Skip to content
Home » அகலாதே ஆருயிரே 1

அகலாதே ஆருயிரே 1

💗அகலாதே ஆருயிரே💗
💗1💗

“என்ன இன்னிக்கு ஏதோ விஷேசம் போல இருக்கே, வீடே மணக்குது. “,சொல்லியபடி வந்தார், நாராயணன், வயது நாற்பத்தி ஐந்து. பொறுப்பான குடும்பத்தலைவர்.

“நாள் கிழமைன்னு ஒன்னும் இல்ல, இன்னிக்கு அவளோட அருமை தோழிக்கு பிறந்தநாள். அதான் வீடே மணக்குது.”, என்று கணவருக்கு விளக்கம் கொடுத்தார் சசிகலா வயது நாற்பத்தி இரண்டு,கொஞ்சம் குறும்பும், நிறைய பொறுமையும் சேர்ந்த அந்த வீட்டின் அரசி.

“ஏம்மா எத்தனை பிறந்தநாள் என்னோடது வந்தது, எனக்காக ஒரு பாயசம் வச்சு குடுத்திருப்பியா.. போம்மா என்கிட்ட பேசாத.”, மகளிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார் நாராயணன்.

“நல்லவேளை அவ பாயசம் வைக்கல.. அது பாயசமா, பாய்சனான்னு யாருக்கு தெரியும்?”,என்று கிண்டல் அடித்தார் சசி.

“அம்மா”, என்று சிணுங்கல் சமயலறையிலிருந்து வர, “ஒன்னும் சொல்லல மா, நீ செய்..”, என்று நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தார் சசி.

“அப்பா இங்க வாங்க” என்று அவர்களின் அருமை புதல்வி அழைக்க, “ஐயோ நைனா போய் மாட்டிக்காதே”, என்று மெல்ல சொன்னான் அவர்களின் புதல்வன் ரிஷி.

‘யார் பக்கம் போவது’ என்று புரியாமல் நாராயணன் முழிக்க, “இதுக்குத்தான் என்னை போல அப்பவே அப்பீட் ஆயிருக்கணும்”, என்று காதில் முணுமுணுத்து சென்றார் சசி.

“அப்பா கூப்பிட்டேனே.. “,என்று இழுத்தாள் செல்ல மகள். மகளுக்கு முன்னால் வயிறும் அதன் பரிதாப நிலையும் மறந்து போய் “வந்துட்டேன் மா”, என்று கிளம்பி போனார் நாராயணன்.

அவரிடம் ஒரு கிண்ணத்தில், நெய்யில் குளித்த ஏதோ ஒன்றை தர, அதன் நிறம் சிவப்பாக இருக்க,உள்ளே பயப்பந்து உருள, சின்ன ஸ்பூனில், இன்னும் சின்னதாக எடுத்து வாயில் வைத்தார்.

கண்கள் மலர, “அடடே கேசரி நல்லா இருக்கு டா கண்ணு. என்ன கேசரி மாதிரி இல்லாம கொஞ்சம் குழஞ்சு போச்சு”, என்று இன்னும் கொஞ்சம் வாயில் அள்ளிப்போட,

அவரை முறைத்தபடி நின்றாள் மகள். ‘சரியா தானே சொன்னோம், ஐயோ குழஞ்சு போச்சுன்னு சொல்லிருக்கூடாதோ.. ??’,என்று யோசிக்க,

“இது கேசரி இல்ல, அல்வா.. “,என்றாள் கோபமாக,

“அட, அப்படியா? நான் கேசரின்னு நெனச்சேன். சரி விடு. அல்வா அற்புதம். உன் செல்லக்குட்டி இன்னிக்கு ரொம்ப குஷியாக போறா..”,சமாளித்தார் நாராயணன்.

மலர்ந்து சிரித்தாள் அவள்.. அவள் தான் ரிதுபர்ணா. அவள் ஆருயிர் தோழி ஆருஷிக்கு பிறந்தநாள்.

இப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கிறாள். ரிதுபர்ணா அமைதியும் அன்பும் நிறைந்த பொறுமைசாலி. அவளின் அமைதி விசித்திரமானது. எப்போது பேசுவாள், எப்போது அமைதியாக இருப்பாள் என்று அவள் தோழிக்கே தெரியாது.

சசி சமையலறைக்குள் பயந்தபடி நுழைய, அவர் கவலைகொள்ளும் அளவுக்கு சமையலறை மோசமாக இல்லை. ரிது அழகாக, சுத்தமாகவே செய்திருந்தாள்.

“ரிது குட்டி, கிட்சன் நீட்டா இருக்கு. ரொம்ப நன்றி டா. எங்க உங்க அப்பா போல, களேபரம் பண்ணிடுவியோன்னு பயந்தேன். பரவால்ல.. லவ் யூ டா.”, என்று மகளை ஆசையாக அணைக்க, சசியை முறைத்தபடி நின்றார் நாராயணன்.

அவருக்கு பின்னால் நன்றாக வாய்விட்டு சிரித்தான் ரிஷி, ரிதுவின் உடன்பிறப்பு.

சசி, நாராயணனைப் பார்த்து, “ஐயோ மாமா நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்”, என்று நாக்கை கடிக்க, “தெரியும் தெரியும் நீ பேச்சுக்கு சொன்னது”, என்று கோபமாய் கிண்ணத்தோடு அவர் கிளம்ப,

“நைனா.. அது அல்வா கிண்ணம். மொத்தத்தையும் தூக்கிட்டு போனா எப்படி?”, என்று கண்ணடித்து கேட்டான் ரிஷி.

“டேய் அவரே கோவமா போறாரு விடு டா பாவம், இன்னும் கொஞ்ச நாள்ள சுகர் வந்திடும், அப்பறம் இதெல்லாம் சாப்பிட முடியுமா??”, என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு சசி கேட்க,

“அதெல்லாம் சரி தான் மா. அதுக்குன்னு ரிது அவ பிரென்ட்க்கு கொண்டு போக கூட இல்லாம தூக்கிட்டு போனா என்ன செய்யறது?”, என்று மீண்டும் ரிஷி வாரிவிட,

“போங்கடா, நீங்களும் வேண்டாம் உங்க அல்வாவும் வேண்டாம். நான் லாலா கடைல வாங்கி சாப்பிடுக்கறேன். சாயங்காலம் ஏழு மணிக்கு சுட சுட வச்சிருப்பான்”, என்று மீண்டும் கோபமாக சொல்ல,

“பாரு மம்மி.. நைனா டெய்லி சூடா அல்வா சாப்பிடறார். உனக்கு தெரியுமா”, என்று ரிஷி போட்டுவிட,

“ஏங்க மாமா அப்படியா?”, என்று குறுக்கு விசாரணைக்கு வந்தார் சசி.

“என்னைய ஆளை விடுங்க டா”, என்று ஓடி விட்டார் நாராயணன்.

“அப்பா.. நல்லா இருந்தா சாப்பிட்டு போங்க. “, என்று கத்தினாள் ரிது.

இது தான் ரிதுவின் வீடு. எப்போதும் சிரிப்பும் பாடும் கூத்தும்.. வீடே கலகலப்பாக இருக்கும்.

இதற்கு நேர் எதிர் தான் ஆருஷி வீடு. எதிர்வீடு இல்லை. எதிர்மறையான வீடு.

காலை எழுந்து, படுக்கையை ஒதுங்க வைத்து, குளித்து புத்தாடை அணிந்து கீழே சாப்பிட வர, வேலைக்கார பெண் தான் பரிமாறினாள். இட்லியும் சாம்பாரும். ஆருஷிக்கு பிடிக்காத உணவென்றால் அது இட்லி தான். ஏனோ அதை கண்டாலே ஒவ்வாமை. காரணம் ஆருஷியின் அம்மா ஒரு ஊட்டச்சத்து வல்லுநர். அவரின் அறிவுரைப்படி தான் வீட்டின் உணவுப்பழக்கம் இருக்கும். தோசை கூட ஒரு துளி எண்ணெய் இல்லாமல் வரட்டி போல இருக்கும்.

ஆருஷி வீட்டில் சாப்பிடவே பிடிக்காமல் வேறு வழியின்றி சாப்பிடுவாள்.

“ஸ்வீட் இல்லயா மாலாக்கா”, என்று பணிப்பெண்ணை கேட்க,

“இன்னிக்கு என்ன மா? எதுக்கு ஸ்வீட்? அம்மா ஒன்னும் சொல்லிட்டு போகலயே.”, என்றார்.

ஆரோக்கிய உணவு பழக்கத்தை சொல்லித்தர நடிகர் நடிகைகள் பலர் அவரை நாடுவதால், எப்போதும் பிஸியாகவே இருப்பார் ஆருஷியின் தாய் வேணி.

தந்தை கேசவன் அம்மாவுக்கு நகல் தான். அவர் உடற்பயிற்சிக்கூடம் வைத்து நடத்துகிறார். நவீன கூடங்கள் பல, நகரின் மையப்பகுதியில் அவருக்கு சொந்தமாக இருக்க, அனைத்தையும் பார்த்து சுற்றி வரவே நாள் போதாது. கணவனும் மனைவியும் தங்கள் கஸ்டமர்களை மற்றவருக்கு பரிந்துரை செய்து தங்கள் தொழிலோடு பணத்தையையும் பெருக்கினர்.

இன்று ஆருஷியின் பதினேழாவது பிறந்தநாள். ஆனால் வீட்டில் அம்மா அப்பா யாரும் இல்லை. வேலைகாரியிடம் சொல்லி ஒரு பாயசம் வைக்க சொல்ல கூட அவர்களுக்கு அவள் பிறந்தநாள் நினைவில் இல்லை. ஒரு பெருமூச்சோடு தட்டில் வைத்து இட்டிலியை வெறித்து பார்த்துவிட்டு, எழுந்து வெளியில் போனாள்.

வேலைக்காரி மீந்ததை தன் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு நடையை கட்டினாள். தினமும் நடக்கும் காட்சி தானே இது.

ஆருஷி தன் வெஸ்பாவில் ரிதுபர்ணா வீட்டு வாசலில் நிறுத்தி ஹாரன் அடிக்க, “உள்ளே வா ஆரூ அக்கா “,என்று அழைத்தான் ரிஷி.

ஏற்கனவே மனம் சரி இல்லாமல் இருந்த ஆருஷி, “இல்ல ரிஷி, நீ அக்காவை கூப்பிடு, நான் போகணும்”, என்றாள் அழுகையை அடக்கியபடி.

“அட, உள்ள வாயேன்”, என்று கையை பிடித்து உள்ளே இழுத்துவர, வீடே, வண்ண பலூன்களாலும், மலர்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டு
அவளை பார்த்து சிரிக்க, அவ்வளவு நேரம் மனதில் இருந்த சஞ்சலமெல்லாம் விலக,முகம் மலர்ந்தாள் ஆருஷி.

“வா ஆரூ”, என்று அன்பாக அழைத்த தோழி
ரிதுபர்ணாவை அணைத்து, “என்ன ரிது இது?”

“என்ன உன்னோட பிறந்தநாள் கொண்டாட்டம் தான், வேற என்ன?”

அழகான கேக்கில், ஆருஷியின் பெயர் எழுதப்பட்டு இருக்க, அதை வெட்டி, ரிதுவுக்கும் ரிஷிக்கும் கொடுத்து, “ஆன்ட்டி அங்கிள் எங்க ரிது?”,சுற்றிமுற்றி தேடியபடி கேட்டாள் ஆருஷி.

“உனக்கு ஏதோ சர்ப்ரைஸ் பிளான் போல, நீ வந்து, கேக் கட் பண்ணினதும், உடனே உன்னை வாசலுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க. வா போகலாம்.”, என்று அவள் முதுகை பிடித்து தள்ளிக்கொண்டே ரிது செல்ல, ஆருஷியின் துடுக்குத்தனம் மேலோங்க, “ரிஷி, நீ போய் நாங்க பின் வாசல் வழியா போய்ட்டோம்னு அங்கிள் ஆன்ட்டி கிட்ட சொல்லு சரியா?”,என்று அவளின் கூட்டுகளவாணியாக ரிஷியை சேர்த்துக்கொள்ள, அவனும் எட்டாவது படிக்கும் சிறுவன் தானே, அப்படியே சென்று தாய்தந்தையிடம் சொல்ல,

“அவங்களா வந்தா சர்ப்ரைஸ் இல்ல அப்படியே திருப்பி அனுப்பிடுவேன் கிப்ட்டை”, என்று சத்தமாக சிரிக்காமல் சொன்னார் நாராயணன்.

காதில் விழுந்த வார்த்தைகளை கேட்டு ஆருஷி,” ஐயோ அங்கிள், அவன் சும்மா சொல்றான், நான் இங்கே தான் இருக்கேன்”, என்று வர,

“ஏய் குட்டி பிசாசு, நான் சும்மா தானே இருந்தேன், நீ தானே அப்பா கிட்ட அப்படி சொல்ல சொன்ன? உன்னை”, என்று அவன் துரத்த, அவளோ,

“டேய் என் பிறந்தநாள் டா இன்னிக்கு. ஒரு நாள் மன்னிச்சிரு டா தம்பி”, என்று அவனிடம் சரண்டர் ஆக, “போய் தொலை..”, என்று விட்டுக்கொடுத்தான் ரிஷி.

இவர்கள் சண்டையை கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் ரிது.

“சரி சர்ப்ரைஸ் என்ன?”, என்று கண்களை மூடிக்கொண்டு ஆருஷி கேட்க, அவள் கையில் இரண்டு சாவிகள் தரப்பட்டது. அது புதிய மாடல் சைக்கிள்களின் சாவிகள்.

“எதுக்கு அங்கிள் சைக்கிள், என்கிட்ட தான் வண்டி இருக்கே?”,புரியாமல் கேட்டாள் ஆருஷி.

“உனக்கு இப்போ தான் பதினேழு வயசே ஆகுது டா ஆரூ. நீ இன்னும் சின்ன பொண்ணு. பதினெட்டு வயசாகி லைசன்ஸ் வாங்கின அப்பறம் தான் வண்டி ஓட்டனும். எனக்காக இனிமே சைக்கிள்ல போறியா. எனக்கும் நிம்மதியா இருக்கும். “

“சரி அங்கிள், ஆனா எதுக்கு ரெண்டு சாவி. “

“ஒண்ணு உனக்கு இன்னொன்னு ரிதுவுக்கு.”

“அய்… “,என்று ஆருஷி குதிக்க, “எனக்கு எதுக்கு பா?”, என்றாள் ரிது.

“நீயும் இனிமே சைக்கிளில் போடா. அப்ப தான் உலகம் தெரியும். ரெண்டு பேரும் ஜாலியா சைக்கிள்ல ஊரை சுத்துங்க.”, என்றார் சசி.

“பொம்பளைப் பிள்ளைகளை சைக்கிளில் ஊர் சுத்த சொல்ற?”,புரியாமல் நாராயணன் கேட்க,

“இப்போ தான் சுத்த முடியும். கல்யாணம் ஆகிட்டா அம்மா வீட்டுக்கு என்ன, பக்கத்து கடைக்கு கூட சந்தோசமா நெனச்ச நேரம் போக முடியாது. “, என்று நொடித்துக்கொண்டே சொன்னார் சசி.

“அடிப்பாவி, அதை பக்கத்து வீட்டு நீலா சொல்லலாம். நீ சொல்லலாமா? உன்னை நான் அப்படியா வச்சிருக்கேன் “, என்று அப்பாவியாக வாய் விட்டார் நாராயணன்

“என்னது நீலாவா? அவ அப்படி தான் இருக்கான்னு உங்களுக்கு எப்பிடி தெரியும்?”, என்று சண்டைக்கு தயாராக.

ஆருஷியும், ரிதுவும் ஆளுக்கு ஒரு சைக்கிளில் ஏறி, “சண்டையை முடிச்சிட்டு சொல்லுங்க ஓல்டீஸ், டாடா “,என்று சிட்டாக பறந்தனர்.

“தெருவில வச்சா சண்டை போடறது, என்னமா நீ நைனாவை உள்ளே கூட்டிட்டு போய் கும்மு. “,என்று நக்கலடித்தான் ரிஷி.

“டேய் உன்னை.. “,என்று அவன் பின்னால் நாராயணன் ஓட, “நில்லுங்க..”, என்று சசி ஓட,

தெருமுனையில் சென்றபடி திருப்பி பார்த்த ஆருஷியும் ரிதுவும் சிரித்துக்கொண்டே சென்றனர்.

தொடரும்…

10 thoughts on “அகலாதே ஆருயிரே 1”

  1. CRVS2797

    வாவ்…! ஆருஷி & ரிதுவின் அழகான நட்பு. அம்மா அப்பாவின்.. காதல் கலந்த ஊடல்..
    அருமை தம்பி…!

  2. Avatar

    Nice epi….starting a….சந்தோசமான கலாட்டவாக….இருக்கே…. அருமை அருமை….👌👌👌😊❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *