று மார்தட்டி கொண்டது. என்றாவது ஒரு நாள் ஷாவின் உலகசந்தையில் கனி வெற்றி பெற்றதற்கோ, அல்லது ஷாவின் பிர்ண்டட் மார்க்கெட்டான பகவனலவனில், விலை போன கனியை போலவே தான் செய்ய முயன்று, அதனால் ஏற்பட்ட பிரிவையோ, அல்லது ஆலமரத்தில் பேசுவது அரட்டை மட்டுமே. என்று நட்பை துண்டித்த துணை பறவையின் தந்திரமோ அறிந்தால் மனம் மாறலாம். ஆனால் அந்த நேரம் சிறகில் தோழமையுடன் தோள் சாய ஷாவும், பூவும் இருக்க மாட்டார்கள். அவர்கள் மன்னிப்பதும் மறப்பதும் சாத்தியமில்லை. நட்பில் ஆதாயம் மட்டும் பார்த்தால் நல்ல நட்பை இழக்க தான் நேரும் த்ரி.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
*ஆதாயத்தை தேடும் த்ரி போன்ற நட்பு என்ன தான் பலவருட நட்பாக இருந்தாலும் விலகிவிடுவது சரியே. அதிலும் தன் தவறை மறைத்து நட்பை களங்கப்படுத்தும் விதமாக மற்றவர் முன் சந்தைப்படுத்தி விவரிப்பதில் அதன் நிலை தான் கூடுதலாக தரம் தாழ்ந்தி கொள்ளும். அந்த புலம்பலை உழைப்பில் கவனம் செலுத்தினாலாவது முன்னேறலாம்.